கண் நிறைந்த ஆணழகன் தன்னை அந்தக்
கனி மொழியாள் கண்டு விட்டாள் வேறு என்ன
தன்னுணர்வு எல்லாமே அவனே யாகி
தனியாகித் தனக்குத் தான் பேசுகின்றாள்
கன்னியவள் இடை சிறியதென்று காட்டக்
கனத்திருக்கும் மார்பகங்கள் துன்பம் கொள்ள
அன்னவனை நினைத்தங்கு ஏங்கி நின்றாள்
அவன் மீது குற்றம் ஒன்றை ஏற்றுகின்றாள்
பொன்னானை மனம் கொண்டு மகிழும் பெண்ணாள்
பொறுப்பாகக் கேட்கின்றாள் இனிய கேள்வி
கண்ணானான் மனத்திற்குள் பெண்ணாள் போக
கடுந்தடையை விதித்துள்ள அந்தக் கள்ளன்
பெண்ணாளின் நெஞ்சுக்குள் மீண்டும் மீண்டும்
பேரலையாய்ப் புகுவானாம் நாணம் இன்றிக்
கண்வாளாய்க் கொண்ட மகள் கேட்டு நின்றாள்
காமத்துப் பால் தரும் அழகுக் காட்சியிது
குறள்
தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார் கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல்
Sunday, June 22, 2008
குறட் கருத்து காமத்துப் பால்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment