Sunday, June 29, 2008

பழம் பாடல் கம்பன்

லஞ்சமோ அன்பளிப்போ நமக்கது புரியவில்லை
கொஞ்சிடும் பெண்ணொருத்தி கொடுத்திட முனைந்தாள் என்று
வஞ்சசமே இல்லாக் கம்பன் வாய் மொழிப் பாடல் ஒன்று
அஞ்சுக மொழியாள் மதுவைக் கோப்பையில் ஏந்தி நின்றாள்
மஞ்சுலாஅம் நிலவை அந்த மதுவுள்ளே பார்த்து விட்டாள்
கொஞ்சியே நிலவிற்கொன்றை கூறினாள் ஆகா ஆகா
கொஞ்சம் நீ ஊடல் நேரம் கொன்றிடும் வெம்மை விட்டு
குளிர் நிலவாகி நின்றால் கொடுப்பேன் இம்மதுவை என்றாள்


தன் முகம் மதுவுக்குள்ளே தளிர் நிலவாகத் தோன்ற
தனக்குள்ளே மதுவைக் கொண்ட தளிர்க் கொடி போதை ஏற
என்னவன் தானும் நானும் இடையினில் ஊடல் கொண்டால்
தண் நிலா வெப்பம் கொண்டு தாக்குமாம் தன்னைக் கொல்ல
அந்நிலா என்று எண்ணி அவள் முகம் தன்னிடத்தே
வெண்ணிலா உனக்குத் தருவேன் மதுவினை வேண்டு மட்டும்
கண்மணி ஊடல் நேரம் கனிவுடன் நீ நடந்தால்
பெண்மணி பேரம் லஞ்சப் பேயதன் தொடக்கமன்றோ

கம்பன்

கண்மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி
உள் மகிழ்த் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி
தண் மதி ஆகின் நானும் தருவென் இந்நறவை என்றாள்

0 மறுமொழிகள்: