Sunday, August 31, 2008

 சரியான தாய் தந்தை பெற்றெடுக்க
  சத்தியமே வாழ்க்கையெனக் கொண்டு நிற்க
  விரிகின்ற மனத்தாராய் வாழ்ந்து நிற்கும்
  வெற்றியெல்லாம் நல் வழியில் பெற்று நிற்கும்
  தெளிவான நல்லவரை நமைக் கொடுத்தும்
  தேர்ந்து கொள்ள வெண்டும் நல்ல நட்பாய் இங்கு



  பொருட்பால் நட்பாராய்தல் குறள் நான்கு

 குடிப் பிறந்து தன்கட் பழி நாணுவானைக்
 கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு

இரட்டையர் பாடல்

கோயில்களில் அக்காலம் இறைவனுக்கு
  கொண்டு சென்று படைக்கின்ற உணவு எல்லாம்
  வாயிலிலே மண்டபத்தில் வந்து தங்கும்
  வழிப் போக்கர் தமக்கேதான் அளித்து நின்றார்
  பாவலர்கள் புலவர்களும் இரவு நேரம்
  பசியாற அங்கேதான் வந்து சேர்வார்
  கோவில் ஒன்றில் இரட்டையரும் வந்து சேர
  குருக்கள் கொண்டு சென்று விட்டார் உணவை முற்றும்


  பசித் துன்பம் போகவில்லை என்று சொல்லி
  பாடுகின்றார் இருவருமே ஆகா ஆகா
  வசிக்கின்றார் இறைவன் அந்தக் கோயிலிலே
  வகையாக அவரிடத்தில் கேட்டு நின்றார்
  பசி தீர நீர் மட்டும் சோறு உண்டு
  பரிதவிக்க விட்டீரே எம்மை மட்டும்
  நிசியிதிலே பசியோடு நிற்கின்றோமே
  நெற்றிக் கண் சிவனாரே நியாயம்தானா


  இரண்டடியில் ஒருவர் இந்தக் கேள்விகேட்க
  இறவனுக்காய் இன்னொருவர் பதிலைத் தந்தார்
  நிரந்தரமாய் நடக்கின்ற கேலிக் கூத்தை
  நினைந் துணர்ந்து சிரிக்கின்ற விதமாய்ச் சொன்னார்
  தினம் தினம்தான் சோறு வரும் முன்னால் வைப்பார்
  தேடி வைத்த சங்கதனை ஊதி நிற்பார்
  மனம் மகிழ முரசடிப்பார் கொட்டடிப்பார்
  மற்றபடி நானெங்கே சோறு கண்டேன்


  சேவை மனம் கொண்டார்கள் செய்து வைத்த
  சிறப்பெல்லாம் இவ்வாறே அன்று முதல்
  பாவமதாய் மாறி விட்ட பழியை யன்றோ
  பாட்டாலே உணர்த்தி நின்றார் இரண்டு பேரும்
  கோவிலுக்குள் இருக்கின்ற சிவனே தன்னை
  கூறு கெட்ட மூளி என்று சொல்ல வைத்தார்
  தாவி வரும் பாட்டதனின் அழகைப் பாரும்
  தமிழினத்தீர் கோயிலகளின் பெருமை போற்றும்


  தேங்கு புகழாங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா
  நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ - போங்காணும் 
  கூறுசங்கு தோல் முரசு கொட்டோசையல்லாமல்
  சோறு கண்ட மூளி யார் சொல்

இரட்டைப் புலவர்கள்

கண்ணில்லா ஒருவரும் காலில்லா ஒருவரும்
  வண்ணமயப் புலவராய் வாழ்ந்திருந்தார் அன்பாலே
  கண்ணில்லார் தோளினிலே காலில்லார் அமர்ந்து கொள்ள
  எண்ணமெல்லாம் கவிதைகளாய் யாத்திட்டார் இருவருமே
  முன் இரண்டடியை ஒருவர் மொழியழகாய்ப் பாடி நிற்க
  முத்தாய்ப்பாய் அடுத்தவரும் முடித்து வைப்பார் வெண்பாவை
  இன் தமிழின் புலவரினை இரட்டையர் என்றழைத்தார்கள்
  இல்லாத கண் கால்கள் மறந்தாராய் வாழ்ந்தார்கள்


  ஊனம் மறந்தவராய் ஒற்றுமையாய் வாழ்ந்தார்கள்
  ஊரூராய்ச் சென்று நன்கு தமிழ் மொழியை உணர்ந்தார்கள்
  ஞானம் நிறைந்தவராய் நற்றமிழை மொழிந்தார்கள்
  நலம் பயக்கும் நற் செய்தி நமக்களித்து மகிழ்ந்தார்கள்
  வானம் தொடும் புகழால் வண்டமிழால் வாழ்ந்தார்கள்
  வழி கண்டு ஊனமதை அன்பதனால் வென்றார்கள்
  நாமும் அவர் போலே நல்லவராய் வாழ்வோமே
  நம் மனத்தின் ஊனமதை நற்றமிழால் வெல்வோமே

Saturday, August 30, 2008

எனையறியார்

 இசையாலே வென்று நின்ற ஒருவன் தன்னை
  எப்படியோ வீழ்த்தி விட எண்ணம் கொண்டோர்
  பசையற்ற மனத்தாராய் மேடை தோறும்
  பசப்புக்கள் பம்மாத்துச் செய்த நேரம்
  கசையடியால் மேடைகளில் அவர்கள் தம்மை
  கலங்க வைத்த கண்ணனிவன் ஊர் அறியும்
  திசை தோறும்திசை தோறும் அவர்கள் தம்மை
  திணற வைத்தான் கண்ணன் இவன் உணர்ந்தார் உண்டு


  வேண்டும் என்றே குறை கூறும் எண்ணம் கொண்டார்
  விபரங்கள் கேட்காமல் பேசி நின்றால்
  நான் என்ன செய்து விட இயலும் இந்த
  நாடெங்கும் இசை ஞானி தனக்காய்ச் செய்த
  போர் அறியார் பேசுகின்றார் அறியாராகிப்
  பொறுப்பின்றி சாதி கூறித் திட்டுகின்றார்
  ஊர் அறியும் தமிழர்களூம் நன்கறிவார்
  ஒரு போதும் நான் கொள்ளேன் சாதி என்று

  கக்கன் என்ற பேராரை இந்த நாட்டின்
  கண்மணியாய் வாழ்ந்தாரை அன்றும் இன்றும்
  தக்க விதம் மேடைகளில் அவர் தம் நேர்மைச்  
  சரித்திரத்தைச் சொல்வானை கண்ணன் தன்னை
  மக்களூக்குள் இருக்கின்ற சாதியெனும்
  மடமையினை எதிர்த்து நிற்கும் வீரன் தன்னை
  எக்கணமும் குறைத்து விட எண்ணம்கொண்டார்
  எனையறியார் தமிழகத்தார் நிலை அறியார்

  அம்பேத்கர் என்ற ஒரு நேர்மையாளர்
  அவனியெல்லாம் போற்றுகின்ற போர்க்குணத்தார்
  தம்போக்கில் அவர்க்கு ஒரு சிலையை வைத்தார்
  தாம்பிரபரணிக்கரையாம் நெல்லை தன்னில்
  தம் பிடித்து மாலை போட வேண்டும் நிலை
  தனைக்கண்டு ஒரிரவில் ஏணி செய்து
  அம்பேத்கர் சிலை தனிலே வைத்தேன் என் பேர்
  அங்கில்லை மரியாதை நிமித்தமாக

அறியாப் பேச்சு

 பல்லாண்டு காலமாய் ஒடுக்கப் பட்டோர்
  பலவிதமாய் வாழ்வின்றித் தடுக்கப்பட்டோர்
  கல்லாதாராய் அவரைக் கட்டி வைத்து
  கவலைகளில் அவர் தள்ளி வாழ்ந்திருந்த
  பொல்லாரைத் தீயவரை புறத்தில் தள்ளி
  பொறுப்பாக அவர் வாழ வழிகள் செய்து
  நல்லார்கள் மிகச் சிறப்பாய்த் தந்து நின்ற
  நலமான ஒதுக்கீடு உரியவராம்

  எல்லார்க்கும் போகிறதா என்று கேட்டால்
  இல்லை என்ற பதிலேதான் எங்கும் கேட்கும்
  வல்லார்கள் சாதியினை மாற்றித் தந்து
  வகை செய்வார் மற்றவரை ஏய்த்து நிற்பார்
  சொன்னேன் நான் பணம் கொண்டு இந்த விதம்
  சோடிப்பு வேலை செய்வோர்க்கு உதவி நிற்பார்
  மண்ணாள வந்தோரும் அரசு தன்னில்
  மணமாக பொறுப்பில் உள்ள வேலையாரும்

  சொன்ன விதம் புரியார்க்கு என்ன செய்வேன்
  சொல்லும் மனம் எந்தன் மனம் நல்ல மனம்
  கன்னலெனும் தமிழினிலே வள்ளுவனைக்
  கற்று நின்ற என் மனத்தை நானறிவேன்
  மின்னுகின்ற உண்மையினை விரும்பி நிற்கும்
  மென் மனத்தான் என்னை எந்தன் ஊரறியும்
  என்னைப் பற்றி அறியாதோர் பேசி நின்றால்
  என்ன செய்வேன் அவர் பேச்சு அறியாப் பேச்சு

எது அழகு அவ்வை

அழகென்றால் என்ன என்று சோழன் கேட்டான்
  அவ்வையவர் சொன்ன பதில் அழகைப் பார்ப்போம்
  பழகி விட்ட கணவனுடன் அன்பு செய்து
  பனிமொழியாள் பெறுவதுவும் கொடுப்பதுவுமாய்
  இளகி நின்று இன்பங்கள் பெற்று வாழ
  எழில் அழகு அவளுக்குக் கூடும் என்றார்
  உளம் ஒன்றிக் கொள்கின்ற காம வாழ்க்கை
  உயர்வதனால் பெண்களுக்கு அழகு என்றார்

  ஊர்வாழ உலகத்தார் உவந்து வாழ
  உண்ணாமல் அவருக்காய் நோன்பிருந்து
  சீரான உண்மைக்காய் என்றும் எங்கும்
  சிறந்தோங்கும் உண்ணாதார் உடல் அழகு
  யார் யாரென்றாலும் வந்தார்க்கெல்லாம்
  எப்போதும் உதவி நின்று வறியரானோர்
  பார்ப்பதற்கு மிக அழகு போரில் மார்பில்
  படைக்கலமாம் வேல் வாங்கி மடிந்தார்க்கெல்லாம்

  ஊர் நடுவே நட்ட நடுகல் அழகு
  உலகத்தார்க் குணர்வதற்காய் அவ்வை சொன்னார்
  பேர் பெற்று வாழுகின்றீர் தமிழினத்தீர்
  பேரழகு எதுவென்று அவ்வை சொன்ன
  சீர் உணர்ந்து வாழ்ந்திடுவீர் மேலும் மேலும்
  சீரான தமிழழகைப் போற்றி நிற்பீர்
  கார் மழையாய் அனைவருக்கும் நன்மை செய்வீர்
  கனித்தமிழின் வழிவந்த காரணத்தால்

  செய்யுள்

  சுரதந்தனில் இளைத்த தோகை சுகிர்த  
  விரதந்தனில் இளைத்த மேனி - நிரதம்
  கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட
  வடுத்துளைத்த கல் லபிராமம்

Friday, August 29, 2008

வாழ்த்துகின்றேன்

  தொடர்ந்து பல நிகழ்வு ஆதலினால் எழுதவில்லை
  துய்ய மன அன்பருக்கு எந்தன் நிலை சொல்லி நின்றேன்
  வடம் கொள் தேர் போல வலம் வரும் நம் தமிழன்னை
  வாய்ப்பளிக்க நாளை முதல் எழுதிடுவேன் மீண்டும் நான்
  திடம் கொண்ட நெஞ்சத்தீர் உம்மை வணங்குகின்றேன்
  தீந்தமிழாள் தன்னாலே உறவான பெரு மனத்தீர்
  புடம் போட்ட நற்றமிழை பாக்களிலே வழங்கிடுவேன்
  போற்றி நிற்பீர் போற்றி நிற்பீர் உம்மை நான் வாழ்த்துகின்றேன்

Saturday, August 23, 2008

வெல்வேன் நானும்

 செய்கின்ற உண்மை அன்பைத் தெரிந்து கொள்ளாச்
  சிறு மனத்தார் இன்னும்தான் இருக்கின்றாரே
  பொய்யாகப் பழகுகின்றார் என்ற போதும்
  பொறுத்தன்பு செய்து நிற்பேன் மீண்டும் மீண்டும்
  அய்யா என்றழைக்கின்றார் மனத்திற்குள்ளே
  அழுக்காறு நூறு வகை அய்யோ அய்யோ
  உய்வாரா இவரெல்லாம் உண்மை அன்பை
  உணர்வாரா ஒரு நாளும் மாட்டார் போலும்

  
  அன்பு செய்தல் ஒன்றேதான் உயிர் வாழ்க்கைக்கு
  அர்த்தம் என்று சொல்லி நின்றார் வள்ளுவரும்
  அன்பு செய்வார் ஏமாளி என்று அன்றோ
  அனேகம் பேர் கருதுகின்றார் பூவுலகில்
  தெம்பளிக்கும் அன்பதனைச் செய்தல் தன்னை
  திருவற்றார் இவருக்காய் நிறுத்த மாட்டேன்
  அன்பு செய்வேன் அன்பு செய்வேன் மீண்டும் மீண்டும்
  அன்பு செய்தே வாழ்ந்திருப்பேன் வெல்வேன் நானும்

குறட் கருத்து

 போர்க்களத்தில் பகைக் குலத்தார் கண்டாலே அஞ்ச வைக்கும்
  பொரு தடக்கை தடந்தோள்கள் பொலி மார்பு கொண்டு நின்று
  ஆர்க்கின்ற பெரு வீரன் அணையில்லா வெற்றி கொண்டான்
  நீர்த்துப் போய் நிற்கின்றான் நெஞ்சிழந்து வேர்க்கின்றான்
  பார்த்தானாம் பாவையவள் பால் பிறையின் நெற்றியினை
  படீரென்று உடைந்ததுவாம் பாவியவன் பீடெல்லாம்
  வார்க்கின்றார் வள்ளுவராம் வாழ வைக்கும் பேராசான்
  வகையாகக் காமத்துப் பாலதனில் சுவையாக

  குறள்

  ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
  நண்ணாரும் உட்குமென் பீடு

பழம்பாடல் அவ்வை

மானம் ஒழிந்து விடும் மா பெரிய குலம் ஒழியும்
  காணுகின்றார் வணங்கி நிற்கும் கல்வி அது ஒடி விடும்
  வான் போற்றும் வள்ளற் குணம் தானாய் மறைந்து விடும்
  வளர்ந்தெங்கும் வழி காட்டும் அறிவுடைமை வீழ்ந்து படும்
  தானம் கொடுக்கின்ற தன்மையது ஒழிந்து விடும்
  தவமாய்த் தவமிருப்பார் தவமதுவும் கலைந்து விடும்
  பேணும் முயற்சியதும் பின்னடையும் தாளாண்மைப்
  பெருமை அது ஒழியும் அங்கே பசியென்று வந்து விட்டால்


  தேனே மலரே என் தீஞ்சுவையே என்றெல்லாம்
  வானைத்தொடுகின்ற வகையினிலே கொஞ்சி நிற்கும்
  கானம் மறையும் விளை காமம் அது மறையும்
  கண்மணியார் எண்ணமெல்லாம் காணமல் போய் ஒழியும்
  வானமழையாலே வளருகின்ற பயிர்க் குலங்கள்
  வயிற்றுப் பசி தீர்க்க வரவில்லையென்று சொன்னால்
  நானில்லை நீரில்லை இப்பத்தும் பறந்து விடும்
  நானிலத்தீர் பசி நடத்தும் நாடகத்தில் நாம் இழிவோம்

  செய்யுள்

  மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
  தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்
  கசிவு வந்த சொல்ல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
  பசி வந்திடப் பறந்து போம்

Friday, August 22, 2008

கோபமெல்லாம் வேகமாக

 செஞ் சீனம் ஜப்பான் கொரியா ரஷியா 
  ஜெர்மனி மேலும் சில நாடுகளே
  தஞ்சம் என்று கறுப்பினத்தை நாடி இன்று
  தங்கங்கள் குவிக்கவில்லை போட்டியிலே
  வஞ்சகர்கள் தம் நாட்டில் அவர்களையே
  வதை செய்து வாழ்வொழித்த நாட்டிற்கெல்லாம்
  கொஞ்சமல்ல தங்கங்கள் குவிப்ப தெல்லாம்
  குன்றாத மனம் கொண்ட கறுப்பினமே

  பசித் துன்பம் ஒழியாத கறுப்பர் நாட்டார்
  பாய்ந்து ஒடி தங்கங்கள் பெறுகையிலே
  வசிப்பதற்கு வழியின்றி வறுமைத் துன்பம்
  வாட்டையிலும் வெல்லுகின்ற அவரைப் பார்த்தால்
  கசியவில்லை கண்ணிரண்டும் கண்ணீரையே
  கார் மழையாய்ப் பொழிகின்றது அவ்வினத்தின்
  பசியதனைத் தீர்க்காத இறைவன் மீது
  பாய்கிறது கோபமெல்லாம் வேகமாக
  
  

குறட் கருத்து

 செல்வம் வருகையிலே சிரித்து மகிழ்ந்ததனை
  சேர்த்து வைப்போம் என்கின்ற சிந்தனையே இல்லாமல்
  வள்ளல் மனத்தோடு வாழ்ந்து பழகியவர்
  வந்த செல்வமதன் மீது பற்று வைக்கா நேர்மையவர்
  கள்ளத் துன்பமதைக் கணக்கெடுக்க மாட்டாரே
  கண் கலங்கி அழுதழுது காயப் பட மாட்டாரே
  உள்ளத்து உணர்ந்தார்க்கு செல்வமது ஒன்றுமில்லை
  உணர்ந்ததனால் துன்பமதும் ஒன்றுமில்லை அவர்களுக்கு

  குறள்

  அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
  ஒம்புதல் தேற்றாதவர்

பழம்பாடல் அவ்வை

 பெற்றெடுத்துப் பாலூட்டி வளர்த்த தாயை
  பெருமை பெறும் கல்வி தந்த தந்தை தன்னை
  உற்றவளாய் உடல் சேர்த்து இன்பம் தந்து
  உயிர் காத்துச் சூலுற்று குழந்தை ஈன்ற
  நற்றவமாய் வந்திட்ட மனைவி தன்னை
  நலமாகப் பெற்றிட்ட பிள்ளைகளை
  உற்றவரை ஊராரை தன்னை நாடி
  ஒடி வந்து சரணமென நின்றார் தம்மை


  கற்றவரை நல்லவரை எவரெனினும்
  காப்பாற்றி உதவாமல் செல்வம் சேர்த்து
  பொற் பெட்டி தனில் பூட்டி வாழ்வார் தம்மை
  போட்டு நல்ல ரத்தம் வர தாக்குவார்க்கே
  அச் செல்வம் சொந்தம் எனப் போயே சேரும்
  அதுவேதான் அச் செல்வம் பெறும் பெருமை
  நிச்சயமாய் உணர்க இதை மானிடரே
  நிலையில்லாச் செல்வமதை கொடுத்து வாழ்வீர்

  செய்யுள்

  பெற்றார் பிறந்தார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
  உற்றார் உகந்தார் உகந்தார் என் வேண்டார் - மற்றோர் 
  இரணம் கொடுத்தால் இடுவர் : இடாரே
  சரணம் கொடுத்தாலும் தான்

Thursday, August 21, 2008

வெல்ல வைக்கும்

 எத்தொழிலும் சேவைக்காய் உள்ளதுதான்
  என்றும் அதை உணர்ந் துழைப்பீர் நண்பர்களே
  கைத்தொழிலோ மெய்த் தொழிலோ இல்லை இந்த
  ககனத்தை வென்றெடுக்கும் அறிவியலோ
  செய்கின்ற தொழில் எதுவாய் இருந்த போதும்
  சேவையெனக் கருதி அதைச் செய்தல் வேண்டும்
  பொய்யின்றிச் செய்கின்ற தொழிலே உம்மைப்
  பொறுப்பாக்கி மென் மேலும் வெல்ல வைக்கும்

குறட் கருத்து

சூதாலே அனைவரையும் ஏய்த்து ஏய்த்து
  சொந்தங்கள் பந்தங்கள் தம்மை ஒய்த்து
  தோதாக கொள்ளைகளால் பணத்தைச் சேர்த்து
  துடிக்க வைத்து அனைவரையும் துவள வைத்து
  மேதாவி போல் வாழ நினைப்பவரே
  மேன்மையற்ற அறம் துறந்த அந்தச் செல்வம்
  ஏதாகும் பச்சைமண் கலத்துள் விட்ட 
  ஏரியதன் நீராகும் இரண்டும் போகும்


  குறள்

  சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்
  கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று

பழம்பாஅடல் அவ்வை புறநானூறு

  ஊர்ச் சிறு குளத்தில் யானை குளிக்கும்
  உள்ளூர்ச் சிறுவர் ஒடி வந்ததனின்
  பார்க்க அழகாம் தந்தம் தன்னை
  பள பளவென்றே கழுவித் துடைப்பர்
  ஆர்க்கும் யானை அமைதியாக
  அவர்கள் அன்பில் இன்பம்கொள்ளும்
  கேட்கும் எம்மை அது போல் தானே
  கேளிராக்கி இன்பம் கொள்வாய்


  புலவர் எமக்கு அன்பாய் இருப்பாய்
  பொங்கு போரில் உன்னைக் கண்டால்
  கலக்கி எதிரி உயிரை குடித்துக்
  காலனாகி அனைத்தும் முடிப்பாய்
  இலக்கு வைத்து களத்தில் அழிக்கும்
  எமனாய் யானை வருதல் போல
  உனக்கு நீதான் அதியமானே
  உவமையாவாய் வெல்க வெல்க

  புறநானூறு

  ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
  நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
  இனிமை பெரும எம்க்கே மற்றதன்
  துன்னரும் கடாஅம் போல
  இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே
   

Wednesday, August 20, 2008

இறைவனவன்

  கொள்ளைகளை அடிக்கின்றார் அப்பணத்தில்
  கோயில்களில் பூசனைகள் பலவும் செய்வார்
  கள்ளர் இவர் செயலெல்லாம் ஊரறியும்  
  கடவுளரும் அறியாரா மூட மாந்தர்
  நல்லவர்க்கு முன்னாலே கோயில்களில்
  நடக்கின்ற மரியாதை இவர்களுக்கே
  சொல்வதிலே பயனில்லை இந்த நாட்டில்
  சோதனைகள் ஒழிக்க வேண்டும் இறைவனவன்

அழுகின்றாரே

  பணம் சேர்த்து வைத்துள்ளார் என்பதற்காய்
  பல்லிளித்துக் கைகட்டி கால்கள் பற்றி
  குணம் விட்டுக் குலம்விட்டு மானம் விட்டு
  குப்பையெனும் அப்பணத்தைப் பெற்றுக் கொண்டு
  தினம் தோறும் ஊர் சிரிக்க வாழும் மாந்தர்
  திருடரது துணையானார் எனத் தெரிந்து
  மனம் சிறந்து வாழுகின்ற தூயரவர்
  மானமற்ற அவருக்காய் அழுகின்றாரே

மகிழ்ச்சி கொள்வான்

 ஆடுகின்றார் பாடுகின்றார் சாடுகின்றார்
  அனைத்தும் அவர் கைகளிலே இருப்பதாக
  கூடுகின்றார் அவர் தம்மைச் சுற்றி ஒரு
  கூட்டம் அவர் தமை வாழ்த்தி ஒழிப்பதற்காய்
  நாடுகின்றார் தன்னலத்தார் கூட்டமாக
  நாடொழிந்து தான் வாழ வேண்டுமென்று
  வீடு பெற மாட்டார் இவர் வீழும் போது
  வேதனைகள் தீர்ந்து ஏழை மகிழ்ச்சி கொள்வான்

அழிந்து போவீர்

  எத்தனையோ சொன்னாலும் கேட்கின்றாரா
  எப்பொழுதும் தவறுகளே செய்யும் மாந்தர்
  வித்தகமாய்க் கருதுகின்றார் தன்னுடைய
  விஷச் செயல்கள் அத்தனையும் வெட்கமின்றி
  பத்திரமாய் வாழுவதாய் எண்ணுகின்றார்
  பணம் சொத்து சேர்த்து விட்ட காரணத்தால்
  செத்தொழியும் வரை துன்பம் வந்து சேரும்
  செத்த பின்னர் அவர் குடும்பம் சீரழியும்

  எத்தனை பேர் அழுகையிலே வந்த செல்வம்
  எப்படி நீர் நிம்மதியினைக் கொண்டு வாழ்வீர்
  முத்தமிழின் மூத்தவராம் வள்ளுவரும்
  முறையற்றார் வீழும் வழி சொல்லிச் சென்றார்
  கற்றது போல் நடிக்கின்றீர் கவிதை சொல்வீர்
  கவலைகளுக் காளானோர் கண்ணீர் உந்தன்
  பொற்குவையைச் செல்வத்தை குடும்பம் தன்னை
  பொல பொலவென் றுதிர்த்து விடும் அழிந்து போவீர்

குறட் கருத்து

நல்லவரைப் பெரியாரைத் துணையாய்க் கொண்டு
  நடப்பவர்க்குத் துன்பங்கள் வந்த போதும்
  வல்லவராய் அதை மாற்ற வழிகள் சொல்லி
  வகைப்படுத்தி தொகைப்படுத்தி வாழ வைப்பார்
  அல்லவராய் அவர் தம்மை விட்டு விட்டால்
  ஆயிரம் பேர் பகையை விடத் தீமை அது
  நல்லவரைப் பெரியவரைத் துணையாய்க் கொள்ளல்
  நலம் பயக்கும் வலிமை தரும் உணர்வீர் நன்கு

  குறள்

  உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
  பெற்றியார்ப் பேணிக் கொளல்

  பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே
  நல்லார் தொடர் கை விடல்

  தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
  வன்மையுளெல்லாம் தலை

பழம் பாடல் அவ்வை

 இழிதொழில்கள் எத்தனையோ செய்திட்டாலும்
  இன்னல்களைச் செய்வதிலே மகிழ்வுற்றாலும்
  பழி எதற்கும் அஞ்சாத துன்பங்களை
  பண்புடையோர் தனை நோக்கி அனுப்பிட்டாலும்
  வழிவழியாய் உதவுகின்ற பண்பதனை
  வதை செய்து நிற்பார்க்கும் செய்தருளல்
  பழிக்கஞ்சும் பண்பாளர் பெருமையாகும்
  பார் விட்டு மறையும் வரை உதவி நிற்பார்


  கனி தந்து நிழல்தந்து காலம் தோறும்
  காப்பாற்றி நிற்கின்ற மரம் அதுவும்
  பனியதுவோ மழையதுவோ வெயிலதுவோ
  பல காலம் அவையெல்லாம் தாங்கி நன்கு
  கனிவோடு உதவ அவை தன்னை வெட்டி
  கருணையின்றி நடந்தார்க்கும் நிழலே தரும்
  தனை முழுதும் வீழ்த்தும் வரை நிழலே தரும்
  தண்ணிழலின் மரம் போன்றோர் பெரியார் இங்கு

  செய்யுள்

  சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
  ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
  குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
  மறைக்குமாம் கண்டீர் மரம்

Tuesday, August 19, 2008

வாழ்ந்திருப்பார்

  பணமொன்றே வாழ்க்கையெனப் பாடுகின்றார்
  பகட்டான ஆட்டமதே நாடுகின்றார்
  குணம் கொண்ட ஏழையரைக் கண்ட போதோ
  கும்மாளம் போடுகின்றார் நாணமின்றி
  தனை உணர மாட்டாராய் தலை நிமிர்த்தி
  தான் என்ற ஆணவங்கள் காட்டுகின்றார்
  பணம் இழந்து நின்றிட்டால் மனைவி கூட
  பகையாகிப் போவாள் என்றுணர மாட்டார்

  குணம் நிறைந்து வாழ்ந்தார் தாம் இன்றும் இங்கே
  குலமாகி அனைவருக்கும் குருவேயானார்
  மணம் என்றால் அவர் வாழ்வே வாழ்வு என்று
  மதிக்கின்றார் உலகத்தார் வணங்கி நின்றார்
  நிணம் தசை நார் கொண்ட இந்த உடலுக்குள்ளே
  நிற்கின்ற உயிர் அதுவும் போன பின்னர்
  பணம் படைத்தார் காணாமல் போய் விடுவார்
  பலர் போற்றக் குணம் கொண்டார் வாழ்ந்திருப்பார்

குறட் கருத்து

 ஏதேனும் ஒரு செய்தி இவரிடத்தில் கிடைத்திட்டால்
  எல்லோர்க்கும் அதைச் சொல்லி இன்பமதை அடைவார்கள்
  சூதாக வாழ்வார்கள் நல்லவர்கள் வாழ்வதனை
  சுகமதனைப் பார்த்தாலோ அவர் குறித்து இகழ்வார்கள்
  தோதாக பார்ப்பதற்கு மனிதரைப் போல் இருப்பார்கள்
  தொழில் எங்கும் நடிப்பதுவே அச்சம் இவர் குலச்சொத்து
  வேதனைகள் வரும் போது தங்களையே விற்றிடுவார்
  வெட்கம் மானம் சூடு இவர் விட்டு விட்ட நற் குணங்கள்

  குறள்
 அறை பறைஅன்னர் கயவர்தாம் கேட்ட
 மறைபிறர்க்கு உய்த்து உரைகாலான்

 உடுப்பதுவும் உண்பதுவும் காணின் பிறர்மேல்
 வடுக்காண வற்றாகும் கீழ்

 மக்களே போல்வர்கயவர்; அவர் அன்ன
 ஒப்பாரில் யாம் கண்டது இல்

 அச்சமே கீழ்களது ஆசாரம்;எச்சம்
 அவாஉண்டேல் உண்டாம் சிறிது

 எற்றிற்கு உரியார் கயவரொன்று உற்றக்கல்
 விற்றற்கு உரியர் விரைந்து

பழம் பாடல் அவ்வை

  அள்ளிக் கொடுத்தலிலே அளவற்ற இன்பம் கொள்வான்
  அவனுக்குப் பொன்னதுவும் துரும்பேதான் கொடை உணர்வால்
  துள்ளிப் படையெதிர்க்கும் வீரனுக்கு மரணமது
  துரும்பேதான் துரும்பேதான் துச்சமென நினைப்பானே
  கல்வி தனைக் கற்று கண்ணோட்டம் கொண்டோர்க்கு
  காமமதும் மங்கையரும் துரும்பில் துரும் பாகும்
  இல்லம் துறந்திருக்கும் ஏற்றமிகு துறவியர்க்கு
  ஏறு போல் ஆண்டிருக்கும் மன்னவரும் துரும்பேதான்

  செய்யுள்

  போந்த வுதாரனுக்குப் பொன் துரும்பு சூரனுக்குச்
  சேர்ந்த மரணஞ் சிறு துரும்பு - ஆய்ந்த
  அறிவோர்க்கு நாரி யருந் துரும்பா மில்லத்
  துறவோர்க்கு வேந்தன் துரும்பு

Monday, August 18, 2008

தமிழர் நாட்டீர்

 பெண்களினை இழிப்பதுவும் பழிப்பதுவும்
  பெருமையுடன் செய்கின்றார் ஏடு தோறும்
  கண்களவர் என்பதனை உணர்ந்திருந்தும்
  கவலையின்றி எழுதுகின்றார் வெட்கமின்றி
  உண்மை நிலை உணராதார் உடல்கள் பற்றி
  ஒரு நூறு பல நூறாய் எழுதுகின்றார்
  தன் வீட்டில் உள்ள பெண்கள் இதனைக் கண்டால்
  தனை மதியார் என்றுணர மாட்டாராகி


  கற்பிழந்தார் பெண்ணென்றால் அங்கேயொரு
  கருத்திழந்த ஆண்மகனால் என்று சொன்னார்
  சொற்பொலிவால் கவிதைகளால் நம்மை இன்றும்
  சூழ்ந்திருக்கும் அமர கவி பாரதியும்
  வெற்றுரைகள் பேசி நின்றார் வீணர்களும்
  விழியழகு மாதரினை இகழ்ந்து நின்றார்
  கற்றவரா இல்லை இவர் படித்தவர்கள்
  கல்வி நன்கு அறியாத ஈனர்கள் காண்-


  எப்போதும் பெண்களையே பற்றிப் பேச்சு
  எவ்விடத்தும் அவர் படமே வணிகமாச்சு
  தப்பாக வாழுகின்ற ஆண்கள் தம்மை
  தலைவர் என்று வணங்குகின்ற கீழாம் சூழ்ச்சி
  அப்பா இவர் தம்மின் அசிங்கமெல்லாம்
  அன்னை தமிழ் ஒரு நாளும் பொறுக்க மாட்டாள்
  எப்பாடு பட்டேனும் இந்த நிலை
  இல்லாமல் ஒழித்திடுவோம் தமிழர் நாட்டீர்

குறட் கருத்து நட்பு

 தவறான வழிகளிலே சென்றழிந்து
  தடுமாறி வீழ்வாரைத் தான் தடுத்து
  அவமான உண்மை நிலை எடுத் துரைத்து
  அறமான நல்வழியில் அழைத்துச் சென்று
  நலமாக வாழ்கையிலே துன்பம் வந்தால்
  நண்பருடன் அத்துன்பம் பகிர்ந்து கொள்ளல்
  குலமான நண்பர்களின் குணமேயாகும்
  கொண்ட அந்த நட்பேதான் உண்மையாகும்

  குறள்

  அழிவின் அவைநீக்கி ஆறு உய்த்து அழிவின்கண்
  அல்லல் உழப்பதாம் நட்பு
  

பழம் பாடல் அவ்வை

  பூக்காது காய்த்துப் பழம் நல்கும் பலா மரம் போல்
  புகலாமல் தானாக உதவி நிற்பர் பெரியரவர்
  பூத்துப் பின் காய்த்துப் பழம் நல்கும் மாமரம் போல்
  புகன்றுதவி செய்வதனைச் சொல்லி நிற்பர் சிறியரவர்
  பூத்தும் காய்த்துக் கனி நல்கா பாதிரி போல்
  புல்லர்களாம் கயவர்களும் பூமியிலே வாழ்ந்திருப்பார்
  காத்து மக்களையே கனிவாகக் காப்பாற்றும்
  கண்வேலா இவ்வுண்மை கண்டு கொண்டு ஆண்டிடுக


  செய்யுள்
  சொல்லாமலே பெரியர் சொல்லிச் சிறியர் செய்வர்
  சொல்லியும் செய்யார் கயவரே - நல்ல
  குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடிற்
  பலா மாவைப் பாதிரியைப் பார்

Saturday, August 16, 2008

முனிரத்தினம் கல்லூரி விழா

தேர்ந்து வாழும்

 உடல் உண்டு பெண்களுக்கும் உணர்ச்சி உண்டு
  உணராதார் வாழ்வில் எல்லாம் துன்பம் உண்டு
  மலர் போன்ற அவர் தம்மை நுகர்ந்து வாழும்
  மனிதர்களின் வாழ்வில் எல்லாம் இன்பம் உண்டு
  கடல் போன்ற காமமதில் மூழ்கி மூழ்கிக்
  களித்தார்கள் நோயின்றி வாழ்வதுண்டு
  உடல் கொண்ட உயிரதனை மகிழச் செய்வீர்
  உடல் தனக்குச் சுகங்கள் தந்து உயர்ந்து வாழ்வீர்


  இடம் பொருள் என்றேதேதோ சொல்லிடுவார்
  இயலாதார் அவர் பேச்சைத் தூரத் தள்ளும்
  உடம்பதற்கு உற்சாகம் இல்லையென்றால்
  உயிர் வாழ்க்கை சிறக்காது உணர்ந்து வெல்லும்
  கடமைக்காய் உறவென்று கொள்ளாராகி
  களிப்பிற்காய் சிலிர்ப்பிற்காய் உறவைப் போற்றும்
  திடம் கொண்ட உடலோடு தெளிந்த வாழ்வும்
  தீந் தமிழின் சுவை எல்லாம் தேர்ந்து வாழும்

குறட் கருத்து

 ஏழையரைக் கருதாமல் அவர்கள் கொண்ட
  ஏக்கங்கள் உணராமல் ஆட்சி செய்வோர்
  நாளையதை எண்ணாமல் தங்கள் ஆட்சி
  நடக்க வேண்டும் என்று மட்டும் எண்ணம் கொண்டோர்
  கோழைகளை கற்றறிய மாட்டார் தன்னை
  கூட்டாக வைத்திருப்பார் அவர்தம் ஆட்சி
  பீழை அது மண்ணுக்குச் சுமையே ஆகும்
  பெருஞ்சுமையாய் நிலத்திற்கு துன்பம் தரும்


  குறள்

 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்; அது அல்லது
  இல்லை நிலக்குப் பொறை

கெட்டு விடும அவ்வை பழம் பாடல்

 எதுவெல்லாம் கெட்டு விடும் என்று ஒரு
  எளிதான பட்டியலை நமக்கு அன்று  
  முது பெரிய தமிழ்க்கிழவி அவ்வை தந்தாள் 
  முறையாக நாம் அறிவோம் அதனை நன்கு
  விதி வழியாய் நாட்டை ஆளும் மன்னவனும் 
  வீணான கொடுமை மிக்க வழியி லெல்லாம்
  சதி புரிந்து வரி விதித்து மக்களையே
  சங்கடத்தில் ஆழ்த்தி நின்றால் அவன் கெடுவான்

  உதவி என்று கையேந்தி வந்து நிற்பான்
  உதவி பெற்ற பின்னாலே அதனை நன்றாய்
  மனதில் கொண்டு அதனாலே மகிழ்ச்சி கொண்டு
  மனம் நிறைந்து பாராட்டவில்லை என்றால்
  இது என்ன உதவி பெரும் உதவி என்று
  ஏகடியம் பேசி நின்று குறைகள் சொன்னால்
  அதனாலே அவன் கெடுவான் மேலும் யாரும்
  அவனுக்கு எதுவும் செய்ய அஞ்சிடுவார்

  குல மகளாய் கணவனுடன் வாழுகின்ற
  குயில் குரலார் மயில் அழகார் தங்கள் வாழ்வில்
  நிலை பெற்ற வாழ்வதனை ஊரார் போற்றும்
  நீடு புகழ் வாழ்வதனைப் பெறுவதற்கும்
  குலப் பெருமை போற்றுதற்கும் தங்கள் வாழ்வில்
  கூசி நிற்கும் நாணமதைப் போற்றாரென்றால்
  பலப் பலரும் அவர் தம்மைக் கண்டு தூற்ற
  பாழாகி அவர் வாழ்வு கெட்டு விடும்

  
  விலை மகளாய் தன் வாழ்வைக் கொண்டு வாழும்
  வீணை எனும் குரல் கொண்ட அழகு மாதர்
  தலை வாரிப் பூச் சூடித் தம்மை வந்து 
  தழுவுவார் தம்மிடத்தில் சுகங்கள் காட்டி
  கலை நெகிழ்த்தி அவர்க்கெல்லாச் சுகமும் தந்து
  கட்டிலிலே பாடங்கள் சொல்லாராகி
  அலை போல நாணமதைக் கொண்டு நின்றால்
  அவர் கெடுவார் வாழ்வின்றித் துன்பம் கொள்வார்


  செய்யுள்

  நிட்டூரமாக நிதி தேடும் மன்னவனும்
  இட்டதனை மெச்சா இரவலனும் - முட்டவே
  கூசி நிலை நில்லாக் குலக் கொடியும்
  கூசிய வேசியும் கெட்டு விடும்
   

Friday, August 15, 2008

நாம் நடப்போம்

 கோடிக் கணக்கான ஏழையர்கள் கொல்லுகின்ற வறுமையிலே துன்பம் காண
  கோடிகளில்ஆடுகின்றார் ஆட்சியாளர் கொண்ட அந்த ஆட்சியினைக் காத்துக் கொள்ள
 பேடிகளாய் மாறி விட்டார் தாயர் நாட்டின் பெருமையெல்லாம் அழித்தொழித்தார் அந்தோ அந்தோ
  பிறந்த இந்த விடுதலைக்காய் இறந்து பட்ட பெரியவரை நினைத்தாரா பேய் மனத்தார்
 கேடிகளும் கண்டு அஞ்சும் வாழ்க்கை கொண்டார் கிறு கிறுத்தோம் அருவறுத்தோம் இவரைக் கண்டு
  வாடி இவர் நாணிடுவார் என்று எண்ண வகையில்லை குடும்பத்தோடு அசிங்கம் செய்வார்
 நாடிதனைக் காப்பாற்றி நலங்கள் பேணும் நல்லவரின் கையினிலே ஒப்படைப்போம்
  நம் தந்தை காந்தி தலைவர் காமராஜர் நலமான வழியினிலே நாம் நடப்போம்

குறட் கருத்து

 அன்பு இன்றி வாழ்வதிலே வெட்கம் இன்றி
  அறம் தன்னைப் புறம் தள்ளி செல்வம் சேர்த்து
  தன் குலத்தை உறவையெல்லாம் ஒதுக்கி வைத்து
  தானும் எதும் அனுபவிக்க எண்ணம் இன்றி
  புன் செயலாய்ப் பொருள் தேடி வைக்கும் மாந்தர்
  புரியார் அச்செல்வமெல்லாம் வம்பர் கையில்
  தன் அருமை தெரியாமல் கேவலமாய்த்
  தடுமாறிச் சீரழியும் ஒழிந்தே போகும்

  குறள்

 அன்பு ஓரீஇத் தன்செற்று அறம் நோக்காது ஈட்டிய
 ஓண் பொருள் கொள்வார் பிறர்

பழம் பாடல் அவ்வை

 சோழனது வாசலுக்கு அவ்வை என்னும்
  சொல்லாட்சி நிறைந்த அநதக் கிழவி வந்தாள்
  தோளினிலே ஒன்றிரண்டு முடிச்சினோடு
  தொல் தமிழின் சிறப்போடு பெருமையோடு
  வாழிய நீ என்றவனை வாழ்த்தி நின்றாள்
  வாழ்த்துதற்கு முன் அவனோ வணங்கி நின்றான்
  சோழனது அரசவையின் புலவனான
  சொல்லரசன் கம்பனுமே உடன் இருந்தான்


  தோள் தொங்கும் முடிச்சதனைச் சோழன் பார்க்க
  தொல் தமிழாள் கூறுகின்றாள் சோழா கேள் நீ
  வாள்கொண்டு குறவர் குலப் பெண்ணொருத்தி
  வளர்ந்து நின்ற பலா மரத்தை வெட்டி வீழ்த்த
  தோள் கொண்ட கணவனோடு வாழ வந்த
  துடியிடையாள் சக்களத்தி துடித்து நின்றாள்
  பாழ் பட்ட அம்மரத்தை நானும் ஒரு
  பாட்டாலே துளிர்க்க வைத்தேன் அதற்கு அந்த

  தேன் சொல்லாள் எந்தனுக்கு மூன்றுழக்கு
  தினை தந்தாள் அதுதான் இம் முடிச்சு ஆமாம்
  வான் கொண்ட தமிழ் கொண்டு ஏழையரை
  வாழ்த்துவதே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தேன்
  ஊன் கொண்ட இவ் வாழ்வில் ஏழை தரும்
  உப்பிற்கும் புளிக்கும் நான் பாடி நிற்பேன்
  தான் என்ற அகம் கொண்ட கம்பனையே
  தலை குனிய வைத்திட்டார்அவ்வை நல்லார்

  செய்யுள்

  கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குற மகளும்
  மூழக்குழக்குத் தினை தந்தாள் - சோழா கேள்
  உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை
  ஒப்பிக்கும் எந்தன் உளம்

Thursday, August 14, 2008

பெருமை சேர்ப்பீர்

 உலகெங்கும் அன்பு காட்டும் தமிழினத்தீர்
  உங்களுக்கு என் நன்றி பணிவினோடு
  நலமென்றும் விளையட்டும் உங்களுக்கு
  நல்லதெல்லாம் நடக்கட்டும் உங்கள் வீட்டில்
  பலமென்றால் பணம் அல்ல பண்பு ஒன்றே
  பைந்தமிழார் சொன்ன வழி அதுவே நன்று
  புலந் தோறும் வென்றிடுவீர் உலகமெங்கும்
  புகழ் பெறுவீர் தமிழருக்குப் பெருமை சேர்ப்பீர்

குறட் கருத்து காமத்துப் பால்

எல்லோரும் உறங்குகின்றார் இவ்விரவால்
  யான்மட்டும் உறங்கவில்லை அவர் பிரிவால்
  பொல்லாத இரவு இது அன்பு கொண்டார்
  போய் விட்டார் என்பதனால் துணையேயின்றி
  நல்லாள் நான் தவிக்கின்றேன் எனக் கருதி
  நாடி எந்தன் துணை மட்டும் கொண்டு நன்கு
  உள்ளார்கள் அனைவரையுமுறங்கச் செய்து
  ஒரு துணையாய் உறக்கமின்றி வைத்ததென்னை

  குறள்

மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை

கம்பனும் அவ்வையும்

பொன்னுக்குப் பாடுகின்ற கம்பனிடம் 
  போய் நின்றாள் கண்ணழகுப் பெண்ணொருத்தி
வண்ணமயக் கலைகளெல்லாம் தன்னிடத்தே
  வழி வழியாய்க் கொண்டிருந்த தாசி குலம்
என்னை ஒரு பாட்டினிலே தாங்கள் பாட
  ஏக்கங்கள் கொண்டிருந்தேன் வேண்டி நின்றேன்
மன்னவரின் அவைக் கவியே வணங்குகின்றேன்
  மனம் கொண்ட ஏக்கத்தைப் போக்க வேண்டும்

சொன்னவுடன் பாடுதற்கு கம்பன் என்ன
  சோற்றுக்காய்ப் பாடுகின்ற நிலையா கொண்டான்
பொன் கொடுத்தால் பாடுகின்றேன் என்றான்
  பொன்னாள் பொன் கொடுத்தாள் பாடி நின்றான் இரண்டு வரி
கன்னல் மொழிப் பெண்ணாளோ கை குவித்தாள்
  கம்பனவன் மேலும் பொன் கேட்டு நின்றான்
சின்ன இடைப் பெண்ணாளோ இல்லை என்றாள்
  செந்தமிழான் இல்லையென்று சென்று விட்டான்

மென்னகையாள் நொந்திருந்தாள் அந்த நேரம்
  மேன்மை மிகு அவ்வை அங்கு வந்து சேர்ந்தார்
தண்ணீரும் காவிரியே என்றிருக்கும்
  தனி வரிகள் இரண்டை மட்டும் கண்டு கேட்டாள்
கண்ணிறைந்த கண்ணோடு பெண்ணாள் சொன்ன
  கம்பனது பெருந்தன்மை கேட்டு வெந்தாள்
உள் நிறைந்த அன்போடு அவ்வை யவர்
  உடன் பாடி செய்யுள் அதை நிறைவு செய்தார்

உண்ணுதற்கு அவ்வைக்கு நீரும் சோறும்
  உவந்தளித்தாள் அவ்வையதை உவந்து உண்டார்
எண்ணுதற்கு முடியாத பெருமையினை
  ஏற்றத்தை அவ்வையவர் தந்து நிற்க
மண்ணுலகின் சிறப்பு இவர் என்றுணர்ந்தாள்
  மங்கை அவர் கால்களிலே வணங்கி வீழ்ந்தாள்
தண் தமிழோ அவ்வையுடன் வாழ்ந்ததனால்
  தான் பெற்றாள் பெரும் பேறு வென்றே நின்றாள்

  செய்யுள்

தண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

Wednesday, August 13, 2008

பேணிக் காக்க

 உறவுகளை நட்பாக ஆக்கிக் கொள்ளும்
  உயர் குணத்தைக் கொள்ளுங்கள் குடும்பம் நன்கு
  விரிவடையும் மென்மேலும் வெற்றி சேரும்
  விரும்பி வந்த நட்பையெல்லாம் உறவாய் ஆக்கி
  சிறந்திடுங்கள் செய்வ தெல்லாம் சிறப்பேயாகும்
  சீர் பெருகும் நலம் பெருகும் மகிழ்வு சேரும்
  மறந்திடுங்கள் தவறுகளை மனிதருக்காய்
  மகிழ்வான வாழ்க்கையதைப் பேணிக் காக்க

குறட் கருத்து

உவமையில்லான் இறைவன் என்று உரைப்பவர்தான்
  உவமையென இறைவனையே ஆக்குகின்றார்
  அகரமதற்குவமையென இறைவனையே
  அழகு படச் சொல்லி முதற் குறளிலேயே
  தவ முனிவர் வள்ளுவரும் தன்னை ஒரு
  தமிழனென்றுச் சொல்லுகின்றார் பெருமையோடு
  புவிஅதனின் முதல் மொழியாம் தமிழாம் அன்னை
  போற்றி நிற்பீர் தமிழர்களே வெல்க தமிழ்

  குறள்

  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்
  முதற்றே உலகு

பழம் பாடல் புறநானூறு

 ஆய் அண்டிரன் போலே ஆனைகளை
  அளிப்பதற்கு யார் உண்டு மன்னர் இங்கே
  போய் நிற்கும் புலவரெல்லாம் ஆனையின்றிப்
  போவதில்லை மீண்டும் தன் வீட்டிற்கங்கு
  வாய் திறந்து பாராட்டும் புலவரிங்கே
  வளமான செய்தி ஒன்றைச் சொல்லுகின்றார்
  ஆய் அவன் தன் நாட்டுக் காடு கூட
  அவன் தன்னைப் போற்றிப் பாடியதால்

  காடு நிறை ஆனைகளைப் பெற்றதுவாம்
  கனித் தமிழில் புலவரது கற்பனைகள்
  ஆடு ஆடு என்கின்றது நம் மனத்தை
  அழகு தமிழ் அன்னையவள் அருட் கொடைகள்
  கூடி நன்கு மகிழ்ந்திடுக தமிழர்களே
  கொடுப்பதிலே தமிழே தான் முதன்மையிங்கு
  தேடி கன்னற் தமிழ் சுவைப்பீர் என்றும் எங்கும்
  தெய்வ மொழி இதுவென்றான் பாரதியும்

  புற நானூறு
  ஏணிச்சேரி முட மோசியார்

  மழைக்கணம் சேக்கும் மாமலைக் கிழவோன்
  வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்
  குன்றம் பாடின கொல்லோ
  களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே
  

Tuesday, August 12, 2008

உன் விளையாடல்

நெற்றியிலே திருநீறு பூசுகின்றார் நெஞ்சுக்குள் பல தீங்கு தேடுகின்றார்
  வெற்றுரைகள் அள்ளி அள்ளி வீசுகின்றார் வீதியெல்லாம் பொய் வேடம் போடுகின்றார்
கற்றவர்கள் இவர் கண்டு நொந்து நின்றார் கண்ணுதலான் தன்னிடத்தில் வேண்டி நின்றார்
  எத்தி பல தீங்குகளைச் செய்து பின்னும் எக்கவலையில்லாமல் வாழுகின்றார்
உற்றவரே எங்களது உடையவரே உலகனைத்தும் காத்து நிற்கும் உமை இணையே
  நற்றவமே உங்களையே வேண்டி நின்றோம் நலமருள்க நலமருள்க எம் சிவனே
பொற் பதமே பணிகின்றோம் உம்மையன்றி போக்குண்டோ எங்களுக்கு காத்தருள்க
  கொற்றவரே உணர்கின்றோம் இவை அனைத்தும் கூத்தன் உன் விளையாடல் என்று நன்றாய்
   

தமிழோடு வாழுங்கள்

தமிழ் பேச விரும்பாத தமிழர் கண்டால்
  தவிக்கின்றேன் துடிக்கின்றேன் கலங்குகின்றேன்
  அமிழ்தான தாய்மொழியை விட்டு விட்டு
  ஆங்கிலத்தில் பேசுகின்றார் தமிழருடன்
  உமிழ் நீரில் கலந்துள்ள மொழியை விட்டு
  ஊராரின் மொழிகளிலே பிதற்றுகின்றார்
  தமிழோடு வாழுங்கள் தமிழரிடம்
  தாய் மொழியில் பேசுங்கள் வணங்கி நிற்பேன்

குறட் கருத்து

 அறிவதற்கு முயலாத மூடர் முன்னே 
  அறிவுடையார் பேசாமை பெருமை தரும்
  அதை விடுத்து அவர் முன்னர் பேசல் என்றல்
  அறிவுடையார் பெருமையெல்லாம் குலைத்துவிடும்
  அறிவுடையார் மூடர்கள் முன் பேசல் என்றல்
  அங்கணத்தில் அமிழ்தம் அதைக் கொட்டினாற் போல்
  அறிவுடையார் அதை அறிவார் பேச மாட்டார்
  அதுவே தான் அவர் தமக்குச் சிறப்பளிக்கும்

  குறள்
  அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தார்
  அல்லார் முன் கோட்டி கொளல்

பழம்பாடல் புறநானூறு

ஆய் அண்டிரன் நாடி அழகு தமிழ்ப் புலவோர்கள்
  அணி அணியாய்ச் செல்கின்றார் பரிசில் பெற்றுய்ந்திடவே
  சேய் போல அவர் அணைத்துச் சிறப்பாக விருந்தளித்து
  செல்வோர் ஒவ்வொருவருக்கும் யானை ஒன்றைத் தருகின்றான்
  தாய் போல ஒரு புலவர் தமிழானைக் கேட்கின்றார்
  தங்கமே உன் காட்டுப் பெண் யானை ஒவ்வொன்றும்
  சூலுற்ற போதெல்லாம் பல குட்டி ஈனுமோ
  சொல்லி விடு எல்லோர்க்கும் யானையையே தருகின்றாய்

  உறையூர் ஏணிச்சேரி முட மோசியார்
  பாடப்பெற்ற மன்னன் ஆய் அண்டிரன்
   
  விளங்குமணிக் கொடும் பூண் ஆ அய்-நின்னாட்டு
  இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனுமோ
  நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
  இன் முகம் கரவாது உவந்த நீ அளித்த
  அண்ணல் யானை எண்ணின்,கொங்கர்க்
  குடகடல் ஓட்டிய ஞான்றைத்
  தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவே
   

Monday, August 11, 2008

கடிதம்

ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.தோழர் ஸ்டாலின் குண்சேகரனின் கடின உழைப்பு.
இரண்டு மணி நேரம் அய்ம்பது நிமிடம் உரையாற்றினேன்.பன்னிரண்டாயிரம் பேர் வந்திருந்தனர்.
இறுதியில்பதினைந்து நிமிடம் கர வொலி எழுப்பிக் கொண்டேயிருந்தனர்.அண்மைக் காலத்தில்
இரண்டு வருடங்களுக்குள் என்னை நெகிழ வைத்த விழா.எல்லாப் பெருமையும் உழைப்பை மதிக்கும்
தோழர் ஸ்டாலினுக்கே.7-08-2008
8-08-2008 சென்னைக் கம்பன் கழகம் சிலம்பொலியார். அண்ணன் சத்திய சீலன்.அண்ணன் தெ.ஞான
சுந்தரம்,இலக்கியச் சிந்தனை அய்யா ப.இலக்குமணன் பெரியவர் இராம.வீரப்பன் நண்பர் ஜெகத்
ரட்சகன்.அருமையான ரசிகர்கள்.
10-08-2008 திருப்பத்தூர்க் கம்பன் கழகம்/ மிகச் சிறந்த சுவைஞர்கள்.
இன்று 11-08-2008 மதியம் 12 மணிக்குத் தான் வந்தேன்.நாளை எழுதுவேன்.

  நன்றி நெல்லைக் கண்ணன்

Wednesday, August 6, 2008

பொழிவின் பொன் விழா வேண்டுகோள்

 பணம் படைத்தார் என்பதனால் அவரிடத்தே
  பல்லிளித்து நிற்கின்ற பழக்கமில்லை
  மனம் படைத்தார் மத்தியிலே நாணம் வந்து
  மடக்குவதால் கேட்பதற்கு வாயே யில்லை
  குணம் படைத்தார் தம்மிடத்தே கேட்பதற்கு
  குடும்பத்தின் பெருமையது விடவேயில்லை
  தினம் படிப்பீர் எந்தனது படைப்பை யெல்லாம்
  தெரிந்து கொள்வீர் என் நிலையை மன்னிப்பீரே

பொழிவின் பொன் விழா

  பதின் மூன்று அகவையிலே மேடையேற
  பைந்தமிழாள் அருள் செய்தாள் தொடர்ந்துதவ
  கதி அவளே என்றவளின் கால்கள் பற்றிக்
  கண்ணன் நான் தொழுது நின்றேன் இன்று வரை
  மதியாகி அவளே தான் வெற்றியெல்லாம்
  மணமாகத் தந்து நின்றாள் அய்ம்பதாண்டு
  சரியாக நிறைகிறது இந்த ஆண்டு அதைச்
  சந்ததிகள் கொண்டாட விழைந்து நின்றார்

  தமிழ் மாந்தும் நெல்லை நகர் இளையவர்கள்
  தனியாக விழவிற்கு முயலுகின்றார்
  அமிழ்தாகத் தலைப்பளித்தார் பொழிவு காணும்
  அறிவான பொன் விழா என்றுரைத்து நின்றார்
  தமிழுக்காய் எடுக்கின்ற அவ்விழாவில்
  தாங்கள் ஏதும் பங்கேற்க முடியுமென்றால்
  விரைவாக உதவிடுக விழா அதனை
  வெற்றி பெறச் செய்திடுக வேண்டுகின்றேன்

குறட் கருத்து

 நல்லவரின் வீட்டுக்குள் துன்பம் வந்தால்
  நடக்கின்ற கதையதனை கொஞ்சம் கேட்போம்
  வல்லதுவாய்த் துன்பமது கருதிச் சென்றால்
  வதை படுமாம் துன்பம் அவர் வீட்டிற்குள்ளே
  நல்லதுவாய் வருவதெல்லாம் கருதுகின்ற
  நாயகரைத் துன்பம் அது என்ன செய்யும்
  அல்லல் பட்டு அது அழுமாம் அய்யோ என்று
  அழகாகச் சொல்லுகின்றார் வள்ளுவனார்

  குறள்
 இடும்பைக்கே இடும்பை படுப்பர் இடும்பைக்கே
 இடும்பை படாதவர்

பழம் பாடல் கம்பன்

 பெண்கள் எல்லாம் அடிமையென்று கருதுகின்ற
  பேதைமையில் இருக்கின்றார் இன்னும் சிலர்
  கண் காது மூக்கு வைத்துக் கதைகள் சொல்லி
  கவிதைகளும் எழுதுகின்றார் பல பேர் இங்கு
  சொன்னாரா உண்மையினை இல்லை இல்லை
  சொன்னவர்கள் சொன்னாரே அதைச் சொன்னாரா
  கண்ணான கற்பு என்றும் கணவன் என்றால்
  கண் கண்ட தெய்வம் என்றும் சொல்லி வைத்தார்

  சீதையவள் பேசுகின்றாள் இராமனிடம் கம்பன்
  செப்புகின்ற செய்தியிதைச் சொல்ல மாட்டார்
  பேதையென்று பெண்ணினத்தை நினைப்பதுவே
  பெருமையெனக் கருதுகின்றாய் நாயகனே
  நீ மட்டும் இல்லை அங்கே வானுலகில்
  நிதம் உயிர்கள் தனைப் படைக்கும் பிரம்மாவோடு
  தேனுமையாள் பாகத்தான் சிவனும் நல்ல திருமாலும்
  தேர்வாரோ பெண்ணின் உள்ளம்

  வாகாக கேள்வி யொன்றை சீதை மூலம்
  வைக்கின்றான் கம்பனவன் பெண்களுக்காய்
  தோதாக இதை விடுத்து மற்றதெல்லாம்
  தொகுக்கின்றார் மேடைகளில் அறிஞர் என்பார்
  ஆகாகா கற்பு பெண்மை உண்மை என்று
  அடுக்கி நிற்பார் மேடைகளில் அந்தோ பாவம்
  சாகாராய் வாழுகின்ற இவரைக் கண்டு
  சத்தியமாய்த் தமிழன்னை சிரித்து நிற்பாள்

  கம்பன்
 பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும்
 சங்கு கைத் தாங்கிய தரும மூர்த்தியும்
 அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும்
 மங்கையர் மன நிலை உணர வல்லரோ

Tuesday, August 5, 2008

பழம் பாடல் பட்டினத்தார்

 தாய் உதிரம் தன்னோடு தரையினிலே வந்து விழ
  தாய்ப் பாலால் தான் வளரத் துவங்கி பின்னர் அத்தாயர்
  வாய்ப்பாய் நற் பசும் பாலை வாய் நிறைய ஊட்டி விட
  வந்துதவும் கடல் ஈன்ற சங்கு மீண்டும் அதுவே தான்
  தீப் பாயும் காமத் தேடலினால் கண்ட நங்கை
  திருமணத்தில் இணைகையிலே முழங்கும் எல்லாம் முடிந்து
  போப் போவென்று இறுதியிலே உறவெல்லாம் அழுகையிலே
  பொங்கி அங்கே முழங்குவதும் சங்கேதான் சங்கேதான்

  பட்டினத்துப் பிள்ளை

  முதற் சங்கம் அமூதூட்டும்மொய் குழலார் ஆசை
  நடுச் சங்கம் நல் விலங்கு பூட்டும் - கடைச் சங்கம்
  ஆம்போது அது ஊதும் அம்மட்டோ இம்மட்டோ
  நாம் பூமி வாழ்ந்த நலம்

குறட் கருத்து

எல்லாமும் துறந்து விட்டேன் என்று சொல்லி
  இருப்பாரும் தலைவர்களும் அமைச்சர்களும்
  நல்லாரும் ஒழுக்கமின்றிப் பொருளைச் சேர்க்கும்
  நாகரீக மற்றாரும் வாழ எண்ணி
  பொல்லாத செயலெல்லாம் செய்தழியும்
  பொறுப்பற்ற அரசியலார் கூட்டமெல்லாம்
  செல்லாமல் அழிவார்கள் உழவர் மட்டும்
  செய் தொழிலை மறந்தங்கு உறங்கச் சென்றால்

  குறள்
  உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவது உம்
  விட்டேம் என்பார்க்கும் நிலை

தாய் தந்தை போற்றி நில்லும்

துறக்காத துறவியரை நம்பி இன்னும்
  தொடர்வாரைக் காண்கையிலே துன்பம் கொண்டேன்
  அற நிலைகள் தனை மறந்து வணிகம் ஆக்கி
  ஆடுகின்றார் விளம்பரங்கள் போடுகின்றார் 
  சிறப்பாக நமக்கு வழி காட்டுதற்காய்
  சேர்க்கின்றார் கூட்டங்கள் அதற்கும் கூட
  திரைப் படத்தார் துணையைத் தான் தேடுகின்றார்
  தெய்வமதை விளையாட்டாய்க் காணுகின்றார்

  என்னிடத்தில் வாருங்கள் நிம்மதியை
  எப்போதும் பெறுவதற்கு வழிகள் சொல்வேன்
  தன்னிலையை உயர்த்துதற்கு மிகச் சிறந்த
  தனி வழிகள் நூறு உண்டு வருக என்பார்
  அன்னவர்க்கு நோய்கள் வர உடனடியாய்
  அங்குள்ள மருத்துவரைத் தேடிடுவார்
  சின்னவராய் நமை ஏய்க்கும் இவரை யெல்லாம்
  சீண்டாதீர் தாய் தந்தை போற்றி நில்லும்
   

Monday, August 4, 2008

எம்.ஜி.ஆர்.

கொடுப்பதிலே சுகம் கண்டு விட்டவர்கள்
  கொடுப்பார்கள் கொடுப்பார்கள் போதையேறி
  அடுத்தவர்க்கு இன்பம் வர அளிப்பதிலே
  அவர் கொள்ளும் இன்பமதோ கோடி கோடி
  தடுப்பதற்கு முயல்கின்ற உறவைக் கூட
  தள்ளி வைத்தே கொடுப்பார்கள் அவர்க்கும் கூட
  சிறப்பிதனைக் கைக் கொண்டார் மட்டும் இங்கே
  செத்தொழிவதில்லை என்றும் வாழ்ந்தே வென்றார்

  அடுப்பதனைப் பற்ற வைத்து விட்டுச் சென்று அங்கே
  அய்யா என்றழைத்தாலே போதும் உடன்
  பருப்பு வரும் அரிசி வரும் பல சரக்குப் 
  படையெடுத்து ஒடி வரும் அதன் விளைவாய்
  தொடுத்து வரும் உதவியினால் அக் குடும்பம்
  தொல்லையில்லா வாழ்க்கையதைத் துய்த்திடுமே
  கொடுத்ததனால் வாழ்கின்றார் இன்றும் கூட
  கொற்றவராய் எம்.ஜி.ஆர்.என்னும் மன்னர்

குறட் கருத்து

 சோம்பல் கொண்டு அதனைச் சுகமென்று வாழ்வாரை
  சொர்க்கம் அதே என்று சொக்கி அதில் வீழ்ந்து உழல்வாரை
  தாம் வாழும் வாழ்க்கை தரம் அதனை உணராரை
  தருவதற்குக் காத்திருக்கும் நிலமகளை அணுகாரை
  தேம்பி அழப் பிறந்தவரே இவர் என்று எண்ணி எண்ணி
  திருமகளாம் நில மகளாள் தினம் நகைத்து நிற்பாளாம்
  ஒம்புங்கள் உழைப்பதனை உழுது விதைத்து அறுத்திடுங்கள்
  உயிர் வாழ்க்கை அது என்ற உண்மையினை உணருங்கள்

  குறள்
  இலம் என்று அசை இ இருப்பாரைக் காணின்
  நிலம் என்னும் நல்லாள் நகும்

பழம் பாடல் நாலடியார்

சேர்ப்பான் சேர்ப்பான் பொருளை சேர்த்துக் கொண்டேயிருப்பான்
  சேர்த்த அப்பொருளை அவன் செலவழித்தும் இன்பமுறான்
  பார்த்து அதனை மிகவே நல்லோர்க்கும் துறவியர்க்கும்
  பரிவோடளித்து அவர் தம் வாழ்த்தினையும் பெற மாட்டான்
  சேர்த்த அப் பொருளோ அவன் கண்டு சிரித்து நிற்கும்
  செய்த நன்மை ஒன்றுமில்லாக் காரணத்தால் அருள் சிரிக்கும்
  வேர்த்து வேர்த்து அலைந்து தினமும் வேதனைகள் சேர்க்காமல்
  வேண்டு மட்டும் பிறர்க்குதவ விரும்பி நிற்றல் அருள் அளிக்கும்

  நாலடியார்
  துய்த்துக் கழியான் துறவோர்க் கொன்றீகலான்
  வைத்துக் கழியும் ம்டவோனை - வைத்த
  பொருளும் அவனை நகுமே. உலகத்து
  அருளும் அவனை நகும்

Saturday, August 2, 2008

குற்ட் கருத்து்

உலகெங்கும் நோய்களுக்கு மருந்து கண்டார்
ஊர் போற்ற வாழுகின்றார் உண்மை உண்மை
பலமான அவர் அறிவு கண்டு போற்றி
பணிந்தவரைக் கேட்டு நின்றேன் எந்தன் நோய்க்கு
சரியான மருந்து எது என்று அவர்
சலிக்காமல் சிரிக்கின்றார் என்ன என்றேன்
விரிகின்ற விழியாளின் வழியாய் வந்த
வெம்மை நோய்க்கு அவள் தானேமருந்து என்றார்

குறள்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன் நோய்க்கு தானேமருந்து

பழம் பாடல்

வறுமையிலே பட்ட துன்பம் தாங்கொணாராய்
  வள்ளல் காளத்தி அவர் தம் இல்லம் நோக்கி
  பெரும்புலவர் நடக்கின்றார் வழித் துணையாய்
  பேச்சுக்குத் துணையாக வறுமை தன்னை
  இடம் கொடுத்து அன்பு செய்தார் வறுமையோடு
  ஏகடியம் பேசுகின்றார் இத்தனை நாள்
  நிழல் போல எனை நீயும் தொடர்ந்து வந்தாய்
  நிம்மதியே இல்லாமல் என்னைக் கொன்றாய்


  புடம் போட்ட தங்கம் எங்கள் காளத்தியார்
  பொன் வேலி வீட்டிற்குள் நான் நுழைந்தால்
  இடம் இல்லை உந்தனுக்கு அங்கே ஆக
  இன்று மட்டும் எந்தனுடன் இருந்து கொள் நீ
  திடமாவேன் என் தேகம் தேக்கும் ஆகும்
  திரிந்தலைந்த உன் நிலை தான் மாறிப் போகும்
  உடம்போடே நிழலாகி உழன்ற நீயும்
  ஒரு நாள்தான் நாளை வரை இருந்து கொள் நீ

  செய்யுள்

  நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல் போல
  நாளைக் கிருப்பையோ நல்குரவே -காளத்தி
  நின்றைக்கே சென்றக்கால் நீ யெங்கே நானெங்கே
  இன்றைக்கே சற்றே இரு

Friday, August 1, 2008

பணத்திற்காய் அலைகின்றாரே

 பணம் ஒன்றே வாழ்க்கையென்று ஏழையர்க்கு
  பகட்டாலே காட்டி நின்றார் திருடி வாழ்வோர்
  குணத்திற்கு மதிப்பில்லை என்றாற் போல
  கொண்ட பெருஞ் செல்வத்தால் மிரட்டுகின்றார்
  பிணமாக வாழ்கின்றார் என்பதனைப்
  பெருஞ் செல்வராகி நின்றார் உ;ணர்வதில்லை
  தினந் தோறும் அவர் ஆடும் ஆட்டம் கண்டால்
  தேம்பி நிற்பார் ஏங்கி நிற்றல் கண்டு நோவோம்

  பணம் எதுவும் செய்யும் என்ற இவரின் போக்கே
  பலர் வாழ்வைத் திசை மாற்றிப் போக வைக்கும்
  நிணம் தசை நார் நிறைந்த அவர் உடலுக்குள்ளே
  நிம்மதியே இருக்காது உண்மை சொன்னேன்
  குணம் விட்டு ஏழையரில் சிலரும் இங்கே
  கொள்ளையராய் மாறியது இவரைக் கண்டு
  மனம் இல்லாக் காவற்றுரை அவரை மட்டும்
  மடித்து விட்டுப் பெயர் கொள்ளத் துடிக்கிறது

  கோடிகளில் புரளுகின்றார் ஊர்கள் தோறும்
  கோயிலகளில் பூசைகளும் செய்து நின்றார்
  ஆடுகின்ற ஆட்டமெல்லாம் அவர் கருத்தில்
  ஆண்டவனை ஏமாற்றச் செய்யும் வேலை
  பாடுகின்றார் ஆண்டவனைப் பழிக்கு அஞ்சார்
  படைத்தவனோ இவர் கண்டு சிரித்து நிற்பான்
  கேடு கெட்ட இவரால் தான் ஏழைகளும்
  கிறுக்காகி பணத்திற்காய் அலைகின்றாரே
  

குறட் கருத்து பொருட்பால்

பணிந்து இனிய சொல்லி நிற்பார்
  பண்பு நிறைஅன்பு செய்வார்
  கனிந்த மொழி தன்னாலே
  கடவுளையும் நண்பு கொள்வார்
  விரிந்த மனம் கொண்டுயர்ந்தார்
  வேண்டு மட்டும் உதவி நிற்பார்
  நிறைந்துணர்ந்த பெரியோர்கள்
  நிலையுணர்ந்து பணிந்து நிற்பார்

  நிமிர்ந்தெங்கும் திமிர் செய்வார்
  நிலையின்றி உளறி நிற்பார்
  திமிர்ந்தெங்கும் தனைப் பெரிதாய்த்
  தெய்வமென்றே கூறி நிற்பார்
  குமையாமல் தனை உயரவாய்க்
  கூறி நிற்றல் சிறியர் செயல்
  இமையவரே தாம் என்று
  இயம்பி நிற்பார் சிறுமையினால்

  திருக்குறள்
  பணியுமாம் பெருமை என்றும் சிறுமை
  அணியுமாம் தன்னைவியந்து

பழம் பாடல் திருமந்திரம்

 ஓரூர் பேரூர் உலகத்துக்கெல்லாம் அச் சீரூரே
  செல்வமெல்லாம் சேர்த்தளிக்கும் நல்லூராம்
  ஆறு வழி அதற்குண்டு அதையறியாச் சில பேரோ
  அதிலொன்றே சிறந்தது என்று அறிவின்றிப் பிதற்றுகின்றார்
  தேரார் அவர் உரையோ மலை கண்டு குரைத்து நிற்கும்
  தெரு நாயின் குரைப்பாகும் எல்லோரும் உணர்வீரே
  ஆறு சமயங்களும் ஆண்டவனை அடைவதற்கே
  அறிவீர் அறிந்தங்கு ஆண்டவனை அடைவீரே

  திருமந்திரம்
  ஒன்றது பேரூர் வழி ஆறதற்குள
  என்றது போல இரு முச்சமயமும்
  நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
  குன்று குரைத்தெழு நாயை யொத்தார்களே