எதுவெல்லாம் கெட்டு விடும் என்று ஒரு
எளிதான பட்டியலை நமக்கு அன்று
முது பெரிய தமிழ்க்கிழவி அவ்வை தந்தாள்
முறையாக நாம் அறிவோம் அதனை நன்கு
விதி வழியாய் நாட்டை ஆளும் மன்னவனும்
வீணான கொடுமை மிக்க வழியி லெல்லாம்
சதி புரிந்து வரி விதித்து மக்களையே
சங்கடத்தில் ஆழ்த்தி நின்றால் அவன் கெடுவான்
உதவி என்று கையேந்தி வந்து நிற்பான்
உதவி பெற்ற பின்னாலே அதனை நன்றாய்
மனதில் கொண்டு அதனாலே மகிழ்ச்சி கொண்டு
மனம் நிறைந்து பாராட்டவில்லை என்றால்
இது என்ன உதவி பெரும் உதவி என்று
ஏகடியம் பேசி நின்று குறைகள் சொன்னால்
அதனாலே அவன் கெடுவான் மேலும் யாரும்
அவனுக்கு எதுவும் செய்ய அஞ்சிடுவார்
குல மகளாய் கணவனுடன் வாழுகின்ற
குயில் குரலார் மயில் அழகார் தங்கள் வாழ்வில்
நிலை பெற்ற வாழ்வதனை ஊரார் போற்றும்
நீடு புகழ் வாழ்வதனைப் பெறுவதற்கும்
குலப் பெருமை போற்றுதற்கும் தங்கள் வாழ்வில்
கூசி நிற்கும் நாணமதைப் போற்றாரென்றால்
பலப் பலரும் அவர் தம்மைக் கண்டு தூற்ற
பாழாகி அவர் வாழ்வு கெட்டு விடும்
விலை மகளாய் தன் வாழ்வைக் கொண்டு வாழும்
வீணை எனும் குரல் கொண்ட அழகு மாதர்
தலை வாரிப் பூச் சூடித் தம்மை வந்து
தழுவுவார் தம்மிடத்தில் சுகங்கள் காட்டி
கலை நெகிழ்த்தி அவர்க்கெல்லாச் சுகமும் தந்து
கட்டிலிலே பாடங்கள் சொல்லாராகி
அலை போல நாணமதைக் கொண்டு நின்றால்
அவர் கெடுவார் வாழ்வின்றித் துன்பம் கொள்வார்
செய்யுள்
நிட்டூரமாக நிதி தேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரவலனும் - முட்டவே
கூசி நிலை நில்லாக் குலக் கொடியும்
கூசிய வேசியும் கெட்டு விடும்
Saturday, August 16, 2008
கெட்டு விடும அவ்வை பழம் பாடல்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment