Sunday, August 31, 2008

இரட்டைப் புலவர்கள்

கண்ணில்லா ஒருவரும் காலில்லா ஒருவரும்
  வண்ணமயப் புலவராய் வாழ்ந்திருந்தார் அன்பாலே
  கண்ணில்லார் தோளினிலே காலில்லார் அமர்ந்து கொள்ள
  எண்ணமெல்லாம் கவிதைகளாய் யாத்திட்டார் இருவருமே
  முன் இரண்டடியை ஒருவர் மொழியழகாய்ப் பாடி நிற்க
  முத்தாய்ப்பாய் அடுத்தவரும் முடித்து வைப்பார் வெண்பாவை
  இன் தமிழின் புலவரினை இரட்டையர் என்றழைத்தார்கள்
  இல்லாத கண் கால்கள் மறந்தாராய் வாழ்ந்தார்கள்


  ஊனம் மறந்தவராய் ஒற்றுமையாய் வாழ்ந்தார்கள்
  ஊரூராய்ச் சென்று நன்கு தமிழ் மொழியை உணர்ந்தார்கள்
  ஞானம் நிறைந்தவராய் நற்றமிழை மொழிந்தார்கள்
  நலம் பயக்கும் நற் செய்தி நமக்களித்து மகிழ்ந்தார்கள்
  வானம் தொடும் புகழால் வண்டமிழால் வாழ்ந்தார்கள்
  வழி கண்டு ஊனமதை அன்பதனால் வென்றார்கள்
  நாமும் அவர் போலே நல்லவராய் வாழ்வோமே
  நம் மனத்தின் ஊனமதை நற்றமிழால் வெல்வோமே

3 மறுமொழிகள்:

said...

////நாமும் அவர் போலே நல்லவராய் வாழ்வோமே
நம் மனத்தின் ஊனமதை நற்றமிழால் வெல்வோமே////

அருமை அருமை வாழ்த்துகள்,

said...

சிறு வயதில் அவர்களைப் பற்றிப் படித்து ரசித்தது நினைவுக்கு வருகிறது.
அவர்களுடைய ஓரிரு கவிதைகளை எடுத்துப் போட்டு கூடுதல் சுவை சேருங்களய்யா.

குளத்து நீரில் பார்வையற்றவர் துணி துவைக்க, துணி கையை விட்டு தூரமாய் போய் விடுகிறது. அதைப் பார்த்து நடக்க இயலாதவர் இரு வரிகள் பாட
பார்வையற்றவர்,

ஆனாலும் கந்தல்
அதிலேயும் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சு போ

என்று பாடி முடிப்பதாக இருக்கும். அருமையான இரட்டையர்கள்.

said...

எப்போதோ படித்த இரட்டைப் புலவர்களின் பாடலொன்று
நினைவிற்கு வருகிறது.

ஒருவர் பாடியவரிகள்:

கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள!
கூட்டோடே எங்கே குடிபோனீர்?


இன்னொருவர் தொடர்ந்து பாடி முடித்த வரிகள்:


-பாட்டாய்க்கேள்!
செல்கால மெல்லாம் செலுத்தினோம் அல்காலம்
கல்லானோம் செம்பானோம் காண்!

இரட்டைப் புலவர்களை நினைவூட்டியமைக்கு நன்றி!