Thursday, August 14, 2008

கம்பனும் அவ்வையும்

பொன்னுக்குப் பாடுகின்ற கம்பனிடம் 
  போய் நின்றாள் கண்ணழகுப் பெண்ணொருத்தி
வண்ணமயக் கலைகளெல்லாம் தன்னிடத்தே
  வழி வழியாய்க் கொண்டிருந்த தாசி குலம்
என்னை ஒரு பாட்டினிலே தாங்கள் பாட
  ஏக்கங்கள் கொண்டிருந்தேன் வேண்டி நின்றேன்
மன்னவரின் அவைக் கவியே வணங்குகின்றேன்
  மனம் கொண்ட ஏக்கத்தைப் போக்க வேண்டும்

சொன்னவுடன் பாடுதற்கு கம்பன் என்ன
  சோற்றுக்காய்ப் பாடுகின்ற நிலையா கொண்டான்
பொன் கொடுத்தால் பாடுகின்றேன் என்றான்
  பொன்னாள் பொன் கொடுத்தாள் பாடி நின்றான் இரண்டு வரி
கன்னல் மொழிப் பெண்ணாளோ கை குவித்தாள்
  கம்பனவன் மேலும் பொன் கேட்டு நின்றான்
சின்ன இடைப் பெண்ணாளோ இல்லை என்றாள்
  செந்தமிழான் இல்லையென்று சென்று விட்டான்

மென்னகையாள் நொந்திருந்தாள் அந்த நேரம்
  மேன்மை மிகு அவ்வை அங்கு வந்து சேர்ந்தார்
தண்ணீரும் காவிரியே என்றிருக்கும்
  தனி வரிகள் இரண்டை மட்டும் கண்டு கேட்டாள்
கண்ணிறைந்த கண்ணோடு பெண்ணாள் சொன்ன
  கம்பனது பெருந்தன்மை கேட்டு வெந்தாள்
உள் நிறைந்த அன்போடு அவ்வை யவர்
  உடன் பாடி செய்யுள் அதை நிறைவு செய்தார்

உண்ணுதற்கு அவ்வைக்கு நீரும் சோறும்
  உவந்தளித்தாள் அவ்வையதை உவந்து உண்டார்
எண்ணுதற்கு முடியாத பெருமையினை
  ஏற்றத்தை அவ்வையவர் தந்து நிற்க
மண்ணுலகின் சிறப்பு இவர் என்றுணர்ந்தாள்
  மங்கை அவர் கால்களிலே வணங்கி வீழ்ந்தாள்
தண் தமிழோ அவ்வையுடன் வாழ்ந்ததனால்
  தான் பெற்றாள் பெரும் பேறு வென்றே நின்றாள்

  செய்யுள்

தண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

0 மறுமொழிகள்: