கோயில்களில் அக்காலம் இறைவனுக்கு
கொண்டு சென்று படைக்கின்ற உணவு எல்லாம்
வாயிலிலே மண்டபத்தில் வந்து தங்கும்
வழிப் போக்கர் தமக்கேதான் அளித்து நின்றார்
பாவலர்கள் புலவர்களும் இரவு நேரம்
பசியாற அங்கேதான் வந்து சேர்வார்
கோவில் ஒன்றில் இரட்டையரும் வந்து சேர
குருக்கள் கொண்டு சென்று விட்டார் உணவை முற்றும்
பசித் துன்பம் போகவில்லை என்று சொல்லி
பாடுகின்றார் இருவருமே ஆகா ஆகா
வசிக்கின்றார் இறைவன் அந்தக் கோயிலிலே
வகையாக அவரிடத்தில் கேட்டு நின்றார்
பசி தீர நீர் மட்டும் சோறு உண்டு
பரிதவிக்க விட்டீரே எம்மை மட்டும்
நிசியிதிலே பசியோடு நிற்கின்றோமே
நெற்றிக் கண் சிவனாரே நியாயம்தானா
இரண்டடியில் ஒருவர் இந்தக் கேள்விகேட்க
இறவனுக்காய் இன்னொருவர் பதிலைத் தந்தார்
நிரந்தரமாய் நடக்கின்ற கேலிக் கூத்தை
நினைந் துணர்ந்து சிரிக்கின்ற விதமாய்ச் சொன்னார்
தினம் தினம்தான் சோறு வரும் முன்னால் வைப்பார்
தேடி வைத்த சங்கதனை ஊதி நிற்பார்
மனம் மகிழ முரசடிப்பார் கொட்டடிப்பார்
மற்றபடி நானெங்கே சோறு கண்டேன்
சேவை மனம் கொண்டார்கள் செய்து வைத்த
சிறப்பெல்லாம் இவ்வாறே அன்று முதல்
பாவமதாய் மாறி விட்ட பழியை யன்றோ
பாட்டாலே உணர்த்தி நின்றார் இரண்டு பேரும்
கோவிலுக்குள் இருக்கின்ற சிவனே தன்னை
கூறு கெட்ட மூளி என்று சொல்ல வைத்தார்
தாவி வரும் பாட்டதனின் அழகைப் பாரும்
தமிழினத்தீர் கோயிலகளின் பெருமை போற்றும்
தேங்கு புகழாங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ - போங்காணும்
கூறுசங்கு தோல் முரசு கொட்டோசையல்லாமல்
சோறு கண்ட மூளி யார் சொல்
Sunday, August 31, 2008
இரட்டையர் பாடல்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment