Saturday, June 7, 2008

அவருககே சொந்தம்

பொல்லாத ஒரு மனிதன் ஒரு நாள் காலை
புத்தருக்கு நேர் எதிராய் வந்து நின்றான்
கல்லாக வார்த்தைகளை புத்தரிடம்
கடுங் கோபம் கொண்டவனாய் எறிந்து நின்றான்
சொல்லாத சொல்லில்லை வாயெடுத்து
சொறி வார்த்தை அனைத்தையுமே சொல்லுகின்றான்
நல்லார்கள் புத்தரது அருகிருந்தோர்
நடு நடுங்கி அவர் முகமே பார்த்து நின்றார்


இல்லை இனி ஒரு வார்த்தை ஏசுதற்கு
என்ற பின்னர் தானாக அவனும் சென்றான்
நல்லவர்கள் புத்தரிடம் கேட்டு நின்றார்
நாயகரோ அவர் கண்டு சிரித்து நின்றார்
வல்லவராய் அவர் வந்து என்னை நோக்கி
வழங்கியதை காதுகளால் வாங்கவில்லை
சொல்லிய அச் சொற்களெல்லாம் அவருக்குத் தான்
சொந்தம் அவை அவரேதான் கொண்டு சென்றார்

0 மறுமொழிகள்: