அம்பு தைத்த பெண் மானொன்று கரையதனில்
ஆர்ப்பரிக்கும் வெள்ளமதில் அச்சமதால் இறங்காமல்
தம் பக்கம் போகாமல் தவித்து நின்று வாடுதல் போல்
தளிர்க் கொடியாள் தன் பாட்டைத் தமிழாகச் சொல்லுகின்றாள்
அம்புவியை ஆண்டு நிற்கும் அழகு மன்னன் பாண்டியனை
தம் விழியால் கண்டு நெஞ்சம் தனக்குள்ளே அனுமதித்து
வெம்புகின்றாள் சொல்லுகின்றாள் ஒரு செய்தி நற் செய்தி
விரித்துரைக்கச் சுகங்கள் தரும் வேல் விழியாள் பொற் செய்தி
2 நெஞ்சமது பாண்டியனை நேரினிலே கண்டு விட
அஞ்சாமல் அவன் கோட்டை வாசலுக்கே சென்றதுவாம்
பஞ்சான நெஞ்சமது பதை பதைத்து வாசல் கொள்ள
பாண்டியனின் வாசலது படும் பாட்டைச் சொல்லுகின்றாள்
வழியினிலே இவள் நெஞ்சம் வசமாக நின்று கொள்ள
வருவாரும் போவாரும் வழியின்றித் தவிக்கின்றார்
சிரிக்கின்றார் சிலர் கண்டு என்றாலும் நாணமின்றி
இருக்கின்ற தவள் நெஞ்சு பாண்டியனின் வாசலிலே
முத்தொள்ளாயிரம்
புகுவார்க்கு இடங்கொடா போதுவார்க்கு ஒல்கா
நகுவாரை நாணி மறையா - இரு கரையின்
ஏமான் பிணை போல நின்றதே கூடலார்
கோமான் பின் சென்ற என் நெஞ்சு
2 மறுமொழிகள்:
வருவாரும் போவாரும் வழியின்றித் தவித்தாலும் பரவாயில்லை!
அவளை மிதித்தன்றோ செல்லுகின்றனர்.
அதனாற்றானே அம்பு தைத்த மானாக வாடுகிறாள்
அழுதிங்கே புலம்புகிறாள்!
அன்புள்ள தங்களது முகத்தைக் காண
ஆசை கொண்டேன புகைப்படத்தை
அனுப்ப வேண்டும்
வாழ்க தமிழுடன்
அன்பன்
நெல்லைக்கண்ணன்
Post a Comment