Wednesday, December 29, 2010
ராசிபுரம் எஸ்.ஆர்.வி.கல்விக் குழுமங்களின் செயலர் அன்பே வடிவான அய்யா ப.வஜ்ஜிரவேலு அவர்களோடு
சிவனும் திருமாலும்
மார்கழி மாதம் ஆண்டாளும் மணிவாசகரும் தந்து நின்ற
சீர் நிறைப் பாவைப் பாடல்களை செவியில் நிறையச் செய்வதற்காய்
கார்முகில் கண்ணன் சிவனார் தம் கனிவை அருளைப் பெறுவதற்கு
ஊரினில் உள்ளோர் விடவில்லை ஒருவருக் கொருவர் எதிர்ப் பாட்டு
ஆரிதைக் கேட்பது தெருத் தோறும ஆறேழாகக் கோயில்களில்
சீரின்றிப் பாடல்கள் ஒலி பரப்பி செவியைக் கிழித்தே ஒழிக்கின்றார்
வார்முலை உமையின் சிவனாரும் வ்ளம் கொள் திருவும் திருமாலும்
ஆரிங்கு வருவார் வர மாட்டார் அகப் பட்டது நாம் மட்டு மிங்கே
Saturday, December 25, 2010
கிறிஸ்துமஸ் வாழ்த்து
உன்னைப் போல் பிறரையே நேசி என்ற
ஒரு வரியை உலகத்தார் கொண்டு விட்டால்
பின் னங்கு இன்ப மன்றி வேறு ஏது
பிரி வேது சரி வேது சர்ச்சை யேது
தன்னையே தந்து நின்றார் இயேசு பிரான்
தந்ததெல்லாம் அன்பு வழி ஒன்று தானே
அன்னவரும் அவதரித்தார் உலகம் உய்ய
அன்பர்களே உமக் கெந்தன் அன்பு வாழ்த்து
Friday, December 24, 2010
எம்.ஜி.ஆர்.எங்கும் உள்ளார்
மறைந்தவர்கள் அனைவருமே மறைந்தா போனார்
மக்களுக்கு உதவியவர் இன்றும் உள்ளார்
இறந்து விட்டார் என்றவரைச் சொல்லுவது
இழி மொழியாய் ஆகி விடும் நிறுத்திக் கொள்வீர்
சிறந்தவராய் அனைவருக்கும் உதவி செய்து
சேர்த்தெதையும் வைக்காமல் கொடுத்து வாழ்ந்த
பரந்த மனம் கொண்டோர்கள் என்றும் உள்ளோர்
பார்க்கின்றோம் எம்.ஜி.ஆர். எங்கும் உள்ளார்
Thursday, December 23, 2010
ஹான்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் வரதராஜன் துணைவியார் திருமதி மகாலட்சுமி திருமகனார் அசோக் அவரகள் திருமதி பவானி அசோக் அவர்களோடு
என் தம்பி நாஞ்சில் நாடன்
என் தம்பி இனிய தம்பி நாஞ்சில் நாடன்
இதயத்தில் நிறைந்திருக்கும் முதன்மைத் தம்பி
முன் பின்னர் யாரிடமும் முயற்சி செய்து
முறை கேடாய் விருதுகளைப் பெறுவார் முன்னே
தன் னுழைப்பால் தமிழுறவால் விருது பெற்றான்
தாமதமாய்ப் பெற்றாலும் சரியாய்ப் பெற்றான்
கண்ணினிய என் தம்பி தன்னை எந்தன்
கனியுறவாய்த் தந்த தமிழ் காத்து நிற்பாள்
Friday, December 17, 2010
ஆரிவரை முடித்திடுவார்
எல்லாத் தவறுகளும் செய்து விட்டு
எப்படித்தான் முகம் மலரச் சிரிக்கின்றாரோ
பொல்லாதார் இவர் தம்மைப் பார்க்கும் நேரம்
புழுங்கி மனம் நோகின்றது சாகின்றது
எல்லோரும் வருந்துகின்றார் பேசுகின்றார்
இறைவனிடம் முறையிட்டு நிற்கின்றாரே
அல்லாவோ சிவனோ ஏசு தானோ
ஆரிவரை முடித்திடுவார் புரியவில்லை
Saturday, December 11, 2010
பரந்து வெல்க
அன்பை விடச் சிறந்த மொழி உலகில் யாரும்
அறிந்திருந்தால் அதனை இங்கே சொல்ல வேண்டும்
பண்புகளில் தலையாய பண்பு அது அதைப்
பயின்று விட்டால் உலகனைத்தும் உமது சொந்தம்
நண்பர்களே அன்பு செய்யப் பயின்றிடுங்கள்
நலம் விளையும் உயிரெல்லாம் வணங்கிப் போற்றும்
பண்பு இதை மனைவி மக்கள் தனில் தொடங்கி
பாரெங்கும் விரித்திடுக பரந்து வெல்க
பாரதி தான்
பிறந்தவர்கள் அனைவருமே இறப்பார் என்ற
பெருஞ் செய்தி அது ஒன்றே உண்மைச் செய்தி
நிரந்தரமாய் வாழ்பவர் யார் தனை மறந்து
நிலந் தாங்கும் உயிர்களெல்லாம் வாழ்வதற்காய்
சிறந்த வழியனைத்தையுமே சொல்லி நல்ல
சிந்தனைகள் சிறப்பதற்கும் கவிதை சொல்லி
வரம் போல வந்தவர்தான் என்றும் வாழ்வார்
வாழ்கின்றான் இன்றும் எங்கள் பாரதி தான்
Tuesday, December 7, 2010
வெல்ல வேண்டும்
நாலரைக்கு குயிற் பெண்ணாள் கூவி நிற்பாள்
நான் விழிக்கக் குருவிகளார் குரல் கொடுப்பார்
கோல மணிச் சத்தத்தைப் பால் காரர்தான்
கொண்டு வந்து செவிகளிலே ஊட்டி நிற்பார்
ஆலயத்தின் மணி ஒலிக்கத் தேவாரம் தான்
அழகு தமிழாய் வந்து இன்பம் சேர்க்கும்
நாளொன்று கழிந்ததென்ற செய்தி எந்தன்
நாட் காட்டி வழி தெரியும் வெல்ல வேண்டும்
Sunday, December 5, 2010
இளையராஜா
நாதத்தின் தலைவன் அந்தச் சிவன் தானென்றால்
நாயகனின் முதற் பிள்ளை இளையராஜா
தாளத்தின் தலைவனும் அச் சிவனே யென்றால்
தலைப் பிள்ளை தமிழர் பெற்ற இளையராஜா
கோளங்கள் அனைத்திலுமே இசையின் கோலம்
கொண்டு சேர்த்து வென்றவனே இளையராஜா
நாள் தோறும் அவன் இசையை மீண்டும் மீண்டும்
நான் கேட்பேன் உயிர் வாழ்வேன் மகிழ்ச்சியோடு
ஆட்சியே தருவாரோ தான்
எரிந்தார்கள் எத்தனை பேர் இவருக்காக
இவர் வீட்டுப் பிள்ளைகளும் சுகமாய் வாழ
எரிந்தார்கள் மூவர் இவர் சண்டையிலே
இணைந்தார்கள் இவர்கள் மீண்டும் கோடி கொள்ள
எறிந்தார்கள் பிச்சை போல இலவசங்கள்
ஏழையரை மயக்குதற்கோ மதுக் கடைகள்
எறிவாரா மக்கள் இவர் கொள்ளை கண்டு
இலவசமாய் ஆட்சியையே தருவாரோ தான்
Friday, December 3, 2010
நாட்டு மக்காள்
உழைக்கின்ற ஏழை மக்கள் வயிற்றுக்குள்ளே
ஊற்றுகின்ற மது வகைகள் நெருப்புத் தானே
அலைக் கற்றைக் கோடிகளில் இந்தியரின்
அடி வயிற்றில் எரிவதெல்லாம் நெருப்புத் தானே
தொலைக் காட்சி திரைப் படங்கள் மேலும் உள்ள
தொழில் செய்வோர் வயிறெல்லாம் நெருப்புத் தானே
கலைஞர் தன்னை நெருப் பென்று சொன்ன தன் நற்
கருத் திதனை உணர்ந்திடுவீர் நாட்டு மக்காள்
Wednesday, December 1, 2010
தலைவராக
உயிர்க் கொல்லி எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்காய்
உள்ளூரில் தலைவ ரெல்லாம் பேசுகின்றார்
உயிரோடு ஏழையரைக் கொல்லுகின்ற
ஊழல் நோயை இவர் வளர்த்துப் பேணுகின்றார்
அயராமல் ஊழல் செய்து மகிழுகின்றார்
அது குறித்து நாணமின்றி வாழுகின்றார்
துயரங்கள் நாட்டு மக்கள் சொந்தமாக
தொழில் நாணம் இழப்ப தென்போர் தலைவராக
Sunday, November 28, 2010
ஏனில்லை
நாணமின்றிக் கோடிகளை எடுத்துக் கொண்டு
நாட்டி லுள்ளோர் பதை பதைக்க பதட்டமின்றி
ஊன மனம் கொண்டோர்கள் பதவிகளில்
உட்கார்ந் திருக்கின்றார் அரசர்கள் போல்
ஞானமதை உலகிற்கு வழங்கி வென்ற
நற்றமிழர் நாட்டினிலே தான் இந்தக் கேடு
ஏனிவர்கள் குடும்பத்தில் எவருக்குமே
இல்லை அந்த வெட்க மெனும் உயர்ந்த பண்பு
Saturday, November 27, 2010
ஏழை மக்கள்
பணம் என்னும் பேரரக்கன் பிடியில் சிக்கி
பாவமதைக் குலச் சொத்தாய் ஆக்கிக் கொண்டு
குணம் என்ற ஒரு சொல்லைத் தமிழினிலே
கூடாத சொல்லாக ஆக்கி வாழும்
நிணம் தசை நார் எலும்பெல்லாம் ஊழலாக
நெஞ்சினிலே ஈவிரக்கம் எதுவும் இன்றி
வலம் வருவார் தனைக்கண்டு பொறுமுகின்றார்
வாழ்வதனை இழந்து நிற்கும் ஏழை மக்கள்
Thursday, November 25, 2010
திகைக்கின்றாரே
பசிக்கு ஒரு பழம் எடுத்த இளைஞன் அங்கே
பாருங்கள் சிறையினிலே வாடுகின்றான்
வசிப்பதற்கு இடம் இன்றி ஏழையர்கள்
வதைபட்டு சாலைகளில் உறங்குகின்றார்
அசைப்பதற்கு முடியாமல் கோடிகளை
அப்படியே விழுங்கியவர் வாழுகின்றார்
திசை தோறும் இருக்கின்ற தெய்வங்களே
தினந்தோறும் வணங்குகின்றார் திகைக்கின்றாரே
Tuesday, November 23, 2010
கண்ணதாசன் உதவினார்
எனது பாசத்திற்குரிய நண்பர் ஒருவர் எத்தனை சொல்லி
யும் குடிப் பழக்கத்திலிருந்து விடு படவில்லை. தொலை
பேசியில் ஒரு நாள் அழைத்து கண்ணதாசன் அவர்களைப்
பற்றி ரெண்டு வரியில் ஒரு கவிதை சொல்லுங்களேன் என்றார்
சொன்னேன்
மயக்குகின்ற பாடல்களை அளித்தார்
மயக்கி நின்ற கேடுகளால் மரித்தார்
இறையருள் என்று கருதுகின்றேன். இந்த வரிகளைக் கேட்ட் பின்
அவர் குடிப்பதை நிறுத்தி விட்டார்
Friday, November 19, 2010
அன்னை இந்திரா
தாயாக நாங்களெல்லாம் வணங்கி நின்ற
தங்க மகள் நேரு எனும் மாமனிதன்
ஒயாமல் சிறையிருந்து கடிதங்களில்
உலகுணர்த்த உணர்ந்து வென்ற சிங்கமவள்
பூவுலகு அறியாமல் புத்தரது புன்னகையாய்
புது விதமாய் அணு வெடித்தாள்
நாவாரப் பாடி நிற்போம் அன்னை யெங்கள்
நற் சக்தி பெருஞ் சக்தி இந்திராவை
Thursday, November 18, 2010
கமல் உபதேசம்
கமல் என்னும் பெரு நடிகன் மதத்தைப் பற்றிக்
கருத்ததனைச் சொல்லி நின்றார் மகளிடத்தில்
மதவுணர்வைக் காமம் போல் வீட்டிற்குள்ளே
மறைத்து வைக்க வேண்டும் என்று மிகச் சிறப்பு
இதமற்றக் தன் காம வாழ்க்கை தன்னை
எல்லார்க்கும் காட்டி மகிழ் கமல் தான் சொன்னார்
விதம் விதமாய் நடிக்கின்றார் என்ன சொல்ல
வீட்டு மகள் கடவுளினை வணங்குவாராம்
தன் மகளின் நம்பிக்கை அதுவாம் கமலார்
தான் அதனைச் சொல்லுகின்றார் மகளிடத்தில்
என் கேள்வி ஒன்றே தான் அய்யா உங்கள்
இனிய மகள் பகுத்தறிவை வளர்க்கா நீங்கள்
எம் மக்கள் தமக்கு இதைச் சொல்லுதற்கு
எதற்காக முயலுகின்றீர் சரியா சொல்லும்
உம் வீட்டில் உம் கொள்கை இல்லை பின்னர்
ஊருக்கு உபதேசம் எதற்கு அய்யா
Wednesday, November 17, 2010
உணர்த்தி நின்றார் (பக்ரித்)
காலம் கடந் தளித்த குழந்தை தன்னைக்
கடவுளரே கேட்கின்றார் அறுத் தளிக்க
சீலம் நிறைந்து நிற்கும் இபுராஉறிமும்
செய்தி சொன்னார் மகனிடத்தில் சிரித்தவாறே
வாழ்வதனைத் தந்தவரே கேட்கும் வாய்ப்பை
வழங்கியதில் மகன் மகிழ்ந்தார் இறைவனது
ஆழ் அன்பை அவர் உணர்ந்தார் மனம் நிறைந்தார்
ஆண்டவரோ நல் வழியை உணர்த்தி நின்றார்
Sunday, November 14, 2010
கூசுதிங்கு
வாசலிலே நிற்கின்றார் சோனியாவும்
வளர் தலைவன் ராகுலும் வந்த வண்டி
ஏன் சரியாய் வரவில்லை என்று நோக்க
இருவரையும் அத்வானி பார்த்து விட்டார்
பாசமுடன் இருவரையும் அழைத்தார் அங்கே
பக்கத்தில் உள்ள தன் அறைக்குச் சென்றார்
நேசத்துடன் அவர் மகளும் இருவருக்கும்
நிறைவான செய்தி சொன்னார் அத்வானிக்கு
வாசமான பிறந்த நாள் அன்றே என்று
வாழ்த்தினர் இருவருமே அத்வானியை
ஆசையுடன் இருவருக்கும் தேனீர் தந்தார்
அன்பு மகள் இருவருமே அருந்தி வென்றார்
தூசெனவே அரசியலைத் தூரத் தள்ளி
தூய்மையுடன் வாழ்கின்றார் வடக்கில் நன்கு
ஒசை பெற்ற உயர் குலமாம் தமிழ்க் குலமோ
ஒகோ கோ சொல்லுதற்கே கூசுதிங்கு
பெருமை கொள்வோம்
நேரு என்ற மா மனிதன் பாரதத்தை
நெஞ்சுக் குள்ளே வைத்துக் காதலித்தான்
ஊரு லகம் எல்லாமே போற்றும் நல்ல
உயர் குணங்கள் அனைத்தையுமே கொண்ட தோழன்
சீருடைய சிந்தனைகள் கொண்ட மேலோன்
செம்புடலின் காந்தியவர் தந்த செல்வம்
யாரவர்க்கு நட்பு என்றால் குழந்தைகளே
யாம் அவரைப் பாடுவதில் பெருமை கொள்வோம்
Saturday, November 13, 2010
ரத்தோர் என்னும் மிருகம்
சிறு பிள்ளை தனை மிரட்டிக் கற்பழித்த
சிறை யிருந்த அதிகாரி மீண்டும் வந்தார்
உறைந்தார்கள் மனிதரெல்லாம் அய்யோ அய்யோ
உயர் பதவி உதவி யன்றோ காக்கின்றது
மறை நூற்கள் வேதங்கள் மலிந்த நாட்டில்
மனிதர்களே இது என்ன கொடுமை பாரீர்
அறைந் திவரைக் கொல்லுகின்ற கடவுளரும்
அதிகார வர்க்கத்தின் அடிமை தானோ
சிறுமியவர் முகம் பார்த்தார் இலையோ அந்த
சிபிஐ கூட்டத்தார் வெட்கம் இன்றி
உறுதியில்லை குற்றம் என்று சொல்லுகின்றார்
உச்சமாம் நீதி மன்றம் தனிலே நின்று
அருகதையே யற்றவர்கள் எல்லாம் இங்கே
அதிகாரி ஆனதனால் வந்த கேடு
பெருமை மிக்க பாரதமே எங்கள் தாயே
பீழை கொண்டார் உன்னையும் தான் கற்பழித்தார்
Wednesday, November 10, 2010
அபிராமி கேட்க வேண்டும்
அறிவற்ற பணக்காரர் தம்மையெல் லாம்
அடிமையென வாக்கி அவர் பணத்தில் நன்கு
செறிவாகிப் பறக்கின்றார் விமானம் தன்னில்
செந்தமிழைக் காட்டி அங்கு ஏய்க்கின்றார் காண்
விரிவாக்கி பண மழையில் நனைகின்றார் பார்
வெற்றி வெற்றி என்று வேறு நடிக்கின்றார் காண்
பொறியற்ற விலங்கை விடக் கேவலங் காண்
புல்லர் தமை அபிராமி கேட்க வேண்டும்
Monday, November 8, 2010
உமிழுவார்கள்
கை பிடித்துக் கால் பிடித்து வாழுகின்றார்
கவிஞரென்றும் சொல்லுகின்றார் என்ன செய்ய
பொய்யுரைத்துப் பணம் சேர்த்தோர் தங்களது
புறக்கடையை அடுக்களையைப் பேணுகின்றார்
மெய்யற்ற துறவிகளின் தொண்டராகி
மென் மேலும் நூல் எழுதிப் பணமும் கொள்வார்
அய்யகோ இவரெல்லாம் வாழ்வதாக
ஆர் நினைப்பார் காறித் தான் உமிழுவார்கள்
Sunday, November 7, 2010
அமைச்சரென்ற பதவி கொண்டு
பணம் ஒன்றே வாழ்க்கை யென சேர்த்து வைக்கும்
பகட்டான தலைவர்களே உங்களால் தான்
தினம் இங்கே கொலை கொள்ளை கற்பழிப்பு
தெய்வமெனும் குழந்தைகளைக் கொல்லுகின்றார்
மனமில்லாக் கொள்ளையர்கள் நீங்களன்றோ
மணமில்லாப் பணம் பெரிதாய்க் காட்டிக் கொன்றீர்
குணமொன்றே பெரிதென்ற காந்தி மகான்
கொள்கையினை விட்டீர்கள் குடும்பம் காப்பீர்
உம் வீட்டில் மரணம் என்றால் ஒலமிட்டீர்
ஊர் வீட்டு மரணங்களில் கவலையேது
தம் பெண்டு பிள்ளை யென்றே வாழ்க்கை கொண்டீர்
தரமின்றிப் பணம் சேர்ப்பீர் வெட்கம் இன்றி
புன்னகைப் பூக் குழந்தைகளைக் கொல்லுகின்றார்
பொருள் கேட்டுத் தா என்று மிரட்டுகின்றார்
மன்னவரே நீங்களும் தான் கொல்லுகின்றீர்
மதிப்பாக அமைச்சரென்ற பதவி கொண்டு
Friday, November 5, 2010
Sunday, October 31, 2010
என்னை அல்ல
ஒரு நொடியில் சமஸ்தானம் அனைத்தையுமே
ஒருங்கிணைத்துத் தந்த படேல் எங்கள் வீரர்
சிறுமைகளே மனத்தில் இல்லாச் சிறந்த வீரர்
செய்கைகளால் பாரதத்தைச் சிறக்க வைத்தார்
தருகின்றார் பதவியினைக் கட்சி மேலோர்
தக்கவர்தான் பதில் தந்தார் நீங்கள் அல்ல
வறுமையிலும் நோயிலுமே வாடும் மக்கள்
வாழ்த்துவது நேருவையே என்னை அல்ல
வாழ்க இந்திரா
இந்திய முகவரி என்று சொன்னால்
என்றுமே எங்குமே அன்னையவர்
விந்தியம் இமயம் விரிகடல்கள்
வித வித மக்கள் அனைவருக்கும்
சொந்தமாய்த் தாயாய் அவர் இருந்தார்
சுட்டனர் மூடர்கள் இல்லத்துள்ளே
வந்தனை செய்வோம் அவரை இன்று
வழி தனில் செல்வோம் வாழ்க இந்திரா
Thursday, October 28, 2010
Tuesday, October 26, 2010
மரபுக் கவிஞர்
பணத்திற்காய் யாரிடத்தும் பல்லிளித்து
பணிவது போல் நடித்து அவர் பக்கம் நின்று
குணமுடையார் யாரையுமே அருகில் சேர்க்க
கூச்சமுற்று கொள்ளையராம் துறவியர்க்காய்
நிணம் தசை நார் எதிலுமே நாணம் இன்றி
நெஞ்சழிந்து நிற்கின்றார் மரபில் வந்தோர்
பிணம் அவர் தான் என்ன செய்ய பணக்காரரின்
பின் நின்று ஏமாற்றும் கவிஞர் இவர்
Saturday, October 23, 2010
முதல்வர் வாழ்க
வடமொழிதான் தமிழுக்கு அனைத்தையுமே
வழங்கியதாய்க் கூறுகின்ற பத்மா கேட்க
அட அடடா முதல்வருமே அடிக்கல் நாட்டி
ஆரம்பம் செய்து விட்டார் வாழ்க தமிழ்
பட படத்துப் பெரியாரைப் பேசுகின்றார்
பைந்தமிழுக்கு அண்ணாவைக் கூறுகின்றார்
பரதருடன் இளங்கோவைச் சேர்ப்பதற்கு
பத்மாவின் அருளையுமே பெற்று விட்டார்
Wednesday, October 20, 2010
ரஜனி ரசிகர்கள்
உணவளிப்பேன் என்று சொன்னார் ரஜனி காந்தும்
ஊர் ஊராய் ரசிகர்கட்கு என்றே சொன்னார்
மனம் நிறைந்தார் ரசிகரெல்லாம் அளித்தார் இல்லை
மராட்டியத்தின் பால் தாக்கரே குருவென்கின்றார்
இனமானத் தமிழர்களின் தலைவர்களோ
என்றைக்கு வாய் திறந்தார் குடும்பம் காப்பார்
படம் ஒட அனைவரையும் சென்று பார்த்தார்
பாவம் அவர் ரசிகர்களோ என்ன செய்வார்
Tuesday, October 12, 2010
இளையராஜா இசையே வெல்லும்
இளையராஜா தனைக் குறையாய்ப் பேசுவோர்கள்
ஏவலர்கள் மேட்டுக் குடிக் கூட்டத்திற்கு
உழைகிறது அவர் மனது ஏழையவர்
உயர்ந்த இசை கொல்கிறது அவர்களையே
பிழை எழுதிப் பார்க்கின்றார் சில பேர் இங்கே
பேர் பெற்ற அவராலே பேர் பெறவே
களை அவரைப் பிடுங்குதலே நமது வேலை
ககனமெல்லாம் இளையராஜா இசையே வெல்லும்
நம்மோர் சில்லோர்
பொய்த் துறவிக் கூட்டத்தார் பெருகி விட்டார்
பொன்னழகுத் தமிழ்நாட்டில் என்ன செய்ய
மெய்த் தவத்தார் நாடு நந்தம் நாடு என்று
மேல் நாட்டார் வணங்குகின்றார் அவர் பணத்தை
கைத்தலத்தில் பற்றி நன்கு வாழுகின்றார்
கழிசடையாம் இத் துறவிக் கூட்டத்தாரும்
அத்துறவிக் கூட்டத்தின் அடிமைகளாய்
ஆகி பணம் சேர்க்கின்றார் நம்மோர் சில்லோர்
Sunday, October 10, 2010
மரபில் பிழை
பிழைப்பதற்காய் எதனையுமே விட்டுத் தரும்
பேதைகளே வாழ்வதுவாய் நினைக்கின்றார் காண்
குழைந்து அவர் பணம் செய்தோர் முன்னே மிகக்
குறுகி நிற்கும் காட்சியினைக் காணும் போது
தொலைந்து போகும் நல்லவரின் மனது அங்கே
துடித்து நிற்பார் பெரியவர்கள் நொந்து நொந்து
பிழையாகப் பிறந்து விட்டார் தமிழர் நாட்டில்
பெரும் பிழைதான் என்ன செய்ய மரபில் பிழை
Saturday, October 9, 2010
உணர்கின்றோம் நாம்
துறவியென்ற பெயரில் இங்கு நடித்து வாழும்
தூய்மையற்ற திருடருக்குத் துணையாய் நின்று
வரவினையே பெருக்கி உள்ளம் ஒழித்து வாழும்
வடிவத்தார் பணம் படைத்தோர் வீட்டில் எல்லாம்
கரவு மனத்தோடு ஏவல் செய்து வாழும்
கண்ணியமே அற்றாரைக் காணும் போது
இரந்து வாழும் வறியவரை விடவும்
இவர் எத்தனையோ கீழ் என்றே உணர்கின்றோம் நாம்
Friday, October 8, 2010
புரியவில்லை
வெள்ளையரின் அடிமைகளாய் இருந்தோம் என்று
வெளிச்சமிட்டுக் காட்டுதற்காய் ஒரு அமைப்பு
துள்ளி விளையாடுகின்றார் டில்லி மண்ணில்
துவக்கி வைக்க இளவரசர் வந்து சென்றார்
எண்ணுகின்றேன் எண்ணுகின்றேன் இவ்வமைப்பு
ஏதுக்காய் இருக்கின்றது கேவலமாய்
மண்ணுலகில் அடிமைகளாய் இருந்ததனை
மறக்காமல் இருப்பதற்கா புரியவில்லை
வாழுகின்றார்
சாமியார்கள் தனை வைத்துப் பிழைப்பவர்கள்
சரியாகப் பணம் சேர்த்து வாழ்கின்றனர்
யாரிடத்தும் கைகள் கட்டி வாழ்கின்றனர்
எவரிடத்துப் பணம் எனினும் வணங்குபவர்
தாமறிந்த தமிழ்த் தரத்தை இழந்து நிற்பார்
தன் குலத்துப் பெருமைகளும் துறந்து நிற்பார்
யாமறிவோம் பணம் இவரைப் படுத்துவதை
என்ன செய்ய இவரும் தான் வாழுகின்றார்
Saturday, October 2, 2010
அண்ணலே
அண்ணலே
உன் பிறந்த நாள்
சமாதியில்
பஜனை உண்டு
சிலைகளுக்கு
மாலை
அணிவிப்பவர்
சிலர்
நீ
உயிரோடிருந்தால்
உன்
அருகில் வரவே
அஞ்சியிருப்பார்கள்
உன்னை
மறந்து விட்டோம்
என்கின்றனர்
அதனால்தான்
அமைச்சர்களாய்
இருக்க முடிகின்றது
ஆட்சி
செய்ய
முடிகின்றது
உன்னை
மறைத்து
விட்டோம்
என்கின்றனர்
என்ன செய்ய
எங்களுக்கும்
மனச் சாட்சி
வந்து
விட்டால்
சாஸ்திரியும்
இதே
நாளில்
பிறந்த
கொடுமையை
என் சொல்ல
அதனால் தான்
மனம்
வெதும்பிய
கறுப்புக்
காந்தி
இன்று
மறைந்தார்
Tuesday, September 28, 2010
பழியும் கொள்வார்
வாபரையும் வழி பட்டு அய்யப்பனின்
வாசலிலே நிற்கின்றார் கோஷத்தோடு
பாபரையும் ராமரையும் இவ்வாறே தான்
பக்குவமாய்ப் புரிந்து கொண்டால் ரத்தம் இல்லை
காவல் செய்யும் தெயவத்தை உணர்ந்தார் இந்தக்
கண்ணியத்தைக் கடைப் பிடிப்பார் கருணை கொள்வார்
பாவமதைச் செய்வதற்கு பிறந்தார் மட்டும்
பல சொல்லிப் பிரித்தாண்டு பழியும் கொள்வார்
Saturday, September 18, 2010
அய்யா என்றார்
பார்ப்பவர்கள் அனைவரையும் கதைகளுக்குள்
பாத்திரங்கள் ஆக்கிடுவார் என்ற எண்ணம்
ஊர்க்காரர் அனைவருக்கும் உண்டு பண்ணி
உயர்வாகக் கதை சொல்லும் வண்ணதாசன்
பேர் சொல்லி உங்களை நான் அழைக்கமாட்டேன்
பெருமையாக அய்யா என்றழைத்திடுவேன்
சீர் மிகுந்த உங்களது செந்தமிழைச்
செவிமடுத்த காரணத்தால் அய்யா என்றார்
Friday, September 17, 2010
இசைஞானி
விருதளித்தார் விருதுக்கே பெருமை சேர்த்தார்
வெற்றி இசைஞானிக்கு விருதளித்து
சுருதியுடன் ராகமதைச் சேர்த்துத் தந்து
சுத்தமாக்கி மனதையெல்லாம் வெள்ளையாக்கும்
எருதேறும் அண்ணாமலை ஈசனது
எளிய தொண்டர் இளையராஜா அருகில் என்றும்
அரிதான கலை மகளே குழந்தையாகி
அமர்ந்துள்ளாள் அவர் இசையில் மயங்கி இன்றும்
Thursday, September 16, 2010
ஒழிந்து போகும்
உடல் சார்ந்த வெறி கொண்டே வாழுகின்றார்
உளம் சாரா மானிடரகள் உலகமெங்கும்
படம் எடுத்து விட்டாராம் சாமி என்பார்
பதை பதைத்துத் துடிக்கின்றார் கற்பு காப்பார்
தினம் தினமும் செய்தியாக வருவதெல்லாம்
தெரிந்தும் ஏன் ஆடுகின்றார் புரியவில்லை
உளம் கண்டு வாழ்வதற்குப் பழகி விட்டால்
உடல் சார்ந்த வெறி அதுவும் ஒழிந்து போகும்
Sunday, September 12, 2010
கேட்பாரோதான்
பாரதியை நினைந்தாரா மறந்தே போனார்
பாவி மகன் காந்தியினை மறைத்தே வைத்தார்
ஊர் முழுதும் மதுக் கடைகள் காந்தியாரின்
ஊரிலேயும் மதுக் கடைகள்-- கறிக் கடைகள்
சீர் மிகுந்த வள்ளலார் பெயரிலேயே
சிறப்பாகத் திறப்பதற்கு விருப்பம் கொள்வார்
யார் இவரைக் கேட்பார்கள் மக்கள் தானே
இலவசத்தைத் தேடி நிற்பார் கேட்பாரோதான்
Saturday, September 11, 2010
பாரதியை நினைப்போமா
இதிகாசக் கதைகளெல்லாம் பொய்தானென்றும்
இருந்தாலும் கவிதைகள் தான் சிறப்பு என்றும்
முடியாத நேரத்திலே முழங்கி நின்ற
முண்டாசுக் கவிஞ னவன் கனவையெல்லாம்
எது வரைக்கும் நிறைவேற்றி உள்ளார் நாட்டார்
ஏய்த்துள்ளார் ஏய்த்துள்ளார் ஏய்த்துள்ளாரே
கதி இதுதான் இந்நாட்டில் திருடர்களே
காவலிலே அமர்ந்ததனால் வந்த கேடு
Friday, September 10, 2010
ரமலான் வாழ்த்துக்கள்
ஏழைகட்கு உதவி செய்து இரங்கினாரை
இறையவனின் பெருமைகளை உணர்ந்தார் தம்மை
வேளை அய்ந்தும் தொழுது நின்ற வீரர் தம்மை
விண்ணகத்தில் இறையருளைப் பெறுவார் தம்மை
தாழ நின்று அனைவருக்கும் நன்மை செய்தாரை
தான் என்ற அகந்தை விட்டு நின்றார் தம்மை
வாழையடி வாழையாக இறைவன் தூதர்
வழி கண்டு வாழ்வாரைப் போற்றுகின்றேன்
Wednesday, September 8, 2010
இறை கண்டு அஞ்சவில்லை
அரசியலார் எல்லாரும் ஆசை கூட்டி
ஆங்காங்கே நிற்கின்றார் நோன்பிற்காக
வரிசையாக ஊர் தோறும் அவர்கள் செய்யும்
வம்புகளைப் பார்க்கையில் துடித்துப் போனோம்
பரிசாக வழி காட்ட இறைவன் தந்த
பார் ஏற்ற குரான் வழியை மறந்தே போனார்
விரிசல் கண்டு மனமெல்லாம் துடிக்கின்றது
வீணானார் இறை கண்டு அஞ்சவில்லை
Tuesday, September 7, 2010
இளையராஜா
இசை என்றால் இனிமை என்ற நிலையை மாற்றி
இரைச்சலென்று ஆக்கி விட்டார் கொடியோர் சில்லோர்
நிணம் தசை நார் அனைத்திற்கும் உள் நுழைந்து
நிம்மதியைத் தருவதுவே நல்ல இசை
குணம் தரவும் மனத்திற்குள் நல்லனவே
கொண்டு வந்து சேர்ப்பதுவும் இசையே ஆகும்
மணமான அவ்விசையை இளையராஜா
மன்னன் தான் தருகின்றான் வாழ்க அவன்
அல்லாஹ் அதை
அல்லாஉற் ஒருவனே இறைவன் என்று
அவனையே மனதாலே தொழுது நின்று
பொல்லாத செயல் இன்றி நல்ல வாழ்க்கை
பொறுமை நேர்மை நன்மை அன்பு கொண்டு வாழ்ந்தார்
வல்லானின் வழி தன்னில் நோன்பு நோற்று
வாழ்கிறார் திறக்கின்றார் நோன்பு என்றால்
எல்லோரும் திறக்கின்றோம் நோன்பு என்றால்
ஏற்பானா இறைவனாம் அல்லாஉற் அதை
Friday, September 3, 2010
Thursday, September 2, 2010
எரிகின்ற மூடர்களே வாழப் பாரும்
போராட்டம் என்றாலே ஏழைகள் தான்
புரியாமல் எரிகின்றார் மாளுகின்றார்
சீராட்டி வளர்க்கின்ற தலைவர் மக்கள்
செந்தழலில் கொள்கைக்காய் எரிவதில்லை
தேரோட்டம் காரோட்டம் திருவிழாக்கள்
தேர்தலிலே வெற்றி கொள்ளல் அமைச்சராதல்
நீரோட்டம் போல அவர் வாழ்க்கை மட்டும்
நீள்கிறது ஆள்கிறது வாழ்கிறது
எரிந்த அந்த அறியானின் சடலத்தின் முன்
ஏங்கி அந்தத் தலைவர் விடும் கண்ணீர் கண்டு
நொறுங்கிடுவார் எரிந்தவனின் குடும்பத்தாரும்
நோகாமல் நடிக்கின்ற தலைவர் கண்டு
விரிந்த மனம் கொண்டவராய்த் தலைவர் அங்கு
விம்மலுடன் ல்ட்சம் ஒன்றை நீட்டிடு வார்
கருகியவன் குடும்பத்துக் கண்ணீரையும்
காசாக்கி வென்றிடுவார் நம் தலைவர்
எரிந்து பட்ட தங்கமே என் இதய வேந்தே
எப்படி நான் உனை மறப்பேன் செந்தமிழா
கருகுகின்ற நேரமும் நீ என்னை வாழ்த்தி
கனித் தமிழில் முழக்கங்கள் இட்டாயாமே
பனித் தமிழே என் தம்பி உன்னைப் போல
பாசமிக்க தம்பியரைப் பெற்றதால் தான்
தனித்த நந்தம் இயக்கத்தின் ஆட்சியதும்
தவறாமல் தொடருது இந்த நாட்டில் நன்கு
இனித்தவனே என் நெஞ்சில் தீயை வைத்தாய்
என்று நான் உனைக் காண்பேன் கொன்றே போட்டாய்
தனித்து நான் நிற்கின்றேன் உன்னைப் போன்ற
தம்பியரைப் பிரிகின்ற நேரமெல்லாம்
கனித் தமிழாள் உனைப் பெற்ற காரணத்தால்
கண்ணியத்தைப் பெருமையெனக் கொண்டாள் தம்பி
நினைவெல்லாம் நீயாக என்றும் வாழ்வேன்
நெஞ்சத்தில் ஒரு இடத்தை உனக்களித் தேன்
சுவரொட்டி ஆயிடுவான் அந்தத் தம்பி
சுற்று முற்றும் தேர்தல் வரும் நேர மெல்லாம்
தவறாமல் அவன் பெயரை மேடை தோறும்
தமிழ் காக்க உயிர் தந்தான் என்று சொல்லி
அவதார புருஷர் இவர் ஆட்சி கொள்வார்
அடுத்து வரும் தலை முறையின் ஆசை தீர்ப்பார்
இவர் பிள்ளை எரிந்தவனின் வயதையொத்தான்
இந்நாட்டு ஆட்சியிலே அவன் அமர்வான்
எரிகின்ற மூடர்களே உணர்ந்தீரா நீர்
ஏய்க்கின்றார் பிள்ளைகள் தான் எரிகின்றாரா
விரிகின்ற அறிவு கொள்வீர் வாழ்க்கைதன்னை
வீணருக்காய்க் கொள்ளையர்க்காய் எரிக்காதீர் நீர்
தெரிகின்ற நல் வாழ்க்கை தேர்ந்தெடுப்பீர்
திருடருக்காய் அழியாதீர் வாழப் பாரும்
உரிமையுள்ள தாய் தந்தை மனைவி மக்கள்
உற்றார்கள் நாட்டிற்காய் வாழப் பாரும்
Tuesday, August 31, 2010
உச்ச நீதி மன்றத் தீர்ப்பு
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அது
உணர்த்துவது மனிதனாக வாழு என்று
கச்சை கட்டி நிற்பதல்ல அரசியலும்
கண்ணியமாய் மக்களையே காப்பதற்கே
புத்தி கெட்டு வெறி கொண்டு உயிர் பறித்தல்
புல்லர்களின் செயல் என்று உணர்த்துவது
சத்தியமாய் நீதி இந்த நாட்டில் இன்றும்
சரியாக இருக்கிறது சில நேரத்தில்
Sunday, August 29, 2010
திறன் என்றே போற்றிடுவார்
ஊராரின் பிள்ளைகளை உணர்ச்சி யூட்டி
ஒரு நொடியில் தீக் குளித்து மாள வைப்பார்
சீராட்டி தம் மக்கள் நாட்டை யாள
செய்வ தெல்லாம் சரியாகச் செய்து வைப்பார்
தேரோட்டி மகன் கொன்ற மனுவைப் பற்றி
தினம் பேசி மேடைகளில் அழுதிடுவார்
பாராட்டித் தம் மகனின் தவறையெல்லாம்
பழந்தமிழர் திறன் என்றே போற்றிடுவார்
கேவலத்தில் உழல்வதைப் பார்
அவரவர்க்கு சிலை அவரே வைத்துக் கொள்ளும்
அளவிற்குக் தமிழ்நாட்டைக் கெடுத்து உள்ளார்
தவறதனை ஒழுக்கமாக்கி வாழ்ந் திருக்கும்
தலைவரவர் தன் குடும்பம் வாழ்வதற்காய்
கவலையின்றி இலவசங்கள் வழங்குகின்றார்
கையூட்டாய் மானமுள்ள தமிழருக்கு
உலகு போற்றும் முதற் பண்பைக் கொண்ட இனம்
உளம் இழந்துக் கேவலத்தில் உழல்வதைப் பார்
Saturday, August 28, 2010
என் தம்பி நாஞ்சில் நாடன்
அண்ணாச்சி என அழைக்கும் போதினிலே
அன்பு முகம் என் முன்னர் வந்து நிற்கும்
புண்ணாக்கிப் பார்ப்போர்கள் மத்தியிலே என்னைப்
புதிதாக்கிப் பார்க்கின்ற இனிய தம்பி
கண்ணோட்டம் என்னைப் போல் கொண்ட செல்வம்
கண்ணியத்தின் மொத்த உரு நாஞ்சில் நாடன்
முன்னோர்கள் செய்த தவம் தம்பி கொண்டேன்
முத்தமிழாள் அருளாலே தெம்பு கொண்டேன்
Friday, August 27, 2010
ஆண்டவரே என்ன சொல்வீர்
நாணமே யில்லாதார் பொறுப்புக் களில்
நாயகராய் அமர்ந்திருக்க அந்தோ அந்தோ
ஊனமுற்ற நாடாகத் தமிழர் நாடு
ஒலமிட வழியின்றி ஒடுங்கி நிற்க
கானம் ஒரு குடும்பம் மட்டும் பாடி நிற்க
கணக்கில்லா நல்லவர் வாய் மூடி நிற்க
ஆனதென்ன எம் நிலைமை இவ்வாறாக
ஆண்டவரே உம் நிலை தான் என்ன சொல்வீர்
Thursday, August 26, 2010
கோயிலும் தான் உனக்கில்லையே
தங்களுக்குத் தாங்களே சம்பளத்தைத்
தாறுமாறாய்க் கூட்டிக் கொள்ளும் தங்கங்களை
எங் களுக்கு நாடாளு மன்றத்திற்காய்
ஏன் தந்தாய் எம் இறைவா கோபம் என்ன
பங்கமிது என்றுணராப் பாவியர்கள்
பாவப்பட்ட மக்களையே நினைத்தாரில்லை
எங்களது மக்களவை எமக்கு இல்லை
என் செய்வாய் கோயிலும் தான் உனக்கில்லையே
Wednesday, August 25, 2010
விருதேயில்லை
ஆபாச அரசியலார் எல்லாம் இங்கே
அடுக்கடுக்காய் டாக்டர் பட்டம் வாங்கி விட்டார்
மேலான விளையாட்டாம் சதுரங்கத்தில்
மேனாட்டார் அனைவரையும் வென்று நின்ற
சீராளர் விஸ்வநாதன் கேட்கவில்லை
செப்பியது அரசாங்கம் பட்டம் என்று
ஊரெங்கும் தேசியக்கொடி யோடாடும்
உண்மையாளர் ஊர் குறித்துக் கேள்வி கேட்டு
வேரதனிலே வெந்நீரை ஊற்றி விட்டார்
நாராசமாக்கி விட்டார் நமது நாட்டின்
நலமறியா அரசாங்க அதிகாரிகள்
தாராளமாக இங்கு டாக்டர் பட்டம்
தருகின்றார் அனைவருக்கும் விலை தான் கூட
போராடி வெல்கின்ற விஸ்வநாதன்
போன்றோர் இவ் விருதையெல்லாம் வேண்டாம் என்றல்
பாராட்டுக்கு ரியதுதான் வாங்கினால்தான்
பரிதாபம் இதுவெல்லாம் விருதேயில்லை
Tuesday, August 24, 2010
காவ்யா (அமெரிக்கத் தமிழ்ப் பெண்
பன்னி ரேண்டே வயதான சிறுமி யவர்
பைந்தமிழர் மரபில் வந்த காவ்யாதான்
எண்ணுகையி லெங்கேயோ உயர்ந்து உள்ளார்
இப்போதே கல்லூரி படிக்கின்றாராம்
வண்ண மயக் கணிதத்தில் சாதனைகள்
வகை வகையாய்ப் புரிந் துள்ளார் இசையினிலும்
பின்னுகின்ற வயலினிலே பெரியவராம்
பிழையின்றித் தமிழ் படித்து எழுதுவாராம்
அன்னையவர் சொல்லுகின்றார் பிள்ளைகளை
அரவணைக்கும் வழியதனை மற்றவர்க்கு
மின்னுகின்ற காவ்யா அமெரிக் காவில்
மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும்
கண்ணழகுப் பெண்ணாளும் மிகச் சிறந்த
கணித வழி நூற்கள் பல எழுத வேண்டும்
பெண்ணாளின் அறிவுயர்ந்து உலகம் வெல்ல
பெரியவர்கள் அனைவருமே வாழ்த்தி நிற்போம்
துறவியன்று
கோவணம் தான் ஆடை கழுத்தில் ஒரு
குளிர் உருத்திராக்கம் அது மாலையாகும்
ஆவல் ஏதும் இல்லாதார் எங்கும் என்றும்
ஆண்டவனைத் தமிழ் பாடி துதித்து நிற்போர்
சாவடிகள் தனிலே தான் தங்கிக் கொள்வார்
சாப்பாடு எளிமையான உணவே ஆகும்
கோயில்களைச் சுத்தம் செய்வார் மக்களது
குறை களைய வழி சொல்வார் துறவி யன்று
பழசிராஜா
சாவதற்கு அஞ்சி நாட்டைக் காட்டித் தரும்
சளுக்கர்களின் மத்தியிலே நாடு காக்க
ஆவதெல்லாம் நாட்டிற்காய் ஆவதென்று
அந்நியரை எதிர்த்து வீரப் போர் புரிந்த
காவல் ராசன் பழசி ராஜா படத்தை நேற்று
கண்களிலே நீர் மல்க பார்த்திருந்தேன்
பாவம் அவன் போன்றோர் வாழ்ந்த நாட்டினிலே
பரத்தமையைக் கொண்டிருப்போர் ஆள்கின்றாரே
Saturday, August 21, 2010
நாடாளுமன்றமும் சம்பளமும்
மக்கள் சேவை செய்ய வந்த மாமனிதர்
மனம் போல சம்பளத்தை வேண்டுகின்றார்
தக்கவர்கள் ஒழிந்து விட்ட நாட்டில் இந்த
தரித்திரர்கள் தனைக் காக்க வேண்டும் என்றே
மக்களவை இவர்களுக்குச் சம்பளத்தை ஆகா
மனம் போன படி உயர்த்தித் தந்தும் இவர்
அக்கணமே காணா தென்று ஆடுகின்றார்
ஆடு மாடாய் மக்களினைக் காணுகின்றார்
Friday, August 20, 2010
ராஜீவ் காந்தி
கள்ளமில்லா வெள்ளை மனக் கண்ணியத்தான்
ககனமெல்லாம் புகழடைந்த கனி மொழியான்
உள்ளமெல்லாம் பாரதத்தின் உயர்விற்காக
ஒரு கோடிக் கனவுகளைக் கொண்டிருந்தான்
வெள்ளமென பல உயர்வைத் தந்த தாயான்
விரிமனத்தோன் உதவிக்கே உதவி நின்றோன்
நல்லவனாய் இருந்த தனித் தலைவன் அவன்
நாடு இன்றும் நினைந்து போற்றும் ராஜீவ் காந்தி
Sunday, August 15, 2010
விடுதலை பெற்றோம்
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வெண்மை உண்மை பெற்றோமா
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
விரிந்த மனதைப் பெற்றோமா
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வீரம் விவேகம் பெற்றோமா
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வீழ்ந்தார் தம்மை நினைத்தோமா
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வீணர்கள் தம்மை ஆள விட
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வேதனை நம்மைச் சூழ்ந்து விட
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வெட்கம் விட்டவர் தலைமை கொள
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வெளி நாட்டவர்கள் வணிகம் செய
Tuesday, August 10, 2010
காரைக்குடி நகரத்தார் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழா
திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் தலைமை உரை உடன் நானும் பிள்ளையார்பட்டி வேத பாடசாலையின் குருவும் அர்ச்சகருமான உத்தமர் பிச்சைக்குருக்கள்
Monday, August 9, 2010
Monday, August 2, 2010
Sunday, August 1, 2010
வழி காட்டப் பிறந்தோர் அன்றோ
உறவுகளை நட்பாக ஆக்கிக் கொள்ளும்
உயர் குணத்தைக் கொண்டாலே வெற்றி அன்றோ
சிறந்தோங்கும் நட்பை யெல்லாம் உறவாய் ஆக்கி
சீராக வாழ்வது நற் சிறப் பேயன்றோ
மறந்து விட்டோம் குறளாசான் தன்னை நாமும்
மனிதருக்கு என்னவெல்லாம் சொல்லித் தந்தான்
உயர்ந்திடுவோம் மனிதரென வாழ்வோம் நாமும்
உலகுக்கு வழி காட்டப் பிறந்தோர் அன்றோ
சம்பளமும் உயர்ந்ததம்மா
துன்பங்கள் அனுபவிப்பார் அவரைப் போலே
துடித்தழுது நிற்பவர்கள் யார் தான் உண்டு
இன்பம் என்ற வார்த்தை அவர் வாழ்க்கையிலே
என்றைக்குக் கண்டார்கள் அய்யோ பாவம்
புண்பட்ட அவர் வாழ்வில் இன்பம் சேர
பொறுப்பாக அரசு ஒருமுடிவெடுக்க
பண்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றப்
பாவம் அவர் சம்பளமும் உயர்ந்ததம்மா
Thursday, July 22, 2010
பூவரசி எனும் அரக்கி
பூவரசி எனும் பெண்ணை அரக்கியாக்கி
பொன்னான தன் மகனை இழந்து நிற்கும்
பாவி மகன் ஜெயக்குமார் தன்னை யாரும்
பழிப்பது போல் தெரியவில்லை வீட்டில் நல்ல
வாழ்வரசி துணையிருந்தும் வந்த பெண்ணை
வளைத்து அவள் உடல் சுகித்து கருக்கலைத்து
பாழ் வாழ்க்கை அவன் வாழ ஒருத்தி அங்கு
பனி மகனை இழக்க பூவோ அரக்கி ஆனாள்
கேவலமாய் வாழுகின்ற ஆண் மகனின்
கீழ்த்தரத்தை உணர்ந்தீரோ நாட்டு மக்காள்
ஆவலினை ஆசையினை அடக்க வொண்ணா
அத்துமீறல் அன்றோ அவன் குழந்தையினை
சாவறைக்குக் கொண்டு செல்ல வழி செய்தது
சரியாகச் சுமந்து பெற்ற தாயவட் கன்றோ
கேவிக் கேவி அழுதரற்றும் துன்பமிங்கு
கேட்டுப் பெறக் குழந்தை யென்ன நுகர் பொருளா
Wednesday, July 21, 2010
வெறுமை மிஞ்சும்
தவம் செய்ய ஆசை கொள்வார் முதலில் ஒரு
தரமான வாழ்க்கையினைக் கொள்ள வேண்டும்
சிவ நெறியில் செல்வதென்றால் ஒழுக்கம் வேண்டும்
செந்தமிழில் பண்பாடு காக்க வேண்டும்
இவை யெல்லாம் கொண்டவர்க்கே செல்வம் வரும்
இல்லை யென்றால் இழி பெயர் தான் கொள்ள வேண்டும்
அவம் இதை உணராதார் தவ நெறியில் செல்வம்
அகப்படும் என்றலைந்தாலோ வெறுமை மிஞ்சும்
சிவாஜி நடிப்பின் வேதம்
பராசக்தி தனில் மலர்ந்தான் தமிழர்களின்
படங்களுக்காய் இறைவனவன் தந்த பூவாய்
தராதரத்தில் அவனை மிஞ்ச இன்னுமொரு
தனி நடிகன் வருவதற்கு வாய்ப்பேயில்லை
அறாத ஒரு பெரும் புகழைக் கொண்ட வேந்தன்
அண்ணன் அவன் சிவாஜி எனும் நடிப்பின் வேதம்
பராபரமே அவன் நடிப்பின் சிறப்பைக் காண
பக்கத்தில் அவன் அழைத்துக் கொண்ட தின்று
Monday, July 19, 2010
மன நோயால் வீழ்ந்தார்
பிறர் தாயைப் பண்பாட்டுக் குறைவாய்ப் பேசும்
பேதையர்கள் தம் தாயைப் பேசுகின்றார்
குறைப் பட்ட மனத்தாராய் மற்றவரைக்
கொடு மொழியால் திட்டுகின்றார் அந்தோபாவம்
நிறைவான மனம் கொண்டார் மற்றவரின்
நிலை உணர்வார் தம் பிழையின் தரம் உணர்வார்
அறைவார் போல் வார்த்தைகளை வீசிடுவார்
அய்யகோ மன நோயால் அன்றோ வீழ்ந்தார்
தமிழன்னை வேண்டி நிற்பாள்
பண்பாடு இல்லாத வார்த்தைகளைப்
பழகிடுவார் தமிழரென்றால் இல்லை இல்லை
கண் போலப் பண்பாட்டைப் போற்றுதற்கு
கனிவு மொழி வேண்டும் என்ற வள்ளுவனின்
தென் பாட்டுத் திருக்குறளைப் போற்றார் தம்மை
தீந் தமிழர் என்று சொன்னால் தமிழாம் அன்னை
புண் பட்டுப் போய் நிற்பாள் புலம்பிடுவாள்
புறங் கூறும் அவர் மரணம் வேண்டி நிற்பாள்
Saturday, July 17, 2010
எங்கும் கிடைக்கும்
எனது படைப்புக்கள் அனைத்தும் சென்னையின் எல்லா புத்தக விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும்
Friday, July 16, 2010
சிலையே கூட
சிலை வைக்க வேண்டாமே நல்லவர்க்கு
சேறு அள்ளிப் பூசியவர் எல்லாம் வந்து
வலை வலையாய் மாலைகளைப் போடுகின்றார்
வாய் நிறைந்த பொய் வசனம் பேசுகின்றார்
அலை அலையாய்க் கூட்டங்கள் கூட்டுகின்றார்
அரி தார நாட கங்கள் நடத் துகின்றார்
பல வேடப் பாவியரின் கரங்கள் பட்டு
பதைபதைத்து நிற்கும் அந்தச் சிலையே கூட
Thursday, July 15, 2010
காமராஜர் தேடி
எத்தனையோ பேர் பிறப்பார் இறந்தும் போவார்
இருப்பார்கள் சில பேரோ இறந்தே வாழ்வார்
மொத்தமான தமிழ்க் குலத்தார் நினைவில் என்றும்
முதல்வராக வாழ்ந்திருப் பார் காமராஜர்
சத்தியத்தை வாழ்க்கை யெனக் கொண்டிருந்த
சரித் திரத்தைத் தந்தவர் தான் காமராஜர்
எத்தனை நாள் அவர் நினைவில் வாழுகின்றோம்
இன்னும் ஒரு காமராஜர் தேடித் தேடி
Tuesday, July 13, 2010
எனது முன்னுரை
அண்ணன் தா.பாண்டியன் தோழர் கே.சுப்பராயன் பேராசிரியை ரேவதி கிருபாகரன் பேராசிரியை திருமதி க.சுப்புலெட்சுமி
பட்டிமன்றம் அணிகள் வள்ளுவம் காந்தீயம் மார்க்சியம்
வள்ளுவம் பேராசிரியர் வே.சங்கரநாராயணன் ந்ல்லாசிரியர் பே.சங்கரலிங்கம் காந்தீயம் பேராசிரியை திருமதி ரேவதி கிருபாகரன் பேராசிரியை திருமதி க.சுப்புலெட்சுமி மார்க்ஸீயம் அண்ணன் தோழர் தா.பாண்டியன் தோழர் திருப்பூர் கே.சுப்பராயன்
திருப்பூரில் பட்டிமன்றம்
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் நடந்த பட்டிமன்றம் பொருள் மனித குலச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவுவது வள்ளுவமா காந்தீயமா மார்க்ஸீயமா
Friday, July 9, 2010
ஆக்டோபஸ் ஜெர்மனி
ஆக்டோபஸ் வெற்றி என்று சொன்னதென்று
ஆர்ப்பரித்து ஆடி நின்றார் ஜெர்மனியர்
போக்கொழியும் அரை இறுதி ஆட்டம் தன்னில்
பொறுப்பாக ஸ்பெயின் அணியே வெற்றி பெறும்
ஆக்டோபஸ் சொல்லியது அதுவே ஆச்சு
அலறுகின்றார் ஜெர்மனியர் ஆக்டோபஸ்ஸை
தாக்குங்கள் கொல்லுங்கள் என்று எல்லாம்
தட தடத்து ஆடுகின்றார் அந்தோ பாவம்
Thursday, July 8, 2010
இறையும் வாழ்த்த (இளையராஜா)
யார் என்ன சொன்னா லும் என்னவாகும்
இளையராஜா இசைக்கெனவே பிறந்த ராஜா
ஊர் தோறும் அவர் இசையை உணர்ந்து போற்ற
உணராதார் உளறி நின்றால் விட்டுத் தள்ளும்
சீர் கொண்ட செந்தமிழாள் பெருமை கொண்டாள்
சிறப்பான இசை வேந்தைப் பெற்றதாலே
பார் உணர்ந்து நிற்கிறது அவர் இசையை
பாடி நிற்போம் அவர் புகழை இறையும் வாழ்த்த
சிவத் தமிழே
நல்லவனாய் வாழ வைத்த நாயகனே நன்றி
நாடோறும் புகழ் வழங்கும் நல்லவனே நன்றி
அல்லவரை அகற்றி வைத்த அன்புடையோய் நன்றி
அறிவானார் துணை தந்த அஞ்செழுத்தே நன்றி
பல் விதத்தில் நல் நண்பர் தந்தவனே நன்றி
பாப் புனைய பைந்தமிழைப் பரிசளித்தோய் நன்றி
செல்லும் வழி தனி லெங்கும் சிறப்பளித்தோய் நன்றி
சிவத்தமிழே தவத்தழகே வணங்கி நின்றேன் போற்றி
Monday, July 5, 2010
இளையராஜா என்றே
பின்னணி இசை யதுவோ படம்
பேசா இடங்களில் வசனங்கள் பேசிடும்
மெல்லிசைப் பாட லதோ நம்
மேனி முழுவதும் துளிர்த் திட வைத்திடும்
துள்ளிசைப் பாட லென்றால் விண்ணைத்
தொட்டிடும் அளவிற்குத் துள்ள வைக்கும்
எம்மிசை என் றாலே அது
இளைய ராஜா என்றே மலர்ந்து நிற்கும்
Sunday, July 4, 2010
ஒரு கூட்டம் உண்டு
தேவநேயப் பாவாணர் என்னும் அந்தத்
தீந்தமிழார் தனைப் பற்றிப் பேச்சே இல்லை
ஆவலுற்றுச் சுவடிகளைத் தேடித் தேடி
அனைத்தையுமே கண்டு தந்த அய்யர் இல்லை
தேவாரத் திருமறைகள் திருவாய் மொழி
தேன் தமிழின் வள்ளலார் அருட்பா இல்லை
நாவாரப் புகழுவதற்கு மட்டும் அங்கே
நடிப்பிசைப்புப் புலவர் ஒரு கூட்டம் உண்டு
Friday, July 2, 2010
அடிமைகளாய்ப் பாடினாரே
பாரதியை நினைத்தாரா இல்லை இல்லை
பாவேந்தர் தனையே தான் போற்றினாரா
ஊரறிய காந்தி மகான் புகழைப் போற்றி
உயர்ந்து நின்ற நாமக்கல் போற்றினாரா
சீர் நிறைந்த கவிமணியைப் போற்றினாரா
செந்தமிழான் தமிழ் ஒளியைப் போற்றினாரா
பார் புகழும் இவரையெல்லாம் விட்டு விட்டு
பணிந்து வாழ்ந்து அடிமைகளாய்ப் பாடினாரே
தமிழைப் போல
கண்ணதாசன் பிறந்த நாள் தன்னிலே தான்
கனித் தமிழின் மாநாட்டைத் தொடங்கினார் காண்
எண்ணவில்லை கண்ணதாசப் பெருங் கவியை
எவரும் அவர் பெயர் கூடச் சொல்லவில்லை
மன்னவனைச் சொல்லி விட்டால் மாத்தமிழாள்
மயங்கிடுவாள் எனக் கருதி மறைத்திட்டாரோ
என்னவென்று புரிந்து கொண்ட நற்றமிழர்
எவரும் அங்கு செல்லவில்லை தமிழைப் போல
Wednesday, June 30, 2010
எழில் சுத்தானந்தன் என்றும் உள்ளார்
நெற்றியிலே திருநீறு உள்ளம் போல
நெஞ்சார அன்பு செய்யல் உண்மையாக
பற்றாளர் தமிழ்க் கடவுள் முருகன் மீது
பண்பாளர் பழகுதற்கு நட்புக் கொள்ள
கண் போன்ற கல்வியினைத் தருவதிலே
கலைமகளின் தலைமகனாய் வாழ்ந்து வென்றார்
என் போன்றோர் இதயத்தில் என்றும் உள்ளார்
எழில் சுத்தானந்தன் என்றும் மறையவில்லை
Tuesday, June 29, 2010
பாவேந்தர் நினைந்தாரா
யாருக்கும் வெட்கமில்லை என்று அன்றே
இழிந்தார்க்கு ஒரு சொல்லைத் தந்தார் தாசன்
ஊருக்கே வெட்கமின்றி ஒழியும் என்று
ஒரு நாளும் சொல்லவில்லை பாவின் வேந்தர்
பேருக்கே அவரை யெல்லாம் சொல்லுகின்றார்
பெருமை செய்யவில்லை அவர்க் கின்று இங்கே
யார் கேட்கப் போகின்றார் வாய் திறந்து
எல்லோரும் பிழைக்கின்றார் அஞ்சி அஞ்சி
எதிர்த்தா கொலைதான்
அம்மாவை எதிர்த்தாலும் அடிப்பாங்க
அய்யாவை எதிர்த்தாலும் அடிப்பாங்க
சும்மாக் கெடஙக தமிழர் களே
சொரணை மானம் நமக் கெதுக்கு
கும்மாங் குத்து வாங்கித் துடிக்காமே
குடும்பம் காக்கப் பாருங்க
எம்மாம் பெரிய ஆளு அவங்க ளெல்லாம்
எதிர்த்தாக் கொலைதான் பொழச் சுக்குங்க
Sunday, June 27, 2010
பாட வேண்டும்
செம்மொழிக்காய்க் கவியரங்கம் ஆங்கிலத்தில்
சிறப்பாகப் பாடுகின்றார் பெண்ணொருத்தி
தம்மொழியில் செய்திகளைச் சொல்ல வொண்ணா
தனியாரை ஏன் பாடச் சொன்னார் என்றால்
அம்மையவர் நன்றாகப் புகழுவார் காண்
அய்யாவை அய்யாவை அய்யாவைத் தான்
செம்மொழிக்காய் மாநாடு என்றால் தானே
செந்தமிழை உணர்ந்தார்கள் பாட வேண்டும்
Saturday, June 26, 2010
கொடுமைகளை
எழுத்தாலே தமிழுக்குச் சேவை செய்த
எத்தனையோ நல்லறிஞர் நாட்டில் உண்டு
செழித்த அந்தத் தமிழறிஞர் தன்னையெல்லாம்
சிறப்பிக்க விரும்பாமல் அடிவருடிப்
பிழைப்பாரைப் பேணுகின்றார் அவரும் தன்னைப்
பேரறிஞர் என்று எண்ணி ஆடுகின்றார்
பொறுக்கின்றாள் தமிழ் அன்னை என்ன செய்ய
பொதிகை மலைக் குளிராகக் கொடுமைகளை
என்ன செய்வாள் தமிழாம் தாயார்
கொடுத்த ஒரு ஊதியத்தைக் குறைத்துக் கொண்டு
கொங்கு தமிழ் நாட்டினது தூரன் அய்யா
அடுக்கடுக்காய் தமிழுக்காய் களஞ்சியங்கள்
ஆக்கியது பத்தாகும் அருஞ் செயலாய்
நினைப்பதற்கு யாரும் இல்லை என்ன செய்ய
நெஞ்சழிந்து பேடிகளாய் ஆன மாந்தர்
கொடுப்பவரைப் புகழுதற்கேப் பிறப்பெடுத்த
கோழைகளை என்ன செய்வாள் தமிழாம் தாயார்
Monday, June 21, 2010
படைப்புக்கள் கோவையில் கிடைக்குமிடம்
ரீடர்ஸ் பார்க்
285. என்.உறெச்.சாலை
கோயம்புத்தூர்
641 001
தொலைபேசி எண் 0422 2399934
கைபேசி எண் 99446 9994
வடிவுடைக் காந்திமதியே ரூபாய் 75 00
(மரபுக் கவிதை)
காதல் செய்யாதவர்கள்
கல்லெறியுங்கள் ரூபாய் 125 00
(புதுக்கவிதை)
குறுக்குத்துறை ரகசியங்கள் ரூபாய் 100 00
(நடைச் சித்திரம்)
Sunday, June 20, 2010
நினைந்து போற்ற
மரபாலே மயக்கி நின்ற மாக் கவிஞன்
மனிதர் வாழ்வைச் சொல்வதிலே வென்ற மேதை
திரை உலகா அதிலேயும் வெல்வதற்கு
தேடி இன்று பார்த்தாலும் யாரும் இல்லை
வரவானான் தமிழுக்கு அன்னை அவள்
வரமானாள் அவனுக்கு வென்றான் வென்றான்
தரமானான் கண்ணாதாசப் பெருங் கவிஞன்
தான் பிறந்த நாளின்று நினைந்து போற்ற
ஆனதென்ன
மரணம் தான் உறுதி என்று தெரிந்த போதும்
மனம் போன போக்கில் எல்லாம் ஆடுகின்றார்
சரணம் என உனை அடைய எண்ணம் இன்றிச்
சதிராட்டம் ஆடுகின்றார் சாடுகின்றார்
வரமாகத் தந்த இந்த வாழ்க்கை தன்னை
வாழ்வாங்கு வாழாமல் ஒழித்தழிவார்
பரம் பொருளே இதுவேதான் மீண்டும் மீண்டும்
படைத்த உந்தன் விளையாட்டாய் ஆனதென்ன
அருள்க அய்யா
கொல்லத்தான் போகின்றாய் என்ற போதும்
குளிர் பார்வை தனில் என்னை ஆட்படுத்தி
நல்லவனாய் வாழ வைத்தல் உந்தன் கடன்
நாயகனை உனைப் போற்றி நிற்கின்றேன் நான்
வெல்வதற்குத் தமிழ் தந்த தாயுணர்வே
வேண்டு மட்டும் உனைப் பாடி நிற்பதற்கு
சொல் அனைத்தும் தர வேண்டும் எந்தனுள்ளச்
சோதி மணிப் பேரருளே அருள்க அய்யா
Saturday, June 19, 2010
அன்புடையீர் எனது படைப்புக்கள் கிடைக்குமிடம்.
சென்னை
நியூ புக்லேண்ட்ஸ் 52 சி வடக்கு உஸ்மான் சாலை தி நகர்
தொலைபேசி 28156006
ராகுல் பிறந்த நாள் வாழ்த்து
ஆசைகளை அறுத்தவனாய் வாழுகின்றான்
அடக்கமதைக் கொண்டவனாய்ச் சிறந்து நின்றான்
பாசமதை நாட்டின் மேல் வைத்தவனாய்
பண்பு நலன் குறிக்கோளாய் உயருகின்றான்
வீசுகின்ற தென்றலெனப் பேசுகின்றான்
வெற்றி வழி உண்மையென்று போற்றுகின்றான்
தேசமிதைக் காப்பதற்காய் இறைவன் ஈந்த
தேசு மிக்க ராகுலை வாழ்த்துகின்றோம்
Tuesday, June 15, 2010
கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அவர்களிடம் இசைஞானி தனது திருவெம்பாவை நூலை எனக்கு அனுப்பச் சொல்லுகின்றார்
இசைஞானியின் வெண்பாக்கள்
இசை வடிவாய் வாழுகின்ற இளையராஜா
இன் தமிழில் வெண்பாக்க ளியற்றுகின்ற
அசை அழகு அத்தனையும் கண்டு கொண்டேன்
அட அடடா அட அடடா அன்பு கொண்டேன்
இசையான தமிழுக்கு இவரின் பாக்கள்
எத்திசையும் புகழ் சேர்க்கும் பெருமை சேர்க்கும்
விசையான இசையோடு உலகம் வென்றார்
வெண்பாவில் வென்று உள்ளார் போற்றுகின்றேன்