Thursday, July 3, 2008

பழம் பாடல் புதுக்கவிதை காளமேகம்

உணவருந்தச் சென்றிருந்தார் காளமேகம்
ஒவ்வொன்றாய் உண்டு அவர் முடிக்கையிலே
நினைவாக இறுதியிலே மோரை உண்டு
நிறைவாக்க முயல்கின்றார் அந்த நேரம்
கனிவாக மோர் தன்னை ஊற்றுகின்றார்
கவலையின்றி அவ்வீட்டார் புலவருக்கு
பணிவோடு அம்மோரின் பெருமை தன்னை
பாடலிலே வைக்கின்றார் புலவர் தானும்

வானத்தில் இருந்தாய் நீ மேகமென்றார்
வந்தாய் நீ தரையினிலே தண்ணீர் என்றார்
கான் மலையின் மார்பகத்து ஆய்ச்சியர் தம்
கைகளிலே வந்த உடன் மோரேயானாய்
நான் அறிந்தேன் உன் பெருமை ஆமாம் இந்த
நானிலத்தில் முப்பெயரைக கொண்டாய் நீயே
நீர் அறிவீர் மோரதுவும் நீராய் ஆன
நிலை கண்டு காளமேகம் தந்த பாடல்

காளமேகம்

கார் என்று பேர் பெற்றாய் ககனத்துறும் போது
நீர் என்று பேர் பெற்றாய் நெடுந்தரையில் வந்ததற்பின்
வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர் கை வந்ததற் பின்
மோரென்று பேர் பெற்றாய் முப்பேரும் பெற்றாயே

2 மறுமொழிகள்:

said...

அவ்வளவு தண்ணியாவா மோர் ஊத்தினாங்க அந்த ஆச்சி!

பாடலும், அதைத் தந்த விதமும் இதமோ இதம்!

said...

அது ஆச்சி இல்லை vsk!
ஆய்ச்சியர்...இடையர் குலப் பெண்கள். பாலை கறந்து தயிராக்கி, தயிரைக் கடைந்து மோராக்கி, பின் அதில் திரண்ட வெண்ணை எடுத்து பின் அந்த மோரை அப்பிடியே குடிப்பதானால் தங்களுக்கு....நீர் சேர்த்து தருவதானால் பிறர்க்கு.
சரிதானே நெல்லைக் கண்ணன்?
காளமேகத்தின் நக்கல் நல்லாருக்கு.