Tuesday, July 8, 2008

பழம் பாடல் காளமேகம்

ஆண்டவனின் தலையினையேக் கண்டு விட
அன்னமதில் ஏறிப் பிரமன் மேலே செல்ல
காண்பதற்கு அரிதான திருவடிகள் தன்னைக்
கண்டு விடப் பூமிக்குள் திருமால் தானும்
பூண்டு நின்றார் பன்றியதன் வடிவம் தன்னை
பூமியினைத் தோண்டி அதன் உள்ளே சென்றார்
காண்பதற்கு முடிந்ததுவோ இருவராலும்
கண்ணுதலான் அடி முடியை இல்லை இல்லை


வேண்டி நிற்பார்க்கு அருள் செய்யும் இறைவன் இவர்
வீம்பு கண்டே இவர்களுக்கு அருளவில்லை
பூண்ட நல்ல அன்பு கொண்ட அடியவரின்
பொன் மனத்தால் அவர்களுக்கு ஏவல் செய்வான்
ஆண்டவனின் அடி முடியைக் காண்பதற்கு
அன்று திருமாலுக்கும் பிரமனுக்கும்
வேண்டியதோர் வழி சொன்னான் காளமேகம்
விரித்துரைப்பேன் களி கொள்வீர் படித்து விட்டு


ஆரூரின் தோழர் அவர் சுந்தரராம் அவருக்காய்
அன்றொரு நாள் இரவு நேரம்
தேரூரும் திருவாருரின் வீதிகளில்
திருவடிகள் பதித்து இறைவன் நடந்து சென்றார்
பாலூறும் பக்தி கொண்ட பரவையாரின்
படி தாண்டி இரண்டு முறை சென்று வந்தார்
போய் அந்த நிலைப் படியாய் இருவருமே
பொருந்தி அவர் அடி முடியைக் காணலாமாம்

சீராய் ஒரு வெண்பாவில் காளமேகம்
செப்புகின்றார் இவ்வழியை இருவருக்கும்
ஊராரே உணர்வீர் நீர் ஏழை அன்பர்
ஒவ்வொருவர் அழைத்தாலும் வருவான் அவன்
நீர் பெரியர் என்ற எண்ணம் கொண்டு சென்றால்
நெருங்கிடவே முடியாதாம் இறைவன் தன்னை
ஆர் எனினும் திருமாலும் பிரமன் தானும்
அறிந்திடவே சொல்லுகின்றார் காளமேகம்


காளமேகம்
ஆனார் இலையே அயனும் திருமாலும்
கானார் அடி முடி முன் காண்பதற்கு - மேனாள்
இரவு திருவாரூரில் எந்தை பிரான் சென்ற
பரவை திரு வாயிற் படி

0 மறுமொழிகள்: