Wednesday, July 23, 2008

ஒட்டக்கூத்தனும் இரட்டைத்தாழ்ப்பாளும்

      பாண்டியனின்  மகள்  அங்கே சோழனது

         பத்தினியாய் ஆகி விட்டாள் ஆன பின்னர்

     வேண்டு மட்டும் இன்பங்கள் பெறுவதுவும்

         பெறுவது  போல் தருவதுவும்  என்று வாழ்ந்தாள்

     ஆண்களுக்கும் பெண்களுக்கும்  இடையில்   நேரும்

        அவசியமாம்  ஊடலது வந்ததங்கு

    தான் போய்  அவ்வூடலினைத் தீர்த்தல் விட்டுத்

        தமிழ்க்  கவியாம் கூத்தரினை அனுப்பி  வைத்தான்

  கூத்தர் கொஞ்சம் நிமிர்ந்தவர்    காண் கொற்றவனே

      கூப்பிட்டுத் தந்த  பணி என்ற போது

  பாத்திறத்தைக் காட்டுதற்கு முனைந்தாரன்றி

     பாண்டியனின் மகள் மனதை அறிந்தாரில்லை

  ஆத்திரம்  தான் அரசிக்கு அங்கு வந்து

      ஆறுதலைத்  தர வேண்டும்  மன்னன்  அவன்

 பாத்திறத்துப் பாவலரை  அனுப்பியதில்

    பாவையவள் நொந்து விட்டாள் அதற்கு மேலே

  நாத்திறத்தைக் காட்டுகின்றார் புலவர் நங்கை

            நல் மனத்தை   அறியாராய் கனிவே இன்றி

 பூந்தளிரே  உன் கைகள் தானே வந்து

            பொறுப்பாகத் தாழ்ப்பாளைத் திறந்து விடும்

  வேந்தன் எங்கள் சோழனுமே இங்கு  வந்தால்

           விரைவாகத் திறந்து விடும் உந்தன்  கைகள்

  வேண்டியெல்லாம் நான் ஒன்றும்  பாட மாட்டேன்

          வேல் விழியே கதவுகளைத் திறந்திடுக

 கூத்தரது வார்த்தைகளால்   அரசியவள்

              கோபமது   கூடியது  தோழிதன்னைச்

 சேர்த்து மற்றொர்   தாழ்ப்பாளை உடனே   போடச்

             செப்பி விட்டாள்   கூத்தர் செய்த நன்மை யீது

காத்து நிற்கும் சோழனவன்  புலவர் தம்மைக்

             காதலித்துத் தொலைத்ததனால் வந்த துன்பம்

சேர்த்தணைத்து ஊடல் தீர்க்க முயலான் அன்பைச்

             செந்தமிழ் மேல் வைத்ததனால் வந்த துன்பம்

                                     ஒட்டக்கூத்தர்

    நானே யினி உனை வேண்டுவதில்லை  நளின மலர்த்

   தேனே கபாடம் திறந்திடுவாய் திறவாவிடிலோ

   வானேறனைய ரவி குலாதிபன் நின் வாயில் வந்தால்

   தானே திறக்கும் நின் கைத்தலமாகிய தாமரையே

தாழ்ப்பாளை நீக்க  புகழேந்திப் புலவர் பாடிய பாடலை நாளை பார்ப்போம்

  

0 மறுமொழிகள்: