Tuesday, July 1, 2008

காந்தி அடிகள்

பூரியிலே இருக்கின்றார் காந்தி அண்ணல்
புகழ் பெற்ற ஜகன்நாதர் கோயிலின் ஊர்
சேரியிலே இருக்கின்றார் சூழ்ச்சியினால்
சிறுமைக்கு உள்ளான அரிஜனங்கள்
யாரும் அந்த கோயிலுக்குப் போதல் வேண்டாம்
என்பதுவே காந்தி அண்ணல் உண்மை உள்ளம்
சீர் உணர்ந்து அரிஜனங்கள் கோயிலுக்குள்
செல்லும் வரை நமக்கில்லை கோயில் என்றார்


ஆர்வமதால் விளைந்திட்ட ஆசையினால்
அன்னை கஸ்தூரி பா செல்ல முடிவெடுத்தார்
சேர்ந்து மகாதேவ தேசாய் அங்கு அவருடனே
சென்று விட்டார் கோயிலுக்கு வணங்கி வந்தார்
சோர்ந்து விட்டார் அடிகளுமே செய்தி கேட்டுச்
சொல்லொணாத துயரத்தில் ஆழ்ந்து விட்டார்
வீழ்ந்ததங்கு அவர் நாடித் துடிப்பு உடல்
வியர்க்கிறது மருத்துவர்கள் ஒடி வந்தார்

ஆழ்ந்த ஒரு கவலை கொண்டார் அடிகள் தானும்
அறிவித்தார் துணைவிக்கும் நண்பருக்கும்
தேர்ந்தெடுத்த கொள்கை வழி விட்டு நீங்கள்
திருடரைப் போல் கோயிலுக்குச் சென்றதென்ன
பேர்ந்ததெந்தன் மனம் என்றார் தேசாய் சொன்னார்
பெரிய நல்ல மகானோடு இருத்தல் என்றல்
தான் துயரம் ஒரு நொடியில் தவறினாலே
தந்தையையே இழந்து விட இருந்தோம் என்று

0 மறுமொழிகள்: