புகழேந்தி பாட வந்தார் இரட்டைத் தாழ்ப்பாள்
போட்டு நின்ற அரசியிடம் கோபம் தீர்க்க
புகழேந்த விரும்புவார் பெண்கள் என்ற
பொதுப் பொருளை கருப் பொருளாய்க் கொண்டவராய்
இழையொன்றை இரண்டாக வகுந்தாற் போல்
இடைகொண்ட எம்மரசி பெண்ணரசி
பிழை பொறுக்கும் பெருங்குடியாம் பாண்டியர் தம்
பெருங்குடியில் பிறந்தவள் நீ மறந்தா போனாய்
மழை மாதம் மூன்று முறை பெய்யும் நாட்டு
மன்னவராம் சோழரிவர் செய்த பிழை
பெரிதென்று கருதி நிற்றல் சரியாய் ஆமோ
பெரிய மனம் கொண்டீரே மாற்றிக் கொள்ளும்
விழைகின்ற அன்பாலே உந்தன் வாசல்
வேண்டி இங்கு நிற்கின்றார் சோழ மன்னர்
குழை கொண்ட காது வரை விழிகள் கொண்ட
கோல மயில் கதவினையே திறந்தருள்வாய்
உளமறிந்து பாடி நின்றார் புகழேந்தியார்
ஊரறியும் ஆனாலும் உண்மை ஒன்று
களமறிய அவருக்குக் கிடைத்த வாய்ப்பு
கண்மணியின் பாண்டி நாட்டுப் புலவர் அவர்
நிலையறிந் தார் அதனாலே அந்தப் பெண்ணாள்
நெஞ்சறிந்து பாடி விட்டார் வென்று விட்டார்
தலை நிமிர்ந்த கூத்தரவர் இயல்பினாலே
தளிர்க் கொடியாள் இரு தாழ்ப்பாள் போட்டு விட்டாள்
புகழேந்தி
இழையொன்றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை ஏந்திய பொற்
குழையொன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபம் தணி
ம்ழையொன்றிரண்டு கைம்மானாபரணன் நின் வாயில் வந்தால்
பிழையொன்றிரண்டு பொறாளோ பெருங்குடியிற் பிறந்தவளே
0 மறுமொழிகள்:
Post a Comment