Monday, June 30, 2008

அந்தோ பாவம்

வாழ் நாளை வீணாளாய் ஆக்குதற்காய்
வடிவெடுத்தாற் போல சிலர் என்றும் எங்கும்
சூழ்ந்திருக்கும் நன்மைகளை விட்டு விட்டு
சுத்தமாகத் தீமைகளைத் தேடித் தேடி
ஆழ்ந்து அதால் அனைவருக்கும் துன்பம் தர
ஆசை கொண்டு ஆடுகின்றார் அறிய மாட்டார்
தூர்ந்து அந்தத் துன்பமெல்லாம் அவரையன்றோ
துடைத்தெறியும் அழித்தொழிக்கும் அநதோ பாவம்

நான் ஒர் வேலைக்காரி

பாரதத்தின் பிரதமராய் அன்னை இந்திரா
பாங்காக வீற்றிருந்த அந்த நேரம்
சீர் நிறைந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில்
செய்திகளைத் தந்திருந்தார் அந்த வேளை
ஆர்வமுடன் கேட்டு நின்றார் ஒருவர் அன்னை
அவர் முதல் பெண்மணியா நாட்டில் என்று
வாய் திறந்தார் அன்னை நான் ஒர் வேலைக்காரி
வழங்குகின்றார் சம்பளம் என் நாட்டு மக்கள்

குறட் கருத்து காமத்துப்பால்

மறைத்து விட முடிகிறதா இந்தக் காதல்
மனத்திற்குள் கிடக்கிறதா அந்தோ அந்தோ
இறைத்து விட்ட நீர் போல ஊரார்க் கெல்லாம்
எப்படித் தான் தெரிந்ததுவோ புரியவில்லை
உரைத்திடலாம் அவருக்கென் துன்பம் என்றால்
உடன் பிறந்த நாணம் அதோ தடுக்கிறது
தரத் தந்தான் நோயிதனை அவனே யன்றோ
தானாகத் தழுவி இதைத் தீர்க்க வேண்டும்

குறள்
கரத்தலும் ஆற்றேன் இந்நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

பழம் பாடல் கம்பன்

மது உண்ண நிறைந்து நிற்கும் மங்கையர் கூந்தல் தோறும்
மலர்களில் மொய்க்கும் வண்டின் மாபெரும் கூட்டம் அங்கே
தருவதில் விருப்பம் இல்லார் தனைச் சூழும் இரப்பார் போல
விறு விறு என்று சுற்றி விண் வரை நிறைந்து நிற்க
மது உண்ண தாமரைச் செவ்வாயினைத் திறந்தால் வண்டு
அது உள்ளே நுழையும் என்று அஞ்சிய பெண்ணாள் வாயில்
கழுநீர்ப் பூத்தண்டைக் கொண்டு மதுவினை உறிஞ்சினாளாம்
கனித் தமிழ் நாடு கண்ட இயற்கையின் குழலைக் கண்டோம்

கம்பன்

வான் தனைப் பிரிதல் ஆற்றா
வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மாநிதியம் வேட்ட
இரவலர் என்ன ஆர்ப்ப
தேன் தரு கமலச்செவ்வாய்
திறந்தனள் நுகர நாணி
ஊன்றிய கழுநீர் நாளத்
தாளினால் ஒருத்தி உண்டாள்

Sunday, June 29, 2008

இரங்கி நின்றார்

அறியாதான் ஒருவன் வந்து மிகச் சிறந்த
அறிஞர் அவர் முன்னாலே நின்று கொண்டான்
புரியாமல் பல கேள்வி அடுக்கி நின்றான்
புரிந்தவரோ புரியாராய் நின்றிருந்தார்
தெரியாமல் திகைக்கின்றார் அய்யோ அய்யோ
தினம் கேட்டும் பதில் இல்லை வென்றேன் என்று
அறியாதான் ஆடுகின்றான் அய்யோ பாவம்
அறிஞர் அங்கு அவனுக்காய் இரங்கி நின்றார்

குறட் கருத்து காமத்துப்பால்

பார்க்கின்றோம் முருகனது ஊர்கள் தோறும்
பக்தியுடன் காவடிகள் ஆடிப் போகும்
ஆர்க்கின்ற காவடிகள் அனைத்தும் கண்டோம்
அழகுப் பெண் காவடியைக் குறளார் தந்தார்
சேர்க்கின்றேன் என்றவனோ பிரிந்து சென்றான்
செவ்விதழாள் உயிர் அங்கே தண்டேயாக
பேர்த்தெடுக்கும் காமமதும் நாணம் தானும்
பிரிந்தங்கு காவடியாய் மாறியதாம்

காவடியில் இரு புறமும் பெண்ணாள் கொண்டாள்
கணக்காகக் காமமுடன் நாணமதும்
ஆகையினால் வாழுகின்றாள் இல்லையென்றால்
அவையிரண்டில் ஒன்றிழுத்தால வீழ்ந்தழுவாள
பாவி மகள் படும் பாட்டை வள்ளுவனார்
படைத்தளித்தார் இன்றும் நாம் பாடுகின்றோம்
காவடியை இருபுறமும் சரி சமமாய்க்
காத்ததனால் பெண் பிழைத்தாள் உணருகின்றோம்

பழம் பாடல் கம்பன்

லஞ்சமோ அன்பளிப்போ நமக்கது புரியவில்லை
கொஞ்சிடும் பெண்ணொருத்தி கொடுத்திட முனைந்தாள் என்று
வஞ்சசமே இல்லாக் கம்பன் வாய் மொழிப் பாடல் ஒன்று
அஞ்சுக மொழியாள் மதுவைக் கோப்பையில் ஏந்தி நின்றாள்
மஞ்சுலாஅம் நிலவை அந்த மதுவுள்ளே பார்த்து விட்டாள்
கொஞ்சியே நிலவிற்கொன்றை கூறினாள் ஆகா ஆகா
கொஞ்சம் நீ ஊடல் நேரம் கொன்றிடும் வெம்மை விட்டு
குளிர் நிலவாகி நின்றால் கொடுப்பேன் இம்மதுவை என்றாள்


தன் முகம் மதுவுக்குள்ளே தளிர் நிலவாகத் தோன்ற
தனக்குள்ளே மதுவைக் கொண்ட தளிர்க் கொடி போதை ஏற
என்னவன் தானும் நானும் இடையினில் ஊடல் கொண்டால்
தண் நிலா வெப்பம் கொண்டு தாக்குமாம் தன்னைக் கொல்ல
அந்நிலா என்று எண்ணி அவள் முகம் தன்னிடத்தே
வெண்ணிலா உனக்குத் தருவேன் மதுவினை வேண்டு மட்டும்
கண்மணி ஊடல் நேரம் கனிவுடன் நீ நடந்தால்
பெண்மணி பேரம் லஞ்சப் பேயதன் தொடக்கமன்றோ

கம்பன்

கண்மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி
உள் மகிழ்த் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி
தண் மதி ஆகின் நானும் தருவென் இந்நறவை என்றாள்

Saturday, June 28, 2008

எனது மின்னஞ்சல் முகவரி

www.tamilkadal2004@yahoo.com

www.tamilkadal2004@gmail.com

அவரைக் கூட

முன் பின்னாய்க் கார்கள் சூழப் போனதுண்டா
முறை கெட்டார் அவர கிட்டே சென்றதுண்டா
தன் பெண்டு பிள்ளை என்று அவருக்காகத்
தனியாக உறவுண்டா தாயையன்றி
என் செய்தார் அம்மனிதர் ஏழைகளை
எப்போதும் உறவாகக் கொண்டிருந்தார்
புன் செயலைச் செய்தார்கள் அவரைக் கூட
போட்டியிலே தோற்கடித்து மகிழ்ந்து நின்றார்

வணங்கியவர் காமராஜர்

ஆங்கிலத்தைத் தெரிந்தவர்தான் இந்தியெனும்
அம்மொழியும் தெரிந்தவர்தான் இந்தியத் தாய்
ஈன்றெடுத்த எம்மொழியும் தெரிந்தவர்தான்
இருந்தாலும் எழுந்து நின்று ஆட மாட்டார்
சான்றாண்மை கொண்டவராய் வாழ்ந்ததாலே
சரித்திரத்தின் உண்மையெல்லாம் தெரிந்ததாலே
ஈன்றாளின் மொழி ஒன்றே எங்கும் பேசி
எம் தமிழை வணங்கியவர் காமராஜர்

சிரித்ததந்தக் கேள்வியாலே

சட்டமன்றம்தனில் எதிரில் வந்தமர்ந்த
சரித்திரங்கள் பல அறிந்த மேதை அவர்
பட்டெனவே பல நாட்டு அறிஞர் தம்மின்
பாங்கான செய்திகளைச் சொல்லுகின்றார்
சட்டெனவே பெருந்தலைவர் கேட்டு நின்றார்
சரி உங்கள் செய்தி என்ன தமிழ்நாட்டுக்கு
கட்டுரைத்தார் வாயடைத்தார் சட்டமன்றம்
கல கலத்துச் சிரித்ததந்தக் கேள்வியாலே

சொக்கிப் போக முட்டாளா

வேண்டாத புகழுரைகள் தம்மை என்றும்
விரும்பியதே இல்லை அய்யா காமராஜர்
தாண்டிஅங்கே ஒரிருவர் பேசி விட்டால்
தண்டனைதான் வேறென்ன தொலைந்தார் அவர்
மண்டலத்து மாநாடு ஒன்றில் ஒரு
மாபெரிய தமிழறிஞர் பேச வந்தார்
கண்ட ஒரு காட்சியினைச் சொல்லி நிற்பேன்
காமராஜர் காமராஜர் காமராஜர்தான்

பெருந்தலைவர் எழுந்து நின்றால் அவர் தலையோ
பேரிமயம் தனில் இடிக்கும் இரண்டு கால்கள்
பொருந்தி நிற்கும் குமரி அன்னை கடற்கரையில்
பொரு தடக்கை பாரதத்தை அணைத்து நிற்கும்
விறு விறுப்பாய்ப் பேசி நின்றார் பெரியவரோ
விலா நோகச் சிரித்து என்னை அரக்கன் என்று
சுறு சுறுப்பாய்ப் பேசுதியோ நிறுத்து போதும்
சொக்கிப் போக முட்டாளா நான் என்றாரே

நிறுத்துங்க என்று சொன்னார்

மதுரையிலே ஒரு கூட்டம அங்கே ஏழை
மக்களுக்காய் பிறந்து வந்த பெருந்தலைவர்
கதி அவரே என்றிருக்கும் மக்களின் முன்
கணக்காகச் சிலர் அவரைப் புகழுகிறார்
இடை மறித்துப் பெருந்தலைவர் காமராஜர்
எனைப் புகழ என்ன உண்டு என்று சொல்லி
பட படத்தார் குழந்தை குட்டி குடும்பம் என்று
பல இருந்தும் பதவியிலே தானிருந்தும்

திட மனதாய் வறுமையிலும் நேர்மையுடன்
தேசமதே சொத்தென்னும் ஒர்மையுடன்
வட புலத்தார் கண்டாலும் வணங்கி நிற்கும்
வாழ்வாங்கு வாழும் எங்கள் கக்கனையே
தினம் புகழ்ந்து போற்றுங்கள் அதுவே நன்று
தெரியுமில்ல நான் ஒண்டிக் கட்டை என்னை
விதம் விதமாய்ப் புகழ்வதிலே நியாயமில்லே
வேண்டாம் அதை நிறுத்துங்க என்று சொன்னார்

குறட் கருத்து காமத்துப் பால்

காதலித்து விட்டேனாம் ஊரார் அதைக்
காண்பது போல் செய்தேனாம் என்றும் எங்கும்
கூடி அவர் கொண்டேனாம் ஊரைப் பற்றிக்
கொஞ்சம் கூட நினைப்பின்றி நடந்தேனாம் நான்
தேடி இதை ஊரெங்கும் சொல்வதனால் நான்
திருந்திடவா வாய்ப்புண்டு காமத்தீயைப்
பேசி இவர் அணைத்திடவே நினைத்தல் நெய்யால்
பெருந்தீயை அணைத்திடவே முயல்தல் ஆகும்

குறள்

'நெய்யால் எரி நுதுப்பேம்'என்று அற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்

குறட் கருத்து காமத்துப் பால்

கண்கள் இது அவர் காணக் காதலித்தேன்
காதலரும் வந்து என்னை ஆதரித்தார்
பண்ணிசைத்தோம் பல விதமாய்ப் பாடி நின்றோம்
பாடலைப் போல் கூடலையும் தேர்ந்து வென்றோம்
மன்னவரும் எனைப் பிரிந்தார் அழகினோடு
மங்கை யெந்தன் நாணமதும் கொண்டு சென்றார்
தென்னவரோ கைம்மாறாய் நோய்கள் தந்தார்
தீராத காமமதும் பசலையதும்


குறள்
சாயலும் நாணும் அவர் கொண்டார், கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

பெருமையெல்லாம் தேடி வரும்

சென்னையிலே காந்தியார்க்கு வரவேற் பொன்றைச்
சீராகத் தருகின்றார் தமிழர் நாட்டார்
அன்னை கஸ்தூரஅவரும அருகிருக்க
அளக்கின்றார் மன்னரென்றும் ராணியென்றும்
சொன்னதெல்லாம் கேட்டு நொந்த காந்தியாரும்
சொல்லுகின்றார் பதிலினிலே உண்மைகளை
என்னை யிங்கு புகழ்ந்ததிலே வெட்கம் கொண்டேன்
எள்ளளவும் உண்மையில்லை மாற்றிக் கொள்க

நாரா யண சாமி நாகப்பன் என்ற இரு
நல்ல தமிழ் நாடு பெற்ற இளைஞரவரோடு
போராடி நாட்டிற்காய்ச் சிறைக்குள்ளே நொந்து
பொலிவிழந்து நோய் கொண்டு உயிர் துறந்து நின்ற
சீமாட்டிவள்ளி யம்மை அவள் செய்த தியாகம்
செப்பி அவர் தலையினிலே சூட்ட வேண்டும் மகுடம்
நீர் மாற்றி அதை எனக்குச் சூட்டிட முயன்றீர்
நெஞ்சார அவருக்கே சூட்டுகின்றேன் இதனை


மற்றவர் தம் உழைப்பதனைத் தன் உழைப்பாய்
மாற்றி அதில் குளிர் காயா மா மனிதன்
உற்றவரோ நண்பர்களோ எவரெனினும்
உண்மை விட்டால் உதறி விட்ட ஒர் புனிதன்
கற்றிடுவீர் அவன்தன்னை கற்று விட்டால்
கண்டிடுவீர் மனத்திற்குள் நிம்மதியை
பெற்றிடுவீர் அவன் வழியைப் பெற்று விட்டால்
பேசரிய பெருமையெல்லாம் தேடி வரும்

பழம் பாடல் கம்பன்

இடையது முறியும் என்றே இருக்கின்றார் எல்லாம் காண
இதழதன் சிவப்பில் ஊரார் இரத்தத்தின் துடிப்பு ஏற
படையெனும் மார்பும் நஞ்சின் வேலைப் போல் கண்கள் ரெண்டும்
தடையின்றி வளர்ந்த கூந்தல் தரையினைத் தழுவி நிற்க
குடிக்கின்றாள் பெண்ணாள் மதுக் கோப்பையைக் கையில் ஏந்தி
கோப்பைக்குள் தன்னைக் கண்டாள் கோபத்தின் உச்சி கண்டாள்
அடிப் போடி எச்சில் உண்ணும் பைத்தியம் அங்கே போய் நீ
அளவின்றிக் குடிக்கலாம் என்றவளையே விரட்டுகின்றாள்

கம்பன்

அச்ச நுண் மருங்குலாள் ஒர்
அணங்கு அனாள் அளக பந்தி
நச்சு வேல் கருங்கண் செவ்வாய்
நளிர் முகம் மதுவுள் தோன்ற
பிச்சி நீ என் செய்தாய் இப்
பெரு நறவு இருக்க, வாளா
எச்சிலை நுகர்தியோ என்று
எயிற்று அரும்பு இலங்க நக்காள்

Friday, June 27, 2008

குறட் கருத்து பெருமையும் சிறுமையும்

ஊரினிலே மிகப் பெரிய மனிதர் என்றும்
உண்மையொன்றே வாழ்க்கை என்று கொண்ட வீரர்
யாரிடத்தும் எப்போதும் பணிந்து நிற்பார்
எங்கேயும் யார்க்கும் நன்மை செய்தே நிற்பார்
காரிடத்தின் மழை போலே ஏழையர்க்கு
கருணையுடன் எப்போதும் ஈந்தே நிற்பார்
ஊரிடத்தே எங்கேயும் தன் பெயரை
உச்சரிக்க அனுமதிக்க மறுத்தே நிற்பார்


இன்னொருவர் எப்போதும் ஆடி நிற்பார்
எங்கேயும் தான் என்றே கூறி நிற்பார்
மன்னவன் என் அறிவிற்கு ஈடு இணை
மக்களிலே யார் உண்டு என்றே கேட்பார்
தன் நிலையை உணராதார் அய்யோ அய்யோ
தாவிடுவார் கூவிடுவார் ஊர் சிரிக்க
தென்னவராம் வள்ளுவரும் இவருக்கென்றே
திருக்குறளைத் தந்துள்ளார் காண்க நீவீர்

குறள்
பணியுமாம் பெருமை என்றும், சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

செத்ததங்கு

தவளை ஒன்று ஆனையொன்றைப் பார்த்ததங்கு
தன்னருகே நின்றிட்ட தவளையிடம்
இவனை விடப் பெரியவனாய் ஆகிடுவேன்
என்னாலே முடியும் என்று குதித்தங்கு
கவலை கொண்ட நண்பனுமே சொல்லியது
கடவுள் தந்த உருவம் இது மாறாதென்று
தவளையது கேட்காமல் முக்கி முக்கி
தடால் என்று உடல் கிழிந்து செத்ததங்கு

மடமையை மாற்றிய காந்தியடிகள்

மனிதர்களைத் தெய்வம் என்று கருதி மாளும்
மடமையினை வேரறுத்தார் காந்தி அண்ணல்
புனிதர் அவர் உண்ணாமல் நோன்பு கொண்டு
போராட்டக் களம் தன்னில் உள்ள நேரம்
தனியாக அவர் தம்மைக் காண வென்று
தம்பதியர் கிராமம் விட்டு வந்திருந்தார்
கனிவான காந்தி யண்ணல் கால்கள் தம்மைக்
கழுவி அந்த நீர் கொண்டு தங்கள் பிள்ளை


உடல் நலமற்றிருப்பானுக்கு உள்ளே தந்தால்
உயிர் பிழைப்பான் என்றே தான் வேண்டி நின்றார்
மடமையிதை காந்தி யண்ணல் அவர்களிடம்
மாற்றி விட பல மணிகள் எடுத்துக் கொண்டார்
கடவுளினை நம்புங்கள் நோயைத் தீர்க்க
கட்டாயம் மருத்துவரைச் சென்று பாருங்கள்
மடமையிது மனிதர்கள் தம் கால் கழுவி
மருந்தென்று உண்பதென்று உணர்த்தி வென்றார்

குறட் கருத்து காமத்துப்பால்

உறங்கென்று கண்களிடம் இரந்து நின்றேன்
உறங்கவில்லை மீன்கள் போல புரளுதிங்கு
வரங் கொண்டு வந்த எந்தம் காதலரின்
வரவின்றிச் செய்வதிந்தக் கண்கள் ரெண்டும்
தினம் கொஞ்ச நேரம் மட்டும் உறங்கி விட்டால்
தேடி அவர் கனவினிலே வந்திடுவார்
இனம் இங்கே உயிரோடு இருப்பதனை
எடுத்துரைப்பேன் உதவியில்லை கண்கள் தம்மால்


குறள்

கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன் மன்.

பழம் பாடல் கம்பன்

மதுவினால் மயங்குவார்கள் மயங்கிய கூட்டத்துள்ளே
மயங்கினாள் மங்கை நல்லாள் மதுவினை அருந்தும் முன்னே
இதம் தரும் கண்கள் ரெண்டும் கொலை செயும் வேலைப் போன்றாள்
இடையதன் பெருமை சொல்லும் இனிய நல் மார்பைக் கொண்டாள்
பதமாக நிலவின் ஒளியைப் பளிங்கினுள் மதுவென்றேந்தி
இதழதில் சேர்க்கப் போனாள் எல்லோரும் நகைத்து நிற்க
மதுவுள்ளே போகு முன்பே நாணத்தை உட் கொண்டாளாம்
மது உள்ளே போனால் நாணம் மறைந்திடும் கம்பன் சொன்னான்

கம்பன்

புறம் எலாம் நகை செய்து ஏசப் பொரு அரு மேனி வேறு ஒர்
மறம் உலாம் கொலை வேற் கண்ணாள் மணியின் வள்ளத்து.வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய நிறைநத்தது போன்று தோன்ற
நறவு என, அதனை, வாயின் வைத்தனள், நாண் உட் கொண்டாள்

Thursday, June 26, 2008

உங்களுக்காய்

இரண்டாயிரம் தமிழர் உலகமெங்கும்
இருக்கின்றார் படிக்கின்றார் நன்றி சொல்வேன்
திரண்டார் எம் தமிழர்தம் அன்னை தமிழ்
தேடி வாழும் எனை நன்கு ஆதரிக்க
கரங் கொண்டும் சிரங் கொண்டும் வணங்குகின்றேன்
கவிதையிதால் அனைவரையும் வாழ்த்துகின்றேன்
உளங்கொண்ட பெருமனத்தீர் அன்பு கொண்டீர்
உங்களுக்காய்த் தொடர்ந்து நானும் எழுதிடுவேன்

தமிழாய் வாழ

தினந்தோறும் படிக்கின்றேன் அன்னை தமிழ்
தேக்கி வைத்துக் காத்துள்ள செல்வமெல்லாம்
மனம் கொண்டு படிக்கின்றேன் தீந்தமிழாள்
மயக்குகின்ற விதம் சொல்லும் கவிதையெல்லாம்
இனம் கண்டார் எல்லோரும் வாழ்த்துகின்றார்
இதயத்துள் வைத்தென்னைப் போற்றுகின்றார்
குணம் கொண்ட நல்லார்கள் அனைவரையும்
கும்பிட்டு வாழ்த்துகின்றேன் தமிழாய் வாழ

சோனியா காந்தி அவர்கள் இளங்கோவன்




குலாம் நபி ஆசாத்

தமிழ் ஞானத்தந்தை

இவரைப் போல் ஒரு துறவி தமிழுக்காக
இருந்தாரை எங்கேனும் பார்த்ததுண்டோ
தவம் என்றால் தமிழ் என்று வாழ்ந்திருந்த
தனியான பெருந் துறவி இவரேயன்றோ
சுகம் இந்தத் துறவி தமிழ் கேட்டிருத்தல்
சொந்தம் இவர்க் கன்னை தமிழ் மட்டும் மட்டும்
இகம் பரம் எல்லாம் இவர்க் கன்னை தமிழ்
எம்மவர்க்கோ அன்னை தமிழ் இவரே யன்றோ

தமிழ் ஞானத் தந்தை குன்றக்குடியாருடன்

கொழும்புக் கம்பன் கழகம் 2

கொழும்புக் கம்பன் கழகம்

வாரியார் சுவாமிகளுடன் தந்தையார்



வலது ஒரத்தில் தந்தையார் அடுத்து வாரியார்

ராஜா சர் முத்தையா செட்டியார்




இராம சுப்பிரமணிய ராஜா அவர்கள் அண்ணாச்சி கோசல்ராம் அவர்கள் இராஜாராம் நாயுடு
அவர்கள்

கண்ணதாசன் அவர்களோடு

அன்னை இந்திராவுடன்

உண்மை

உண்மையே தெய்வம் என்று சொல்லித் தந்தார்
உண்மை ஒன்றே வாழ்க்கை நெறி என்று சொன்னார்
உண்மையைப் போற்றிப் போற்றிப் பாடி நின்றார்
உண்மைக்கென்று வாழ்ந்தவரைக் காட்டி நின்றார்
உண்மை உண்மை என்று எங்கும் ஒதி நின்றார்
உண்மையாகப் பேசுகின்றார் என்றிருந்தேன்
உண்மை என்றால் பேசுதற்கு என்று மட்டும்
உணர்த்தி நின்றார் உண்மையுடன் ஊமையானேன்

குறட் கருத்து காமத்துப் பால்

தூதென வந்தார்க்கெல்லாம் துய்ய நல் விருந்தளித்தல்
மாதென வந்தார்க்கெல்லாம் மாபெருங் கடமையன்றோ
சூதிலாப் பெண்ணாள் நல்ல சுந்தரத் தோற்றம் கொண்டாள்
ஏது நான் செய்வேன் எந்த விருந்தினை நான் அளிப்பேன்
சோதனைஅய்யோ என்றாள் சுகமான இரவில் வந்தான்
காதலன் அவனைத் தந்த கனவிற்கு மங்கை நானும்
யாது தான் விருந்தாய்ச் செய்வேன் எப்படிப் போற்றி நிற்பேன்
தூதாக வந்த கனவு தூற்றாதா என்னை என்றாள்

குறள்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன் கொல் விருந்து

பழம் பாடல் கம்பன்

கள்ளொன்று கள்ளை உண்டு களித்தது அதனால் அவளின்
கண்களில் கள்ளே வந்து களியாட்டம் போட்டதங்கு
வெள்ளமாம் கள்ளை நல்ல விளிம்பிலே ததும்பக் கொண்டாள்
வியப்புடன் காணுகின்றாள் வெண்ணிலா கள்ளுக்குள்ளே
துள்ளியே பெண்ணாள் நிலவைத் துயரத்தை விடுக எனறாள்
துரத்திடும் பாம்புக்கஞ்சி கள்ளுக்குள் வந்தாயோ நீ
வெள்ளையே நிலவே வேண்டாம் கவலைகள் அஞ்சேல் என்றாள்
கள்ளினால் விளையும் இந்தக் காட்சியைக் கம்பன் தந்தான்

கம்பன்

களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஒர் கனங்குழை,கள்ளின் உள்ளாள்
வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி
அளித்தனன் அபயம் வானத்து அரவினை அஞ்சி வந்து
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள்

Wednesday, June 25, 2008

ஒரு வருடக்கல்லூரி மேலே 1 வது

பள்ளி மேலே இடமிருந்து 3 வது

கண்ணதாசன் அவர்களோடு

தோழர் மோகன் குமாரமங்கலம்

காந்தியம்

அன்புடையீர்.
வணக்கம். நேற்று திண்டுக்கல் காந்தி கிராமத்தின் காந்தி பல்கலைக் கழகத்தின் முன்னாள்
துணை வேந்தர் பெரியவர் மார்க்கண்டேயன் அவர்கள் என்னோடு உரையாடவும் என்னோடு
உணவருந்தவும் என் இல்லம் வந்திருந்தார். மிகச் சிறந்த காந்தியவாதி.காந்தியடிகள் குறித்து
நிறைய பேசிக்கொண்டிருந்தோம்.நேற்றைய தினம் நல்ல தினம்.
தங்கள்
நெல்லைக்கண்ணன்

வழி ஒன்றில்லை

நல்லாரை வணங்கி நிற்போம் சென்று கண்டு
நாள் தோறும் தொழுது நிற்போம் என்றும் எங்கும்
வல்லாராய் அவர் மட்டும் வாழ்வதற்கு
வழி செய்தார் ஆண்டவரும் பலரைக் காக்க
இல்லார்க்கு எல்லாமும் கிடைக்கச் செய்தல்
எளியோர்க்கு துணையாகி நன்மை செய்தல்
பல்லோர்க்கும் வழி காட்டல் பணிவு காட்டல்
பண்பெல்லாம் உயர்ந்தோங்க ஒளிர்ந்து நிற்றல்


அல்லார்கள் மிகப்பெரிய உயரங்களில்
அமர்ந்துள்ளார் தவறுகளைப் படிகளாக்கி
செல்வாரோ நல்லவர்கள் அவரிடத்தில்
சிரிப்புக் கிடமாகிக் கிடப்பார் முன்னர்
பல் துறையின் வித்தகர்கள் கூட இந்தப்
பழிப்புக்கு ஆளாகிப் போகினறாரே
அல்லாத வழிகளிலே செல்வார் எல்லாம்
அழிந்தொழி வார் அதை விட்டால் வழி ஒன்றில்லை

படி எல்லாம்

ஆங்கிலத்தைப் படியுங்கள் இந்தியெனும்
அம்மொழியும் படியுங்கள்
மேலும் மேலும் வேண்டும் மொழி
எல்லாமும் கற்றிடுங்கள்
வேண்டாமென்றே யாரும்
சொல்ல வில்லை
ஒங்கு புகழ்த் தாய் மொழியை
விட்டு விட்டு
உலகத்து மொழிகளையே
மதித்தீர் என்றால்
தீங்கு வரும் தாய் மொழிக்கு
என்ற எண்ணம்
தேராமல் இருப்பதுவும்
நியாயம் தானோ

திரு க்கு்ற்ட் கருத்து

தனை மறந்த நிலையினிலும் பிறர்க்குத் தீங்கைத்
தான் செய்ய ஒரு காலும் எண்ணிடாதீர்
அதை மறந்து தீங்கதனைச் செய்தீர் என்றால்
அறம் செய்யும் தீங்கதனைச் செய்தவர்க்கு
நிதம் இதை மனதினிலே கொண்டு விட்டால்
நிம்மதியாய் வாழ்ந்திடலாம் அதனை விட்டு
அறம் நம்மைச் சூழ்ந்து நின்று தீங்கைத் தரும்
அதை உணர்வீர் யார்க்கும் தீங்கு செய்ய வேண்டாம்

திருக்குறள்

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு

பழம் பா ட ல் கம்பன்

யாழுக்கும் குழலுக்கும் இனிமை ஈந்த
இடையென்ற ஒன்று இல்லா எழிலாம் பெண்ணாள்
பேழையெனும் வாய் திறந்தால் மழலை அதும்
பேச்சல்ல இசையாக வழங்கும் மின்னாள்
வாள் போன்ற கருங்குவளைக் கண்கள் தம்மை
வாயருகே கொண்டு போன மதுவிற்குள்ளே
தான் கண்டு வண்டு எனத் துரத்தினாளாம்
தருகின்றான் கம்ப நாடன் தருவித்தேன் நான்

கம்பன்
யாழ்க்கும்,இன்குழற்கும்,இன்பம் அளித்தன் இவை ஆம் என்ன
கேட்கும் மென் மழலைச் சொல் ஒர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்
தாள் தரும் குவளை தோய்ந்த தண் நிறைச் சாடியுள்,தன்
வாள்-கணின் நிழலைக் கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள்

Tuesday, June 24, 2008

அன்னை இந்திரா அவர்களுடன்

என் தம்பி சொக்கு் மதுரை

காமராஜர் விழாப் பார்வையாளர்

காமராஜர் விழா பார்வையாளர்கள்

காமராஜ் விழா

மதுரை காமராஜ் விழா

வாழ்ந்து பாரும்

கற்றவர் தங்களைப் பெற்றவர் போல் கொண்டு
காப்பாற்ற எவருமில்லை
கனிவான மொழி கொண்ட தெளிவான கவிஞரைக்
காண்பதற் காருமில்லை
பெற்றவர் காட்டிய பெரு வழி என்பது
பிரிவன்றி ஏதுமில்லை
பிரிந்திட்ட பிள்ளைகள் உணர்ந்திடும் பொழுதிலோ
பெற்றவர் உயிர்களில்லை
சட்டென உணர்ந்திங்கு வாழ்வதைத் தொடங்குவீர்
சத்தியம் கொண்டு வாழ்வீர்
சரித்திரமாகி உம் வாழ்வது பொலியுமே
சாதித்து வெல்க நீரே



விட்டிடும் பொருளல்ல பாசமும் அன்புமே
விலகிப் பின் அழுது நிற்பீர்
விலகாத நட்பையும் அன்பையும் கூட நீர்
விளங்காமல் விலகிச் செல்வீர்
சட்டென எதையுமே உணராமல் உணராமல்
சரிகின்றீர் நொந்து நொந்து
சரியான அறிவென்றால் அன்பென உரக்கவே
சாற்றுது குறளும் இங்கே
அறியாமல் இல்லை நீர் அறிகின்றேன் நன்கு நான்
அறிந்ததைவாழ்வில் கொள்ளும்
அதன் பின்னர் உம்மையே ஆண்டவன் தம்முடை
அன்பனாய்க் கொண்டு வாழ்வான்

குறட் கருத்து

கம்பன் அவன் குறள் கற்று கரைந்ததைத்தான்
காட்டி நின்றேன் கம்பனது பாடல் தன்னில்
நம்பி யவன் கொண்ட குறள் இங்கே சொல்வேன்
நானிலத்தீர் தமிழ் கொணடே மகிழ்ந்திடுவீர்
செம்பு நிறப் பெண்ணொருத்தி வீட்டில் என்றும்
சீராகச் சூடாக எதையும் உண்பாள்
அம்பு விழிப் பெண்ணவளின் உள்ளே ஒரு
ஆணழகன் நுழைந்தானாம் குடி கொண்டானாம்


வம்பு வந்து சேர்ந்ததவள் வீட்டிற்குள்ளே அன்னை
வடிவழகுப் பெண்ணவட்கு அன்பு சேர்த்து
செம்பு நிறைப் பசும்பாலைக் காய்ச்சி அவள்
சீர் அறிந்து சூடாகக் கொண்டு தந்தாள்
கொம்பு முலைப் பெண்ணாளோ அருந்தவில்லை
கொண்டு தந்த தாயார்க்குப் புரியவில்லை
அன்பு கொண்டு உள்ளிருக்கும் காதலனோ
அச்சூட்டைத் தாங்கானென்றருந்தவில்லை


குறள்
நெஞ்சத்தார் காதல் அவராக.வெய்து உண்டல்
அஞ்சுதும் வே பாக்கு அறிந்து

பழம் பாடல் கம்பன்

பறவைகளால் நிறைந்திருக்கும் அழகு ஏரி
படபடக்கும் கண்ணழகுப் பெண்ணாள் கண்டு
உறைவிடத்திற்குள்ளேயே மீன்களெல்லாம்
ஒளிந்துகொள்ள முயல்கிறதாம் நாணம் கொண்டு
உறையை விட்டு வெளியில் வந்த வாளைப் போலே
உயிர் பறிக்கும் வேலை செய்யும் அந்தக் கண்கள்
செறி அழகுக் கூந்தலிலே சேர்வதற்காய்
செய்தவத்தின் தேன் மலர்கள் கூட்டம் அங்கு

மது அருந்தி நிற்கின்றார் கூட்டத்திற்குள்
மங்கையுமே நிற்கின்றாள் என்ற போதும்
மது அருந்தவில்லையவள் ஆமாம் ஆமாம்
மனதிற்குள் இருக்கின்ற காதலனோ
மது அருந்தும் பழக்கமது இல்லான் என்று
மங்கை நன்கு உணர்ந்ததனால் அருந்தவில்லை
அது அவனுக்கு ஒவ்வாதென்றறிந்ததனால்
அருந்தவில்லை என்கின்றான் கம்பநாட்டான்

கம்பன்

புள் உறை கமல வாவிப் பொரு கயல் வெருவி ஒட
வள் உறை கழிந்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள்
கள் உறை மலர் மென் கூந்தல் கனி இள மஞ்ஞை அன்னாள்
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள்

Monday, June 23, 2008

பட்டினத்தார் ஒலிக்குறுந்தகடு

Get this widget | Track details | eSnips Social DNA

ஒழித்து விடும்

ஆசைகள் அதிகமாய் ஆகிட ஆகிட
அலைகிறார் அங்கும் இங்கும்
அதனாலே சாமியார் கூட்டமும் கூடியே
அசிங்கமாய் ஆடுது இங்கே
பூசைகள் வேசங்கள் பொம்பளைக் கூட்டங்கள்
புரியாமல் போகுதிங்கே
புரிந்த பின் சாமியார்க் கூட்டங்கள் படும் அடி
புதிதில்லை நிறைய இங்கே


அன்னையும் தந்தையும் சேர்ந்திட வந்திட்டோம்
அனைவரும் அதுவே உண்மை
ஆர்ப்பாட்டம் போர்ப்பாட்டு எதுவுமேயில்லாமல்
அமைதியாய் வாழ்வோமிங்கே
தன்னை உணர்ந்தவர் பெண்ணை உணர்ந்தவர்
தரமாக வாழ்ந்து நிற்பார்
தாவிக் குதித்திட ஆசைகள் கொண்டவர்
தடுமாறி வீழ்ந்திருப்பார்


உழைப்பதில் வாழ்ந்திடப் பழகியே நின்றவர்
ஊர் மெச்ச வாழ்ந்திருப்பார்
ஊதாரி வாழ்க்கையைத் தேர்ந்தே எடுப்பவர்
உளம் நொந்து சாய்ந்திருப்பார்
அழைத்திடத் துணைக்கென வந்திட நமக்கொரு
ஆண்டவர் உண்டு இங்கே
ஆகாத சாமியார் கூட்டங்கள் போற்றிப் பின்
அழுவதை நிறுத்தும் இங்கே

குறட் கருத்து காமத்துப் பால்

உலகெங்கும் ஆண்களும் பெண்களும் வாழ்கின்றார்
உண்மையில் வாழ்கின்றாரா
சிலர் மட்டும் வாழ்கின்றார் பலர் வாழவில்லையாம்
சிறப்பான செய்தி ஒன்றை
மலர் கொண்டு சொல்கிறார் மனம் கொண்ட வள்ளுவர்
மனத்திலே கொள்ள வேண்டும்
பலர் வாழ்வின் உண்மையைப் பளிச்செனச் சொல்கிறார்
பாடமாய்க் கொள்ள வேண்டும்

உடல் என்ற ஒன்றினை உணர்வோடு உள்ளதாய்
உணர்ந்தார்கள் வாழுகின்றார்
உளம் கொண்ட மங்கையர் உடல் வேண்டி நிற்பதை
உணராதார் வீழுகின்றார்
கடல் போன்ற காமத்தின் ஒரு துளி காணாதார்
கடல் போல அதிகம் உள்ளார்
கண்டவர் மிகச் சிலர் மிகச் சிலர் அவர் மட்டும்
காதலால் வெல்லுகின்றார்


குறள்

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார்

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

நீர் நிறைந்த ஏரியிலே பெண்களெல்லாம்
நீண்ட நேரம் ஆடி நின்ற ஆட்டமதில்
சீர் நிறைந்த கண்களெல்லாம் சிவப்புறவே
சிவந்தவாய் நிறம் மறைந்து வெளுப்புறவே
வார் கொண்ட மார்பு கொண்ட சந்தனத்தை
வளர் அழகு மார்பிலகொணட குங்குமத்தை
நீர் கலைத்து நின்றதவர் காதலர் போல்
நிலை குலைய வைத்ததவர் சீலையினை



காதலர்கள் சேரும் நல்ல கலவியிலே
கலைவதெல்லாம் கலைந்ததந்த நீர் நிலையில்
போதமதை இழந்து அங்கே மங்கை நல்லார்
புகுந்து புகுந்து ஆடியதை கம்பன் இங்கு
ஆர்வமுடன் சொல்லுகின்றான் நீர் நிலையும்
ஆடவர் தம் தொழிலையெல்லாம் செய்ததாக
பாடலிதைத் தருகின்றேன் படித்துப் பாரும்
பாவி மகன் கம்பனையே புரிந்து கொள்ளும்



கம்பன்
செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்புற
மெய் அராகம் அழிய , துகில் நெக
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே

Sunday, June 22, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

காதலன் தான் என்ன செய்ய பொருளை ஈட்டக்
கடல் கடந்து செல்லுதற்கு ஆசை கொண்டான்
பேதையிடம் சொல்லுதற்கு சென்று நின்றான்
பேச எங்கு விட்டாள் அந்தப் பெண்ணின் நல்லாள்
ஓசைக் கடல் தாண்டி நீயும் செல்லும் போதே
உயிர் இழந்து எந்தன் உடல் வீழ்ந்து போகும்
ஆசை அது அவ்வளவு நெஞ்சுக்குள்ளே
அறிந்தால் நீ பிரிவாயா அன்பு அத்தான்


நாசம் அற்று நீ வாழ வாழ்த்துகின்றேன்
நாள் தோறும் உன்னை நினைத்தே போற்றுகின்றேன்
வாச மலர் எனை விட்டுப் பிரிவதென்றால்
வாய் திறக்க வேண்டாம் நீ சென்று விடு
ஆசையுடன் உனை அனுப்பி செல்வம் சேர்த்து
அங்கிருந்து வரும் வரையில் காத்திருக்கும்
நேசமுள்ள கல் மனத்துப் பெண்ணிருந்தால்
நீங்குவதை அவரிடத்தில் சொல்லிச் செல்லு


குறள்


செல்லாமை உண்டேல் எனக்கு உரை ' மற்று நின்
வால் வரவு வாழ்வார்க்கு உரை

நமக்குள்ளே மகிழ்ந்திடுவார்

வயிறாரச் சோறிடுங்கள் ஏழையர்க்கு
வாழ்த்தும் அவர் முக மலர்ச்சி பார்த்திடுங்கள்
உயிராரை வாழ வைக்கும் உணவு எல்லாம்
உடன் இறைவன் தனைச் சேரும் மகிழ்ந்திடுவார்
அயலார்க்கும் அன்பு செய்து அணைத்திடுங்கள்
ஆண்டவரைச் சென்றடையும் அந்த அன்பு
முயல்வீரே அன்பு ஒன்றே பண்பு என்று
முதல்வன் இறை நமக்குள்ளே மகிழ்ந்திடுவார்

குறட் கருத்து காமத்துப் பால்

கண் நிறைந்த ஆணழகன் தன்னை அந்தக்
கனி மொழியாள் கண்டு விட்டாள் வேறு என்ன
தன்னுணர்வு எல்லாமே அவனே யாகி
தனியாகித் தனக்குத் தான் பேசுகின்றாள்
கன்னியவள் இடை சிறியதென்று காட்டக்
கனத்திருக்கும் மார்பகங்கள் துன்பம் கொள்ள
அன்னவனை நினைத்தங்கு ஏங்கி நின்றாள்
அவன் மீது குற்றம் ஒன்றை ஏற்றுகின்றாள்



பொன்னானை மனம் கொண்டு மகிழும் பெண்ணாள்
பொறுப்பாகக் கேட்கின்றாள் இனிய கேள்வி
கண்ணானான் மனத்திற்குள் பெண்ணாள் போக
கடுந்தடையை விதித்துள்ள அந்தக் கள்ளன்
பெண்ணாளின் நெஞ்சுக்குள் மீண்டும் மீண்டும்
பேரலையாய்ப் புகுவானாம் நாணம் இன்றிக்
கண்வாளாய்க் கொண்ட மகள் கேட்டு நின்றாள்
காமத்துப் பால் தரும் அழகுக் காட்சியிது

குறள்
தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார் கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல்

காத்து நிற்பார்

விபச்சாரம் என்கின்றார் உலகமெங்கும்
வீணாகப் பெண்களையே கொல்லுகின்றார்
அபச்சாரம் அவர் மட்டும் செய்தார்ப் போல
ஆடுகின்றார் ஊடகங்கள் அனைத்திலுமே
உடல் விற்றுப் பிழைக்கின்ற பிழைப்பை விட
உயிர் விட்டால் சிறப்பென்றும் சொல்லுகின்றார்
உடல் பெற்றுச் சுகிக்கின்ற ஆடவரோ
உயிரோடு வாழ்வாராம் மானமின்றி


அழகான பெண்ணல்ல அழ்கேயற்ற
அவர் கூட பொதுப் பணிக்கு வந்து விட்டால்
குழைகின்றார் ஆடவர்கள் அவரையுமே
கொஞ்சி அவர் வாழ்க்கையினைக் குலைக்கின்றாரே
பழகுகையில் கற்பெல்லாம் பொய்மை என்றே
பசப்புகின்றார் பெண்களுக்கு விடுதலையே
உளம் கவர்ந்த யாரோடும் கலந்து கொள்ளல்
உடல் அல்ல கற்பென்றும் ஓதுகின்றார்


சிலர் இதனைச் செய்கின்றார் பலரோ இந்தச்
சிந்தனையை மனத்துக்குள் கொள்ளுகின்றார்
இலரான பெண்கள் வந்து உதவி கேட்டால்
இல்லையென்று சொல்லாமல் உதவுதலே
மலரான அவர் தம்மை கசக்குதற்காய்
மனிதர் போன்றே நடிப்பார்கள் செய்யும் வேலை
உளம் கொண்ட நல்லவரோ பெண்கள் தம்மை
உயர் நட்பாய்க் கொண்டவரைக் காத்து நிற்பார்

குறட் கருத்து

கையேந்தி நிற்கின்ற ஏழையர் முன்
கையேந்தி நிற்கின்றார் வள்ளுவரும்
பொய்யாகப் பொருள் சேர்த்து வீட்டினுள்ளே
பூட்டியே அதைக் காவல் காப்பார் முன்னே
அய்யா நீர் கையேந்தி நின்றிடாதீர்
அடியேனின் வேண்டுகோள் என்று சொல்லி
கையேந்தல் வறுமையால் என்ற போதும்
கையேந்தும் சரியான இடத்தில் என்று



குறள்
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

ஆடைக்குள் அடங்காத அகன்ற அல்குல்
அய்யய்யோ மார்பகங்கள் ஐயோ ஐயோ
ஜாடைக்கு மலைகள் என்று சொன்னால் கூட
சரியாமோ தவறாமோ சொல்லி வைப்போம்
கூட நிற்கும் ஆடவரின் தோள் மலை போல்
கூடுதற்காய் நீர் நிலைக்குள் நெருங்குகின்றார்
பாடு படும் நீர் நிலையின் பாடதனைப்
பாடுகின்றான் கம்பனெனும் பாவி மகன்

எல்லாமே பெரிதாக இருப்பதெல்லாம்
இறங்கி அந்த நீர் நிலையை நெருக்கும் நேரம்
அல்லாடிப் போகிறதாம் நீர் நிலையும்
ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை அன்றே கம்பன்
வல்லானாய்ச் சொல்லுகின்றான் வியந்து நின்றேன்
வடிந்திடுமாம் அவர் எடையின் நீர் வெளியே
சொல்லுக்குச் சொல்லடுக்கித் தமிழாம் தாயைச்
சொக்க வைக்கும் கம்பனது பாட்டைப் பார்ப்போம்

கம்பன்

மலை கடந்த புயங்கள் . மடந்தைமார்
கலை கடந்து அகல் அல்குல் .கடம் படு
முலைகள் தம்தமின் முந்தி நெருங்க லால்
நிலை கடந்து பரந்தது நீத்தமே

Saturday, June 21, 2008

வண்ணதாசன் என்ற கல்யாணிக்கு

பாடல்கள் அனைத்துமே ஒன்றென்   றுணர்ந்துளேன்
பக்குவத் தமிழினாலே
படர்ந்திடும் காற்றிலே மிதந்திடும் சுரங்களும்
பாடலின் இசையினாலே
மூச்சுக்கு இடையிலே முன்னேது பின்னேது
முடிவதன் கையில்தானே
முதியவர் கூட்டமும் கண்ணாடி முன் நிற்கும்
முன் நிலை எண்ணலாலே


ஆடிடும் கூட்டமும் இட வலம் காட்டினும்
அடி வயிறு நடுவில்தானே
அழ்கான கன்னிமார் கண்ணாடி முன் நிற்றல்
அனுபவம் உணரத்தானே
கூடிடும் கூட்டத்தில் தேர் வடம் பிடித்திட
கூட்டாளி நீயே என்றால்
கொடுப்பினை அம்மையும் அப்பனும் கொண்டனர்
கூடி நாம் தேரிழுக்க

வண்ணதாசன் என்ற கல்யாணிக்கு

குழலுக்குத் தொளையா நீ எந்தன் தோழா
குவி இதழின் உயிர்க் காற்றே நீதான் நண்பா
கடலுக்குள் முத்தாக உன்னைக் கொண்டேன்
கவி வான வில்லின் நிறம் எல்லாம் நீயே
மண் மீது பசும்புல்லா எந்தன் நண்பா என்
மனத்திற்குள் இசையாக நீயே உள்ளாய்
என்னோடு என்றும் நீ இருப்பாய் இல்லை
இறந்து விட்டான் கண்ணன் என்ற சேதி கேட்பாய்

பழைய புகைப்படங்கள் 1

தில்லித் தமிழ்ச்சங்கம்

சென்ற வருடப் புகைப்படங்கள் 19

சென்ற வருடப் புகைப்படங்கள் 18

சென்ற வருடப் புகைப்படங்கள் 17

சென்ற வருடப் புகைப்படங்கள் 16

சென்ற வருடப் புகைப்படங்கள் 15

சென்ற வருடப் புகைப்படங்கள் 14

சென்ற வருடப் புகைப்படங்கள் 13

சென்ற வருடப் புகைப்படங்கள் 12

சென்ற வருடப் புகைப்படங்கள் 11

சென்ற வருடப்புகைப்படங்கள் 10

சென்ற வருடப்புகைப்படங்கள் 9

சென்ற வருடப் புகைப்படங்கள் 8

சென்ற வருடப் புகைப்படங்கள் 7

சென்ற வருடப் புகைப்படங்கள் 6

சென்ற வருடப் புகைப்படங்கள் 5

சென்ற வருடப் புகைப்படங்கள் 4

சென்ற வருட புகைப்படங்கள் 3

எனது சென்ற வருட புகைப்படங்கள் 2

எனது சென்ற வருட புகைப்படங்கள்

எளிமையும் நட்பும்

அன்புடையீர் .
வணக்கம்.நேற்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திருப்பூர் சுப்பராயன்
அவர்கள் என்னைத் தேடி எனது இல்லம் வந்தார் . தேடி என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் எனது நாற்பது ஆண்டு கால அரசியல் அனுபவம்.
மக்கள் பிரதிநிதிகளான அவர்கள் மன்னர்களாகி விடுவர்.ஆனால் தோழர்
சுப்பராயன் அநியாயத்திற்கு மக்கள் தொண்டராகவே இருந்து தீர்க்கிறார் .
முப்பத்தைந்து ஆண்டு நட்பு .அன்று தவத்திரு தமிழ்த்தந்தை குன்றக்குடி அடிகளார்
தலைமையில் மதுரையில் நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயிலில் பட்டிமன்றம்
இன்றைய மனித குல மேம்பாட்டிற்கு வழி காட்டச் சிறந்தது காந்தீயமா
குறளீயமா மார்க்சீயமா காந்தீய அணிக்கு நான் தலைமை முதுபெரும் காந்தீய
வாதியான இன்றைய தீக்கதிர் ஆசிரியர் அண்ணன் மாயாண்டி பாரதி அவர்கள்
என் அணியில் குறளீய அணிக்கு தலைவர் அண்ணன் விடுதலை விரும்பி
அவர் அணியில் இனிய சகோதரர் பழகருப்பய்யா மார்க்சீய அணிக்கு அண்ணன்
தா.பாண்டியன் தலைவர் அவருக்கு அடுத்து நண்பர் சுப்பராயன் . அன்று கொண்ட
அன்பை இன்றும் தொடரும் அவர் அன்பினைஎன் சொல்வேன் . மக்கள் பிரதிநிதிகளான இவர்களை மக்கள் தான் சென்று சந்திக்க வேண்டும் .ஆனால்
சுப்பராயன் அவர்கள் அதே எளிமை அன்பு பண்புகளோடு இருக்கின்றார் என்பது
போற்றுதலுக்குரியது அந்தப் பட்டிமன்றத்தில் ஒரு சிறப்பு .அது வரை எல்லா
இடங்களிலும் மார்க்சீயத்திற்கே தீர்ப்பளித்த அடிகளார் அன்று காந்தீயத்திற்கு
தீர்ப்பளித்தார் .சுப்பராயன் அவர்களோடு நண்பர் முத்துராமலிங்கம் மாவட்டக்
கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகவேல் காசி அவர்களும் வந்திருந்தனர் .நேற்று மன நிறைவாய் இருந்தேன்.சுப்பராயன் அவர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றி சொல்வது எனது பெருங்கடமை என்று உணர்கின்றேன்.

வாய்ப்பை நல்கும்

தேரோட்டம் நடந்ததெங்கள் ஊரில் நன்கு
தெருவடைக்க ஊரடைக்க மக்கள் கூட்டம்
காரோட்டம் தனையெல்லாம் நிறுத்தி விட்டு
கண்ணுதலான் தேரோட்டம் நடத்தி நின்றோம்
போராட்டம் பொச்சரிப்பு எதுவும் இன்றி
பொதுமக்கள் ஒன்றாக இணைந்து நின்றார்
சீராட்டி இறைவனையும் கொஞ்சுகின்ற
சிறப்பிந்த தமிழ்ரினச் சிறப்பு அன்றோ


ஆனி மாதம் தேரோட்டம் நடத்தி விட்டோம்
ஐப்பசியில் திருமணத்தை நடத்தி நிற்போம்
நானிலத்தில் அம்மையோடு அப்பனுக்கு
நல்ல விதம் பிள்ளைகளே நடத்தி வைக்கும்
காணுதற்கு அரிதான திருமணத்தைக்
காண்பதற்கு வருக என உமை அழைத்தோம்
பேதமின்றி அனைவருமே ஒன்றாய்க் கூட
பெருமானின் திருமணம்தான் வாய்ப்பை நல்கும்

குறட் கருத்து

அறிவார்ந்த அறிவுடையார் தமக்கு எல்லாம்
அறிவு வழி தருகின்றார் வள்ளுவனார்
செறிவான அறிவுடையார் முன்னர் சென்றால்
சிறப்பான உம் அறிவைக் காட்டி நில்லும்
அறிவற்றார் மத்தியிலே சென்று விட்டால்
அறிவற்றுச் சுண்ணாம்பாய் ஆகி நில்லும்
தெளிவான வழி சொன்னார் வள்ளுவரும்
திரு நாட்டில் நிம்மதியாய் அறிஞர் வாழ

குறள்

ஒளியார் முன் ஒள்ளியராதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல்

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

நீராடுகின்றார் பெண்கள் நெருங்கி தம் அன்பரோடு
போராட்டம் அல்ல நல்ல பூவாட்டம் ஆட்டம் ஆட்டம்
சீரான இசையே பேச்சாய் சிறப்புற வழங்கும் பெண்ணாள்
சிவந்த நல் இதழோ   பவளம் தாமரைசேர்ந்த ஒன்றாம்
கூரான வாளும் நல்ல குவளையும் சேர்ந்த கண்கள்
ஆருமே இல்லையென்னும் கரும்பெனும் இடையாம் அந்தச்
சீமாட்டி கேட்டாள் உள்ளம் சீராட்டும் காதலானை
நீராட்டுக்குள்ளே கம்பன் நீராட்டும் அழகுச்செய்தி


கயலெனக் கண்கள் கொண்டாள் கயல்களை நீரில் கண்டாள்
கண்களால் கொண்ட கொன்ற காதலன் தன்னைக் கேட்டாள்
புயலெனச் சொல்வீர் கண்ணைப் பூவென்றும் சொல்வீர் மீண்டும்
தயவில்லாக் கண்கள் என்றும் தாங்கியே நிற்பீர் இங்கோ
இயங்கிடும் குளத்தின் கண்கள் எப்போதும் ஓடி ஓடி
இளைப்பாறல் இன்றிச் சுற்றும் எழிலினைப் பாரும் என்றாள்
மயங்கிய பெண்ணாள் மீன்கள் குளங்களின் கண்கள் என்றாள்
மனம் போல ஓடும் கண்கள் என்றாங்கு மயங்கி நின்றாள்


கம்பன்
பண் உளர் பவளத் தொண்டை பங்கயம் பூத்தது அன்ன
வண்ண வாய் ,குவளை வாள் கண் மருங்கு இலாக் கரும்பின் அன்னார்
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர்த் தடங்கட்கெல்லாம்
கண் உள ஆம் கொல் என்று கணவரை வினவுவாரும்

Friday, June 20, 2008

எங்குமே வெல்லுங்கள்

அன்பெனக் காட்டியே என்னை மயக்கியே
அடிமையாய் வைத்திருந்தார்
அறிந்ததும் உணர்ந்ததும் பிரிந்தனர் நான் மட்டும்
அன்பையே காட்டி நின்றேன்
தன் நிலை தெரிந்தனன் என்றதும் எனை விட்டு
தள்ளியே விலகிச் சென்றார்
தள்ளியே சென்றவர் கள்ளம் மறந்து நான்
தமிழாகி ஆதரித்தேன்

அர்த்தமே அற்ற பல் ஆசைகள் அல்லவோ
அன்பினை அழிக்கின்றது
அன்பதைக் கொன்றேனும் ஆசைகள் காத்திட
அடிமனம் துடிக்கின்றது
நண்பர்கள் போவதும் வருவதும் அதனால் தான்
நாள் தோறும் நடக்கின்றது
நானிலம் உணர்ந்ததும் அறிந்ததும் மறந்திதே
நாடெங்கும் நடக்கிறது

இன்பமே கொள்ளுங்கள் எங்குமே வெல்லுங்கள்
இதயத்தைத் திறந்திடுங்கள்
எல்லாமே நல்லதே நடந்திடும் வாழுங்கள்
இருப்பதே போதுமென்று
துன்பமே இல்லை இம் மானிட வாழ்வினில்
தூயநல் அன்பிருந்தால்
தொலை தூர நாட்டிலும் உம் புகழ் ஓங்கிடும்
தொண்டினைத் தொடர்ந்து செய்தால்

நான் என்ன செய்வேன்

ஊரெல்லாம் கூடியே எனை வாழ்த்தி நிற்கையில்
உள்ளத்துள் அச்சம் வருதே
உயிரான தமிழ் அவள் உடன் என்றும் இருப்பதால்
உடன் அச்சம் விலகி விடுதே
தேரோடும் வீதிகொள் திரு நெல்லைப் பதியிலே
தீந்தமிழ் மாந்தி வாழ்ந்தேன்
தினம் அந்த மாத்தமிழ் என்னையே வாழ்த்திட
தீங்கின்றி வாழ்ந்து வென்றேன்

காத்திடக் கலந்திட உதவிட எனக்கென்று
கண்ணெனும் தமிழருண்டு
கவலைகள் பகிர்ந்திட தீர்த்திட எனக்கிங்கு
கல்யாணி நண்பருண்டு
பார்த்திட்ட அனைவரும் நண்பர்கள் என்றுதான்
பழகி நான் உவந்திருந்தேன்
பழகிய சிலரிங்கு உணர்ந்திடவில்லையே
பாவி நான் என்ன செய்வேன்

குறட் கருத்து

அற வாழ்க்கை தன்னையே அகமகிழ்ந்து ஆளுவார்
அன்பிலே வாழ்ந்து நிற்பார்
புற வாழ்க்கை அவலங்கள் தன்னையே கண்டவர்
பொறுக்காது நாணி நிற்பார்
ஒரு வேளை வாழ்க்கையில் துன்பமே சூழினும்
உயிரையே விட்டு வாழ்வார்
திருவான நாணத்தை ஒரு போதும் விட்டிடார்
தெய்வமே போற்ற வாழ்வார்


திருக்குறள்

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப் பொருட்டால்
நாண்துறவார் நாண ஆள்பவர்

பழம்பாடல் புதுக்கவிதை கம்பன்

நீண்ட அப்பார்வை நஞ்சே நெருங்கிட முடியார்க்கெல்லாம்
நிலைத்திடும் அமுதம் அந்த நீள்விழிப் பெண்ணாள் சொல்லே
காண்தகு அழகுப் பெண்ணாள் கைகளில் மதுவை ஏந்திக்
களித்திட்டாள் கோப்பைக்குள்ளே தன்னையே கண்டாள் அங்கே
வாள் நுதல்ப் பெண்ணாள் அந்த வடிவத்தை வேறோர் பெண்ணாய்
வகை செய்து அவளையும் வா மது உண்போம் என்கின்றா ளாம்
ஆள் தூக்கும் மதுவால் வந்த அறியாமை இதனைப் போல அறியாமை வேறு இங்கு யாரிடம் உண்டு சொல்வீர்

கம்பன் பாடல்

விடன் ஒக்கும் நெடிய நோக்கின்
அமிழ்து ஒக்கும் இன்சொலார்தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டோ
வாள் நுதல் ஒருத்தி காணா
தடன் ஒக்கும் நிழலைப் பொன் செய்
தண் நறுந்தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே
உண்ணுதி தோழி என்றாள்

Thursday, June 19, 2008

வறுமை துணை

தமிழுக்காய் வாழுகின்றார் தமிழர் நாட்டில்
தமிழாய்ந்து வாழ்கின்ற தமிழர் பல்லோர்
அவருக்கோ உதவுவதற்கு யாருமின்றி
அவதிகளே படுகின்றார் என்ற போதும்
தமிழுக்காய் வாழுகின்ற பெருமை கொண்டே
தன் நலமே இல்லாமல் வாழுகின்றார்
எவர் உதவப் போகின்றார் இவருக்கிங்கே
இனிய தமிழ் அன்னை துணை வறுமை துணை

குறட் கருத்து

ஏய்ப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து
எத்தனையோ கோடிகளைச சேர்த்து வைப்பார்
வாய்ப்பதெல்லாம் தமக்கென்று வளைத்திடுவார்
வகை வகையாய்ச சேர்த்திடுவார் உணர மாட்டார்
போய் அதனை மறைத்து வைத்தல் பச்சை மண்ணில்
பொதிந்து வைத்த பாத்திரத்தில் தண்ணீர் தன்னை
ஊற்றி வைத்தல் போலாகும் ஒழுகிப் போகும்
உதவாது உதவாது உணர்வீர் நீரே


திருக்குறள்

சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீ இ யற்று

பழம்பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

கண்களினால் வருகின்ற துன்பம் இது
கண்டதிது ஒரு நாள்தான் சோழனையே
பெண் எந்தன் பாடு பெரும் பாடாய்ப் போச்சு
பேச ஒன்றும் இல்லை எந்தன் வாழ்க்கையிலே
கண்ணிரண்டும் நன்றாக உறங்கி விட
கனவில்லை சோழனையே காண்பதற்கே
கண்ணான சோழன் அவன் எதிரில் வர
காண்பதில்லை நாணத்தால் கண்ணிரண்டும்

பெண்ணவளின் வருத்தமெல்லாம் கடலுக்குள்ளே
பெரும் அழகு மரக்கலங்கள் கொண்ட சோழன்
விண்ணுயரப் பெரும் புகழைக் கொண்டு ஓங்கும்
வீராதி வீரன் அவன் செங்கோலன்றோ
புண்பட்டுப் போகிறது பெண்ணின் உள்ளம்
புரியாத மன்னன் என்று பலரும் தூற்ற
கண் செய்த தவறுகளால் மன்னன் அன்றோ
கவலைகளுக் காளாவான்என்று நொந்தாள்



முத்தொள்ளாயிரம்

கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த
நனவினுள் முன் விலக்கு நாணும் - இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப பெருமானார்
செங்கோல் வடுப்படுப்ப ச சென்று

Wednesday, June 18, 2008

குறட் கருத்து

அழகுக்கே அழகாகும் அழகுப் பெண்ணாள்
அவள் போல அழகில்லை ஊரில் எங்கும்
உளம் கொண்டோர் மண வாழ்வில் பெண்ணவளை
உரிமை கொண்டு வாழ வைப்பார் யாருமில்லை
கிழமாகி அவ் வழகு அழிந்த தாங்கு
கேட்பதற்கு நாதியின்றி ஒழிந்ததது
வளம் கொண்டோர் தம் பொருளை மறைத்து வைத்து
வழங்காமல் அது அழிந்து ஒழிந்தாற் போல


திருக்குறள்

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள் மூத் தற்று

காந்தியடிகள் வாழ்வில்

               இங்கிலாந்து மன்னரையே சந்திக்கத்தான்

                   இந்தியத் தாய் தலை மகனாம்  காந்தி சென்றார்

               அங்குள்ளோர்  மன்னரையே சந்திக்கவே

                   ஆடையுள்ள   ததை  அணிய வேண்டும் என்றார்

               பங்கமில்லா ஆடை   எந்தன் பருத்தி ஆடை

                   பாரதத்தின்  ஆடை அதே  போதும் என்றார்

               இங்கிலாந்து மன்னர் அதை ஏற்றுக் கொண்டார்

                    எளிமையினால்  காந்தி அங்கே வெற்றி கண்டார்

      2/     மன்னரையே சந்தித்து  வெளியில்  வந்தார்

                     மகாத்மாவாம் காந்தியண்ணல் செய்தியாளர்

               என்ன இந்த ஆடை  இதை  ஏன் அணீந்தீர்

                      இவ்வளவு குறைவாக அய்யோ என்றார்

               கன்னல் மொழிக் காந்தி சொன்னார் எனக்கும் சேர்த்து

                       கனமான ஆடைகளை  உங்கள்  மன்னர்

               தன்னுடம்பில் அணிந்துள்ளார்  அதுவே போதும்

                       தரம் இதுவே எமக்கு இது போதும் என்றார்                  

பழம் பாடல் புதுக்கவிதை

            வெண் கொற்றக்  குடையின்  கீழ் விண்ணவரும் வாழ்ந்திருக்க

                  வெற்றி கொண்ட   பாண்டியனும்  ஆண்டிருக்க

             தண் மாலை பாண்டியனைத் தழுவி   அங்கே மகிழ்ந்திருக்க

                   தனியாக நான்  மட்டும் ஏங்கி நிற்க

            கண் கொண்ட  காரணத்தால் கண்டதனால் காத்திருக்க

                   கவலை  மட்டும் என் மனதை ஆட்டி நிற்க

            பெண் பாட்டைச் சொல்லுதற்கு  யாருமில்லை அவன் ஆட்சி

                    பெருமை   நீதி கொண்ட ஆட்சி என்பதனால்

                                     முத்தொள்ளாயிரம்

                    தானேல் தனிக்குடைக் காவலனால்  காப்பதுவும்

                    வானேற்ற வையகம் எல்லாமால் -  யானோ

                    எளியேன் ஒர் பெண் பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்

                    அளியானேல் அன்றென்பார்  ஆர்

            

Tuesday, June 17, 2008

15ம் தேதி

   அனபுடையீர். வணக்கம்.15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை  ஈரோட்டில் மருத்துவர்

சுற்றுப் புறச் சூழல்ப் பற்றாளர்  ஜீவா  அவர்களின் அழைப்பை ஏற்று 40 மருத்துவர்

களும் 40 பொது மக்களுமாகச் சேர்ந்து நடத்தும் புற்று  நோய் மருத்துவமனையின்

ஆண்டு விழாவில்  உரை  நிகழ்த்தச் சென்றிருந்தேன்.அருமையான மக்கள்.மூன்றுமணி நேரம்  உரை நிகழ்த்தினேன்.இறை வாழ்த்துப் பாடிய  பிரசாத் என்ற பள்ளி

மாணவனின் குரலும்  பாடிய  முறையும் என்னை மிகவும்  கவர்ந்தன.அவனை

பல படப் பராட்டினேன்.மருத்துவர் ஜீவா ஒரு  மாமனிதர்.ஊருக்கு ஒரு மனிதர்

மருததுவர்  ஜீவா அவர்களைப் போல வேண்டும்.வாழ்க  தமிழுடன்.நன்றி

உடல் நலம்

        தாய் தந்தை  வழியினிலே அன்பு வரும்

                தரமான  கல்வி வரும் நோயும் வரும்

      வாழ்வதற்குச் சொத்துக்கள் கூட வரும் அதன்

               வழியாகச் சொந்தங்கள் துன்பம் கூடும்

      ஆய்வதற்கு ஒன்று சொல்வேன்  உடல் நலமும்

                அவர் வழியாய்  வருவதுதான் உணர்ந்தே செல்லும்

      தாய் போன்றோ  தந்தை போன்றோ உடல் இருக்கும்

                தவறாக அதை  மாற்ற முயன்றிடாதீர்

குறட் கருத்து

             உந்தனது  கீழிருக்கும்  ஏழையர்கள்

                     உறவினர்கள்  நண்பரொடு  அன்பு கொண்டோர் 

             வந்தமைந்த மனைவி  அவள்  வழியாய் வந்த

                     வாரிசுகள்  என்றிவர்கள்  இடத்திலெல்லாம்

             நொந்தழிக்கும்  கோபமதைக்  கொள்ளல்  தீது

                     நொய்ந்தவர் மேல்  கோபமது  தீதோ தீது

             வந்த சினம்  தானாக மறைந்து விடும்

                      வாழும்   வழி சொல்லுகின்றார்  வள்ளுவரும்

   2.       இந்த  விதம் சொல்லி விட்டு வள்ளுவரும்

                       இடக்காகச் சொல்லுகின்றார் அதனைப் பார்ப்போம்

              மைந்தர்களே  உம்மை விடப்  பெரியோர்  ஆளும்

                      மாட்சிமையின்   அதிகாரப் பொறுப்பில்  உள்ளோர்

              எந்த விதத் தவறுகட்கும்  அஞ்சா நெஞ்சர்

                      இவரிடத்தில்      சினம் கொள்ளும்  தடுக்க மாட்டேன்

              சந்தடியில்  அடி  வாங்கித்தான்  திருந்த

                      சரியான  வழி  சொன்னார்  வள்ளுவரும்

                                     திருக்குறள்

               செல்லிடத்துக்  காப்பான்  சினம்      காப்பான் அல் இடத்துக்

               காக்கிலென்  காவாக்கால்  என்

பழம் பாடல் புதுக் கவிதை

             அம்பு தைத்த பெண் மானொன்று கரையதனில்

                        ஆர்ப்பரிக்கும் வெள்ளமதில் அச்சமதால்  இறங்காமல்

             தம் பக்கம்   போகாமல்  தவித்து  நின்று வாடுதல் போல்

                         தளிர்க் கொடியாள் தன் பாட்டைத் தமிழாகச் சொல்லுகின்றாள்

             அம்புவியை  ஆண்டு நிற்கும்  அழகு மன்னன்  பாண்டியனை

                         தம் விழியால்  கண்டு    நெஞ்சம்  தனக்குள்ளே அனுமதித்து

             வெம்புகின்றாள்  சொல்லுகின்றாள்  ஒரு செய்தி   நற் செய்தி

                        விரித்துரைக்கச் சுகங்கள்   தரும்  வேல் விழியாள் பொற் செய்தி

     2    நெஞ்சமது     பாண்டியனை  நேரினிலே  கண்டு  விட

                       அஞ்சாமல்  அவன்  கோட்டை  வாசலுக்கே சென்றதுவாம்

              பஞ்சான  நெஞ்சமது பதை பதைத்து  வாசல் கொள்ள

                        பாண்டியனின்  வாசலது படும் பாட்டைச் சொல்லுகின்றாள்

             வழியினிலே இவள் நெஞ்சம்   வசமாக நின்று கொள்ள

                         வருவாரும்  போவாரும் வழியின்றித்  தவிக்கின்றார்

             சிரிக்கின்றார்    சிலர்  கண்டு   என்றாலும்   நாணமின்றி

                          இருக்கின்ற தவள் நெஞ்சு பாண்டியனின் வாசலிலே

                                               முத்தொள்ளாயிரம்

                          புகுவார்க்கு இடங்கொடா போதுவார்க்கு  ஒல்கா

                          நகுவாரை  நாணி மறையா  -   இரு கரையின்

                         ஏமான்  பிணை போல நின்றதே  கூடலார்

                         கோமான் பின் சென்ற என் நெஞ்சு

              

                        

Saturday, June 14, 2008

இருக்கும் வரை

         எல்லாத் தமிழருக்கும்  என் இனிய வணக்கங்கள்

                எனை   வாழச் செய்கின்றீர் என்  எழுத்தைத் தினம் படித்து

         நல்லார்கள்  உங்களையே  நான்  பணிந்து  வணங்குகின்றேன்

                 நற்றமிழாள்  தன்னருளால் இருக்கும் வரை   எழுதி நிற்பேன்

இன்னும்தான் வாழ்கின்றாரே

     1.           எந்த வித உழைப்புமின்றி  எத்தர்களோ

                         எத்தனையோ கோடிகளில்  புரளுகின்றார்

                 நொந்தழுது  நிற்கின்றார்  ஏழையரோ

                         நூறாண்டு   உழைத்தாலும் உணவேயின்றி

                 கொந்தளித்து  எழுகின்றார் கொடுமைகண்டு

                         கோபமுற்ற  ஏழை  வீட்டு  இளைஞரெல்லாம் 

                  இந்த நிலை  முடியாமல்  தொடர்வதனால்

                          எடுக்கின்றார்  ஆயுதத்தை வழியே யின்றி

        2..      நொந்தவர்தம்  துயர்  தீர்க்க  வந்தவரோ

                           நூறாக  ஆயிரமாய்க் கோடிகளை

                   மைந்தருக்கும் சந்ததிக்கும்  சேர்த்து  வைத்து

                           மகிழ்வாக  வாழுகின்றார்  என்ற போது

                    வெந்தணலில்  வாழுகின்ற  ஏழையர்கள்

                          விடிவிற்காய்  ஆயுதங்கள்  தூக்குகின்றார்

                     வந்தவினை  இது  வளரக்  காரணமாய்

                           வாழ்வார்கள்  இன்னும்தான்  வாழ்கின்றாரே

கொன்றார்

 

               புலிகளையே  கொல்லுகின்றார் தாவி  ஒடும்

                      புள்ளி  மான் கூட்டத்தைக் கொல்லுகின்றார்

              வலியின்றித் தோலுரித்து   உலகம்  எங்கும்

                      வணிகங்கள்  செய்தவரும்  வாழுகின்றார்

               எலிகளையும் கொல்லுகின்றார்  பறந்து  செல்லும்

                      இனிய நல்ல  பறவைகளைக்  கொல்லுகின்றார்

              வலிய  பெரும்  யானையினைக் கொன்று  அதன்

                      வாய்த் தந்தம்  விற்பனைக்காய்  ஆக்குகின்றார்

             2  சிட்டுக குருவிகளைக் கொல்லுகின்றார்

                      சிறுத்தைப் புலிகளையும்  கொல்லுகின்றார்

               எட்டுகின்ற  வரை அங்கு  வனத்தில்  வாழும்

                      எல்லா  உயிர்களையும்  கொல்லுகின்றார்

               கட்டுக்  கட்டாய்ப்  பணத்தை  ஈட்டுதற்கே

                       கனிவின்றி  உயிர்களையே கொல்லுகின்றார்

               தட்டுக் கெட்டே  அலையும்  மனிதர்  இவர்

                       தான்  சாவோம்  என்பதனையே  மறந்து கொன்றார்

குறட் கருத்து

       பொய்  கூறி  வாழ்ந்திடலாம்  என்று  எண்ணும்

                பொறுப்பற்றோர் தனைப் பார்த்து  வள்ளுவரும்

       சொல்கின்றார்  ஒரு  செய்தி  ஆகா   ஆகா

                சோர  உணர்வுள்ளோர்கள்  உணர்வதற்காய்

       எல்லார்க்கும்  தெரியாதே  பொய்கள்  சொல்லி

                 ஏய்த்ததுவாய்  நினைக்கின்றீர் அய்யோ  பாவம்

       உள்ளம்  உம்  உள்ளம்  அப்பொய்யைக்  கொண்டு

                 உமைச் சுட்டு  உமைச்சுட்டுக்  கொன்றே  போடும்

                                      திருக்குறள்

          தன்நெஞ்சறிவது  பொய்யற்க  பொய்த்த பின்

          தன்நெஞ்சே  தன்னைச் சுடும்

பழம்பாடல் புதுக்கவிதை

           கட்டித் தழுவி நின்றேன்  கரங்களுக்குள்  பூட்டி வைத்தேன்

                   எட்டாத   சுகமதிலே  இதழமுதம்  தந்து  கொண்டான்

           முட்டும்  சுகமதனை  முத்தமிழின்  பொதிகை மலைக்

                   கட்டுக் கொண்டேயிலங்கும்  கனி மார்பில்  பெற்று(உ)  வந்தேன்

           எட்டி  அவன்  தேடி  இரு  புறமும்  படுக்கையிலே

                   தட்டித் தடவி நின்றேன்  தமிழ் மாறன்  காணவில்லை

            கட்டுக் குலையாத  கன்னி  மட்டும்  தானிருந்தேன்

                    கனவில்  வந்த  பாண்டியனால் கனிந்து விட்ட கவிதை இது

                                            முத்தொள்ளாயிரம்

               களி யானைத் தென்னன்  கனவில்  வந்தென்னை

               அளியான்  அளிப்பானே போன்றான்  -  தெளியாதே

              செங்காந்தள்  மென் விரலால்  சேக்கை  தடவ வந்தேன்

              என் காண்பேன்  என்  அலால்  யான்

                    

                    

Friday, June 13, 2008

வாழ்வதனால்

           இல்லாத  பொருட்களுக்காய்   ஆசை கொண்டு

                     எங்கெங்கோ அலைகின்றோம்  தேடுகின்றோம்

          நல்லாரோ  இருப்பதிலே  நிறைவு   கொண்டு

                     நலமாக  வாழுகின்றார்  சிக்கல்  இன்றி

         இல்லாரோ  வழியின்றி  உம்மைப்     பார்த்து

                    ஏக்கங்கள்  கொளளு்கின்றார் புரியாராகி

         நல்லாரோ சிரிக்கின்றார்    எல்லாம்  பார்த்து

                    நாட்டமின்றித்   தேட்டமின்றி  வாழ்வதனால்

குறட் கருத்து

            துன்பம்  ஆடும்  ஆட்டத்திற்  களவேயில்லை

                     துடிக்க  வைத்துப்  பார்க்கின்றது  பலரை  இங்கு

           இன்பம்  கொண்டு  ஆடுகின்ற  ததுவோ  எங்கும்

                    எக்காளம்  பாடி  பலர்  தன்னை  ஒய்த்து

          தன் பிடியில்  மனிதர்  படும்  பாட்டில் அது

                    தருக்குவதும்   நெருக்குவதும்  அய்யோ  அய்யோ

          வன்ம  மது  கொண்டாற் போல்  மனிதர்களை

                   வதைப்பதிலே  தன்  பெருமை  காக்கின்றது

         2. என்ன  செய்ய  துன்பமது  துன்பம்  கொண்டு

                   இடி பாடு  கொள்ளுகின்ற  இடங்கள் உண்டு

          தன்னலமே யில்லாமல்  பிறருக்காகத்

                   தான் உழைக்கும்  பெரியோரின்  வீட்டிற்குள்ளே

          எந்த வித  ஆசைகளும்  இல்லாராகி

                   இருப்பதிலே  நிறைவு கொள்வார்  தம்மிடத்தில்

          வந்த துன்பம்  செயலற்று  வதையும் பட்டு

                   வாய்  திறந்து  அது  அழுமாம்  துன்பம்  கொண்டு

                                         திருக்குறள்

          இடும்பைக்கே  இடும்பை  படுப்பர் இடும்பைக்கு

          இடும்பை  படாஅ தவர்

                   

               

           

பழம் பாடல் புதுக்கவிதை

          ஆண்  யானை  பெண் யானை  நலங்கிள்ளியை

                      அண்டியவர்க்கு  அவன்  அளிக்கும்  பரிசேயாகும்

           தூண் போன்ற  பேருருவம்  மார் பகலம்

                       துடியிடையாள்  எனக்கான தூங்குமிடம்

         காண்பதிலும்  களிப்பதிலும்  வாழ்ந்திருந்தேன்

                       கட்டாயம்  கலந்திடுவான்  என்று எண்ணி

         நாண்  விட்டுப்  பெண்  நானும்  காத்திருக்க

                      நலங்கிள்ளி  செய்த செயல்  நியாயமில்லை

         எல்லோர்க்கும்  எல்லாமும்  தந்து  போற்றும்

                    ஏற்றங்கள்  கொண்டவன்தான் என்னிடத்தில்

         வல்லானாய்  மாறி  எந்தன்  சீலையினை

                    வன்முறையாய்ப்  பறித்து விட்டான் விடுவேனோ நான்

         பல் வேந்தர் நாடுகளைப்  பணிய  வைத்த

                     படைகளிடம்  இவன் செங்கோல்  ஒழுக்கம் தன்னை

        சொல்வேன் நான்  வரட்டும்  என்  நேர்  எதிரே

                    சோழனுக்காய்  வீதியினைப் பார்த்தே  நின்றாள்

                                                 முத்தொள்ளாயிரம்

                       தானை கொண்டோடுவ தாயின்தன் செங்கோன்மை

                       சேனையறியக்  கிளவேனோ  -   யானை

                       பிடி வீசும்  வண்தடக்கை  பெய் தண்தார்க்கிள்ளி

                      நெடு வீதி நேர்ப் பட்ட போது

Thursday, June 12, 2008

இவரைக்கடி

                  கல்வி கற்கக்  குழந்தைகளை  அனுப்புகின்றார்
                       கண்ணீராய்க்  கரைகின்றேன்  அவர் குறித்து
                  நல் விதமாய்க்  கற்க  வைக்கும்  ஆசையிலே தான்
                       நாடெங்கும்  அனுப்புகின்றார்  தவறேயில்லை
                 புல்லி  அநதத்  தாய் மடியில்  சீலைக்குள்ளே
                       பொதிந்தன்பு  கண்டவராய்  வளரும்  பிள்ளை
                 கிள்ளி அதை  எறிகின்றார்  கல்விக்கென்று
                        கிறுக்காகும்  அப்பிள்ளை மேதையாமோ


                 படி படி  என்றே   அவரைப்  படுத்துகின்றார்
                         பாசமதே  இல்லாமல் துரத்துகின்றார்
                 துடி  துடி  என்றே  பிள்ளை  துடிக்கின்றது
                         தூங்கும் வரைப் படிப்பிற்காய்  நடிக்கின்றது
                 அடி அடியென்றே சில  பேர் அடித்தொழிப்பார்
                          அவர்க்கு வந்து பிறந்த பிள்ளை மனம்  ஒடிப்பார்
                  வடி  வடி நீயும்  இங்கே  கண்ணீர்  வடி
                           வருங்காலச் சந்ததிக்காய்  இவரைக் கடி

அவர் உரிமை அவர்க்கு

            பெண்களென்றால்  எங்கேயும்    எப்பொழுதும்
                   பேசுகின்றார்  அவதூறாய் கீழ்த்தரமாய்க்
            கண்களென்று  சொல்லுவது தங்களது
                    காம வெறி  தீர்க்கின்ற  நேரம்  மட்டும்
            புண்களிவர்  புண்களிவர் என்றிவரைப்
                    புறந் தள்ள  மாட்டாமல்  பெண்கள்  வாழ்வார்
            அண்ணியென்றும்  அம்மையென்றும்  அக்காளென்றும்
                    அன்புத் தங்கையென்று  மட்டும்  உறவைச் சொல்வார்


            பெண்ணில்லா  வாழ்க்கையது  வாழ்வே இல்லை
                     பேரறிஞர்  வள்ளுவரும்  அறிவாய்ச் சொன்னார்
            கண்ணான  பெண்  தன்னைக் காத்துக்  கொள்வாள்
                     கடுமை  செய்து அடைத்து வைத்தல்  அசிங்கம்  என்றார்
            மண்ணாள்வார்  முதல்  ஏழை  மனிதன்  வரை
                     மங்கையரைக்  கொடுமை செய்தல்  முடியவில்லை
            எண்ணாரே  தன்  தாயைப்  போல்  தான்  இங்கே
                     எப்பெண்ணும்  என்றிங்கு  மனிதர்  நன்கு


             தன்  மனைவி  கற்போடு  வாழ்வதற்காய்
                      தமிழென்றும்  இனமென்றும்  பேசிடுவார்
             முன் வீட்டான்  மனைவியுடன்  முனைந்து  பேசி
                      முத்தங்கள்  பெற்று  விட  முயற்சி செய்வார்
             பண்பற்றார்  இவர்  வீட்டுப்  பெண்கள்  மட்டும்
                      பத்தினியாய்  வாழ்வதற்காய்ச் செத்திடுவார்
             அன்பற்றுப்  பிறர்  மனைவி  தன்னை  மட்டும்
                     அடைவதற்காய் பலப்பல்வாம்  வேலை செய்வார


             அவளுக்கும்  உடம்புண்டு  உணர்வு  உண்டு
                      ஆசையுண்டு  மானமுண்டு ரோஷமுண்டு
              தவறுக்காய்  அலைவதற்கா  பெண்  பிறந்தாள்
                       தடுமாறி  நிற்கின்ற  ஆண் குலத்தீர்
              கவடின்றிப்  பெண்களினை  வாழ  விடும்
                        கருத்திழந்து  வாழ்விழந்து  ஒழிந்திடாதீர்
              அவர்  உரிமை அவர்க்கு  அதைப்  பறிப்பதற்காய்
                        ஆடாதீர்  பொய்யொழுக்ககம்  பேசிப் பேசி

திருக்குறள் காமத்துப்பால்

                விரைவோடு  வேகமதும்  கொண்டவனாம்
                     வேல் விழியாள்  காதலனும் பெருமை சொன்னாள்
                திரை  போட்ட  உள் அறையில்  இருவருமே
                      தேடி  நின்றார்  கண்ட பின்னும்  கண்ட பின்னும்
                வரையற்ற  காதலுக்குள்  இருவருமே
                       வரம்பெற்ற வடிவத்தால்  திளைத்திருந்தார்
                கரையேற  வழியின்றிக் காதலனும்
                       கன்னியவள்  தோள்களிலே சாய்ந்திருந்தான்


                நிறைவேறாக்  காதலினைக்  கொண்டு விட்ட
                       நிம்மதியில்  பெண்ணவளும் கண் திறந்தாள்
                விரைவென்றால்  அவ்விரைவு  காதலனும்
                       வேல் விழியாள்  நெஞ்சதனைச் சென்றடைந்தானாம்
                 புரிகிறதா தமிழினத்தீர்  கனவின் போது
                       பொறுப்பாகத் தோளினிலே  சாய்ந்திருந்தான்
                 விரி கனவு  முடிந்தவுடன்  மிக  விரைந்து
                        வெள்ளை  மனப்  பந்தலுக்குள்  ஒளிந்திட்டானாம்


                                              திருக்குறள

                   துஞ்சுங்கால்  தோள்மேலராகி  விழிக்குங்கால்
                   நெஞ்சத்தராவர்  விரைந்து

பழம் பாடல் புதுக்கவிதை

            வளை கொண்ட  கையொடு  மூங்கில  போல்  தோளுமே
                  வடிவாகக் கொண்ட  என் தோழி
            பகை  வெல்லும்  வாட்களைக்  கண்களாய்க்  கொண்டும் நற்
                  பனிப் பார்வை கொண்டு  நீ வாழி
            இளையவள் என் கண்ணில் பாண்டியன்  படுதலை
                  என் அன்னை  தடுப்பதைப்  பார் நீ
            பகைவரைப்  போலவே  அன்னையும்  என்னிடம
                  பழி  காணல்  என்னடி   நீதி


           கதவினை  அடைத்தெனை  உள்ளேயே   வைத்தலில்
                  கடுமைகள்  காட்டலைப்  பார்  நீ
           பதமான  வார்த்தைகள்  ஒன்றுமே  இல்லை நான்
                  படுகின்ற  பாட்டினைக் கேள் நீ
           இதமின்றிக் கொல்கின்ற  இவளது வாழ்க்கையில்
                  இளமையே  இருந்தது  இல்லையோ
           பதமான  காதலும்  இவளது  வாழ்க்கையைப்
                  படுத்தியதால்  இந்தத் தொல்லையோ


           ஒரு வேளைப்  பிறக்கையில்  முதியவளாகவே
                  உதித்தனளோ  எந்தன்  அன்னையே
           கருவுற்று  எனைப்  பெற்றாள்  என்கையில் புரிகிறேன்
                  கன்னியாய்  இருந்துளாள்  உண்மையே 
           திருவுற்ற  வேலதால் பகைவர்கள்  தம்மையே
                  தெருவுறச் செய்த  நம்  பாண்டியன்
           மருவற்ற  கோலத்தைப்  பார்ப்பதில்  இவட்கென்ன
                   மறந்தனள் இளமையில்  வாழ்ந்ததை



                                                               முத்தொள்ளாயிரம்

                        வளையவாய்  நீண்ட  தோள்  வாட்கணாய்  அன்னை
                        இளையளாய்  மூத்திலள்  கொல்லோ   -  தளையவிழ்தார்
                        மண்கொண்ட  தானை  மறங்கனல்  வேல்  மாறனைக்
                        கண் கொண்டு  நோக்கல்  என்பாள்
            

Wednesday, June 11, 2008

வேறொன்றில்லை

              பணம்  தேடி  ஒடுகின்றார்   ஒடி ஒடிப்
                    பல கோடி  சேரக்கின்றார்  சேர்த்த பின்னர
              தினம்  தேடி  ஓடுகின்றார்  மருத்துவரை
                    தின்பதென்றால்  மாத்திரைகள்  என்று வாழ
              முனம் தேடி  உடல்  காக்க  நேரம்  கொஞ்சம்
                     முறையாக்கி உடற் பயிற்சி கொண்டிருந்தால்
               தினம்  விரும்பும்  நல்லுணவை  உண்டு  வாழும்
                      தேகமதைக் கொண்டிருப்பார் மறந்தே போனார்


               பணம் மட்டும்  வாழ்க்கையில்லை வாழ்வதற்கு
                      பலமான  உடல்  வேண்டும் அன்பும் வேண்டும்
               குணம்  வேண்டும்  இல்லையெனில் உலகம்  உம்மை
                      கும்பிட்டுப் போற்றாது  உணர  வேண்டும்
               இனம்  சாதி  மொழி  என்ற  எண்ணம்  இன்றி
                       எல்லோரும்  போற்றுகின்ற்  வாழ்க்கை வேண்டும்
               உளம் கொள்வீர்   நண்பர்களே  கொண்டு விட்டால்
                        உமையன்றி தெய்வம்  இங்கு  வேறொன்றிலை
                    

குறட் கருத்து

             

            கல்விதான்  உயர்  செல்வம்  என்றுரைத்த  வள்ளுவனார்
                   கல்லார்கள்  கண்களினைப்  புண் என்றும் உண்ர்த்தியவர்
            எல்லோரும்  அவ்வழியில்  இனிதாய்  நடக்கையிலே
                   இதை  மாற்றி  ஒரு    குறளை  நகைப்பாக்கி  வைக்கின்றார்
            கல்லாதார்  தமைப்பற்றி  கருத்தொன்று  சொல்லுகின்றார்
                    நல்லார்  அவர்  மிகவும்  நல்லார்  என்றுரைக்கின்றார்
            எல்லோரும்   அவரிடத்தில்  என்னவென்று  கேட்டு  நின்றால்
                 சொல்லுகின்றார்  ஒரு  கருத்தை  அவரன்றி யார் சொல்வார்


            கல்லார்  மிகச் சிறந்தார் மிகச்  சிறந்தார்  என்றுரைக்க
                     கல்லார்க்கு  நல்ல  வழி  காட்டுகின்றார்  வள்ளுவரும்
            நல்லார்  நிறைந்திருக்கும்  நற் சபைக்குள்  சென்று விட்டால்
                     நாடு  நிறைக் கற்றவரின்  மேல் சபைக்குள் வந்து விட்டால்
            பொல்லாத  தன்  வாயைத் திறக்காமல்  மூடி விட்டால
                     போதும்  அவர்  போற்றுதற்கு     உரியவராய்ப்  பொலிந்திடுவார்
            சொல்லாமல்  சொல்லுகின்றார் வள்ளுவப்  பேராசானும்
                      சோதனையில்  அவர் வெல்ல  மாட்டார் என்றுறுதியுடன


                                                      திருக்குறள்

             கல்லாதவரும்  நனி  நல்லர்  கற்றார்  முன்
             சொல்லாது  இருக்கப் பெறின்

பழம்பாடல் புதுக்கவிதை

                    நீரால்  நிறைந்திருக்கும்  மாந்தை  மாநகரத்தில
                              நிழல்  போலே  இருக்கின்ற  அன்பால் நிறைந்திட்ட
                    ஊரார் இவரன்றி   நம்  குறையைத் தீர்த்து  விட
                              உறவென்று  யார்  உண்டு உணர்ந்தாயோ  தோழி நீ
                    யாராலே  இந்நோய்  எமக்கு  விளைந்ததுவோ
                              யார்  குதிரை  வேகத்திற் கிலக்கணமாய்  ஒடுவதோ
                    சீராக  அவரன்றி  யார்தான்  நம்  குறை  தீர்ப்பார்
                              சேரனன்றோ  இந்நோய்க்கு  ம்ருந்தாவான் என்   தோழி


                    ஊரார் தனை அழைத்து    உண்மை நிலை சொல்லிடுவோம்
                               பேராளன்  சேரனிடம்  பேசி  அவன்  தோள்  சேர
                    நீரேதான்  பொறுப்பு என்றும்  நீதி சொல்லி மன்னனையே
                               வாராதிருந்தால் எங்கள்  வடிவழகுப்  பெண்  அழிவாள
                    கார்  போலக் கருணை கொண்டு  காத்திடுக என வேண்ட
                                ஊராருக்கே  முடியும்  உயர்ந்தவரே  காத்திடுவார
                    வார் குழலாள்  காதலினை  வாழ வைக்கும்  பொறுப்பதனை
                                ஊராருக்களிக்கின்ற உயர்ந்த கவி  காண்பீரே


                                                         முத்தொள்ளாயிரம்

                மல்லல்  தீர்  மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்
                சொல்லவே  வேண்டும்  நம் குறை   -     நல்ல
                திலகம்  கிடந்த  திரு நுதலாய்  அஃதன்றோ
                உலகம் கிடந்த  இயல்பு
                    

                     
                              
                              
                    

Tuesday, June 10, 2008

குறட் கருத்து

              உழைப்பாலும்  உண்மையாலும்  பணம்  படைத்து
                        உயர்ந்ததொரு  நற்குடும்பம்  வழி வ்ழியாய்ச்
              சிறப்பாக  வாழ்ந்திடுவோர்  ஊருக்கெல்லாம
                        செய்வதிலே மனம்  நிறைந்து  வாழ்ந்திருப்போர்
              பொறுப்பாக  வாழ்ந்தவர்கள்  பிள்ளைகளும்
                         பொறுப்புணரச் செல்வத்தைப்  பிரித்தளித்தார்
               சிறப்பான  பிள்ளைகளில்  ஒருவர்  மட்டும்
                          செல்வமெல்லாம்  இழந்திட்டார்  ஆண்டு  ஒன்றில்


               வரப்  போகக் கூட  அந்தப்  பிள்ளை  தனக்கு
                           வழி  செய்தார் இல்லை அன்பாய்ப் பெற்ற  தாயார்
               கரம்  நீட்டி  ஊரினிலே  பிச்சையேற்று
                            கவலையிலே  வாழ்கின்றார் என்ற போதும்
               தரம்  இழந்து  அழிகின்ற  பிள்ளை  தன்னை
                            தன்  மகனாய்ப்  பார்க்கவில்லை  ஈன்ற  அன்னை
               வரம்  தந்த  வாழ்வதனில  அந்தப் பிள்ளை
                            வறுமையினைப்  பெற்ற  வழி  உணர்ந்த  அன்னை



              ஊரார்  போய்  அவருக்காய்  அன்னையிடம்
                            உதவி  கேட்டு நிற்கையிலே  அன்னை சொன்னார்
              பேரான  பேர்  பெற்ற    குடும்பம்  தன்னில்  பிறந்தானே
                            பெயரழிக்கும்  வழியிலெல்லாம
               ஊர்  ஊராய்ச்  சூதாடி  பெண்கள்  வாழ்வை
                            ஒழித்தவரை  அழித்தங்கு   வறுமை கொண்டான்
               சீராக  வாழ்ந்தங்கு  ஏழையரை  சீர்  படுத்தி
                             அதனாலா  வறுமை  கொண்டான்


              ஊரெங்கும்  குளக்கரைகள்  வெட்டினானா
                             உயர்  கல்விச்  சாலைகளைக்  கட்டினானா
              தேரோடும்  தெருக்களையைச்  சரி   செய்தானா
                             தெய்வ  வழி பாடுகளில்  அழிந்தொழிந்தானா
               சீரான  அறமற்ற  வழிகளிலே   தன்
                              செல்வமெல்லாம்  அழித்தான்  என்  மகனேயில்லை
               நேரான  வழிகளிலே  அழித்திருந்தால்
                               நெஞ்சமெல்லாம்  நிறைந்திருப்பேன் என்றாள்  அன்னை


               அறஞ் சார்ந்த  வழிகளிலே  வறுமை  வந்தால்
                                அன்னை  மனம்  பூரிக்கும் அதனை விட்டு
               புறம் போகி   தவறுகளால்  செல்வமெல்லாம்
                                 போக்கி நின்றால்  மகன்  என்று சொல்லுதற்கே
               விரும்பாளாம்  அன்னையவள்  அவனைக் கண்டால்
                                 வேறெவரோ  போல்  விலகி  விரைந்திடுவாளாம்
               தரும்  கருத்தைக்  குறுங் கருத்தாய்த்  தந்து  நின்றார்
                                 த்மிழ்த்  தாயின்  தலை மகனாம்  வள்ளுவரும்



                                         திருக்குறள்

              அறஞ்சாரா  நல்குரவு  ஈன்ற  தாயானும்
              பிறன்  போல  நோக்கப் படும்
               
                          

பழம் பாடல் புதுக் கவிதை

               வடக்கிருந்து  வருகின்ற  வாடைக்  காற்று
                            வாயாரப் புகழுதிங்கே  பாண்டியனை
                மடக்கி  அவன்  வடக்கையையும்  தன்னுடைய
                            மாநிலத்தில்  சேர்த்தனால்  விளைந்த நன்மை
                தொடக்க  முதல்  புகழுதது  பாண்டியனை
                            தூய  அவன்  செங்கோலை  ஆட்சியினை
                 அடக்கமுள்ள  பெண்ணாளும்  அரற்றுகின்றாள்
                             ஆம்  அங்கு பாண்டியனால்  அவதி  யுற்றாள்


                 வடக்கிருந்து வருவதனால்  புகழ்ந்து  நின்றாய்  என்
                              வளையல்களை   நான்   இழந்த  தவனால்தானே
                 உனக்கென்ன  தெரியும்  தெற்கே  பொதிகை  மலை
                              உள்ளோர்கள்  சமையலுக்கே   ச்ந்தனமாம்
                 மணக்கின்ற  மரம்  கொண்டே  சமைத்திடுவார்
                               மாற்ன் அவன்  பெருமை  இது சரிதான்  ஆனால்
                 எனக்கிங்கு  விளைந்தற்கு  என்ன  நீதி
                               என்ன  செய்வாய்  தென்றலுக்கே  தெரியும் அது




                                                  முத்தொள்ளாயிரம்



                        மாறடு போர்  மன்னர்  மதிக்குடையும்  செங்கோலும்
                        கூறிடுவாய்  நீயோ  குளிர்  வாடாய்  -   சோறடுவார்
                        ஆரத்தால் தீ மூட்டும்  அம்பொதியில் கோமாற்கு  என்
                        வாரத்தால்  தோற்றேன்  வளை

Monday, June 9, 2008

நான் வாழ்வேன்

           எழுத்ததனைத்  தவமாகக் கொண்டு  வாழ  
                     இறையவரும்  நல்லருளைத் தந்திருந்தார்
           பொருத்தமில்லார்  மத்தியிலே  அசிங்கம்  கொண்ட
                     பொச்சரிப்புக்கு  இடையே  போய்ச் சீரழிந்தேன்
           வருத்தமதும்  கொண்டழுதேன் இறைவன் தந்த
                      வ்ண்டமிழை  மறந்திருந்தேன் அலைந்து நொந்தேன்
           பொறுத்தென்னை  காத்து  நின்ற  இறையே இன்று
                       போற்றி யென்னை  ஆதரித்து  எழுதச் சொன்னார்


           கணிப் பொறியில்  வந்தமர்ந்து  இறைவன்  தந்த
                        கைகளையே  தட்டச்சில்  வைக்கும் நேரம்
           அணி அணியாய்க்  கவிதைகளை  அவரே  தந்து
                        ஆதரித்து  அருள்கின்றார்  தினம்  தினமும்
           பணி யிதனை நான்   இங்கே  தொடர்ந்து  செய்யப்
                         பார்  நிறைந்த  தமிழினத்தார் உதவி செய்தால்
           பிணியின்றி  நான்  வாழ்வேன்  இறைவன்  அவன்
                         பெருங்  கருணைத் தமிழாகி  வாழ  வைக்கும்

தென்னாட்டுச் சிவனே

             யானை அதன்  கால்களிலே  என்னைப்  போட்டு
                     அப்படியே  கொன்று விடும்  ஆண்டவரே
             ஊனமுள்ள  இவ்வுடலை  சிங்கத்திற்கு
                      உண்வாகக் கொடுத்து  விடும்  என் இறையே
             வானுலகில்  நரகத்தில்  என்னைப் போட்டு
                      வதைப்பதற்கும்  வழி செய்யும்  பொறுத்துக்  கொள்வேன்
              தேனான  தமிழறியார்  முன்னே  மட்டும்
                       தென்னாட்டுச்  சிவனே  எனை   அனுப்பிடாதீர்

                                                  செய்யள்


        கங்குல்  யானைக் காலில்  படுத்தினும்  படுக்கலாம
                                   சுடர்  விழிப் ப்குவாய
        சிங்க  வாயிடைச்  செலுத்தினும்  செலுத்தலாம்
                                   தென் புலத்தவர்  கோமான்
        வெங்கண்  நரகிடை  வீழ்த்தினும்  வீழ்த்தலாம்
                                   விடையேறும்  
        எங்கள்  நாயக  தமிழறியார்கள்  முன்
                                   இயம்புதல்  தவிர்ப்பாயே

காந்தியடிகளும் சீடரும்

                  இங்கிலாந்து சென்றிருந்த  காந்தியாரை
                          எல்லோரும்  சந்திக்க   விரும்புகின்றார்
                  அங்கவரில்  நகைச்சுவையின்  அரசரென்னும
                          அறிஞர் சார்லி  சாப்ளினும்  ஒருவராவார்
                   இங்கிதனை அடிகளிடம்  நண்பர் சொன்னார்
                          யார்  அந்தச் சாப்ளின் என்றடிகள் கேட்டார்
                   தம் கடமை தனை  மட்டும் உணர்ந்து நின்றார்
                           தானறியார் திரைப் படத்துப்  பெரியார் தன்னை


                   இங்கிதைப்  போல்  ஒரு  செய்தி  தமிழகத்தில்
                           என்.எஸ்.கே.என்னும்  நந்தம்  கலைவாணர்தாம்
                   தம் குடும்ப விழாவிற்காய்   சிவாஜியுடன்
                            தமிழ்க்  கண்ணதாசனையும்  அழைத்திருந்தார்
                   பொங்கு தமிழ்க் கவிமணியாம்  காந்தி  அன்பர்
                            பொறுமைமிகு தேசிக  வினாயகத்தை
                    இங்கிவரும்  காணுதற்கு விழைந்ததாலே
                             இருவரையும்  அவரிடத்தில்  அழைத்துச் சென்றார


                    கவிஞர்  இவர்  கண்ணதாசன்  என்று  சொல்ல
                             கவிமணியார் உளம் கொண்டு  வாழ்த்தி நின்றார்
                    இனிய தம்பி  சிவா  ஜி  கணேசன்  இவர்
                             என்று  சொல்ல  கவிமணியார்   மெல்லக் கேட்டார்
                    சரி  இவர்கள்  செய்யும்  தொழில்  என்ன  என்றார்
                             சட்டென்று  கலைவாணர்  சிரித்துச் சொன்னார்
                    திரைப் படமே  பார்த்ததில்லை பாட்டையாவும்
                             தெரியவில்லை  சிவாஜியை  விளக்கம் சொன்னார்