Friday, December 26, 2008

மதத்தார் கடன்

இளமையிலே வறுமை அது கொடியதென்று
எப்பொழுதோ சொல்லிச் சென்றாள் அவ்வை யவள்
உளம் கொண்டார் ஆளுபவர் எல்லாம் என்றால்
உலகினிலே வன்முறைகள் இலவே இல்லை
களம் காண வைக்கின்றார் ஏழைகளை
கதைக்கின்றார் அவர்களிடம் மதங்கள் பற்றி
பிணமாக்கிப் பார்க்கின்றார் பலரை இங்கு
பேதையான இளைஞர்களே வீழுகின்றார்


துணி எடுத்துத் தர முடியாத் தந்தை விட்டு
தூர வந்து வறுமையினால் திருடனாகி
பிணி வறுமை திர்ப்பதற்கு பணத்தைக் காட்டி
பின்புலமாய் இருப்பதுவாய் நம்ப வைத்து
அணியாக்கி அனுப்பி வைத்தார் ஏழை தன்னை
ஆர் என்று கேட்கின்றார் அவனை இன்று
வணிகமதாய் ஏழையர் தம் வறுமை தன்னை
வளைக்கின்றார் இறைவனது வழியறியார்

மதங்களுக்குள் சண்டையில்லை இலவே இல்லை
மனிதர்களின் மடமையினால் சண்டையிங்கு
விதம் பிரித்து வினை விதைத்து தலைமை தாங்கி
வெறியூட்டி மனம் கொன்று பலரைக் கொன்று
அடம் பிடித்து அலைகின்றார் அழித்தல் செய்வார்
அவர் தமையும் திருத்தி நல்ல மனிதராக்கி
புடம் போட்ட தங்கமதாய் மாற்றல் நல்ல
புனிதமதை போற்றுகின்ற மதத்தார் கடன்

0 மறுமொழிகள்: