அப்பா என்றுனை அழைத்தேன் ஏற்றுக் கொண்டாய்
அய்யனே அண்ணாமலை அழகனே நீ
அப்பா என்றெனை அழைக்க ஆசை கொண்டார்
அன்புடனே திருலோகசந்தர் என்பார்
ஒப்பில்லாத் தமிழன்னை தந்த வரம்
உயர் அன்பைத் தருகின்ற தெந்தனுக்கு
இப்பாரில் இவரைப் போல் உள்ள பிள்ளை
எனக்களித்த இறைவனே நான் பணிந்து நின்றேன்
Sunday, December 4, 2011
நான் பணிந்து நின்றேன்
Monday, January 17, 2011
பிறந்தேன் நான்
தைப் பூசத் திருநாளில் அன்னை என்னை
தமிழ்த் தாயின் கைகளிலே ஈன்றளித் தாள்
மை நிறத்துக் கண்ணனைப் போல் எட்டாவதாய்
மாதரசி பெற்றதனால் கண்ணனானேன்
கை வீசு முன்னாலே அன்னை தமிழ்
கைப் பற்றிச் சென்றதனால் வெற்றி கொண்டேன்
மெய்த் தமிழின் வள்ளுவரில் துவங்கி எங்கள்
மேன்மை நிறை புலவர்களால் வாழுகின்றேன்
Sunday, January 31, 2010
வாழ்த்தி நின்றார்
வாழ்த்துக்கள் வணக்கங்கள் என்று என்னை
வளம் பெறவே செய்து நின்றார் அன்புடையோர்
கோர்த்தெடுத்த அன்பாலே நேற்று என்னை
குளிர்வித்தார் தமிழறிந்த பெரியோரெல்லாம்
வேர்த்தாற் போல் நின்றெந்தன் எதிரினிலே
விளையாட்டாய் என் கோபம் கேலி செய்தார்
சேர்ந்தாற் போல் அன்புடையோர் அனைவரும் நான்
செந்தமிழாய் வாழ என்று வாழ்த்தி நின்றார்
Saturday, January 30, 2010
பிறந்த நாள் வணக்கம்
வணங்கி நின்றேன் என்னை இங்கு ஈன்றளித்த
வண்மை நிறை தாயவளைத் தந்தையினை
இணங்கி என்னை தமிழுக்காய்த் தருவதற்கு
என் தமிழை எனக்களித்த இறைவனுக்கு
கணங்கள் பல கணங்கள் என்னைக் காத்து நிற்கும்
கண்ணினிய அன்பருக்கு மேலும் மேலும்
எண்ணங்கள் செயல்கள் எல்லாம் நல்லவையாய்
எனக்களித்து உடனிருக்கும் இறைவனுக்கு