Thursday, February 26, 2009

கத்தி ஏந்தி

பெரும்பான்மை நான் இங்கு சிறுபான்மை நீ இங்கு
பெரியவன் நான் உணர் நீ
பேசவோ பாடவோ உனக்கில்லை உரிமை நீ
பேசினால் நாக்கறுப்பேன்
அரும்பவே கூடாது உனக்கிங்கு எண்ணங்கள்
அரும்பினால் அழித்தொழிப்போம்
ஆசையோ பாசமோ கொள்ளாதே கொண்டாலே
அடிப்போம் நீ ஒதுங்கிக் கொள்ளு


உலகெங்கும் இந்நிலை இதுவேதான் இங்கேயும்
உணர்வாரும் பேசவிலையே
உண்மையை ஒழிப்பதில் வெல்பவர் தானெலாம்
உயர்ந்தார்கள் வெட்கமிலையே
கலகங்கள் செய்வதும் கண்ணியம் கொல்வதும்
கைக் கொண்டார் நாணவிலையே
காந்தியின் தேசமாம் சொல்கிறார் சொல்கிறார்
கைகளில் கத்தி ஏந்தி

Tuesday, February 24, 2009

தகுதியில்லை

தடுமாறித் தடுமாறித் தாங்கிடப் பிறர் நாடி
தவிக்கின்ற வாழ்க்கை விட்டு
தமிழோடு மேடையில் விளையாடும் போதினில்
தலைவா என் உயிர் கொள்க நீ
புடம் போட்ட தங்கமே பொன்னார்ந்த மேனியே
புழு என்னைச் சிங்கமாக்கிப்
போற்றி என் தமிழினை எனக்களித்து என்னையே
புகழ் செய்தாய் அருள் செய்க நீ


உறவென்று நீ தந்த உறவுகள் மட்டுமே
உறவென்று கொண்டேனில்லை
ஊரெங்கும் கண்டிட்ட நல்லவர் அனைவரும்
உறவென்று கொண்டு வாழ்ந்தேன்
கரவாக வாழ்கிறார் கவலைகள் சேர்க்கிறார்
கண்ணியம் காத்து நின்றேன்
தலைவா நீ தந்ததை மேலென்றும் கீழென்றும்
தரம் பார்க்கும் தகுதியில்லை

Saturday, February 21, 2009

ஒதுங்கி விடும்

மரணத்தை நோக்கியே பயணங்கள் அனைத்துமே
மனதினில் கொண்டு வாழ்வார்
மனிதனாய் வாழ்வதில் மனங் கொண்டு மனங்கொண்டு
மனிதருக்கு உதவி நிற்பார்
சரணமாய் இறைவனின் சந்நிதி முன் நிற்பார்
சத்தியம் கொண்டு வாழ்வார்
சகலரும் வாழ்ந்திட தன்னையே தந்திடும்
சமரச வாழ்வு வாழ்வார்


கோடிகள் கொண்டிட எண்ணங்கள் கொண்டவர்
கொள்கைகள் இன்றி வாழ்வார்
குடும்பத்தை அன்றியே ஊரினில் யாரையும்
கூட்டாக எண்ண மாட்டார்
நாடி தளர்ந்தெலாம் ஒடுங்கிய பின்னரும்
நல்லதை நாட மாட்டார்
நல்லவை இவர் வீட்டு வாயிலைக் காணவே
நாணியே ஒதுங்கி விடும்

நல்லோர் உள்ளில்

இறந்து விட்டார் என்ற செய்தி வந்த பின்பே
இருந்ததுவே தெரிகிறது நமக்கு இங்கு
இருக்கையிலே இறந்து விட்ட இவரின் வாழ்க்கை
எதற்கென்று தெரியாமல் குழம்புகின்றோம்
பிறந்து விட்ட காரணத்தால் வாழ்ந்த இவர்
பிரிந்ததிலே யாருக்கும் வருத்தமில்லை
சிறந்திருந்தார் மரணமதோ என்றும் என்றும்
சிந்தனையில் நிற்கிறது நல்லோர் உள்ளில்

தலைவரானார்

அகிம்சையினை அரசியலில் இணைத்து வென்ற
அண்ணல் காந்தி சட்டமதைக் கற்றவர் தான்
அகிலமெல்லாம் போற்றி நின்ற அண்ணல் சீடர்
அன்பு நேரு அவர் சட்டம் படித்தவர் தான்
தரித்திராராய் அடிமைகளாய் நீண்ட நாட்கள்
தனை உணர மறந்தவர்களாய் இருந்தவர்க்காய்
பவித்திரமாம் புத்த மதம் தழுவி வென்ற
பாபா அம்பேத்கர் சட்டம் படித்தவர் தான்
தனித்தனியாய் நின்று துன்பம் தர நினைத்த
தான்தோன்றி மன்னர்களை ஆற்றல் கொண்டு

ஒரு குடைக்குள் கொண்டு வந்த சர்தார் படேல்
உத்தமரும் சட்டத்தைப் படித்தவர்தான்
இருபதோடு இருபதாண்டு தண்டனையை
இன்முகத் தோடேற்றுச் சிறை சென்ற வீரர்
கரு மனத்து வெள்ளையரின் சிறைக் கூடத்தில்
கல்லுடைத்துச் செக்கிழுத்த சிதம்பரமும்
அருமை மிகு சட்டமதைப் படித்தவர்தான்
அன்று சட்டம் படித்தவரே தலைவரானார்
பெருமை இது நம் நாட்டின் பெருமை இது
பெரியவர்கள் தேடி வைத்த பெருமை இது

Thursday, February 19, 2009

சொந்தமில்லை

கை கட்டி வாய் பொத்தி பிச்சையேற்றுக்
கனித்தமிழை முறையாக உணர்ந்தவர்கள்
பை தன்னை நிரப்புதற்காய் மானம் விட்டு
பைத்தியங்கள் முன்னாலே நிற்பதில்லை
வைதாலும் ஆளை வைத்து மிரட்டினாலும்
வண்டமிழை யாரிடத்தும் விற்பதில்லை
பொய்யாக வாழ்ந்திடவே நடிப்பார் சிலர்
பொதிகைத் தமிழ் அவருக்குச் சொந்தமில்லை

Wednesday, February 18, 2009

தமிழன்னை துன்பம் கொண்டு

ஆட்சியாளன் தவறு தன்னை சுட்டிக் காட்டி
அவன் அவனைத் தண்டித்து மரணம் கொள்ள
காட்சி அதைத் தமிழர்களின் மனதில் எல்லாம்
கண்ணகியாள் வழியாக இளங்கோ தந்தார்
மாட்சிமை சேர் மனு நீதிச் சோழன் அவன்
மகனையே தன் தேர்க்காலில் இட்டுக்கொன்ற
ஆட்சி நெறி தன்னை அன்றே சேக்கிழார் தான்
அழகான தமிழ் மொழியில் நமக்களித் தார்


பேச்சு வெறும் பேச்சு இதை அரங்கம் தோறும்
பேசுகின்றோம் மகிழுகின்றோம் கலைகின்றோம் நாம்
கூச்சம் இல்லை இங்கு வாழ -- கொடுமைகளின்
கூத்தாட்டம் கண்டும் நாம் வாழுகின்றோம்
ஆச்சிகளின் காலத்தில் தமிழர் ஆண்ட
அறநெறிகள் தனை நினைத்தே ஏங்குகின்றோம்
போச்சு அந்தக் காலமெல்லாம் போச்சு என்றே
புலம்புகின்றோம் அழுகின்றோம் உயிர் வாழ்கின்றோம்


ஆட்சியாளர் தமைப் புகழ்தல் அவர்கள் வீட்டு
அடுக்களையைப் பாராட்டிக் கவி படைத்தல்
கூச்சமின்றி அவர்கள் வீட்டு நாயைக் கூட
குளிப்பாட்டல் அதற்கும் கூட நற்றமிழில்
பாட்டெழுதல் அது குரைத்தால் அதற்கும் கூட
பைந்தமிழில் விளக்கங்கள் எழுதிப் போற்றல்
கூட்டம் ஒரு கூட்டம் இதை பெற்றதாலே
குமுறுகின்றார் தமிழன்னை துன்பம் கொண்டு

குறட் கருத்து

உறவு அற்று தொழிலும் அற்று பொருளும் அற்று
உணவும் அற்று ஒன்று மற்று நிற்பார் தம்மின்
அழி பசியை அழித்தவர்க்கு உணவு தந்து
அன்றாடம் காத்து நிற்பார் அது மட்டுமே
செறிவாகக் காப்பாக இருக்கும் என்றும்
சேமிப்பு அது ஒன்றே இறுதி வரை
அறிவீர் நீர் மானிடரே உணவளியும்
ஆண்டவனின் கணக்கினிலும் முதலிடமே


குறள்

அற்றார் அழி பசி தீர்த்தல் அ தொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி

Monday, February 16, 2009

இந்த இராமர் வேறு

வேடன் தன்னை உறவாய்க் கொண்ட
வில்லின் வேந்தன் இராமர்
விருப்பம் கொண்டு குரங்கைக் கூட
விளைந்த உறவாய்க் கொண் டார்
தேடி வந்த அரக்கன் தானோ
தெய்வத் தம்பி ஆனான்
தேர்தல் தோறும் பிறக்கும் இராமர்
தீமை செய்ய வாரார்


வந்து விடுவார் வந்து விடுவார்
வந்து விடுவார் இராமர்
வலிகள் சேர்க்கும் இரத்தம் கேட்கும்
வன்முறைக்காய் வருவார்
அனைவரையும் உறவு கொண்ட
அந்த இராமர் இல்லை
அன்பு கொன்ற மனிதர் கொண்ட
இந்த இராமர் வேறு

பட்டம் கொள்வார்

சின்ன வயதினில் கொள்ளை யடித்திடச்
சிறப்புறக் கற்றவர்கள் இங்கு
சிறப்புறக் கற்றவர்கள்
இங்கு
சீரற்ற முறையினில் வென்றவர் வீட்டினில்
சேவகம் செய்பவர்கள் என்றும்
சேவகம் செய்பவர்கள்

மன்னவரென் றெவர் வந்திட்ட போதிலும்
மாலைகள் சூட்டுபவர் வீழ்ந்து
மாலைகள் சூட்டுபவர்

மனம் போன போக்கினில் வாழ்பவர் முன்னரோ
மண்டிகள் போடுபவர் என்றும்
மண்டிகள் போடுபவர்

இனம் சேர்ந்து விருதுகள் பல வாங்கி வாங்கியே
ஏளனப் பட்டவர்கள என்றும்
ஏளனப் பட்டவர்கள்

ஏளனப் படுவதில் சுகம் கண்டு சுகம் கண்டு
ஏவல் நாயானவர்கள் இங்கே
ஏவல் நாயானவர்கள்


எவருக்கு முன்னாலும் நெளிந்து நெளிந்திவர்
இரு கைகள் கட்டி நிற்பார் தங்கள்
இரு கைகள் கட்டி நிற்பார்

எல்லாச் சபையிலும் பொல்லாப்பு இன்றியே
ஏய்ப்பதில் வெற்றி கொள்வார் இவர்
ஏய்ப்பதில் வெற்றி கொள்வார்

தவறுக்கு ஏமாறும் பணம் படைத்தோர் தமை
தனதாளாய் ஆக்கிக் கொள்வார் இவர்
தனதாளாய் ஆக்கிக் கொள்வார்

தன் புகழ் இல்லாமல் புகழ் படைத்தோர் தம்மின்
தனிப் புகழ் தன்னில் வாழ்வார் இவர்
தனிப் புகழ் தம்மில் வாழ்வார்

எவருக்கு எது நேர்ந்த போதிலும் தனைகாக்க
எதையுமே செய்து நிற்பார் இவர்
எதையுமே செய்து நிற்பார்

ஏய்ப்பது நல்லவர் தம்மையே பணத்தின் முன்
எடு பிடியாக நிற்பார் அவர்
எடு பிடியாக நிற்பார்

சுவருக்காய் அலைகின்ற கழுதைகள் இவற்றுக்கு
சொரணைகள் இருப்பதில்லை என்றும்
சொரணைகள் இருப்பதில்லை

சோதனை வேதனை சாதனை அனைத்திற்கும்
சொறிந்திவர் வாழுகின்றார் புண்கள்
சொறிந்திவர் வாழுகின்றார்

துறவியர் வேடத்துக் கொலைகாரர் கூட்டத்தில்
தூயராய்க் காட்டிக் கொள்வார் இவர்
தூயராய்க் காட்டிக் கொள்வார்

துயரின்றிச் சுரண்டியே வாழ்பவர் தமக்கிவர்
துணையாகிப் பணம் பெறுவார் இவர்
துணையாகிப் பணம் பெறுவார்

உறவுக்காய் ஏங்கிய ஏழை குலப் பெண்ணின்
உடல் அழித் தொதுக்கி வைப்பார் இவர்
உடல் அழித் தொதுக்கி வைப்பார்

ஊருக்குள் கவிஞராய்ப் போலிகள் பணத்தினில்
ஊர்வலம் தினம் வருவார் இவர்
ஊர்வலம் தினம் வருவார்

கரவுகள் கரவுகள் ஆயிரம் கரவுகள்
கழிசடை வாழ்க்கை வாழ்வார் இவர்
கழிசடை வாழ்க்கை வாழ்வார்

கவலைகள் இல்லாமல் மானமே கொள்ளாமல்
கணக்கின்றிப் பட்டம் கொள்வார் இவர்
கணக்கின்றிப் பட்டம் கொள்வார்

வணங்குகின்றேன்

காட்டுகின்றார் நல்வழியே காட்டுகின்றார்
கடவுளவர் நல்வழியே காட்டுகின்றார்
பூட்டுகின்றார் நல்வினையே பூட்டுகின்றார்
பொறுப்போடு வாழ்வதற்கு வகைகள் செய்தார்
கூட்டுகின்றார் நல்லவரை நண்பரெனக்
கொள்கையுடன் வாழ்வாரைச் சேர்த்து வைத்தார்
பாட்டினிலே அவர்தம்மைப் பாடுதற்கும்
பைந்தமிழை எனக்களித்துப் போற்றுகின்றார்

நாட்டு மக்கள் எனைக் கண்டு போற்றி நிற்க
நலமுடையோர் கூட்டமெல்லாம் வாழ்த்தி நிற்க
கேட்காமல் நல்லதெல்லாம் தானளித்து
கேளாரும் என் பேச்சைக் கேட்க வைத்து
ஆட்டுகின்றார் எம்மிறைவர் எம்மை நன்கு
ஆடுகின்றேன் பைந்தமிழால் ஆடுகின்றேன்
கூட்டுவித்த எம்மிறையே எந்தனது
குலம் காக்கும் பேரிறையே வணங்குகின்றேன்

என்றும் என்றும்

படுத்தவுடன் உறங்குகின்றோம் என்று சொன்னால்
படைத்தவரும் காட்டுகின்றகருணை யது
அடுத்தவர்க்கு நன்மை செய்தோம் என்று சொன்னால்
ஆண்டவனார் அருளிச் செய்த அன்பு அது
கெடுத்தவர்க்கும் நன்மை செய்தோம் என்று சொன்னால்
கேட்காமல் இறைவன் தந்த பண்பு அது
தொடுத்து இந்த நற் குணங்கள் அனைத்தும் தர
தொழுது நிற்பேன் என்னிறையை என்றும் என்றும்

Monday, February 9, 2009

வேறு என்ன

தவறதுவே ஒழுக்கம் என்று வாழுகின்ற
தலைவர்களைக் காண்கையிலே வருத்தம் கொண்டோம்
எவரேனும் அவர் குறித்துப் பேசாமலே
எப்போதும் புகழுகின்றார் தவித்து நின்றோம்
சுவர் போலே வாழுகின்றார் நாணமின்றி
சொல்வதற்கு யாருமில்லை துன்பம் கொண்டோம்
அவரேனும்கேட்பாரா ஆண்டவர்தான்
அதை நம்பி வாழுகின்றோம் வேறு என்ன

மேன்மையாவீர்

மண்டியிட்டுத் தொழுபவரும் மனத்திற்குள்ளே
மந்திரங்கள் சொல்பவரும் சிலுவை முன்னே
தெண்டனிட்டு நிற்பவரும் அனைவருமே
தெய்வமதை மனதில் கொண்டு நிற்பவர் தான்
கொண்ட தெய்வநம்பிக்கை உண்மை யென்றால்
கோஷங்கள் சண்டைகள் இங்கெதற்கு
ஒன்றிணைவீர் சண்டை விட்டுத் தெய்வம் தன்னை
உண்மையென்று உணர்ந்தால் நீர் மேன்மையாவீர்

கோயிலுக்குள் நிற்பவரும் இறைவன் தன்னைக்
கொண்டாடித் துதிப்பவர் தான் ஐந்து வேளை
தானிருக்குமிடத்தினிலே இறைவன் தன்னை
தான் பணிந்து தொழுபவரும் சிறந்தவர் தான்
வானிருந்து வந்த மகன் சிலுவை தன்னை
வணங்கி நிற்கும் அன்பருமே நல்லவர் தான்
நாணாமல் சண்டையிட வழி வகுக்கும்
நலமற்றோர் தனை ஒதுக்கி வெல்ல வேண்டும்

Sunday, February 8, 2009

தமிழரிங்கு

எத்தனையோ பேர் சொன்னார் கேட்டா வாழ்ந்தீர்
எவரெவரோ சொன்னாலுமுணர்ந்தா வாழ்ந்தீர்
வித்தகமாய்ப் பேசிடுவீர் மேலும் மேலும்
விளக்கங்கள் கூறிடுவீர் தவறையெல்லாம்
மொத்தமெனக் குத்தகைக்கு நீரே கொள்வீர்
முத்தமிழா உமக்கேதான் சொந்தம் என்பீர்
எத்துவாளித்தனம் எல்லாம் உமக்கே சொந்தம்
என்ன செய்ய நாங்களும் தான் தமிழரிங்கு

Saturday, February 7, 2009

அழுது நிற்கும்

கோடிகளாய்ச் சேருங்கள் ஏழைகளின்
குமுறல்களை அழுகைகளைப் புறந் தள்ளுங்கள்
பேடிகளாய் வாழுங்கள் சேர்த்து விட்ட
பெரும் பொருளை பத்திரமாய்க் காத்திடுங்கள்
நாடி தளர்ந்தொடுங்கி உயிர் பிரியும் நேரம்
நடந்ததெல்லாம் ஒரு நொடியில் நினைவில் வரும்
கூடி அழும் உறவு எல்லாம் உமக்கு அல்ல
கோடிகளை கணக்கிட்டே அழுது நிற்கும்

அழியச் செய்தோம்

தமிழுக்காய் தங்களையே அழித்துக் கொண்டோர்
தாய் தந்தை குடும்பத்தை மறந்து நின்றோர்
அமிழ்தொழிக்கும் இனிய நந்தம் மொழி தமக்காய்
அன்றிருந்து வறுமை தமக்கு ஆளாய்ப் போனோர்
இமை மூடும் வரை மொழிக்காய் தம்மைத் தந்தோர்
இல்லையென்று போனாரா இன்னும் வாழ்ந்தார்
நமை நினைத்தால் கேவலமே மிஞ்சும் அந்த
நல்லவர்கள் குடும்பமெல்லாம் அழியச் செய்தோம்

தியாகராஜ பாகவதர்

வேற்றுமொழிப் பாடலினைப் பாட மாட்டேன்
வேண்டு மட்டும் தமிழிசையே பாடி நிற்பேன்
கூற்றுவன் போல் வறுமை எனைக் கொன்ற போதும்
கூடி நின்றார் எனை விட்டுச் சென்ற போதும்
ஏற்ற மொழி எந்தன்மொழி இறைவன் மொழி
என் மொழியாம் தமிழிலேயே பாடி நிற்பேன்
ஆற்றல் மிக்க தியாகராஜ பாகவதர்
அவரையும் நாம் வறுமையிலே விட்டு விட்டோம்

Friday, February 6, 2009

தமிழர் வழி

குறள் ஒன்றே போதும் நந்தம் வாழ்வினிலே
கொற்றவர் போல் வாழ்வதற்கு தமிழர் பெற்ற
வரம் அதனை மறந்து இங்கே தமிழரெல்லாம்
வாழ்வதற்கு யார் யாரோ தேடுகின்றார்
பிறர் காட்டும் வழிகளெல்லாம் பிழை வழிகள்
பெரியவர் போல் நடிக்கின்ற சனி வழிகள்
குறள் வழியே மனித வழி மனிதம் தன்னை
கொண்டாடி புகழ் சேர்க்கும் தமிழர் வழி

வாங்கிடுங்கள்

இயல்பான வாழ்க்கை யதை வாழ்ந்திருந்தால்
எல்லார்க்கும் எப்போதும் துன்பம் இல்லை
அயலாரைப் பார்த்தவர் போல் வாழ்வதற்காய்
ஆசைகளைக் கொள்வதிலே அர்த்தமில்லை
துயரங்கள் துன்பங்கள் என்பதெல்லாம்
தூரவே சென்று விடும் ஆசை விட்டால்
அயர்வின்றி மனம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்
அனைவருமே வாழ்த்தி நிற்பார் வாங்கிடுங்கள்

Thursday, February 5, 2009

ஏழைகள்

ஏழைகள் மட்டுமே எரிகின்றார் இங்கே
இருப்பவர் சுகமாய் இருக்கின்றார்
கோழைகள் எரிந்தவர் புகழைக் கொண்டு
கொள்கைக் கூட்டம் போடுகின்றார்
வாழையைப் போலத் தமையே தந்தார்
வறுமையில் வாடிய இளைஞர் அவர்
பேழைகள் சேர்த்துப் பிழைக்கும் தலைவர்
பெரிதாய்க் கூச்சல் போடுகின்றார்


தமிழர் பிணங்கள் தம்மை வைத்து
தலைவர்கள் இங்கே வாழுகின்றார்
குதியாய்க் குதித்துக் கோபம் காட்டி
குரலை உயர்த்திப் பேசுகின்றார்
இவர்களை நம்பி இதற்கு முன்னாலே
எரிந்தவர் குடும்பம் காத்தாரா?
எவரை எதிர்த்து எரிந்தாரோ இவர்
அவரோடேயே போய்ச் சேர்ந்திட்டார்


அங்கே அழிவதும் தமிழினம்தான்
அதற்காய் எரிந்தவர் தமிழினம்தான்
இங்கே ஆடிடும் தலைவர்கள் இவர்க்கு
இதயம் இருப்பது தேர்தலில்தான்
சங்கே முழங்கு என்ற பாரதி
தாசனும் இங்கே இன்றில்லை
சரியாய் மீண்டும் ஏழைகள் தம்மைச்
சாவில் தள்ளுதல் முறை தாமோ

Wednesday, February 4, 2009

வாழி நீவீர்

ஏழையரே சாதி மதம் விட்டு விட்டு
எல்லோரும் ஒன்றாகப் போரிடுங்கள்
கோழைகளாய் உங்களையே ஏய்த்து வாழும்
கொள்ளையரை அடியோடு வேரறுங்கள்
நாளை இந்த நாடு உங்கள் கைகளிலே
நம்பிக்கை கொள்ளுங்கள்வெற்றி கொண்டு
ஏழைகள் தான் மனிதர் என்று உலகம் காண
இணைந்திடுங்கள் வெல்லுங்கள் வாழி நீவீர்

சுடலைமாடன்வருவான்

இருநூறு ருபாய்க்காகச் சிறுமியினை
இப்படியும் அப்படியும் உதைக்கின்றாரே
பல நூறு கோடிகளை வெட்கமின்றி
பங்கிட்டு வாழுகின்ற தலைவர்களை
திரு நாட்டின் கேவலமாய் நாணமின்றி
தேர்தல் தோறும் வருகின்ற திருடர்களை
வறுத்தெடுக்கச் சுடலை மாடன் வருவான் என்றே
வணங்கி நின்றுக் குலவையிட்டோம் வருவான் அவன்

நாடொழிக்க

திருடியதாய்ச் சொல்லி ஏழைச் சிறுமி தன்னை
தேம்பியழத் துன்புறுத்தும் காவலர்கள்
அறிவிழந்த கொடுமையினைக் காணும் நேரம்
அடி வயிறு கொதிக்கிறது வறுமையென்னும்
கொடுமையினை வைத்தன்றோ ஏழைகளை
கூப்பிட்டுக் கூப்பிட்டுக்கொல்லுகின்றார்
அடியவராய்க் கோடிகளைக் கொள்ளையிட்டார்
அடிகளிலே இவர் விழுந்து வணங்குகின்றார்சத்தியத்தின் பெயரிலே கொள்ளையிட்டார் மேலே
சரியாக வைப்பாரோ கைகளினை
மெத்தை வீட்டுத் தலைவர்களாய் மாறி நிற்கும்
மேல்மினுக்கிக் கொள்ளையரைப் பிடிப்பாரோ தான்
எத்தர்களை மக்களது வரிப் பணத்தை
ஏய்த்திங்கு வாழ்வாரை அடிப்பாரோ காண்
செத்தொழிந்து போகாமல் மனிதரென்று
சீர் கெட்டார் வாழுகின்றார் நாடொழிக்க

பட்டுகோட்டையார்

ஏழைகளின் மொழியினிலே ஏழைகட்காய்
எப்போதும் எழுதி நின்ற இயக்க மவன்
கோழைகளின் மனத்தினிலும் கொள்கைகளை
கூத்தாட வைத்து நின்ற போர்க் கவிஞன்
வாழையடி வாழையாகக் கூனி நின்ற
வகையாரின் குறுக் கெலும்பாய் வந்த தோழன்
நாளை வரும் வாழ்க்கையதை ஏழைகளின்
நலம் காணும் வழியினிலே பாட்டிசைத் தான்


தூங்குவதில் சுகம் கண்டார் தனை எழுப்பி
தொண்டு செய்ய வழி சொன்ன உண்மைத் தோழன்
ஏங்கி நிற்பார் திருடாமல் இருப்பதற்கு
இருப்பவரே காரணமென்று உரைத்த நண்பன்
வாங்கி வாங்கிச் சேர்த்தவர்கள் தராத போது
வயிறு பசித்தழுபவர்க்காய் வழிகள் சொன்னான்
ஓங்கி நல்ல வழிகளெல்லாம் சொல்லி நின்ற
உயர் பட்டுக்கோட்டையாரின் வழியில் நிற்போம்

Sunday, February 1, 2009

32 வது சென்னை புத்தகக் காட்சி தலைவர் காந்தி கண்ணதாசனோடு

விருந்திற்கு வந்திருந்தார் இல்லத்திற்கு வெல்தமிழின் இசை அறிஞர் துணைவியோடு