சொடலையிலே ஆடுகின்ற சொடலமாடா எங்க சொடலமாடா
சுத்தபத்தமாக ஒன்னக் கும்பிடுதோம் ஆமா கும்பிடுதோம்
திடலினிலே ஆடுகின்றார் சொடலமாடா ஆமா சொடலமாடா
தேசமெல்லாம் வாய் பிளக்கச் சுடலமாடா ஆமா சொடலமாடா
கொடல உருவி மால போட்டு நீயும் ஆட ஆமா நீயும் ஆட
கொமரிப் பெண்கள் உடலக் காட்டி ஆடுகிறார் ஆமா ஆடுகின்றார்
தங்களையே ஏலம் போட ஏலம் போட ஆமா ஏலம் போட
தனித் தனியாய் ஆடுதவர் பெருமை கொண்டார் ஆமா பெருமை கொண்டார்
கடலத் தாண்டி மறச்சு வச்ச கள்ளப் பணம் ஆமா கள்ளப் பணம்
கணக்கின்றிப் புரளுதிங்கே சொடலமாடா ஆமா சொடலமாடா
தெனம் ஆட்டம் முடிஞ்ச பின்னே ராத்திரிக்கு ஆமா ராத்திரிக்கு
தேக சுக வெளையாட்டு நடக்குதங்கே ஆமா நடக்குதங்கே
மோசடியில் வளந்த எங்க மோடி அண்ணன் எங்க மோடி அண்ணன்
முத்தக் கூட்டம் வெச்சிருக்கான் தன்னைச் சுத்தி ஆமா தன்னைச் சுத்தி
ஆரு ஜெயிக்க வேணுமின்னு முன்னக் கூட்டி ஆமா முன்னக் கூட்டி
அண்ணன் சொல்லி வெச்சிருக்கார் தன்னைக் கட்டி ஆமா தன்னைக் கட்டி
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா அடி டண்டணக்கா
டண்டணக்கா டண்டணக்கா
Friday, April 23, 2010
ஆட வரணும் சொடலமாடன்
Tuesday, March 9, 2010
வர மாட்டியா
ஊரெல்லாம் ஏய்க்கின்றார் ஏய்த்து விட்டு
உலக மறை திருக்குறளை இயம்புகின்றார்
சீரெல்லாம் குலைக்கின்றார் குலைத்து விட்டு
சிலம்பதனின் பெருமைகளைப் பேசுகின்றார்
நீரின்றித் தவிக்கின்ற ஏழையர்க்கோ
நிலை குலைய மதுவினையே வழங்குகின்றார்
யார் கேட்பார் இவர்களையே சொடலமாடா
எங்கிட்டு நீ ஒழிஞ்ச வர மாட்டீயா
Tuesday, February 9, 2010
தன் குடும்பம் காக்கின்ற ஒரு தலைவர்
தனிக் குடும்பம் ஒன்றிற்காய் ஒரு தலைவி
நம் குடும்பம் காப்பதற்காய் வாக்குத் தந்தால்
நாம் அதனை விற்பதற்கோ நாணவில்லை
தன் குடும்பம் தனைத் துறந்து தாய் நாட்டிற்காய்
தடியடியும் சிறை வாழ்வும் பெற்றழிந்த
நற் குடும்பம் பல இங்கு தெருவினிலே
நாதியற்றுப் போனோமே சொடலமாடா
சொடலமாடன் சொடல மாடன் வந்திட்டாரு
சொடலமாடன் சொடலமாடன் வந்திட்டாரு
சுத்த பத்தமாக வந்து கும்பிடுங்க
குடல உருவி மால போட்டு ஆடத்தானே
குலவையிட்டுப் பாடுங்க அவரைத்தானே
விடலத்தன அரசியல நாட்டை விட்டு
விரட்ட வேண்டுமென்று அவரக் கும்பிடுங்க
மடமையாக வாக்களிக்கும் சனங்களுக்கு
மதி வரணு மின்னு சொல்லிக் கும்பிடுங்க
வேலைக்குன்னு சம்பளத்தில் ஆளே வச்சு
விழுந்து அவரைக் கும்பிடுத சோகம் போக்க
கோழையென அனைவருமே ஆகி இங்கே
கும்பிட்டு நிற்கின்ற ஏழ்மை போக்க
நாள நம்ம புள்ளைகளும் நல்லா வாழ
நாட்டில் உள்ள தீயவரை ஒழிக்க இங்க்
சொடல மாடன் சொடலமாடன் வந்திட்டாரு
சுத்த பத்தமாக வந்து கும்பிடுங்க
Saturday, February 6, 2010
ஆமா உண்டா சொல்லு
கண்ணைக் குத்திரும் சாமின்னு அன்னிக்குக்
கதை கதையாச் சொன்னாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
கண்ணேயில்லாமத் தான் சாமில்லாம் நிக்குது அவங்க
கண்ணைக் குத்தினது யாரு சொல்லு
ஆமா யாரு சொல்லு
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படாதேன்னு
அன்னிக்குச் சொன்னாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
அடுத்தவர் பொருளையே ஆட்டையைப் போடுறார்
ஆத்தாவே இல்லியா அவருக்கிங்கு
ஆமா அவருக்கிங்கு
ஊரார் பொருளுக்கு ஆசைப் படாதேன்னு
உண்மையாச் சொன்னாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
ஊரையே தூக்கி முழுங்குறார் அவருக்கு
உண்மை சொன்ன ஆத்தா உண்டா சொல்லு
ஆமா உண்டா சொல்லு
சொடலமாடன் வந்து குடலப் புடுங்குவான்னு
சொல்லி வளத்தாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
சொடலமாடன் கோயில் நிலத்தையும் கூடத்தான்
கொள்ளை அடித்திட்டார் எங்க தாதா
ஆமா எங்க தாதா
சொடலமாடா கொல் இவரை
சுடுகாடு உனக்கு இனி சொந்தமில்ல
சுத்து முத்தும் பிளாட் போட்டு வித்திட்டாங்க
சுடுகாட்டுச் சாம்பலினி கெடைக்காதிங்கு
சுடுறதுக்கு மின்சாரம் வந்திடுச்சி
சுடுகாட்டுப் பேய்களுமே அங்க இல்ல
சுத்து திங்க ஊருக்குள் தலைவராக
சுடுகாட்டை ஊருக்குள்ளே மாத்திட்டாங்க
சொடலமாடா இங்க வந்து கொல் இவரை
Saturday, June 20, 2009
ஆடு ஆடு
ஒம் பலிக்காய்ப் பல பேரு இங்கே இன்னும்
உயிரோட பிணமாத்தான் வாழ்ந்திருக்கார்
தன் பெண்டு தன் பிள்ளை என்றே வாழ்ந்து
தவித்திருக்கும் ஏழையரை ஏச்சே வாழ்ந்தார்
கண் பார்க்க வேண்டாம் சுடுகாடு விட்டு
காடான நாட்டுக்குள் வந்து ஆடு
புண்ணான மனிதரையே பொசுக்கி ஆடு
பொங்க வைக்கோம் சொடலமாடா ஆடு ஆடு
வர மாட்டியா?
கோடிக்கு மேல் சொத்து உள்ளோரெல்லாம்
கூட்டாக நாடாளுமன்றம் சேர்ந்தார்
ஆடிக்குக் கழிவினிலே துணி எடுக்கும்
அப்பாவி மக்கள் எல்லாம் வாக்குத் தந்தார்
வாடிக்கையாக தந்த வாய்ச் சொல்லெல்லாம்
வறுமையிலே ஏழைக்கு மறந்தே போகும்
ஆடி ஆடி இவங்களையே கேள்வி கேக்க
அய்யா ஏஞ் சொடல மாடா வர மாட்டியா?
கேக்கப் போற
கையூட்டுப் பெற்றதற்காய் சின்னச் சின்னக்
காவலர்கள் பணியாட்கள் பலரை இங்கு
மெய்யாகக் கைது செய்து மிக விரைவாய்
மேலான நடவடிக்கை எல்லாம் கொள்வார்
அய்யாயிரம் கோடி கோடி கோடி
அடித்தவர்கள் வீட்டிற்கோ காவல் செய்வார்
எய்யா ஏஞ் சொடலமாடா வர மாட்டியா?
எப்ப வந்து இவங்களைத்தான் கேக்கப் போற?