Sunday, September 20, 2009

எந்தன் மதம்

பாவங்கள் தீர்ப்பதற்காய் இராமேஸ்வரப்
பவித்திரமாம் தீர்த்தத்தில் குளிப்பார்தம்மை
பாவத்தில் மேலும் ஒன்றைக் கூட்டிக் கொண்டார்
பாவியவர் என்கின்றார் விவேகானந்தக்
காவியுடை வேந்தரவர் மேலும் சொல்வார்
கவனிக்க ஆளற்றுக் கிடக்கும் நாயின்
தேவையதைப் பசியதனை தீர்ப்பதுவே
தெரிகின்ற நல்ல மதம் எந்தன் மதம்

Wednesday, September 16, 2009

ஆண்கள் குலம்

பெண்ணென்றால் சமைப்பதற்கு துவைப்பதற்கு
பேசுதற்கோ கலப்பதற்கோ இல்லையென்னும்
மண்ணுலக மூடர்களைக் காணுகையில்
மனமிங்கே கொதிக்கிறது துடிக்கிறது
கண்களைப் போல் பெண்களென்று மேடை தோறும்
கதைப்பதற்குத் தெரிகின்றது வேறு என்ன
புண்கள் இந்த ஆடவர்கள் இவர்களாலே
புகழிழந்து நிற்கிதிங்கு ஆண்கள் குலம்

ஒழிய வேண்டும்

மாபெரிய தமிழ் நடிகை சிவாஜி அண்ணன்
மனமாரப் போற்றுகின்ற பெரு நடிகை
யாரெனினும் வணங்கி நிற்கும் ஆச்சி அம்மா
எங்களது மனோரமா பெண்களுக்காய்
பேசுகின்றார் சரியான நேரந்தன்னில்
பெரிய தெய்வம் அவர் தன்னைக் காக்க வேண்டும்
கூசுதிங்கு ஆடவரின் கொடுமை அய்யோ
கூறுகின்றார் அதையே தான் மனோரமா ஆச்சி


ஆண்மை யற்றுப் போன பல ஆடவர்கள்
அதை மறைத்துப் பெண்களினை மணமும் செய்யும்
கேடு கெட்ட செயலதனை மனோரமா ஆச்சி
கிளர்ச்சி செய்து தடுக்க என்று கிளம்புகின்றார்
வான் புகழ மண் புகழ போராட்டத்தில்
வாகை சூட வேண்டுமவர் வாழ்த்துகின்றேன்
தேனிதழின் பெண்களினை உணர்ச்சிகளைத்
தீய்க்கின்ற இக்கொடுமை ஒழிய வேண்டும்

Sunday, September 13, 2009

எதிர்த்திடுவோம்

உடன் வாழ வந்தவனோ உடலை மட்டும்
உறவென்று கொண்டவனாய் வாழ வந்தால்
உடல் நாணத் துன்புறுவார் பெண்கள் அய்யோ
உணர்ந்தாரா இல்லையே ஆண்கள் இங்கு
மனம் நாடிப் பேசாராய் அன்பு செய்து
மணம் கொண்ட பண்பாராய் இல்லார் விட்டு
தனை உணர்ந்த நல்லவனைத் தேடி வாழ்ந்தால்
தவறாமோ அதுவேதான் நல்ல காதல்


காதலென்றால் நல்லதென்று உணரார் தானே
கள்ளத்தைக் காதலிலே சேர்க்கின்றாரே
வேதனையை வாழ்க்கையென்று உணர்ந்த பின்னர்
விரும்பாத பேயோடு வாழ்தல் விட்டு
கோதி நன்கு அரவணைத்து அன்பு செய்து
கொஞ்சி மனக் கோயிலுக்குள் வைத்துப் போற்றும்
பாதி எல்லாம் பாதி என்று புரிந்து வாழப்
பழகியவர் தன்னோடு வாழ்தல் காதல்


ஒடி விட்டாள் என்கின்றார் எங்கே அன்பை
உதவாதார் தனை விட்டு ஒடல் நியாயம்
கூடி விட்டாள் என்கின்றார் நல்ல நட்பைக்
கொண்டாடிக் காதல் செய்யும் நல்லவரைப்
பேடியைப் போல் அவர் தனையே கள்ளக் காதல்
பேணியவர் என்று சொல்லும் அறியார் தம்மைக்
கூடி நாமும் எதிர்த்திடுவோம் கொடுமையாக
கூச வைக்கும் பேச்சினையே எதிர்த்திடுவோம்

இருக்கின்றன

சென்னையில்
இன்னும்
புறாக்கள்
இருக்கின்றன

Tuesday, September 8, 2009

தாமிரபரணி

தாமிரபரணி
இன்னும்
ஒடிக்
கொண்டுதானிருக்கிறது

தைப்பூச
மண்டபத்துப்
பெண்களைப்
போல்

வேண்டும் அம்மா

பெண்களுக்குச் சொல்லுகின்றேன் அன்பு செய்து
பெருமையுடன் மனித குலம் காத்து நிற்கும்
வண்மை கொண்ட நீங்கள் இங்கு அடிமையாக
வாழுவதில் நியாயம் இல்லை புரிந்து வாழ்வீர்
உண்மை இல்லாக் கணவனையும் உவந்து போற்றி
உயர் வாழ்க்கை வாழ்வது வாய்ப் போலி செய்து
கண்மணியாய் அவனையுமே காத்து நிற்கும்
காவியத்துப் பெண்கள் அல்ல உயிர்கள் நீங்கள்


உங்களுக்கும் உடல் உண்டு உணர்ச்சி உண்டு
உள்ளுக்குள் எத்தனையோ ஆசை உண்டு
தங்களையே புரியாத தடியரோடே
தான் வாழ்தல் நெறி என்ற மடமை தன்னை
புண்களைப் போல் கொண்டு நீரும் வாழ்ந்திருத்தல்
பொய் மடமை கோழைத்தனம் புரிவீர் நீரே
கண்கள் என்று உம்மை இங்கு புரிந்து கொள்ளா
கயமைகளை எதிர்த்து வெல்லல் வேண்டும் அம்மா

Sunday, September 6, 2009

எங்கள் ஊர்

இன்னும்
எங்கள்
ஊர்
கொஞ்சம்
பத்திரமாகத்
தான்
இருக்கிறது

காலையில்
ஒரு
குயில்
எங்கிருந்தோ
கூவுகிறது

என்
வீட்டு
நந்தியாவட்டையிலும்
பவளமல்லி
மரத்திலும்
சிட்டுக் குருவிகள்
கொஞ்சிக்
கொண்டிருக்கின்றன

அதிகாலை
பால் மணிச்
சத்தம்
கேட்டுக்
கொண்டுதான்
இருக்கின்றது

புதிய
மனிதர்களையும்
போலீஸ்காரர்களையும்
பார்த்துத்
தெரு
நாய்கள்
குலைத்துக்
கொண்டுதான்
இருக்கின்றன

ஒற்றை
ஆட்டுக் கிடா
பத்துப்
பெண்
ஆடுகளைத்
துரத்திக்
கொண்டுதான்
இருக்கிறது

தெருப்
பெண்களுக்கு
அருள்
பாலிப்பதற்கென்றே
பசுக்கள்
காலையிலேயே
தெருவிற்கு
வந்து
விடுகின்றன

பாலாக்கீரை
அரைக்கீரை
பொன்னாங்கண்ணிக்கீரை
பாட்டிகளின்
குரல்
கேட்டுக்
கொண்டுதான் இருக்கின்றது

கரிசக்குளம்
கீரைத்தண்டு
கணபதி
விற்றுக்
கொண்டுதான்
இருக்கிறார்

ஆனையும்
திருமஞ்சனக்
குடமும்
அம்பாளுக்குப்
போய்க்
கொண்டு
தானிருக்கிறது

செண்பகப் பூ
விற்ற
தாத்தாவுக்கு
வாரிசுகள்
இல்லை
போல

நயினார்
குளத்திற்கு
வெளி
நாட்டுப்
பறவைகள்
வந்து
கொண்டு
தானிருக்கின்றன

அதிகச்
சிலைகள்
இல்லாததனால்
எங்கள்
ஊர்
கொஞ்சம்
அழகாகத்
தான்
இருக்கிறது

Friday, September 4, 2009

பெண்கள் காப்பீர்

மணம் கண்டு விட்டாலோ பெண்களெல்லாம்
மாப்பிள்ளை வீட்டார்க்குப் பெருமை சேர்க்க
குணம் கொண்டு வாழ வேண்டும் என்று சொல்லும்
கூட்டத்தார் வேறொன்றும் சொல்லுகின்றார்
தன் வீடு தாய் தந்தை அனைத்தும் இனி
தான் புகுந்த வீடு என்று வாழுவதை
பெண் வாழ்க்கை என்று இங்கு கூறுகின்றார்
பேதைமையின் உச்சமன்றோ மூட மாந்தர்


பெற்றவரை மறப்பதற்கா மணமாம் வாழ்க்கை
பெரியவரே அறிவு இன்றிப் பிதற்றுகின்றீர்
கற்றவராய் இருப்பாரில் சிலரும் கூட
கண்மூடிச் சொல்லுகின்றார் இந்தச் செய்தி
உற்றவனாய் ஒரு துணையைத் தேடித் தரல்
உரிமை என்று கண்டு கொண்ட பெற்றோர் தம்மை
மற்றவராய் ஆக்குதற்கு முயற்சி செய்யும்
மடமையினை விட்டொழிப்பீர் பெண்கள் காப்பீர்