Friday, January 28, 2011

உள்துறையும் பிரதமரும் ஒண்ணு போல வாழ்க

நல்ல செய்தி நல்ல செய்தி நாட்டோரே நல்ல செய்தி


தோற்றுப் போயும் நாட்டையே காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் உள் துறை அமைச்சருக்கும் வாய் திறக்க முடியாமலேயே வாழ்ந்து
கொண்டிருக்கும் பிரதமருக்கும் தாமஸ் மேல் கேரள அரசு தொடர்ந்
திருந்த ஊழல் வழக்குத் தெரியாமலே போயிருக்கு.

எவ்வளவு குழந்தை மனசு கொண்ட பிரதமர் விரல் சூப்பத் தெரியாத
உள்துறை அமைச்சர்.

நாமிருக்கும் நாடு நம தென்ப தறிந்தோம் அது
நமக்கே உடைமையாம் என்பதறிந்தோம்

இந்த வரிகளை எழுதியது எங்க அப்பன் பாரதி

வாழ்க பாரதி நாமம்

Wednesday, January 26, 2011

குடியரசு தின நற்செய்திகள்

குடியரசுதின நற்செய்திகள்
வாழ்க நிதியமைச்சர்

வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணப் பட்டியலை வெளி
யிட முடியாது

இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி மஹாராஷ்டிராவில் மணற் கொள்ளையர்களால் எரித்துக் கொல்லப்
பட்டார்

கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த திருடன் காவலர்களிடமிருந்து தப்பி ஒட்டம்

மகாத்மாவிற்கு ஜே
காமராஜ் நாமம் வாழ்க

Tuesday, January 25, 2011

காங்கிரஸ் பா ஜ க ஆண்டவன்

ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஊழல் என்றால் எடியூரப்பா ஊழல் என்கின்றனர்
காங்கிரஸ் நண்பர்கள்.

ராசாவின் மீதும் கனிமொழி மீதும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்குவது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள.

எடியூரப்பா மீது நடவடிக்கைக்கு பா ஜ க தயங்குவது கர்நாடகாவை இழந்து விடக் கூடாதென்று.

இரண்டு பெரிய இயக்கங்களின் இழி நிலையைக் காண்கையில் இறைவனைத் தவிர யாரிடம் முறையிட.

பீம்சென் ஜோஷி

இசை வடிவாய் வாழ்ந்திருந்த பீம்சென் ஜோஷி
இந்தியத்தாய் பெற்றெடுத்த இனிய சாட்சி
அசைவின்றி அனைவரையும் கட்டிப் போடும்
அற்புதமே அவர் இசையின் வெற்றி வெற்றி
திசையெல்லாம் இசை தெரியா மக்கள் கூட
தேஷ் கேட்டார் தேசத்தின் பாடல் தன்னில்
அசைகின்ற உடல் விட்டார் விட்டால் என்ன
அவர் இசை தான் உயிரெங்கும் உயிரானதே

Thursday, January 20, 2011

பிறந்த நாள் வேண்டுதல்

தந்தையாய்த் தாயாய் என்னைத் தழுவியே கொண்ட தேவே
எந்தையைத் தாயைத் தமிழாய் எனக்கென ஈந்த அய்யா
முந்தைய வினைகள் இன்றி முழுவதும் நன்மை தந்தாய்
வந்தனம் உனக்குச் சொல்லி வாழ்கின்றேன் இன்றும் நன்றாய்
எந்தனுக் குறவாய் நல்ல இனியர்கள் பலரைத் தந்தாய்
எழுதிட முயல வைத்தாய் இனிய நற்றமிழைத் தந்தாய்
மைந்தன் நான் வேண்டி நிற்றல் மன மொழி மெய்யினாலே
மணக்கின்ற தமிழைப் பேச மக்களுக் குணர்த்து வாயே

Wednesday, January 19, 2011

சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த நாள்

உமையம்மை பால் கொடுக்கத் தமிழாம் தாயார்
உள்ளிருந்து தேவாரப் பண்ணிசைக்க
தமி ழோடு இன் னிசையும் தந் தருளி
தனிப் பெருமை கொண்ட ஞான சம்பந்தரின்
அமை வான சீர் காழித் தல மளித்த
அமுத மழை கோவிந்த ராஜன் இந்தத்
தமி ழுலகில் பிறந் திட்ட நன் னாளின்று
தமிழர்களே மனம் கொள்வீர் போற்றி நிற்பீர்

Monday, January 17, 2011

பிறந்தேன் நான்

தைப் பூசத் திருநாளில் அன்னை என்னை
தமிழ்த் தாயின் கைகளிலே ஈன்றளித் தாள்
மை நிறத்துக் கண்ணனைப் போல் எட்டாவதாய்
மாதரசி பெற்றதனால் கண்ணனானேன்
கை வீசு முன்னாலே அன்னை தமிழ்
கைப் பற்றிச் சென்றதனால் வெற்றி கொண்டேன்
மெய்த் தமிழின் வள்ளுவரில் துவங்கி எங்கள்
மேன்மை நிறை புலவர்களால் வாழுகின்றேன்

Saturday, January 15, 2011

புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்

அய்யா அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்க்ள்.

இந்த வருடம் எனக்கு மொழி சார்ந்த மகிழ்ச்சியினைத் தந்துள்ளது.

ஆமாம் எனது உயிர்த் தம்பி நாஞ்சில் நாடன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். எனது மகன் சுகா வின் முதல் நூல் தாயார் சந்நிதி வெளி வந்துள்ளது.

எனது பிறந்த நாள் விழாவில் எனது பழம்பாடல் புதுக் கவிதை நூலை தம்பி நாஞ்சில் நாடன் வெளியிடுகின்றார்.

குழந்தைகளை தமிழில் பேசச் சொல்லுவதனை இந்தப் புத்தாண்டின் உறுதி மொழியாக எடுத்துக் கொள்ளுங்கள். தங்கள் அன்பன் நெல்லைகண்ணன்

Thursday, January 13, 2011

நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் பாராட்டு விழா

நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் பாராட்டு விழா

Wednesday, January 12, 2011

தொண்டர் தோன்றிய நாள்

துறவு என்றால் தொண்டு என்ற உண்மைதன்னை
துலங்க வைத்த பெருமனிதன் தோன்றிய நன்னாள்
உறவு என்றால் ஏழையர்கள் என்று கொண்ட
உரத்த குரல் மாமுனிவன் உதித்த நன்னாள்
கரவு இல்லா உண்மைகளை என்றும் எங்கும்
கதைப்பதிலே அச்சமில்லான் வந்த நன்னாள்
நிறைவு விவேகாநந்தர் என்ற சொல்லே
நீள் உலகம் வாழ வைக்கும் பெரும் பெயரே

Tuesday, January 11, 2011

திருப்பூர் குமரன் நினைவு நாள்

தடியடியால் தான் வீழ்ந்த போதும் கையில்
தாங்கி நின்ற மணிக் கொடியைக் காத்த வீரன்
அடியிடியாய் வீழ்ந்த போதும் அன்னையவள்
அழகு மிக்க கொடியினையே காத்த தீரன்
கொடி காத்த குமரன் என்ற பெயரைக் கேட்டால்
கோட்டைகளின் கொடியெல்லாம் வணக்கம்சொல்லும்
கோடிகளில் கொள்ளைகளைச் செய்வார் கையில்
கொடியேற்றம் போய்ச் சேர்ந்த கொடுமை என்ன

Sunday, January 2, 2011

மஹா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்த நாள்

உ.வே.சா. கி.வா.ஜ. என்று நல்ல
உயர்வான தமிழறிஞர் வரிசை வர
நாவாரத் தமிழ் கற்றுத் தந்த அந்த
நல்லவராம் மீனாட்சி சுந்தரனார்
ஆவாரோ அவர் போல இன்னொருவர்
அவர் பிறந்த திருநாளே இன்று கண்டீர்
தேவாரப் பிள்ளையவர் தனையே போற்றி
திருத் தமிழை குழந்தை கட்கு சொல்லித் தாரீர்

Saturday, January 1, 2011

சுதா ரகுநாதன் அருணா சாய்ராம் அம்மா

பைந்தமிழில் மிகச் சிறப்பாய் பாரதியை
பக்தித் திருவாசகத்தைப் பாடுகின்றார்
ஐம்பொறியும் ஒன்று பட சுதா ரகுவும்
அருணா எம் அம்மாவும் பாடுகின்றார்
வந்தனங்கள் செய்வதற்கு முயலும் நேரம்
வாய் நிறைய ஆங்கிலமே பேசுகின்றார்
நொந்து போனேன் என்ன செய்ய தமிழறிந்தோர்
நோக வைக்கும் இத் தொழிலைச் செய்யலாமா

தமிழார் தம்மை

வெள்ளையராய் ஆக்கி விட்டார் நண்பர் சில்லோர்
விரைந் தெனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி
நல்லவர் தாம் என்ன செய்ய வெள்ளையர்கள்
நாட்டை விட்டு மட்டும் தான் போனார் கண்டோம்
பிள்ளைகளைத் தமிழ் மறக்க வைக்கும் பெற்றோர்
பேச் சென்றால் ஆங்கிலத்தில் என்று வாழ்வோர்
சொல்லி இங்கு மாளாது தமிழர் தம்மின்
சொரணையற்ற உணர்வற்ற வாழ்க்கை தன்னை