Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Friday, July 22, 2011

ஓங்குகின்றார்

வெறுத்தல் கொண்டு வாழ்ந்தவர் எல்லாம்
வீணென வீழ்ந்தே இறந்து பட்டார்
வெறுத்தல் இல்லா விரிமனத்தாரோ
வென்றிவண் உயர்ந்தே வாழ்ந்து நின்றார்
அறத்தின் வழியை அறவே துறந்தவர்
அபலைகளாகி தெருவில் நின்றார்
அறமே வாழ்வெனக் கொண்டே வாழ்ந்தார்
ஆண்டவனாகிப் பொலிந்து நின்றார்

இறப்போம் என்றே துடிப்பவர் எல்லாம்
இறந்தே இறந்தே வாழுகின்றார்
இறப்பை உணர்ந்து பொறுப்பாய் உள்ளோர்
என்றும் என்றும் வாழுகின்றார்
மறப்போம் என்ற நினைப்பே இல்லார்
மனதால் மனதால் வீழுகின்றார்
மறத்தல் மறந்து துறந்தே வாழ்வோர்
மனிதர்களாகி வாழுகின்றார்

கறத்தல் எதையும் எங்கும் என்போர்
கவலைகளாலே மாளுகின்றார்
கறத்தல் இரத்தல் சுருட்டல் இல்லார்
காவலர் ஆகி ஆளுகின்றார்
பொறுத்தல் இல்லாச் சிறு மதியாளர்
புண்பட நொந்தே வாடுகின்றார்
பொறுத்தல் குணமே பொறுப்பின் குணமாய்ப்
பொலிந்தவர் சிறந்தே ஒங்குகின்றார்

Friday, March 19, 2010

வழி கேட்டுப் போன தீயோர்

வாழ்க்கையை அதன் போக்கினிலே வாழுகின்ற
வழி கண்டு வாழ்ந்தாலே வெற்றி உண்டு
யாக்கை அதன் நிலையாமை அறியாராகி
யாரிடத்தோ சென்று அவர் தமை வணங்கி
போக்க வொண்ணா ஆசைகளைக் கொள்ள எண்ணி
புரியாராய் அவர்களையே துறவியாக்கி
தாக்குகின்றார் இன்று அவர் பொய்யரென்று
தறி கெட்டு வழி கெட்டுப் போன தீயோர்

Monday, March 15, 2010

அக மகிழ்ந்தார்

ஊனமுற்றோர் உடலாலே என்ற போதும்
உள்ளத்தால் உயர்ந்தவராய் ஒழுகி நின்றார்
ஊனமுற்றோர் மனதாலே அவர்களெல்லாம்
உயர் பதவி தனில் அமர்ந்து ஊர் கெடுத்தார்
ஞானமற்றோர் அதனாலே நாட்டினிலே
நலங் கெடுக்கும் அனைத்தையுமே தினமும் செய்தார்
ஆன மட்டும் தான் ஒருவன் பெரியன் என்று
அனைவரையும் சொல்ல வைத்து அக மகிழ்ந்தார்

Thursday, March 11, 2010

வேடத்தை விட்டால் போச்சு

சாமிக்குச் சேவை செய்தேன் தவறா என்று
சரியாகக் கேட்கின்றார் நடிகை இங்கு
பூமிக்கு வந்து விட்ட மனித குலம்
புரியாத எதை அவரும் புரிந்து விட்டார்
காண்பிக்கக் கண்டீர்கள் இல்லையென் றால்
காமத்தை இவ்வாறு பழி சொல்வீரோ
பூண்கின்ற வேடத்தால் தவறு என்றீர்
போகட்டும் வேடத்தை விட்டால் போச்சு

ஆசிரமம் கண்ட வழி

ஆ சிரமம் என்று ஒடி அலுத்தவர்கள்
ஆசிரமம் அமைவதற்கு வழிகள் செய்தார்
போய்ச் சிரமம் தீர்ப்பதற்கு சுவாமிகளை
புகழ்ந்து அவர் கால்களிலே வீழ்ந்து நின்றார்
தன் சிரமம் சாமிக்குத் தான் தெரிய
தழுவலுக்கும் குலவலுக்கும் மங்கை கொண்டார்
என் செய்ய சாமியும் ஒரு இளைஞர் என்ற
இனிய செய்தி ஊடகத்தின் வழியே கண்டார்

Tuesday, March 9, 2010

ஆயிரத்தில் ஒருவன்

வரலாற்றுப் பிழைகளையே திரைப் படத்தார்
வரவு வைத்து மகிழுகின்றார் கொடுமை இதை
குரல் கொடுத்துக் கேட்பதற்கோ அறிஞர் இல்லை
குழப்பம் இதில் சோழர்களே மாட்டிக் கொண்டார்
அரன் பக்தன் அரியினையைக் கடலில் போட்டான்
அறிவற்றார் பிழை இதனைக் காட்டி நின்றார்
குறைச் சோழர் தனைக் கொன்று முடிப்பதற்கு
கூத்தடித்தார் ஆயிரத்தில் ஒருவன் என்று

Monday, March 8, 2010

அல்லா தீர்ப்பளிப்பார்

எல்லாப் புகழும் இறைவனுக்கே
என்றே உணர்ந்தார் நல்லவர்கள்
வல்லான் ஒருவன் அல்லாவே
வகுத்த தெல்லாம் அவன் அருளே
பொல்லார் இங்கு ஆடுகின்றார்
புகழுக் கிவரே சொந்தமென்று
அல்லா அவர்க்குத் தீர்ப்பளிப் பார்
அவர்தம் கணக்கை முடிக்கை யிலே

பண்பு வழி

பணம் கொண்டார் தமைத் தேடி அவர்களது
பக்கத்தில் எப்போதும் இருந்து கொண்டு
குணம் கொண்ட அறிஞரையும் அவமதிக்கும்
குற்றத்தார் கவிஞரென சொல்லிக் கொள்வார்
நிணம் தசை நார் அனைத்திலுமே என்றும் எங்கும்
நீதியையே கொண்டு இங்கு அன்பால் வாழும்
குணம் கொண்ட பெரியவரோ அவர்க்கும் கூட
குளிர் முகம் தான் காட்டிடுவார் பண்பு வழி

Sunday, March 7, 2010

சம்காரம் செய்ய வேண்டும்

ஆசையுடன் எழுதுகின்றார் தவறில்லையே
அறிஞர்களில் சில பேரும் வினவுகின்றார்
ஓசையின்றி அவரோடு வைத்துக் கொண்டால்
ஒருவருக்கும் துன்பமில்லை வம்பும் இல்லை
பூசையிலே வைப்பதற்கு ஏற்றாற் போல
புனை கதையும் பொய் புரட்டும் செய்வாரென்றால்
நீசர்களை ஒழிப்பதற்குத் தமிழாம் தாயார்
நேர் வந்து சம்காரம் செய்ய வேண்டும்

தேம்புகின்றார்

கற்றவர்க்கு முன்னாலே அடக்கம் காட்டார்
கல்லாத மூடர்களும் என்று அன்றே
உற்றவராம் வள்ளுவரும் உணர்த்திச் சென்றார்
உணராதார் கல்லாதார் மேலும் மேலும்
கொற்றவன் போல் ஆடுகின்றார் தங்களையே
கொலு மண்டபத்தில் வைக்க முயலுகின்றார்
பற்றற்ற கற்றவரோ அவர்களையே
பரிதாபம் என்றுணர்ந்து தேம்புகின்றார்

எத்தும் நல்லோர்

எல்லார்க்கும் நல்லவராய்க் காட்டிக் கொள்ளல்
ஏய்ப்பதிலே மிகச் சிறந்த வழியேயாகும்
பொல்லார்க்கும் புன் சிரிப்பு நல் வணக்கம்
பொறுமை கொண்ட பெருமை என்ற நல் நடிப்பு
வல்லார்க்கோ பெரும் வணக்கம் வாழ்த்துச் சொல்லல்
வாய் நிறைந்த பெரும் சிரிப்பு நெருக்கம் காட்டல்
கல்லார்க்கும் அறிஞர் என்ற பட்டம் தரல்
கணக்கிட்டு வாழுகின்றார் எத்தும் நல்லோர்

அழுகின்றார்

எழுதி விட்டால் எழுத்தாகும் என்று இங்கே
இருப்பவர்கள் சில பேர்கள் கருதுகின்றார்
பழுதாக எழுதுகின்றார் பணம் இருக்க
பள பளக்கும் புத்தகமாய் ஆக்குகின்றார்
தொழு ததனை அன்பளிப்பாய் நம்மிடத்தில்
துணிவோடு தருகின்றார் படிக்கச் சொல்லி
அழுகின்றார் தங்களது படைப்புக்களை
அச்சிடவே முடியாத அறிஞர் பல்லோர்

Wednesday, March 3, 2010

மனித வழி

பாதாம் பிஸ்தாவோடு குங்குமப் பூ
பக்குவமாய்க் கலந்திட்ட பாலருந்தி
தோதாக வாழுகின்ற சாமியார்கள்
துறவிய ரென்றெண்ணுகின்ற மூடத் தனம்
ஏனோ தமிழ் நாட்டில் அதிகமாக
ஏமாந்து பல பேரும் வணங்குகின்றார்
வானோர்க்கும் வழி காட்டும் வள்ளுவரை
வணங்குங்கள் அவர் வழியே மனித வழி

கொடுமை

பள பளக்கும் மகிழூந்துப் பயணம் சாமி
படுப்பதற்கோ அழுந்தி எழும் படுக்கை
வள வளவென் றுளறி நிற்கும் சாமி தம்மை
வணங்கி நிற்க பணம் படைத்த கொடியர்
உளம் இழந்த ஏழை கட்கோ துன்பம்
ஒழித்து விட வேண்டும் ஒரு வழி தான்
களம் இதனால் காமுகர்கள் எல்லாம்
காவிக்குள் நுழைகின்ற கொடுமை

நித்தியமும் ஆனந்தம்

இல் வாழ்க்கை ஒன்றேதான் சிறந்த தென்று
எம் தந்தை வள்ளுவரும் உறுதி சொன்னார்
நல் வாழ்க்கை அதுவேதான் இயல்பு என்றார்
நலம் பயக்கும் அது ஒன்றே உலகுக்கு என்றார்
பொய் வாழ்க்கை வாழ்ந் ததனால் புகழைச் சேர்த்தார்
பொசுக்கென்று பெண்ணோடு மாட்டிக் கொண்டார்
உய்வளிக்க வந்த சாமி நித்யானந்தம்
உல்லாசம் காணுகின்றார் நடிகையோடு


கதவைத் திறக்கச் சொன்னார் நம்மிடத்தில்
காமத்தில் அவர் கதவும் திறந்து கொள்ள
விதம் விதமாய்க் காட்சிகளும் நமது கண்ணில்
விரிகிறது நித்தியமும் ஆனந்தம் தான்
பதை பதைக்க வேண்டாம் இவர் மாட்டிக் கொண்டார்
பல பேர்கள் மாட்டாமல் வாழுகின்றார்
சதை வாழ்க்கை இதிலிருந்து மீள்வதெல் லாம்
சாத்தியமா ஒருக் காலும் இல்லை அய்யா

Sunday, February 21, 2010

காடுகள்

ஆனைகளின் அட்டகாசம் ஊருக்குள்ளே
அடுத்தாற் போல் புலிகளது அட்டகாசம்
ஊனமுற்ற மனம் கொண்ட மனிதர்களின்
ஒலமிது செய்திகளில் வருகிறது
ஞானமற்று அவர்களது வாழ்விடத்தில்
நாடோறும் நீங்கள் போட்ட ஆட்டமன்றோ
ஆனையுடன் புலியதுவும் நீருக்காக
அங்கேயும் இங்கேயும் வருவதெல்லாம்


மலைகளுக்குள் காடுகளில் மான்களோடு
மரம் நிறையப் பறவைகளும் விலங்கினமும்
இறைவனவன் தந்திருந்தான் அவர்களுக்காம்
இடமதனைத் தலைவர்களே கொள்ளையிட்டீர்
மறைவிடங்கள் அனைத்தையுமே அழித்தொழித்தீர்
மனம் போல அரண்மனைகள் கட்டிக் கொண்டீர்
உறைவிடத்தைக் குடிநீரை இழந்ததாலே
ஊருக்குள் வருகிறது விலங்கினங்கள்


காட்டுக்குள் நீங்கள் செய்த அட்டகாசம்
கருணையற்ற அட்டகாசம் அதனை விட்டு
நாட்டுக்குள் விலங்கினங்கள் வந்தால் அதை
நாக் கூச்சம் இல்லாமல் திட்டுகின்றீர்
வீட்டுக்குள் வேறு யாரும் வந்து சென்றால்
விரைவாகத் திருடர் என்று புகாரும் சொல்வீர்
காட்டுக்குள் நீங்கள் சென்று திருடி வந்த
கதைகளினை கடவுளன்றி யார் அறிவார்

காடு வாழ

புலிகளினைக் காப்பதற்காய்க் கணக்கெடுப்பாம்
புத்தியின்றி நடக்கின்ற அரசாங்கங்கள்
வலியவர்கள் சேர்க்கின்ற பணத்தைப் பார்த்து
வறியவர்கள் ஆசை கொள்ள காட்டிற்குள்ளே
புலியல்ல சிங்கமல்ல யானையென்று
பொறுப்பின்றிக் கொல்லுகின்றார் பணத்திற்காக
மலிவாக அதைக் கூட வாங்குகின்றார்
மானமில்லா அரசியலார் அவரைக் காத்து


வளம் சேர்த்து நாடு காக்கும் அரசியலில்
வலியின்றிப் பொருள் சேர்க்கும் நாணமற்றார்
உளம் விற்று மக்களது நலத்தை விற்று
ஊர் முழுக்க சொத்துக்கள் வாங்குகின்றார்
தளம் அவர்தான் நடக்கின்ற தவறுக் கெல்லாம்
தனையறியா ஏழைகளோ விலை போகின்றார்
வலம் வந்து இவரையும் வணங்கி நிற்கும்
வறுமையினை யார் ஒழிப்பார் காடு வாழ

Wednesday, February 17, 2010

திரைப் படத்தார் போதனைகள்

திரைப் படங்கள் செய்கின்ற தீங்கு எல்லாம்
தினமும் ஒரு பெண்ணைத் தான் கொல்லுதிங்கு
உரைத்தாளாம் காதலிக்க மாட்டேன் என்று
உள் நுழைந்து வீட்டிற்குள் கொல்லுகின்றான்
திரைப் படத்தார் போதித்த வன்மையது
தீய்க்கிறது பெண் முகத்தை பிளேடினாலே
வரை முறையே இல்லாமல் காட்டுகின்ற
வன்முறைதான் பெண்ணினத்தை அழிக்குதிங்கு

அழிந்து விட்ட உலகம்

அழிந்து விட்ட உலகம்

உலகம் அழிந்திடுமாம் புலம்புகின்றார்
உள்ளம் அழிந்தவர்கள் ஊடகத்தில்
கலகம் பல வளர்த் தேற்கனவே
ககனத்தை பல வழியில் அழித்தொழிக்கும்
மதத் தலைவர் அரசியலார் ஆசையினால்
மக்களையே அடிமைகளாய் மாற்றி வாழும்
இனத் தலைவர் என்று இவர் அழித்தழித்
தேற்கனவே அழிந்து விட்டதுலகமிங்கு

Tuesday, February 16, 2010

ஏப்ரல் ௨0 2009

ஒத்தக்கடை ஆனைமலை
எத்தனை நாள் இருக்கும்
ஊர்வழியே போகையிலே
பாத்துக்கிட்டே போனேன்
கெத்தான ஆள் யாரும்
கீழ் மேலாய்ப் பணத்தை
கிண்ணாரம் கொட்டியே
அள்ளிஅள்ளித் தந்தால்
ஒத்தக்கடை கிரானைட்
ஒலகெங்கும் போகும்
ஊர்மட்டும் பொலிவிழந்து
பொசுக்குன்னு போகும்.

சத்தியமாய் இதையேதும்
சதிகாரர் கூட்டம்
சட்டுன்னு முடிச்சுட்டா
யாரு என்ன பண்ண
பத்திரமா பாத்துக்குங்க
ஒத்தக்கடை மக்கா
பாவிப்பய கூட்டம் அதை
ஒழிச்சிரவே கூடும்.