Showing posts with label பொங்கல் நன்னாள். Show all posts
Showing posts with label பொங்கல் நன்னாள். Show all posts

Sunday, January 15, 2012

அருள வேண்டும்

ஆங்கிலத்தில் பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்லும்
அறியாத தமிழர்களை என்ன சொல்வேன்
பூங்குவளைத் தமிழ் இருக்க வெட்கமின்றி
புரியாத மொழியினிலே வாழ்த்துகின்றார்
தாங்கள் தான் மிகப் பெரிய அறிஞரென்று
தங்களுக்குத் தாங்களே நினைக்கின்றார் காண்
ஏங்கி நின்றேன் தமிழே என் தாயே நீ தான்
இக் கொடுமைதனைத் தடுத்து அருள வேண்டும்

Wednesday, January 14, 2009

வாழ்த்தி நின்றேன்

ஞாயி றில்லை யெனில் இங்கே எதுவும் இல்லை
நன்குணர்ந்த தமிழினத்தார் நன்றி சொல்ல
ஆய்ந் தறிந்த நன்னாளே தைத் திருநாள்
அதுவேதான் தமிழர்களின் புதிய ஆண்டு
வாயின்றி வாழ்ந்தாலும் உயிர்க் குலத்தின்
வயிற்றுக்குச் சோறிடும் மாட்டுக் கூட்டம்
போய் அதற்கும் நன்றி சொல்லும் புதிய ஆண்டு
பொங்கலிது தமிழ்ப் பெருமை பொங்கும் பொங்கல்



நன்றி சொல்லல் உயிர்க் குலத்தின் உயர்ந்த மாண்பு
நற்றமிழர் அதை அறிந்தார் அதனால் இங்கே
அன்றிருந்து உயிர்க் குலத்தை வாழ வைக்கும்
அனைத்துக்கும் அடிப்படையாய் விளங்குமந்த
விண்ணகத்தின் பேரொளியை கதிரைப் போற்ற
விருப்பமுடன் கண்டெடுத்த நல்ல நாளே
மண் மணக்கும் தமிழர்கள் தம் பொங்கல் நன்னாள்
மனம் நிறைந்து அனைவரையும் வாழ்த்தி நின்றேன்