Friday, October 4, 2013

ஒன்றும் புரியவில்லை

உச்ச நீதி மன்ற்ம் ஊழல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க தடை விதித்து தீர்ப்புச் சொன்ன அன்று அதனை எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்த்தன். ஜுலை 13ம் தேதி எனது வலைப்பூ தளத்திலேயே நான் எழுதியிருந்தேன். கம்யூனிஸ்ட்கள் எதிர்த்ததுதான் எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியதையும் எழுதியிருந்தேன். காங்கிரஸ் பாஜக உட்பட எல்லோரும் ஒரு மனதாக எதிர்த்தனர். இன்று ராகுல் காந்தி அதனை கிழித்து எறிய வேண்டும் என்பதற்கு ஒரு நாள் முன்னர் பாஜகவினர் குடியரசுத் தலைவரை சந்தித்து இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர அவர் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்த அன்றே எனக்குச் சிரிப்பு வந்தது. இப்போதோ  ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை அவமானப் படுத்தியதாக பாஜக தலைவர்கள் வருத்தப் படுகின்றனர். அவரை இவர்கள் எப்படியெல்லாம் விமரிசித்தவர்கள்.ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவர். இரண்டு பொறுப்பில் இருப்பவர்.அவருக்கும் உரிமை உண்டு தானே ஒன்றும் புரியவில்லை.


கோயில்களை விட கழிப்பறைகள்தான் இன்று முக்கியத் தேவை என்று மோடி சொன்னதை விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் கண்டித்திருக்கின்றார்.

காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் மோடி பிரரதமராக வேண்டும் என்றும் தமிழகத்தின் முதல்வராக வை.கோ.அவர்கள் வர வேண்டும் என்றும் அவரது ஆசையை வெளிப்படுத்தியிருக்கின்றார். அவர் காந்தியை தெய்வமாகக் கருதுகின்றவர். பெருந்தலைவர். காமராஜரையும் போற்றுபவர். காந்தியைக் கொன்றவர்கள் யார் என்று விலாவாரியாகத் தமிழக மேடைகளில் பேசியவர். காமராஜரை உயிரோடு தீ வைக்க டெல்லியில் முயன்றவர்கள் யார் என்பதனையும் மேடைகள் தோறும் கடுமையாக விமரிசித்தவர். அவர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்கின்றார். வை.கோ முதல்வர் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

வை.கோ. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத படி செய்யப் போகின்றேன் என்கின்றார். முதலில் அவர் எந்தக் கூட்டணியில் இருக்கப் போகின்றார் என்பதனையாவது அவர் தெளிவுபடுத்திக் கொள்ளட்டும். கூட்டணிகளால்தான் காங்கிரஸ்காரர்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவார்கள். அதனால் வை.கோவின் கனவு பலிக்காது

Monday, September 23, 2013

ஊழலுக்குச் சம்பள்ம்

இந்தியாவின் தொழிலதிபர்களில் கலாநிதிமாறன் அவர்கள் தான் பல கோடிகளில் ஊதியம் பெற்று முத்லில் இருக்கின்றாராம். ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்தவர் ஒரு தலைமுறைக்குள்ளேயே இத்தனை பெரிய ஊதியம்  பெறுகிராரென்றால் எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும்.

Tuesday, September 17, 2013

கொஞசம் செய்திகள்

மகிழ்ச்சியான செய்தி சந்திர பாபு நாயுடு அவர்களுக்கு சொத்து 42 இலட்சம்.அவர் குடும்பத்தினருக்கு 42 கோடி.

தொடர்ந்து ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பதும் குழந்தைகள் கண்களை இழப்பதும் தொடர்கிறது. ஆசிரியர் பணிக்கு கல்வி அளவுகோலை வைத்து மட்டும்  ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதால் வரும் கேடு.


நீதிபதிகள் நியமனம் குறித்து மைய அரசு நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தியது. பொதுமறை தந்த வள்ளுவப் பேராசானின் குறள் சொல்லுகின்றது. சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கணி

கல்வித் தகுதிகளை மட்டும் வைத்து நியமிப்பதனை விட சான்றாண்மை மிக்கவராக அதவது ஒழுக்கத்தில் சிறந்தவர்களா என்று பார்த்து நியமிப்பதென்று முடிவெடுத்தால் நீதித் துறை. உயர்ந்து விளங்கும்

ஆசாராம் ஆசாரத்தை விட்டதனால் ஆசிரமம் ஆகச் சிரமமாகிப் போச்சு.


Tuesday, September 10, 2013

இந்தியா தேசம் அது இணையற்ற தேசம்

பிரதமரிடம் அமைச்சர்களும் அனைவரும் தங்கள் சொத்து விபரங்களைத் தந்திருக்கின்றனர். அமைச்சர்களை விட அமைச்சர்களின் மனைவிமாருக்குத்தான் சொத்து அதிகம் என்ற தகவல் வந்திருக்கின்றது.இப்போதாவது இந்திய மக்கள் தெளிவடைய வேண்டும். ஆமாம் நமது அமைச்சர்கள் எவ்வள்வு நேர்மையானவர்கள் என்று. வந்தேமாதரம்.. ஜெய்ஹிந்த்                                                                                                               இந்திய ஆட்சிப் பணி(ஐ.ஏ.எஸ்)  அதிகாரிகள் வெளி நாட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான் செலவை நமது அரசே ஏற்றுக் கொள்ளும் என்கின்ற மகிழ்ச்சியான செய்தி. மிகமிகக் குறைவான சம்பளத்தில் மக்களுக்கு (மந்திரிகளுக்கு) சேவை செய்யும் அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் கொஞசமா நஞசமா.  இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் தேசப் பற்றும் இதில் வெளியாகின்றது. நமது நாட்டில் சிற்ந்த மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கிடையாது என்கின்ற அவர்தம் தெளிவான் எண்ணத்தை மத்திய அரசும் ஆதரிக்கின்றதே.   வாழ்க இந்தியா.              தெளிவான முயற்சிக்குவ யது தடையில்ல என்று நிரூபித்திருக்கின்ற டென்னிஸ் வீரர் 40 வயது பயஸ்ஸூம் ( இவர் ஒரு இந்தியர் என்பதனை நினைவில் கொள்க) இவருக்கு அரசு ஒரு மரியாதையும் செய்து விடாது. இவர் கிரிக்கெட்டில் விளையாடினால்தான் கோடிக் கணக்கில் கிடைக்கும்.ஏற்கனவே ஹாக்கி வீரர்களுக்கு 25000 ரூபாய் தந்து கெள்ரவித்ததே நமது மத்திய அரசு. அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்இவரும் க்றூப்பினத்தவர் தாம்  .                                           கச்சத்தீவின் வரலாற்றை மக்களுக்குத் தெளிவு படுத்தி ந்மது மீனவ நண்பர்களுக்கு அது எத்தனை தேவை என்று உணர்த்தியிருக்கின்றனர் ராமநாதபுரம்   அரசரும் அரசியும்.அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.                                                                                           இலங்கைத் தமிழர்களின் தமிழர் பகுதியை கைப்பற்றி அவர்களிடம் அதனைத் தர வேண்டும் எனது நண்பர் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சொல்லியிருக்கின்றார். அதற்கு இந்திரா அம்மாவோ சஞய் காந்தியோ இருந்திருக்க வேண்டும்.முதுகெலும்பில்லாத இன்றைய தலைவர்கள் என்ன செய்து விட முடியும்                                                                                                                    

Wednesday, August 28, 2013

என்ன் செய்ய்

இன்று செய்தித் தாள்க்ள் தந்துள்ள செய்திகள். இந்திய ஆட்சிப் பணித் துறைக்கு ஒன்றாகப் படிக்கும் பொது காதலித்து விட்டு இப்போது 2 கிலோ தங்கம் 50 இலட்ச்ம் ரொக்கம் கேட்கின்றவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அவர் பணியில் நியமிக்கப் பட்டுள்ளர் என்று அவரைக் காதலித்த பெண் குற்றஞ்சாட்டுகின்றார். நாகர்கோயிலில் ஒரு பொறியியற் கல்லூரி மாணவி பேராசிரியப் பெருமகன் ஒருவரால் காதலித்துக் கை விடப் பட்டதனால் உயிர். துறந்திருக்கின்றார்.

வயது முற்றிய பின் வரும் காதலே மாசுடைத்த்து தெய்வதம்  அன்று காண்
இயலு புன்மை உடலினுக் கின்பெனும் எண்ணமே சிறிதேன்றதக் காதலாம் என்கின்றான் பாரதி.

உடல் கிடைத்த பின்னர் மனம் செத்துப் போகின்றது. என்ன செய்ய.

Tuesday, August 27, 2013

எல்லாம் தேர்தலுக்குத் தான்

உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு விட்டது. பாஜக தலைவர் திரு முரளி மனோகர் ஜோஷி தேர்தலுக்காகத் தானே 4 வது ஆண்டில் இதனை நிறைவேற்றுகின்றீர்கள் என்று காங்கிரஸை குற்றம் சாட்டுகின்றார்.                                                                                                                                                           ஆனால் பாஜகவோ இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு விஸ்வ ஹிந்து பரிஷத்தை வைத்து இராமர் கோயில் விவ்காரத்தைக் கிள்ப்புகின்றது. அதுவும் தேரதலுக்காகத் தானே.                                                                                                                                  ஆட்சியைக் கைப்பற்றத்தான் எல்லா அரசியல் இயக்கங்களும் வெட்கமின்றிச் செயல் படுகின்றன் எனபதைத் தான் இது காட்டுகின்றது.                                                           தெற்கே ஐயப்பன் வழிபாட்டிற்குச் செல்லும் பக்தர்கள் வாபர் சமாதியில் வழி பாடு செய்து விட்டுப் பின்னர் தான் ஐயப்பனை வழிபடுகின்றனர். நான் எனது வா மீத முலை கவிதை நூலில் எழுதியிருந்தேன்                                                             வாபர் அய்யப்பன                                                                                                                               வ்ழிபாட்டுறவை                                                                                                                                     பாபர்                                                                                                                                                                     ராமருக்கும்                                                                                                                                                          நீட்டித்                                                                                                                                                     தொலையுங்கள்       என்று

Thursday, August 15, 2013

விடுதலை நாள்

இன்று விடுதலை நாள் இந்தியத் தலைமையமைச்சர் மாநில முதல்வர்கள் அனைவரும் கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றுகின்றனர்(கறுப்புப் பூனை பாதுகாப்போடு).ஆனால் அந்த மேடைகளில் நின்றுகொண்டு நம்மை பாதுகாப்பதில் அவர்கள் எப்படியெல்லாம் இது வரை செயல்பட்டார்கள் இனிமேல் செயல்படப் போகின்றார்கள் என்பதையெல்லாம் தங்கள் உரைக்ளில் குறிப்பிடுகின்றனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களில் கொடியேற்றுகின்றனர். எந்த நேரம் மாற்றப் படுவோம் என்பதனையே தெரிந்து கொள்ள முடியாதவர்களாக.

வெள்ளையன் விதைத்த விஷ் விதையில் மத  மோதல்களில் நவகாளி பற்றி எரிந்த போது எந்த விதப் பாதுகாப்புமின்றி அங்கே  சென்றார் தேசத் தந்தை காந்தியடிகள். பாதுகாப்பிற்கு அனுப்பப் பட்ட ராணுவம் வெளியேறிய பிற்கே.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதிஷ் குமார் தமிழக முதல்வர் மூவரும் அடுத்த பிரதமர் வேட்பாளர்கள்.

தி மு கவின் மிக மூத்த தலைவர்கள் இருக்கும் இடத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி மாநிலங்களவை திமுக் உறுப்பினர்களுக்குத் தலைவராக அறிவிக்கப் பட்டிருக்கின்றார்.

சோனியா அம்மையாரின் மருமகன் மிகப் பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றார். அது குறித்து அவர் வெட்கப் பட்டதாகவும் தெரியவில்லை. வாய் திறப்பதாகவும் தெரியவில்லை.

சபர்மதி ஆசிரமத்தில் விதி முறைகளை மீறி மாலை ஆறு மணிக்கு மேல் தனது மகனுக்கு உணவளித்த் க்ஸ்தூரிபாய் காந்தியையும் மகனையும் இரவோடு இரவாக ஆசிரமத்தை விட்டு வெளியேற்றினார் காந்தி மகான்..

பெற்ற தாய் ஒரு 50 ரூபாய் அதிகம் கேட்டும் தர ம்றுத்தார் காமராஜர் எனும் மாமனிதர்.

அரியலூர் ரயில் விபத்து நடந்த உடனேயே அமைச்சர் பதவ்யை ராஜினாமா செய்தனர் அன்றைய அமைச்சர்களான் லால் பகதூர் சாஸ்திரியும் அழகேசனும்.

சுப்ரமணிய சாமி பாஜகவில் சேர்ந்து விட்டார் அவரைத் தொடர்ந்து எடியூரப்பாவும் சேரப் போகினறாராம்.

அரசியல் சூதுகளை உணர்ந்தவுடன் முதல் அமைச்சர் பதவியைத் துறந்து வடலூர் சென்று சொத்துகள் அனைத்தையும் சன்மார்க்க சங்கத்திற்கு எழுதி வைத்து விட்டு பின்னர் அரசியல் பக்கமே திரும்பாமல் வாழ்ந்தார் ஒமந்தூரார்.

குறுகிய காலத்தில் கோடீஸ்வரார்களானவர்களெல்லாம் மத்திய மைச்சர்கள் மாநில அமைச்சர்களாகி விடுகின்றனர்.

ஏழைகள் மட்டும் ஏழைகளாகவே வாக்களிப்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சாதி மதத் தலைவர்களோ சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆந்திராவிலும் கேரளத்திலும் வடநாடுகளிலும் விஜயின் தலைவா படம் திரையிடப் பட்டு விட்டது.. தமிழ்ப்படம் தான். இது வரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் தமிழ்ப் படம் தமிநாட்டில்  திரையிடத் தடை. புரியவில்லை.

விட்டு விடப் போகுதுயிர் விட்டு விட்ட உடனே உடலை
சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்

என்கின்றார் பட்டினத்துப் பிள்ளை
Saturday, August 10, 2013

வெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை

நாடாளுமன்றம் வழக்கம் போல் செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வில்லை .யார் ஆண்டாலும் இதுதான் நிலை. பா.ஜ.க். காங்கிரஸ் எதுவெனிலும் இதுதான் நிலை.

ஆனால் உச்சநீதி மன்ற்ம் ஊழல் அரசியல்வாதிகள் மீது  கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றவுடன். பா.ஜ.க. காங்கிரஸ் என்று எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. கேவலம் கம்யூனிஸ்ட்களும்.உச்ச நீதிமன்றத்தின் கையை ஒடிக்க வேண்டும். என்று முடிவெடுத்து விட்டனர் நாட்டின் மிக முக்கிய தலைவர்கள்.

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றார் லோகமான்ய பால கங்காதர திலகர் பெருமான்.

பசியில் ஏழை திருடினால் சிறை. வாழ்வதற்காக பணிக்குச் செல்லும் ஏழைப் பெண்கள் கட்டாயப் படுத்தப் பட்டு பாலியல் தொழிலில் தள்ளப் பட்டால்
அவளுக்குச் சிறை

ஊழல் எங்கள் பிறப்புரிமை அதில் உச்ச நீதி மன்றம் தலையிடுவதற்கு உரிமை கிடையாது என்பதற்கான் புதிய சட்டத்தை உடனே கொண்டு வருவோம் என்கின்றனர் வெட்கமற்ற தலைவர்கள்.இவர்கள் மனமறிந்து விபச்சாரம் செய்கின்றவர்கள்.ஆனால் இவர்களுக்கு முழு நேர காவற்றுறைக் காவல்.

இவர்களில் பிரதமர் வேட்பாளர்கள் வேறு அறிவிக்கப் படுகின்றார்கள்.

வெட்கமில்லை இங்கு வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை  என்ற பாவேந்தரின் பாடல் வரிகள் தான் நினைவைக் குடைகின்றன.

பசிப்பிணி தீர்க்கும் மருத்துவர்கள்

கிராமங்களில் ஒரு ஆண்டு கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்ற மைய அரசின் உத்தரவை எதிர்த்து மருத்துவர்கள் போராடுகின்றனர்.

இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் இருக்கின்றது என்றார் தேசத் தந்தை.

உழவர்கள் இல்லையெனில் யாருமே இல்லை என்கின்றான் வள்ளுவப் பேராசான்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூ உம்
விட்டேம் என்பார்க்கும் நிலை

வள்ளுவன் இதிலே துறவிகளைக்குறிக்கின்றான் கேலியாக மனிதர்கள் விழைவதை எல்லாம் தாங்கள் விட்டு விட்டதாகச்  சொல்லுகின்ற(விடவில்லை) துறவிகள் கூட தெருவிற்கு வந்து விடுவார்கள் பசிப்பிணியால் என்கின்றான்.
குடியரசுத் தலைவர்கள் அமைச்சர் பெருமக்கள் விஞ்ஞானிகள் அறிஞர்கள் கவிஞர்கள் எழுத்தாள்ர்கள் மருத்துவர்கள் பொறியியல்  நிபுணர்கள் கலைஞர்கள்  எல்லோரும் பசிப்பிணியால் மரணத்தைச் சந்திப்பார்கள் என்கின்றார்.

அவர்கள் இருக்கின்ற இடங்களுக்குப் போவதையே கேவலமாகக் கருதுகின்றனர் நம்து பெரிய படிப்புப் படித்த மருத்துவர்கள்.

பசிப்பிணிதான் உலகத்திலேயே கொடுமையான பிணி அதனைத் தீர்க்கின்ற உழவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல மாட்டேன் என்று கூறுகின்ற இவர்களை என்ன் செய்ய.

அதுவும் கூட ஒரு விதத்தில் நல்லதுதான். எளிமையான மருத்துவ முறைகள் உழவர்களிடம்தான் இருக்கின்றன். பக்க விளைவுகளற்ற அந்த மருத்துவத்தில் அவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று நமது மருத்துவர்கள் கருதுகின்ற்னர் போலும்..சேவைக்கான கல்வியும் பணம் சார்ந்த்தான அவலம் இதில் தெரிகின்றது

Sunday, August 4, 2013

மேட்டூர் அணை நிரம்புகின்றது. சில நாட்களுக்கு முன்னால் நான் எழுதியிருந்தேன். கன்னட வெறியர்கள் மலையாளத்துத் துரோகிகள் என்றெல்லாம் வசை பாடாதீர்கள் என்று .இயர்கையை அழிக்கின்ற ஈன புத்தியை அரசியல் தலைவர்களின் கைக்கூலிகள் விட்டொழித்தால்  இயற்கையின் கருணை சிறந்தே விளங்கும்.

Friday, July 19, 2013

என்றும் பயணம் செய்வான்

அரங்கன் அவன் அருளாலே திருவரங்கத்து
அரங்கன் அவன் ந்ண்பனால் வாலியானான்
கிறங்குகின்ற போதவனை செட்டி நாட்டு
கிருஷ்ண் பக்தன் கண்ணதாசன் பாடல் ஓன்று
மயங்குவதும் தயங்குவதும்  வேண்டாம் என்ற
மறை மொழியால் மனம் உறுதி கொள்ளச் செய்ய
மய்ங்குகின்ற பாடல்களால் தமிழாம் தாயை
மாண்பமையச் செய்த வாலி  இல்லை என்றார்


புரிகின்றது நண்பர்களே உடலை விட்டால்
போய் விட்டார் என்பதுவே நம் வழக்கம்
அறிவுடையோர் மட்டுமே உணர்வார் நன்கு
அரங்கன் வாலி அரங்கனிடம் சரணடைந்தான்
தெளிவோடு வாழ்ந்த அந்தத் தெய்வமகன்
தீர்க்கமாய் தமிழோடு வாழ்வான் என்றும்
பணிவோடு சொல்லுகின்றேன் கவிஞர் வாலி
பைந்தமிழரோடு என்றும் பயணம் செய்வான்

Saturday, July 13, 2013

உச்ச நீதி மன்றத்திற்கு நன்றி

உச்ச்நீதி மன்றம் மறுநாளே இன்னொரு தீர்ப்பையும் தந்துள்ளது. சிறையில் இருந்தாலே அவர்கள் தேர்தலிலே போட்டியிடக் கூடாது என்று. நமது அரசியல் வாதிகள் பதிலைக் காணோமே என்று பார்த்தேன்.

முதன் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது தான் ஆச்சரியமளிக்கின்றது.சட்ட அமைச்சர் கபில் சிபல் எல்லா அரசியல் கட்சிகளையும் கலந்துதான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்.
நமது அசோக ஸ்தூபியில் நான்கு சிங்கங்கள் இருக்கின்றன. நாடாளுமன்றம் நீதித் துறை செய்தி ஊடகங்கள் நாட்டு மக்கள் என்று.

பாண்டிச்சேரிய்ல் ஒரு  15 வருடங்களுக்கு முன்னர் நான் சொன்னேன் ஒரு இலக்கிய நிகழ்வில் இந்தச் சிங்கங்களை அச்சடிக்கின்ற பொழுது ஒரு சிங்கம் மறைந்து போகும் அதுதான் இந்திய மக்களைக் குறிக்கின்ற் சிங்கம்  என்று.

கிரிமினல்கள் உதவியில்தான் இந்நாட்டு அரசியல் நடக்கின்றது என்பதனை நமது அரசியல் கட்சித் தலைவர்கள் பெருமையோடு ஒத்துக் கொள்வதனைப் பார்க்கின்ற போது உச்ச நீதி மன்றத்திற்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கின்றது. இத்தனை வெளிப்படையாக எங்கள் மானம் சூடு சுரணையற்ற தலைவர்களை எங்கள் முன் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வைத்ததற்காக.

Thursday, July 11, 2013

யார் காக்க

உச்ச நீதிமன்றம் கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப் பட்டவுடன் நாடாளுமன்ற உற்ப்பினரோ சட்டப் பேரவை உறுப்பினரோ உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட வேண்டும் என்று இன்று ஒரு தீர்ப்பினை அளித்துள்ளது. கிரிமினல் குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலிலே போட்டியிடவே தடை விதித்தாலொழிய இந்த நாடு தேறாது.

ஒரு நீதிபதி ஒரு காவற்றுறையைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றியிருக்கின்றார். அவர் ஒரே நாளில் மீண்டும் பதிவியில் நீதிபதியாக அமர்த்தப் படுகின்றார். காவற்றுறைப் பெண்ணிற்கே இது தான் நிலை என்றால் சாதாரண பெண்கள் நிலை என்ன.

Tuesday, July 9, 2013

விஜய் தொலைக்காட்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு

அன்புமிக்க தமிழர்களுக்கு வாழ்க தமிழுடன். விஜய் தொலைக்காட்சி மீண்டும் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்வை தொடங்கியுள்ளது. இந்த முறை தமிழுணர்வு மிக்க நல்லறிவோடு கூடிய நல்ல இளம்படை என்னோடு பணியாற்றுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10 மணியிலிருந்து 11 ம்ணி வரை நிகழ்ச்சி ஒலி பரப்பாகின்றது. அனைவரும் பார்க்க வேண்டுகின்றேன். அன்புடன் நெல்லைக்கண்ணன்

சிந்தனைக்கு

ஊழல் செய்த அமைச்சருக்கு மரணதண்டனை.பதறி விடாதீர்கள். சீனாவில்.கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் ஆகி விட்டார். இனிமேல் தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.பல நாட்கள் டி.ஆர்.பாலு சோனியாகாந்தியைச் சந்தித்து ஆதரவு கேட்டு மான உணர்வே இல்லாமல் காங்கிரஸ் ஆதரவு தந்து  காக்கை பாடினியார் கனிமொழி வெற்றி பெற்ற மறு நாள் தமிழர்களுக்காகவே (அழகிரி ஸ்டாலின் கனிமொழி ) வாழும் மாமனிதர் கருணாநிதி சொல்லுகின்றார். காங்கிர்ஸோடு எங்களுக்கு ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது. உடனே காங்கிரஸ் செயலாளர் முகுல் வாஸ்னிக்கும்  எங்களுக்கும் திமுகவிற்கும் உறவு இல்லை என்கின்றார். யாருக்கு மானமும் வெட்கமுமில்லை எனப்தனைக் கூட நாம் கண்டு பிடித்து விடாமல்  ந்ம்மைக் குழப்புகின்ற காங்கிரஸையும் திமுகவையும் பார்த்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது.

Monday, June 24, 2013

கண்ணதாசக் கோமகனை

படைத்தவனும் தமிழருக்காய் படைத்தளித்தான்
பாடல் பேச்சு எழுத் தறிந்த பாவலனை
கிடைத்த எந்தப் பொருளையுமே பாடலாக்கும்
கேள்விகளின் நாயகனை செட்டி நாட்டைக்
கொடித்தலமாய் ஆக்கி புகழ் சேர்த்தவனை
கொற்றவனை கண்ணதாசக் கோமகனை
பனித் தமிழாள் நமக்களித்த் இந்த நாளைப்
பைந்தமிழர் எல்லோரும் போற்றி நிற்போம்

Sunday, June 23, 2013

வேண்டுகோள்

அன்புடையீர் வாழ்க தமிழுடன். யு  ட்யுபில் எனது அன்பு மகன் சுரேகா தனியாக  என் பெயரில் கணக்கு துவங்கியிருக்கின்ரார். அதன் பெயர்  the nellaikannan. இனி என் மீது அன்பு கொண்ட அன்பர்கள் சந்தா அனுப்பும் போது அந்த முகவ்ரிக்கு அனுப்பவும். நன்றி. என்றும் உங்கள் அன்பன் நெல்லைகண்ணன்

Tuesday, June 18, 2013

ஹோமியோ எனும் மாமருந்து.

சத்தியாக்கிரகம் எத்தனை உண்மையானதோ அத்தனை உண்மையானது ஹோமியோபதி மருத்துவம் என்று காந்தியடிகள் எழுதுகின்றார்.  

கடந்த ஆறு ஆண்டு காலமாக் எனது குடும்பத்தில் நாங்கள் ஆங்கில மருத்துவரிடம் போவதில்லை. தமிழ் தெரிந்து கொண்ட என் மகள் கோவில்பட்டி விஜயலட்சுமி என்க்கு அவளுக்குத் தெரிந்த ஹோமியோபதி மருத்துவத்தை அறிமுகம் செய்து வைத்தாள்.

இன்று பல நண்பர்களுக்கு நான் மருந்துகள் தந்து அவர்கள் முக மலர்ச்சியோடு வந்து நோய் குணமானதைக் கூறும் போது மனம் நிறைந்து  போகின்றேன்.

குறிப்பாக் இரண்டு முக்கிய நோய்களுக்கான மருந்துகளை இன்று உங்கள் பார்வைக்கு தருகின்றேன்.

சிறூநீரகத்தில் கல்

இரண்டு மருந்துகள்

சமோமில்லா                பெல்லடொனா

இரண்டு மருந்துகளையும்  30     200     1 எம் என்ற விகிதத்தில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 30 போதுமானது  இரண்டு மாத்திரைகளையும் சாப்பாட்டிர்கு அரை மணி நேரம் முன்னதாக இல்லை பின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள் .

முதல் நாள் இரண்டு மாத்திரைகளையும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை முதலி ச்மோமில்லா  பின்னர் அரை மணி நேரம் கழித்து பெல்லடோனா என்று மாற்றி மாற்றி போட்டு வாருங்கள்.

மறுநாள் ஒரு மணி நேரத்திர்கு ஒரு முறை போட்டு வாருங்கள் ஒரே வாரத்தில் ஸ்கேன் செய்து பாருங்கள். கல் காணாமல் பொயிருக்கும்.


இன்னொன்று மூல நோய்  ந்க்ஸ்வாமிகா       சல்பர்


நக்ஸ்வாமிகாவையும் சல்பரையும் அதே அளவுகளில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு படுக்கப் போவதற்கு முன்னர் நக்ஸ்வாமிகாவையும். காலையில் எழுந்து பல் துலக்கியவுடன் சல்பரையும் போட்டு வாருங்கள். நோயின் கடுமை அதிகமிருந்தால் இவற்றையும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை போட்டு வாருங்கள். ஒறே வாரத்தில் மூல நோய் போ ன இடமே தெரியாது.மாத்திரைகள் மிகக் குறைந்த விலை.

Friday, June 14, 2013

அரசியல் புரிகின்றதா

தே மு..தி.மு.க. விலிருந்து சட்டப் பேரவை உறுப்பினர் பாண்டியராஜனும் முதல்வரைச் சந்தித்து விட்டார். அவர் சொலுகின்றார் தொகுதி மக்களுக்கு வேண்டிய காரியங்களைச் செய்வதற்காகவே முதல்வரைச் சந்தித்ததாக.இது மறைமுகமாக அ.தி.மு.க். அரசை அவமானப் படுத்துகின்ற வேலை என்பது ஏண் முதல்வர் அவர்களுக்குத் தெரிய மாட்டேனென்கின்றது.

அந்த அறிக்கையின் அல்லது நேர்காணலின் அர்த்தம் என்ன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதிகளில்  முதல்வர் அடிக்கடி சொல்லுகின்றாரே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப் பான்மையோடு நடந்து கொள்கிறது என்று அந்தக் குற்றச்சாட்டுத் தானே முதல்வரின் ஆட்சியின் மீதும் வைக்கப் படுகிறது.தே.மு.தி.க வின்  இதற்கு முன்னால் முதல்வரைச் சந்தித்த ஆறு சட்டப் பேரவை உறுப்பினர்களின் அறிக்கைகளும் சொன்ன செய்தியும் அதுதானே.

மத்திய அரசு எதிர்க் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில்  இப்படி நடப்பதாகச் சொல்லுகின்ற் அதே குற்றச் சாட்டுத்தானே. எதிர்க் கட்சி வரிசையில் இருந்தால் எனது தொகுதி மக்களுக்கு நான் ஏதும் நன்மை செய்ய முடியாது என்கின்ற நிலையில்  என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக இந்த்ச் செயலைச் செய்ய வேண்டியிருக்கின்றது என்று தே.மு.தி.க. சட்டப் பேரவை உறுப்பினர்களின் செய்தியிலும் உள்ளது.

_________________________________________________________________________________எப்படியாவது கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக்க பெரியவர் கருணாநிதி முயலுகின்றார். யாரைச் சரிக் கட்டியாவது. 68ல்  சட்டப் பேரவையில் கொவைக் கம்பன் பெரியவர் கருத்திருமன் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து கனிமொழி என்று ஒரு பெண் குழந்தை ராயப் பேட்டை மருத்துவமனையிலே பிறந்திருக்கின்றதே என்று. கேட்ட பொழுது பெரியவர் கருணாநிதி தந்த பதில் கனிமொழி என் மகள். தர்மாம்பாள்(ராஜாத்தி அம்மாள்) அவளின் தாயார் என்று. கனிமொழியின் பிறப்பை அசிங்கப் படுத்தியவர்.

_______________________________________________________________________________


பெரியவர் அத்வானி என்ன ஜாதி குஜராத் முதல்வர் மோடி என்ன ஜாதி என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Wednesday, June 12, 2013

அம்மாவும் அரசும்

அம்மா தந்த
பாட்டில்
பழக்கம்

அரசும்
தந்து
காத்து
நிற்கும்

Tuesday, June 11, 2013

தனி தினம் உண்டோ

உன்னைப்
பெற்றவள்
என்று
சொல்லமுடியாத
அறுவை
சிகிச்சை
அன்னையருக்கு

தனி
தினம்
உண்டோ

கம்பன் கழகங்கள்

பல ந்ண்பர்கள் ஏன் கம்பன் கழகங்களுக்கு வர மட்டேன் என்று என்னிடம் வினவுகின்றனர். அவர்கள் அழைத்தால் தானே வர இயலும்.

எங்கள் நீதியரசர் மகராஜ பிள்ளை கம்பன் அடிப்பொடி உண்மையான காந்தியவாதி சா.கணேசன் போன்ற் பெரியவர்கள் துவங்கி வைத்தது பாண்டிச்சேரியில் பெரியவர் புலவர் அருணகிரி போன்ற தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்  அவர்களின் பொறுப்பில் சென்னைக் கம்பன் கழகமும் காரைக்குடி கம்பன் கழகமும் இருந்தது. இப்போதோ அரசியல் சார்ந்தவர்கள் கையிலேயும் இந்தப் பொறுப்புகளை வைத்து தங்களின் சொந்த நலனுக்ககாக பயன் படுத்திக் கொள்பவர்கள் கையிலேயும் கம்பன் கழகங்கள் இருக்கின்றன. நான் என்ன செய்ய.விரித்து எழுத நான் விரும்பவில்லை.


என்னுடைய குறுந்தகடுகளை யாரோ நண்பர்கள் யு ட்யுபில்  ஏற்றி வைத்திருக்கின்றனர். அவர்கள் யார்  என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதனை ஆயிர்க் கண்க்கான தமிழர்கள் பார்க்கின்றனர் என்று தெரிகின்றது.
மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதன் விளைவாக பல உயர்ந்த குணங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்க்கு இறைவன் அருளால் கிடைத்திருக்கின்றனர். நன்றி அந்த நண்பர்களுக்கு.

Friday, June 7, 2013

இயேசு பிரான்

கொள்ளை
அடிக்கும்
கல்வி
நிலையங்களின்
கூரைகள் தோறும்

கையை
விரித்த படி
இயேசு பிரான்

எனக்கொன்றும்
சம்பந்தமில்லை
என்று

Tuesday, June 4, 2013

ஒண்ணுமே புரியல்லே

கேரளத்தில் தென் மேற்கு பருவ மழை பெய்ய ஆரம்பித்தவுடன் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகின்றது. கர்நாடகாவில் மழை ஆரம்பித்தவுடன் மேட்டூர்  அணைக்கு நீர் வர ஆரம்பித்து விட்டது. அறியாமையில் இவர்கள். மலையாளத்தார் என்றும் க்ன்னட வெறியர்கள் என்றும் புலம்புவர். இயற்கை நம்மை இணைத்து வைத்திருக்கின்ற்து. நாம் தான் பிரித்துப் பேசுகின்றோம். ம்லைகளை அழிக்காமல் இருந்திருந்தால், மரங்களை அரசியல் வாதிகள் வெட்டாமலிருந்திருந்தால் மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருக்கும் அடைத்து வைக்க அவசியமேயிருந்திருக்காது.

இப்படியெல்லாம் பேசுகின்ற நமது தலைவர்கள் இத்தனை சிவாலயங்கள் இருக்கும் இந்தத் தமிழகத்தில் கோவையில் ஒரு கர்நாடகத்துக்காரர் (வாசுதேவ்)வெள்ளியங்கிரி மலையைக் கைப் பற்றியிருக்கின்றார். அவரை வீரமணியோ தமிழினத் தலைவரோ வை.கோ. போன்றவர்களோ கேட்கவே மாட்டேனென்கின்றனரே ஏன்?


உள்துறை அமைச்சர் சுப்பராயனை உள்துறை பொறுப்பிலிருந்து நீக்கியதற்காக டில்லித் தலைமை கேட்டதென்பதற்காக தனது முதலமைச்சர் பதவியைத் துறந்த ஒமந்தூரார் பின்னர் அரசியலுக்கே வரவில்லை. கட்சியின் எதிர்காலத்திற்காக தனது முதலமைச்சர் பதவியைத் துறந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

90 வயதிலேயும் தனது கட்சியை அவர் விருப்பப்படி தனது வாரிசுகளிடம் ஒப்படைக்க விரும்ப மாட்டேனென்கின்றாரே பெரியவர் கருணாநிதி.

Sunday, June 2, 2013

எல்லா ஊழலுக்கும் நேர்ந்ததே

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி இன்றைய தினகரன் நாளிதழின் இணைப்பில் தன் கணவர் குறித்து எழுதியுள்ளார். சுதந்திரமான குடும்பத்திலே பிறந்த தான் எப்படி சுஜாதாவின் கட்டுப் பாட்டிற்குள் இருந்தேன் என்றும். பல முறை தன் தாயின் மடியில் தலை வைத்து அழுது அவர்கள் வீட்டிற்கே வந்து விடுகின்றேன் என்று பல முறை தன் தாயிடம் அழுததையும் வேறு வழியின்றி அந்த வாழ்க்கைக்குப் பழகிப் போனதையும் தன் மீதும் தன் குழந்தைகள் மீதும் அன்பிருந்தும்  அதை வெளிப்படுத்தத் தெரியாதவராகத் தன் கணவர் இருந்ததைப் புரிந்து கொண்டதாயும் சொல்லியுள்ளார்.


கொஞ்சம் இதனைப் புரிந்து கொள்ள் இன்றைய தலைமுறையினர் முயன்றால் விவாகரத்து வழக்குகள் குறையக் கூடும்.

                                           ====================

ஐ.பி.எல். தலைவர் சுக்லா பதவியைத் துறந்துள்ளார். ஐ.சி.சியிலும் செயலரும் பொருளாளரும் பதவியைத் துறந்துள்ளனர். சீனிவாசன் துறக்கத் தயாராயில்லை.

கிரிக்கெட் விளையாட்டில் சிரந்தவர்களாக் விளங்கிய கபில் தேவ்  சுனில் கவாஸ்கர். வெங்சர்க்கார் பிஷன்சிங் பேடி சித்து என்று பல விளையாட்டு வீரர்கள் இருக்கும் போது இந்தத் தொழிலதிபர்கள் ஏன் அதில் பதவிகளில் அம்ருகின்றனர்.. பவார் பருக் அப்துல்லா அருன் ஜேட்லி லாலு.புரியவில்லை.
இந்த ஊழல் என்னவாகும் என்கின்ற இளைஞர்களுக்கு.எல்லா ஊழல்களுக்கும் என்ன நேருமோ அதுவே இந்த ஊழலுக்கும் நேரும்.கவலை வேண்டாம்.

2ஜி யில் கடைசி வரை மாறன் சகோதரர்கள் கைது செய்யப் படாததற்கு என்ன காரணம் என்று யாராவது சொலுங்களேன். அவர்கள் விமானக் கம்பெனி சிறப்பாக புதிய புதிய விமானங்களைப் பறக்க விடுகின்றது. சீனிவாசன் தயவில் அவர்களும் சன்ரைசர்ஸ் அணியைக் களமிறக்கினார்கள்.

சட்டங்களுக்கு கட்டுப் படாத தலைவர்களும் அரசு அதிகாரிகளும் தொழிலதிபர்களும் இருக்கும் நாட்டில் பைத்தியம் போல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் பயந்தும் கடவுளுக்கு அஞ்சியும் வாழும் மக்களின் மத்தியில் அதிகக் கோபம் அடைந்தவன் துப்பாக்கியைத் தூக்குகின்றான்.

அவனைத் தீவிரவாதி என்கின்றனர்.

கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்கின்றான் பெரும்புலவன் பாரதி..

கவலை எதற்கு அவனுக்கும்தான் சிலை நாடாளுமன்றத்திற்குள் வைத்து விட்டோமே,

Saturday, June 1, 2013

என்ன செய்ய

ஒரு முறை ஒரு மிகப் பெரிய கவிஞர் பாரதி விதவைகளைப் பற்றிச் சிந்திக்கவெயில்லை என்று நான் பாரதியைப் பற்றி யாதுமாகி நின்றாய் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழிலேயே எழுதினார். காசியில் விதவைப் பெண்களாக்கப் படுகின்ற கொடுமை கண்டுதான் அவன் பூணூலை அறுத்தெறிந்தான். முண்டாசும் மீசையும் வந்ததே அதனால் தான். பெண்களை ருதுவாவதற்கு முன்னால் திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்றான். திருமணம் செய்த பெண் அந்தக் கணவன் பிடிக்கவில்லையென்றால் அந்தக் கணமே விலகி வாழ அனுமதி என்றான். பெண்கள் திருமணமே வேண்டாம் என்கின்றார்களா அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதி என்றான். அவள் ஒரு நிறுவனத்திற்கு தலைமை தாங்க விரும்பினால் அதைத் தடுக்காதே என்றான். ஆண்களோ பெண்களோ விதவைகளாகி விட்டால்  அவர்கள் வயதுக்கேற்ற பெண்களையும் ஆன்களையும் திருமனம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட வயதிற்குள் உடல் இச்சை தீரும் படி ஆண்டவன் மனித் உயிர்களைப் படைக்கவில்லை என்றான்.

பாரதியின் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்கின்ற வரியை வாலி அசிங்கப் படுத்தியுள்ளார்

திரைப் படக் கவிஞர் பா. விஜய் அவர்கள் நக்கீரன் வார இதழில் ஒரு தொடர் எழுதினார் . அந்தத் தொடரில் அவர் விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துச் சென்று ம்கிஷாசுரமர்த்தினியை வதம் செய்தனர் என்று எழுதினார்.

என்ன செய்ய.


Saturday, May 25, 2013

யாருக்கும் வெட்கமில்லை

கிரிக்கெட்டில் ஊழலை ஒழிக்கத் திட்டம். கிரிக்கெட்டையே ஒழித்து விட்டால் என்ன. பாய்காட் சொல்கின்றார். அந்த சூதாட்டத்தை சட்ட பூர்வமாய் அனுமதித்து விடுங்கள். அதுதான் அரசியல் இருக்கின்றதே.

ஏ.வி.எம்மின் பூட்டன் குருநாத் மெய்யப்பன் இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசன் மருமகன் பணத்திற்காக சூதாடி கைது செய்யப் பட்டிருக்கின்றார். அவர் மரியாதையுடன் கைது செய்யப் பட்டிருக்கின்ரார். ஸ்ரீசாந்த்தும் மூன்று கிரிக்கெட் வீரர்களும் உடன் கைது செய்யப் பட்டு முகமூடி அணியப் பட்டு தெருக்களில் இழுத்து வரப் பட்டனர்.

சென்னையில் ஒரு பணக்காரரின் மகன் கார்  ஒட்டி ஒரு சிறுவன் (ஏழை) இறந்திருக்கின்றான். மூன்று பேர் காயப் பட்டிருக்கின்றனர். அதை வேறு வழக்காகப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் உடனே வேறு இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கின்றார். கடுமையான தண்டனை.

வரதட்சணையால் பாதிக்கப் பட்ட ஒரு பெண். கணவன் பார்க்க கணிப் பொறி காமிராவின் வழியே தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். வாழ்கவிஞ்ஞானம்..

என் பேரன் கேட்கின்றான். 2ஜி மாதிரிதானே இந்தக் கிரிக்கெட் ஊழ்லும் காணாமல் போகும் என்று. என்ன பதில் சொல்ல

எத்தனை நடந்தும் இறுதிப் போட்டி நடந்தே தீரும் சொல்கின்றனர்.

வெட்கமில்லை இங்கு வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை


Sunday, May 19, 2013

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலர்

நண்பர் தினமணி வைத்தியநாதன் அவர்கள் இன்று கலாரசிகன் என்ற பெயரில் ஒரு செய்தியை எழுதியுள்ளார்.அபத்தத்தின் உச்சம்.

அவர் என்னிடம் ஒரு முறை நேரிலேயே சொன்னார் கண்ணதாசனை விட வாலி தான் மிகச் சிறந்த கவிஞர் என்று. அது அவர் கருத்து.
ஏன் அப்படிச் சொல்கின்றார் என்பது நல்ல தமிழர்களுக்குத் தான் தெரியுமே.

இன்று எழுதுகின்றார் வைத்தியநாதன்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்வோம் என்று பாரதி எழுதியது புரியாமல் இவர் தவித்துக் கொண்டிருந்தாராம்  வாலி அதற்கு விளக்கமளித்து விட்டாராம்.
வாலியின் விளக்கம்===      அடியேன் அறிந்தவரை அதற்கான் அர்த்தம் யாதென்றுரைப்பேன். பாரதி பள்ளித்தலமென்று பள்ளிக் கூடத்தைக் குறிப்பிட்டிருக்க மாட்டான்
அது ஏற்கனவே கலைமகள் கொலுவிருக்கும் கோயில்தானே. அவன் குறிப்பிட்டது யாதெனில் பள்ளர்களும் பள்ளிகளும்  இருக்கும் சேரியைத்தான்.

அசிங்கமும் அருவருப்பும் பாராமல் ஊர்ப்பணி ஆற்றும் உத்தமர் தம் உறைவிடத்தை ஆலயமாக்க விரைந்த  முதல் ஆசாமி அந்த முண்டாசுக் கவிஞன். என்கின்றார் வாலி

பள்ளர்கள் முதலில் தேவேந்திர குல வேளாளர்கள். அவர்கள் உழுது விதைத்து களை பிடுங்கி பயிர் காத்து உலகத்து உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றும்
பண்பாளர்கள். கழனியை அருவருப்பான் இடம் என்கின்றாரே வாலி அவருக்குத் தெரியுமா கழனி உலகத்தார்க்கு உயிர் தரும் பூமி. அவர்கள் இல்லையெனில் எல்லாவற்றையும் துறந்து விட்டதகச் சொல்லும் துறவிகளும் இல்லை என்கின்றான் வள்ளுவப் பேராசான்.. அங்கே எங்கே அசிங்கமும் அருவருப்பும் இருக்கின்றது. கழனிகளின்  மணம் தெரியுமா வாலிக்கு. சாமர்த்திய்ம் சாமர்த்திய்ம்.

கலைமகள் அங்கே ஏற்கனவே இருக்கின்றாளாம்.இல்லை என்பதுவே அந்த மகாகவியின் வாதம்.கலைமகள் வழிபாட்டையே கேலி செய்கின்றான் பாரதி.

மந்திரத்தை முணுமுணுத்தேட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரினையிடுதல் சாத்திரம் இவள் பூசனையன்றாம்
வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்களெங்கும் பல பல பள்ளி
தேடு கல்வியிலாத தோர் ஊரைத் தீயினுக்கிரையாக்கி மடுத்தல்
என்று தெளிவு படச் சொல்லுகின்றான்.

இன்று பள்ளித் தலம் அனைத்தும் கொள்ளித் தலமாகி விட்டது.

பாரதி என்கின்ற அந்த மகாகவி சொல்லுகின்றான். பள்ளிகள் தான்
கோயில்களாக வேண்டும் என்கின்றான். கோயில்களைப் புனிதமாகப் போற்றுகின்றீர்களே.அது போலவே பள்ளிக் கூடங்களை அந்தப் பெருமகன் தலங்கள் என்கின்றான். நீங்கள் கோயில் இருக்கின்ற ஊர்களை தலங்கள் என்று போற்றுகின்றீர்களே. இல்லை பள்ளிகள் இருக்கின்ற இடங்களைத் தலமென்கின்றான் எங்கள் மகாகவி..ஏனென்றால் அதில் பயின்ற மாணவர்கள் உலகு போற்றுகின்ற பெருமைக்குரியவர்களாவார்களாகி வர வேண்டுமென்கின்றான். .தமிழன் தான் வையத் தலைமை கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை கொண்டவன்  எங்கள் மகாகவி.என்ன செய்வது பாரதியே  சொல்லுகின்றானே.

அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலர் என்று.

வாலி என் அன்பிற்குரியவர். ஆனாலும் தவறுகள். தவறுகள் தானே


உழவுத் தெய்வங்கள் ஆன பள்ளர்கள் பாடுவதாக பாரதி ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று பாடுகின்றான்.

பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே  பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே நம்மை
ஏய்ப்பாருக்கேவல் செய்யும் காலமும் போச்சே என்கின்றான்

வைத்தியநாதனுக்கு இதன் அர்த்தம் புரியும்

Monday, April 29, 2013

சில உண்மைகள்

                                         கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

ஆனந்த விகடன் வார இதழில் முன்பொரு முறை கழுகார் பதில்களிலும் சென்ற வாரம் நானே கேள்வி நானே பதில் பகுதியிலும் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பகுதியிலும் என்னைக் குறித்து ஏன் எழுதவில்லை என்று பல நூறு நண்பர்கள் தொலை பேசி வாயிலாகவும் கடிதங்கள் வாயிலாகவும் மின்னஞ்ஞல் மூலமாகவும் என்னை வினவுகின்றனர்.

நான் என்ன செய்ய இயலும் எழுதுகின்றவர்களுக்கு எல்லாம் என்னை எப்படித் தெரிந்திருக்க முடியும். அவர்களுடன் பழகியவர்களைப் பற்றித் தானே அவர்கள் எழுத முடியும். எல்லா இதழ்களையும் ஏதோ ஒரு நேரம் ஏதோ ஒரு காரணத்திற்காக வேறு  விமரிசித்து விடுகின்றேன். நண்பர்களுக்கு இது புரியவில்லை. இரண்டாவது நானும் ஒன்றும் அத்தனை சிறந்த பத்திரிக்கை ந்ண்பர்களை விட அறிவிற் சிறந்தவன் ஒன்றும் இல்லையே.

ஒரு பெரிய தமிழறிஞர் சொன்னார். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று


                   காமராஜர் பற்றி உண்மை பேசுகின்றார் கருணாநிதி

இன்றைய சட்டப் பேரவையைக் குறிப்பிட பெரியவர் கருணாநிதி பெருந்தலைவர் காமராஜரின் சட்டப் பேரவை நாகரிகத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒரு மகிழ்ச்சி அவர் முதல்வராக இருந்த போது இருந்த சட்டப் பேரவையைப்
பற்றிக் குறிப்பிடவில்லை.  அவரால் எப்படி முடியும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பெண்ணை சேலையைக் கிழித்து வெறியாட்டம் ஆடியதும் மிகவும் மலினமான வார்த்தைகளால் அவரைத் திட்டியதும். அதை தமிழகத்தின் தலை சிரந்ததாகப் போற்றப் படும் ஒரு ஆங்கில் நாளிதழ் வெளியிட்டதும் தமிழகம் அறிந்த் ஒன்றுதானே.

பெருந்தலைவரை அவர் என்ன மெத்தப் படித்தவரா என்று மேடை தோறும் பேசியவர்கள் தானே இவர்கள்.பெருந்தலைவர் திருநெல்வேலிக் கூட்டத்தில் கேட்டார் நான் எங்கேயாவது படிச்சிருக்கேன்னு சொன்னேனா.பிறகு ஏன் அதையே சொல்றாங்க என்றார்.

Wednesday, April 10, 2013

அது அந்தக் காலம்

பள்ளிக் கூட விடைத்தாள்களும்  வினாத் தாள்களும் படுகின்ற பாடு கல்வி நமது நாட்டில் படுகின்ற பாட்டை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. யாரிடமும் முறையிட முடியாது. சேவை மனப்பான்மையோடு கல்விப் பணியாற்ற விரும்பாதவர்கள் அதிகப் பட்டுப் போகின்ற போது இப்படித் தான் ஆகும்.

சட்டப் பேரவையில் தேமுதிக திமுக இரண்டு கட்சிகளும் வெளியேற்றப் படுவதே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வர் பெரியவர் காமராஜரோ பக்தவத்சலமோ ஆர்.வெங்கட்ராமனோ  சி.சுப்ரமணியமோ பதில் சொல்லச் சளைக்க மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பேசவே அனுமதிக்கப் படவில்லையென்றால் எதற்கு தேர்தல்களும்  செலவுகளும். புரியவில்லை.

பெரியவர் நெடுஞ்செழியன் பல வெளி நாட்டு அறிஞர்களின் குறிப்புகளை யெல்லாம் சட்டப் பேரவையில் எடுத்து சொல்லிக் கொண்டிருக்கின்றார். பெருந்தலைவர் காமராஜர் அவரிடம் அது சரி நீங்க என்ன சொல்றீங்க அதைச் சொல்லுங்க என்ற போது சபை மட்டுமல்ல பெரியவர் நெடுஞ்செழியனும் சிரித்தார். வெளியிலிருந்த அண்ணா அதைக் கேட்டுச் சிரித்து மகிழ்ந்தார். 

ராஜாஜி தனது தொகுதி மக்களுக்காகப் பேசிக் கொண்டிருந்த தோழர் ஜீவாவிடம் உலகம் குறித்துச் சிந்திக்க வேண்டிய நீங்கள் ஒரு தொகுதி மக்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கின்றீர்களே என்று கேலி செய்ய முற்பட்ட நேரம் . என்ன செய்வது அந்தத் தொகுதி மக்கள் அவர்களின் பிரதிநிதியாக என்னைத் தேர்ந்த்டுத்து அனுப்பி உள்ளனரே. நீங்கள் மக்களுக்கே சம்பந்தமில்லாமல் மேலவையின் வழியாக வந்தவர்
உங்களுக்கு என்ன கவலை என்ற போது ராஜாஜியும் அதைக் கேட்டு சிரித்தார்.

அது அந்தக் காலம்


Wednesday, February 13, 2013

ஒருவருக்கும் கோபம் வராது.

நேற்று வங்கி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அப்போது தான் தெரிய வந்தது. கல்விக் கடனுக்கு வட்டி 13 சதவீத்ம் என்றார்கள். வசூலிப்பதிலும் கடுமை காட்டுகின்றார்கள்.

விஜய் மல்லையா 7500 கோடி வங்கிகளுக்குத் தர வேண்டியதிருக்கின்றது. அவர் இல்லையென்றால் அழகிகளின் படம்  கொண்ட  மாதங்காட்டிகள் நமது நாட்டிற்கு யார் தருவார்கள். கிரிக்கெட் குழுவை எத்தனை கோடிக்கு ஏலம் எடுப்பார்.

ஒரு விஜய் மல்லையா மட்டுமா.இன்னும் எத்தனை பேர் எத்தனை கோடி தரவேண்டியுள்ளது. சொல்ல மாட்டார்கள். பொது உடைமை தொழிற்சங்கங் கள் எத்தனை முறை பட்டியலிட்டன.

அவர்களின் எடு பிடிகள் ஆட்சியில் இருக்கையில் அவர்களின் தவறான பொருளீட்டுதலை நம்பி இருக்கையில் என்ன செய்ய இயலும்.

கட்டிடத் தொழில் செய்யும் இளைஞர் கொண்ட ஒரு தலைக் காதல் ஒரு இளம்
பொறியியல் மாண்வியைக் கொடூரமாகக் கொன்றிருக்கின்றது . அவர் தமிழ்ப் பெண். வசதியானவர் இல்லை போலத் தெரிகின்றது.டில்லியில் ந்டந்தால் தான் பாலியல் வன்முறை போலும். இங்கு யாரும் கோபப் படவில்லை.

கொடுமை கொண்டு பொங்குவாய் வா வா வா என்றான் பாரதி

Saturday, February 2, 2013

எல்லா மதங்களும்

எல்லா மதங்களும் அன்பைத்தான்  போதிக்கின்றன. எந்த மதமும் கொலயை கொள்ளையைப் போதிப்பதில்லை. புரிந்து கொள்ளாதவர்கள் தவறு செய்தால் அதை அந்த மதத்தின் மீது சுமத்துவது நியாயமாகாது. திருடர்கள் திருடப் போகும்போது இறைவனை வணங்கி விட்டுத் தான் செல்கின்றார்கள். இறைவன் திருடனை வாழ்த்தியா அனுப்புவார்.

சல்லல்லாஹி அலைஹி வஸ்ஸலம்  ந்பி பெருமானர் தெளிவாகச் சொல்லுகின்றார். அவரவர் மதம் அவர்களுக்கென்று.

நம்மாழ்வார் சொல்லுகின்றார்.

அவரவர் தமது தமது அறிவு அறி வகை வகை
அவரவர் இறையவர் என் அடி அணைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றாரே/

அவரவர்கள் அறிவு அவரவர்களுக்கு அவரவர் விதிப் படி  காட்டிய இறைவனை அவரவர் வணங்குகின்றனர்

வேறு படு சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்கு பரம் பொருளே நினது விளையாட்டல்லால்
மாறு படும் கருத்தில்லை என்று சைவம் கூறுகின்றது.

பகவான் இராமகிருஷ்ணர் கிறிஸ்தவ மதத்தில் ஆறு மாதம் இருந்துள்ளார். இஸ்லாமிய சூபியிடம் போய் அந்த மார்க்கத்தை உணர ஆறு மாதங்களுக்கு மேல் இருந்திருக்கின்றார்.

சுவாமி விவேகானந்தரோ இசுலாமியர்களின் உடல் உறுதியோடும் கிறிஸ்தவர்க்ளின் அன்போடும்  நமது வேதாந்த சாரங்களைச் சேர்த்து ஒரு புதிய மதத்தை உருவாக்க விரும்புகின்றேன் என்றார்.

இன்னின்ன வழி காட்டிகள் எமது மத்த்தில்  தோன்றியுள்ளனர் என்று பெருமைப் படுவார்களே யொழிய.

இத்தனை கொலைகள் செய்தவர் என்றும் இத்தனை பெண்களைக் கற்பழித்தவர் இத்தனை கொள்ளைகளைச் செய்தவர் இவர் எங்கள் மதத்தவர் என்று எந்த மதமும் பெருமைப் படுவதில்லை.

ஹே ராம் படத்திலிருந்து  கமலின் மீது குற்றச்சாட்டுகள் வந்து கொண்டேயிருக்கின்றன..தசாவதாரம் படத்தில் சோழ மன்னன் பெருமாள் சிலையைக் கடலில் போடுவதாக ஒரு காட்சி. இன்றும் சிவன் கோயில்களில் பெருமாளுக்கு இடம் உண்டு. பெருமாள் கோயிலக்ளிலேதான் சிவனுக்கு இடம் கிடையாது. திருக்குறுங்குடியிலே மட்டும்தான் உண்டு.. எந்த மன்னனும் அப்படிச் செய்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டில் யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை. இதற்கு முந்திய என்னைப் போல் ஒருவன் படமும் இசுலாமிய தீவிரவாதிகளை இந்தியச் சட்டம் ஒழுங்கை மீறி கதையின் நாயகன் கொல்வதாகக் கமல் காட்டியிருந்தார். அது வேறு படத்தின் தழுவல் என்று நண்பர்கள் சொன்னார்கள். விஸ்வரூபத்திலும் தொழுகை நடத்தி விட்டு தீவிரச் செயல்களில் ஈடுபடுகின்ற காட்சிகளை வைத்திருக்கின்றார் என்று இசுலாமியச் சகோதரர்கள் வேதனை கொள்கின்றனர். குரான் குறித்த சில தவறுகளும் இருப்பதாகச் சொல்கின்றனர். முதல்வர் அரசு இசுலாமிய அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டுக் காட்டச் சொல்லியும் கமல் திரையிட்டுக் காட்ட முன் வரவில்லை என்கின்றார். ஏன் கமல் செய்யவில்லை. செய்திருந்தால் அரசே இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்குமே. புரியவில்லையே.எனது வீட்டையெல்லாம் அடகு வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கின்றேன் என்கின்றார் கமல். அது தொழில் திரைப் படத் தொழிலே ஒரு மிகப் பெரிய சூதாட்டம். நாடோடி மன்னன் திரைப்படம் தயாரித்த எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார். இந்தப் படம் வெற்றியடைந்தால் நான் மன்னன் இல்லையென்றால் நான் நாடோடி என்று. ஒரு மதத்தவர் குறித்து இரண்டு படங்கள் தொடர்ந்து கமலிடமிருந்து வந்ததனால்  கமலின் மீது அவர்களுக்கு வருத்தம் வருகின்றது.

கருணாநிதி இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம்.ஜி.ஆர். அவர்களை இந்த் சர்ச்சைக்குள் இருக்கின்றார். ஜெயா டி.வி. இந்தப் படத்தைக் கேட்டு தராத்தனால் முதல்வர் இப்படிச் செய்கின்றார் என்கின்றார். இவரது பேரன்கள் எத்தனைப் படங்களை இப்ப்டி மிரட்டி வாங்கினர் என்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்க தாத்தா பேசுவது ஆச்சரியமாக இருக்கின்றது.
வேறு தொலைக் காட்சிகளையே வர விடாமல் தடுத்தது இவர்பேரன்கள் தானே. இவர்களுக்குள் வந்த பிரச்சினைகளினால்தானே கலைஞர் தொலைக்காட்சியே வந்தது.

படங்கள் பாடம் சொல்லட்டும் பதற்றங்களை ஏற்படுத்த வேண்டாமே.

Monday, January 21, 2013

68ம் ஆண்டில்

எதிர் வரும் ஜனவரி 27ம் நாளில் 68ம் அகவையில் அடி எடுத்து வைக்கின்றேன். நான் பிறந்தது தைப் பூசத் திருநாளில். இந்த ஆண்டு தைப் பூச த் திருநாளும் ஆங்கில நாளும் ஒன்று போல வருகின்றன். அந்த நாளில் வா மீத் முலை எறி கவிதை நூலின் இரண்டாம் பதிப்பும் எனது கட்டுரைத் தொகுதிகளும் வரக் கூடும் என் எண்ணுகின்றேன். சிறு கதை தொகுப்பு தினமலரில் வந்த எனது முதலிரவு என்ற கதை கிடைக்காததால் தடைப் பட்டு நிற்கின்றது. யாரும் தினமலரின் அந்தக் கதையை வைத்திருப்பின் எனக்கு அனுப்பி உதவினால் நன்றி உடையவானாயிருப்பேன். அன்புடன் நெல்லைகண்ணன்

Tuesday, January 8, 2013

எள்ளுப் பெயரன் வெண்பாவும் பதில் வெண்பாவும்

இன்று காலை மின்னஞலில் எனது ஞானத்தந்தை பாரதியின் எள்ளுப் பெயரன் திரு நிரஞசன் அவர்கள் அவரது கவிதை நூலை நான் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதோடு என்னைக் குறித்து ஒரு வெண்பாவும் அனுப்பியிருந்தார்.

கலைமகள் நாவில் கரை புரண்டோட
மலையருவி  பேச்சில் வழிய-நிலை பெற்று
எண்ணியே என்றும் இமிழும் திரு நெல்லை
கண்ணன் தமிழின் கடல்

நான் பதில் அனுப்பினேன்

எள்ளுமிள காய்ப்பொடியும் எள்ளெண்ணெ யும் சேர்த்து
அள்ளூற உண்ணுவதே ஆசையாம் - தெள்ளுதமிழ்ப்
பாரதியின் எள்ளுப் பெயரா அதனால் தான்
நீர்வந்து சேர்ந்தீரோ நெஞ்சு