Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Monday, July 11, 2011

பிறந்தீர் என்று

வள்ளுவனார் பிறந்து விட்ட தமிழர் நாட்டில்
வசைகளோடு வாழ்கின்றார் வெட்கமின்றி
உள்ளுகின்றார் நல்லவர்கள் இவற்றை யெல்லாம்
உள்ளத்துள் குருதியுடன் புலம்புகின்றாரே
எள்ளி நகையாடுகின்றார் தவற்றால் வாழ்வார்
எவரையுமே ஏய்த்ததிலே பெருமை கொண்டு
வள்ளுவனை நினைக்கின்றோம் அய்யா நீர் ஏன்
வந்து எங்கள் தமிழகத்தில் பிறந்தீர் என்று

Friday, March 12, 2010

குறளும் கருத்தும் காதல் 2

காதல் என்னவெல்லாம் செய்யும். எல்லாம் செய்யும்.ஆமாம். அது எதை வேண்டுமானாலும்
செய்யும்.

காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி தோழிகளோடு உரையாடிக் கொண்டிருக்கின்றாள். அனைவரும் மகிழ்வோடு அவரவர்அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் காதலர் குறித்தும் காதலனோடு தாங்கள் கொண்ட ஊடல் கூடல் குறித்தும் கலந்துரையாடுகின்றனர்.

ஒருத்தி சொன்னாள்.மெல்ல மெல்லத்தான் தொடுவான். ஆனால் அதிலேயே எனது மேனி மிக மிக வேகமாகக் குதிக்கத்தொடங்கும் என்று.

மற்றொருத்தி சொன்னாள். தொடவே மாட்டான். அந்தப் பார்வையிலேயே துவண்டு அவன் மார்பில் நானே போய்ச் சாய்ந்து கொள்வேன் என்றாள்.

இன்னொருத்தியோ ஒற்றை விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாவி படுத்தும் பாடு மொத்த மேனியும் அவனிடத்தில் தஞ்சம் அடைந்தால்தான் உயிர் பிழைக்கும் என்றாள்.

திரும்பி நின்று கொள்வேன். கட்டித் தழுவுவான் என்று நிற்பேன். அவனோ செவி மடல்களில் அவனது மூச்சுக் காற்றைப்படச் செய்வான். நானாகவே பின்னால் சாய்ந்து விடுவேன் என்றாள்.

இதெல்லாம் என்ன என்னவனின் வேகம் யாருக்கு வரும் என்றாள் ஒருத்தி.

வேகமா அத்தனை வேகமா என்றார்கள் அனைவரும்.

எடுத்தவுடன் வேகமென்றால் இனிக்காதே அது என்றாள் ஒருத்தி

இல்லை கூடி மகிழ்ந்து மகிழ்வின் உச்சத்தில் எனது மூங்கில் தோள்களில் சாய்ந்து கொள்வான். அவன் தலையைக்கோதிக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த வேகம் வேறு யாருக்கும் வராது என்றாள்.


ஏக்கத்தோடு மற்ற பெண்கள் கேட்டார்கள் சொல்லேன் சொல்லேன் அந்த வேகத்தைத் தான் சொல்லேன் என்று.

சொல்கின்றேன் பொறுங்கள் பொறுங்கள் என்றாள். பெருமை பொங்க.

தோளிலே தானே சாய்ந்திருப்பான். ஆனால் நான் கண் விழித்தேன் என்றால் அத்தனை விரைவாக எனது நெஞ்சுக்குள்போய் அமர்ந்து கொள்வான். ஆமாம் ஆமாம். விரைவு விரைவு அத்தனை விரைவு.

கண் விழித்தாலா. தோழிமார்கள்.

ஆமாம் கண் மூடித் துயில்கையில் தானே அவன் கனவில் வந்து களித்து எனது தோளிலும் சாய்ந்து கொள்வான்.அப்படித் தோளில் சாய்ந்திருப்பவன் நான் கண் விழிக்கும் கணப் பொழுதில் நெஞ்சுக்குள் போய் விடுவான். அந்த வேகம் யாருக்கு
வரும் சொல்லுங்கள் என்றாள்.

சிரித்துக் களித்தார்கள் தோழியர்.

குறள்

துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தராவர் விரைந்து

Wednesday, March 10, 2010

குறளும் கருத்தும் காதல் காட்சி

குறளும் கருத்தும்

புலர் காலைப் பொழுது.மணம் முடித்துச் சில நாட்களே ஆன இளம் தம்பதியினர். அதிகாலைஎழுந்து குளித்து தலை ஈரம் காய துண்டினைத் தலையில் சுற்றிக்கொண்டு துணைவனுக்கு தேநீர்தயாரித்து எடுத்துக் கொண்டு படுக்கையறை நோக்கிச் செல்கின்றாள் பனிமலர் போன்று.

உறக்கத்தில் இருப்பவனைத் தொடாமல் எழுப்ப மேஜையினைத் தட்டுகின்றாள். உறக்கம்கலைந்தவனோ நீராடி நிற்கும் நிர்மலமான அழகில் திளைத்து வியக்கிறான்.

தேநீரை மேஜையில் வைத்து அருந்தச் சொல்லுகின்றாள் அழகுப் பெண்.

அருகில் வந்து தரச் சொல்கின்றான் அவன்.

நோக்கம் புரிந்து கொண்டவள் கவனமாக மறுக்கின்றாள்.

ஒன்றும் செய்ய மாட்டேன் உறுதி அளிக்கின்றான் அவன்.

அவளைப் பொறுத்த வரையில் அவனது உறுதி மொழி உறுதியாய் இராது என்று
உணர்ந்திருந்தாள்.

நான் நீராடி விட்டேன் சீக்கிரம் எழுந்து வாருங்கள்.குளித்தீர்கள் என்றால் கோயிலுக்குப்போகலாம் என்றாள்.

என்னை நம்ப மாட்டாயா என்று கெஞ்சினான்.

நம்புகிறாற் போல் நீங்கள் நடந்து கொண்டதில்லையே என்றாள்.

நீ பக்கத்தில் வந்து கொடுத்தால்தான் அருந்துவேன். இல்லையெனில் எழவே மாட்டேன்என்றான் அவன்.

சரி கோப்பையை மட்டும்தான் தொட்டு வாங்க வேண்டும் என்றாள்.

ஆணை என்றான்

அருகில் சென்றாள்

தந்த உறுதியில் உறுதி காத்தான் அவன்

வியந்தாள் அவள்.

கோப்பையைத் திரும்பப் பெறும் போது கைகளைப் பற்றிக் கொண்டான் அவன்.

திருட்டுத்தனம் என்றாள் அவள்.

உரியவளைத் தொடுதல் திருட்டுத்தனமா என்றான்.

கோப்பையை மட்டும் தான் தொடுவேன் என்று சொல்லி விட்டு இது என்ன ஏமாற்றுஎன்றாள் அவள்.

வாங்கும்போது மட்டும்தானே சொன்னேன் என்றான் அவன்.

அவன் தொடாமல் விட்டிருந்தால்தான் தோகை துவண்டிருப்பாள்.

கட்டித் தழுவிக் கொண்டான்.

விட்டு விலக முயற்சிப்பவள் போல் அவளும் கட்டித்தான் கொண்டாள்.

மீண்டும் குளிக்க வேண்டும் என்று அலுப்பது காட்டி அணைத்துக் கொண்டாள்.

என்னை விட்டு விட்டு தனியாகக் குளிக்கக் கூடாது இனிமேல் என்றான் அவன்.

கனிச் சுவைகள் அனைத்தும் கன்னியிடம் பெற்றான்.மலர்ந்த பெண்ணின் மலர்ந்த கண்கள் மயங்கிச் செருகிக் கொள்ள அந்த மென் தோளில் அவன் சாய்ந்தான். உறங்கியும் போனான்.

தாயாகிப் பெண்ணாள் அவன் தலைக்குள் விரல் கொண்டு கோதி அவனைக்
கொஞ்சுகின்றாள்.மாட்டேன் என்று சொன்னவுடன் எங்கே சரி என்று எழுந்து விடுவானோ என்று தயங்கியதையும் ஆனால் அவன் தழுவிக் கொண்டதையும் எண்ணி எண்ணி மகிழுகின்றாள்.

மெல்ல விழிக்கின்றான் மென்னகையாள் கோபிக்கின்றாள்.கோபமில்லாக் கோபம்.மாட்டேன் மாட்டேன் என்றேன். போங்கள் என்று சிணுங்குகின்றாள்.

அவன் கல கலவென்று சிரிக்கின்றான்.

அவளை வெட்கம் வாட்டுகின்றது. எதற்குச் சிரிக்கின்றீர்கள். இதற்குத் தான் நான்மாட்டேன் மாட்டேன் என்றேன். என்றாள்.

அட கிறுக்கே எதற்கு நான் சிரித்தேன் தெரியுமா. நேற்று வீட்டிற்கு வரும் வழியில்கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்னார்தாமரைக் கண்ணனின் உலகைச் சென்றடைவதுதான் பேரின்பம் என்று. உனது இந்த மென் தோளில்துயில்வதனை விடவா சொர்க்கம் பெரியது என்று கருதினேன். சிரிப்பு வந்தது என்றான். தோளின்தலையை மார்பிற்கு மாற்றினாள் செல்லப் பெண்.

குறள்

தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு

Sunday, February 7, 2010

குறளும் கருத்தும் 6

தந்தையே எனது உறவினர் ஒருவர். வயதால் மூத்தவர். நிறையக் கற்றிருக்கின்றார். இல்லை தந்தையே படித்திருக்கின்றார்.
எல்லோருக்கும் வழி சொல்வது. எல்லோருக்கும் உதவுவது என்று நல்லதெல்லாம் செய்கின்றார். ஒரே ஒரு தீய குணம்.
எல்லா நன்மைகளையும் யாருக்குச் செய்கின்றாரோ அவர்களிடம் கோபம் கொள்கின்ற போது அவர் நடந்து கொள்கின்ற
முறைகள் தாங்க முடியவில்லை. வார்த்தைகளை அள்ளி வீசுகின்றார். பாவம் அவர்கள் அவர் உதவியிலே வாழ்பவர்கள்.
எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லாமல் மனதுக்குள்ளேயே மறுகுகின்றனர். அவரை எப்படிச் சரி செய்வது.


மனிதர்கள் பலர் மனைவியிடம் கூட இப்படித்தான் நடந்து கொள்கின்றனர். அவள் எதிர்க்க மாட்டாள் என்கின்ற ஒரே
நம்பிக்கை. தந்தையின் பதில்.


அவரிடம் சொல்லு அவர்கள் உங்களையே நம்பி வாழ்கின்றவர்கள்.அவர்களிடம் கோபம் கொள்வது பண்பாடற்ற செயல்
என்று.கோபத்தை கட்டுப் படுத்தப் பழகிக் கொள்ளவே அவர் இந்த உறவுகளைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அது
அவருக்கு அவர் உயிரையும் உடைமைகளையும் காக்கின்ற மிகப் பெரிய உதவியினைச் செய்யும்.

ஆமாம் இப்படி நல்லவர்களிடம் தன்னை நம்பி வாழுகின்ற ஏழை எளியவர்களிடம் இந்தப் பயிற்சியினை
எடுத்துக் கொண்டாரெனில் அவரால் கோபம் கொள்ள முடியாத உயரத்தில் இருப்பவர்களிடம் எத்தகைய சூழலிலும் கோபம் வராது.
புரிகின்றதா?அதனால் அவருக்குப் பெரிய நன்மையல்லவா ஏற்படும்.இல்லையெனில் அவர் நிலை என்னவாகும்.


ஏழைகள் அவருக்குக் கீழே இருப்பவர்கள் பொறுத்துக் கொள்வார்கள். மிகப் பெரிய இடத்தில் இருப்பவர்கள் இவருடைய
குணம் கொண்டவர்களாக இருப்பின் இவர் கதி அதோ கதிதானே.


இவர்கள் இப்படியே இருப்பின் நீயும் நானும் என்ன செய்ய முடியும். இதே பழக்கத்தில் இவர்கள் விபரமில்லாமல்
கோபப் படக் கூடாத இடங்க்ளில் கோபப் பட்டு ஒரு அனுபவம் பெறுவார்கள் பார். அப்போது அவர்களாகவே தெரிந்து கொள்வர்.


கோபப் படாமல் இருக்க நம்மைக் காப்பாற்றிக் கொள்ள தந்தை சொன்ன வழியை எண்ணிஎண்ணி
அவரை வணங்கி நின்றேன்.


குறள்

செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக்
காக்கிலென் காவாக் காலென்

Friday, February 5, 2010

குறளும் கருததும் 4

மனித வாழ்க்கை தருகின்ற பல அய்யப்பாடுகள் குறித்து வள்ளுவரைத் தவிர யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலும்.
என் தந்தை எனக்கு சிறு வயதில் இருந்தே சொல்லித் தந்தது. என்ன அய்யம் ஏற்படினும் அதனை ஒரு கேள்வியாக்கிக் கொண்டு
வள்ளுவரிடம் செல் உறுதியாகப் பதில் உண்டு என்பார்கள்.


மக்களுக்கு எப்போதும் இருக்கின்ற ஒரு பெரிய அய்யம்.

தவறுகளுக்கு அஞ்சாமல் தவறுகளையே வாழ்க்கையாக்கி வருவாய் ஈட்டி பெருஞ் செல்வந்தர்களாக வாழ்ந்து வருபவர்களும்
நேர்மை நாணயம் ஒழுக்கம் என்று உண்மையாக மனிதர்களாக வாழ்பவர்கள் வறுமையில் வாடுவதும். எதனால் என்ற அய்யத்திற்கு
விடை கேட்டு வள்ளுவரிடம் சென்றேன்.

அவரிடம் எனது அய்யம் குறித்து வினவினேன்.

நீ என்ன கருதுகின்றாய் என அவர் என்னையே வினவினார்

தவறானவர்கள் மிகப் பெரிய இடங்களிலே இருக்கின்றனர். அவர்களையும் இந்த மக்கள் வணங்கி நிற்கின்றனர்.
கோயில்களில் கூட அவர்கள் எல்லோருக்கும் முன்னர் நின்று இறைவனைத் தொழுகின்றார்கள். மக்கள் அங்கேயும் கூட அவர்களை
வணங்கி நிற்கின்றனர்.


நல்லவர்களை மக்கள் வணங்கவில்லை என்கின்றாயா என்றார்

இல்லை அவர்களையும் வணங்கத்தான் செய்கின்றனர்.

இரண்டிற்கும் ஏதாவது வேறுபாடு கண்டாயா என்றார்

சரியாகப் பார்க்கத் தவறி விட்டேன் என்றேன்.


இனிப் போய்க் கவனி.ஒன்றைப் புரிந்து கொள்வாய் என்றார் பேராசான்.

கள்ளச் சாராயம் காய்ச்சுவது விபச்சாரத்தைத் தொழிலாகச் செய்வது ஏழைகளின் உழைப்பைத் திருடுவது. எவர்
சொத்தையும் அபகரித்துக் கொள்வது என்று வாழ்பவர்களை ஊரில் மக்கள் வணங்குவதும் அவர்களைக் கண்டால் குழைந்து
நிற்பதும் வார்த்தைக்கு வார்த்தை அய்யா அய்யா என்பதும் அவர்களைத் தொழுவது போல நிற்பதுவும் பார்த்த நீ கொஞ்சம்
அங்கேயே நின்று கவனித்திருந்தால்தான் உண்மை உனக்குப் புரிந்திருக்கும் என்றார்,

ஒருமுறை நின்று பார். அந்தத் தவறானவன் அந்தப் பக்கம் போனதும் வணங்கி நின்றவர்கள் கடவுளிடம்
சினம் கொள்வதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். இவனையெல்லாம் உடனடியாகத் தண்டிக்காமல் விட்டாயானால் எங்களுக்கு
உன் மீது உள்ள பக்தியே போய் விடும் என்று வேகப் படுவார்கள்.இவனுக்கு ஒரு சாவு வராதா. நல்லவர்கள் வாழ்கின்ற
இடத்தில் இவனைப் போன்றவர்களையும் இறைவன் வாழ வைத்துள்ளானே என்று மிக மிக உள்ளம் வருந்துவார்கள்,


அதே நேரம் நல்லவர்களைக் கண்டவுடன் முக் மலர்ந்து தாள் பணிந்து அவர்களின் ஏழ்மை நிலை குறித்துத்
தங்களின் மன வருத்தங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு இறைவன் அவர்களுக்கு உடனடியாக எல்லா உதவிகளையும் செய்ய
வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவார்கள். அய்யா உங்களைப் போன்றவர்களால்தான் மழை பெய்கின்றது. அச்சப்பட்ட ஏழை
மக்கள் உங்களைப் போன்ற நேர்மையாளர்களைப் பார்க்கும் போதே கடவுளை நம்புகின்றோம்.என்றெல்லாம் அவரோடு உரை
யாடுவார்கள். நாங்கல்லாம் உங்கள் பிள்ளைகள் என்பார்கள்.

புரிகின்றதா தம்பி. மக்களால் இவர்கள் இருவருமே நினைக்கப் படுவார்கள். ஆனால் நினைக்க்ப் படுகின்ற முறைதான்
வேறு. தீயவர்களை மனம் நொந்து சாபங்களோடு வணங்குவார்கள். நல்லவர்களை அகமும் முகமும் மலர தெய்வமாகவே வணங்கு
வார்கள்.

குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

Monday, February 1, 2010

குறளும் கருத்தும் மூன்று

ஒரு நாள் தக தகக்கும் மாலை நேரம் . ஞாயிறு மஞ்சள் குளித்தாற் போல காட்சி தந்து
கொண்டிருந்தான். வள்ளுவப் பேரறிஞர் முன்னர் நிற்கின்றேன். எனது நண்பர் ஒருவரைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்.நிறையப் படித்தவர். மிகப் பெரிய அறிவாளி என்றெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கின்றேன். கேட்டுக் கொண்டேயிருந்த வான் புகழ் வள்ளுவர் சிரித்துக் கொண்டேயிருந்தார்.நான் அவர் எழுதியுள்ள நூற்களைப் பற்றியெல்லாம் அவரிடம் வரிசையாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன். பேராசான் சிரித்துக் கொண்டேயிருந்தாரே யொழிய ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு நாம் ஏதோ தவறுதலாகப் பேசிக் கொண்டிருக்கி றோம் போல என்ற அய்யப்பாடு வந்து விட்டது.

அமைதியானேன்

வள்ளுவப் பேராசான் கேட்டார் மிகப் பெரிய அறிஞர் உன் நண்பர் அப்படித்தானே என்று.

நான் மீண்டும் அடுக்கலானேன்.

சரி இத்தனை படித்திருந்தால் அவர் ஒரு அறிஞர் என்று யார் உனக்குச் சொன்னது என்றார்

என்ன சாமி அதுதானே உண்மை என்றேன்

மீண்டும் கேட்டார் நிறையப் படித்திருந்தால் அவர் அறிஞர் என்று உறுதி படச் சொல்லுகின்றாயா என்று

திரும்பத் திரும்பக் கேட்கின்றார் என்றவுடன் எனது குரல் அடை பட்டு விட்டது.

சொல் என்றார்.

நான் அமைதியானேன்

அறிவு என்றால் என்ன என்று அடுத்து ஒரு கேள்வி கேட்டார்.

யாருக்கு யார் விடையளிக்க முற்படுவது. அமைதி காத்தேன்

சிரித்தார்

கல்வியல்ல படிப்பதல்ல அறிவிற்கு அடிப்படை. அடுத்த உயிர்கள் படுகின்ற துன்பத்தை தனது துன்பமாகக் கருதி அதனைத் தீர்க்க எவன் முற் படுகின்றானோ அவன்தான்
அறிவுடையவன்.

உனது நண்பர் அப்படி உயிர்க் குலத்தின் மேல் காதல் கொண்டு மற்றவர் துன்பத்தைத் தனக்கு வந்த துன்பம் போலவே கருதி துடிதுடித்து யாருக்கேனும் உதவி செய்து மகிழ்ந்துள் ளாரா. அன்று என்னிடம் வா நான் ஒத்துக் கொள்கின்றேன் அவரை அறிஞர் என்று.

வாயடைத்து நின்றேன். ஆமாம் அறிவு என்பது தன் வயிற்றையும் தன் பெண்டு பிள்ளைகள் வயிற்றையும் நிரப்புவதா. கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து வைப்பதா.

பேரறிஞர் சொல் எத்தனை உண்மையானது.

குறள்

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக் கடை

குறளும் கருத்தும் இரண்டு

பொல பொலவென்று பொழுது புலருகின்ற நேரம் வள்ளுவப் பெருந்தகையைக் காணச்

சென்றேன். வழக்கம் போல எழுதிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏதோ ஒன்றன் பின் ஒன்றாக எழுதுகின்றார் என்று
மட்டும் தெரிந்தது. பெரியவர்கள் பக்கத்தில் போய் என்ன எழுதுகின்றார்கள் என்று பார்க்
கின்ற தவறை எப்படிச் செய்ய இயலும். சிறிது கழித்து அவரே என்ன நலமாக இருக்கின்
றாயா என்றார். நலம்தான் என்றேன். மிகுந்த அச்சத்தோடு என்ன எழுதிக் கொண்டிருந்தீர்
கள் தந்தையே என்றேன்.

இந்த ஊர்ச் சவக்கிடங்கில் வைக்கப் பட்டுள்ள சவங்களை அகர வரிசையில் எழுதிக்
கொண்டிருந்தேன். என்றார்

எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. மெதுவாகக் கேட்டேன். அது மருத்துவமனை
நண்பர்கள் வேலையல்லவா.அதனைத் தாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்றேன்.

அவர்களுக்கு இந்த வேலையினைச் சரியாகச் செய்யத் தெரியவில்லை. ஆகவேதான்
நான் அந்த வேலையினைச் செய்யத் தலைப் பட்டேன். என்றார்.

பெரியவர்கள் எது செய்யினும் அது சரியாகத்தானே இருக்கும்.

அந்தப் பட்டியலைப் பார்க்கலாமா என்று கேட்டேன்.

எனது கையிலே தந்தார்

பார்த்தேன். பதறிப் போனேன்.

ஆமாம் ஊரில் உயிரோடு இருக்கின்ற மிகப் பெரிய பணம் படைத்தவர்கள் வணிகர்கள்
நில உடைமையாளர்கள் என்று பல பேரை சவக்கிடங்கு பட்டியலில் வள்ளுவப் பெருந்
தகை எழுதியுள்ளார்.

அச்சத்தோடு அவரைப் பார்த்தேன்.

என்ன என்றார்.

தந்தையே இவர்கள் எல்லோரும் உயிரோடு உள்ளனர். இவர்களைத் தாங்கள் சவக்
கிடங்கில் அடுக்கியுள்ளீர்களே என்றேன்.


ஆமாம் தாங்கள் இறந்தது தெரியாமலே இவர்கள் உயிரோடு உள்ளனர்.

இவர்கள் சவங்கள் என்று தெரியாமல் இந்த மக்களும் இவர்களைப் பார்த்துப் பயந்தும்
வணங்கியும் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் சவங்கள் என்பதனை மக்களுக்கு தெரிவித்து
சவக்கிடங்கிற்கு அனுப்ப உடனடியாக வேண்டிய வழி வகைகளைச் செய் என்றார்.

பேரறிஞர் என்ன சொல்ல வருகின்றார் என்று எனக்குப்புரியவில்லை.

கைகட்டி வாய் பொத்தி நின்றேன்.

வள்ளுவர் சொன்னார். இந்த ஊரிலே ஏழைக் குழந்தைகள் கல்வி பயில நல்ல பள்ளி
உள்ளதா. ஏழைகளுக்கென்று நல்ல மருத்துவமனை உள்ளதா. ஏழைகளின் பசி தீர்க்க
வழி உள்ளதா. சமூகம் தந்துள்ள பொருளை இந்தச் சமூகத்திற்குத் தராத இந்தப் பணக்
காரர்களும் வணிகர்களும் நில உடைமையாளர்களும் இன்னொரு உயிரின் துன்பம்
துடைக்கும் உணர்வற்றவர்களாக இருந்தால் அவர்கள் செத்தவர்கள் தானே.
பிறகேன் அவர்களை நாம் உயிரோடு உள்ள மனிதர்கள் வரிசையில் வைக்க வேண்டும்.
அடுத்தவர் துன்பம் தீர்க்க எண்ணாத அவர்களை அதனால்தான் சவக் கிடங்கிலே
வைத்தேன். என்ன சொல் நான் செய்தது சரிதானே.

என்ன பதில் சொல்ல இயலும் தந்தையிடம். சரி சரி சரி என்றே சொல்லிக் கொண்டே
யிருந்தேன்.
குறள்
ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும

குறளும் கருத்தும்

தமிழர்களின் அறிவுத் தந்தை வள்ளுவரை நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. சேர்ந்தாற் போல் அவரை ஒரு பத்துத் தினங்கள் சந்திக்க இயலாமல் போனது. ஆவலுடன் அவரைச் சந்திக்கச் சென்றேன். ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் என்னை திரும்பிப் பார்க்கவே சிறிது நேரம் ஆனது.

என்ன நீண்ட நாட்களாக உன்னைக் காணவில்லையே. எங்கே போயிருந்தாய் என்றார்.
அய்யா ஒரு பெரிய துறவியைக் கண்டு வணங்கச் சென்றிருந்தேன் என்றேன்.

மிகப் பெரியவரா என்றார் வள்ளுவப் பெருந்தகை

ஆமாம் என்றேன்

எப்படி என்றார்

நான்மறைகளிலும் தேர்ந்தவர். மிகப் பெரிய ஞானி என்றேன்.

வள்ளுவர் சிரித்துக் கொண்டே அருகில் இருக்கின்ற கழனியிலே உழுது கொண்டிருந்த ஒரு
உழவரைக் காண்பித்து இவரை விடவா பெரியவர் என்றார். எனக்கோ வியப்பாயிருந்தது.

என்ன சாமி இவர் வேளாண்மைத் தொழிலாளி. அவரோ உலகஞானி. எத்தனை பெரிய பீடத்தின் குரு.எத்தனை சமூகப் பெரியவர்கள் எல்லாம் அவரின் முன்னர் பணிந்து நிற்கின்றனர். குடியரசுத் தலைவர்கள் தலைமை அமைச்சர்கள் விஞ்ஞானிகள் என்று பல தரப்பட்டவரும் அவரைத் தொழுது பணிந்து நிற்கின்றனர். நீங்கள் ஒரு வேளாண் தொழிலாளியைக் காண்பித்து இப்படிக் கேட்பது எப்படி என்றேன்.

மீண்டும் பொது மறைப் பெரியோன் கேட்டார். என் வினாவிற்கான விடையை சொல்
என்றார்.

நான் விடையளிக்க அஞ்சி நின்றேன்.

உலகச் சிந்தனைத் தந்தை வள்ளுவர் நகைத்துக் கொண்டே சொன்னார். இந்த வேளாண் தொழிலாளி ஆமாம் இந்த உழவன் தனது கையை மடக்கித் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள் உயிர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியும் கூட பசித் துன்பத்திற்கு ஆளாகி விடுவார்.
இப்போது சொல் யார் பெரியவர்.எல்லாவற்றையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியா உழவரா யார் பெரியவர் என்றார்.

அவருக்கு விடையளிக்க யாரால் இயலும்

குறள் இதோ

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூ உம்
விட்டேம் என்பார்க்கும் நிலை

துறவறத்தை வள்ளுவர் கேலி செய்யும் பாங்கு விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டு விட்டோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் என்கின்றார்.

Saturday, November 7, 2009

சிரிப்பாரே

வள்ளுவர் என்றொரு அறிவுக் கொழுந்தை
வடிவாய்ப் பயந்தாள் தமிழ் அன்னை
உள்ளுவதெல்லாம் உயர்வாய் எண்ண
உலகப் பொதுமறை அவர் தந்தார்
எள்ளி நகையாட ஒழுக்கம் இன்றி
எப்படி யெல்லாம் வாழ்கின்றோம்
வள்ளுவர் நமது சொந்தம் என்றால்
வாய்விட் டனைவரும் சிரிப்பாரே

Thursday, May 21, 2009

குறட் கருத்து

பாவங்கள் செய்பவரைப் பாவி என்று
பகர்வதுவே உலகத்தார் பழக்கம் இங்கே
பாவி என்று அழுக்காற்றைப் பகருகின்றார்
பல தெளிவும் உயர் அறிவும் தந்த தந்தை
கூவத்தைப் போல் மனது கொண்டு வாழும்
கூட்டத்தின் பொறாமையினைப் பார்க்கும் போது
ஆபத்தை நமக்குணர்த்த வள்ளுவனார்
அருளிட்ட அக்குறளே நினைவில் வரும்




திருக்குறள்

அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்று
தீயுழி உய்த்து விடும்

குறட் கருத்து

தவநெறியாய் வாழுகின்றார் தம்மைவிடத்
தனி மனிதன் உயர்ந்தவனாய் நிற்பான் என்று
புவனம் எல்லாம் வாழ்வதற்கு வழிகள் சொன்ன
பொது மறையில் வள்ளுவனார் சொல்லுகின்றார்
அவர் உடம்பை வருத்தி உண்ணா நோன்பதனை
அடிக்கடியே மேற் கொள்ளும் அவரை விட
பிறர் சொல்லும் இனிமையற்ற சொற்கள் தன்னை
பெரிதாக்கார் தன் பின்தான் துறவி யென்றார்



பசி தாங்கி பல விதத்தில் தவங்கள் செய்யும்
பரம் தேடி நின்றிருக்கும் தவ நெறியார்
கசிகின்ற காதலிலே கடவுளையே
காலமெல்லாம் நினைக்கின்ற மிகப் பெரியார்
பசி தீர்த்து மற்றவரின் துன்பம் தீர்த்து
பண்பதுவே பசி தீர்த்தல் என்று வாழும்
இசை வாழ்வாய் தன் வாழ்வை மாற்றிக் கொண்ட
எளியார் பின் துறவியரை வைப்பேன் என்றார்


திருக்குறள்

உண்ணாது நோற்பர் பெரியர் பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நிற்பாரின் பின்


ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

Friday, April 17, 2009

குறளும் திருமந்திரமும்

ஏழைக்கு ஈவதே ஈகை மற்றெல்லாமும்
நாளைக்கு வரும் என்று நம்பியங்கு தருவதுதான்
பேழைக் குறளுக்குள் வள்ளுவனார் பேசுவது
பெரு முனிவர் திருமூலர் அதையேதான் சொல்லுகின்றார்
கோழைக் குணத்தார்க்கு ஒழுக்கம் விட்ட மானிடர்க்கு
கூட்டாக நோன்பதனைக் கைக் கொள்ளா தீயருக்கு
ஆளை அறியாமல் ஈவதனைத் தவறென்று
ஆணி அடித்தாற் போல் அடிக்கின்றார் ஒங்கியங்கு


புல்லறுத்துப் போட்டு பொறுப்பாய்த் தழைகளிட்டு
நல்ல விதம் நீங்கள் நாள் தோறும் பார்த்தாலும்
வல்ல மலடாக வந்து விட்ட பசு மாட்டில்
நல்லதாய்ப் பால் கறந்து நாம் அருந்தக் கூடுமோ?
அல்லதொரு காலத்தில் சென்று பயிரிட்டு
அறுவடைக்குச் சென்று நிற்றல் அறிவுடைமை ஆகுமோ
நல்லவர்க்கு ஈதலே நாதனுக்கு மகிழ்ச்சி தரும்
நலம் சேர்க்கும் என்றிங்கு திருமூலர் சொல்கின்றார்

திருமந்திரம்
அபாத்திரம்

கோல வறட்டைக் குனித்துக் குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதேயொக்குஞ்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலம் கழிந்த பயிரதுவாகுமே

Saturday, April 4, 2009

குறட் கருத்து அதிகாரம் 45 பெரியாரைத் துணைக் கோடல்

அற வழிதான் வாழ்க்கைக்கு ஆக்கங்கள் தரும் என்று
அவ்வழியைத் தம் வழியாய்க் கொண்டொழுகும் பெரியோரை
உறவாக்கி அவர் காட்டும் உயர் வழிகள் தனில் நடத்தல்
உற்றாராய் ஆட்சியிலே இருப்பாரின் பெருங் கடமை
திறமாக இதைக் கொண்டு தெளிவாக ஆளுபவர்
தெய்வமென ஆவார்கள் மக்களுக்குப் புரிவாரா?
அறமெல்லாம் தெளிவாக ஆக்கிவைத்த வள்ளுவனாம்
அப்பெரியார் துணை கொள்ளல் அழகான நல் வழியே

பெரியாரைத் துணைக் கோடல்
அதிகாரம் 45
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல்

Friday, April 3, 2009

குறட் கருத்து அதிகாரம் 108 இரவு

இரந்து நிற்பார் அழகுடையர் ஆவதற்கு
ஏற்ற ஒரு வழியினை நம் தந்தை சொன்னார்
மறந்தும் கூட செல்வத்தை மறைத்து வைக்கும்
மனம் இல்லாப் பெருங் கடமை யாளரிடம்
இரந்து நிற்றல் மிகச் சிறந்த ஏற்றம் தரும்
இரப்பவர்க்கும் அது பெரிய அழகைத் தரும்
சிறந்து நிற்கும் அக் குறளை இங்கே காண்பாம்
சென்றிரந்து நின்றோமா? அவனாய்த் தந்தான்

அதிகாரம் 108
இரவு
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஒர் ஏஎர் உடைத்து

குறட் கருத்து அதிகாரம் இரவு 108ம் அதிகாரம்

இரந்து நிற்பார் ஈவாரே ஆவாராம் ஆம்
இனிய தந்தை வள்ளுவனார் சொல்லுகின்றார்
சிறந்து நிற்கும் இப்படியோர் சிந்தனையை
செப்புதற்கு அவரன்றி யார்தான் உண்டு
மறந்தும் தம் கனவினிலும் செல்வம் தன்னை
மறைக்காமல் வெளிப்படையாய் வாழ்வார் தம்மை
இரந்து அவர் உடன் கொடுக்கும் மாண்பதனை
எல்லோரும் உணரும் வாய்ப்பைக் கொடுக்கின்றாராம்


இரந்தவரே கொடுக்கின்றார் என்ற செய்தி
இதோ இந்தக் குறள் வழியே வருகின்றது

அதிகாரம் 108
இரவு
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

Wednesday, April 1, 2009

உயர்வீர்

புலன்களையே வென்று நிற்கும் துறவியரை
பொறுப்பான நல் மனிதர் தமக்குப் பின்னே
உளர் என்று வள்ளுவரும் சொல்லுகின்றார்
உலகுக்கு வழிகாட்டும் பொதுமறையில்
வளர்கின்ற பசிதன்னைப் பொறுத்து வெல்லும்
வடிவான துறவியரை விடவும் மற்றோர்
தளர்வானின் பசி தன்னைத் தீர்த்து வைக்கும்
தனி மனிதர் மிக உயர்ந்தார் என்றே சொன்னார்


உண்ணாமல் அதே நோன்பாய்க் கொண்டுயரும்
உயர் துறவிக் கூட்டத்தைக் கண்டு சொன்னார்
எண்ணுதற்கு உயர்ந்தாற்போல் தோன்றும் இவர்
எதிரிகளின் பண்பற்ற சொற்கள் தன்னை
இன்னாதாய்க் கொள்ளாமல் முக மலர்ந்து
ஏற்று அதன் பின்னாலும் நன்மை செய்யும்
நல்லாராம் அவர் பின்னால் ஆமாம் ஆமாம்
நாட்டாரே உதவி செய்யும் உயர்வீர் என்றார்


ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின்

Wednesday, February 18, 2009

குறட் கருத்து

உறவு அற்று தொழிலும் அற்று பொருளும் அற்று
உணவும் அற்று ஒன்று மற்று நிற்பார் தம்மின்
அழி பசியை அழித்தவர்க்கு உணவு தந்து
அன்றாடம் காத்து நிற்பார் அது மட்டுமே
செறிவாகக் காப்பாக இருக்கும் என்றும்
சேமிப்பு அது ஒன்றே இறுதி வரை
அறிவீர் நீர் மானிடரே உணவளியும்
ஆண்டவனின் கணக்கினிலும் முதலிடமே


குறள்

அற்றார் அழி பசி தீர்த்தல் அ தொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி

Friday, January 2, 2009

அவரைச் சொல்வார்

வள்ளுவர்க்குச் சிலையுண்டுக் கோட்டமுண்டு
வாய் திறந்தால் அவன் குறளே வருவதுண்டு
தெள்ளு தமிழ்த் தாயவளும் பெற்றெடுத்த
திசையனைத்தும் வென்றெடுத்த இசையின் மகன்
உள்ளு தொறும் உள்ளு தொறும் நமது நெஞ்சம்
உணர்த்தும் அவன் வழியொன்றே சிறந்ததென்று
எள்ளி நகையாடுகின்ற வாழ்க்கை ஒன்றை
எப்படித்தான் வாழுகின்றோம் மானமின்றி



உயிர் வாழ்க்கை என்பதுவே அன்பு கொண்டு
உலகத்து உயிரையெல்லாம் வாழ வைத்தல்
அயர்வின்றி அடுத்தவர்க்கு அன்பு செய்தல்
அடுத்தவரின் துன்பமதைத் தீர்த்து வைத்தல்
உயர்வான அவ்வாழ்க்கை வாழ்பவரே
உயிரோடு வாழ்வதற்குத் தகுதி கொண்டார்
பிறர் இங்கு உயிரோடு இருந்த போதும்
பிணவறையில் சவமென்றே குறளில் சொன்னார்


சவமாக வாழுகின்றோம் பணத்திற்காக
சதிச் செயல்கள் செய்கின்றோம் உறவுக்காக
அவமானம் கொள்வதில்லை அதனை விட்டு
அரியணையைக் காப்பதற்காய் நாசம் செய்வோம்
குல மானம் இனமானம் என்று பல
கூப்பாடு போடுகின்றோம் உண்மையின்றி
சிலையாகும் முன்னாலே கல்லாய் வாழ்ந்து
சிரிப்பாகச் சிரிப்பதற்காய் வாழுகின்றோம்


அரசியலென் றோர் களம் மக்களுக்காய்
அறிவுடையார் தனை அளிப்பார் பேணும் களம்
வரம் பெற்ற நல்லவர்கள் மக்களுக்காய்
வகை வகையாய் நல்லதுவே செய்யும் களம்
உரம் பெற்ற உயர்ந்தவர்கள் காணும் களம்
உண்மையதைச் சொத்தாகக் கொண்டார் களம்
தரமின்றிப் போனதிங்கு தரமேயில்லார்
தலைவர்களாய்ப் பெரியவர்களாய் ஆனதினால்


நல்லதையே நாடுபவர் கேடு கண்டால்
நாணமுற்று அதைக் கண்டு ஒதுங்குபவர்
வல்லமையே நேர்மையென்று போற்றுபவர்
வாய்மையொன்றே மனம் கொண்டு ஏத்துபவர்
அன்னவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தார்
அன்புடைய மக்களிடம் இன்றும் வாழ்வார்
தென்னாட்டில் காமராசர் கக்கன் என்றும்
தெள்ளு தமிழ் ஜீவா என்றும் அவரைச் சொல்வார்

Monday, October 13, 2008

குறட் கருத்து

 அறிவின்றி அடுத்தவரின் துன்பம் தீர்க்கும்
  அன்பின்றி வாழ்பவரின் நட்பு தன்னை
  விரைவாக விட்டொழித்தல் பெரும் பேறேன்று
  வியன் உலகப் பெரும் அறிஞர் வள்ளுவனார்
  தெளிவாகச் சொல்லி நின்றார் மிக இனிது
  தீதான அந்நட்பை விடுதல் என்றார்
  பெறுவோம் அவ்வழியதனை வள்ளுவனார்
  பேச்சொன்றே தமிழருக்கு மூச்சாய்  ஆகும்


  ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
  கேண்மை ஓரீஇ விடல்

  பெரிதினிது பேதையர் கேண்மை பிரிவின் கண்
  பீழை தருவதொன்றில்

Tuesday, September 16, 2008

குறட் கருத்து அழுக்காறாமை 17ம் அதிகாரம்

 பாவங்கள் செய்தவர் தான் பாவியாவார்
  பாவம் ஒன்றே மிகச் சிறந்த பாவியாகும்
  கேவலத்தைச் சொல்லுகின்றார் நமது தந்தை
  கேட்கையிலே அவர் பெருமை நாம் உணர்வோம்
  பாவிகளில் மிகச் சிறந்த பாவியென்று
  பகர்ந்து நின்றார் வள்ளுவரும் பொறாமையினை
  தேடி அதைக் கொள்வோர்கள் கொண்டிருக்கும்
  திரு இழந்து தீய வழி சேர்வார் என்றார்


  குறள்
 
 அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
 தீயுழி உய்த்து விடும்