Wednesday, March 10, 2010

குறளும் கருத்தும் காதல் காட்சி

குறளும் கருத்தும்

புலர் காலைப் பொழுது.மணம் முடித்துச் சில நாட்களே ஆன இளம் தம்பதியினர். அதிகாலைஎழுந்து குளித்து தலை ஈரம் காய துண்டினைத் தலையில் சுற்றிக்கொண்டு துணைவனுக்கு தேநீர்தயாரித்து எடுத்துக் கொண்டு படுக்கையறை நோக்கிச் செல்கின்றாள் பனிமலர் போன்று.

உறக்கத்தில் இருப்பவனைத் தொடாமல் எழுப்ப மேஜையினைத் தட்டுகின்றாள். உறக்கம்கலைந்தவனோ நீராடி நிற்கும் நிர்மலமான அழகில் திளைத்து வியக்கிறான்.

தேநீரை மேஜையில் வைத்து அருந்தச் சொல்லுகின்றாள் அழகுப் பெண்.

அருகில் வந்து தரச் சொல்கின்றான் அவன்.

நோக்கம் புரிந்து கொண்டவள் கவனமாக மறுக்கின்றாள்.

ஒன்றும் செய்ய மாட்டேன் உறுதி அளிக்கின்றான் அவன்.

அவளைப் பொறுத்த வரையில் அவனது உறுதி மொழி உறுதியாய் இராது என்று
உணர்ந்திருந்தாள்.

நான் நீராடி விட்டேன் சீக்கிரம் எழுந்து வாருங்கள்.குளித்தீர்கள் என்றால் கோயிலுக்குப்போகலாம் என்றாள்.

என்னை நம்ப மாட்டாயா என்று கெஞ்சினான்.

நம்புகிறாற் போல் நீங்கள் நடந்து கொண்டதில்லையே என்றாள்.

நீ பக்கத்தில் வந்து கொடுத்தால்தான் அருந்துவேன். இல்லையெனில் எழவே மாட்டேன்என்றான் அவன்.

சரி கோப்பையை மட்டும்தான் தொட்டு வாங்க வேண்டும் என்றாள்.

ஆணை என்றான்

அருகில் சென்றாள்

தந்த உறுதியில் உறுதி காத்தான் அவன்

வியந்தாள் அவள்.

கோப்பையைத் திரும்பப் பெறும் போது கைகளைப் பற்றிக் கொண்டான் அவன்.

திருட்டுத்தனம் என்றாள் அவள்.

உரியவளைத் தொடுதல் திருட்டுத்தனமா என்றான்.

கோப்பையை மட்டும் தான் தொடுவேன் என்று சொல்லி விட்டு இது என்ன ஏமாற்றுஎன்றாள் அவள்.

வாங்கும்போது மட்டும்தானே சொன்னேன் என்றான் அவன்.

அவன் தொடாமல் விட்டிருந்தால்தான் தோகை துவண்டிருப்பாள்.

கட்டித் தழுவிக் கொண்டான்.

விட்டு விலக முயற்சிப்பவள் போல் அவளும் கட்டித்தான் கொண்டாள்.

மீண்டும் குளிக்க வேண்டும் என்று அலுப்பது காட்டி அணைத்துக் கொண்டாள்.

என்னை விட்டு விட்டு தனியாகக் குளிக்கக் கூடாது இனிமேல் என்றான் அவன்.

கனிச் சுவைகள் அனைத்தும் கன்னியிடம் பெற்றான்.மலர்ந்த பெண்ணின் மலர்ந்த கண்கள் மயங்கிச் செருகிக் கொள்ள அந்த மென் தோளில் அவன் சாய்ந்தான். உறங்கியும் போனான்.

தாயாகிப் பெண்ணாள் அவன் தலைக்குள் விரல் கொண்டு கோதி அவனைக்
கொஞ்சுகின்றாள்.மாட்டேன் என்று சொன்னவுடன் எங்கே சரி என்று எழுந்து விடுவானோ என்று தயங்கியதையும் ஆனால் அவன் தழுவிக் கொண்டதையும் எண்ணி எண்ணி மகிழுகின்றாள்.

மெல்ல விழிக்கின்றான் மென்னகையாள் கோபிக்கின்றாள்.கோபமில்லாக் கோபம்.மாட்டேன் மாட்டேன் என்றேன். போங்கள் என்று சிணுங்குகின்றாள்.

அவன் கல கலவென்று சிரிக்கின்றான்.

அவளை வெட்கம் வாட்டுகின்றது. எதற்குச் சிரிக்கின்றீர்கள். இதற்குத் தான் நான்மாட்டேன் மாட்டேன் என்றேன். என்றாள்.

அட கிறுக்கே எதற்கு நான் சிரித்தேன் தெரியுமா. நேற்று வீட்டிற்கு வரும் வழியில்கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்னார்தாமரைக் கண்ணனின் உலகைச் சென்றடைவதுதான் பேரின்பம் என்று. உனது இந்த மென் தோளில்துயில்வதனை விடவா சொர்க்கம் பெரியது என்று கருதினேன். சிரிப்பு வந்தது என்றான். தோளின்தலையை மார்பிற்கு மாற்றினாள் செல்லப் பெண்.

குறள்

தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு

0 மறுமொழிகள்: