வெள்ளையனே வெளியேறு என்று காந்தி
வீரமுடன் முழக்கமிட்ட நன்னாள் இந்நாள்
கள்ளமில்லாக் கதராடை உள்ளம் போல
கண்ணியத்தின் பேரூருவம் கொண்டார் எல்லாம்
துள்ளி அன்று வந்தார்கள் விடுதலைக்காய்த்
துச்சமென உணர்ந்தார்கள் உயிரை அன்று
எள்ளி நகையாடுகின்ற நிலையில் இன்று
இருக்கின்றோம் என்ன செய்ய விதி தான் போலும்
Tuesday, August 9, 2011
விதிதான் போலும்
Saturday, October 2, 2010
அண்ணலே
அண்ணலே
உன் பிறந்த நாள்
சமாதியில்
பஜனை உண்டு
சிலைகளுக்கு
மாலை
அணிவிப்பவர்
சிலர்
நீ
உயிரோடிருந்தால்
உன்
அருகில் வரவே
அஞ்சியிருப்பார்கள்
உன்னை
மறந்து விட்டோம்
என்கின்றனர்
அதனால்தான்
அமைச்சர்களாய்
இருக்க முடிகின்றது
ஆட்சி
செய்ய
முடிகின்றது
உன்னை
மறைத்து
விட்டோம்
என்கின்றனர்
என்ன செய்ய
எங்களுக்கும்
மனச் சாட்சி
வந்து
விட்டால்
சாஸ்திரியும்
இதே
நாளில்
பிறந்த
கொடுமையை
என் சொல்ல
அதனால் தான்
மனம்
வெதும்பிய
கறுப்புக்
காந்தி
இன்று
மறைந்தார்
Saturday, January 30, 2010
குமரப்பா
குமரப்பா காந்தியவர் கொள்கையினை
கொண்டிருந்தார் இறுதி வரை உயிர் மூச்சாக
தமரப்பா ஏழையர்க்கும் இந்தியர்க்கும்
தறி கிராமத் தொழில் வழியே வாழ்வதுவே
அமரப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்
அற வழி என்றுரைத்து நின்ற அன்பரப்பா
எவர் கேட்டார் அதனால் தான் இந்தியாவை
எவர் எவர்க்கோ சந்தையென ஆக்கி விட்டார்
சுட்டு விட்டார் காந்தியினை
தீண்டாமைக் கொடுமையினை இந்து மதம்
தீண்டாமல் தூக்கி உடன் எறிய வேண்டும்
வேண்டாத அக் கொடுமை இருக்கும் என்றால்
வேறு மதம் தீண்டாமை இல்லா மதம்
ஆண்டவரை வணங்குதற்கு அதிலே சேர்ந்து
அதனையே என் மதமாய் ஆக்கிக் கொள்வேன்
பூண்டார் இம்முடிவினையே காந்தி அண்ணல்
பொறுப்பாரா அதனால்தான் சுட்டு விட்டார்
வரதட்சணைக் கொடுமை ஒழிவதற்கு
வழி சொன்னார் அடிகள் இங்கு மிகத் தெளிவாய்
பிற சாதி தன்னில் மணம் கொண்டு விட்டால்
பிரச்சினைகள் தீர்வதுடன் சாதி தானும்
இறந்தொழியும் அதன் பின்னர் அனைவருமே
இந்தியர்கள் என்ற பெயர் கொண்டு வாழ்வோம்
சிறந்தோங்க வழி இதுதான் என்று சொன்னார்
சிறு மதியார் அதனால்தான் சுட்டு விட்டார்
Saturday, January 3, 2009
வள்ளுவரும் காந்தியடிகளும்
அன்பின் வழியது உயிர் நிலை என்று
அன்றே சொன்னார் வள்ளுவரும்
அன்பே வழியாய் உலகை வென்றார்
அண்ணல் காந்தி அடிகளுமே
இன்சொல்லோடு இன்முகம் ஒன்றே
ஏற்றம் என்றார் வள்ளுவரும்
தன் வாழ்வெல்லாம் அதையே கொண்டு
தாயகம் வென்றார் காந்திமகான்
வாய்மை ஒன்றே உலகம் வெல்லும்
வழியென்ற் றுரைத்தார் வள்ளுவரும்
தாய் போல் அதனைத் தலை மேல் ஏற்று
தவமாய்க் கொண்டார் காந்தி மகான்
கள்ளையுண்ணும் கொடுமை கண்டு
கடிந்தே நின்றார் வள்ளுவரும்
கள்ளை எதிர்த்துப் போரே செய்து
கண்ணியம் காத்தார் காந்தி மகான்
Thursday, October 2, 2008
சுட்டு விட்டார்
வரதட்சணைக் கொடுமை ஒழிவதற்கு
வழியொன்றெ ஒன்று என்று அண்ணல் சொன்னார்
பிற சாதி தனில் பிறந்தோர் உறவாய்க் கொண்டு
பெண் கொடுத்தீர் என்றாலே போதும் அங்கு
வரதட்சணை ஒழியும் சாதி என்னும்
வன்முறையும் ஒழிந்து விடும் என்று சொன்னார்
பிறகென்ன காந்தி தன்னை சுட்டு விட்டார்
பேச்சு மேலும் வளருவதை விரும்பார் கூட்டம்
தலைவனும் வழி நடந்தோனும்
அடித்தாலும் உதைத்தாலும் சுட்டாலும் கொன்றாலும்
அப்படியே அதை ஏற்று செய்வான் தன்னின்
மனத் தளத்திற்குள்ளேயே போராட்டம் உண்டாக்கி
மனிதனென அவன் தன்னை மாற்றி விடும்
பொறுப்பான போராட்டம் அகிம்சையென்னும்
பொலிவான நீரோட்டம் தந்த அண்ணல்
சிறப்பெல்லாம் அவனான காந்தி அண்ணல்
சிந்தை வழி நடந்திடுவோம் உலகம் போற்ற
படிப்பதனை சிறு வயதில் இழந்தவன்தான்
பல பேரைப் படிக்க வைத்தான் உயர வைத்தான்
வடித்திட்ட திட்டங்கள் அனைத்தும் இன்றும்
வாழ வைத்துக் காத்திருக்கும் தமிழினத்தை
அடி பட்டு வீழ்ந்திருக்கும் ஏழையரை
அவனன்றோ காத்து நின்றான் தாயெனவே
மடிப் பிச்சை அவன் ஏற்றான் ஏழையர்க்காய்
மாமனிதன் காமராஜர் வழி நடப்போம்
Friday, August 15, 2008
நாம் நடப்போம்
கோடிக் கணக்கான ஏழையர்கள் கொல்லுகின்ற வறுமையிலே துன்பம் காண
கோடிகளில்ஆடுகின்றார் ஆட்சியாளர் கொண்ட அந்த ஆட்சியினைக் காத்துக் கொள்ள
பேடிகளாய் மாறி விட்டார் தாயர் நாட்டின் பெருமையெல்லாம் அழித்தொழித்தார் அந்தோ அந்தோ
பிறந்த இந்த விடுதலைக்காய் இறந்து பட்ட பெரியவரை நினைத்தாரா பேய் மனத்தார்
கேடிகளும் கண்டு அஞ்சும் வாழ்க்கை கொண்டார் கிறு கிறுத்தோம் அருவறுத்தோம் இவரைக் கண்டு
வாடி இவர் நாணிடுவார் என்று எண்ண வகையில்லை குடும்பத்தோடு அசிங்கம் செய்வார்
நாடிதனைக் காப்பாற்றி நலங்கள் பேணும் நல்லவரின் கையினிலே ஒப்படைப்போம்
நம் தந்தை காந்தி தலைவர் காமராஜர் நலமான வழியினிலே நாம் நடப்போம்
Saturday, June 28, 2008
பெருமையெல்லாம் தேடி வரும்
சென்னையிலே காந்தியார்க்கு வரவேற் பொன்றைச்
சீராகத் தருகின்றார் தமிழர் நாட்டார்
அன்னை கஸ்தூரஅவரும அருகிருக்க
அளக்கின்றார் மன்னரென்றும் ராணியென்றும்
சொன்னதெல்லாம் கேட்டு நொந்த காந்தியாரும்
சொல்லுகின்றார் பதிலினிலே உண்மைகளை
என்னை யிங்கு புகழ்ந்ததிலே வெட்கம் கொண்டேன்
எள்ளளவும் உண்மையில்லை மாற்றிக் கொள்க
நாரா யண சாமி நாகப்பன் என்ற இரு
நல்ல தமிழ் நாடு பெற்ற இளைஞரவரோடு
போராடி நாட்டிற்காய்ச் சிறைக்குள்ளே நொந்து
பொலிவிழந்து நோய் கொண்டு உயிர் துறந்து நின்ற
சீமாட்டிவள்ளி யம்மை அவள் செய்த தியாகம்
செப்பி அவர் தலையினிலே சூட்ட வேண்டும் மகுடம்
நீர் மாற்றி அதை எனக்குச் சூட்டிட முயன்றீர்
நெஞ்சார அவருக்கே சூட்டுகின்றேன் இதனை
மற்றவர் தம் உழைப்பதனைத் தன் உழைப்பாய்
மாற்றி அதில் குளிர் காயா மா மனிதன்
உற்றவரோ நண்பர்களோ எவரெனினும்
உண்மை விட்டால் உதறி விட்ட ஒர் புனிதன்
கற்றிடுவீர் அவன்தன்னை கற்று விட்டால்
கண்டிடுவீர் மனத்திற்குள் நிம்மதியை
பெற்றிடுவீர் அவன் வழியைப் பெற்று விட்டால்
பேசரிய பெருமையெல்லாம் தேடி வரும்
Friday, June 27, 2008
மடமையை மாற்றிய காந்தியடிகள்
மனிதர்களைத் தெய்வம் என்று கருதி மாளும்
மடமையினை வேரறுத்தார் காந்தி அண்ணல்
புனிதர் அவர் உண்ணாமல் நோன்பு கொண்டு
போராட்டக் களம் தன்னில் உள்ள நேரம்
தனியாக அவர் தம்மைக் காண வென்று
தம்பதியர் கிராமம் விட்டு வந்திருந்தார்
கனிவான காந்தி யண்ணல் கால்கள் தம்மைக்
கழுவி அந்த நீர் கொண்டு தங்கள் பிள்ளை
உடல் நலமற்றிருப்பானுக்கு உள்ளே தந்தால்
உயிர் பிழைப்பான் என்றே தான் வேண்டி நின்றார்
மடமையிதை காந்தி யண்ணல் அவர்களிடம்
மாற்றி விட பல மணிகள் எடுத்துக் கொண்டார்
கடவுளினை நம்புங்கள் நோயைத் தீர்க்க
கட்டாயம் மருத்துவரைச் சென்று பாருங்கள்
மடமையிது மனிதர்கள் தம் கால் கழுவி
மருந்தென்று உண்பதென்று உணர்த்தி வென்றார்
Wednesday, June 18, 2008
காந்தியடிகள் வாழ்வில்
இங்கிலாந்து மன்னரையே சந்திக்கத்தான்
இந்தியத் தாய் தலை மகனாம் காந்தி சென்றார்
அங்குள்ளோர் மன்னரையே சந்திக்கவே
ஆடையுள்ள ததை அணிய வேண்டும் என்றார்
பங்கமில்லா ஆடை எந்தன் பருத்தி ஆடை
பாரதத்தின் ஆடை அதே போதும் என்றார்
இங்கிலாந்து மன்னர் அதை ஏற்றுக் கொண்டார்
எளிமையினால் காந்தி அங்கே வெற்றி கண்டார்
2/ மன்னரையே சந்தித்து வெளியில் வந்தார்
மகாத்மாவாம் காந்தியண்ணல் செய்தியாளர்
என்ன இந்த ஆடை இதை ஏன் அணீந்தீர்
இவ்வளவு குறைவாக அய்யோ என்றார்
கன்னல் மொழிக் காந்தி சொன்னார் எனக்கும் சேர்த்து
கனமான ஆடைகளை உங்கள் மன்னர்
தன்னுடம்பில் அணிந்துள்ளார் அதுவே போதும்
தரம் இதுவே எமக்கு இது போதும் என்றார்
Sunday, June 8, 2008
இன்றும் தேசத் தந்தை
அறிவித்த போராட்டம் வன்முறையாய்
ஆகிவிட்ட சேதியினை காந்தி கேட்டார்
தெரிந்திட்டார் காவலர்கள் பத்துப் பேரைத்
தீக்கிரையாய் ஆக்கி விட்டார் தொண்டரென்று
பதை பதைத்தார் அரசாங்கம் தனை அழைத்தார்
படு கொலைக்குத தாமேதான் பொறுப்பு என்றார்
கதையல்ல இந்நாட்டில் நடந்ததுதான்
காந்தி இன்றும் நம் தேசத் தந்தையன்றோ
Tuesday, May 20, 2008
சாதியினை ஒழித்தார்
காந்தியவர் ஆசிரமம் காலை வேளை
கவனமற்ற துயரம் ஒன்று மாறும் காலை
ஏந்தி ஒரு மலச சட்டி தலையில் கொண்டு
ஏலாத இளஞ் சிறுவன் நடந்து வந்தான்
சாந்தி கொண்ட அம் மனிதர் பிராம்மணர்தான்
சட்டென்று அச்சிறுவன் தனை நிறுத்தி
வாங்கி அந்த மலச் சட்டி தலையில் கொண்டார்
வார்தாவே தனை உணர்ந்து மாறி நிற்க
காந்தியவர் கை கூப்பித் தொழுது நின்றார்
கருணையதை உணர்த்தி நின்ற கண்ணியரை
ஆம் தினமும் ஆசிரமம் தன்னில் உள்ளோர்
அள்ள வேண்டும் மலம் என்றும் ஆணையிட்டார்
காந்திக்கே குரு அவர்தான் என்றும் சொன்னார்
கனிவுக்கே தாயான வினோபா தன்னை
போந்தவரைப் போற்றி நிற்போம் மலத்தை அள்ளல்
பொது என்று சாதியினை ஒழித்தார் தம்மை
Monday, April 28, 2008
காந்தியடிகளும் தமிழும்
தமிழ்த்தாயாம் தில்லையாடி வள்ளியம்மாள்
தான் தந்த போராட்டப் பேருணர்வே
அமிழ்ந்திருந்த இந்தியத் தாய் விடுதலைக்கு
ஆளாக்கித் தந்ததெனை வணங்குகின்றேன்
தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர்
தங்க நிகர் வள்ளுவரின் திருக்குறளை
தமிழிலேயே கற்றுவிட ஆசை கொண்டேன்
தரவில்லை இறைவன் அந்தப் பேரருளை
அமிழ்தான தமிழ்முதை இந்தியத்தார்
அனைவருமே கற்று விட்டால் ஒன்றாயாவார்
இவையெல்லாம் காந்தி மகான் வார்த்தையாகும்
ஏற்றிருந்தால் இந்தியாவே வென்று நிற்கும்
கவைக்குதவா வேலையெல்லாம் செய்து நிற்பார்
கண்ட்தில்லை நல்ல்தெல்லாம் என்ன் செய்ய
அவையினிலே வெல்லுதற்கு அனைவருமே
அன்னை மொழி த்னில் கல்வி கற்றல் வேண்டும
சுவையதுவே என்று சொன்னார் அண்ணல் அவர்
சுத்தமாக மறந்து இன்று தமிழ் ஒழித்தோம்