Saturday, December 29, 2012

திருடும் தந்தைகள்

திராவிட இயக்கங்கள் வந்த பிறகுதான் நகரத் தலைவர்களையெல்லாம் நகரத் தந்தை என்று அழைத்தார்கள். மாநகரத் தந்தைகள். ஊராட்சித் தந்தைகள் பேரூராட்சித் தந்தைகள் என்று நிறையத் தந்தைகள்.

எந்தத் தந்தையாவது தன் பிள்ளைகளை ஏமாற்றுவானா. அவர்களுக்கு செய்ய வேண்டிய நியாயமான நன்மைகளைச் செய்யாமல் தன் வயிற்றை வளர்ப்பானா. புரியவில்லை.

ஒரு மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தன்னை நம்பி தன் இயக்கத்தை நம்பி தங்கள் அரசிற்கு அளிக்கின்ற வரி வருவாயை முறைப்படுத்தித் தங்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களை  சிறப்பாகச் செய்யத்தானே  சட்டப் பேரவை உறுப்பினர்களிலிருந்து அமைச்சர் பெருமக்கள வரை ஊதியம் தருகின்ற்னர்.
ஆனால் அரசுப் பணியாள்ர்களாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் 100 ரூபாய் வாங்கியதாக கைது செய்யப் படுகின்றனர். கோடிக் கணக்கில் அடிக்கின்ற நமது நாடாளும்ன்ற சட்டப் பேரவை உறுப்பினர்களும் நம்மிடம் சம்பள்ம் வாங்கிப் பிழைப்பவர்கள் தானே. அவர்களை ஒன்றுமே செய்ய முடிவதில்லையே ஏன்.

தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறங்கிய பிறகும் தங்கள் மரணத்திற்குப் பிற்கும் தங்களை மக்கள் போற்ற வேண்டும் என்கின்ற எண்ணம் ஒருவருக்கும் இல்லையே.இருக்கின்ற போதே செத்துப் போகும் இவர்களுக்கு அந்த ஆசையெல்லாம் எப்ப்படி வரும்.

Thursday, December 27, 2012

கொடுமை

அன்புடையீர் தூத்தூக்குடிக்கு மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி வந்துள்ளார். இன்று நெல்லை வருகின்ற்றார் போல. அவருக்கு ஒரு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வரவேற்பு விளம்பரம் ஒன்று தருகின்றார். காமராஜரின் வழியில் நடக்கும் கனிமொழி அவர்களே வருக என்று. பெரியார் வழி என்றால் புரிகின்றது அண்ணா வழியில் என்றால் அறிந்து கொள்ள முடிகின்றது. கருணாநிதியின் வழியில் என்றால் கண்டு கொள்ள முடிகின்றது. பிறகு தான் இன்றைய தினமணியில் ஒரு செய்தி பார்த்தேன். கனிமொழி அவர்கள் தூத்தூக்குடி மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்முறைக்குப் பலியானதைக் கண்டித்து தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார். அதன் நோக்கமே திருநெல்வேலி நடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவதற்கான வெள்ளோட்டமாம். அதற்காகத்தான் படுகொலை செய்யப் பட்ட பள்ளி மாணவி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். திருநெல்வேலி நாடாளுமன்றம் நாடார்கள் நிறைந்த தொகுதி. அதனால் தான் சற்குண பாண்டியன் அவர்கள் அந்த மேடையில் நிற்கின்றார். புரிகின்றதா எல்லோருக்கும் பொதுவாக இருந்த பெரியவர் காமராஜரை சாதிக்குள் இழுக்கின்ற கொடூரம்.நமது நாட்டின் சட்டப்படி கனிமொழி அவர்கள் அவரது தந்தையாரின் சாதியாகத் தானே  இருக்க வேண்டும்.

இந்தக் காரணத்திற்காகத்தான் பெரியவர் கருணாநிதி தூத்துக்குடி சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். விருத்தாசலத்திலே ஒரு பாலியல் வன்முறை நடந்துள்ளது. கனிமொழி அங்கே போவாரா.

Tuesday, December 25, 2012

டில்லியும் தமிழ்நாடும்

நெல்லை மாவட்த்தில் ந்டந்த பள்ளி மாணவி பலியல் வன்முறையில் கொல்லப் பட்டது குறித்து எந்த அரசியல் கட்சியின் தலைவருமே கருத்துத் தெரிவிக்கவில்லை என்று கருணாநிதி வருத்தம் கொண்டிருக்கின்றார்.

டில்லி சம்பவத்திற்கு அவரே முதலில் கருத்துத் தெரிவிக்கவில்லை. அவர் ஆட்சி நடத்தும்போது  தான் பாலியல் குற்றங்களே அதிகப் பட்டன என்பதை மறந்தவாறு. உடனே இன்றைய அரசு கருணாநிதி ஆட்சியில் நடந்த பாலியல் குற்றங்களைப் பட்டியல் போட்டுக் காட்டும். இது நம்முடைய தலைவிதி.

டில்லியில் மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய போராட்டத்தில் பா.ஜ.க. இளைஞரணியும் பாபா ராம்தேவின் கூட்டமும் கெஜ்ரிவாலின் ஆட்களும் நுழைந்திருக்கின்றார்கள். அந்தக் கூட்டத்திற்குள்ளேயே பாலியல் கூத்துக்கள் அரங்கேறியிருக்கின்றன.

இதுதான் நம் நாட்டின் பெரிய துன்பம். அன்னா ஹசாரே இன்னும் வாய் திறக்கவில்லை.

                                       பாராட்ட வேண்டும்

யாருக்காகவெல்லாமோ பேசி தன் வாழ்நாளை வீணடித்த நண்பர் வை.கோ.(நானும் தான்) நாட்டின் எதிர்காலம் குறித்த சிந்தனையில் இளைஞர்களையும் ஏழைகளையும் வதைக்கின்ற வாழ்விழக்க வைக்கின்ற மதுவினை எதிர்த்து போராடுகின்றார்.
வாழ்த்தி அவருக்கு உதவி செய்வோம்.


                                  சாதி வெறியூட்டும் ராமதாஸ்

ஏதோ மேல்சாதிக்காரர்கள் தான் சாதியை உருவாக்கினார்கள் என்று காலமெல்லாம் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி என்று நண்பர் திருமாவளவனால் பட்டம் சூட்டப் பட்ட ராமதாஸ் இன்று சாதிய
பிரிவுகளைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றார். அவரது இயக்கத்திலேயே பல பெரியவர்கள் தங்களை விட மேல் சாதி பெண்களைத் திருமணம்  செய்துள்ளனர். அது குறித்து ராமதாஸ் ஒன்றும் சொல்ல மாட்டார். தாழ்த்தப் பட்ட இளைஞ்னுக்கு காதல் வரக் கூடாது. அவ்வளவுதான்.


                                   தம்பி சம்பத்

தம்பி நாஞ்சில் சம்பத் அவர்கள் நெல்லையில் அ.இ.அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது கழுகு துரத்திய புறாவாக சிபிச் சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுந்ததாக பேசினாராம். எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு கழுகு இத்தனை நாட்களாக அந்தப் புறாவை ஏன் வளர்த்தது என்பது தெரியவில்லை.

18 ஆண்டுக்காலம் தன்னை விட மூத்த இயக்கத்தவர்கள் தகுதியோடு இருந்தவர்கள் இருந்த போதும் வை.கோ.வை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த கருணாநிதிக்கு வை.கோ.செய்த அதே நன்றியைத் தான் தம்பி சம்பத் வை.கோ.விற்கு செய்து கொண்டிருக்கின்றார்.

Sunday, December 23, 2012

விருது அளிப்பார்

எல்லாரும்  விருதுகளை வாங்கிடலாம்
இருக்கின்றார் கவிஞர்களும் இதற்கு என்றே
பொள்ளாச்சி சந்தையிலே கிடைக்கும் இது
பொது உடைமைப் புலவரினால் ஆமாம் ஆமாம்
கல்லாரே ஆனாலும் வாங்கி அளிப்பார்
கவிஞர்களே புலவர்களே சென்று பாரும்
நில்லாதீர் உடனடியாய்க் கிளம்பும் ஆமாம்
நிச்சயமாய் நிச்சயமாய்க் கிடைக்கும் அய்யா

காங்கிரஸ் எப்படித் தேறும்

நேற்று புதுடில்லி  இளைஞர்களாலும் மாணவர்களாலும் குலுங்கியது. அரசியல் கலப்பே இல்லாத இளைய தலைமுறை பாலியல் வன்முறைக் குற்றத்திற்கு எதிராக தங்கள் நிலையை நாட்டின் தலைமகனுக்கு எடுத்துச் சொல்ல கூடியது. தனது மாளிகையில் இருந்து அந்தப் பெருமகனார் வெளியில் வந்து தனது  பிரதம மந்திரியையும் அமைச்சரவையையும் சரியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன் என உறுதி மொழி அளித்திருந்தால். தேவையற்ற கண்ணிற் புகைக் கூண்டுகளையும் தடியடியையும்  நியாயம் கேட்டு வந்த இளைய தலைமுறை சந்தித்திருக்காது. உள்ளாத்திலும் காயம் உடலிலும் காயம்.

சோனியாகாந்தி பெண்தானே அவர் வந்து அவர்களைச் சந்தித்திருக்கலாமே.
பிரதமர் எங்கே போனார்.  காங்கிரஸ் ஏன் அழிகின்றது என்பதற்கு இந்த முட்டாள்தனங்களை விட வேறு உதாரணம் வேண்டுமா. அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் முன் நிறுத்துகின்ற ராகுல் காந்தி எங்கே போனார். அந்த இளைய கூட்டாத்தின்  முன்னர் அவர் அவரது இளைய பட்டாள
அமைச்சர்களோடு வந்திருக்க வேண்டாமா.

காவற்றுரையினர் கையூட்டில் வாழ்கின்ற நாட்டில் எல்லாக் கொடுமைகளும் நடக்கும்தான்.

டில்லி முதலமைச்சர் சொல்லுகின்றார். நடப்பவை அனைத்திற்கும் டில்லி
லெப்டினண்ட் கவர்னரும் காவற்றுறையும் தான் காரணம் எனக்கும் அதற்கும்
எந்தத் தொடர்பும் இல்லை என்கின்றார். என்ன அர்த்தம் புரியவில்லை.

கவிஞர் சல்மா சொல்லுகின்றார். மரண தண்டனை இருக்கும் அரபு நாடுகளிலும் பாலியல் வன்முறை இருக்கின்றது என்கின்றார். என்ன செய்ய.

எல்லா இடங்களிலும் சாதியும் அரசியலும் நுழையும் நாட்டில்  பணத்தால் வாழ்ந்து விடலாம் என்கின்ற நாட்டில் நீதித் துறையும் சீரழிந்திருக்கும் நாட்டில் பெண்களுக்குக் கள்ளிப் பால் கொடுத்த கிராமத்தவர்கள் செயல் நியாயமாகப் போய் விடுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகின்றது.

Saturday, December 22, 2012

இறைவன் என்ன செய்யப் போகின்றான்

நேற்று இந்திய அரசின் உள்துறைச் செயலர் டில்லி காவற்றுறை சிறப்புறச் செயல் பட்டதாக சான்றிதழ் தந்துள்ளார். ஆனால் புள்ளி விபரங்கள் த்ரும் போது அசிங்கப் பட்டுள்ளார். ஆமாம் புது டில்லியில் சென்ற வருடம் பதிவான் பாலியல் வன்முறை வழக்குகள் 651 என்கின்றார்.புது டில்லி முதல்வர் அவரின் கூற்றை மறுத்தூள்ளார். நேற்று எங்கள் நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 14 வயதுப் பெண் பாலியல் வன்முறையில் பலியாகின்றார். தமிழ்நாட்டுக் காவற்றுறை கணக்கின்படி அநேகமாக சென்ற ஆண்டு பாலியல் வன்முறை கணக்கு டில்லிக்குக் குறையாததாக இருக்கின்றது.

பணக்கார வீட்டுப் பிள்ளைகள் கைதாக மாட்டார்கள். ஏழைகள் எனில் உடனே கைது செய்யப் படுவார்கள். பணக்காரர்களுக்காக ஏழைகளின் வ்றுமை விலை பேசப் பட்டு ஏழைகள் அந்தக் குற்றங்களைச் செய்ததாக சிறைக்குச் செல்வார்கள். முன்னாள் நீதிபதி தர்மாதிகாரி என்பவர் மரண தண்டனை கூடாது என்கின்றார்.

நமது நாடு தாய் நாடு ஒடுகின்ற நதிகள் அனைத்தின் பெயரும் பெண்ணின் பெயர்கள். இறைவன் என்ன செய்யப் போகின்றான்.

Thursday, December 20, 2012

சிவாஜி அண்ணன் இப்படி இல்லை

கலைஞானி கமல்ஹாசன் நிறந்த நடிகர். ஆனால் தொடர்ந்து சில தவறுகளை அவர் செய்வது ஏன் என்று புரியவில்லை.

தசாவதாரம் படத்தில் சோழ மன்னன் பெருமாள் சிலையைத் தூக்கிக் கடலில்
போட்டதாகத் தவறான் தகவலைத் தந்திருந்தார். பிறகு  உன்னைப் போல் ஒருவன் என்ற படத்தில் இசுலாமிய நண்பர்களின் மனம் புண்படும் போல்  கதை சொன்னார். இப்போது விஸ்வரூபம் படத்திலும் இசுலாமிய நண்பர்கள்
குறித்து ஏதோ சொல்லியிருப்பார் போல தோன்றுகின்றது.

மேடையிலே தான் பெரியாரிஸ்ட் என்றும் கூறிக் கொள்வார். ஆனால் அவர் நடிக்கும் படங்களை பூஜையின்றி நடத்தச் சொன்னதாக வரலாறு இல்லை.

அவர் அப்பா என்று அழைத்து அவர் நாற்காலியிலே உட்கார விரும்புவதாகச்
சொல்லிக் கொள்வ் ஆரே அண்ணன் சிவாஜி இப்படி எந்தத் தவறும் செய்ததாக எனக்கு நினைவில்லை.

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மாணவி ஒருவருக்கு  நடந்துள்ள கொடுமை பற்றி மத்திய அமைச்சராக இருக்கின்ற தமிழக பெண் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் எந்தக் கருத்தும் சொன்னதாகத் தகவல் இல்லை மேற்கு வங்க முதல்வரும் தமிழக முதல்வரும் பெண்கள். அவர்களும் வாய் திறக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும் இருக்கின்ற பெண்மணிகள் நாட்டில் நிறைய பேர் உண்டு. அவர்களும் கருத்துத் தெரிவித்ததாகத் தகவல் இல்லை. குறைந்த பட்சம் அவர்கள் இதைக் கண்டித்துப் பதவி விலகுவதாக சும்மா ஒரு வார்த்தைக்காகவேனும் கூறுவார்கள் என எதிர்பார்த்தேன்.

ஷீலா தீட்ஷீத் பதவி விலகியிருக்க வேண்டும். இல்லை.

மருத்துவமனையில் அந்தப் பெண் வாழ விரும்புவதாக் ம்ருத்துவர்கள் சொல்லுகின்றனர்.

என்ன செய்ய நான் மேலே சொன்ன எல்லோரும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Wednesday, December 19, 2012

இவை தொடரும்

இந்தியத் தலை நகரத்தில்  நண்பரோடு பேருந்தில் இரவில் பயணம் செய்த மாணவி ஒருவர் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளார்.
கேரளாவில் தந்தையும் உடன்பிறந்தவனுமே தங்கள் வீட்டுப் பெண்ணைக் தொடர்ந்து  கற்பழித்து வந்துள்ளனர். எதிர்த்த வீட்டு அயோக்கியன் ஒருவன் தன் சின்னஞ்சிறு மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் என்று அவனைக் கொல்லாமல் தன் மகளை ஒரு தந்தை கொன்றிருக்கின்றான்.

உலகத்திற்கே  வழி காட்டுகின்ற ஞானியர் பலர் தோன்றிய நாடு.

பாரத நாடு பழம் பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்
நினைவகற்றாதீர் என்றான் பாரதி.

ஒழுக்கம் சொல்லித் தரப்படாத காவற்றுறை.எல்லாவற்றிற்குள்ளும் சாதீய வெறியுணர்வு.  காவற்றுறைக் குள்ளே இருக்கின்ற பெரும்பான்மை சாதீயினர் அவர்கள் சாதிக் குற்றவாளிகளைக் காப்பாற்றச்செய்கின்ற அக்கிரமங்கள்.
செவிலியர் வேலை ஆசிரியை வேலைக்கு சிபாரிசு தேடி வரும் பெண்களை
வீழ்த்தும்  சட்டப் பேரவை உறுப்பினர்கள் நாடாளும்ன்ற உறுப்பினர்கள். விமானப் பணிப் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் அமைச்சர் பெருமக்கள்.
தன் வீட்டுப் பெண்களைத் தவிர மற்ற பெண்களுக்கு பொய்யான விடுதலையைப் போதிக்கும் படைப்பாளிகள்.

சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் இந்தக் குற்றவாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்கின்றார். உடனே  மரண தண்டனையை எதிர்க்கும் மனிதநேய பிரமுகர்கள் என்ற போர்வையில் சில பெரிய சிந்தனையாளர்கள் கருத்துப் பரிமாற்றம்  தொலைக் காட்சிகளில். தொடங்கி விடும்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற மனித நேயப் பிரமுகர்கள் பலர் ஒரு ஏழைத் தமிழன்
ம்துரை ஆதீனமடத்தில் அன்னதானம் சாப்பிடப் போனவனை நித்தியானந்தா
வின் சீடர்கள் பலமுறை காலால் உதை உதை என்று உதைத்ததை பல தொலைக்காட்சிகள் பல முறை காட்டியும் அது குறித்து எந்த வித வருத்தமும் கண்டனமும் தெரிவிக்காத போது தான்  அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர்.

இன்னும் ஒரு வாரம் இது குறித்து இந்தச் சிந்தனையாளர்கள் எல்லோரும் ஆங்கிலத்திலும் பின்னர் அவரவர் மொழிகளிலும் கண்டனக் குரல்களை
பல் வேறு ஆய்வறிக்கைக்ளோடு மக்கள் முன் வைப்பார்கள்.

கடுமையான தண்டனை தர வேண்டும் என்பதில் எல்லொரும் ஒருமித்த குரலில் கூப்பாடு போடுவார்கள். எல்லாம்  பம்மாத்து என்பது இன்னும் ஒரு வாரத்தில் மக்களுக்குத் தெரிந்து விடும். சாதி வெறியையும் மத வெறியையும் தூண்டி விட்டுப் பிழைக்கின்ற அரசியல் ஒழிகின்ற வரை இந்தக் கொடுமைகள்
தொடரும் .

Thursday, December 13, 2012

என்ன செய்வது

உயர்நீதி மன்றம் ஒரு சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கல்லூரியில் இருந்து விலக்க வேண்டும் என்று. நமது அரசியல் தலைவர்கள் உடனே மாணவர்களின் நண்பர்களாகி  பேயர் சூடிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுத் தொலைப்
பார்களே என்ன செய்வது.

ஆட்டோவில் ஆறு சிறுவர்களுக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்று காவற்றறை கட்டளையிட்டால் உடனே ஆட்டோ ஒட்டுநர்கள் வயிற்றில் அடிக்காதே என்று சத்தமிடுவார்கள். ஆட்டோ ஒட்டுநர் தொழிற்சங்கங்கள் அனைத்தும் . விபத்தில் இறந்து போகின்றவர்கள் குழந்தைகள் என்று வருத்தமே இல்லாமல். தலைவர்கள் வீடுகளிலும் குழந்தைகள் உள்ளன.

சில உத்தரவுகளைப் போடுவதற்கு தேர்தல் நினைவில்லாத தலைமைகள் வேண்டும்.
பெற்றோர்களுக்கும் இதைப் பற்றிக் கவலையில்லை என்ன செய்வது

Tuesday, December 11, 2012

பாரதி தான் சொல்வான்

கோயிற் பூசை செய்வோன் சிலையை
கொண்டு விற்றல் போலும்
வாயிற் காத்து நிற்போன் வீட்டை
வைத்திழத்தல் போலும்
ஆயிரங்களாய நீதி
அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் சீச்சீ
சிறியர் செய்கை செய்தான்

அந்நிய முதலீடு குறித்துப் பாரதி சொல்வது போலவே தொன்றுகின்றதே.
ஒரு வரிதான் உதைக்கின்றது மன்மோகன் சிங் தருமனாக முடியாது.

தமிழ் மக்கள் மின் தட்டுப் பாடில் தவித்து துன்புற்றிருக்கும் போது அமைச்சரவைப் பெரியவர்கள் அனைவரும் தட்டுப்பாடு இல்லாமல் அதில் துன்புறும் மக்கள் குறித்துத் துன்புறாமல் வெட்கமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது குறித்தும் அடுத்த வரிகளில் கூறுகின்றான்.

நாட்டு மக்களெல்லாம் தம் போல்
நரர்கள் என்று கருதார்
ஆட்டு மந்தையாமென்று உலகை
அரசர் எண்ணி விட்டார்.

அவன் தான் பாரதி

அன்பு அத்தைக்காக

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திரைப் படத்தில் அம்மா என்றால் அன்பு என்று பாடல் பாடி தமிழக மக்கள் மத்தியில் அது பிரபலமானது.

நேற்று பங்குத் தந்தை சின்னப்பா முன்னர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அன்பின் பெருமையை புகழ்ந்திருக்கின்றார்.

தன்னிடம் சிறந்த நற்குணங்கள் ந்ற் பண்புகள் வந்ததிற்கு தான் கல்வி கற்ற கிறிஸ்தவ மதப் பள்ளிகளே காரணம் என்றும் சொல்லியிருக்கின்றார். மிகுந்த மகிழ்ச்சி.

அண்ணன் மகள் அத்தனை ஆசையோடு அத்தை அவர்கள் வருவார்கள் என்று காத்திருந்த அந்த மணவிழாவிற்குப் போயிருந்தால் தகப்பனற்ற அந்தப் பெண் எத்தனை மகிழ்ந்திருப்பார்.

Wednesday, December 5, 2012

யாருக்கும் வெட்கமில்லை

தமிழ்நாடு இருளில் தவிக்கின்றது. அரசோ எந்த விதக் கவலையும் கொள்வதாகத் தெரியவில்லை. விழாக்களும் கோலாகலங்களும் நடத்தவும் வெட்கமுறவில்லை.

அண்டை மாநிலங்களில் மின் வெட்டு இல்லை. எதையாவது எதிர்த் தரப்பினர் சொன்னால் அது குஜராத்தில் இருக்கின்றது  உத்தரப் பிரதேசத்தில் இருக்கின்றது என்று பெரியவர் கருணாநிதி அரசுப் பொறுப்பில் இருக்கையில் பதில் சொல்வார். நான் அப்போதெல்லாம் அவரை மேடைகள் வாயிலாகக் கேட்டிருகின்றேன். நீங்கள் தான் எங்களின் முதல்வர். நாங்கள் உங்களிடம் தான் கேட்போம். நீங்கள் அதற்கு வேற்று மாநிலங்களைக் காட்டுவது.
தன் தந்தையிடம் குழந்தைகள் ஏதேனும் கேட்டால் எதிர்த்த வீட்டுப் பிள்ளை
களின் தந்தை  அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தானா. பக்கத்து வீட்டுக்காரன் வாங்கிக் கொடுத்தனா என்றெல்லாம் பதில் தருவது பண்பாட்டுக் குறைவு என்றுஇந்த மாநிலத்தின் பொறுப்பிலே இருக்கின்ற நீங்கள் தான் எங்களுக்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என்று.

இன்று மின் வெட்டிலும் மைய அரசைக் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம். தமிழ்நாடு அரசு முயல வேண்டும். முயல்வதாகவே தெரியவில்லை.
பாரதிதாசன் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது. வெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை.தினமலர் நாளிதழ் ஒரு நிழற்படம் வெளியிட்டிருந்தது. சட்டப் பேரவை ஒளி வெள்ளத்தில்பக்கத்திலே
ஒரு செய்தி தமிழ்நாட்டில் மின் வெட்டு 16 ம்ணி நேரம் என்று.

தினமலர் இப்படிச் செய்திகளை வெளியிடுவதனால் அதற்கு அரசு விளம்பரம்
5 மாதங்களாகத் தரப் படுவதில்லை.

பத்திரிக்கைச் செய்திகளை மக்களின் குரலாக எடுத்துக் கொள்வது நேரு
காமராஜர் போன்றோரது காலம்.

Saturday, December 1, 2012

சிந்திப்பதற்குத் தான்

நேற்று இரண்டு கொலைக் குற்றம் சுமத்தப் பட்டவர்கள் காவற்றுறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். எதற்கென்றால் அப்போதுதானே அவர்களுக்குப் பின்னாலிருந்து தூண்டி விட்ட பெரிய மனிதர்கள் என்று அநியாயத்திற்கும் ஊர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற கொள்ளையர்
களும் அரசியல் அயோக்கியர்களையும் காப்பாற்ற முடியும். வீரப்பன் கொல்லப் பட்டதில் எத்தனை அரசியல்வாதிகள் பிழைத்தனர். குற்றவாளிகளை உருவாக்குவதே காவற்றுறையினர்தானே.


சட்டப் பேரவை வைர விழாவிற்கு திமுகவினர் போகவில்லை. சரிதானே.
சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஒரு பெண்ணை சேலையைப் பற்றி இழுத்து அடித்து உதைத்து முதல்வராக இருந்த பெரியவர் கருணாநிதி அவர்கள் ஒரு மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தையினை உச்சரித்ததனை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டதை மறந்திருக்க முடியுமா. வடக்கே எத்தனை கடுமையான விமரிசனங்களைச் செய்தாலும் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் பொது நிகழ்ச்சிகளில் பண்பாடு காக்கின்றனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த குடி  அதற்கும் முந்திய குடிகளைப் போல் நடந்து கொள்கின்றனர். விஜயகாந்தை பாராட்ட வேண்டும். முதலில் ஜெயலலிதாவை அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று எத்தனைக் காலம் அடம் பிடித்தார் பெரியவர் கருணாநிதி.

அதற்காக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்வதையெல்லாம் நான் நியாயப் படுத்துகின்றேன் என்று கருதாதீர்கள். எல்லாத் தலைவர்களின் மீதும் கூட்டங்களில் முதல்வரை அவதூறாகப் பேசியதாக வழக்குகள். மக்களாட்சி நடக்கின்ற நாட்டிலே இது எத்தனைப் பெரிய கொடுமை.

தி  மு க விற்கு ஆதரவாக பெரியவர் இராசாசி அவர்கள் பெரியவர் காமராசரை அந்தக் கருப்புக் காக்காயைக் கல்லால் அடியுங்கள் என்று சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பேசினார். காமராசர் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு நாகர்கோயில் மேடையிலே சின்ன அண்ணாமலை அவர்கள் இராசாசி என்று பேசத் துவங்கினார்.அவரது சட்டையைப் பிடித்து இழுத்த பெரியவர் காமராசர் நீ யாருன்னேன் அவரப் பேச அவர் யாரு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்  அவர் சேவை என்ன தெரியுமா. நிறுத்துன்னேன் என்று அவரைப் பேவே விடாமல் தடுத்து விட்டார்.

Friday, November 30, 2012

இவர்கள்

பலர் என்னை விழுந்து வண்ங்குகின்றனர். சொன்னாலும் கேட்பதில்லை. அதில் சிலர் தீடீரென்று வணங்குவதை நிறுத்தி விடுகின்றனர். மனம் நிம்மதி பெறுகின்றது.

ஒரு கவிஞர் இப்படித்தான் என்னை அவரும் நானும் கலந்து கொள்ளும் விழாக்களிலெல்லாம் விழுந்து வணங்குவார்.அவ்ர் திரைபடத்தில் பாட்டு எழுதுவதால் ஒவ்வொரு ஊரிலும் சில நண்பர்கள் அவருக்குக் கிடைத்து விட்டனர்.

அண்மையில் எங்கள் மாவட்டத்தில் ஒரு நிகழ்விற்கு வந்திருந்தார். அவரது புதிய நண்பர்கள் மூன்று பேர் உடன் வந்திருந்தனர். தம்பி என்று நான் வாய் நிறைய அழைப்பேன். அவரும் எங்கள் ஊர் வழக்கத்தில் அண்ணாச்சி என்று வாய் நிறைய அழைப்பார். அந்த மேடையில்  அவர் என்னை விழுந்து வணங்கவில்லை. நான் மன நிறைவடைந்தேன்.

பிறகு பெரியவர்கள் சொன்ன செய்தி தான் என்க்கு அதிர்ச்சியைத் தந்தது. அவர்களிடம் அவர் ஏதோ  அன்றுதான் என்னோடு ஒரே மேடையில் ஏறினாற் போலும் நான் அவரை அன்பொழுக தம்பி என்று அழைத்ததிலும் அவர் தலையைத் தடவிக் கொடுத்ததிலும் அவர் வியப்படைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். அதில் என்ன கொடுமை என்றால் அந்தப் பெரியவர்கள் அனைவரிடமும் எனது நிகழ்வுகளின் ஒளிக் குறுந்தகடுகள் அனைத்தும் உண்டு. அவர்களில் பலர் நெல்லையில் நடந்த எனது விழாக்
க்ளில் பங்கேற்றவர்கள். இந்தத் திரைப்படக் கவிஞர் என்னருகில் இருந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகள். எனது காலில் விழுந்து வணங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரில் கண்டவர்கள். அவர்கள் என்னிடம் தங்களது வருத்தங்களை பகிர்ந்து கொண்டனர். என்க்கு ஒன்றும் புரியவில்லை. நான் அன்பு மயமானவன்.

இன்னும் சிலர் நம்மிடம் மிகுந்த அன்பு பூண்டிருப்பதாக சிறப்பாக நடிப்பர்.
அது பொறுதுக் கொள்ள முடியாத அளவிற்கு நம்மை துன்புறுத்தும். பெரிய
பணக்காரர்களாக வேறு இருப்பர். அவர்கள் ந்ம்மோடு வந்து அமர்ந்து கொள்வதனாலேயே தரமானவர்கள் நல்லவர்கள் ந்ல்ல தமிழறிந்தவர்கள் நம் அருகில் வர முடியாமல் தவிப்பார்கள். எனது நல்ல நண்பர் ஒருவர் ஒரு சிறப்பான வழியைச் சொன்னார். இன்று நிம்மதியாக இருக்கின்றேன்.

ஆமாம் என் மீது உயிரையே வைத்திருப்பதாகவும் என்ன வேண்டுமானாலும் எனக்குச் செய்ய உறுதி பூண்டிருப்பதாகவும் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த நண்பர்களிடம் ஒரு அவசரத் தேவை கொஞசம் பண உத்வி வேண்டும் என்று கேட்டவுடன் அவர்கள் என்மீது வைத்திருந்த உயிரை உடனே எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார்கள். நிம்மதி.

Thursday, November 29, 2012

அம்மானைப் பாராட்டுங்கள் மற்ற செய்திகள் உங்கள் சிந்தனைக்காக

ஹிந்தியில் சீ தொலைக்காட்சியில் சரிகமப என்ற நிகழ்ச்சி ஒன்று ஒளி பரப்பா
கின்றது. சனி ஞாயிறு தோறும் இரவு மொஹம்மது அம்மான் என்கின்ற ஒரு 20 வயது இளைஞர் இந்துஸ்தானி சங்கீதம் பாடுகின்றார். இறைவனின் சிறந்த படைப்பு அந்த இளைஞன்.

ஒரு பெண் காவல் அதிகாரி புதுக் கோட்டையில் மாற்றான் படத்திற்கு இலவச
அனுமதிச் சீட்டு கேட்டிருக்கின்றார். அவரை காவல் மேலிடம் உடனே வேற்று மாவட்டத்திற்கு மாற்றி விட்டது

ஒரு காவலர் அல்ல. அதிகாரி. அதுவும் பெண். மாறுதல் என்கின்ற பெரிய தண்டணையை கொடுத்த காவற்றுறை அதிகாரிகளை எல்லோரும் பாராட்டுங்கள்.

 காரைக்காலில் தன்னைக் காதலிக்கச் சொல்லி ஒரு கொத்தனார் தொழில் செய்கின்ற இளைஞன் ஒரு பெண் பொறியாளரை ஒரு தலையாகக் காதலித்து இடையூறு செய்து கடைசியில் அவளது முகத்தில் ஆசிட்டை ஊற்றி அவரது கண்கள் பறி போயிருக்கின்றன. ந்மது திரைப் படங்கள் எத்தனை விதமான மோசமான ஆசைகளை நமது இளைஞர்களிடம் ஏற்படுத்துகின்றன.

Sunday, November 4, 2012

மறக்க முடியாதவர்கள்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நிறைவு பெற்று விட்டது. சிறுவர் ஆஷிக் வெற்றி பெற்றூள்ளான். மிக நன்றாகவே பாடிய அவௌக்கு பரிசளிக்கப் பட்டது சரியே.

ஆனால் முதலில் இருந்தே கெளதமை ஒழிக்க நினைத்த நீதிபதிகள் சிலரைக் குறித்து மனதில் வேதனையாகவே இருந்தது.

மிகப் பெரிய கர்நாடக சங்கீத மேதைகளான அருணா சாய்ராம் அவர்களாலேயே கெளதம் கடவுளின் அருள் என்று  போற்றப் பட்ட பிறகும் பாம்பே சகோதரிகள் சுதா ரகுநாதன் நித்யஸ்ரீ மகாதேவன் உண்ணி கிருஷ்ணன் போன்றவர்கள் பாடகர் சீனுவாஸ் ஒரு நேரடி நிகழ்ச்சியிலே இப்படி இது வரை யாரும் பாடி நான் கேட்டதில்லை  என்றதோடு மட்டுமல்லாமல் காதல் பட பாடலை கெளதம் பாடிய போது அவர் நெகிழ்ந்து போனதும் சித்ரா அம்மா ஒரு தாயுள்ளத்தோடு அவரைப் பாராட்டிய போதும் ஒரு கிராமத்துச் சிறுவன் சங்கீதத்திற்கே சம்பந்தம் இல்லாத கிராமத்திலேயிருந்து வந்து பாடுகின்றான்
என்ற நினைவே இல்லாமல் அவன் குத்துப் பாடல்கள் பாட மட்டும் தெரிந்தவன் என்பது போல மால்குடி சுபாவும் தம்பி மனோவும் அவனை ஒவ்வொரு முறையும் அவமானப் படுத்த முயன்றது புரியவில்லை. அதிலும் மனோ அப்படி நடந்து கொண்டதே எல்லோருக்கும் வருத்தம் தந்தது. சித்ரா அம்மா நீ குத்துப் பாட்டு பாடுகின்றவன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் நீ
இன்றைக்குப் பதிலடி கொடுத்திருக்கின்றாய் என்றதற்குப் பிறகும் மால்குடி சுபா ஜிஞ்ன்க்க்டி யிலிருந்து மாறிட்டியே என்றது அநாகரிகத்தின் உச்சக்கட்டம்.வெறும் போட்டியாளர்களாகக் கருதாமல் அவர்களின் பின்புலமும் போட்டிகளில் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

ஹரிசரண் திருப்பதி வந்தா திருப்பம் என்ற பாடலை கெளதம் பாடியபோது உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது பாடியவரா நீங்கள் என்று கேட்டதும் சுசித்ரா ஒரு சின்ன சங்கர் மகாதேவன் உருவாவதைக் காண்கின்றேன் என்றதும்.மிகச் சிறப்பாக பாடக் கூடியவன் குரல் மாற்றத்தினால் இவனுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதை சொல்லி பாராட்டிய ஹரிஹரனும் மீண்டும் நீ இந்தியாவின் மிகப் பெரிய பாடகனாக விளங்குவாய் என்ற சுதா ரகுநாதன் அவர்களும் மறக்க முடியாதவர்கள்.

Saturday, October 20, 2012

இறைவன் அருள்

நெல்லைக்கண்ணனா அப்படி ஒர் பெயரை நான் கேள்விப் பட்டதேயில்லை என்ற நித்தியானந்தன் மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார். எல்லோறும் தொலைபேசியிலு அலை பேசியிலும் என்னை அழைத்துப் பாராட்டுகின்றனர்.

என்னை இந்தப் போராட்டதிற்குள் அழைத்தது என் அன்னை மீனாட்சி போகச் சொன்னது எனதன்னை காந்திமதி இது அவர்களின் அருள்.

இந்த வெற்றி முழுவதும் இறைவனின் அருளால் கிடைத்தது

Friday, October 19, 2012

ஆதித் தமிழ் சிறுவன் கெளதமை வெற்றி பெறச் செய்வோம்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்வில் தமிழ்நாட்டின் ஒரே ஆளாக கெளதம் இறுதிச் சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளான்.
அருணா சாயிராமால் பாராட்டப் பட்டவன் சுதா ரகுநாதனால் புகழப் பட்டவன்.உண்ணி கிருஷ்ணனால் உச்சி முகரப் பட்டவன் வீணை மேதை ராஜேஷ் வைத்யாவால் தூக்கி கொஞ்சப்பட்டவன்.கடம் மேதையினால் கெளரவிக்கப் பட்டவன். வயலின் கலைஞர் எத்தனையோ கச்சேரிகள் வாசித்த நான் முதன் முதலாக அழுதது இவன் பாடலைக் கேட்டுத்தான் என்று சொல்ல வைத்தவன். இந்த ஆதி தமிழ் சிறுவனுக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுகின்றென். வாக்களிக்க  வேண்டிய எண் SSJ 10send it to 57827
online www,vijaytv.com

ஒருவரே 100 வாக்குகள் அனுப்பலாம்.வெல்லாட்டும் ஒடுக்கப் பட்ட இனத்தின் ஒரே பங்களிப்பாளன் கெள்தம். நன்றியுடன் நெல்லைக்கண்ணன்

Tuesday, October 16, 2012

காங்கிரஸின் உண்மைத் தொண்டன் மணி சங்கர அய்யர்

இன்னும் 45 வருடங்கள் ஆனாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது மணிசங்கர் அய்யர் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்.

ஆமாம் 5 வயதிலிருநதே காங்கிரஸ் கொடியைக் கையிலேந்தி படிப்பையெல்லாம் துறந்து விட்டு கட்சி வளர்த்த பெருமகன்..

இராஜீவ் காந்தியின் பள்ளித் தோழனாயிருந்த ஒரே காரணத்தினால் மயிலாடு
துறை நாடாளுமன்ற உறுப்பினராகி மத்திய அமைச்சரான இவரைப் போன்ற்
வர்களால்தானே காங்கிரஸ் ஒழிந்தது.

மயிலாடுதுறையிலே காங்கிரஸிற்காக உழைத்து உழைத்து ஒடாய்த் தேய்ந்த
வர்கள் இருக்க டில்லியிலிருந்து வந்தது மட்டுமல்ல.இவருக்கு எல்லாச் சேவைகளையும் செய்ததற்காகவே ராஜ்குமார் என்கின்றவர் சட்டப் பேரவை
உறுப்பினராக்கப் பட்டார்.

தமிழ்நாட்டின் எந்த ஊரையும் தொண்டனையும் தெரியாத ஜெயந்தி நடராஜன்
தொடர்ந்து மாநிலங்களவை  உறுப்பினராக மத்திய அமைச்சராக இருப்பார்.

பிறகு காங்கிரஸ் எப்படி வளரும் உழைப்புத் திருடர்களெல்லாம் உயரத்தில். இவர்களின் இன்னொரு திறமை திராவிட இயக்கங்களின் உழைப்பைத் திருடி
உயரத்தில் போய் தங்களைத் தலைவர்களாகக் காட்டிக் கொள்வது.

இந்த மணிசங்கர அய்யர் காங்கிரஸ் இடம் தரவில்லையென்று திரிணாமுல்
காங்கிரஸில் போய் இடம் கேட்டார். பிறகு மயிலாடுதுறையில் காங்கிரஸிற்
கெதிராகப் போட்டியிட்டார். இன்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக
உள்ளார்.

திராவிட இயக்கங்கள் மட்டும் தெளிவாகக் காங்கிரஸை ஆதரிக்காமல் இருந்தார்களென்றால் இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எங்கே
இருக்கின்றார்கள் என்றே தெரியாத நிலையில்தான் இருப்பார்கள்.

Monday, October 15, 2012

உணர்வில் தோன்றியவை

நேற்று ஒரு உணவகம் சென்றிருந்தேன்.
அறிவிப்புப் பலகை ஒன்று பார்த்தேன்

வாடிக்கையாளர்களே தங்கள் உடமைகளைத் தாங்களே பத்திரமாகப் பார்த்துக்
கொள்ள வேண்டும் தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல

நமது அரசியல் கட்சிகள் நினைவுக்கு வந்தன

வாக்காளர்களே உங்கள் உடமைகளையும் நில புலன்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு .எங்கள் பெயரிலோ எங்கள்
உறவினர்கள் பெயரிலோ அவை மாறினால் நாங்கள் பொறுப்பல்ல. உங்கள் அறியாமையே பொறுப்பு என்று எழுதாத விளம்பரம் ஒன்றை நமக்கென தந்திருக்கின்றனரே.


பூரண மது விலக்கை அமுல் படுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாச் சூழல்.

தமிழக முதல்வர் மாண்பு மிகு முதல்வர் அவர்க ள்திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்த எல்லாவற்றையும் மூடுகின்றவர் இதை மூடினால் தாய்க் குலத்தின் பேராதரவோடு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம்.அம்மா என்று தமிழக ஏழை எளிய மக்களால் அன்போடு அழைக்கப் படும் தாயவர் இதனைச் செய்ய வேண்டும். காந்தி காமராஜர் அண்ணா போன்றவர்க்ளின் ஆசியும் கிட்டும். இறைவனிடம் வேண்டி நிற்போம்.

Friday, October 5, 2012

செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையில்லை என்று உதயகுமார் தலைமையில் மீனவ நண்பர்கள் 400 நாடகளுக்கும் மேலாகப் போராடுகின்
றனர். பல தலைவர்கள் அவர்களை ஆதரித்தும் போராட்டங்களிலே ஈடு
பட்டனர்.

வேண்டும் என்கின்ற காங்கிரஸ் நண்பர்கள் போராடத் துவங்கி விட்டார்கள். கூடங்குளத்திலா.சென்னையில் நாகர்கோவிலில் என்று பல இடங்களில். சமீபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பல இலட்சம் பேர் வாக்களித்தனர். ஆனால் போராட்ட களத்திலோ சில நூறு பேர். எத்தனை காலம் தான் இவர்கள் இப்படி ஏமாற்றித் திரிவார்கள். நாடாளுமன்றத்
தேர்தலின் போது இப்படியெல்லாம் போராட்டங்கள் நடத்தியதாக விபரம்  காட்டினால்தானே இடம் பெறலாம்.

இலட்சக் கணக்கில் வாக்களித்த இளைஞர் காங்கிர்சாரைத் திரட்டி கூடங்குளத்திற்கே போக வேண்டாமா.

உடனே போய் காங்கிரஸ் எத்தனை மக்கள் சக்தியோடு இருக்கின்றது என்பதனை எல்லொருக்கும் காட்டுங்கள்.

                                  பெரியாரின் கருப்புச் சட்டை

கருணாநிதி அவர்கள் மீண்டும் கருப்புச் சட்டைக்கு வந்து விட்டார். பெரியார் எந்தப் போராட்டம் நடத்தினாலும் தடையை மீறி சிறைச்சாலைக்குப் போவார். ஆனால் இவர்கள் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பார்களாம். பெரியார் ஆண் பிள்ளைநெல்லையில் பள்ளி வாகனத்தின் கதவு திறந்து ஒரு மாணவி விழுந்து காயப் பட்டிருக்கின்றார். இன்னொரு பள்ளி வாகனம் தீப் பிடித்து எரிந்திருக்கின்றது. படித்த அதிகாரிகளின் பிச்சைக் காரத்தனம் இவற்றிற்குக் காரணம். அவர்கள் வீடுகளிலும் குழந்தைகள் இருக்கின்றன. யார் நினைக்கின்றனர்.

தனியார் பள்ளிகள் பணத்தை அள்ளிக் குவிக்கின்றன. ஆசிரியர்களுக்கு சரியான ஊதியம் தருவதில்லை. யார் கேட்கின்றனர். பள்ளிக் கிளைகளோபெருகிக் கொண்டேயிருக்கின்றன. பல பெரிய கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்திருக்கின்ற அரசு நிலங்கள் பல கோடி பெறும். அரசு திமுகவினர் ஆக்கிரமித்திருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும்.

முதலமைச்சருக்கு எதுவும் தெரியாமல் பன்னீர் செல்வம் அவர்கள் பார்த்துக் கொள்வார்.

                                         புரியவில்லை

செங்கோட்டையன் இப்போது ஜெயக்குமார்.அமைச்சர்கள் மாற்றம் புரியவில்லை.

Tuesday, October 2, 2012

எந்த யுகம்


கையால் நூற்று
கையால் நெய்து
கதரைத்
தந்தது
காந்தி யுகம்

பொய்யாய்ப் பேசி
பொய்யாய்
வாழும்
புரட்டர்கள்
வாழ்வது
இந்த யுகம்

 

Saturday, September 29, 2012

இன்று இருதய தினமாம்

இன்று இருதய தினமாம்.இன்று மட்டுமாவது இருதயத்தோடு வாழ வேண்டுகின்றார்கள் போல.

இருதயம் நன்றாக இருக்க வழிமுறைகள் சொல்லுகின்றனர்.சிகரெட் பிடிக்காதே.உப்பு சீனியை(சர்க்கரையை) குறைவாக ப்யன்படுத்து. முடிந்தால் பயன் படுத்தாதே. கொழுப்பு உணவு வகைகளை விட்டு விடு. மாடிப் படிகளை ஏறிக் கட. விரைவு உணவகங்களில் சாப்பிடாதே. பல வழி காட்டுதல்கள்.

நல்லதை நினை நல்லதைச் செய் தவறான வழியில் பொருளீட்டாதே.
அடுத்தவர் வாய்ப்புகளை பறிக்காதே.பொறாமை கொள்ளாதே. வாய்ப்புகளை தவறுக்கு பயன் படுத்தாதே. ஆமாம் சட்டப் பேரவை நாடாளுமன்ற உறுப்பினரானால் மக்களுக்குச் சேவை செய். அந்தப் பதவிகளை வைத்து நீத்யற்ற மூறையில் போருளீட்டாதே.கல்வி கற்றதன் பயனாகக் கிடைத்த அரசு வேலை வாய்ப்பில் ஊதியத்திற்கு மேல் பொருளிட்டாதே. பேருந்திற்கு மட்டும் காசு வைத்துக் கொண்டு அரசு அலுவலகங்களை நம்பி வரும் ஏழைகளை அலைய விடாதே. கல்வி நிலையங்களை கொள்ளையடிப்பதற்காக நிறுவாதே. காந்தி காமராஜர் படேல் சாஸ்திரி கக்கன் லூர்தம்மாள் சைமன்  வினோபா பாவே என்ற மனிதர்களைப் போல் மனிதனாக வாழ். குறளை பேசவும் எழுதவும் மட்டும் பயன் படுத்தாதே.
உன் குடும்பம் என்பது மனித குலத்தின் உதவியின்றி வாழ முடியாது என்று உணர். அதை விட்டு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அது அரசியல் பணியாக இருந்தாலும் அரசுப் பணியாக இருந்தாலும் கையூட்டு வாங்காதே.
இப்படியெல்லாம் இருந்தால் மட்டுமே போதும் உனது இதயம் நோயற்றது.
இவைதான் நோய்க்குக் காரணங்கள்.

வள்ளுவர் சொல்லுகின்றார். தந்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்கின்றார். குற்ற உணர்வு உன்னை நோய்க்
காளாக்கிக் கொன்று விடும்.

ஈன்றாள் பசி காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்கின்றார்.

நேர்மையாக இருந்தாலே இதய நோய் வராது. நன்றாகச் சாப்பிடலாம்.

மன்மோகன் சிங்கிற்கும் சோனியா அம்மையாருக்கும் இதயம் இருந்திருந்தால் வாணிகம் செய்ய வந்து தான் கிழக்கிந்தியக் கம்பெனி நமது நாட்டை அடிமை செய்து விட்டது என்ற வரலாறு நினைவிற்கு வரும்.
அதற்காகத்தான் சுதேச எண்ணம் மேலோங்கச் செய்தார் காந்தி அடிகள் வெளி நாட்டுத் துணிகளை எரித்தார் வ.உ.சி.

மன்மோகன் சிங் அரசு அதிகாரியாக் இருந்தவர். நான் இது வரை கொண்டிருந்த கருத்திற்கு மாறாக சோனியா காந்தி அவர்கள் ஒரு வெளி நாட்டுக்காரர்.

பி.எல்.480 மூலம் கோதுமை தருவதாக அமெரிக்கா சொன்ன போது அதை அன்றைய மத்திய அரசு(காங்கிரஸ்) ஏற்றுக் கோண்ட போது அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டே அதனை சென்னைக் கடற்கரை போதுக் கூட்டத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

இங்கே யாரும் வரலாறு குறித்துச் சிந்திப்பதில்லை. ந்மது தலைவர்களுக்கு இதயமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது மருத்துவ உலகத்திற்கே புரியாத பெருஞ்சாவாலாக உள்ளது.
என்று உணர்கின்றேன்.

Thursday, September 27, 2012

நன்றி

நன்றி நண்பர்களே

கவுதம் இளங்குருத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்

விஜய் தொலைக் காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஒரு தமிழ்ச் சிறுவன் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்தவன் கவுதம் இறுதிச் சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளான்.

அதிலும் நீதியில்லை. போட்டியாளர்கள் நால்வரும் பாடி முடித்த பின்னர்தானே மதிப்பெண்கள் அடிப்படையில் யார் முதல் யார் இரண்டாவது யார் மூன்றாவது என்று தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

இரண்டு பேர் பாடி முடித்தவுடனே மலையாளத்து பெரிய ஜாதிப் பெண் சுகன்யா 104 மதிப்பெண்ணோடு முதல் மதிப்பெண் என்று அறிவிக்கப் பட்டாள்.
கவுதமும் யாழினியும் பாடும் முன்னரே எப்படி அவர்கள் இதை விடக் குறைந்த மதிப்பெண் தான் எடுப்பார்கள் என்று கருதினர்.

அடுத்து யாழினி என்ற பெண் சிறப்பாகப் பாடியும் அவளுக்கு மதிப்பெண் வழங்குவதிலே அநீதி இழைக்கப் பட்டது.

அதன் பின்னர் ப்ரக்தியும் கவுதமும் பாடிய பின்னர் கவுதத்திற்கு சொர்க்கம் மதுவிலே என்ற பாடலுக்கு 10 மதிப்பெண்களைத் தந்த மால்குடி சுபா அவன் மிக அருமையாகப் பாடிய சின்ன் சின்ன் ரோஜாவே என்ற பாடலுக்கு வெறும் 7 மதிப்பெண்களே தந்தார். இறுதியாகப் பாடிய இளையராஜாவின் மிகச் சிறந்த
நந்தா என்ற படத்தின் ஒராயிரம் என்ற பாடலை மிக மிகச் சிறப்பாகப் பாடியும்
அவனை சீனிவாஸ் வேறு பாடல் பாடியிருக்க வேண்டும் என்றார். மனோ என்கின்ற அந்த இஸ்லாமிய நண்பருக்கு அந்த தாழ்த்தப் பட்ட சிறுவன் மேல் என்ன வெறுப்பு. புரியவில்லை. மால்குடி சுபா அது போராட்டப் பாடலே அல்ல என்கின்றார்படத்தையும் பாடலையும் புரிந்து கொள்ளாம்லே. கொடுமை. எப்படி ஒரு தாழ்த்தப் பட்ட சிறுவனை ப்ரகதி என்ற அமெரிக்க்க் குடிமகள் மேல் ஜாதிப் பெண்ணிற்கு மேல்  விடுவதுஎன்கின்ற வெறுப்பு. திட்டமிட்டு8
மதிப்பெண் என்றார். மிக மிக பெரிய பணம் படைத்த பெண்ணிற்காக கவுதமிற்கு மதிப்பெண்களை குறைத்து ஒரு மதிப்பெண்ணிலே ப்ரகதி என்கின்ற பெண்ணை இரண்டாமிடத்திற்குக் கொண்டு வந்தனர்.

இன்னொரு கொடுமை அந்தப் பெண் ப்ரகதி தனக்கு வழங்கப் பட்ட நகைகளை
கவுதமிற்கும் யாழினிக்கும் வழங்கி அவர்களின் மேல் தட்டு உணர்வை மிகச்
சாமர்த்தியமாக வெளிப் படுத்தினர். ஏன் கவுதமின் பெற்றோரும் யாழினியின் பெற்றோரும் இதற்கு இத்தனை ஏமாளித்தனமாக ஒத்துக் கொண்டனர்.

போட்டியில் இருக்கும் போது இன்னொரு போட்டியாளர் தருகின்றார் என்பதெல்லாம் பச்சைப் பொய்.மறைமுகமாக கறுப்பர் இன ஏழைக் குழந்தைகளை கேவலப் படுத்திய செயல்.

இதுவரை நான் எனதருமை தமிழர்களே உங்களிடம் ஏதும் கேட்டதில்லை. தமிழினத்தின் ஒரே சிறுவனாக போட்டியில் நிற்கின்ற கவுதமிற்கு எஸ்/எம்.எஸ். மூலம் வாக்குகளை அள்ளித் தாருங்கள். சூழ்ச்சிக் களத்தில்
வெள்ளை மனத்தவராக நிற்கும் கவுதமையும் அவனது பெற்றோர்களையும்
பாருங்கள். தன் திறமையைத் தவிர வேறு எந்த சிபாரிசிற்கும் வழியில்லாத
அந்த இளங்குருத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.

சிந்திக்க வேண்டும்

சிவகாசி வெடி விபத்தில் வறுமையில் வாடிய ஏழைகள் வெடித்துச் சிதறியதில் பதைபதைத்துப் போனோம்.

நேற்று 22 அதிகாரிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

துறை அளவிலான விசாரணையா என்ன என்று தெரியவில்லை. நமது
வேண்டுகோள் அவர்கள் மீது கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்து கிரிமினல் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டும். ஏனெனில் வெடித் தொழிற் சாலைகள் எத்தனை ஆபத்தானவை அதற்கு அனுமதி அளிப்பதற்கு பின் பற்ற வேண்டிய நடைமுறைகள் எதையும் பின் பற்றாமல்  சில பல ஆயிரங்களுக்
காகவோ இல்லை பெரிய தொலைக் காட்சிப் பெட்டிகளுக்காகவோ இல்லை வேறு பொருட்களுக்காகவோ இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கின்றது.

அப்படி இருக்கையில் இவர்களை எப்படி விட்டு விடுவது. இன்னொன்றும் கூட
செய்வது நலம் பயக்கும். இவர்கள் ஊதியம் மற்றவற்றைக் கணக்கெடுத்து        
அளவிற்கதிகமாக அவர்களிடம் பணமோ சொத்தோ இருக்குமெனில் அதனை இந்தக் கொடியவர்களின் ஆசையால் தங்கள் உயிரை இழந்த அந்த ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

எல்லாத் துறைகளிலும் துறை அளவிலான விசாரணையாக இல்லாமல் முழுமையாக பணியில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொருவரும்  ஆண்டு தோறும் தங்களது சொத்துக் கணக்கினைத் தெரிவிக்க  ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அத்தனைக்கும் மேலாக நான் ஏற்கனவே எழுதியது போல அவர்களது இல்லத்
துணைவிகள் இது எத்தனை பெரிய கேவலம் என்பதனை உணர்ந்து இதனால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன் என்பதனை உணர்ந்து தங்கள்
கணவன்மார்களின் தவறான வருவாய் முயற்சிகளைத் த்டுக்க வேண்டும்.

வெடித்துச் சிதறிய பெரியவர்கள் இளைஞர்கள் குமரிகள் குழந்தைகள் அவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா. இவர்கள் குழந்தைகள் நோய்களுக்கு ஆளாக மாட்டார்களா. சிந்திக்க வேண்டும்

Wednesday, September 26, 2012

மரண தண்டனை

ஆறுகளில் மணல் அள்ளுவது மரங்களை வெட்டுவது என்பவை யார் ஆண்டாலும் நிற்பதில்லை. காரணம் ஆட்சிப் பொறுப்பிற்கு யார் வந்தாலும் இதனைத் தொடர்ந்து செய்வதற்கென்றே சில குடும்பத்தினர் திராவிட இயக்கங்கள் இரண்டிலும் இருந்து கொள்ளுகின்றனர். எந்த ஆட்சி என்றாலும் பிரசிசினை இல்லையல்லவா.

ஆனால்  இவர்கள் முதுகலைப் பட்டங்கள் வேறு(படிக்கவில்லை) வாங்கியிருக்கின்றனர். முறையான கல்வி என்றால் தாம் செய்வது எதிர்கால சந்ததியினருக்குச் செய்கின்ற மிகப் பெரிய கேடு என்று உணர்ந்திருப்பார்களே.அவர்கள் குழந்தைகளும் தானே இந்த மண்ணில் வாழப்
போகின்றனர்.

அவர்களுக்குக் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கத்தானே இந்தக் கொள்ளை
கள். அந்தப் பணம் எதிர்கால உயிர் வாழ்க்கைக்கு உதவாது என்பது முறையாகக் கல்விக்க் கூடங்கள் நடத்துபவர்களிடம் முறையான ஆசிரியர்க
ளிடம் கற்றிருந்தால் தானே இவர்கள் சிந்தனையில் வரும்.தங்கள் சந்ததியினரும் இயற்கை மழைக்கென அளித்திருக்கின்ற எல்லா வளங்களையும் அழித்தால் உயிர் துறக்க வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாவர்கள் என்று உணர்வார்கள்.

களக்காடு மலையில் அடிக்கடி தீப் பிடிக்கும் இவர்கள் தான் காரணம். இதில் இன்னொரு வேடிக்கை சமூக விரோதிகளுக்குச் சாதீயப் பின்னணி.

என் சமூகத்தில் ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் அவனைப் பிடித்து
காவல் துறை வசம் ஒப்படைத்தால் தானே நாம் மனிதர்கள், அங்கே இன்னொரு அசிங்கம் காவற்றுரையே சாதிகளின் கூடாரமாகத் திகழ்வது
தான்.

இதில் மருத்துவர்கள் சமூக விரோதச் செயல்கள் செய்தால் கைது செய்யக்
கூடாது பொறியாளர்கள் செய்தால் கைது செய்யக் கூடாது வழக்கறிஞ்ர்கள்
தவறு செய்தால் கைது செய்யக் கூடாது. ஏன் இந்த் அட்டூழியங்கள். அப்படி
யென்றால் ஏழைகள் பாட்டாளிகள் மட்டும்தான் தவறு செய்பவர்களா.

இதில் மிகப் பெரிய கொடுமை நமது அரசியல். ஒற்றை வேட்டியொடு வாழ்ந்த தேசத் தந்தை நான்கு வேட்டிகளோடு வாழ்ந்த பெருந்தலைவர் கிழிந்த வேட்டி களோடு வாழ்ந்த கக்கன்.ஒற்றை வேட்டியை துவைத்து காய வைத்து தினம் உடுத்தி வந்த தோழர் ஜீவா.

தளி இந்தியக் கம்யூனிஸ்ட் சட்டப் பேரவை  உறுப்பினர் திராவிட இயக்கங்களைத் தண்டியவராக இருக்கின்றார்.

மருத்துவத்திற்கு வந்த பெண்ணிடம் தவறு செய்கின்ற மருத்துவர் தண்டிக்கப் பட வேண்டியவரா கிரிமினல் வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டியவர் கிரிமினல் வேலைகள் செய்தால் கைது செய்ய வேண்டாமா.போடாத சாலைக்கு பணம் பெறுகின்ற பொறியாளர் கைது செய்யப் பட வேண்டாமா.
பள்ளை மாணவியிடம் தவறாக நடக்கின்ற ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்
கள் கைது செய்யப் பட வேண்டாமா.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கின்ற நான் சுய லாப நோக்கோடு இயற்கை வளங்களி அழிக்கின்ற இந்த அயோக்கியர்களுக்கு மரண் தண்டனை தந்தால் நன்றாக இருக்கும்  என்று
கருதுகின்றேன். இன்றும் என்றும் மனித உயிர்கள் உடல் நலத்துடன் வாழ
இயற்கை அருளியுள்ள கொடைகளை தங்கள் பண வேட்டைக் காக அழிக்கின்ற இவர்கள் பல கோடி உயிர்களோடு விளையாடுகின்றவர்கள்.
உணர்ச்சி வசப்பட்டுக் கொலை செய்து விட்டுப் பின் உட்கார்ந்து அழுகின்றவன் மரண தண்டனைக்கு ஆளாவது பரிதாபம்.

நன்கு தெரிந்து கொண்டு இயற்கை வளங்களை அழிக்கின்ற இந்தப் பாதகர்கள் மரண தண்டனைக்குரியவர்கள்.

அணுமின் நிலைய ஆபத்தை விட இவர்கள் ஆபத்தானவர்கள். எந்தத் தலைவரும் இது குறித்துப் பேச மறந்து விட்டார்களே ஏன். மறதி ஒரு கொடிய நோய்.

வானத்தில் அமுதம் இருப்ப்தாகச் சொல்வத்னை ஒத்துக் கொள்ளாத வள்ளுவ
பேராசான்
வானத்தில் இருந்து மழையின் மூலமாக வரும் நீர்தான் உயிர்க்குலங்கள் அனைத்திற்கும் அமுதம் என்கின்றான்.

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று

Tuesday, September 25, 2012

புரியவில்லை

பலர் என்னிடம் நட்புக் கொள்ள வேண்டும் என்று லின்க்டு இன் என்றும் பேஸ்புக் என்றும் செய்திகள் அனுப்புகின்றனர். என்னதான் பார்ப்போமே என்று அந்த வேண்டுகோளை ஏற்று உள்ளே போனால்  அதில் நான் அவர்களோடு நட்பு பூண விரும்புவதாக செய்தி வருகின்றது. நான் எல்லோரிடமும் நட்பாகத் தானே இருக்கின்றேன். அதனால் அவற்றிற்கு பதில் தருவதில்லை.


முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நீண்ட நாட்களாக அவரைப் பார்ப்பதற்கென்றே தலைமை அலுவ்லகத்தில் காத்துக் கிடந்த பெரியவரை அழைத்து மரியாதை செய்திருக்கின்றார். தலைமைச் செயலகத்தில் யாரோ நல்லவர் இருந்திருக்கின்றார். அதனால்தான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அந்தப் பெரியவர் முதலமைச்சர் அவர்களைச் சந்திக்க முடிந்திருக்கின்றது.
அமைச்சர்கள் பார்வையில் அவர் பட்டிருந்தால் ஒரு நாளும் அவரைப் பார்த்திருக்கவே முடியாது.

இரண்டு முறை முதலமைச்சரை நேரில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்த அனுபவத்தில் சொல்கின்றேன். அவர் மிக வெளிப்படையான
வர். குழந்தை போன்றவர்.

அவருக்கு அடுத்த நிலையில் இருக்கின்ற அமைச்சர் பெருமக்கள் நேர் எதிரானவர்கள். சிரித்துக் கொண்டேயிருக்கின்றாரே பன்னீர்செல்வம் அவர் எத்தனை ஆபத்தானவர் தெரியுமா

அம்மாவிற்காக நான் தமிழ்கம் முழுவதும் பேசியபோது அவர் தொகுதிக்கும் போனேன். அவர் என்னிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதனை என்னால் இன்றும் மறக்க  முடியாது.

முதலமைச்சரைச் சுற்றியிருக்கும் அமைச்சர்களிலே பலர் உண்மைத் தொண்டர்களை அவரைச் சந்திக்க முடியாமல் எப்படித் தடுக்கின்றார்கள் தெரியுமா. அதிலேயும் தோட்டத்தில் இருக்கின்ற நண்பர் பூங்குன்றன் நாம் நல்ல நோக்கில் எழுதுகின்ற கடிதங்கள் எதையும் அவரிடம் தருவதில்லை.

கிரானைட் பழனிச்சாமிக்கு ரொம்ப பின்பலமாக இருந்தவர் ஒரு திரைப் படப்
பாடலாசிரியர் அவரைக் காப்பாற்றுவது பன்னீரோ என்று சந்தேகப் படுகின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.

அந்தத் திரைபடப் பாடலாசிரியரிடம் திமுக தலைவர் தினசரி காலையில் பேசு
வார் என்பார்கள். அவர் திடீரென்று ஜெயா டிவி. விழாவில் கலந்து கொள்ளுகின்றார்.


Monday, September 24, 2012

தினமணி வைத்தியநாதன்

நபி பெருமானாரைப் பற்றி ஒரு அநாகரிகமான திரைப் படம் எகிப்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவர் எடுத்து அதை யு  டியுபில் போட்டிருக்கின்றார்.உலகம் முழுவதும் இருக்கின்ற   இஸ்லாமிய நண்பர்கள் போராட்டங்களில் ஈடு பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில்  சில பல தடவைகள் இந்துக் கடவுளரின் படங்களைக் காலணிகளில் போடுவது உள்ளாடைகளில் போடுவது என்று அநாகரிகங்கள் அரங்கேறின.

என்ன செய்வது மன நோயாளிகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் பெரிய பதவிகளில் வேறு இருந்து விடுகின்றனர்.

தினமணி ஆசிரியர் அய்யா வைத்தியநாதன் அவர்கள் ஒரு தலையங்கத்தில் எழுதியிருக்கின்றார். இஸ்லாமிய நண்பர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக. இன்னொரு கேள்வியயும் வைக்கின்றார். அமெரிக்க விமான நிலையங்களிலே நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களையும் நடிகர் ஷாருக்கான் அவர்களையும் அவமானப் படுத்திய போது இஸ்லாமியர்கள் ஏன் போராடவில்லை.

இன்றைக்கு தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் காப்பாற்றுகின்ற தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற தமிழ்ப் பெரும் புலவர் வைத்தியநாதன் அப்துல் கலாம் அவர்களைத்தான் அந்த விழாவிற்குத்  தலைமை தாங்க அழைத்திருந்தார்.

அவரிடம் இஸ்லாம் குறித்துக் கேட்டிருந்தால் அவர் வைத்தியநாதனுக்கு விளக்கம் அளித்திருந்திருப்பார். நபி பெருமானாரை ஒரு மன நோயாளி அவமானப் படுத்தியிருக்கின்றான். அந்த அநாகரிகமும் விமான நிலையச் ச்ம்பவங்களும் ஒன்றா.

நபி பெருமானாரை இறைத் தூதரை  பண்பாடற்ற முறையில் ஆபாசமாகச் சித்தரிப்பது எங்கே அந்த மிக மிக இழிந்த செயலை எதிர்த்துப் போராடுகின்ற இஸ்லாமிய சகோதரர்களை அப்துல் கலாமையும் ஷாருக்கானையும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தவறாகச் சோதனை செய்த போது ஏன் போராடவில்லை  என்று  எழுதியிருக்கின்றாரே. அது முறையா.

நான் குரான் முழுவதும் படித்திருக்கின்றேன். இறைவனை முழுமையாக நம்புகின்றவர்கள் இஸ்லாமியச் சகோதரர்கள். நாளை சந்திப்போம் என்றாலும் இன்ஷா அல்லாஹ் என்பர். அதன் பொருள் இறைவன் அனுமதித்தால் என்பது. ஆமாம் இரவே இறைவன் முடிவுகள் வேறு மாதிரி இருப்பின்.

ஏன் வைத்தியநாதன் இப்படி பண்பாடில்லாமல் பிற மதத்தவரைப் புண்படுத்தியிருக்கின்றார் என்பது புரியவில்லை.

அவரவர் தமதமறிவறி வகை வகை
அவரவர் இறையவர் என் அடி அணைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றாரே

என்றருளிச் செய்கின்றார் நம்மாழ்வார்.

தமிழைக் காக்கப் பெரும் பங்கெடுத்து உழைக்கின்ற வைத்தியநாதனுக்கு எப்படியும் ஆழ்வார்கள் பாசுரங்கள் அத்து படியாயிருக்கும். ஏன்  இந்த நம்மாழ்வார் பாசுரத்தை மறந்தார். வியப்பாக் இருக்கின்றது.

நாம் எல்லோரும் பாரதியைப் போற்றுவதை விட வைத்தியநாதன் பாரதியைப் போற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றார்.

அந்த மகாகவி எழுதுகின்றான் தனது கட்டுரைகளில் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் ஸல்லல்லாஹி அலைஹி வ்ஸ்ஸலம் என்கின்ற ந்பி பெருமானார் இறைத் தூதர் அறிமுகப் படுத்திய இஸ்லாம் மார்க்கமே  பெரிய மார்க்கமாகத் திகழும் என்று எழுதியிருக்கின்றார். பார்தியைத் தலை கீழாகப் படித்திருக்கின்ற பயின்றிருக்கின்ற வைத்தியநாதன் எப்படி இதனை மறந்தார்.

Thursday, September 20, 2012

பச்சிலை

பிள்ளையார் ஒன்றே முக்கால் ஜாண் உயரத்தில் களிமண்ணிலே செய்து வணங்கி விட்டு நீர் நிலைகளிலே கரைத்து விடுவதுதான் நமது முன்னோர்கள்
செய்த இறைவன் அருளிச் செய்த இயற்கையை பாழ்படுத்தத முறை.

இத்தனை உயரமான மாசு தரும் வண்ணப் பூச்சுகளோடு  பிள்ளையார் கிரேனிலே ஏற்றி கடலில் தூக்கி வீசப் படுகின்றார்.

பிள்ளையாருக்கு ரூபாய் நோட்டு மாலை. புரியவில்லை. எதைத் தான் இறைவனுக்குச் சார்த்துவது என்பது கூட புரியாத வழிபாடுகள்.

பிள்ளையார் மார்வாடிக் கோலத்திலே கிரிக்கெட் வீரராக அய்யோ.

திருமூலர் சொன்னார் யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

Wednesday, September 19, 2012

பிள்ளையார் தினமணி குமுதம்

பெரியவர்களே வாழ்க தமிழுடன். இரண்டு காது மடல்களையும் நன்கு இழுத்து விட்டால் புத்திக் கூர்மையாக வேலை செய்யும் ஜெர்மன் கண்டு பிடிப்பாளர்கள் சொல்லியுள்ளார்கள். இதனைத் தான் நமது பெரியவர்கள் பிள்ளையார் முன்னர் தோப்புக் கரணம்  போடச் சொன்னார்கள்.புத்தியும்
வேலை செய்யும். கால்களுக்கும் பலம் கிடைக்கும். இது ஒரு செய்தி.


பல நண்பர்கள் என்னிடம் ஏன் தினமணியில் கட்டுரைகள் எழுதவில்லை எனக் கேட்கின்றனர். ஏன் இவர்கள் இந்த வினாவினை தினமணி ஆசிரியர் திருமிகு அய்யா வைத்தியநாதன் அவர்களிடம் கேட்கக் கூடாது.

நானாக யாரிடமும் போனதில்லை. கேட்டதுமில்லை.

எனது அன்பு மிக்க பிள்ளை நெய்வேலி பொறியாளர் வாணனும் கல்லூரி முதல்வர் மருதூராரும் துரைக்கண்ணுவும் கவிஞர் இராமசாமியும் அழைத்து நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்த போது தினமணி ஆசிரியர் அய்யா வைத்தியநாதன் அவர்கள் என்னைச் சந்தித்தார். அங்கே தான் அவர் என்னிடம் தினமணியில் எழுதுங்களேன் என்றார். எழுதத் தொடங்கினேன்.நிறையவே எழுதினேன். படித்தவுடன் உடன் என்னிடம் பேசுபவர்கள் பல பேர்.

மரியாதைக்குரிய அய்யா வைத்தியநாதன் அவர்கள் என்னை அண்ணா என்றே அழைப்பார்கள். தினமணியிலேயே கலாரசிகன் என்ற பெயரில் அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் எழுதுகின்ற கட்டுரைகளில் எனது விருந்தோம்பலைப் பற்றியும் எனது அறிவினைப் பற்றியும் திருநெல்வேலிக்கு வந்தால் நெல்லையப்பரைக் கூடப் பார்க்காமல் வந்து விடுவேன். நெல்லைக் கண்ணன் அவர்களைப் பார்க்காமல் வர மாட்டேன் என்றெல்லாம் எழுதினார். இருட்டுக் கடை அல்வா கிடைக்கவில்லை என்றால் கவலை கொள்ள வேண்டாம் தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்கள் வீட்டில் போய் வாங்கிக் கொள்ளலாம் என்றெல்லாம் எழுதினார்.

திருநெல்வேலியில் நடந்த அவர் புத்தக விழாவிலும் என்னை பங்கு கொள்ளச் செய்தார்.

ஒரு கால கட்டத்தில் நான் எழுதிய எந்தக் கட்டுரைகளையும் வெளியிடவில்லை. நீங்கள் இனிமேல் எனக்கு எந்தக் கட்டுரையையும் அனுப்பாதீர்கள் என்றும் உணர்த்தினார் நன்றியுடன் நிறுத்திக் கொண்டேன்.

இப்போதெல்லாம் அவர் நெல்லையப்பரை மட்டுமே பார்த்துச் செல்கின்றார்.


இன்னொரு வார இதழின் ஆசிரியர். எங்கள் மாவட்டத்துக்காரர் இளைஞர் என்னிடம் அன்பு காட்டிய தலைவர் கோசல்ராம் பெயரைக் கொண்டவர். மிக அன்பானவர். குமுதத்தில் என்னை எழுத அழைப்பவர்.அவர் என்னை தொலைபேசியில் அழைப்பார். நான் அழைக்கும் போதெல்லாம் உடன் பேசுவார். இப்போதெல்லாம் நான் எத்தனை முறை அழைத்தாலும் பேசுவதில்லை. நான் ஒரு தவறும் செய்யவில்லை.

நான் மிகவும் போற்றுகின்ற இசைக் கடவுள் இளையராஜாவின் புத்தகங்களின் அறிமுக  விழா மதுரையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடை பெற்ற பொழுது என்னைக் கட்டாயம் கலந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார். கலந்து கொண்டேன்.

அந்த விழாவின் புகைப் படங்களையும் ஒளிப் பதிவு நாடாவையும் அனுப்பித் தருவேன் என்று உறுதி அளித்தார். அனுப்பவே இல்லை. அதனாலே நான் தொலைபேசியில் அழைத்தாலும் என்னிடம் பேசுவதேயில்லை. என்ன செய்ய அவர் ஒரு பெரிய வார இதழின் ஆசிரியர். நான் வெறும் நெல்லைக் கண்ணன் தானே.


Monday, September 17, 2012

பாராட்டுங்கள்

மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே எல்லாவற்றையும் மறந்து விடுவோம் என்று சொல்கின்றார்.

என்ன திமிர்

 பாரதியின் வீட்டை சிதிலமடைய விட்டு விட்டோம்.தமிழ்த் தாத்தா உ.வே.சா. வீடு சிதிலமடைந்து வருகின்றது.
அவர்களையெல்லாம் நாம் மறந்தா விட்டோம். இல்லை.

36 குழந்தைகள் தீயிலே கும்பகோணத்திலே கருகிய போது எத்தனை பேர் எத்தனை வாக்குறுதிகள் தந்தார்கள். அங்கே போய் புகைப்படங்களிலே அழுதார்கள்.அவர்கள் எத்தனை பேர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள். யார் கேட்டார்கள்.

நீச்சல் குளத்தில் மாணவன் இறந்து போனான் பத்மா சேஷாத்ரி பள்ளியில். அந்தப் பள்ளியின் தாளாளர் கைது செய்யப் படவில்லையே. ஏன் என்று எத்தனை பேர் கேட்டார்கள்.

பேருந்தில் ஒட்டை இருந்த பள்ளித் தாளாளர் கைது செய்யப் பட்டாற் போல
இவரும் கைது செய்யப் படவில்லையே. ஏன்.

எங்கே துப்பாக்கிச் சூடு நடந்தாலும் நீதி விசாரணை கேட்பார்கள். அதன் பின்னர் எத்தனை பேர் அது குறித்து நினைவில் வைத்திருப்பார்கள்.

மின் கட்டண உயர்வு பேருந்து கட்டண உயர்வு என்றெல்லாம் புலம்பினார்களே. இன்று என்ன நிலைமை.

மறதி மன்னர்கள் இந்தியர்கள் என்பதனை நன்கு உணர்ந்ததனால் தானே அவர் வெற்றியும் பெற்றிருக்கின்றார். அமைச்சரும் ஆகியிருக்கின்றார்.

ஒன்றும் இல்லை. நமத் தமிழ்நாட்டில் மாறி மாறி ஏற்படும் கூட்டணிகள்.அதன் தலைவர்கள் ஒவ்வொரு நேரத்தில் பேசுகின்ற பேச்சுகள் எழுதிய எழுத்துகளையெல்லாம் நினைவிலா தலைவர்கள் வைத்திருக்கின்றார்கள். நாமும்  வைத்திருக்கின்றோம்.

அது போல மறந்து விடுவது தான் நமக்கு நல்லது.

காந்தி காமராஜர் கக்கன் சாஸ்திரி நேரு வ்ல்லபாய் அபுல் கலாம் ஆசாத் கான் அப்துல் கபார்கான். இவர்களையெல்லாம் நாம் மறந்து விடுவதில்லையா.அதனால்தானே இவர்களெல்லாம் அமைச்சர்களாகி இருக்கின்றார்கள்.

ரெட்டி சகோதரர்கள் ஊழலுக்கு துணை போன எடியுரப்பாவை ஒன்றும் செய்ய முடியாத பா.ஜ.க. இதைச் சொல்வது தான் மோசடி.

இத்தனைக் கொசுவர்த்தி சுருள்கள் விற்கின்ற இந்த நாட்டில் மத்தியிலும் மாநிலத்திலும் சுகாதரத் துறை அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள்
எல்லாவற்றையும் மறந்தவர்களாக இருப்பதினால் தானே அமைச்சர்களாக
இருக்க முடிகின்றது.

நீரா ராடியாவை நினைவு இருக்கின்றதா யாருக்காவது.

விடுங்கள். ஒரு அமைச்சர் உண்மை பேசுகின்றார். அவரைப் பராட்டுவதை விட்டு விட்டு .
 
Saturday, September 15, 2012

சோனியா மன்மோகன் சிங்

வெளி
நாட்டுப்
பொருட்கள்
வேண்டாம்
என்றார்
அந்தக்
காந்தி

வெளி
நாட்டையே
உள்ளே
கொண்டு
வருகின்றார்
சோனியா காந்தி


நாட்டிற்காக
தூக்கு மேடை
ஏறினான்
பகத்சிங்

நாட்டையே
தூக்கு மேடை
ஏற்றுகின்றார்
மன்மோகன் சிங்

விருதுகளும் பரிசுகளும்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சிறப்பாகவே நடத்தப் படுகிறது. ஒழுங்காக முறையாக நடத்தப் படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

போன முறையே எல்லோரும் எதிர்பார்த்த சத்ய பிரகாஷை விட்டு விட்டு யாருமே எதிர் பார்க்காத சாய் சரணைத் தேர்ந்தெடுத்தனர்.

இப்போதும் அதே போக்கில்தான் போகிறது அந்த நிகழ்ச்சி.

கவுதம் என்று ஒரு 13 வயது சிறுவன் .கர்ணன் படத்தின் உச்சக் காட்சியின் பாடலை உள்ளத்தில் நல்ல உள்ளம்  என்ற பாடலைப் பாடுகின்றான்.

உலகம் போற்றி நிற்கின்ற அருணா சாயிராம்  சுதா ரகுநாதன் பாம்பே சகோதரிகள் உண்ணி கிருஷ்ணன் பாரதியாரின் கொள்ளுப் பேரன் அனைவரும் கண்களில் நீர் மல்க அவனைப் பாராட்டினார்கள். வீணை அரக்கன் ராஜேஷ் வைத்யா அவனைத் தூக்கிக் கொஞ்சினார். கடம் மேதை விநாயகராம் மகன்  அவனைக் கட்டித் தழுவினார். வயலின் வித்வான். எத்தனையோ கச்சேரிகளுக்கு வாசித்திருக்கின்றேன். என்னை இவன் அழ வைத்து விட்டான் என்றார். டிரம்ஸ் வாசித்தவர். ஒத்திகையிலேயே இவன்  எங்களை அழ வைத்து விடுவான் என்று முடிவெடுத்து விட்டோம் என்றார்.
சுதா ரகுநாதன் அவன் க்ண்ணீரைத் துடைத்து விட்டார். உண்ணி அவனைக் கட்டித் தழுவிக்கொண்டார்.

பாம்பே சகோதரிகள் சொன்னார்கள். கவுதம் உன்னை என்ன சொல்ல. எங்களுக்கு அழுகைதான் வரது என்றார்கள். சுதா பாராட்ட முடியாமல் அவனைப் பார்த்து நீ சொத்து என்றார். வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இதயமும் இதயமும் சந்திப்பது தான் சங்கீதம் க்வுதம் நீ இந்த 13 வயசிலே அந்த உணர்வை உன் பாடலிலே கொண்டு வந்தாய். நீ இதற்கும் மேலே என்று இறைவனின் சிறந்த படைப்பு அந்தச் சிறுவன் என்பதைச் சொன்னார். உண்ணியும் அதே கருத்தைச் சொன்னார். அவர்களாகவே எழுந்து வந்து அந்தச் சிறுவனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

அதே கவுதம். பின்னர் பாடும்போது மால்குடி சுபா அவனைப் பர்த்து நீ நாட்டுப் புறப் பாடல்கள் பாடுறவன். ஆனாலும் இந்தப் பாட்டைப் பரவாயில்லை பாடிட்டே என்கின்றார். இவர் ஒன்றும் சங்கீதத்தில் சாதித்தவரில்லை. இவரும் திரைப்படங்களில் குத்துப் பாட்டுப் பாடுகின்றவர்தான்.

அவன் கிராமத்துக் காரன். அதனால் அவனுக்குச் சங்கீதம் வராது என்று கருதுகின்றார் போலும். தம்பி மனோவும் அதனை ஆதரித்துப் பேசிய போது அதிர்ந்து போனேன். அருணா அம்மையாரை விட சகோதரி சுதாவை விட பாம்பே சகோதரிகளை விட உண்ணியை விட இவர்கள் சங்கீதத்தில் பெரியவர்கள். அங்கே பிரகதி என்கின்ற அமெரிக்க் குடிமகள் நன்றாகவே பாடுகின்றார். அவர் சரியாகப் பாடாத போதும் மால்குடி அம்மா அப்படியே தேன் குடித்தால் போலப் புகழுகின்றார்.

சுகன்யா என்கின்ற பெண் மிக நன்றாகப் பாடுகின்றாள். அவளுக்கு இரண்டு முறை தங்கப் பரிசு கொடுத்தார்கள். யாழினி என்கின்ற் சின்னப் பெண் மிக நன்றாகப் பாடி முதலில் ஒரு முறை தங்கம் பரிசு பெற்றாள். இரண்டாவது ஒரு முறை நடிகர் விக்ரம் முன்னால் பாடி எல்லோருடைய பாராட்டையும் பெற்றாள். அவளுக்கு இரண்டாவது முறை தர வேண்டிய தங்கப் பரிசை பிரகதிக்குக் கொடுத்தார்கள்.

யாழினி அம்மாவைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவர்கள் கறுப்பர் இனம்.கவுதமும் அப்படித் தான் அதனால்தான் மால்குடி சுபா அம்மாவிற்கு அவர்களைப் பிடிக்கவில்லை.எப்படியும் பிரகதிக்கு அந்த முதல் இடத்தைத் தருவதற்கு முயற்சி நடக்கிறாற் போல் தெரிகின்றது.சுகன்யாவிற்குத் தர முடியாது.அவர் மலையாள நாட்டைச் சார்ந்தவர் போல.வைகோ அண்ணன் நெடுமாறன் போன்றவர்கள் கோபப் படக் கூடும்.

அவர்கள் பரிசு அவர்கள் தருகின்றார்கள். நாம் என்ன கேட்க முடியும்.இதில் இன்னொரு கொடுமை இந்த நிகழ்ச்சியை  இயக்குபவர்களைக் கேட்டால் சங்கீதத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இருக்காது.

என் அனுபவம் அதுவேதான்.

வழங்கப் படுகின்ற விருதுகள் போய் வாங்கப் படுகின்ற விருதுகள் ஆகி விட்ட நாட்டில் இதற்கு வருத்தப் பட்டு என்ன செய்ய.

திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதிற்கு மாவட்டக் கல்வி அலுவலகம் தேர்ந்து அனுப்பிய பெயர்கள் வேறு. அறிவிக்கப் பட்ட பெயர்கள் வேறு. என்ன செய்ய. எல்லாவற்றிலும்  சாதி மதம்.

Friday, September 14, 2012

ஒன்றும் புரியவில்லை

அணு மின் நிலையத்தை எதிர்த்து நடை பெறும் போராட்டங்களை ஆதரித்து கிறிஸ்தவத் தந்தைகளும் போராட்டத்தில் ஈடுபடுவது ஏன் என புரியவில்லை. உலக முழுவதும் இருக்கின்ற அணு உலைகளை எதிர்த்து அந்த அந்த நாடுகளில் இருக்கின்ற கிறிஸ்தவத் தந்தைகள் போராடுவதாகத் தெரியவில்லை. ஆனால் இங்கு மட்டும் போராடுகின்றார்கள். அமெரிக்காவில் இருக்கின்ற கிறிஸ்தவத் தந்தைகள் அங்கு போராடவில்லை. இங்கிலாந்தில் போராடவில்லை. நண்பர் உதயகுமார் அவரது அமெரிக்கக் குடியுரிமையை ஏன்  இன்னும் திருப்பித் தராமல் இருக்கின்றார். பதில் இல்லை.

குமுதம் வார இதழின் வழக்கில் எஸ்.ஏ.பி யின் மகன் டாக்டர் ஜவஹர் பழ்னியப்பனுக்கு எதிரான வழக்கில்  பார்த்தசாரதியின் மகன் வரதராஜன் அவர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர் ஆகவே அவருக்கு இங்கே நடக்கும் பத்திரிக்கையில் உரிமை இருக்க்க் கூடாது என்று வாதிடுகின்றார் என்றால். வெளி நாட்டுக் குடிமகனாக இருக்கும் நண்ப உதய குமாருக்கும் அது பொருந்தும் தானே. என்ன புரிகின்றது ஒன்றும் புரியவில்லை.


Thursday, September 13, 2012

எல்லாம் அரசியல்

அணு மின் நிலையத்தால் ஆபத்து. உதயகுமார் தலை மறைவு. துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் குடும்பத்தினர்க்கு வை.கோ. ஆறுதல். சரண்டைந்து விடாதீர்கள். தலைமறைவாகவே இருங்கள் கேஜ்ரிவால் வேண்டுகோள்.

விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளால்தான் இயற்கையை இழந்து நிற்கின்றோம். மழை இல்லை. பருவங்கள். பொய்க்கின்றன. நான் ஒரு கவிதையில் சொல்லியிருந்தேன்

                        ஒசோன்
                        படல
                        ஒட்டை குறித்து
                        அறிஞர்கள்
                        கூட்டம்
                        ஏ.சி. அறையில்

இதுதான் நடக்கின்றது. அரசியல் அரசியல் எல்லாவற்றிலும் அரசியல்.

சுற்றுப்புறச் சூழல் மாசு பட்டிருப்பது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற
இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களால்.உள்ளாடை தயாரிப்பில் சிறந்து விளங்கும் திருப்பூர் சாயக் கழிவுகளால் தான் அப்பகுதியில் இயற்கை அளித்துள்ள ஆறுகள் அனைத்தும் குடி நீருக்கும் பயன் படுவதில்லை. வேளாண்மைக்கும் பயன் படுவதில்லை.

எந்த ஆலையானாலும் அந்தப் பகுதி மக்களின் உடல் நலத்தைப் பாதிப்ப்து தான்.

மறந்து விடாதீர்கள். அது குறித்து எந்த வருத்தமும் வை.கோ.அவர்களுக்கும் இல்லை அண்ணன் நெடுமாற்னுக்கும் இல்லை. தோழர் நல்லகண்ணுக்கும் இல்லை.

சென்னை மாநகரப் பெருக்கத்தில் சுற்றியுள்ள பல வேளாண் கிராமங்கள் அழிக்கப் பட்டனவே அது குறிதது இவர்கள் போராட்டங்கள் நடத்தவில்லை.

விளை நிலங்களும் ஏரிகளும் குளங்களும் கால்வாய்களும் கல்வி நிலையங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப் பட்ட போது இவர்கள் போராடவில்லை.

கோகோ கோலா நிறுவனம் நம் ஆறுகளில் இருந்துதான் தண்ணீர் எடுத்து விற்கின்றன. யாரும் அதனை தடுக்கவில்லை.

எல்லாவற்றிற்கு மின்சாரம் என்று இயற்கையாக வாழ்வதிலிருந்து மக்களை
மாற்றியாகி விட்டது.

மின் தட்டுப் பாடு என்றால் உடன் கருணாநிதி ஆண்டாலும் ஜெயலலிதா ஆண்டாலும் இவர்கள் தான் கண்டன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றனர்.
மின்சாரத்தை மரத்திலிருந்து பறிக்க முடியாது என்று இவர்களுக்குத் தெரியும்

பழைய காலம் போல இயற்கையோடு இயைந்து வாழவது என்று முடிவெத்தால் தான் இந்த் துன்பங்களிலிருந்து மீள முடியும். எல்லா விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளையும்  தூக்கி எறிய. இந்தத் தலைவர்கள் முன் வருவார்களா.

மின் கசிவால் வேறு அரசாங்கத்தின் முக்கியமான கோப்புக்களெல்லாம் எரிந்து போய் விடுகின்றன. ஆகவே மின்சாரம் பல அரசியல் வாதிகளைக் காப்பாற்றி விடுகின்றது.

நாம் மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு மக்களை மாற்றியே தீர வேண்டும்.

நாம் உண்ணுகின்ற உணவுப் பொருட்கள் நமக்கு நன்மை செய்பவையா. எல்லாம் மின்சாரம் வந்த பிறகு மோசம்தான்.நமது பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையை எடுக்கின்றார்களே ஒழிய பெறுவதில்லை.காரணம் முடிவதில்லை. ஆட்டுரல் அம்மி எல்லாம் அவர்களுக்கு இடுப்பைப் பலப் படுத்தின .பெற்றுக் கொண்டார்கள்.இன்று.
விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் அவர்களை எந்த வேலையும் செய்ய விடாமல் தவிர்த்து விடுகின்றன. பிறகு உடல் குறைக்க மருந்துகள். உடற் பயிற்சிக் கூடங்கள்.

இயற்கையாக வாழ்வோம். எல்லா விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளையும் புறக்கணிப்போம்
ஆலைகளை யெல்லாம் மூடுவோம். உடனே இந்தத் தலைவர்கள்தாம் ஆகா எத்தனை பேர் வேலை வாய்ப்புப் பறி போகின்றது கூக்கூரல் இடுவார்கள்.

ஆட்டோவில் பள்ளிக் குழந்தகளை அதிக அளவு ஏற்றிச் செல்வதில் விபத்துகள் ஏற்படும் நேரம் கொடுமையாக ஆகின்றது என்று கட்டுப் படுத்தினால் ஆட்டோ தொழிலாளி வயற்றில் அடிக்காதே என்று இவர்களே தான் கோஷம் போடுகின்றனர்.

வேளாண் தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. பீடி சுற்றுவதில் வருமானம் அதிகம். பீடி சுற்றுகின்ற பெண்களுக்கே காச நோய் வருகின்றது. குடிப்பவனுக்கும் கேடு செய்கின்றது. வேளாண் தொழில் ஆரோக்கியம் தரும்.

எல்லா விளை நிலங்களும் பல மாடிக் கட்டிடங்களாகின்றன. இந்தத் தலைவர்கள் அதற்காகப் போராடுகின்றனரா. இல்லை

கிரானைட் கற்கள் விஷயத்தில் இத்தனை பெரிய திருட்டுத் தனங்கள் நடந்திருக்கின்றன.இந்தத் தலைவர்கள் அது குறித்துப் பேசவேயில்லையே.
ஏன்.

நான் ஒரு கவிதையில் சொல்லியிருந்தேன்

உர
விலையைக் குறை
கூலியை
உயர்த்திக்
கொடு
நெல்லின்
விலையை
உயர்த்து

அரிசி
விலையை
உயர்த்தாதே

எல்லாம் அரசியல் வேறொன்றுமில்லை.

Monday, September 3, 2012

பெணகளை பேணுங்கள்

ஒரு பெண் பலரைத் திருமணம் செய்து ஏமாற்றியிருக்கின்றார் என்று கைது செய்யப் பட்டிருக்கின்றார்.

ஒரு பெண் தான் ஒரு ஆணோடு கொண்டிருந்த உறவை பார்த்ததாக சிறுவனைக் கொலை செய்திருக்கின்றார்.

ஒரு பெண் சொந்த மகனையே தனது ஆண் ந்ண்பனின் உறவுக்காகக் கொலை செய்திருக்கின்றாள்.


நமது ஊடகங்கள் உடனே இது குறித்துப் பரபரப்பாகச் செய்திகள் வெளியிடுகின்றன.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளனர். தாயைத் தண்ணீர்க் கரையிலே பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டம் என்பார்கள்.

தொலைபேசியில் ஒரு பெண் அழைத்த உடன் அவள் அழகாயிருக்கின்றாள்
என்ற உடன் அவளுக்கு கேட்ட பணம் எல்லாம் தந்து அவளைத் திருமணம் செய்து கொண்ட இந்த ஆண்களை என்ன செய்வது.

பெரியவர்களுக்குத் தெரியாமல் செய்தால் கூட நண்பர்கள் இருப்பார்கள் தானே .அவர்கள் மூலமாக விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கலாம் தானே.
அழகான் பெண் என்றவுடன் நண்பர்கள் பார்த்து விடக் கூடாது என்ற எண்ணம் தானே காரணம்.

பழகியவுடன் பணம் கேட்கின்றாளே என்ற எண்ணம் கூட எல்லாமல் பணம் தந்திருக்கின்றார்களே. இங்கே காதல் எங்கே வருகின்றது. உடல் வெறும் உடல். முதலிலேயே உறவிற்கு சம்மதிக்கின்றாளே என்று கூட யோசனையில்லையே. உடலை விரும்பியவர்கள் தானே இவர்கள். அருள் கூர்ந்து இதைக் காதல் என்று சொலாதீர்கள்.

அண்ணி தன் கொழுந்தனைச் சிறுவனைக் கொல்லுகின்றாள்.தாய் மகனைக் கொல்ல முயலுகின்றாள்.

இங்கேயும் உடல் பெண்ணிற்கு இருக்கின்றது. அதற்கான உணர்வுகள் எப்படிப்
பட்டவை அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டிய ஆண்கள் தங்களுக்குப் பயன்பட மட்டும் தான் பெண்ணின் உடல் என்று கருதுவதனால்
வரும் கேடு தானே.அந்தப் பெண்ணின் உடலுக்குத் தேவையான உதவிகளை
முறையாகச் செய்வது ஆணின் கடமை என்பதனை மற்ப்பதனாலும் மறைப்ப
தனாலும் விளைகின்ற கொடுமைதானே

இவர்கள் நல்ல காதலை(காமத்தை) அவர்களுக்குத் தராத போதும் இவர்கள்
அது குறித்த சிந்தனையே இல்லாமல் இருக்கின்ற போதும் .சில நேரம் இவர்களால் இயலாத போதும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் தருபவனிடம் சரியாக அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவனோடு அவள் போனால் அதை கள்ளக் காதல் என்கின்றீர்கள். தன்னைப் புரிந்து கொள்ளாமல் இந்தச்
சமூகம்  அவதூறு பரப்பும் என்கின்ற  அச்ச உணர்வு பார்த்து விட்ட குழந்தையைக் கொல்லும் அளவிற்கு அவர்களைத் தள்ளி விடுகின்றது என்று
எந்த ஆடவனாவது உணர்கின்றானா.அவளைப் பொறுத்த வரையில் நாம் சொல்லுகின்ற கள்ளக் காதலன் தானே நல்ல காதல் தந்தான்.

பாரதி சொல்லுவான்

பேணுமொரு ஆண் மகனின் காதலினை வேண் டியன்றோ
பெண் மக்கள் கற்பு நிலை பிறழுகின்றார் என்று.

நம்மைப் பேணுகின்ற பெண்ணை நாம் பேண வேண்டாமா.

Friday, August 31, 2012

குழந்தைகளை வாழ விடுங்கள்


பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர்.காரணம் ஆசிரியர்களின் கடும்  நடவடிக்கைகள். பள்ளியின் அடக்குமுறை நடவடிக்கைகள்.

காரணம் யார்.நெல்லை மொழியிலே சொன்னால் சீமையில இல்லாத் படிப்பு.
ஆயிரக் கணக்கிலே செலவழித்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர். வெளிநாடுகளுக்கு சேவை செய்ய இங்கே அவர்களைத் தயார் செய்கின்றனர்.

பிள்ளைகள் உறங்க வேண்டிய வயதிலே உறங்க அனுமதிக்கப் படுகின்றனரா.
நன்கு உணவருந்துகின்றார்களா. நல்ல உணவருந்துகின்றார்களா. ஒடியாடி
விளையாடுகின்றனரா. அவர்கள் வயதுக்குரிய கல்வியைக் கற்கின்றார்களா.

காலையிலே ஐந்து மணிக்கு எழுப்பப் பட்டு ஏழு மணிக்கு பள்ளி வாகனங்களுக்காக தூங்கு மூஞ்சியாய் காத்து நிற்கின்ற குழந்தைகளைப் பார்க்கையில் இந்தப் பெற்றோர்களை என்ன செய்யலாம் என்று தோன்றுகின்றது.

எப்படியாவது மதிப்பெண் பெற வேண்டும் என்பது பெற்றோர்களின் ஆசை.
ஆயிரக் கணக்கில் வாங்கிய பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்குக் கட்டளை
யிடுகின்றது. எப்படியாவது படிக்க வையுங்கள் என்று. கண்டிப்பு என்கின்ற
பெயரில் மனித உரிமை மீறல்கள். தற்கொலைகள் தொடரத் தானே செய்யும்.

விடுமுறை என்பது குழந்தைகள் மனிதர்களைப் பார்க்க பறவைகளைப் பார்க்க
நீர் நிலைகளை அருவியைக் கடலை குளத்தை ஏரியைப் பார்க்க ஆறுகளைப்
பார்க்க. அனுமதி உண்டா.

விடுமுறை தினங்கள் அடுத்த வகுப்பிற்கு தயார் செய்யப் படுகின்றனர்.
உங்களுக்கு எல்லாச் சாபங்களையும் நான் தருகின்றேன்.

மதிப்புக்குரியவனாகவோ மதிப்புக்குரியவளாகவோ பிள்ளைகள் வளர
வேண்டும் என எந்தப் பெற்றோர் கருதுகின்றனர்.

மனிதப் பண்புகளோடு வளர வேண்டும் என எத்தனைப் பெற்றோர் கருதுகின்றனர். அடக்குமுறை   ஆசை வெறி மண்டையில் எல்லாவற்றை
யும் திணித்து விடச் செய்யும் கொலை வெறி.

பெற்றோர்கள் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் அரசு அனைவரும் குழந்தைகளின் கொடிய சாபத்திற்காளாகின்றீர்கள்.

கொடுமையான வழி முறைகளிலே கற்பிக்கப் பட்டு பல்லாயிரக் கண்க்கிலே சம்பாதித்து திருமணம் செய்தால் வாழ்கின்றார்க்ளா சிலரைத் த்விர.

குழந்தைகள் உங்களுக்குப் பிறந்த தனாலேயே அவர்களைக் கொடுமைப் படுத்துகின்றீர்களே.

அவர்களை மனிதர்கள் என்று உணருங்கள்.

அதை உணராததனால்தான் மொத்தமாகவே இழந்து விடுகின்றீர்கள்.
பள்ளிகளை ஆசிரியர்களைக் குறை சொல்லாதீர்கள்.

மாநகராட்சிப் பள்ளிகளிலே படிக்கின்ற குழந்தைகளில் பலர் மிகப் பெரிய
வெற்றியினைப் பெறுகின்றனர். பெரிய பொறுப்புக்ளுக்கு வருகின்றனர்.

குழந்தைகளாக வாழ விடுங்கள். கொல்லாதீர்கள்.

Monday, August 27, 2012

பெண்கள் முடிவெடுப்பார்களா

எங்கு பார்க்கினும் ஊழல் பேச்சுக்கள். சுரங்கம் கிரானைட்.தொலை பேசித் துறை. நிலக்கரி என்று.

கணவனின் மீது விழுந்து விட்ட பழியைத் துடைப்பதற்காக ஒரு அரசனை உயிர் துறக்கச் செய்தாள் கண்ணகி.

இன்று நமது பெண்களில் எத்தனை பேர் வருமானத்திற்கு அதிகமாக ஊதியத்திற்கு அதிகமாக தனது வாழ்க்கைத் துணை பணமோ பொருளோ கொண்டு வரும் போது இது ஏது. எப்படி உங்களிடம் இத்தனைப் பணம் வந்தது என்று கேள்வி எழுப்புகின்றனரா.. இது எத்தனைப் பேருடைய வயிற்றெரிச்ச்லைக் கொட்டிக் கொண்டு வந்திருக்கும். எத்தனை பேரின் உழைப்பு வஞகமாகக் கொள்ளையிடப் பட்டிருக்கும். இதனை நான் வாங்கி இந்தக் குடும்பத்திற்கு செலவழிப்பேன் என்றால் அது என் குழந்தைகளையும் அவர்கள் எதிர்காலத்தையும் பாதிக்கும். நீங்கள் பிடி படுகின்ற போது நானும் என் குழந்தைகளும் எந்த முகத்தோடு இந்த மக்கள் மத்தியில் நடப்போம் என்று கேட்கின்றனர்.

இந்தப் பணத்தை நான் வாங்கி ஆடம்பர வாழ்க்கை நடத்தினால் வயிற்றுப் பாட்டிற்காகவும் பெருந்தனவந்தர்களால் விபச்சாரத்தில் தள்ளப் பட்ட பெண்களைப் போல் அல்ல விரும்பியே விபச்சாரத்தால் ஈடுபடும் பெண்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்று ஆடவர்களைக் கேட்டு அவர்களோடு வாழ மறுத்தார்கள் என்றால் ஊழல் வெல்லுமா.

வாழ்க்கைத் துணை நலம் என்று வள்ளுவன் போற்றிய பெண்கள் முடிவெடுப்பார்களா?

Thursday, August 16, 2012

காந்தியும்

ஏற்றினர்
கொடிகள்

இனிப்புகள்
வழங்கினர்

காந்தியை
நினைத்து
கண்களும்
கலங்கினர்

காந்தியும்
கலங்கினார்
மேலேயிருந்துமழை

மரங்கள்
வெட்டி
மலைகள்
அழித்து


மழைக்காய்
நடக்குது
வருண
ஜெபங்கள்

Wednesday, August 15, 2012

விடுதலை பெற்றோம்

   கைக் குழந்தைகளோடு
   பிச்சை
   எடுத்தவர்கள்
   கைது

   காந்தி
   ராட்டினத்தோடு
   எடுப்பவர்கள்  நமது
  சுதந்திரத்தை
  உறுதி
  செய்தார்
  பிரதமர்
 
  கண்ணாடிக்
  கூண்டுக்குள்
  நின்று காந்தி சமாதியில்
 மலர்

நாடெங்கும்
மதுக்
கடைகள்


Monday, August 13, 2012

எப்போது

தமிழ் நாடு அரசுத் தேர்வாணையத் தேர்வில் வினாத் தாளோடும் விடைத் தாளோடும் ஒரு பெண்தேர்வு எழுத வந்துள்ளார். மீண்டும் படித்தவர்களின் ஈனத் தனம் தானே அதில் நமக்கு புலப் படுகின்றது.

இப்படி வாழ்ந்தால்தான் மனிதப் பிறப்பு என்று உணர்த்திய வள்ளுவரும் நாலடியாரும் இளங்கோவும் கம்பனும் பிறந்த தமிழர் நாட்டில் என்ன கொடுமை.

மலைகளில் தீ பற்றிக் கொண்டேயிருக்கின்றது. ஏழைத் தொழிலாளிகள் தான்
தீ வைக்கின்றனர் என்று அதிகாரிகள் சொல்லுகின்றனர். அதன் பின்னர் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரோ இருக்கின்றார் என்பதனை ஊர் அறிந்திருக்கின்றது. சொல்ல முடியாது.
தவறு செய்கின்றவர்களைக் குறித்து காவல் நிலையத்தில் சொன்னால் காவல் நிலையமே அவர்களுக்குத் தகவல் சொல்லி புகார் கொடுத்தவரைக் கவனிக்கச் சொல்லுகின்ற நாட்டில் எங்கே குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள்.

பிச்சைக் காரர்களிடமே காவலர்கள் கையூட்டு வாங்குவதாக வடிவேல் ஒரு படத்தில் நடிப்பார். நான் கூட மனம் நொந்தேன். ஆனால் அது நெல்லையிலே நடந்த போது  வெட்கித் தலை குனிந்தேன்.

எத்தனை தவறுகள் நடப்பினும் குற்றங்கள் நடப்பினும் நல்லவர்கள் தான் பெரும்பான்மையாக நமது நாட்டில் உள்ளார்கள். அவர்கள் செய்யும் ஒரே தவறு எதையும் கண்டு கொள்ளாமல் வாழ்ந்து விட்டுப் போய் விட வேண்டும் என நினைப்பதுதான்.

90 சதவீதம் மக்கள் நல்லவர்களாக கடவுளுக்கும் மனச் சாட்சிக்கும் பயந்தவர்களாக இருக்கின்றார்களெ ஒழிய் எதையும் எதிர்த்து போராடும் மனம் பெற்றவர்களாக வாழ்ந்து விட்டுப் போய் விடுகின்றார்களே

கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்றான் பாரதி.
எப்போது பொங்கப் போகின்றோம்


Sunday, August 12, 2012

முடிவெடுக்க வேண்டும்

கிரானைட் குவாரிகளின் கொள்ளையைக் கண்டு பிடித்தனாலேயே சகாயம் மாற்றப் பட்டிருக்கின்றார் என்று நாங்கள் சொன்னோம். இன்று அது வெளிச்சமாகியுள்ளது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர் தான் கண்டு பிடித்திருக்கின்றார். எதிர்க்கட்சி ஒன்றும் சொல்லி விடவில்லை. ஏனெனில்
அவர்களுக்குத் தெரியும்.அவர்களுக்கு நெருக்கமாக இருந்த திரைப் படப் பாடலாசிரியரின் நெருங்கிய ந்ண்பர்தான் முதல்வர் இதில். இவர்கள் ஒத்தக்கடை ஆனைமலையை உடைத்து விற்று விட முனைந்தார்கள். இத்தனை பெரிய கொள்ளையை தெரியாமலா இருந்தார்கள் ந்மது அரசு அதிகாரிகள். அவர்களின் உதவியின்றி இது எப்படி ந்டந்திருக்கும். பசிக்குத் திருடுகின்ற ஏழைகளை உடனே கைது செய்து உள்ளே வைத்த இந்த அதிகாரிகள் இதனை எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பணம் பணம் எப்படியாவது பணம் சேர்த்து விட வேண்டும். தலைவர்கள் காட்டுகின்ற வழி அதிகாரிகளிடமும் பொது மக்களிடமும் ஆசையைத் தூண்டி விட்டது. எப்படித் தப்பாகச் சம்பாதித்தாலும் கைது வழக்கு என்று அது நீடிக்கும். பிறகு மக்கள் மறந்து போவார்கள். அந்த சம்பாத்தியத்தோடு இந்த நாட்டிலேயே வாழலாம் கோயிலில் முதல் மரியாதையொடும் சமூகத்தில் அந்தஸ்தோடும்.

அறம் ஈனும் இன்பமும் ஈனும் திறனோடு
தீதின்றி வந்த பொருள்.

இது திருக்குறள் என்பதைக் கூட யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

வள்ளுவருக்குச் சிலைகள் கோட்டம். மேடைகள் தோறும் குறட்பாக்கள்.
இதனை விட வள்ளுவரை எந்த வழியில் அவமானப் படுத்தி விட முடியும்.

இந்தக் கொள்ளையருக்கு இந்த ஆட்சியிலும் ஆட்கள் உண்டு. என்ன செய்ய.

இன்றைக்குப் போய் சோதனைகள் போடும் இந்த அதிகாரிகள் பலர் இதற்குக் காரணம் இவர்களை என்ன் செய்யப் போகின்றது அரசுகள்.

நல்லவராக இருந்தால் சகாயம் மாற்றப் படுகின்றார்.

அதுல் மிஸ்ரா நல்ல வேளை இவரும் ச்காயம் போன்றவரே.

இவர் மதுரை ஆட்சித் தலைவராக வந்த உடனே சிவபெருமானின் அவதாரம் என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற நித்தியானந்தன் இவர் எனது ப்க்தர்
திருவண்ணாமலையில் பல முறை எனது ஆசிரமத்தில் வந்து ஆசி வாங்கிச் செல்வார் என்ற உடனேயே உடனடியாக அதுல் மிஸ்ரா அதனை ம்றுத்தார். ஆனால் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரான் தன்னைப் பற்றியே பொய் சொன்ன அந்த நித்தியானந்தாவின் மீது ந்டவடிக்கை எடுத்து தன் பக்க்த்தைக் காப்பாற்றியிருக்க வேண்டும்  ஏன் செய்ய வில்லை புரியவில்லை.
கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நித்தியானந்தாவிற்காக ஒய்வு பெற்ற உயர் நீதி மன்ற் நீதிபதியே வழக்காடுகின்றார். நீதி உயிர் வாழுமா.

ஒய்வு பெற்ற நீதிபதிகள் வழக்குரைக்க வந்தால் நீதி என்னாகும். அரசுகள் இதைத் தடுக்காதா.

ம்துரை ஆதீனகர்த்தர் உயிர் ஆபத்தில் இருக்கின்றார் என்பதனை பல முறை சொல்லியும் அரசு நடவ்டிக்கை எடுக்க மறுக்கின்றதே என்ன காரணம்
யாருக்குப் புரிகின்றது.

சொக்கநாதரும் அங்கயற்கண்ணி அம்மையும் தான் இதற்கு முடிவெடுக்க வேண்டும்.

Saturday, August 11, 2012

கடவுளையே நம்புவோம்

பேரூந்து ஒட்டையில் குழந்தை ஒருத்தி விழுந்து சீயோன் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் அதற்கு வருத்தம் கொள்ளுகின்றார்.
ஆனால் அவரது மகனின் மரணத்திற்காக அவர் படித்த கல்விக் கூடத்தின் மீது அவர் வழக்குப் போட்டிருக்கின்றார்.

எல்லாப் பள்ளிப் பேருந்துகளையும் உடனே அதிகாரிகள் சோதனையிடத் தொடங்கி விட்டார்கள். அவர்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஏற்கனவெ இவர்கள் பரிசோதித்து அனுமதி வழங்கிய பேரூந்துகள் அவை என்பதனைக் கூட மக்கள் ம்றந்திருப்பார்கள் என்கின்ற ஈனத்தனம்.

எல்லா ஊடகங்களும் இன்னும் ஒரிரு நாள் இது குறித்து எழுதக் கூடும். அதன்பின்னர் அவர்களுக்கு வேறு பணிகள் வந்து விடும். இதுவும் கும்பகோணம் தீ விபத்தைப் போல கிடப்பில் போடப் படும்.இன்று உச்சநீதி மன்றம் உத்தரவிடுகின்றது 6 மாத காலத்திற்குள் கும்பகோணம் தீ விபத்து வழக்கில் தீர்ப்பு வழங்கச் சொல்லி.

இதே தான் இந்தப் பேருந்து வழக்கிலும் ந்டை பெறப் போகின்றது.

படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் அய்யோன்னு போவான் என்று பாரதி சொன்னான்.

எந்த அதிகாரியோ அரசு ஊழியரோ தவறு செய்தால் கேட்க முடியாது. உடனே அவர் எங்கள் ஜாதி அவர் மீது பழி போட அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு கூக்குரல் சுவரொட்டிகள். எங்கள் ஜாதியில் இப்படி ஒரு மக்கள் விரோதி இருப்பதனை அனுமதியோம் என்று யாரேனும் போராட முன் வருகின்றார்களா அன்றுதான் இதற்கு முடிவு வரும். யார் முடிவு கட்டுவது கடவுளையே ந்ம்புவோம்.

அப்துல் கலாம் அவர்கள் இந்த முறையும் எல்லோரும் சொன்னால் நான் குடியரசுத் தலைவர் ஆவேன் என்று விரும்பியது எப்படிச் சரி.

அரசியல் ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட அன்னா ஹசாரே அரசியல் கட்சி துவக்குகின்றார்.

புரிகின்றது. பதவி ஆசைகள் எல்லோரையும் படுத்துகின்றது. பதவியை துச்சமெனத் தூக்கி எறிந்து விட்டு வள்ளலார் திருமடத்திற்கு தனது சொத்துக்கள் அனைத்தையும் எழுதி விட்டு அரசியல் பக்கமே திரும்பாது வாழ்ந்து மறைந்த பெரியவர் ஒமந்தூரார் நினைவிலேயே உள்ளார்.

Tuesday, July 3, 2012

ஆனித் தேர்த்திருவிழாவில் 02-07-2012ல்
பாடிய எனது மகன் புஷ்பவனம் குப்புசாமி


தமிழினிலே கணீர்க் குரலில்பாடுதற்கு
த்ங்க மகன் புஷ்பவனம் மட்டும் உள்ளார்
அமிழ்தான நம் மொழியாள் இவனை மட்டும்
அரவணைத்து அரவணைத்து புகட்டினாள் பால்
இமை மூடி தனை  மறந்து பாடுகையில்
இவனுக்குள் இறைவி வந்து பாடுகின்றாள்
தனை மறந்து இவன் பாடல் கேட்கையிலே
தனிச் செருக்கும் பெருமையதும் கூடி நிற்கும்

Tuesday, June 26, 2012

கையெடுத்து வணங்குகிறார் அய்யா என்று
கண்களிலே நீர் மல்க புல்லரிப்பார்
பைய நந்தம் கால்களிலே வீழ்ந்திடுவார்
பண்புகளால் நிறைந்தாற் போல் பசப்பிடுவார்
வையமிதில் வாழ்வதற்காய் இவர்கள் காட்டும்
வடிவான நடிப்பிதனைப் பார்க்கும் போது
பொய்யர் இவர் தம்மையுமே நேசிக்கின்ற
பொறுப்பளித்த இறைவனையே போற்றி நிற்பேன்

Monday, May 7, 2012

மதுரை ஆதீனத்தின் ஒழுங்கீனமான செயல்.
அருணகிரியாரின் முதற் பாதிதான்  ஆதீனகர்த்தரே. புரியும்  என்று கருதுகின்றேன். ஆமாம் பெண் பித்தனாக அலைந்து நோய் வாய்ப்பட்டு திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து குதித்த பின்னரே முருகப் பெருமான் அருள் பெற்றவர். அருணகிரிநாதர். அதனாலேதான்  முதற் பாதி என்றேன்.திருஞான சம்பந்தர் உமையம்மையின் பாலருந்தி தோடுடைய செவியன் என்று  அருளினால் பாடியவர். அவர் தனது உரையையெல்லாம் இறைவனின்  உரையாகக் கருதியவர். எனதுரை தனதுரையாக என்று திருவாய் மலர்ந்தருளினார்.அவரின் திருமடத்தில் காமப்பாலின் பிரதிநிதியாகிய நித்யானந்தனை நியமித்திருக்கின்ரார். ஒழுங்கீனமான செயல் என்பது இலைய சந்நிதானம் என்று மதுரையில் இருந்து அறிவிக்க முடியவில்லை. பட்டாபிஷேகத்தையும் மதுரையில் வைத்து நடத்த இயலவில்லை.நித்யானந்தனின் அடிமையாக அவன் கட்டுப்பாட்டில் இருக்கின்றார் அருணகிரி.

தருமபுரம் திருப்பனந்தாள் திருவாவடுதுறை ஆதீனங்களின் முன்னால் எல்லாம்  நித்யானந்தனின் பிடதி ஆசிரமத் தொண்டர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்களாம். அப்படியென்றால் திருஞானசம்பந்தரின் திருமடத்தின் இளைய பட்டம் தந்தாரே அருணகிரி அதை விட பிடதி  தொண்டர்
கள் முக்கியம் ஏனென்றால் அவர்கள்தானே மனோ  (ரஞ்சித) மகான்களாக இருக்க முடியும்.

சைவத் திருமடங்க்ளில் பழமை வாய்ந்த திருமடங்களை மிரட்டுகின்றான் நித்தியானந்தன். நித்தியமும் ஆனந்தமாக இருப்பதற்கே அந்தப் பெயர் சூட்டிக் கொண்டவன்.

 திருஞானசம்பந்தருக்கு அன்று மதுரையை ஆண்ட அரசி பாண்டிமாதேவி உதவி புரிந்ததைப் போன்று இன்றைய தமிழகத்தின் பேரரசியாக இருக்கின்ற
முதல்வர் அம்மா அவர்கள் உதவி நித்தியானந்தனின் கொடிய பிடியில் இருந்து திருஞானசம்பந்தரின் திருமடத்தைக் காப்பாற்றித் தமிழர்தம் பண்டையப் பெருமையைக் காப்பாற்ற வேண்டும்

அங்கயற்கண்ணி அருள் புரிவாள்.

Sunday, May 6, 2012

நா.முத்துக்குமாரின் பண்பற்ற செயல்

அன்புள்ள தமிழர்களே வாழ்க தமிழுடன் திரைப்படக் கவிஞர் தம்பி நா.முத்துக்குமார் அவர்கள் எனது கவிதையைத் தான் எடுத்துக் கொண்டிருக்கின்ரார் கருதினேன்.ஆனால் அவர் தொடர்ந்து இந்தப் பணியைத்தன் மேற்கொண்டிருக்கின்ரார் என்று வண்ணத்திரை இதழின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.திரைப் படத்துறையைச் சர்ந்த ந்ண்பர்களும்
அதனையே வழி மொழிகின்றனர். என்ன செய்ய.அன்புடன் நெல்லைக்கண்ணன்

Thursday, May 3, 2012


Monday, April 23, 2012

அபுதாபி நிகழ்ச்சி நிரல்

Friday, April 20, 2012

புரியவில்லை

அன்பும் உண்மையும் நேர்மையும் உள்ளத் தெளிவும் இல்லாதவர்கள் எழுதினால் அதில் ஒழுங்கும் உண்மையும் இருக்குமா.

பெற்ற தந்தையைப் பேணாமல் விட்டு விட்டு ஊரிலுள்ள தந்தையரைப் பற்றி எழுதினால் அதில் எப்படி நேர்மை இருக்கும்.

அன்பே வடிவாகப் பழகியவரிடம் மிக நன்றாகப் பழகி விட்டு அவரின் தூய அன்பை தனது நலங்களுக்காக அவமானம் செய்கின்றவர் நட்பு குறித்தும் அன்பு குறித்தும் எழுதுவது எப்படி எழுத்தாகும்.

பெரிய மனிதர்கள் என்ற வேடதாரிகளை தினம் தினம் வீட்டில்
போய்ப் பார்த்து விருதுகளுக்காக அவர்களை புகழ்ந்து விருது பெறுபவர்கள்
எப்படி சிறந்த எழுத்தாளர்கள்.

பெரிய நடிகர்களின் வீட்டு வாசலில் காத்துக் கிடந்து அதன் விளைவாக தமிழ் குறித்து மிகச் சிறப்பாக எதுவும் அறியாத அந்த நடிகர் இவர்களை பேரறிஞர் என்பதும் உடனே செய்தி ஊடகங்களில் அவரைப் பற்றிப் பேரறிஞர் என்று எழுதுவதும் போடுவதும் என்ன ஒழுங்கீனம்.

விருது வாங்கிக் கொடுக்கின்ற இடங்களை நீண்ட நாட்களாகத் தக்க வைத்துக் கொண்டு அதன் விளைவாகவே புதிய எழுத்தாளர்களை தன் வீடு தேடி வர வைத்துக் கொண்டு அதன் விளைவாக பலர் தங்களைப் பாராட்ட ஏற்பாடு செய்து கொள்ளும் பெரிய இடங்களில் இருக்கும் பெரிய மனிதர்களல்லாத சிலர் எப்படி அந்த இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளுகின்றார்கள்.

இந்த நாட்டில் விருதுகள் எப்படியெனில். நடிகர் தலகம் சிவாஜி கணேசனுக்கே விருது தராத நாடு இது. இயக்குநர் பாலு மஹேந்திரா தலைவராக இருந்த காலத்தில் அவர் விருப்பத்தில் அளித்த விருதுதான் தாதா பால்சாகேப் விருது.

விருதுகள் தரப்படுவதில்லை. அனேகமாக வாங்கப் படுகின்றன். அதற்குள் படுகின்ற பாடுகள் அப்பப்பா அப்பப்பா.

Friday, April 13, 2012

அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் அன்புடன் நெல்லைக்கண்ணன்


இன்று காலை 18-04-2012 குமுதம் வார இதழைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 94ம் பக்கத்தில் திரைப்படப் பாடலாசிரியர் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் கவிதைகள் வெளியாகியிருந்தன.
முதல் கவிதையைப் பார்த்தவுடனேயே அதிர்ந்து போனேன்.

எனது காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையை மாற்றி எழுதியிருக்கின்றார்.

எனது கவிதை

நீ
கோலம்
போட
வருவதைப்
பார்க்கவே
சூரியன்
வருகின்றான்

இவர்கள்
அதைக்
காலை
என்கின்றார்கள்

இன்னொரு
முறை
பார்த்தால் தான்
மறைவேன்
என்கின்றான்

அதை
மாலை
என்கின்றார்கள்


நா.முத்துக்குமார் இதனை மிகச் சாமர்த்தியமாக எழுதியிருக்கின்றார்.

உன்னைப் பார்க்க
சூரியன் வருவதை
காலை என்கின்றோம்

உன்னைப் பார்த்துச்
சூரியன் விழுவதை
மாலை என்கின்றோம்

Thursday, March 29, 2012

கண்ணதாசன் கட்டுரைகள்

இதய கமலம் என்ற படத்தில் காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி பாடும் பாடல் ஒன்று.கவியரசர் கவியரசர் தான் என்று பறை சாற்றும் பாடல்.

தாயின் கருப்பையிலிருந்து மண்ணிற்கு வருகின்ற குழந்தை கண்
திறந்ததா என்று அனைவரும் காத்திருப்பார்கள். குழந்தை கண் திறந்ததை அம்மாதான் முதன் முதலில் பார்ப்பாள். பின்னர் ஒவ்வொருவராகப் பார்த்து மகிழ்வார்கள். பிறகு குழந்தை முகம் பார்க்கிறது என்று பெருமைப் படுவார்கள். பிறகு அப்பாவை குழந்தைக்கு அடையாளம் தெரிகின்றது மாமாவை அடையாளம் தெரிந்து கொள்கின்றதென்றெல்லாம் மகிழ்வார்கள். அந்தப் பெண் குழந்தையும் அப்படி எல்லா மகிழ்ச்சியையும் தாய்க்கும் தந்தைக்கும் உறவினர்களுக்கும் தந்தவள் தான்.

அந்தக் கண்களால் உலகைப் பார்த்து இயற்கையைப் பார்த்து மகிழ்ந்தவள்தான் கிளியை மைனாவை குயிலை மயிலை சிட்டுக் குருவியை ஆடு மாடு மான் என்று பார்த்து மகிழ்ந்தவள்தான்.

கண்ணான கல்வியைக் கற்றுத் தேறியதும் அந்தக் கண்களினால்
தான். அவள் பாட்டி அவள் கண்களின் அழகுக்கே திருஷ்டி சுற்றியது பலமுறை. இப்படியெல்லாம் உறவை உலகை கல்வியைக் காட்டித் தந்த கண்ணை அவள் கண்ணேயில்லை என்கின்றாள் . ஆமாம் அவள் மனம் கவர்ந்தவனைக் காண வாய்ப்பில்லாமல் போன கண்களையெல்லாம் கண்களே யில்லை என்கின்றாள்.

ஆமாம் உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
என்று.

Tuesday, March 27, 2012

கண்ணதாசன் திரைப் படப் பாடல்கள்தந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.

பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ

என்று கேட்கின்றார் கவியரசர்

ஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.

அடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.

உன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.

தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

அடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

செல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.

உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
கவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.

கண்ணதாசன் திரைப் படப் பாடல்கள்

தந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.

பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ

என்று கேட்கின்றார் கவியரசர்

ஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.

அடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.

உன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.

தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

அடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

செல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.

உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
கவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.

Sunday, March 25, 2012

புரியவில்லை

சச்சின் நூறாவது நூறு அடித்து விட்டார். அதனால் தான் வங்க தேசத்திடம் தோற்றோம் என்பதனை யாருமே சொல்ல மாட்டேன் என்கின்றார்களே.ஏன்.

ஆளும் கட்சி இடைத் தேர்தலில் வெல்லுவது ஒன்றும் புதிதில்லை என்கின்றார் கருணாநிதி.

அவர் தமிழ்நாட்டிலேயும் காங்கிரஸ் கட்சி மத்தியிலேயும் ஆட்சியில் இருந்த போதுதான் திண்டுக்கல் இடைத் தேர்தலில் எம்.ஜி.ஆர்.அவர்களின் அண்ணா தி மு க எதிர்த்து நின்ற திமுக பழைய காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் அனைவரும் வாங்கிய வாக்குக்களை கூட்டிப் பார்த்தால் அதுதான் வெற்றி பெற்ற அண்ணா திமுக வேட்பாளர் மாயத் தேவருக்கும் அடுத்து வந்த திமுக வேட்பாளருக்கும் இடையிலான வித்தியாசம்.இரண்டு ஆளும் கட்சியினரையும் எம்.ஜி.ஆர். தோற்கடித்திருக்கின்றார் என்பதை எப்படி பெரியவர் மறந்து போனார்.

காங்கிரஸின் தோல்வி குறித்து வாய் கிழியப் பேசும் தொலைக் காட்சி அறிவாளிகள் பாரதீய ஜனதாவின் தோல்வி குறித்துப் பேச மாட்டேனென்கின்றனரே ஏன்.

Thursday, March 22, 2012

வெளிநாட்டில்

அன்பே வடிவான தமிழர்களுக்கு வாழ்க தமிழுடன். வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் சிலர் தமிழ்ச்சங்கம் மூலமாக உரை நிகழ்த்த அழைக்கும் போது மிகவும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

நான் முதன் முதல் போன வெளிநாடு இலங்கை. கொழும்பில் நடைபெற்ற கம்பன் கழக அழைப்பில் சென்றேன்.பெரியவர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களும் அந்த ஆண்டு வந்திருந்தார்.

வழக்காடு மன்றம் கவியரங்கங்களுக்கு தலைமை ஏற்றேன்.
கவியரங்கத்தை வீரகேசரி தினகரன் நாளிதழ்கள் முப்பது வருடத்தில் உச்சமாக அமைந்த கவியரங்கம் என்று போற்றின.

மீண்டும் ஒரு முறை மறைந்த விநோதகன் அவர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.தம்பி இதயானந்தா இன்றும் இங்கிலாந்து வந்த பிறகும் என்னோடு தொடர்பில்
இருக்கின்றார்.

அதன் பின்னர் மலேசியா சென்றேன்.இரண்டாம் முறை சென்ற போது அமைச்சர் டத்தோ சரவணன் அழைத்திருந்தார்.என்னை அப்பா என்றே இன்றும் அழைக்கின்றார்.

அதன் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் சென்றிருந்தேன். பெரியவர் சலாவுதீன் வீட்டில் இரவு உண்விற்குச் சென்றிருந்தேன். இரவு நெடு நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.சில தமிழ்ச் செய்யுள்களை என்னிடம் கேட்டு பெரியவர் சலாவுதீன் அவர் கைப்பட எழுதி கொண்டார்.

அதன் பின்னர் சிங்கப்பூருக்கு பட்டுக்கோட்டையாரின் நண்பர்கள் அழைத்திருந்தனர். மிக மிக பண்பும் மரியாதையும் கொண்டவர்களாக ந்டந்தனர். இன்று வரை இராமசாமியும் புகழேந்தியும் காசியும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர்.

அதன் பின்னர் குவைத் தமிழ்ச்சங்கத்து இளைஞர்கள் அழைத்து (தமிழுக்காக மட்டும்) மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினர். தமிழுக்காகவே வாழ்ந்த தேவநேயப் பாவாணர் அவர்களுடைய மாணாக்கர் பெரியவர் இரா.மதிவாணன் அவர்களும் என்னோடு கலந்து கொண்டார். எனக்கு மிகச் சிறந்த பிள்ளைகள் கிடைத்தனர். இது வரை என்னோடு தொடர்பில் இருக்கின்றனர்.

தமிழ்ச்சங்கங்கள் திரைப்படக் கலைஞர்களை அழைத்து அவர்களோடு புகைப் படங்கள் எடுத்துக் கொள்வதிலேயே ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். திரைப் படக் கலைஞர்களும் தமிழுக்காகச் சேவை செய்பவர்கள்தாம்.ஆனால் தமிழறிஞர்களை அழைக்கும் போது அவர்களை முழுமையாக உரை நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தால் தானே. நிறைய தமிழ் குறித்துத் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் அப்படிச் செய்ய சில வெளிநாட்டு தமிழ்ச் சங்க நிர்வாகிகள்தான் விரும்புகின்றனர்.

ஷார்ஜா விலிருந்து ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் அழைத்தார்.நீங்கள் நெல்லைக்கண்ணன் தானே.தமிழ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்றார். தேதி கேட்டேன். சொன்னார். சொல்லி விட்டு அவர் என்னிடம் சொன்னார். அவர் எனக்கு ஒரு மணி நேரம் அளிப்பாராம். நான் பேச வேண்டுமாம்.ஏனென்றால் திரைப்படத் துறையினருக்கு அவர் முக்கியத்துவம் தர வேண்டுமாம்.

அபுதாபியில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார் . பாரதி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றார். என்னை நெறிப் படுத்துவது எனது வள்ளுவப் பேராசான் என்றால்.இந்த நூற்றாண்டின் சமூகச் சிந்தனையாளன் பாரதி என் ஆசிரியன். மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டேன்.

அடுத்து அவர் சொன்னார் நான் மிகவும் மதிக்கின்ற் வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா வருவதாகவும். அவர் இசை நிகழ்ச்சிக்கு முன்னர் நான் ஒரு மணி நேரம் பேச் வேண்டும் என்று. என்ன சொல்வது.வெளி நாடு வாழ் தமிழர்கள் செலவு செய்து நம்மை அழைக்கும் போது முழுமையாக ஒரு உரை நிகழ்த்தினால் தானே அவர்களுக்கும் நிறைவு. நமக்கும் நிறைவு.அவர்கள் தமிழை இரண்டாவது இடத்தில் தான் வைத்துப் பார்க்கின்றனர்.

தமிழ் நாட்டில் நான் மூன்று மணி நேரத்திற்குக் குறைவாக உரை நிகழ்த்தினால் என்னோடு வருத்தம் கொள்வார்கள்.என்ன அய்யா ஏமாற்றி
விட்டீர்களே என்று. கேட்டால் தானே அவர்களால் உணர முடியும்.

சமீபத்தில் மறைந்த முது பெரும் எழுத்தாளர் அண்ணன் ர.சு.நல்லபெருமாள் அவர் தம் மகன் பாலு அவர்கள் ஹூஸ்டன் நகரில் அமெரிக்காவில் இருக்கின்றவர். அவர்கள் தமிழ்ச்சங்கத்தில் உரை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையிலே அவர்களிடம் பேச என் மீது மிகுந்த அன்பு கொண்ட வள்ளல் அழகப்பச் செட்டியார் அவர்களின் திருமகள் என் அம்மா உமையாள் இராமநாதன் அவர்கள் உறவினர் கண்ணப்பன் அவர்கள் பேசினார்.மே மாதம் 25 26 27ல் நிகழ்ச்சி என்றார். ஏற்றுக் கொண்டேன். அவர்கள் வேறு வழியில் செய்தி தந்தனர். 25 26 ஆகிய தேதிகளில் அவர்கள் எனக்கு 45 நிமிடங்கள் ஒதுக்குவார்களாம். அதில் நான் பேச் வேண்டுமாம். எனக்கு முன்னரும் பின்னரும் திரைப்படக் கலைஞர்கள் பேசுவார்களாம். அவர்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவனாகி விட்டேன்.
ஏனெனில் இனி வெளி நாட்டு நிகழ்ச்சிகள் என்றால் தமிழுக்கு மட்டும் நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் மட்டும் ஏற்றுக் கொள்வதென்று ஒரு தெளிவான முடிவெடுக்க உதவினார்கள் என்பதனால்.

தமிழ்நாட்டிலேயே இன்னும் உரை நிகழ்த்த வேண்டிய ஊர்கள் பல உள்ளன. என்னைக் கேட்பதற்கு ஆர்வமான தமிழ் ஆர்வலர்களும் ஆயிரக் கணக்கில் இருக்கின்றனர். எல்லாம் வல்ல இறைவனும் என் தமிழ்த் தயும் என்னை உணர வைத்திருக்கின்றனர். மகிழ்ச்சியாக இருக்கின்றேன். அன்புடன் நெல்லைக்கண்ணன்

Tuesday, March 20, 2012

மனிதனென வாழ விடு

இல்லாதார்க் குதவுகின்றேன் என்ற எண்ணம்
எனக்கு வரின் நான் என்ன மனிதனாவேன்
பொல்லாத அவ்வெண்ணம் என் மனதில்
புகுந்து விடின் அவமானம் கொண்டழுவேன்
கல்லாதான் போல அங்கு என்னை நானே
கடிந்து கொள்வேன் அய்யகோ அழுது தீர்ப்பேன்
வல்லாளா என் சிவனே என்னை இங்கே
வாழ வைத்தாய் மனிதனென வாழ விடு

Sunday, March 18, 2012

என்றும் வைப்பாய்

கேட்பதன் முன் உதவுகின்ற வகையில் என்னை
கேள் எனவே ஆக்கி வைத்தாய் அனைவருக்கும்
பார்ப்பதற்கு முன் அவரை உணர்ந்து கொள்ளும்
பக்குவத்தை அளித்தெனையே உயர வைத்தாய்
வார்க்கையிலே எனைச் சரியாய் வார்த்து விட்டாய்
வணங்கி நின்றேன் என் இறையே மேலும் மேலும்
பூக்கின்ற மனமதையே அளித்துக் காப்பாய்
புண்ணியன் உன் திருவடியில் என்றும் வைப்பாய்

என்றும் வைப்பாய்

கேட்பதன் முன் உதவுகின்ற வகையில் என்னை
கேள் எனவே ஆக்கி வைத்தாய் அனைவருக்கும்
பார்ப்பதற்கு முன் அவரை உணர்ந்து கொள்ளும்
பக்குவத்தை அளித்தெனையே உயர வைத்தாய்
வார்க்கையிலே எனைச் சரியாய் வார்த்து விட்டாய்
வணங்கி நின்றேன் என் இறையே மேலும் மேலும்
பூக்கின்ற மனமதையே அளித்துக் காப்பாய்
புண்ணியன் உன் திருவடியில் என்றும் வைப்பாய்

Tuesday, March 13, 2012

கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள்

சாதி என்றும் மதங்கள் என்று இன்றும் பிரிந்து அழியும் மனித குலத்திற்கு ஒரு மகத்தான செய்தியினைச் சொல்லுகின்றார் கண்ணதாசன்.கர்ணன் தாய் தந்தை யாரென்று அறியாதவன்.அதே அவன் வாழ்க்கையில் அவனுக்குப் பல இடங்களிலே அவமானங்களைத் தருகின்றது.அவனுக்குப் பெண் தந்த மன்னன் அவன் பிறப்பு குறித்து அவமானப் படுத்துகின்றான். கர்ணனின் மனைவி அவனைத் தேற்றுகின்றாள்.அதற்கான பாடல் கே.வி.மகாதேவனின் அருமையான இசையில்.

இது கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே இறைவன் அருளிச் செய்தது. பாடலில் மூழ்குங்கள்.

எல்லா உயிரினங்களுக்கும் கண்தான் வாழ்க்கை.
கண்ணதாசன் கேட்கின்றார்.

கண்ணுக்குக் குலமேது என்று என்ன கேள்வி.இன்று உலகம் முழுவதும் ஒருவர் கண் இன்னொருவருக்குப் பொருத்தப் படுகின்றது.
அங்கே சாதி உணர்வுகள் இல்லை. மதங்கள் பார்க்கப் படுவதில்லை.
தன் கணவனிடம் அவன் சமூகத்தின் கண் என்கின்றாள். ஆமாம் அவனுக்குக் கண் இருப்பதனாலே தான்கொடுத்துக்கொண்டேயிருக்கின்றாண்..

அடுத்த கேள்வி கருணைக்கு இனமேது எங்கே பதில் சொல்லிப் பருங்கள்.உயிர்களிடத்தில் அன்பு கொள்கின்ற பெரு மனமாம் கருணை என்ன இனத்தைச் சார்ந்தது.

விண்ணுக்குள் பிரிவேது விளக்குக்கு இருளேது என்கின்றார்.விண்ணுக்குள் விஞ்ஞான பிரிவுகள் சொல்ல முயலலாமே ஒழிய ஏது பிரிவு. அடுத்த கேள்வி விளக்குக்கு இருளேது. எத்தனை சிந்தனைத் திறன் கொண்ட கேள்வி இது.

பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும் வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும். ஒருவனை அந்தக் காலத்தில் சத்திரியன் என்று அழைப்பதே அவன் வீரத்தை வைத்தே. அதனால்தான் பரசுராமரே அவனை சத்திரியன் என்று உணர்கின்றார். அவனிடமும் கேட்டதன் வாயிலாக அவனுக்கு ஒரு ஆறுதலும் தருகின்றார். சாமர்த்தியமாக வேறு யாரையோ புகழுவதற்காக கண்ணதாசனின் திரைப்
படப் பாடல்களை யாராவது இழிவு படுத்த நினைத்தால் அவர்கள் என்னவென்று அழைப்பது.

Monday, March 12, 2012

கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள்

கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே


நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ


தனைப் புகழ் தன்னிடத்தோர் சொல்லில்லாத
தமிழே என் தாயே நின் பாதம் போற்றி
நினைப்பில் எழும் அத்தனையும் வடிவம் இன்றி
நிழலாகத் தோன்றிடினும் சிறிய நெஞ்சின்
நினைப்பினுக்கு மதிப்பீந்து வாழ்த்தாய் உன்
நிழல் கண்ட நானும் உன்னை வணங்குகின்றேன்
என்று கவியரங்கங்களில் அன்னை தமிழை அழகுறப் போற்றிய கவிஞர்


திருவிளையாடல் திரைப் படத்தில் தமிழாம் தாயை உயர்த்துகின்ற் பாங்கு அவருக்கே உரியது. ஆமாம்.

வட நாட்டுப் பாடகர் ஹேமநாதனை எதிர்த்துப் பாட பாணபத்திரருக்கு பாண்டியன் உத்தரவிட பாணபத்திரர் சொக்கநாதப் பெருமான் முன்னர் நின்று இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று பாடும் பாடலில் கவிஞர் தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ என்று ஒரு கேள்வியை முன் வைத்து எம் பெருமான் சிவனுக்கே தாய் தமிழ் என்று பெருமைப் படுத்துவார்.

அதே திரைப் படத்தில் அவ்வை தமிழ்க் கடவுள் முருகனிடம் ஆறுவது சினம் என்று சொல்லி விட்டு கூறுவது தமிழ் என்றும் சொல்லுவாள் மிகவும் உச்சமாக அந்தப் பாடலில் இறுதியில் உன் தத்துவம் தவறென்று சொல்லிட அவ்வையின் தமிழுக்கு உரிமையுண்டு என்பாள்
அவ்வையின் வாயிலாக கவிஞர் தமிழ்த்தாய்க்கு தரும் பெருமை இது

வென்றான்

தானே தனக்குப் பட்டம் போடா
தனிப் பெருங் கவிஞனவன்
தமிழாள் தானே தேடிக் கண்டு
தழுவிய ஞான மகன்
ஊனமென்பதை உள்ளம் கொள்ளா
உத்தமப் பேரறிஞன்
உலகை உணர்த்தும் பாடல்கள் அளித்த
உயர் ரகச் சித்த னவன்
கானம் அனைத்தும் செம்மையுறச் செய்த
கவிஞரில் மேதையவன்
கடவுள் விரும்பும் கனித் தமிழ்ப் பாடல்
கனிந்திடத் தந்த மகன்
தேனாம் தமிழை வானவர் அருந்திடத்
தேடியே கொண்டு சென்றார்
தெள்ளு தமிழ் அன்னை விண்ணையும் ஆண்டிட
தேர்ந்தங்கு சென்று வென்றான்

Sunday, March 11, 2012

கண்ணதாசனைப் பற்றி

அன்புடையீர் வாழ்க தமிழுடன்.
எனது அன்பு நண்பர் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் கடந்த மாதம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கண்ணதாசன் அவர்களைப் பற்றி உரையாற்றிய போது அவரது திரைப் படப் பாடல்கள் யாவுமே பழைய இலக்கியங்களின் சாறு என்பது போலப் பேசியதாக அவர் ஆசிரியராக உள்ள தினமனி நாளிதழில் செய்தி கண்டேன்.அது எத்தனை பெரிய தவறு என்பதனை எனது உள்ளம் எனக்கு உணர்த்தியதாலே கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள் எத்தனை சிறந்தவை என்பதனை உணர்த்தும் வண்ணம் தொடர்ந்து எழுத ஆவல் கொண்டுள்ளேன். இறையருள் கூட்டுவித்தால் நாளைக்கே தொடங்கலாம் என்று இருக்கின்றேன். நன்றி அனைவருக்கும் அன்புடன் நெல்லைகண்ணன்

Saturday, March 10, 2012

கொடுமையன்றோ

தந்தையரைக் கொல்லுகின்ற பிள்ளைகளும்
தாயவரின் உயிர் பறிக்கும் மைந்தர்களும்
மைந்தரையே கொல்லுகின்ற தாய்க்குலமும்
மனைவியையே கொல்லுகின்ற மடையர்களும்
கொண்டவனைக் கொல்லுகின்ற கோமளமும்
குருவினையே கொல்லுகின்ற மாணவரும்
அன்பினையே உணராமல் வளர்ந்ததனால்
அறிவின்றிப் போன ஒரு கொடுமையன்றோ

Thursday, March 8, 2012

மகளிர் நாள்

உலகெங்கும் குழந்தைகளை நாள்கள் தோறும்
உதிரத்தோ டளிக்கின்றார் மகளிர் காண்பீர்
மலர்ந் துலகம் தழைப்பதற்கு மகளிர் செய்யும்
மாபெரிய தியாகம் இது உணர்வீர் நீரே
தினந்தோறும் அவர்களது தினமேயன்றி நீங்கள்
தேர்ந்து தரும் தினமும் அதில் அடக்கமன்றோ
உளம் திருந்தி உணர்ந்திடுவீர் மகளிர்க் கென்றும்
உள்ள நாள் எல்லாமும் அவர்கள் நாளே

வாழ்ந்து வெல்வோம்

அன்பு செய்ய வருகின்றார் அதிரடியாய்
அடுத்த நாளே தனை மாற்றிக் கொள்கின்றாரே
பண்பு வழி அவரிடத்தும் அன்பு வைத்து
பதை பதைத்து துன்புறுதல் நம் கடனா
அன்பு நந்தம் கொள்கை அதைக் கை விடுதல்
அறிவுடைய செயலில்லை தமிழாள் சொன்னாள்
தெம்புடனே அன்பு செய்வோம் மனிதராக
திருக்குறளார் தம் வழியே வாழ்ந்து வெல்வோம்

இருக்கின்றானே

ஆயிரம் பல்லாயிரமாய் நூற்கள் கற்றேன்
அதன் வழியாய் வாழ்வதற்கும் கற்றுக் கொண்டேன்
பாவி இந்த மனிதர்களைப் படித்துப் பார்த்தும்
பல பேரைப் படிப்பதற்கு முடிவதில்லை
கோயிலிலே இருக்கின்றான் இறைவன் என்ற
கூற்றை நான் நம்புவதே யில்லை அய்யா
தாவி இங்கு அன்பு செய்யும் மனிதர் தம்மின்
தலைவாசல் தோறும் இறை இருக்கின்றானே

Tuesday, March 6, 2012

ஆளாக்காதீர்

பணமதுவும் குலைத்து விடும் மிகச் சிறந்த
பண்புகளை நேர்மையினை நாணயத்தை
குணமதுவோ நல்லதெல்லாம் கொண்டிருக்கும்
கூட்டாக்கும் நல்லவரைப் பெரியவரை
இனம் பிரித்துத் தமிழ் இதனை சொல்லி வைத்தும்
எப்படியோ விதி வழியால் மறந்து போனேன்
மனம் துடிக்க இறைவனிடம் வேண்டுகின்றேன்
மறு முறை இத் தவறுக்கு ஆளாக்காதீர்

Sunday, March 4, 2012

அருளிடுக தலைவா

அன்பு செய்வார் மட்டும் தான் உயிரொ டுள்ளார்
அதுவன்றி வாழ்பவரோ உடலாய் உள்ளார்
என்றெனக்கு வள்ளுவனார் சொல்லித் தந்த
எழில் வழியை உணர்ந்தவனாய் வாழுகின்றேன்
அன்பதனால் உலகதனில் பல பேர் என்னை
அப்பா என்றழைக்கின்றார் பாசம் கொட்டி
தெம்பாக நான் வாழ வழி செய்கின்றார்
தேம்புகின்றேன் அவர் செய்யும் அன்பின் முன்னால்

அவசரமாய் அன்பு காட்டி அதே வேகத்தில்
அவசரமாய் விலகுகின்றார் புரியவில்லை
தவம் போல அன்பு செய்யும் என்னைக் கூட
தவறாக உணருகின்றார் என்ன செய்வேன்
குவலயத்தில் இது என்ன துன்பம் என்னை
கொள்க அன்பு என்று சொன்ன இறைவா
அவருளத்தில் அன்பு தன்னை உணரும் ந்ல்
அழகு தன்னை அருளிடுக தலைவா

Tuesday, February 14, 2012

உமை வந்து காதலிப்பார்

காதலின்றி உயிர்க் குலம் தான் தழைப்பதுண்டோ
காதலில்லா நாளென்பது உலகில் உண்டோ
பேதலித்த மானிடர்கள் சில பேர் செய்யும்
பேதமைகள் காணுகையில் அய்யோ அய்யோ
காதலுக்கு தனி தினமாம் கூத்தோ கூத்து
காதலுக்கு தேதி உண்டோ கிழமை உண்டோ
காதலிக்கப் பழகுங்கள் அனைவரையும்
கன்னியர்கள் வந்து உமை காதலிப்பார்

Thursday, January 26, 2012

வந்தேமாதரம்

இயக்கங்கள் அனைத்திலும் தீயவர்கள்
இருக்கின்றார் மிக்ப் பெரும் பொறுப்பிலே காண்
தயக்கமே யில்லாமல் தலைவர்களும்
தழுவியே அவர்களோ டுலவுகின்றார்
மயக்கம் தெளிந்தாலும் நமது மக்கள்
மாற்றின்றி இவரையே மாற்றுகின்றார்
வழக்கம் போல் குடி மக்கள் தலைவர் கூண்டில்
வந்தே மாதரம் கூறுகின்றார்

Sunday, January 15, 2012

அருள வேண்டும்

ஆங்கிலத்தில் பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்லும்
அறியாத தமிழர்களை என்ன சொல்வேன்
பூங்குவளைத் தமிழ் இருக்க வெட்கமின்றி
புரியாத மொழியினிலே வாழ்த்துகின்றார்
தாங்கள் தான் மிகப் பெரிய அறிஞரென்று
தங்களுக்குத் தாங்களே நினைக்கின்றார் காண்
ஏங்கி நின்றேன் தமிழே என் தாயே நீ தான்
இக் கொடுமைதனைத் தடுத்து அருள வேண்டும்

Friday, January 6, 2012

புரியவில்லை

புரியவில்லை

சிதம்பரத்திற்கெதிராக இத்தனை வேகம் காட்டும் சுப்ரமணியசாமி
மாறன் சகோத்ரர்களைப் பற்றி பேசாத மர்மம் என்ன.

புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழர் சிதம்பரம் கடலூர் பகுதியைப் பார்வையிடாத மர்மம் என்ன.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் சசிகலா கும்பல் என்ற திமுக
இன்று முரசொலியில் பிற்படுத்தப் பட்டவர் சசிகலா என்று கண்ணீர் வடிப்ப
தென்ன.

சோவே என்னைப் பாராட்டியிருக்கின்றார் என்று பலமுறை பெருமைப் பட்டுக் கொண்டுள்ள கருணாநிதி இன்று சோ போன்றோர் போயஸ் தோட்டத்தில் இருக்கின்றனர் என்றும் பார்ப்பன ஆதிக்கம் என்றும் பேசுவதென்ன.

பெரியவர் அன்னா உறசாரேயின் உண்ணாவிரதத்திற்குக் கூடிய கூட்டம் சிறை நிரப்பும் போராட்டம் என்றவுடன் குறைந்து போன மர்மம் என்ன.

கிரிமினல் வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்த கனிமொழி அம்மையாருக்கு இத்தனை ஆர்ப்பாட்டமான் வரவேற்பைக் கண்ட பின்னரும் நீதி மன்றத்தில் சாட்சிகளை மிரட்டுகின்ற சூழலை உணர்த்தி சிபிஐ கனிமொழியின் ஜாமீனை ரத்துச் செய்ய முயற்சிக்காத மர்மம் என்ன.

ஒவ்வொரு கிராமமும் தனக்குத் தேவையானவற்றைத் தானே தயாரித்து தன்னிறைவு பெற வேண்டும் என்ற தேசத்தந்தைக்குப் புறம்பாக அந்நியர் முதலீட்டிற்கு அச்சாரம் போடும் காங்கிரஸ் தலைவர்கள் காந்தி சமாதியில் சென்று வணங்கச் செல்ல அருகதையற்றவர்கள் என்பதனை உணராத மர்மம் என்ன.

கோடிக் கணக்கில் கொள்ளையடித்திருக்கின்ற ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்திற்கு வருமான வரி விதித்திருக்கின்ற வருமான வரித்துறையின்
முட்டாள் தனத்தை என்ன சொல்ல.

அவர்கள் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்யாத மர்மம் என்ன