ஏழைகளைக் காப்பதற்காய் பிறந்த நல்லோர்
எல்லோர்க்கும் கல்வி தந்த இனிய நல்லோர்
வாழையடி வாழையென காந்தி அண்ணல்
வழி நடந்து தமிழருக்குப் பெருமை சேர்த்தோர்
கோழைத்தனம் இல்லாமல் தாய் நாட்டிற்காய்
கொடுஞ்சிறையில் ஆறாண்டு இருந்த வல்லோர்
பேழையாம் கல்வியினை அள்ளித் தந்த
பெருஞ்செல்வர் காமராஜர் பிறந்த நன்னாள்
Friday, July 15, 2011
காமாராஜர் பிறந்த நன்னாள்
Saturday, January 2, 2010
உணர்வீர் என்றார்
இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு தலைமை தன்னை
ஏற்க வேண்டும் என்று சிலர் அன்று இங்கு
வசை யின்றி வாழ்ந்திருந்த காமராசர்
வாசலுக்கு வந்து நின்று வேண்டி நின்றார்
திசை தெரிந்தா வந்தீர்கள் என்ன கூத்து
தெரியுமா இசை எனக்கு முதல்வர் என்றால்
அசைகின்ற விழாவில் எல்லாம் எனை அழைத்தல்
ஆகாது தவறு இதை உணர்வீர் என்றார்
Wednesday, October 15, 2008
அவரால் மட்டும்
காந்தி அவர் தவறு செய்த போதே அதைக்
கண்டித்த பேரூருவம் காமராஜர்
தான் பெறாக் கல்வியினை ஏழையர்க்காய்த்
தந்து நின்ற வள்ளலவர் ஊர் முழுக்க
வான் புகழ் கல்வியினை வழங்குதற்காய்
வடிவமைத்த சட்டங்கள் நூறு நூறு
நாம் இன்று கல்வியினால் வாழ்ந்தோமென் றால்
நாயகனாம் காமராஜர் அவரால் மட்டும்
Monday, October 6, 2008
குருவை எண்ணி
காந்தி யவர் செய்தித் தாள் தன்னில் ஒரு
கட்டுரையில் தமிழ் நாட்டில் காங்கிரஸில்
சேர்ந்து ஒரு குழு ராஜாஜிக் கெதிராய்ச் சில
செய்கைகளைச் செய்வதுவாய் எழுதி விட்டார்
காந்தியைத் தன் குருவாகக் கொண்டிருந்தும்
காமராஜர் எதிர்த்து நின்றார் காந்தியாரை
காந்தியவர் திருத்திக் கொண்டார் தவறதனை
காமராஜர் மனம் சிறந்தார் குருவை எண்ணி
Thursday, October 2, 2008
என்றும் வென்றான்
மணம் செய்தான் இல்லை அவன் உண்மை நேர்மை
மக்கள் சேவை என்ற பல நற் குணங்கள்
மணம் கொண்டு வாழ்ந்ததவன் காலம் தன்னில்
மனமெல்லாம் ஏழையரின் வாழ்க்கைக்கென்று
இனம் கண்டான் அவர்கட்காய் தினம் உழைத்தான்
ஏழையர் தம் குடும்பத்துத் தலைவனானான்
குணம் கொண்டான் தமிழர் குலப் பெருமை கொண்டான்
கொற்றவனாம் காமராசன் என்றும் வென்றான்
தலைவனும் வழி நடந்தோனும்
அடித்தாலும் உதைத்தாலும் சுட்டாலும் கொன்றாலும்
அப்படியே அதை ஏற்று செய்வான் தன்னின்
மனத் தளத்திற்குள்ளேயே போராட்டம் உண்டாக்கி
மனிதனென அவன் தன்னை மாற்றி விடும்
பொறுப்பான போராட்டம் அகிம்சையென்னும்
பொலிவான நீரோட்டம் தந்த அண்ணல்
சிறப்பெல்லாம் அவனான காந்தி அண்ணல்
சிந்தை வழி நடந்திடுவோம் உலகம் போற்ற
படிப்பதனை சிறு வயதில் இழந்தவன்தான்
பல பேரைப் படிக்க வைத்தான் உயர வைத்தான்
வடித்திட்ட திட்டங்கள் அனைத்தும் இன்றும்
வாழ வைத்துக் காத்திருக்கும் தமிழினத்தை
அடி பட்டு வீழ்ந்திருக்கும் ஏழையரை
அவனன்றோ காத்து நின்றான் தாயெனவே
மடிப் பிச்சை அவன் ஏற்றான் ஏழையர்க்காய்
மாமனிதன் காமராஜர் வழி நடப்போம்
Saturday, June 28, 2008
அவரைக் கூட
முன் பின்னாய்க் கார்கள் சூழப் போனதுண்டா
முறை கெட்டார் அவர கிட்டே சென்றதுண்டா
தன் பெண்டு பிள்ளை என்று அவருக்காகத்
தனியாக உறவுண்டா தாயையன்றி
என் செய்தார் அம்மனிதர் ஏழைகளை
எப்போதும் உறவாகக் கொண்டிருந்தார்
புன் செயலைச் செய்தார்கள் அவரைக் கூட
போட்டியிலே தோற்கடித்து மகிழ்ந்து நின்றார்
வணங்கியவர் காமராஜர்
ஆங்கிலத்தைத் தெரிந்தவர்தான் இந்தியெனும்
அம்மொழியும் தெரிந்தவர்தான் இந்தியத் தாய்
ஈன்றெடுத்த எம்மொழியும் தெரிந்தவர்தான்
இருந்தாலும் எழுந்து நின்று ஆட மாட்டார்
சான்றாண்மை கொண்டவராய் வாழ்ந்ததாலே
சரித்திரத்தின் உண்மையெல்லாம் தெரிந்ததாலே
ஈன்றாளின் மொழி ஒன்றே எங்கும் பேசி
எம் தமிழை வணங்கியவர் காமராஜர்
சிரித்ததந்தக் கேள்வியாலே
சட்டமன்றம்தனில் எதிரில் வந்தமர்ந்த
சரித்திரங்கள் பல அறிந்த மேதை அவர்
பட்டெனவே பல நாட்டு அறிஞர் தம்மின்
பாங்கான செய்திகளைச் சொல்லுகின்றார்
சட்டெனவே பெருந்தலைவர் கேட்டு நின்றார்
சரி உங்கள் செய்தி என்ன தமிழ்நாட்டுக்கு
கட்டுரைத்தார் வாயடைத்தார் சட்டமன்றம்
கல கலத்துச் சிரித்ததந்தக் கேள்வியாலே
சொக்கிப் போக முட்டாளா
வேண்டாத புகழுரைகள் தம்மை என்றும்
விரும்பியதே இல்லை அய்யா காமராஜர்
தாண்டிஅங்கே ஒரிருவர் பேசி விட்டால்
தண்டனைதான் வேறென்ன தொலைந்தார் அவர்
மண்டலத்து மாநாடு ஒன்றில் ஒரு
மாபெரிய தமிழறிஞர் பேச வந்தார்
கண்ட ஒரு காட்சியினைச் சொல்லி நிற்பேன்
காமராஜர் காமராஜர் காமராஜர்தான்
பெருந்தலைவர் எழுந்து நின்றால் அவர் தலையோ
பேரிமயம் தனில் இடிக்கும் இரண்டு கால்கள்
பொருந்தி நிற்கும் குமரி அன்னை கடற்கரையில்
பொரு தடக்கை பாரதத்தை அணைத்து நிற்கும்
விறு விறுப்பாய்ப் பேசி நின்றார் பெரியவரோ
விலா நோகச் சிரித்து என்னை அரக்கன் என்று
சுறு சுறுப்பாய்ப் பேசுதியோ நிறுத்து போதும்
சொக்கிப் போக முட்டாளா நான் என்றாரே
நிறுத்துங்க என்று சொன்னார்
மதுரையிலே ஒரு கூட்டம அங்கே ஏழை
மக்களுக்காய் பிறந்து வந்த பெருந்தலைவர்
கதி அவரே என்றிருக்கும் மக்களின் முன்
கணக்காகச் சிலர் அவரைப் புகழுகிறார்
இடை மறித்துப் பெருந்தலைவர் காமராஜர்
எனைப் புகழ என்ன உண்டு என்று சொல்லி
பட படத்தார் குழந்தை குட்டி குடும்பம் என்று
பல இருந்தும் பதவியிலே தானிருந்தும்
திட மனதாய் வறுமையிலும் நேர்மையுடன்
தேசமதே சொத்தென்னும் ஒர்மையுடன்
வட புலத்தார் கண்டாலும் வணங்கி நிற்கும்
வாழ்வாங்கு வாழும் எங்கள் கக்கனையே
தினம் புகழ்ந்து போற்றுங்கள் அதுவே நன்று
தெரியுமில்ல நான் ஒண்டிக் கட்டை என்னை
விதம் விதமாய்ப் புகழ்வதிலே நியாயமில்லே
வேண்டாம் அதை நிறுத்துங்க என்று சொன்னார்
Friday, May 16, 2008
காப்பாற்றி நின்றார்
பிச்சையெடுத்தேனும் நல்ல கல்வியினைப்
பெற்றிடுங்கள் என்று சொன்னார் நமது முன்னோர்
இச்சொல்லை மாற்றுதற்காய் ஒருவர் வந்தார்
ஏழைகளை வாழ வைக்க என்றே வந்தார்
பிச்சையினை நான் எடுப்பேன் உங்களுக்காய்
பிள்ளைகளே உங்கள் தொழில் படித்தல் என்றார்
கச்சை கட்டி கல்வி தந்து ஏழைகளைக்
காப்பாற்றி நின்ற தெங்கள் காமராஜர்
Monday, April 28, 2008
தமிழர் காமராஜர்
தமிழ்த் தாயார் ஈன்றெடுத்த காமராஜர்
தாய் நாட்டைக் காக்க வந்த பீமராஜர்
அமிழ்தான தமிழ் மொழிக்கு உண்மை ராஜர்
அகிலமெல்லாம் தமிழ் கொணடு சென்ற ராஜர்
வட புலத்தில் காங்கிரஸின் தலைவராகி
வாயாடி நின்ற தன்புத் தமிழிலேதான்
கடல் கடந்து ரஷ்ய நாட்டில் நின்ற போதும்
கனித் தமிழே பேசி நின்ற தனித் தமிழர்
தான் பெறவே இயலாமல் போன கல்வி
தமிழ் ஏழை அனைவருக்கும் தந்த தெய்வம்
ஊன் உடம்பு உயிர் தந்த தாய்க்குக் கூட்
உண்மைக்குப் புறம்பாக உதவாத் தேவன்
ஏன் என்று எதனையுமே கேட்டுக் கேட்டு
ஏழைகட்காய்ச் செய்து நின்ற மாமனிதன்
வான் சென்றான் என்கின்றார் இல்லையில்லை
வாழ்கின்றான் எம்மோடு இன்றும் இங்கே
ஏழையெனப் பிறந்தான் தான் உயர்ந்த போதும்
ஏழையென்றே வாழ்ந்தான் காண் தோல்வி தந்தார்
கோழையென அழுதானா இல்லை என்னைக்
கூப்பிடுங்கள் என்றெல்லாம் குமுறினானா
வாழையடி வாழையென காந்தி பேரை
வாழ்விக்க வந்தவன் காண் செல்வனான்
கூழையென நின்றார்க்கு கல்வி யெனும்
கொடை அளித்தான் அதனாலே செல்வனான்
ஏழையென்று சொல்லாதீர் அவனை எங்கும்
ஏற்றங்கள் அவனாலே பெற்ற நீவிர்
வாழையடி வாழையென கல்வி இன்று
வந்ததுங்கள் வீட்டிற்குள் அவனால்ன்றோ
பேழையென நெய்வேலி திருச்சியிலே
பேர் சொல்லும் மிகுமின் நிறுவனம் தான்
வாழ்வதற்கு அனைவருக்கும் உணவளிக்கும்
வயற்காட்டுத் தோழருக்காய் அணைகள் தந்தான்
ஊழை வெல்ல முடியாராய் ஒடுக்கப் பட்டோர்
ஒய்ந்திருந்த நேரத்தில் எழுந்து வந்தான்
கோழை மனம் விட்டவரும் கொடிகள் ஏந்தி
கொள்கை கண்டு வெற்றி பெற வழிகள் செய்தான்
ஏழையல்ல செல்வன் அவன் என்றே சொல்வேன்
ஏனென்றால் செழுங் கிளையைத் தாங்கி நின்றான்
நாளை வரும் இளைஞ்ருக்கு இந்தச் செய்தி
நல்கி நிற்பீர் ந்ன்றி கொல்லா நற்றமிழீர்