Monday, November 30, 2009

சுவாமி விவேகாநந்தர்

தீண்டாமைக் கொடுமையினை நெஞ்சுள் வைத்துத்
தெய்வத்தின் பெருமையினை சொல்வார்தம்மை
தீண்டாமல் இறைவன் அவன் தூர வைப்பான்
தெய்வத்தின் படைப்பன்றோ அனைவருமே
ஆண்டவனைக் கண்டவர் போல் நடிப்பார் எல்லாம்
ஆபாசம் ஆபாசம் என்றே சொல்வேன்
வேண்டுதலை விரும்பவில்லை ஆண்டவனும்
வினையாற்றி வினையாற்றி வெல்லச் சொன்னான்

Sunday, November 29, 2009

தம்மைக் காக்க

அங்கவையைச் சங்கவையை திரைப் படத்தில்
அசிங்கமாய்க் காட்டி நின்றார் கோபமில்லை
ஆத்திச் சூடி அவ்வை தன்னை திரைப் படத்தில்
ஆட்டம் போட்டுக் கேலி செய்தார் வெட்கமில்லை
தங்க மகள் கண்ணகியை குத்துப் பாட்டில்
தடித்தனமாய்க் காட்டுகின்றார் பொங்கவில்லை
இங்கு உள்ளார் தமிழ்த் தலைவர் பல பேர் இன்றும்
இனமானம் பேசி நிற்பார் தம்மைக் காக்க

சிரித்து நிற்பார்

இரண்டு பக்கக் கதை அன்று பொன்னகரம்
இன்று வரை உயிரோடு இருக்கின்றது
மிரண்டதன்று தமிழுலகம் புதுமைப் பித்தன்
மீட்டெடுத்தார் தமிழ்க் கதையைப் பெருமையுற்றோம்
வறண்டு போய் பல பக்கம் எழுதுகின்றார்
வாழ்த்துகின்றார் அவரையுமே பெரியர் என்று
நிறைந்த நல்ல தமிழறிஞர் இவர்களையே
நெஞ்சினிலே கொள்வதில்லை சிரித்து நிற்பார்

Saturday, November 28, 2009

தியாகத் திருநாள்

இறைவனது கட்டளையை தலைமேலேற்று
இனிய மகன் தனை அறுக்க மனமுவந்த
சிறந்து நின்ற இபுராஉறிம் தன் வழியாய்
செய்தி சொன்னார் இறைவனுமே மிகச் சிறப்பாய்
உளம் நிறைய இறைவனையே கொண்டு உள்ளார்
உயர்ந்து நிற்பார் இறையருளைக் கொண்டு நிற்பார்
தனை மறந்து இறைவனையே நினைவாய்க் கொண்டு
தான் நிற்பார் வென்று நிற்பார் தியாகமாவார்

Thursday, November 26, 2009

விடத்தான் சொன்னார்

ஆசை வைத்தோம் இறைவன் மேல் அதனாலேதான்
ஆளாளுக் கொரு பெயரில் வணங்குகின்றோம்
பூசை வைத்தோம் அதில் கூட இறைவனிடம்
புத்தியற்று எது எதையோ கேட்டு நின்றோம்
வீசு புகழ் வள்ளுவரும் தமிழும் இங்கே
வேண்டாத ஆசைகளை விடுவதற்காய்
தேசு கொண்ட ஆண்டவரைப் பற்றச் சொன்னார்
தெய்வப் பற்று அதனையுமே விடத் தான் சொன்னார்

Wednesday, November 25, 2009

காக்க வேண்டும்

மதம் காட்டிப் பிழைப்பவர்க்கு மானம் இல்லை
மதியில்லை மனிதர் என்னும் நினைப்பு மில்லை
இதம் காட்டி மதம் சொல்வார் சொல்லிச் சொல்லி
இடையினிலே பேதங்கள் ஊட்டிடுவார்
விதம் விதமாய்க் கதை சொல்வார் அனைத்தும் இங்கே
வினையாகி மனிதத்தை அழித் தொழிக்கும்
மதம் பிடித்து ஆடுகின்ற அவரைக் கண்டு
மருந்தளித்துக் கரை சேர்த்துக் காக்க வேண்டும்

துவக்கும்

மதத் தலைவர் அனைவருக்கும் எங்களது
மாபெரிய விண்ணப்பம் அய்யா அய்யா
சிதைத்திங்கு மனித குலம் அழிப்பதற்காய்
செயல்பட்டு நிற்கின்ற ஆட்சியாளர்
விதம் பலவாய் நாடு தோறும் ஆடுகின்றார்
வேதனைகள் விளைக்கின்ற அவரையெல்லாம்
பதம் செய்து திருத்துகின்ற வேலையினைப்
பாங்குடனே நீர் செய்தால் என்ன அய்யா


போதனைகள் போதனைகள் அந்தோ அந்தோ
போதுமய்யா போதுமய்யா தாங்க மாட்டோம்
வேதனைகள் வேதனைகள் தீர்ப்பதற்கே
வேண்டுமய்யா உங்களது அருளும் அன்பும்
சாதனைகள் என்பதுவே மற்றவரைச்
சரிப்பதுவும் ஒழிப்பதுவும் என்று ஆடும்
பேதைகளை மதத்தினின்று விலக்கும் பின்பு
பெரும் போரை அவர்க் கெதிராய்த் துவக்கும்

இயலாராகி

ஆங்கிலத்துப் பள்ளிகளில் தங்கள் வீட்டு
அருமை மிகு பிள்ளைகளைச் சேர்த்து விட்டு
தாய் மொழியின் பெருமைகளை மற்றவர்க்கு
தடித்தனமாய்ப் போதிக்கும் தாக்கரேக்கள்
ஒங்கி இங்கே நிற்பதனைப் பார்த்துக் கொண்டு
ஊமையாய் இருக்கின்ற ஆட்சியாளர்
தாங்குகின்றார் தங்களது பதவிகளைத்
தடுத்தவரைத் தண்டிக்க இயலாராகி

உமக்கு வாய்க்கும்

என் ஜாதி தனைச் சொல்லி துணிக்கடைக்குள்
எனக்கு ஒரு வேட்டி வேண்டும் என்று கேட்டேன்
என் ஜாதித் தோட்டத்துப் பருத்தி தன்னில்
என் ஜாதி நூற்றிட்ட நூலைக் கொண்டு
என் ஜாதி நெய்திட்ட வேட்டி ஒன்று
எப்படியும் வேண்டும் என்று கேட்டு நின்றேன்
மென்னகையில் கடைக்காரர் சொன்ன பதில்
மேன்மை மிகு அம்மணமே உமக்கு வாய்க்கும்

Tuesday, November 24, 2009

இறைவன் இல்லை

கடவுளினை உண்மையென்று கருதுவார்க்குள்
கட்டாயம் மோதல் இல்லை சண்டை இல்லை
மடமையினைக் கொண்டார்க்கு மத்தியில் தான்
மதச் சண்டை இனச் சண்டை சாதிச் சண்டை
இடம் அனைத்தும் கடவுளவன் இடம் தான் என்று
எவர் உணர்ந்து உள்ளாரோ அவர்கள் என்றும்
தடம் மாறிப் போவதில்லை தேர்தலுக்காய்
தன் மதத்தைக் காட்டி நிற்பார்க்கு இறைவன் இல்லை

Saturday, November 21, 2009

என் மதம்

ஆதரவற்று எங்கோ தெருவோரத்தில்
அழுது கொண்டிருக்கின்ற நாயதற்கு
தேடிச் சென்று ணவளித்து காத்தல் ஒன்றே
தெளிவான என் மதம் ஆம் உணர்வீர் நீரே
கோடிக் கணக்கான பணத்தைச் சேர்த்து
கோயில் கட்டும் கொள்ளையர் தம் கோயிலுக்குள்
நாடி நிற்கும் ஆண்டவனார் வரவே மாட்டார்
நமக்குரைத்தார் துறவி விவேகானந்தருமே

Sunday, November 8, 2009

பதிலைத் தாரும்

கோடிகளுக்கு எல்லையிட்டு அவர்கள் தம்மின்
கொள்ளைகளைத் தடுத்தவர் தம் ஆலைகளை
வாடி நிற்கும் ஏழை குலத்திளையோர் தம்மின்
வசம் தந்து அவர் தம்மின் திறமை கொண்டு
தேடி என்றும் வேலை இன்றி அலையும் ஏழை
திரள் தன்னை முழுதாக உழைக்க விட்டால்
கேடு என்ன வந்து விடும் தலைவர்களே
கேட்கின்றேன் வெட்கமின்றிப் பதிலைத் தாரும்

பெற்று உள்ளார்

தனியாக வென்றவர்கள் தமக்கு எல்லாம்
தன்னுடைய அமைச்சர்களாய் இடமளித்து
அரியானா மாநிலத்தின் முதலமைச்சர்
அப்படியே மாநிலத்தைக் காத்து உள்ளார்
இனிப்பான செய்தி இது ஆமாம் ஆமாம்
இரு பெரிய இயக்கங்களுக்கு இடையில் நின்று
தனியாக வென்றாலே அவர்கள் தானே
தம் மக்கள் செல்வாக்கைப் பெற்று உள்ளார்

Saturday, November 7, 2009

சிரிப்பாரே

வள்ளுவர் என்றொரு அறிவுக் கொழுந்தை
வடிவாய்ப் பயந்தாள் தமிழ் அன்னை
உள்ளுவதெல்லாம் உயர்வாய் எண்ண
உலகப் பொதுமறை அவர் தந்தார்
எள்ளி நகையாட ஒழுக்கம் இன்றி
எப்படி யெல்லாம் வாழ்கின்றோம்
வள்ளுவர் நமது சொந்தம் என்றால்
வாய்விட் டனைவரும் சிரிப்பாரே

ஒன்றாவீர்

வணங்கும் விதங்கள் வெவ்வேறாய்
வணங்குகின்றீர் புரிகின்றோம்
வணங்கி நிற்றல் கடவுளையே
வடிவாய் அதையும் உணர்கின்றோம்
பிணக்கெதற்கோ உங்களுக்குள்
பெரியீர் அதுதான் புரியவில்லை
கணக்கு வழக்கு மதம் தானோ
கடவுள் புரிந்தீர் ஒன்றாவீர்

Friday, November 6, 2009

மொழிதான் ஏது?

முல்லைப் பெரியாறா மலையாளிகள்
முடக்குகின்றார் முடக்குகின்றார் அய்யோ அய்யோ
கள்ளத்தனமாகக் காவிரியைக்
கன்னடர்கள் தடுக்கின்றார் அய்யோ அய்யோ
சொல்வோரே இயற்கையினை அழித்தழித்து
சொத்துக்கள் சேர்க்கையிலை நினைத்தீரோ நீர்
கள்ளத்தனச் சொத்துச் சேர்க்கச் சேர்க்க
கண்மூடித் தனமாக இயற்கை கொன்றீர்


அள்ளிக் கொடுக்கின்ற இயற்கையினை
அவமதித்து கோடிகளை அள்ளிக் கொண்டீர்
சுள்ளியாகிக் காடுகளும் வெம்மையிலே
சுடுகாடாய் ஆவதற்கு வழிகள் செய்தீர்
எள்ளி நகையாடும் எதிர் காலம் உம்மை
என்ற எண்ணம் உமக்கேது வெட்கம் ஏது
கள்ளர்களே உம்மைப் போல் கயவர்கள்தாம்
கன்னடத்தில் மலை நாட்டில் பல பேர் உள்ளார்


எல்லோரும் ஆங்காங்கே இயற்கை கொன்று
இல்லத்தில் அலங்காரம் செய்தே வாழ்வீர்
வல்லானாம் இறை தந்த இயற்கையினை
வல்லடியாய்க் கொள்ளைகொண்டீர் குறை சொல்லாதீர்
கொல்கின்றீர் மனித குலம் பணத்தாசையால்
குடும்பத்தோ டழிவீர் நீர் இறைவன் கொல்வான்
சொல்லாதீர் மொழி பேதம் கொள்ளையர்க்கு
சொந்தமாய் நாடேது மொழிதான் ஏது?