பாவாணர் நினைவுஅன்றோ
பாவாணர் தம்மையெல்லாம் மறப்பதென்றால்
பைந்தமிழைத் தாய்த் தமிழை மறப்பதாகும்
தேவாரம் சைவனுக்கு நினைவு என்றால்
தெள்ளுதமிழ்ப் பாவாணர் நினைவு அன்றோ
Monday, February 8, 2010
Sunday, February 7, 2010
பாவாணரைவணங்கி நிற்போம்
பாவாணர் என்றாலே தமிழாம் தாயார்
பக்கத்தில் நிற்கின்றாள் என்றே தோன்றும்
ஆவார் அவரையெல்லாம் மறந்து நிற்கும்
அவலங்கள் தனைநினைந்தால் மனது நோகும்
போவார் மற்றாரெல்லாம் போவார் ஒர் நாள்
பொதிகை மலைத் தமிழன்னை இருக்கும் வரை
பாவாணர் இருப்பார் நம் தமிழாய் வாழ்வார்
பணிந்தவரை வணங்கி நிற்போம் வாரீர் வாரீர்
பாவாணர்
தேவநேயப் பாவாணர் தமிழுக்காகத் தெய்வம் தந்த நன்கொடை காண் வாழ் நாள் தன்னை
பூவுலகின் முதல் மொழியாம் தமிழுக்காகப் போற்றி அதைச் செம்மையுறச் செய்த தீரர்
ஆவதெல்லாம் தமிழாலே என்று நமக்கறிவித்த பேரறிஞர் அவரைப் போன்றோர்
மேவிய நற்றொண்டாலே தமிழாம் தாயாள் மேன்மையுற்றாள் மேன்மையுற்றாள் வென்றும் நின்றாள்
Sunday, November 29, 2009
சிரித்து நிற்பார்
இரண்டு பக்கக் கதை அன்று பொன்னகரம்
இன்று வரை உயிரோடு இருக்கின்றது
மிரண்டதன்று தமிழுலகம் புதுமைப் பித்தன்
மீட்டெடுத்தார் தமிழ்க் கதையைப் பெருமையுற்றோம்
வறண்டு போய் பல பக்கம் எழுதுகின்றார்
வாழ்த்துகின்றார் அவரையுமே பெரியர் என்று
நிறைந்த நல்ல தமிழறிஞர் இவர்களையே
நெஞ்சினிலே கொள்வதில்லை சிரித்து நிற்பார்
Friday, May 22, 2009
வேடம் என்று
தமிழுக்காய் உயிர் கொடுப்பேன் என்று சிலர்
தம்பட்டம் அடிக்கின்றார் பல நாட்களாய்
உமிழ் நீரைக் கூட இவர் பிறருக் கென்று
உதவிடவே மாட்டார்கள் பேச்சு பேச்சு
கமழ் தமிழைக் காப்பாற்ற இவரையன்றி
கனித் தமிழர் யாரும் இல்லை என்றும் சொல்வார்
தமிழுக்கு இவர் தம்மைத் தெரியும் இவர்
தமைக் காக்கப் போடுகின்ற வேடம் என்று
Friday, March 20, 2009
போற்றி நிற்போம்
தமிழ் கற்றார் தன் நிலையை இழப்பதில்லை
தனக்காகப் படித்தாரே தாழ்ந்து நின்றார்
அமிழ்தல்ல நந்தம் மொழி அனைவருக்கும்
அன்னையெனச் சோறூட்டும் அன்பு மொழி
உமிழ் நீரும் தேனாக்கும் அன்பு மொழி
உலகு காக்கச் சொல்லி நிற்கும் தாயின் மொழி
கமழ்கின்ற சந்தனமா இல்லை யில்லை
கண்ணீரைத் துடைக்க வந்த கருணை மொழி
எந்நாடும் நம் நாடு உலக மக்கள்
எல்லாரும் நம் உறவு என்று சொன்ன
பன்னாட்டுச் சிந்தனையை உலகுக்கீந்த
பனிக் கணியன் பூங்குன்றன் நந்தம் தாத்தா
சொன்னார்கள் நல்லதெல்லாம் உலகம் வாழச்
சொன்னார்கள் நமக்கென்று மட்டுமின்றி
கண்ணாகப் போற்றி அந்த வழியில் வாழ்ந்து
கண்ணியத்துத் தமிழ் அன்னை போற்றி நிற்போம்
Thursday, February 19, 2009
சொந்தமில்லை
கை கட்டி வாய் பொத்தி பிச்சையேற்றுக்
கனித்தமிழை முறையாக உணர்ந்தவர்கள்
பை தன்னை நிரப்புதற்காய் மானம் விட்டு
பைத்தியங்கள் முன்னாலே நிற்பதில்லை
வைதாலும் ஆளை வைத்து மிரட்டினாலும்
வண்டமிழை யாரிடத்தும் விற்பதில்லை
பொய்யாக வாழ்ந்திடவே நடிப்பார் சிலர்
பொதிகைத் தமிழ் அவருக்குச் சொந்தமில்லை
Wednesday, February 18, 2009
தமிழன்னை துன்பம் கொண்டு
ஆட்சியாளன் தவறு தன்னை சுட்டிக் காட்டி
அவன் அவனைத் தண்டித்து மரணம் கொள்ள
காட்சி அதைத் தமிழர்களின் மனதில் எல்லாம்
கண்ணகியாள் வழியாக இளங்கோ தந்தார்
மாட்சிமை சேர் மனு நீதிச் சோழன் அவன்
மகனையே தன் தேர்க்காலில் இட்டுக்கொன்ற
ஆட்சி நெறி தன்னை அன்றே சேக்கிழார் தான்
அழகான தமிழ் மொழியில் நமக்களித் தார்
பேச்சு வெறும் பேச்சு இதை அரங்கம் தோறும்
பேசுகின்றோம் மகிழுகின்றோம் கலைகின்றோம் நாம்
கூச்சம் இல்லை இங்கு வாழ -- கொடுமைகளின்
கூத்தாட்டம் கண்டும் நாம் வாழுகின்றோம்
ஆச்சிகளின் காலத்தில் தமிழர் ஆண்ட
அறநெறிகள் தனை நினைத்தே ஏங்குகின்றோம்
போச்சு அந்தக் காலமெல்லாம் போச்சு என்றே
புலம்புகின்றோம் அழுகின்றோம் உயிர் வாழ்கின்றோம்
ஆட்சியாளர் தமைப் புகழ்தல் அவர்கள் வீட்டு
அடுக்களையைப் பாராட்டிக் கவி படைத்தல்
கூச்சமின்றி அவர்கள் வீட்டு நாயைக் கூட
குளிப்பாட்டல் அதற்கும் கூட நற்றமிழில்
பாட்டெழுதல் அது குரைத்தால் அதற்கும் கூட
பைந்தமிழில் விளக்கங்கள் எழுதிப் போற்றல்
கூட்டம் ஒரு கூட்டம் இதை பெற்றதாலே
குமுறுகின்றார் தமிழன்னை துன்பம் கொண்டு
Saturday, February 7, 2009
அழியச் செய்தோம்
தமிழுக்காய் தங்களையே அழித்துக் கொண்டோர்
தாய் தந்தை குடும்பத்தை மறந்து நின்றோர்
அமிழ்தொழிக்கும் இனிய நந்தம் மொழி தமக்காய்
அன்றிருந்து வறுமை தமக்கு ஆளாய்ப் போனோர்
இமை மூடும் வரை மொழிக்காய் தம்மைத் தந்தோர்
இல்லையென்று போனாரா இன்னும் வாழ்ந்தார்
நமை நினைத்தால் கேவலமே மிஞ்சும் அந்த
நல்லவர்கள் குடும்பமெல்லாம் அழியச் செய்தோம்