Wednesday, February 18, 2009

தமிழன்னை துன்பம் கொண்டு

ஆட்சியாளன் தவறு தன்னை சுட்டிக் காட்டி
அவன் அவனைத் தண்டித்து மரணம் கொள்ள
காட்சி அதைத் தமிழர்களின் மனதில் எல்லாம்
கண்ணகியாள் வழியாக இளங்கோ தந்தார்
மாட்சிமை சேர் மனு நீதிச் சோழன் அவன்
மகனையே தன் தேர்க்காலில் இட்டுக்கொன்ற
ஆட்சி நெறி தன்னை அன்றே சேக்கிழார் தான்
அழகான தமிழ் மொழியில் நமக்களித் தார்


பேச்சு வெறும் பேச்சு இதை அரங்கம் தோறும்
பேசுகின்றோம் மகிழுகின்றோம் கலைகின்றோம் நாம்
கூச்சம் இல்லை இங்கு வாழ -- கொடுமைகளின்
கூத்தாட்டம் கண்டும் நாம் வாழுகின்றோம்
ஆச்சிகளின் காலத்தில் தமிழர் ஆண்ட
அறநெறிகள் தனை நினைத்தே ஏங்குகின்றோம்
போச்சு அந்தக் காலமெல்லாம் போச்சு என்றே
புலம்புகின்றோம் அழுகின்றோம் உயிர் வாழ்கின்றோம்


ஆட்சியாளர் தமைப் புகழ்தல் அவர்கள் வீட்டு
அடுக்களையைப் பாராட்டிக் கவி படைத்தல்
கூச்சமின்றி அவர்கள் வீட்டு நாயைக் கூட
குளிப்பாட்டல் அதற்கும் கூட நற்றமிழில்
பாட்டெழுதல் அது குரைத்தால் அதற்கும் கூட
பைந்தமிழில் விளக்கங்கள் எழுதிப் போற்றல்
கூட்டம் ஒரு கூட்டம் இதை பெற்றதாலே
குமுறுகின்றார் தமிழன்னை துன்பம் கொண்டு

1 மறுமொழிகள்:

said...

//ஆட்சியாளர் தமைப் புகழ்தல் அவர்கள் வீட்டு
அடுக்களையைப் பாராட்டிக் கவி படைத்தல்
கூச்சமின்றி அவர்கள் வீட்டு நாயைக் கூட
குளிப்பாட்டல் அதற்கும் கூட நற்றமிழில்
பாட்டெழுதல் அது குரைத்தால் அதற்கும் கூட
பைந்தமிழில் விளக்கங்கள் எழுதிப் போற்றல்
கூட்டம் ஒரு கூட்டம் இதை பெற்றதாலே
குமுறுகின்றார் தமிழன்னை துன்பம் கொண்டு//

ஒவ்வொரு வரியும் சாட்டையடி அய்யா!