தானே தனக்குப் பட்டம் போடா
தனிப் பெருங் கவிஞனவன்
தமிழாள் தானே தேடிக் கண்டு
தழுவிய ஞான மகன்
ஊனமென்பதை உள்ளம் கொள்ளா
உத்தமப் பேரறிஞன்
உலகை உணர்த்தும் பாடல்கள் அளித்த
உயர் ரகச் சித்த னவன்
கானம் அனைத்தும் செம்மையுறச் செய்த
கவிஞரில் மேதையவன்
கடவுள் விரும்பும் கனித் தமிழ்ப் பாடல்
கனிந்திடத் தந்த மகன்
தேனாம் தமிழை வானவர் அருந்திடத்
தேடியே கொண்டு சென்றார்
தெள்ளு தமிழ் அன்னை விண்ணையும் ஆண்டிட
தேர்ந்தங்கு சென்று வென்றான்
Monday, March 12, 2012
வென்றான்
Sunday, March 11, 2012
கண்ணதாசனைப் பற்றி
அன்புடையீர் வாழ்க தமிழுடன்.
எனது அன்பு நண்பர் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் கடந்த மாதம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கண்ணதாசன் அவர்களைப் பற்றி உரையாற்றிய போது அவரது திரைப் படப் பாடல்கள் யாவுமே பழைய இலக்கியங்களின் சாறு என்பது போலப் பேசியதாக அவர் ஆசிரியராக உள்ள தினமனி நாளிதழில் செய்தி கண்டேன்.அது எத்தனை பெரிய தவறு என்பதனை எனது உள்ளம் எனக்கு உணர்த்தியதாலே கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள் எத்தனை சிறந்தவை என்பதனை உணர்த்தும் வண்ணம் தொடர்ந்து எழுத ஆவல் கொண்டுள்ளேன். இறையருள் கூட்டுவித்தால் நாளைக்கே தொடங்கலாம் என்று இருக்கின்றேன். நன்றி அனைவருக்கும் அன்புடன் நெல்லைகண்ணன்
Friday, June 24, 2011
நம்மோடும் தமிழரோடும்
பிறப்பாலே கவியரசர் அதனாலே தான் அவர்
பேசி நின்ற வார்த்தை யெல்லாம் கவிதையாச்சு
சிறப்பாகத் தமிழன்னை சிலரை மட்டும்
செருக்கோடு பெற்றுள்ளாள் மனம் விரும்பி
பொறுப்போடு இவர் தந்த கவிதைகளோ
பொதிகை மலை முச்சூடும் மணம் பரப்பும்
இருப்பார் நம் கவியரசர் கண்ணதாசன்
என்றென்றும் ந்ம்மோடும் தமிழரோடும்