Monday, March 12, 2012

வென்றான்

தானே தனக்குப் பட்டம் போடா
தனிப் பெருங் கவிஞனவன்
தமிழாள் தானே தேடிக் கண்டு
தழுவிய ஞான மகன்
ஊனமென்பதை உள்ளம் கொள்ளா
உத்தமப் பேரறிஞன்
உலகை உணர்த்தும் பாடல்கள் அளித்த
உயர் ரகச் சித்த னவன்
கானம் அனைத்தும் செம்மையுறச் செய்த
கவிஞரில் மேதையவன்
கடவுள் விரும்பும் கனித் தமிழ்ப் பாடல்
கனிந்திடத் தந்த மகன்
தேனாம் தமிழை வானவர் அருந்திடத்
தேடியே கொண்டு சென்றார்
தெள்ளு தமிழ் அன்னை விண்ணையும் ஆண்டிட
தேர்ந்தங்கு சென்று வென்றான்

0 மறுமொழிகள்: