Sunday, November 28, 2010

ஏனில்லை

நாணமின்றிக் கோடிகளை எடுத்துக் கொண்டு
நாட்டி லுள்ளோர் பதை பதைக்க பதட்டமின்றி
ஊன மனம் கொண்டோர்கள் பதவிகளில்
உட்கார்ந் திருக்கின்றார் அரசர்கள் போல்
ஞானமதை உலகிற்கு வழங்கி வென்ற
நற்றமிழர் நாட்டினிலே தான் இந்தக் கேடு
ஏனிவர்கள் குடும்பத்தில் எவருக்குமே
இல்லை அந்த வெட்க மெனும் உயர்ந்த பண்பு

Saturday, November 27, 2010

ஏழை மக்கள்

பணம் என்னும் பேரரக்கன் பிடியில் சிக்கி
பாவமதைக் குலச் சொத்தாய் ஆக்கிக் கொண்டு
குணம் என்ற ஒரு சொல்லைத் தமிழினிலே
கூடாத சொல்லாக ஆக்கி வாழும்
நிணம் தசை நார் எலும்பெல்லாம் ஊழலாக
நெஞ்சினிலே ஈவிரக்கம் எதுவும் இன்றி
வலம் வருவார் தனைக்கண்டு பொறுமுகின்றார்
வாழ்வதனை இழந்து நிற்கும் ஏழை மக்கள்

Thursday, November 25, 2010

திகைக்கின்றாரே

பசிக்கு ஒரு பழம் எடுத்த இளைஞன் அங்கே
பாருங்கள் சிறையினிலே வாடுகின்றான்
வசிப்பதற்கு இடம் இன்றி ஏழையர்கள்
வதைபட்டு சாலைகளில் உறங்குகின்றார்
அசைப்பதற்கு முடியாமல் கோடிகளை
அப்படியே விழுங்கியவர் வாழுகின்றார்
திசை தோறும் இருக்கின்ற தெய்வங்களே
தினந்தோறும் வணங்குகின்றார் திகைக்கின்றாரே

Tuesday, November 23, 2010

கண்ணதாசன் உதவினார்

எனது பாசத்திற்குரிய நண்பர் ஒருவர் எத்தனை சொல்லி
யும் குடிப் பழக்கத்திலிருந்து விடு படவில்லை. தொலை
பேசியில் ஒரு நாள் அழைத்து கண்ணதாசன் அவர்களைப்
பற்றி ரெண்டு வரியில் ஒரு கவிதை சொல்லுங்களேன் என்றார்
சொன்னேன்

மயக்குகின்ற பாடல்களை அளித்தார்
மயக்கி நின்ற கேடுகளால் மரித்தார்

இறையருள் என்று கருதுகின்றேன். இந்த வரிகளைக் கேட்ட் பின்
அவர் குடிப்பதை நிறுத்தி விட்டார்

Friday, November 19, 2010

அன்னை இந்திரா

தாயாக நாங்களெல்லாம் வணங்கி நின்ற
தங்க மகள் நேரு எனும் மாமனிதன்
ஒயாமல் சிறையிருந்து கடிதங்களில்
உலகுணர்த்த உணர்ந்து வென்ற சிங்கமவள்
பூவுலகு அறியாமல் புத்தரது புன்னகையாய்
புது விதமாய் அணு வெடித்தாள்
நாவாரப் பாடி நிற்போம் அன்னை யெங்கள்
நற் சக்தி பெருஞ் சக்தி இந்திராவை

Thursday, November 18, 2010

கமல் உபதேசம்

கமல் என்னும் பெரு நடிகன் மதத்தைப் பற்றிக்
கருத்ததனைச் சொல்லி நின்றார் மகளிடத்தில்
மதவுணர்வைக் காமம் போல் வீட்டிற்குள்ளே
மறைத்து வைக்க வேண்டும் என்று மிகச் சிறப்பு
இதமற்றக் தன் காம வாழ்க்கை தன்னை
எல்லார்க்கும் காட்டி மகிழ் கமல் தான் சொன்னார்
விதம் விதமாய் நடிக்கின்றார் என்ன சொல்ல
வீட்டு மகள் கடவுளினை வணங்குவாராம்


தன் மகளின் நம்பிக்கை அதுவாம் கமலார்
தான் அதனைச் சொல்லுகின்றார் மகளிடத்தில்
என் கேள்வி ஒன்றே தான் அய்யா உங்கள்
இனிய மகள் பகுத்தறிவை வளர்க்கா நீங்கள்
எம் மக்கள் தமக்கு இதைச் சொல்லுதற்கு
எதற்காக முயலுகின்றீர் சரியா சொல்லும்
உம் வீட்டில் உம் கொள்கை இல்லை பின்னர்
ஊருக்கு உபதேசம் எதற்கு அய்யா

Wednesday, November 17, 2010

உணர்த்தி நின்றார் (பக்ரித்)

காலம் கடந் தளித்த குழந்தை தன்னைக்
கடவுளரே கேட்கின்றார் அறுத் தளிக்க
சீலம் நிறைந்து நிற்கும் இபுராஉறிமும்
செய்தி சொன்னார் மகனிடத்தில் சிரித்தவாறே
வாழ்வதனைத் தந்தவரே கேட்கும் வாய்ப்பை
வழங்கியதில் மகன் மகிழ்ந்தார் இறைவனது
ஆழ் அன்பை அவர் உணர்ந்தார் மனம் நிறைந்தார்
ஆண்டவரோ நல் வழியை உணர்த்தி நின்றார்

Sunday, November 14, 2010

கூசுதிங்கு

வாசலிலே நிற்கின்றார் சோனியாவும்
வளர் தலைவன் ராகுலும் வந்த வண்டி
ஏன் சரியாய் வரவில்லை என்று நோக்க
இருவரையும் அத்வானி பார்த்து விட்டார்
பாசமுடன் இருவரையும் அழைத்தார் அங்கே
பக்கத்தில் உள்ள தன் அறைக்குச் சென்றார்
நேசத்துடன் அவர் மகளும் இருவருக்கும்
நிறைவான செய்தி சொன்னார் அத்வானிக்கு


வாசமான பிறந்த நாள் அன்றே என்று
வாழ்த்தினர் இருவருமே அத்வானியை
ஆசையுடன் இருவருக்கும் தேனீர் தந்தார்
அன்பு மகள் இருவருமே அருந்தி வென்றார்
தூசெனவே அரசியலைத் தூரத் தள்ளி
தூய்மையுடன் வாழ்கின்றார் வடக்கில் நன்கு
ஒசை பெற்ற உயர் குலமாம் தமிழ்க் குலமோ
ஒகோ கோ சொல்லுதற்கே கூசுதிங்கு

பெருமை கொள்வோம்

நேரு என்ற மா மனிதன் பாரதத்தை
நெஞ்சுக் குள்ளே வைத்துக் காதலித்தான்
ஊரு லகம் எல்லாமே போற்றும் நல்ல
உயர் குணங்கள் அனைத்தையுமே கொண்ட தோழன்
சீருடைய சிந்தனைகள் கொண்ட மேலோன்
செம்புடலின் காந்தியவர் தந்த செல்வம்
யாரவர்க்கு நட்பு என்றால் குழந்தைகளே
யாம் அவரைப் பாடுவதில் பெருமை கொள்வோம்

Saturday, November 13, 2010

ரத்தோர் என்னும் மிருகம்

சிறு பிள்ளை தனை மிரட்டிக் கற்பழித்த
சிறை யிருந்த அதிகாரி மீண்டும் வந்தார்
உறைந்தார்கள் மனிதரெல்லாம் அய்யோ அய்யோ
உயர் பதவி உதவி யன்றோ காக்கின்றது
மறை நூற்கள் வேதங்கள் மலிந்த நாட்டில்
மனிதர்களே இது என்ன கொடுமை பாரீர்
அறைந் திவரைக் கொல்லுகின்ற கடவுளரும்
அதிகார வர்க்கத்தின் அடிமை தானோ

சிறுமியவர் முகம் பார்த்தார் இலையோ அந்த
சிபிஐ கூட்டத்தார் வெட்கம் இன்றி
உறுதியில்லை குற்றம் என்று சொல்லுகின்றார்
உச்சமாம் நீதி மன்றம் தனிலே நின்று
அருகதையே யற்றவர்கள் எல்லாம் இங்கே
அதிகாரி ஆனதனால் வந்த கேடு
பெருமை மிக்க பாரதமே எங்கள் தாயே
பீழை கொண்டார் உன்னையும் தான் கற்பழித்தார்

Wednesday, November 10, 2010

அபிராமி கேட்க வேண்டும்

அறிவற்ற பணக்காரர் தம்மையெல் லாம்
அடிமையென வாக்கி அவர் பணத்தில் நன்கு
செறிவாகிப் பறக்கின்றார் விமானம் தன்னில்
செந்தமிழைக் காட்டி அங்கு ஏய்க்கின்றார் காண்
விரிவாக்கி பண மழையில் நனைகின்றார் பார்
வெற்றி வெற்றி என்று வேறு நடிக்கின்றார் காண்
பொறியற்ற விலங்கை விடக் கேவலங் காண்
புல்லர் தமை அபிராமி கேட்க வேண்டும்

Monday, November 8, 2010

உமிழுவார்கள்

கை பிடித்துக் கால் பிடித்து வாழுகின்றார்
கவிஞரென்றும் சொல்லுகின்றார் என்ன செய்ய
பொய்யுரைத்துப் பணம் சேர்த்தோர் தங்களது
புறக்கடையை அடுக்களையைப் பேணுகின்றார்
மெய்யற்ற துறவிகளின் தொண்டராகி
மென் மேலும் நூல் எழுதிப் பணமும் கொள்வார்
அய்யகோ இவரெல்லாம் வாழ்வதாக
ஆர் நினைப்பார் காறித் தான் உமிழுவார்கள்

Sunday, November 7, 2010

அமைச்சரென்ற பதவி கொண்டு

பணம் ஒன்றே வாழ்க்கை யென சேர்த்து வைக்கும்
பகட்டான தலைவர்களே உங்களால் தான்
தினம் இங்கே கொலை கொள்ளை கற்பழிப்பு
தெய்வமெனும் குழந்தைகளைக் கொல்லுகின்றார்
மனமில்லாக் கொள்ளையர்கள் நீங்களன்றோ
மணமில்லாப் பணம் பெரிதாய்க் காட்டிக் கொன்றீர்
குணமொன்றே பெரிதென்ற காந்தி மகான்
கொள்கையினை விட்டீர்கள் குடும்பம் காப்பீர்


உம் வீட்டில் மரணம் என்றால் ஒலமிட்டீர்
ஊர் வீட்டு மரணங்களில் கவலையேது
தம் பெண்டு பிள்ளை யென்றே வாழ்க்கை கொண்டீர்
தரமின்றிப் பணம் சேர்ப்பீர் வெட்கம் இன்றி
புன்னகைப் பூக் குழந்தைகளைக் கொல்லுகின்றார்
பொருள் கேட்டுத் தா என்று மிரட்டுகின்றார்
மன்னவரே நீங்களும் தான் கொல்லுகின்றீர்
மதிப்பாக அமைச்சரென்ற பதவி கொண்டு

Friday, November 5, 2010

ஏழையர் தீபாவளி

முன்னும்
கவலை
பின்னும்
கவலை
நடுவில்
ஒரு நாள்
தீபாவளி

வா மீத முலை நூலில் இருந்து

முன்னொரு காலம்

தவறுகள் செய்தே
மகிழ்ந்த மகனைத்
தந்தையும்
தாயும்
சேர்ந்து
கொன்ற
நாள்