சொர்க்கத்தைத் திறந்து வைத்து மிகக் கொடிய
சூதாளர் நரகத்தை அடைத்து வைத்து
மக்களெல்லாம் இறைவனது மாண்புணர்ந்து
மண்டியிட்டுத் தொழுது நின்று பணிவுடனே
தக்க படி நோன்பதனை ஏற்கும் மாதம்
தனியாக முப்பது நாள் ரமலான் ஆமாம்
எக்கணமும் எப்பொழுதும் இறைவனையே
ஏற்றி நிற்கும் இசுலாத்தார் இனிய மாதம்
Tuesday, August 2, 2011
ரமலான் நோன்பு
Wednesday, February 16, 2011
நபி பெருமான்
தொழுது நிற்பீர் இறைவன் அவன் ஒருவனையே
தொல்லுலகை வாழ்க்கையினைத் தந்தவனை
அழுது நிற்கும் ஏழையர்க்கு உதவி நிற்பீர்
அல்லாஉற் அவர் ஆசி முழுதும் உண்டு
பழுதற்ற வாழ்க்கையினைக் கொண்டு வாழும்
படைத்தவரை ஐந்து நேரம் பணிந்து நில்லும்
விழுதாகி மனித குலம் தழைப்பதற்காய்
வீரர் வந்தார் நபி பெருமான் இன்று போற்ற
Monday, May 25, 2009
குரான் கருத்து
வாழ்நாளை நீ வாழ்ந்த வழியைச் சொல்லு
வளம் சேர்த்த வழிகளினைச் சொல்லி நில்லு
சூழ்ந்த செல்வம் செலவான வழியைச் சொல்லு
சுக இளமைக் காலத்தின் வாழ்வைச் சொல்லு
தேர்வான உன் அறிவால் மனித வாழ்வில்
தேர்ந்தெடுத்து நீ செய்த செயல்கள் சொல்லு
ஒர்ந்து இதனைச் சொல்லாமல் இறைவன் அவன்
உயர் நீதி மன்றம் விட்டு விலகொணாது
Thursday, May 21, 2009
யார் வீரர் நபி பெருமானார்
யார் வீரன் என்பதற்கு நபி பெருமான்
இயம்பி நின்ற நல்லுரையைக் கேட்டீர் என்றால்
நாம் வீரன் ஆவதற்கு ஏற்ற தொரு
நல் வாய்ப்பைப் பெற்றிடுவீர் ஆமாம் ஆமாம்
போர் முனையில் எதிரிதன்னை வீழ்த்துவது
போற்றுகின்ற வீரமென ஆவதில்லை
ஆம் கெட்ட கோபமதை விட்டு விட்டு
ஆளாகி நிற்பாரே அவரே வீரர்
Wednesday, October 1, 2008
நபி பெருமானார் அருள் மொழிகள்
உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே
உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம்
நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே
நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய்
மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார்
மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார்
கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை
கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார்
படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர்
பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை
இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில்
எல்லோர்க்கும் உதவி செய்வீர் நன்மை செய்வீர்
கடையனென்று எவனுமில்லை இறைவன் முன்னே
கருணையில்லார் மட்டுமே கடையராவார்
உடைமையென்று மென்மேலும் சேர்த்து சேர்த்து
உள்ளமின்றி வாழாதீர் வழங்கி நில்லும்
கொடுமையினைச் செய்வானைக் காப்பாற்றுங்கள்
கொடுமையினால் வீழ்ந்தானைக் காப்பாற்றுங்கள்
பட படத்தார் கேட்டார்கள் பெருமானிடம்
பாவியினைக் காப்பதுவா எவ்வாறென்று
கொடுமையினைச் செய்வானுக்கு அன்பு சொல்லி
கொடுமையினைச் செய்யாமல் திருத்திடுங்கள்
படுகிறவன் துயரத்தை உணர்த்தி அந்தப்
பாவத்தில் இருந்து அவனை விலக்கிடுங்கள்
நல்லவரைப் பதவியிலே அமர்த்தல் விட்டு
நாசவேலை செய்வோரை அமர்த்துகின்றார்
அல்லாவை அவரளித்த தூதர் தம்மை
ஆண்டவனுக்கு அஞ்சி வாழும் உண்மையோரை
பொல்லாத அச் செயலால் புறக்கணித்து
பொறுப்பின்றி அவர்கட்குத் துரோகம் செய்வார்
அல்லாவின் தீர்ப்பு நாளில் அவர்க்கு அல்லா
அளிப்பாரே நரகத்தை உண்மை உண்மை
கல்வி வழி ஞானத்தைப் பெற்றோரன்றி
கடவுளினைத் தீயவர்கள் அறிவதில்லை
நல்ல கல்வி இறைவனையே நம்பி நிற்கும்
நலமற்றோர் இறை இல்லை என்று நிற்பார்
வல்லவனாம் இறைவனையே வணங்கி நிற்போர்
வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார் இறையருளால்
அல்லாவை வணங்கி நிற்பீர் அருள் பெறுவீர்
அகிலமெல்லாம் அவன் கொடையே பணிந்து நிற்பீர்
Saturday, September 27, 2008
உதவுங்கள் நபி பெருமான்
ஆண்டவர்க்கு அஞ்சுங்கள் என்ற உண்மை
அருளி நின்றார் நபி பெருமான் மீண்டும் மீண்டும்
வேண்டி நிற்கும் ஏழையர்க்கு உதவல் தன்னை
விரும்பி அன்பாய்ச் செய்க என்றும் விளக்கம் தந்தார்
தூண்டி அதை நோன்போடு செய்வீர் என்றால்
தூய்மையுறும் உம் வாழ்வு இறைவன் உம்மை
வேண்டு மட்டும் வாழ்த்தி நன்கு வாழ வைப்பான்
விரைவாக உதவுங்கள் ஏழையர்க்கு
நபி பெருமான் சொன்ன பதில்
இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று
இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்
வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்
விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்
இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்
எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்
இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்
இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்
(வேத வரிகளும் தூதர்மொழிகளும்)
வெளியீடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை சென்னை 12