Showing posts with label கல்வி நிலையம். Show all posts
Showing posts with label கல்வி நிலையம். Show all posts

Wednesday, June 30, 2010

எழில் சுத்தானந்தன் என்றும் உள்ளார்

நெற்றியிலே திருநீறு உள்ளம் போல
நெஞ்சார அன்பு செய்யல் உண்மையாக
பற்றாளர் தமிழ்க் கடவுள் முருகன் மீது
பண்பாளர் பழகுதற்கு நட்புக் கொள்ள
கண் போன்ற கல்வியினைத் தருவதிலே
கலைமகளின் தலைமகனாய் வாழ்ந்து வென்றார்
என் போன்றோர் இதயத்தில் என்றும் உள்ளார்
எழில் சுத்தானந்தன் என்றும் மறையவில்லை

Tuesday, January 19, 2010

நாணமில்லை

படிப்பாளி ஆக்குகின்றார் அனைவரையும்
பண்பாளி ஆக்குதற்கு விரும்பாராகி
எடுப்பார் கைப் பிள்ளையென ஆகிடாமல்
இழிந்துள்ள தலைவருக்கு இணையாய் வாழ
கெடுப்பதற்கே கல்வி யென்ற கீழ்மை நிலை
கேடு கெட்ட வணிகமென கல்வி இங்கு
தடுப்பதற்கு யாருமில்லை அகிம்சை வழித்
தந்தையவர் படம் உண்டு நாணமில்லை

Tuesday, July 28, 2009

வாழப்பாரும்

குழந்தைகளைக் கொல்லுகின்றார் பள்ளி என்னும்
கொலைக்கூடம் தன்னில் கொண்டு விடுகின்றாரே
நிரந்தரமாய் வாழ வைக்கும் கல்வியினை
நெஞ்சுணர்ந்து பண்புயரும் கல்வியினை
சிறந்தோங்கும் செந்தமிழை நந்தம் தாயைச்
செழிப்பாக்கச் செய்கின்ற கல்வி உண்டோ?
வரந் தந்து இறைவன் தந்த குழந்தைகளை
வதைக்காதீர் வதைக்காதீர் கொடுமை அது


எப்போதும் படிப்பு என்னும் கொடுமை அது
இதயமே இல்லாராய் அவரை மாற்றும்
தப்பாகிப் போட்டி என்று இருவர்க்குள்ளே
தரமில்லா உணர்வுகளைத் திணித் தொழித்தல்
இப்படியே செய்கின்ற கல்விக் கூட
இடும்புகளால் மனித உணர்வற்றே போகும்
கொப்பாகிக் கிளையாகி மலருமாகிக்
கொடுக்கின்ற காய் கனிகள் உதிருமோதான்


அப்பாவாய் அம்மாவாய் உம்மை ஆக்கி
அருள் செய்த ஆண்டவனும் அவரே யன்றோ
தப்பான கல்வி முறை தன்னில் கொண்டு
தண்டனைகள் தரலாமோ உணர்வீர் நீரே
எப்படியும் படிப்பார்கள் குழந்தைகளும்
இந்த நிலை உமக்கு உண்டோ அந்த நாளில்
அப்பாவே அம்மாவே உமக்குச் சொல்வேன்
அப்பாவாய் அம்மாவாய் வாழப் பாரும்

Thursday, July 16, 2009

கல்வித் தந்தை ரோச்

நல்லதொரு தந்தையினை ரோச் என்னும்
நாயகரை தொலைக் காட்சி ஒன்றில் கண்டேன்
வல்லவராம் அவர் வாழும் திருச்சி நோக்கி
வாழ்த்தி நின்றேன் போற்றி நின்றேன் ஆடி நின்றேன்
சொல்லுகின்றேன் அவர் பெருமை ஆகா ஆகா
சுகம் சுகமே குழந்தைகட்கு உணர வேண்டும்
கொல்லாதீர் குழந்தைகளை பள்ளி என்னும்
கொலைக் கூடம் தனில் அளித்தல் நிறுத்துவீரே


பெண் குழந்தை இருவரையும் பள்ளியிலே
பெற்றோர்கள் இருவருமே பார்க்கப் போக
கண் திறந்த மனிதராய் ரோச்சும் ஆன
கதை கேட்டேன் மெய் சிலிர்த்தேன் வாழ்க வாழ்க
உண்மை இது உணர்ந்து உங்கள் குழந்தைகளை
உடன் காக்க உரிய வகை செய்வீர் நீரே
பண் பாடி குழந்தைகளும் மகிழ்ச்சி பொங்க
படிப்பாரே உயர்வாரே மனிதராக


காலை முதல் இரவு வரை படித்தல் என்ற
கட்டாயத் திட்டம் ஒன்றை அவர்கள் பள்ளி
வேலையென அறிவிக்க ரோச் அவர்கள்
விரைவாக ஒரு முடிவை எடுத்தார் அன்றே
நாளை முதல் பிள்ளைகளே பள்ளி வேண்டாம்
நலமான கல்வியினை மனம் மகிழ
வேளை தேர்ந்து வீட்டிலேயே கற்றிடுவீர்
விரும்புகின்ற நேரங்கள் தன்னில் எல்லாம்


கோழையென ஆக்குகின்ற இந்தக் கல்வி
கொடுமையிலே நீர் வாட வேண்டாம் என்றே
பேழை மன ரோச் எடுத்த முடிவில் இன்று
பெரு வெற்றி இருவருமே மிகச் சிறப்பாய்
வாழையடி வாழையென வளரும் கல்வி
வடிவத்தில் வெற்றி கண்டு உயர்ந்துள்ளார்
தோழரென அனைவருக்கும் உதவுகின்ற
தொண்டு மனப் பான்மையுடன் வென்று உள்ளார்


முதற் பெண்ணோ ஐஏஎஸ் எழுதுகின்றார் தங்கை
முதுகலையில் வெல்கின்றார் மேலும் கற்க
கதையில்லை கண் முன்னர் திருச்சியிலே
காட்டியுள்ளார் ரோச் என்னும் நல்ல தந்தை
இதை உணர்வீர் மனித உணர்வற்றவராய்
இதயமின்றிக் குழந்தைகளைக் கொல்லுகின்ற
வதைக் கூடப் பள்ளிகளை விட்டொழிப்பீர்
வாழ வையும் குழந்தைகளை மனிதராக

Wednesday, July 15, 2009

நசுக்கலாமோ? குழந்தைகளும் கல்வியும்

விற்கின்ற கல்வியிலே மாட்டிக் கொண்டு
வீணாகப் போகின்றார் குழந்தைகளும்
கற்கின்ற கல்வியில்லை விளையாட்டில்லை
கனம் கனமாய் மண்டையிலே ஏற்றும் வேலை
பிற்காலம் உடல் நோயும் மனத்தில் நோயும்
பெற்றழியும் கல்வியினை திணிக்கின்றார் காண்
பெற்றோரும் சேர்ந்திந்தப் பெரும் பிழையைப்
பீடையினைச் சேர்க்கின்றார் என்ன செய்ய?


மதிப்பெண்கள் மதிப்பெண்கள் பெற்றால் போதும்
மனித மனம் உயர்ந்த குணம் எல்லாம் வேண்டாம்
விதிக்கின்ற விதிகளிலே பண்பு இல்லை
வெல்லுகின்ற நல்ல குணம் சொல்வதில்லை
கதியிதிலே மாட்டி நாட்டின் கண்மணிகள்
கலங்குகின்றார் புலம்புகின்றார் துன்பம் துன்பம்
எது எதிலே போய் முடியும் இந்த நாட்டின்
எதிர்காலம் அவர்களன்றோ நசுக்கலாமோ?

Tuesday, July 8, 2008

முனிரெத்தினத்தின் கல்வி நிலையங்கள்

அன்புடையீர்.
வணக்கங்கள்.முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அருமை நண்பர் திரு முனிரத்தினம்
அவர்களின் கல்வி நிறுவனங்களின் புது மாணவர்களை வரவேற்கும் விழாவில் தலைமை
விருந்தினராகக் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.ஆர்.எம்.டி. ஆர்.எம்.கே.பொறியியற் கல்லூரி
கள்.துர்கா தேவி பாலி டெக்னிக் கல்லூரி சிறு குழந்தைகளுக்கு உறைவிடப்பள்ளி என்று 500
ஏக்கரில் அந்தக் கல்வி நிறுவனங்கள பரந்து விரிந்து இருப்பதனைப் போலவே அதனை நிர்வகிக்
கின்ற முனிரத்தினத்தின் மனைவியும் மகனும் மாமனார் அவர்களும் பரந்த உள்ளத்தினராகவே
உள்ளனர்.சுத்தம் சுத்தம் கல்லூரிகள் அத்தனை சுத்தம்.மாணவர்களைப் பார்க்கச் செல்கின்ற பெற்
றோர் நண்பர்கள் யாரெனினும் அங்கே உணவருந்தாமல் வர முடியாது.நல்ல அருமையான உணவு
அத்தனை கல்லூரிகளும் ஒரே வளாகத்தினுள் இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் தனித் தனி விளை
யாட்டு அரங்குகள்.குளிருட்டப்பட்ட உடற் பயிற்சிக் கருவிக் கூடங்கள்.150க்கும் மேற்பட்ட
பேருந்துகள்.ஒட்டுநர்களிலிருந்து அனைவருக்கும் மிக மிகச் சுத்தமான உணவருந்தும் இடங்கள்.
அத்தனையும் சுத்தமான இடங்கள். ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்கு தனித் தனி முடி
திருத்தும் நிலையங்கள் குளிரூட்டப் பட்டவை.குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளியின் சிறப்பை
வரிகளில் அடக்கி விட முடியாது.ஒழுக்கம் மாணவர்களுக்குச் சரியான முறையில் உணர்த்தப் பட்
டுள்ளது.எந்த மாணவரிடமும் கைத் தொலைபேசி கிடையாது.உடை என்ற பெயரில் கண்ணியக்
குறைவிற்கு அனுமதி இல்லை.மிக மிக என்னை வியப்பிலாழ்த்தியது முனிரத்தினம் அவர்களது
மொத்தக் குடும்பமும் காலை 8 மணிக்குக் கல்லூரிக்கு வந்தால் இரவு 8 மணிக்கே வீடு திரும்பு
கின்றனர்.கல்விக் கூடங்களைச் சுற்றி மரங்களும் செடிகளும்.நேபாளக் காவலாளிகள் 200க்கும்
மேற்பட்ட குடும்பத்தினர் அவர்களுக்கு அருமையான உறைவிடங்கள் தந்துள்ளார்கள்.

ஒரே செய்திதான் உங்களுக்குச் சொல்வேன்.நண்பர் முனிரெத்தினம் கல்லூரிகளில் படிக்கவும்
கொடுத்து வைத்திருக்க வேண்டும்.பணி புரியவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அனைவருக்கும் அரசு குறித்துள்ள ஊதியம் சரியாகத் தருகின்றனர்.

கல்வி நிறுவனங்களை சிறப்பாக நடத்தி வரும் திரு முனிரெத்தினம் அவரது துணைவியார்
மஞ்சுளா அவர்கள் அவர்களது திருமகன் கிஷோர் பெரியவர் ஜோதி நாயுடு அவர்கள் அனை
வருக்கும் இறைவன் நீண்ட ஆயுளைத் தந்து இந்தச் சிறந்த கல்வித் தொண்டினைத் திறம்படத்
தொடர அருள் வேண்டும் என்று ஆண்டவனை வேடி நிற்கின்றேன்.

தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்