Tuesday, October 28, 2008

உயர்ந்தோங்கட்டும்

 குடி ஒழிக்க முயல்வாரே ஏழைகளின்
  குடும்பத்தைக் காக்க வந்த நற்றமிழர்
  அடிமைகளாய் ஏழைகளை ஆக்கி மீண்டும்
  அழிப்பதற்கு முயல்கின்றார் தமிழரில்லை
  தடி மனத்தார் ஏழைகளை நினைப்பதில்லை
  தன் குடும்பம் தனை மட்டும் நினைக்கின்றாரே
  குடிக்கின்ற ஏழைகளைத் திருத்துவாரின்
  குடும்பங்கள் என்றென்றும் உயர்ந்தோங்கட்டும்

புஷ்பவனம் குப்புசாமி

 தமிழுக்காய்ப் பாடுகின்றான் தமிழர் நெஞ்சில்
  தாக்கங்கள் ஏற்படுத்தப் பாடுகின்றான்
  அமிழ்தான தமிழ் மொழியை மேலும் மேலும்
  அழகாக்க அறிவாக்கப் பாடுகின்றான்
  குமிண் சிரிப்பில் மனங்கள் எல்லாம் கொள்ளை கொள்ளும்
  குப்புசாமி என் தம்பி அவனை வெல்ல
  தமிழ் நாட்டில் இசை அறிஞர் எவரும் இல்லை
  தாயவளாம் தமிழிசைக்கு அவனே எல்லை

மக்கள் தொலைக் காட்சி

  பாரதியின் பாடலுடன் தொடங்குகின்றார்
  பைந்தமிழின் தேவார வாசகங்கள்
  சீர் மிகுந்த வாய் மொழியும் ஏசு நாதர்
  செப்பி நின்ற நல் வழியும் நபி பெருமான்
  கூர்மை மிகு நல் மொழியும் பாடுகின்றார்
  கூத்தோடு நல்ல தமிழ்க் கலைகள் எல்லாம்
  ஆர்வமுடன் தருகின்றார் மருத்துவரின்
  அழகான மக்கள் தொலைக் காட்சியார் தாம்


  பார் முழுதும் இருக்கின்ற தமிழர் எல்லாம்
  பார்க்க வேண்டும் மக்கள் தொலைக் காட்சியினை
  சீர் நிறைந்த தமிழ்ப் பணியைச் செய்து நிற்பார்
  செப்பேட்டுத் தமிழறிஞர் நன்னன் நன்கு
  வேரான தமிழ்க் கலைகள் விளையாட்டுக்கள்
  விபரங்கள் அனைத்தையுமே தந்து நின் றார்
  நேரான தமிழுக்காய் மருத்துவரின்
  நிலைத்த புகழ் மக்கள் தொலைக் காட்சியார் தாம்

Monday, October 27, 2008

எந்நாள்

 வீதியிலே இருப்பார்க்கும் வாக்குரிமை
  விரைந்திங்கு வழங்குகின்றார் வெட்கமின்றி
  நாதியற்று இருக்கின்ற அவரை இந்த
  நாட்டாரென்று உறுதி செய்யும் வேலை அதாம்
  சாதியென்றால் ஏழையவர் அவரைக் கூட
  சாதிக்குள் இழுப்பதற்கு முயற்சி செய்வார்
  பேதித்து அனைவரையும் ஒழித்து வாழும்
  பேதையர்கள் வீழ்கின்ற நன்னாள் எந்நாள்

விழாக்கள் அன்று

 வெடிகள் வெடிக்கின்றீர் வெடிகள் செய்த
  விரல்களுக்கு வெடி போட வாய்ப்பே யில்லை
  துணிகள் உடுத்துகின்றிர் துணியை நெய்த
  தூயவர் தம் குடும்பம் அங்கு உடுத்தவில்லை
  அடிமை விலங்கறுத்தீர் என்ற போதும்
  அழுகின்றார் துன்பம் இன்றும் தீரவில்லை
  கொடிகளுக்காய் தைத்த அந்தத் துணியையெல்லாம்
  கொடுத்திருந்தால் பல ஏழைக் காடையாகும்


  நான் என் குடும்பம் என்று வாழுகின்ற
  நலமற்றோர் ஆளுதற்கு வந்த பின்னர்
  தேனாறும் பாலாறும் அவர்கள் வீட்டுத்
  திண்ணை தாண்டி வெளியினிலே வருவதில்லை
  ஊனளித்து உயிரழித்து வீழ்ந்தோர் தம்மின்
  உறவெல்லாம் உணவின்றி வாடுகின்றார்
  தான் மட்டும் வாழ்வதற்காய் வாழுகின்ற
  தருக்கர் இனம் வீழ்ந்தால் தான் விழாக்கள் அன்று

அதுவே விழா

கூடி மகிழ்வதற்காய் விழாக்கள் தம்மை
  கொண்டிங்கு கூட்டி வைத்தார் பெரியவர்கள்
  ஆடி மகிழ்வதற்கும் உறவுக்கெல்லாம்
  அன்பு செய்து வாழ்வதற்கும் இடங்கள் தந்தார்
  பாடி மகிழ்கின்றீர் உறவையெல்லாம்
  பார்த்து மகிழ்கின்றீர் என்ற போதும்
  வாடிக் குலைவுற்று நிற்பார் தம்மின்
  வாழ்வைச் சரியாக்கும் அதுவே விழா

Thursday, October 23, 2008

வாழ்ந்து போங்கள்

 தமிழினிலே கல்வியா என்று இங்கே
  தாண்டிக் குதிக்கின்றார் அன்பர் சிலர்
  தமிழ் நாட்டில் வாழுகின்றார் ஆமாம் ஆமாம்
  தாய்த் தமிழை இகழ்வதிலே பெருமை கொள்வார்
  அறிவாரா இந் நாட்டின் கோயில்களை
  அற்புதமாய்க் கட்டப் பட்ட கல்லணையை
  பெரிதாக அப்படத்தை அச்சடித்து
  பெருமை பேசி நிற்பதவர் செய்தித் தாளே


  கோயில்களும் கோட்டைகளும் கொத்தளமும்
  கொஞ்சம் கூட அசையாத கல்லணையும்
  தாய் மொழியை மட்டுமே தெரிந்திருந்த
  தங்க மக்கள் கட்டியது அறிவார் அவர்
  பேய் மனது அவர்களுக்கு எப்படியும்
  பெரிய மொழி தமிழ் அழிய வேண்டும் என்று
  ஆய் மனது கொண்டோரை அவரைக் கூட
  அன்னை தமிழ் காத்து நிற்பாள் வாழ்ந்து போங்கள்

Wednesday, October 22, 2008

பழம்பாடல் கம்பன்

 வறுமையினைக் கண்டெதற்கு அஞ்சுகின்றீர் என்
  வாசல் வந்த பின்னாலும் வேண்டாம் வேண்டாம்
  உரிமை உமக்கு இவ்வாசல் என்று சொல்லி
  ஒரு நாளும் அடைக்காத பெரிய வாசல்
  கருமை நிற எருமைகளும் குளிக்கும் நேரம்
  கன்று என்று முட்டுகின்ற மீனை எண்ணி
  சொரிந்து நிற்கும் பாலதனை வீடு வரை
  சொர்க்கம் எங்கள் சடையப்பன் வெண்ணெய் நல்லூர்  கம்பன்

  மோட்டெருமை வாவிபுக முட்டு வரால் கன்றென்று
  வீட்டளவும் பால் சொரியும் வெண்ணையே - நாட்டில்
  அடையா நெடுங் கதவும் அஞ்சலென்ற சொல்லும்
  உடையான் சடையப்பனூர்

வழியேயில்லை

 எழுதுவதில் உண்மை நிலை இருந்து விட்டால்
  எல்லோரும் படித்து நிற்பர் போற்றி நிற்பர்
  பழுது சொல்லி அனைவரையும் தூற்றி நிற்றல்
  பார் நான்தான் பேரறிஞன் என்று சொல்லல்
  தொழுது என்னைப் பணிந்து விடு இல்லையென்றால்
  தூள் தூளாய்ப் போய் விடுவாய் என மிரட்டல்
  அழுவதன்றி என்ன செய்ய இவரைக் கண்டால்
  அனுதாபம் கொள்வதன்றி வழியேயில்லை

மறைவதில்லை

 சாவதற்காய் வாழுகின்றார் பல பேர் இங்கு
  சரித்திரமாய் மாறுகின்றார் சில பேர் மட்டும்
  போவதற்காய் வாழுகின்ற பல பேர் முன்னர்
  பொறுப்புணர்ந்து வாழுகின்றார் சில பேர் மட்டும்
  ஆவலினால் பணம் சேர்த்து சொத்தும் சேர்த்து
  அனைத்தும் தன் குடும்பத்திற்கென்று வாழ்வார்
  போவதன்றி புகழுக்கு வழியேயில்லை
  பொறுப்புணர்ந்த நல்லவரோ மறைவதில்லை
   

Thursday, October 16, 2008

என்றும் வாழும்

 எவரையுமே ஏசிடலாம் சிந்தையின்றி
  இட்டம்போல் பேசிடலாம் பண்பு இன்றி
  அவனென்ன இவனென்ன அறிஞனில்லை
  அனைவருமே எனக்கிணையும் ஈடுமில்லை
  தவறெனிலும் நான் சொன்னால் தங்க மொழி
  தலைவரென்றால் நான் சொல்வோர் மட்டும் மட்டும்
  குவலயமே என் முன்னால் தூசு தூசு
  கூறி நிற்பார் உள்ளமெல்லாம் மாசு மாசு


  எழுதியது நிற்க வேண்டும் என்றும் என்றும்
  எத்தனையோ தலைமுறையை வென்றும் வென்றும்
  பழுதில்லை என்று சொன்னால் வெல்லும் வெல்லும்
  படைப்பவரைப் படித்தவரை கொள்ளும் கொள்ளும்
  விழுது விடும் மென்மேலும் வீறு கொள்ளும்
  விழுந்து விடாப் பெரும்புகழை அள்ளும் அள்ளும்
  தொழுது நிற்கும் அவர் எழுத்தை வணக்கம் செய்யும்
  தொல்காப்பியன் போல என்றும் வாழும்

கூட்டமாமோ

  ஒடுகின்ற காரணத்தால் சாக்கடையும்
  உய்ய வைக்கும் ஆறு எனக் கூறிடுமோ
  பாடுகின்ற காரணத்தால் காக்கை கூட
  பார் நான்தான் குயில் என்று வியந்திடுமோ
  ஆடுகின்ற காரணத்தால் கழுதை தன்னை
  அழகு மயில் என்றெண்ணி ஆர்த்திடுமோ
  கூடுகின்ற மனிதர்களே கூறிடுங்கள்
  கூடுகின்ற கூட்டமெல்லாம் கூட்டமாமோ

Wednesday, October 15, 2008

அவரால் மட்டும்

 காந்தி அவர் தவறு செய்த போதே அதைக்
  கண்டித்த பேரூருவம் காமராஜர்
  தான் பெறாக் கல்வியினை ஏழையர்க்காய்த்
  தந்து நின்ற வள்ளலவர் ஊர் முழுக்க
  வான் புகழ் கல்வியினை வழங்குதற்காய்
  வடிவமைத்த சட்டங்கள் நூறு நூறு
  நாம் இன்று கல்வியினால் வாழ்ந்தோமென் றால்
  நாயகனாம் காமராஜர் அவரால் மட்டும்
   

வாழ்க நன்று

 ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாதென்று
  ஊர் முழுக்க அனைவரையுமே திட்டித் தீர்க்கும்
  பெருமை மிகு அறிஞர்களில் சில பேர் இன்று
  பேசுகின்றார் பேசுகின்றார் வாய் கிழிய
  அருமை அவர் கருத்தொன்றே என்றவரே
  அறிவிப்புச் செய்கின்றார் அந்தோ பாவம்
  சிறுமை என்று உணராமல் அனைவரையும்
  சீண்டுகின்றார் மன நோயால் வாழ்க நன்று

தந்தை மொழி

அன்பு வழி வாழ்ந்திருந்து வழியும் சொன்ன
அருள் வடிவாம் வள்ளலார் வாழ்வில் ஒரு நாள்
தன் புகழை இனத்தாலே பெருக்கிக் கொண்ட
தனித் துறவி ஒருவரையே சந்தித்தாராம்
பண்பு இன்றி அத் துறவி வட மொழிதான்
பல மொழிக்குத் தாய் என்று அறிவித்தாராம்
அன்பு மொழி வள்ளலார் ஆம் ஆம் என்று
அத்தனைக்கும் தந்தை மொழி தமிழ் என்றாராம்

Monday, October 13, 2008

குறட் கருத்து

 அறிவின்றி அடுத்தவரின் துன்பம் தீர்க்கும்
  அன்பின்றி வாழ்பவரின் நட்பு தன்னை
  விரைவாக விட்டொழித்தல் பெரும் பேறேன்று
  வியன் உலகப் பெரும் அறிஞர் வள்ளுவனார்
  தெளிவாகச் சொல்லி நின்றார் மிக இனிது
  தீதான அந்நட்பை விடுதல் என்றார்
  பெறுவோம் அவ்வழியதனை வள்ளுவனார்
  பேச்சொன்றே தமிழருக்கு மூச்சாய்  ஆகும்


  ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
  கேண்மை ஓரீஇ விடல்

  பெரிதினிது பேதையர் கேண்மை பிரிவின் கண்
  பீழை தருவதொன்றில்

Thursday, October 9, 2008

வழியேயில்லை

 எழுதி விட்ட எல்லாமே எழுத்து என்றால்
  எத்தனை பேர் எழுதியுள்ளார் நின்றதில்லை
  பழுது பட்ட மனத்தோடு எழுதுவதும்
  பார் பெரியன் நான் என்றே தனக்குத் தானே
  விருதுகளைச் சூட்டுவதும் வியந்து தன்னை
  வெற்றிகளின் மன்னன் என்று போற்றுவதும்
  கருதி நின்றால் அவர் தன்னைப் பார்த்து நெஞ்சில்
  கழிவிரக்கம் கொள்வதன்றி வழியேயில்லை
   

Monday, October 6, 2008

தேவர் போற்றி

  தேவர் போற்றி

தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்
  தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்க
காவலெனக் கடவுளரே அனுப்பி வைத்த
  கண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளை
வாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னை
  வழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்
வாழையடி வாழையென அவரைப் போற்றி
  வணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்


மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை
  மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்
பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்
  பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்
கணம் கூட தனைப் பற்றிச் சிந்திக்காமல்
  கர்ஜனைகள் புரிந்து நின்றார் நாட்டிற்காக
நிணம் தசை நார் எலும்பெல்லாம் தேவர் பிரான்
  நினைவாக போற்றி நின்று என்றும் வெல்வோம்

 
உண்மையதே சொத்தாகக் கொண்டிருந்தார்
  உயர் குணங்கள் கொண்டிருந்தார் - அச்சமெனும்
புன்மையது அவரிடத்தில் என்றும் இல்லை
  புனிதர் எங்கள் தேவர் மகன் நேர்மை எல்லை
கண்ணினிய தமிழினத்தின் உண்மை நெறி
  கருத்தாக்கி மேடையிலே பொழிந்த மேகம்
எண்ணி நிற்போம் பசும்பொன்னாம் தேவர் தம்மை
  என்றென்றும் தமிழினத்தார் வெற்றி கொள்ளவேட்பு மனுத் தாக்கல் உடன் முடிந்து விடும்
  வெற்றியெனும் செய்தி அன்றே உறுதி படும்
போர்ப் பரணி தேவர் பிரான் போட்டியிட்டால்
  போட்டியிடும் தொகுதி யெல்லாம் அவர்க்கே சொந்தம்
காப்பு என்றும் தேவர் பிரான் தமிழருக்கு
  கண்ணியமாய் வாழ்ந்திருந்த இனியருக்கு
ஆர்ப்பரித்துத் தேவர் பிரான் போற்றி நிற்போம்
  அவர் வழியில் தேசத்தைக் காத்து நிற்போம்


தேவர் இல்லா நாட்டில் இன்று எவரெவரோ
  தெய்வம் இல்லை என்று சொல்லி ஆடுகின்றார்
காவலுக்குத் தேவர் பிரான் இல்லையென்று
  கண் கலங்கி நிற்கின்றார் நல்லோரெல்லாம்
சேவற் கொடி வேலவனைத் தொழுது நின்ற
  செந்தமிழின் தேவர் பிரான் தனை வணங்கி
ஆவலுடன் தேசீயம் தெய்வீகத்தை
  அனைவருமே காத்து நிற்போம் தேவர் போற்றி

  தமிழ்க்கடல்
  நெல்லைக்கண்ணன்

69.அம்மன் சந்நிதித் தெரு
திருநெல்வேலி நகரம்
627 006

அந்தோ அந்தோ

 என் மனைவி என் பிள்ளை என் குடும்பம்
  என்றெங்கும் வாழ்வாரின் மனத்தை அன்றே
  சின்னதொரு கடுகு எனச் செப்பி நின்றார்
  சீராகப் பாரதியின் தாசனாரும்
  மன்னவர்கள் அதையெல்லாம் மறந்தாராகி
  மக்களைத்தான் ஏய்க்கின்றார் தாசனாரின்
  வண்ணமிகு கவிதையெல்லாம் மேடை தோறும்
  வாய் கிழியச் சொல்லுகின்றார் அந்தோ அந்தோ

குருவை எண்ணி

 காந்தி யவர் செய்தித் தாள் தன்னில் ஒரு
  கட்டுரையில் தமிழ் நாட்டில் காங்கிரஸில்
  சேர்ந்து ஒரு குழு ராஜாஜிக் கெதிராய்ச் சில
  செய்கைகளைச் செய்வதுவாய் எழுதி விட்டார்
  காந்தியைத் தன் குருவாகக் கொண்டிருந்தும்
  காமராஜர் எதிர்த்து நின்றார் காந்தியாரை
  காந்தியவர் திருத்திக் கொண்டார் தவறதனை
  காமராஜர் மனம் சிறந்தார் குருவை எண்ணி

தேவர் மகன்

  விடுதலைக்காய் கூட்டங்கள் நடத்தும் போது
  விருதுநகர் வீதியெல்லாம் தமுக்கடித்து
  அடுக்கடுக்காய் மக்களையே சேர்க்கும் வண்ணம்
  அறிவிப்புச் செய்து நின்ற காமராஜை
  தடுத்தவரைத் தாக்கி அங்கே கொடுமை செய்தார்
  தனம் நிறைந்த நீதிக் கட்சி பணம் படைத்தோர்
  அடுத்த நாளே தேவர் மகன் அங்கே சென்றார்
  அடித்தவர்கள் ஒரு நாளில் வருத்தம் தன்னை


  வெளிப்படையாய்க் கேட்கவில்லை என்று சொன்னால்
  விருதுநகர் இருக்காது என உரைத்தார்
  அடித்ததிலே பெருமை கொண்டோர் மனம் திருந்தி
  அன்றைக்கே மன்னிப்பைக் கேட்டு நின்றார்
  கொடுப்பதிலே பெருமை கொண்ட தேவர் மகன்
  கொள்கைக்காய் நிற்கின்ற எங்கள் தொண்டர்
  வடுவில்லா காமராஜர் தன் வழியில்
  வராதீர் வந்தால் நான் வருவேன் என்றார்

அவர் பெரியார்

 மனிதர்களை மனிதர்களாய்ப் பார்த்தல் விட்டு
  மதம் சாதி இனம் என்று பிரித்து வைத்த
  கனிவற்ற மனிதர்களை எண்ணி எண்ணி
  கவலையுற்று நிற்கின்ற நல்லார் தம்மை
  சரியாகப் போற்றாமல் அவரைக்கூட
  சாதி எனும் குறி கொண்டு திட்டித் தீர்த்தல்
  அறிவானார் செயல் அன்று வேறு என்ன
  அறியாமல் செய்கின்ற பிழையே ஆகும்


  நான் சொன்னால் சொன்னது தான் என்று என்றும்
  நாயகராம் பெரியாரும் சொன்னதில்லை
  ஏன் என்று கேளுங்கள் சொன்னதெல்லாம்
  எப்படித்தான் என்று நீங்கள் சிந்தியுங்கள்
  நான் சொன்னேன் என்பதற்காய் நம்ப வேண்டாம்
  நல்ல விதம் சிந்தித்து முடிவெடுங்கள்
  தான் என்று அகம் கொண்டு பெரியார் என்றும்
  தனித்துவத்தைக் காட்டுதற்கு முயலவில்லை

Friday, October 3, 2008

உணர்ந்தாரின்று

  இயற்கை வழி வேளாண்மை தனைஒழித்து
  எவர் சொன்ன வழியிலெல்லாம் சென்றழிந்து
  முயற் கொம்பு என்றதனை இன்றுணர்ந்து
  முயலுகின்றார் நம் வழியை மீண்டும் இன்று
  கயல் பிறழ்ந்த கழனியிலே மருந்தைக் கொட்டி
  கருவுறவே முடியாமல் மண் கெடுத்து
  அயல் நாட்டான் பேரழிவைத் தந்த பின்னர்
  அன்னை நாட்டார் நல்லறிவை உணர்ந்தாரின்று

அன்பு செய்வீர்

  கடவுளினை நம்புகின்றார் என்று சொன்னால்
  கட்டாயம் அவர்கள் எல்லாம் ஒன்றுதானே
  மடமை அது கொண்டாராய் அடுத்தவரை
  மடித்திடவே முயன்றிடுதல் நியாயம் தானோ
  கடமையினை உணருங்கள் பக்தி என்றால்
  கனித் தமிழில் அன்பு என்று உணர்ந்திடுங்கள்
  மதமெல்லாம் கடவுளினையே போற்றுகின்ற
  மாண்பதனைக் கைக் கொள்வீர் அன்பு செய்வீர்

கடவுள் போற்ற

 சாமியார் கூட்டத்தை ஆசை தன்னால்
  சத்தியமாய் மனிதர்களே வளர்க்கின்றார்கள்
  பூமியிலே விளைந்துள்ள துன்பமெல்லாம்
  போக்குதற்கு முடிந்ததோ அவர்கள் தம்மால்
  சாமியென்றால் கடவுள் என்று உணர்ந்தோர் மட்டும்
  சரியாக வாழ்கின்றார் மனிதர் எல்லாம்
  நாம் கொணட நல்லுறவு என்றுணர்ந்து
  நல் வழியில் நடக்கின்றார் கடவுள் போற்ற

தண்டிப்பானே

அன்பு ஒன்றே எம்மதமும் சொல்லும் வழி
  அறிந்தவர்கள் மதம் கொண்டு அலைய மாட்டார்
  பண்புணர்வார் மனித இனம் உயிர்கள் எல்லாம்
  படைத்தவனின் பேரருளே என்றுணர்வார்
  கண்ணிருந்தும் குருடரைப் போல் நடிக்கும் பலர்
  கண்ணியத்தை மறந்தவராய் அலைகின்றாரே
  விண்ணவனாம் இறைவன் இவர் தம்மையெல்லாம்
  விரும்புவனோ தண்டிப்பான் தண்டிப்பானே

போற்றி நிற்கும்

  குடி தன்னை ஒழிப்பதற்காய் பெரு முயற்சி
  கொண்டுள்ளார் மருத்துவராம் இராமதாசர்
  அடிமைகளாய் ஏழைகளை மீண்டும் மீண்டும்
  ஆக்குகின்ற குடி ஒழிக்க வேண்டும் வேண்டும்
  கொடுமை இதை நீக்குதற்கு தமிழர் யாரும்
  குரல் கொடுத்து மருத்துவரை வாழ்த்த வேண்டும்
  படுகின்ற ஏழையரின் துன்பம் நீக்க
  பாடுபடும் மருத்துவரைப் போற்ற வேண்டும்


  ஏழைகளை மீண்டும் மீண்டும் ஏழையராய்
  எப்போதும் வீழ்த்துகின்ற குடியதனை
  வாழையடி வாழையென அவரை மட்டும்
  வதைக்கின்ற பேரழிவைச் சீரழிவை
  கோழையைப் போல் அதை எதிர்த்துப் போராடாத
  கூட்டத்தை வள்ளுவரை மறந்தார் தம்மை
  நாளை வரும் உலகம் அது தூற்றி நிற்கும்
  நலம் காணும் மருத்துவரைப் போற்றி நிற்கும்

Thursday, October 2, 2008

சுட்டு விட்டார்

 வரதட்சணைக் கொடுமை ஒழிவதற்கு
  வழியொன்றெ ஒன்று என்று அண்ணல் சொன்னார்
  பிற சாதி தனில் பிறந்தோர் உறவாய்க் கொண்டு
  பெண் கொடுத்தீர் என்றாலே போதும் அங்கு
  வரதட்சணை ஒழியும் சாதி என்னும் 
  வன்முறையும் ஒழிந்து விடும் என்று சொன்னார்
  பிறகென்ன காந்தி தன்னை சுட்டு விட்டார்
  பேச்சு மேலும் வளருவதை விரும்பார் கூட்டம்

என்றும் வென்றான்

  மணம் செய்தான் இல்லை அவன் உண்மை நேர்மை
  மக்கள் சேவை என்ற பல நற் குணங்கள்
  மணம் கொண்டு வாழ்ந்ததவன் காலம் தன்னில்
  மனமெல்லாம் ஏழையரின் வாழ்க்கைக்கென்று
  இனம் கண்டான் அவர்கட்காய் தினம் உழைத்தான்
  ஏழையர் தம் குடும்பத்துத் தலைவனானான்
  குணம் கொண்டான் தமிழர் குலப் பெருமை கொண்டான்
  கொற்றவனாம் காமராசன் என்றும் வென்றான்

தலைவனும் வழி நடந்தோனும்

  அடித்தாலும் உதைத்தாலும் சுட்டாலும் கொன்றாலும்
  அப்படியே அதை ஏற்று செய்வான் தன்னின்
  மனத் தளத்திற்குள்ளேயே போராட்டம் உண்டாக்கி
  மனிதனென அவன் தன்னை மாற்றி விடும்
  பொறுப்பான போராட்டம் அகிம்சையென்னும்
  பொலிவான நீரோட்டம் தந்த அண்ணல்
  சிறப்பெல்லாம் அவனான காந்தி அண்ணல்
  சிந்தை வழி நடந்திடுவோம் உலகம் போற்ற


  படிப்பதனை சிறு வயதில் இழந்தவன்தான்
  பல பேரைப் படிக்க வைத்தான் உயர வைத்தான்
  வடித்திட்ட திட்டங்கள் அனைத்தும் இன்றும்
  வாழ வைத்துக் காத்திருக்கும் தமிழினத்தை
  அடி பட்டு வீழ்ந்திருக்கும் ஏழையரை
  அவனன்றோ காத்து நின்றான் தாயெனவே
  மடிப் பிச்சை அவன் ஏற்றான் ஏழையர்க்காய்
  மாமனிதன் காமராஜர் வழி நடப்போம்

Wednesday, October 1, 2008

நபி பெருமானார் அருள் மொழிகள்

  உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே
  உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம்
  நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே
  நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய்
  மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார்
  மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார்
  கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை
  கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார்

  படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர்
  பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை
  இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில்
  எல்லோர்க்கும் உதவி செய்வீர் நன்மை செய்வீர்
  கடையனென்று எவனுமில்லை இறைவன் முன்னே
  கருணையில்லார் மட்டுமே கடையராவார்
  உடைமையென்று மென்மேலும் சேர்த்து சேர்த்து
  உள்ளமின்றி வாழாதீர் வழங்கி நில்லும்

  கொடுமையினைச் செய்வானைக் காப்பாற்றுங்கள்
  கொடுமையினால் வீழ்ந்தானைக் காப்பாற்றுங்கள்
  பட படத்தார் கேட்டார்கள் பெருமானிடம்
  பாவியினைக் காப்பதுவா எவ்வாறென்று
  கொடுமையினைச் செய்வானுக்கு அன்பு சொல்லி
  கொடுமையினைச் செய்யாமல் திருத்திடுங்கள்
  படுகிறவன் துயரத்தை உணர்த்தி அந்தப்
  பாவத்தில் இருந்து அவனை விலக்கிடுங்கள்


  நல்லவரைப் பதவியிலே அமர்த்தல் விட்டு
  நாசவேலை செய்வோரை அமர்த்துகின்றார்
  அல்லாவை அவரளித்த தூதர் தம்மை
  ஆண்டவனுக்கு அஞ்சி வாழும் உண்மையோரை
  பொல்லாத அச் செயலால் புறக்கணித்து
  பொறுப்பின்றி அவர்கட்குத் துரோகம் செய்வார்
  அல்லாவின் தீர்ப்பு நாளில் அவர்க்கு அல்லா
  அளிப்பாரே நரகத்தை உண்மை உண்மை

 கல்வி வழி ஞானத்தைப் பெற்றோரன்றி
  கடவுளினைத் தீயவர்கள் அறிவதில்லை
 நல்ல கல்வி இறைவனையே நம்பி நிற்கும்
  நலமற்றோர் இறை இல்லை என்று நிற்பார்
 வல்லவனாம் இறைவனையே வணங்கி நிற்போர்
  வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார் இறையருளால்
 அல்லாவை வணங்கி நிற்பீர் அருள் பெறுவீர்
  அகிலமெல்லாம் அவன் கொடையே பணிந்து நிற்பீர்