Saturday, February 27, 2010

வா ங் கி க் கொ ள் வே ன்

இருக்கின்ற விருதெல்லாம் எனக்கே தாரும்
எனை விட்டால் இதற்கெல்லாம் யார் தான் உள்ளார்
படுப்பதற்கு விருது எழுந்து நின்று
பார்ப்பதற்கு ஒரு விருது நாட்டை நன்கு
கெடுப்பதற்கு விருது மேலும் என்னவெல்லாம்
கிளர்ச்சி தரும் விருதுகளோ அவற்றையெல்லாம்
தடுப்பதற்கு யார் உள்ளார் யாரும் இல்லை
தந்து கொண்டே இரும் நானும் வாங்கிக் கொள்வேன்

சின்னப் புத்தி

விழாக்களுக்குப் பஞ்சமில்லை ஏழைகள் தான்
விலை வாசி ஏறியதாய்ப் புலம்புகின்றார்
விழாக் கண்டு சகிக்காத வீணர்கள்தான்
விலைவாசி நிலை சொல்லி ஆடுகின்றார்
விழா என்றால் இது அன்றோ விழா முன்னர்
விழாக்கள் நீர் இது போல பார்த்த துண்டோ
விழாக் கண்டு மகிழ்ச்சி கொள்ளல் விட்டூ விட்டு
விலை வாசி தன்னைப் பேசல் சின்னப் புத்தி

Friday, February 26, 2010

கே ட் டு வென்றா ர்

புகழுரைக்கு மயங்காத தலைவர் என்றால்
புது விதத்துத் திருடர்களும் தோன்ற மாட்டார்
வகை வகையாய்ப் புகழுரைகள் விரும்பி ஏற்றால்
வருவதங்கு அவமானம் துன்பம் ஆகும்
தகைமை சான்ற தலைவர்களோ உணர்ந்து வென்றார்
தனை உணராத் தன்மையரோ அசிங்கப் பட்டார்
புகன்று நின்றார் பெரும் புலவர் அனைவருமே
புத்தியுள்ளோர் மட்டும் தான் கேட்டு வென்றார்

Thursday, February 25, 2010

தேடி அலைகின்றார்

ஆட்சியாளர் தன்னிடத்தில் நிமிர்ந்து பாட
அறிவு நிறைத் தமிழ்க் கம்பன் இன்று இல்லை
பூச்சியைப் போல் எவருக்கும் அஞ்சிநிற்கும்
புல்லர்களே புலவரென உயிரோ டுள்ளார்
ஆச்சு இங்கு எல்லாமே ஆகிப் போச்சு
ஆங்கிலமே தாய் மொழி போல் ஆகிப் போச்சு
போச்சு எல்லாம் போச்சு என்றால் பொறுப்பிலுள்ளோர்
புகழ் தேடி புகழ் தேடி அலைகின்றாரே

Wednesday, February 24, 2010

நாள் என்று் வந்திடுமோ

பணம் சேர்த்துப் பணம் சேர்த்து வாழ்க்கையினை
பகட்டாக வாழுகின்ற தலைவர் கண்டு
பணம் சேர்க்க விழைகின்றார் பல பேர் இங்கு
பாவங்கள் செய்வதற்கும் அஞ்ச மாட்டார்
குணம் ஒன்றே உயர்வென்று உலகிற் கெல்லாம்
குறள் சொன்ன உயர்வெல்லாம் சொல்லி நிற்பார்
பணம் சேர்க்கும் போதெல்லாம் குறளை மட்டும்
பக்கத்தில் வருவதற்கே அனுமதியார்


மரம் வளர்க்கச் சொல்லுகின்ற தலைவர் வீட்டில்
மர வேலைப் பாடுகள் ஆகா ஆகா
தினம் இங்கு தவறுகளே செயும் தலைவர்
திருவள்ளுவர் சிலையின் அருகே உள்ளார்
மனம் என்று ஒன்று மட்டும் இருந்த தென்றால்
மாறி மாறி அவர் தம்மைச் சுடவே செய்யும்
குணம் விட்ட காரணத்தால் கொடுமை கண்டு
கொதிக்கின்ற மனம் தன்னைக் கொன்றே போட்டார்


கையூட்டுப் பெற்று விட்டார் என்று தினம்
கைதாகும் பைத்தியங்கள் படத்தைப் போட்டு
மெய் காத்து நிற்பதுவாய் நடிக்கின்றார் காண்
மெய்ம்மை உணர்வற்று நிற்கும் செய்தியாளர்
பொய் பேசி மக்களையே ஏய்த்து வாழும்
பொறுப்பற்ற அரசியலார் படத்தை மட்டும்
கையூட்டின் பெருந்தலைவர் என்று போடக்
கையாலே யாகாத செய்தியாளர்

உடல் விற்றார் என்று சொல்லி பெண்களினை
ஊர் தோறும் பிடிக்கின்ற காவலர்கள்
கடன் தந்து அவர்களது வறுமை தன்னால்
காம விளையாட்டிற்குக் கொண்டு செல்லும்
திடமான மனிதர்களை அரசியலார்
தேடி என்றும் வளர்த்து நிற்கும் கொடுமையினை
புடம் போட்டு மக்களுக்குக் காட்டுகின்ற
பொன்னான நாள் என்று வந்திடுமோ

Tuesday, February 23, 2010

கையொப்பம் பெறும் மாணவிய ர்

மாணவியர்


வ்

அவனே தான் கேட்க வேண்டும்

செம்மேனிச் சிவனையேக் கருப்பனாக்கிச்
சித்திரத்தில் எழுதுகின்றார் அம்மை யவள்
தன் மேனி கருப்பதனை உணராகி
தகதகக்கும் பொன்னிறமாய் எழுதுகின்றார்
என் செய்ய செய்தித் தாள் வார இதழ்
எங்கேயும் இக்கூத்தே கேட்பாரில்லை
சொன்னாலும் கேட்கின்றாரில்லை அந்தச்
சொக்கநாதன் அவனே தான் கேட்க வேண்டும்

Sunday, February 21, 2010

உரை நிகழ்த்துகின்றேன்

இறை வணக்கம்

ராஜா அவர்களோடு தம்பி மூர்ததி நண்பர் போத்தி ராஜ்

அறக் கட்டளைச் செயலர் கல்விமான் ராஜாவோடு

கல்லூரி முதல்வர் அவர்களோடு

வரவேற்பில் கையொப்பம் பெறும் மாணவியர்

இராஜபாளையம் தர்ம ராஜா பெண்கள் கல்லூரி வரவேற்பு

காடுகள்

ஆனைகளின் அட்டகாசம் ஊருக்குள்ளே
அடுத்தாற் போல் புலிகளது அட்டகாசம்
ஊனமுற்ற மனம் கொண்ட மனிதர்களின்
ஒலமிது செய்திகளில் வருகிறது
ஞானமற்று அவர்களது வாழ்விடத்தில்
நாடோறும் நீங்கள் போட்ட ஆட்டமன்றோ
ஆனையுடன் புலியதுவும் நீருக்காக
அங்கேயும் இங்கேயும் வருவதெல்லாம்


மலைகளுக்குள் காடுகளில் மான்களோடு
மரம் நிறையப் பறவைகளும் விலங்கினமும்
இறைவனவன் தந்திருந்தான் அவர்களுக்காம்
இடமதனைத் தலைவர்களே கொள்ளையிட்டீர்
மறைவிடங்கள் அனைத்தையுமே அழித்தொழித்தீர்
மனம் போல அரண்மனைகள் கட்டிக் கொண்டீர்
உறைவிடத்தைக் குடிநீரை இழந்ததாலே
ஊருக்குள் வருகிறது விலங்கினங்கள்


காட்டுக்குள் நீங்கள் செய்த அட்டகாசம்
கருணையற்ற அட்டகாசம் அதனை விட்டு
நாட்டுக்குள் விலங்கினங்கள் வந்தால் அதை
நாக் கூச்சம் இல்லாமல் திட்டுகின்றீர்
வீட்டுக்குள் வேறு யாரும் வந்து சென்றால்
விரைவாகத் திருடர் என்று புகாரும் சொல்வீர்
காட்டுக்குள் நீங்கள் சென்று திருடி வந்த
கதைகளினை கடவுளன்றி யார் அறிவார்

காடு வாழ

புலிகளினைக் காப்பதற்காய்க் கணக்கெடுப்பாம்
புத்தியின்றி நடக்கின்ற அரசாங்கங்கள்
வலியவர்கள் சேர்க்கின்ற பணத்தைப் பார்த்து
வறியவர்கள் ஆசை கொள்ள காட்டிற்குள்ளே
புலியல்ல சிங்கமல்ல யானையென்று
பொறுப்பின்றிக் கொல்லுகின்றார் பணத்திற்காக
மலிவாக அதைக் கூட வாங்குகின்றார்
மானமில்லா அரசியலார் அவரைக் காத்து


வளம் சேர்த்து நாடு காக்கும் அரசியலில்
வலியின்றிப் பொருள் சேர்க்கும் நாணமற்றார்
உளம் விற்று மக்களது நலத்தை விற்று
ஊர் முழுக்க சொத்துக்கள் வாங்குகின்றார்
தளம் அவர்தான் நடக்கின்ற தவறுக் கெல்லாம்
தனையறியா ஏழைகளோ விலை போகின்றார்
வலம் வந்து இவரையும் வணங்கி நிற்கும்
வறுமையினை யார் ஒழிப்பார் காடு வாழ

Saturday, February 20, 2010

சிவ மணி

உலகமே தாளத்தின் இயக்கம் என்று
உணர்த்துவது சிவ நடனம் வணங்கி நின்றோம்
உலக மெங்கும் தாளத்திற்கு ஒருவன் என்று
உணர்த்தி வென்றான் எங்களது சிவமணி தான்
பல கைகள் கொண்டவனோ என்று எங்கும்
பார்ப்பவர்கள் வியந்திருக்க அனைவரையும்
கலகலப்பாய் ஆட வைப்பான் எங்களது
கண்மணியாம் சிவமணி எம் தமிழ்த் தாய் செல்லம்

இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த நாள்

இராமகிருஷ்ண பரமஉறம்சர் பிறந்த நாள்


காளியைத் தன் தெய்வம் என்றுணர்ந்து வாழ்ந்தார்
கதைகளாகச் சிறந்ததெல்லாம் சொல்லி நின்றார்
நாளெல்லாம் நல்லனவே செய்து நின்றார்
நரேந் திரனை உலகிற்கே நல்கி நின்றார்
ஏழைகளின் ஏழையாக வாழ்ந்திருந்தார்
எப்போதும் இறை நினைவில் மூழ்கி நின்றார்
வாழை யடி வாழையாக விவேகாநந்த
வள்ளலேயே சேவைக்கென தந்து சென்றார்


கிறித்துவ மதம் சேர்ந்தார் அதை உணர
கீழ்ப் படிந்து சூபியிடம் இஸ்லாம் கற்றார்
திருத்தி எல்லாம் ஒன்று என்று உணர்ந்து நின்றார்
தெய்வத்தில் பேதமில்லை என்றுரைத்தார்
வருத்தி அல்ல உணர்ந் துணர்ந்து அவரும் தேர்ந்தார்
வணங்கி நின்றார் ம்னைவியையே தெய்வமாக
கருத்து மழை பொழிந்து நின்ற அரிய ஞானி
காளி மகன் இராமகிருஷ்ணர் பிறந்தார் இன்று

Thursday, February 18, 2010

சட்டுன்னு தோணாதோ


கத்திரிக்காய் மரபணுவை மாத்திப் போட்டா
காச்மூச் என் றெல்லாம் சத்தம் போட்டீர்
மொத்தமாக மரபையெல்லாம் மாத்திப் போட்டா
மூடிக்கிட்டு இருக்கேளே நியாயம் தானா
எத்தனையோ பெருமையெல்லாம் அழிச்சிக்கிட்டு
இன்னும் அவா இருக்காளே பதவியிலே
சத்தியமா அவர் ஒழிக்க வேணும்ன்னு
சட்டுன்னு தோணாதோ ஒங்களுக்கு

Wednesday, February 17, 2010

திரைப் படத்தார் போதனைகள்

திரைப் படங்கள் செய்கின்ற தீங்கு எல்லாம்
தினமும் ஒரு பெண்ணைத் தான் கொல்லுதிங்கு
உரைத்தாளாம் காதலிக்க மாட்டேன் என்று
உள் நுழைந்து வீட்டிற்குள் கொல்லுகின்றான்
திரைப் படத்தார் போதித்த வன்மையது
தீய்க்கிறது பெண் முகத்தை பிளேடினாலே
வரை முறையே இல்லாமல் காட்டுகின்ற
வன்முறைதான் பெண்ணினத்தை அழிக்குதிங்கு

அழிந்து விட்ட உலகம்

அழிந்து விட்ட உலகம்

உலகம் அழிந்திடுமாம் புலம்புகின்றார்
உள்ளம் அழிந்தவர்கள் ஊடகத்தில்
கலகம் பல வளர்த் தேற்கனவே
ககனத்தை பல வழியில் அழித்தொழிக்கும்
மதத் தலைவர் அரசியலார் ஆசையினால்
மக்களையே அடிமைகளாய் மாற்றி வாழும்
இனத் தலைவர் என்று இவர் அழித்தழித்
தேற்கனவே அழிந்து விட்டதுலகமிங்கு

Tuesday, February 16, 2010

ஏப்ரல் ௨0 2009

ஒத்தக்கடை ஆனைமலை
எத்தனை நாள் இருக்கும்
ஊர்வழியே போகையிலே
பாத்துக்கிட்டே போனேன்
கெத்தான ஆள் யாரும்
கீழ் மேலாய்ப் பணத்தை
கிண்ணாரம் கொட்டியே
அள்ளிஅள்ளித் தந்தால்
ஒத்தக்கடை கிரானைட்
ஒலகெங்கும் போகும்
ஊர்மட்டும் பொலிவிழந்து
பொசுக்குன்னு போகும்.

சத்தியமாய் இதையேதும்
சதிகாரர் கூட்டம்
சட்டுன்னு முடிச்சுட்டா
யாரு என்ன பண்ண
பத்திரமா பாத்துக்குங்க
ஒத்தக்கடை மக்கா
பாவிப்பய கூட்டம் அதை
ஒழிச்சிரவே கூடும்.

விம்முகின்றேன் விம்முகின்றேன்

விம்முகின்றேன் விம்முகின்றேன்

வால் தூக்கி அமர்ந் தழகாய் பழம் கடிக்கும்
வடிவான அணிற் பெண்ணாள் என்றன் வீட்டில்
வாழ்வதற்காய் கூடு ஒன்று கட்டி வாழ்ந்தாள்
வந்து எங்கள் வீட்டுச் சோறும் உண்டு வாழ்ந்தாள்
சூழ் கலியால் மின்சார இணைப்பினூடே
சொந்த மகள் கூடு கட்டல் கண்டேனில்லை
வீழ்த்தி விட்டான் காலன் நான்கு குழந்தையோடு
விம்முகின்றேன் விம்முகின்றேன் மகளுக்காக

Monday, February 15, 2010

மாமனிதர் பல்லவராயர் திரு உருவச்சிலை

கேட்பாளர்கள்

கேட்பாளர்கள்

விழாவின் கேட்பாளர்கள்

விழா விளம்பரங்கள்

உரை நிகழ்த்துகின்றேன்

நினைவு நாள் உரை நிகழ்த்துகின்றேன்

கரம்பக்குடி துரை.விஜயரகுநாத பல்லவராயர் நினைவு நாள்

அன்பு மகன் சுரேகா என்ற சுந்தரராமனோடு

தாய்ப்பால் வரம்

தாய்ப்பால் வாரம்தாய்ப்பால் வரம் என்று உணராத் தாயார்
தாய்மையுறல் இறைவன் அவன் தண்டனையோ
வாய்ப்பன்றோ தாய்மை அது குழந்தைகளை
வலிமை கொள்ள வைப்பதுவே தாய்ப் பாலன்றோ
காய்ப்பாக காய்த்து மனம் தகிக்கின்றது
கனியும் மனத் தாய்மை இதைஉணர வேண்டும்
தாய்ப் பாலை வாரம் வைத்துப் போற்றச்சொல்லும்
தன்மானம் அற்ற செயல் நிறுத்த வேண்டும்

கோச்செங்கட் ச்சோழன் குரு பூஜை

கோச்செங்கட் சோழன் குரு பூஜை


பெறுவதற்குத் துனபமுற அஞ்சும் தாயர்
பிள்ளைகளை அறுவையிலே பெறுகின்றாரே
உறுதுன்பம் அதனை ஒரு நாழிகைக்கு
உயிர்க் கஞ்சா தாயொருத்தி பொறுத்துக் கொண்டாள்
பெறும் பிள்ளை கோயில்களை தமிழர் நாட்டில்
பெருமளவு கட்டிடுவான் என்பதற்காய்
அருஞ்செயலால் கோச்செங்கட் சோழன் வந்தான்
அன்னையவள் உயிர் துறந்தாள் இந்த நாளே

Sunday, February 14, 2010

தெய்வம் வாழ்த்தும்

தாயினைத் தந்தை தன்னை தம்பியை அண்ணன் தன்னை
சேயென அன்பு செய்யும் தங்கையைத் தமக்கைதன்னை
வாயினில் பல்லேயின்றி வாஞ்சையை அள்ளி வீசும்
தூயராம் தாததா பாட்டி தொடரும் நல் உறவினோடு
காய்தலே இல்லா கன்னித் தமிழரைத் தாய் நாட்டாரை
ஒய்தலே இல்லா இந்த உலகத்து மக்கள் தம்மை
தோய்ந்திங்கு காதல் செய்தால் தொடரும் நல் நன்மையெல்லாம்
வாய்மைதான் காதல் அதனை வணங்கிடும் தெய்வம் வாழ்த்தும்

ஒத்தக்கடைஆனைமலை காத்திடுங்க


ஒத்தக்கடை ஆனைமலைக்கு ஆபத்து வரும்ன்னு
ஒரு வருஷம் முன்னாலே கவிதையில சொன்னேன்
சித்தம் கொண்ட எவரோ அந்த வேலையில இறங்க
சிலை செதுக்கப் போறதாக ஏமாத்தப் பாத்தார்
மொத்தமாகக் கிராமம் எல்லாம் முழிச்சிக்கிட்டதாலே
மூடிக் கொஞ்ச நாள் கழிச்சு முயற்சி செஞ்சு பாப்பார்
ஒத்தக்கடை மக்கா நீங்க ஒத்துமையா நின்னு
ஊர்ப் பெருமை ஆனைமலை காத்திருங்க சாமி

சாதலுக்கு மட்டும்தான்


காதலுக்கு ஒரு தினமாம் நம்மை ஈன்ற
கருப்பையின் தாயார்க்கு ஒரு தினமாம்
ஆதரித்து நமைப் பெற்று வளர்த்து வாழும்
அப்பாமார்க்கு ஒரு தினமாம் வெள்ளையர்கள்
பேதலித்துச் செய்கின்ற அனைத்தையுமே
பெருமையெனச் செய்கின்றார் நம்மில் சில்லோர்
சாதலுக்கு மட்டும் தான் ஒரு தினத்தைச்
சரியாகத் தந்துள்ளார் இறைவன் இங்கு

Friday, February 12, 2010

ஆபிரகாம் லிங்கன்
அழகில்லா முகத்தான் தான் உள்ளம் எல்லாம்
அன்பதனைக் கொண்டவனாய் உயர்ந்து நின்றான்
வழியற்ற வறுமையிலே உழன்றவன் காண்
வரலாறாய் ஆகி நின்றான் அமெரிக்காவின்
பழியான கறுப்பர் இனக் கொடுமை தன்னை
பாவம் என்று உணர்ந்து அதனைத் தீர்க்க எண்ண
கழியாதார் அவனையும் தான் சுட்டுத் தீர்த்தார்\
ககனம் எல்லாம் இதுதானே கதையாய் ஆச்சு

கிடைக்குமிடம்

எனது படைப்புக்களும் குறுந்தகடுகளும் சென்னையில் கிடைக்கும் இடம்
நியு புக்லேண்ட்ஸ் வடக்கு உஸ்மான் சாலை தியாகராய நகர் சென்னை 17

திக்கனைத்தும் சடை வீசி நூலிலிருந்து


ஊர்ப்பிள்ளை கறி கேட்டு உவக்க வைத்தான்
உலகறிய தன் பிள்ளை சுற்ற வைத்தான்
போர்ப் பிள்ளையாக அவன் பெறுவதற்கே
பொறிப் பிள்ளையாக அவன் ஈன்றளித் தான்
ஊர்ப்பிள்ளை யாகி வைகை ஆள வந்தான்
உதிர்ப்பிட்டு உணவேற்று அருளும் செய்தான்
யார் பிள்ளை நீ என்றால் காரைக்காலின்
அம்மையினைப் பெற்ற பிள்ளை நானேயென் றான்

சிவராத்திரி


உவமையில்லா இறைவன் அவன் தன்னை என்றும்
உளமார வணங்கிடுங்கள் சிவனேயென்று
தவமிருந்து தேடி ஒன்றும் அலைய வேண்டாம்
தாயாக அவன் வந்து தழுவிக் கொள்வான்
புவனமிதில் அவன் தந்த பிறப்பைப் போற்றி
பொழுதெல்லாம் நன்மை ஒன்றே செய்திடுங்கள்
கவலைகளைத் தீமைகளை அருளிச் செய்தான்
கண்ணுதலான் நமை நன்கு மேம்படுத்த

Thursday, February 11, 2010

காலச்சுவடு கண்ணன் நாஞ்சில் நாடனோடு

சாவதெல்லாம் நாம் மட்டும்
சுட்டார்கள் காந்தி யவர் இறந்தா போனார்
சொல்லுகின்றார் உலகெங்கும் அவர் பெருமை
சுட்டார்கள் இந்திராவை இறந்தா போனார்
சொல்லுகின்றார் அவர் உள்ளத் துணிவை இன்றும்
கெட்டார்கள் கொன்றார்கள் ராஜீவ் தன்னை
கீழ்த்திசையின் ஞாயிறு போல் இன்றும் உள்ளார்
செத்தாலே சாவதெல்லாம் நம்மைப் போன்ற
சிறு உள்ளக் குறுமதியைக் கொண்டோர் தானே

Wednesday, February 10, 2010

தெரியாராகி

போகின்ற உயிர் இதனைக் காக்க எண்ணி
பொறுப்பற்று வாழ்கின்றோம் அந்தோ அந்தோ
சாகத்தான் பிறந்தோம் என்று உணர்ந்தும் கூட
சரித்திரமாய் மாறி விட ஆசையில்லை
வேகத்தான் உடல் என்று உணர்ந்தும் உண்மை
வென்று விடத் துணை நிற்க விருப்பமில்லை
ஆகட்டும் ஆகட்டும் வாழ்ந்து தீர்ப்பீர்
அடுத்து வரும் தலைமுறைக்குத் தெரியாராகி

மயங்குகின்றார்

ஆட்சி எனில் அச்சம் கொண்டார் அன்று நம்மை
ஆண்டிருந்த தமிழ் மன்னர் மக்களையே
சாட்சி எனக் கொண்டு அவர் ஆட்சி செய்தார்
சரியாக இருந்ததந்த ஆட்சியெல்லாம்
ஆட்சி மக்கள் கையில் என்று சொல்லுகின்றார்
ஆனாலும் மக்கள் அதை உணர்ந்தார் இல்லை
காட்சிகளில் இலவசத்தில் மயங்கி இன்று
கண்ணியமே இல்லாரை வணங்குகின்றார்

Tuesday, February 9, 2010

தன் குடும்பம் காக்கின்ற ஒரு தலைவர்
தனிக் குடும்பம் ஒன்றிற்காய் ஒரு தலைவி
நம் குடும்பம் காப்பதற்காய் வாக்குத் தந்தால்
நாம் அதனை விற்பதற்கோ நாணவில்லை
தன் குடும்பம் தனைத் துறந்து தாய் நாட்டிற்காய்
தடியடியும் சிறை வாழ்வும் பெற்றழிந்த
நற் குடும்பம் பல இங்கு தெருவினிலே
நாதியற்றுப் போனோமே சொடலமாடா

சொடலமாடன் சொடல மாடன் வந்திட்டாரு

சொடலமாடன் சொடலமாடன் வந்திட்டாரு
சுத்த பத்தமாக வந்து கும்பிடுங்க
குடல உருவி மால போட்டு ஆடத்தானே
குலவையிட்டுப் பாடுங்க அவரைத்தானே
விடலத்தன அரசியல நாட்டை விட்டு
விரட்ட வேண்டுமென்று அவரக் கும்பிடுங்க
மடமையாக வாக்களிக்கும் சனங்களுக்கு
மதி வரணு மின்னு சொல்லிக் கும்பிடுங்க


வேலைக்குன்னு சம்பளத்தில் ஆளே வச்சு
விழுந்து அவரைக் கும்பிடுத சோகம் போக்க
கோழையென அனைவருமே ஆகி இங்கே
கும்பிட்டு நிற்கின்ற ஏழ்மை போக்க
நாள நம்ம புள்ளைகளும் நல்லா வாழ
நாட்டில் உள்ள தீயவரை ஒழிக்க இங்க்
சொடல மாடன் சொடலமாடன் வந்திட்டாரு
சுத்த பத்தமாக வந்து கும்பிடுங்க

Monday, February 8, 2010

பாவாணர் நினைவுஅன்றோ

பாவாணர் தம்மையெல்லாம் மறப்பதென்றால்
பைந்தமிழைத் தாய்த் தமிழை மறப்பதாகும்
தேவாரம் சைவனுக்கு நினைவு என்றால்
தெள்ளுதமிழ்ப் பாவாணர் நினைவு அன்றோ

Sunday, February 7, 2010

பாவாணரைவணங்கி நிற்போம்

பாவாணர் என்றாலே தமிழாம் தாயார்
பக்கத்தில் நிற்கின்றாள் என்றே தோன்றும்
ஆவார் அவரையெல்லாம் மறந்து நிற்கும்
அவலங்கள் தனைநினைந்தால் மனது நோகும்
போவார் மற்றாரெல்லாம் போவார் ஒர் நாள்
பொதிகை மலைத் தமிழன்னை இருக்கும் வரை
பாவாணர் இருப்பார் நம் தமிழாய் வாழ்வார்
பணிந்தவரை வணங்கி நிற்போம் வாரீர் வாரீர்

குறளும் கருத்தும் 6

தந்தையே எனது உறவினர் ஒருவர். வயதால் மூத்தவர். நிறையக் கற்றிருக்கின்றார். இல்லை தந்தையே படித்திருக்கின்றார்.
எல்லோருக்கும் வழி சொல்வது. எல்லோருக்கும் உதவுவது என்று நல்லதெல்லாம் செய்கின்றார். ஒரே ஒரு தீய குணம்.
எல்லா நன்மைகளையும் யாருக்குச் செய்கின்றாரோ அவர்களிடம் கோபம் கொள்கின்ற போது அவர் நடந்து கொள்கின்ற
முறைகள் தாங்க முடியவில்லை. வார்த்தைகளை அள்ளி வீசுகின்றார். பாவம் அவர்கள் அவர் உதவியிலே வாழ்பவர்கள்.
எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லாமல் மனதுக்குள்ளேயே மறுகுகின்றனர். அவரை எப்படிச் சரி செய்வது.


மனிதர்கள் பலர் மனைவியிடம் கூட இப்படித்தான் நடந்து கொள்கின்றனர். அவள் எதிர்க்க மாட்டாள் என்கின்ற ஒரே
நம்பிக்கை. தந்தையின் பதில்.


அவரிடம் சொல்லு அவர்கள் உங்களையே நம்பி வாழ்கின்றவர்கள்.அவர்களிடம் கோபம் கொள்வது பண்பாடற்ற செயல்
என்று.கோபத்தை கட்டுப் படுத்தப் பழகிக் கொள்ளவே அவர் இந்த உறவுகளைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அது
அவருக்கு அவர் உயிரையும் உடைமைகளையும் காக்கின்ற மிகப் பெரிய உதவியினைச் செய்யும்.

ஆமாம் இப்படி நல்லவர்களிடம் தன்னை நம்பி வாழுகின்ற ஏழை எளியவர்களிடம் இந்தப் பயிற்சியினை
எடுத்துக் கொண்டாரெனில் அவரால் கோபம் கொள்ள முடியாத உயரத்தில் இருப்பவர்களிடம் எத்தகைய சூழலிலும் கோபம் வராது.
புரிகின்றதா?அதனால் அவருக்குப் பெரிய நன்மையல்லவா ஏற்படும்.இல்லையெனில் அவர் நிலை என்னவாகும்.


ஏழைகள் அவருக்குக் கீழே இருப்பவர்கள் பொறுத்துக் கொள்வார்கள். மிகப் பெரிய இடத்தில் இருப்பவர்கள் இவருடைய
குணம் கொண்டவர்களாக இருப்பின் இவர் கதி அதோ கதிதானே.


இவர்கள் இப்படியே இருப்பின் நீயும் நானும் என்ன செய்ய முடியும். இதே பழக்கத்தில் இவர்கள் விபரமில்லாமல்
கோபப் படக் கூடாத இடங்க்ளில் கோபப் பட்டு ஒரு அனுபவம் பெறுவார்கள் பார். அப்போது அவர்களாகவே தெரிந்து கொள்வர்.


கோபப் படாமல் இருக்க நம்மைக் காப்பாற்றிக் கொள்ள தந்தை சொன்ன வழியை எண்ணிஎண்ணி
அவரை வணங்கி நின்றேன்.


குறள்

செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக்
காக்கிலென் காவாக் காலென்

பாவாணர்

தேவநேயப் பாவாணர் தமிழுக்காகத் தெய்வம் தந்த நன்கொடை காண் வாழ் நாள் தன்னை
பூவுலகின் முதல் மொழியாம் தமிழுக்காகப் போற்றி அதைச் செம்மையுறச் செய்த தீரர்
ஆவதெல்லாம் தமிழாலே என்று நமக்கறிவித்த பேரறிஞர் அவரைப் போன்றோர்
மேவிய நற்றொண்டாலே தமிழாம் தாயாள் மேன்மையுற்றாள் மேன்மையுற்றாள் வென்றும் நின்றாள்

Saturday, February 6, 2010

ஆமா உண்டா சொல்லு

கண்ணைக் குத்திரும் சாமின்னு அன்னிக்குக்
கதை கதையாச் சொன்னாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
கண்ணேயில்லாமத் தான் சாமில்லாம் நிக்குது அவங்க
கண்ணைக் குத்தினது யாரு சொல்லு
ஆமா யாரு சொல்லு


அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படாதேன்னு
அன்னிக்குச் சொன்னாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
அடுத்தவர் பொருளையே ஆட்டையைப் போடுறார்
ஆத்தாவே இல்லியா அவருக்கிங்கு
ஆமா அவருக்கிங்கு


ஊரார் பொருளுக்கு ஆசைப் படாதேன்னு
உண்மையாச் சொன்னாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
ஊரையே தூக்கி முழுங்குறார் அவருக்கு
உண்மை சொன்ன ஆத்தா உண்டா சொல்லு
ஆமா உண்டா சொல்லு


சொடலமாடன் வந்து குடலப் புடுங்குவான்னு
சொல்லி வளத்தாளே எங்க ஆத்தா
ஆமா எங்க ஆத்தா
சொடலமாடன் கோயில் நிலத்தையும் கூடத்தான்
கொள்ளை அடித்திட்டார் எங்க தாதா
ஆமா எங்க தாதா

குறளும் கருத்தும் 5
ஊரிலேயே மிகப் பெரிய செல்வந்தக் குடும்பம். ஊர்மக்களின் காவலுக்காகவே உள்ளவர் போன்றவர்.அவர்கள் குடும்பத்தின்
மூத்த மகன் பக்கத்து ஊர்களின் இரந்து(பிச்சை) வாழ்கின்றார்.

என்னால் அதனைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தந்தையும் உடன் பிறந்தவர்களும் அப்படி இருந்தால் நான் வருந்த மாட்டேன்
முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள் சுமந்து பெற்ற தாயும் அவர் குறித்துக் வருத்தம் கொள்வதில்லை. அவரைக் கண்டு கொள்வதும்
இல்லை.

எனக்கு மிக மிக வருத்தம் தந்த நிகழ்வு என்னவென்றால். பக்கத்து ஊர்க் கோயிலுக்கு இறைவனை வணங்கிடச் சென்றிருந்தேன்.
கோயில் வாசலில் கையேந்தி நின்று கொண்டிருந்த அவரை அங்கே வழிபாடு செய்ய வந்த அவரின் தாய் கண்டு கொள்ளவே இல்லை
எனக்கு மிகுந்த அதிர்ச்சி. இப்படியும் ஒரு தாய் தாய்மைப் பண்பற்றவராக இருப்பாரா என்று. வழி பாடு முடிந்து வெளியே வரும்
போதேனும் காண்பார் என்று கருதினேன். அங்கே ஒரு உயிர் இருப்பதாகவே அந்த அம்மையார் கருதவில்லை. வெளியில் வந்தார்.
மகிழூந்தில் ஏறினார். சென்று விட்டார்.


வருத்தம் அதிகமாக வள்ளுவப் பேராசானை நாடிச் சென்றேன்.


என்னைப் பார்த்தவுடன் என் முகவாட்டம் தெரிந்து கொண்டார்.


என்ன வாட்டம் என்றார் தந்தை.


பெற்ற மகனின் மீது பற்றில்லா ஒரு தாயைக் கண்டு கொண்ட வருத்தமென்றேன்


தாய்மை என்றால் என்ன என்று நீ அறிவாயா என்றார்


பதில் சொல்ல சக்தியற்று நின்றேன்.


சொல் என்றார்.


ஊரிலேயே உயர்ந்த குடும்பம். ஊர்மக்களுக்காக கல்விக் கூடம் மருத்துவமனை. பசிப்பிணி தீர்க்கும் நல்ல ஏற்பாடுகள் என
அனைத்தையும் செய்திருக்கும் குடும்பத்தின் முதல் மகன் இரந்து வாழ்கின்றார்.கோயில் வாசலில் அவர் இரந்து நிற்பதனைக் கண்டு
கூட அந்தத் தாய்க்கு வருத்தமில்லை என்பது மட்டுமல்ல அய்யா அப்படி ஒரு மகன் இருந்த்தான் என்கின்ற நினைவு கூட அந்தத்
தாய்க்கு இல்லை. அவரைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் போகின்றார் என்றேன்.


அவருக்கு ஒன்றுமே அவர்கள் தந்ததில்லையா என்றார்.


இல்லை அவர் தனியாக வாழ வேண்டுமென்று விரும்பினார். அவருக்கு வேண்டிய செல்வங்கள் தந்துதான் அனுப்பினர்.என்றேன்


அந்த செல்வங்கள் என்ன ஆயிற்று என்றார்.


அவருக்கு நல்ல நட்பில்லை.அவர்களாலேதான் குடும்பத்தையே அவர் பிரிந்தார். எல்லாத் தீய வழக்கங்களுக்கும் ஆளானார்.
ஊரில் ஏழைப் பெண்கள் நிம்மதியோடு வாழ இயலாத சூழல்.அனைத்தையும் தீமைகளிலேயே இழந்தார் என்றேன். ஆனாலும் அந்தக்
குடும்பமே செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கையில் அவரை இப்படி விடலாமா? அதிலும் பெற்ற தாய் என்று நின்றேன்.


தந்தை வள்ளுவர் பேசலானார். நல்ல வழிகளிலே அவர் அந்தச் செல்வத்தை செலவிட்டு அழித்திருந்தாரானால் அந்தத்
தாயைப் போல் மகிழ்ச்சி யார் அடைவார்கள். தீய வழிகளிலே அனைத்தையும் அழித்து மக்கள் அனைவருக்கும் துன்பங்கள் தந்துள்ள
அவரை அந்தத் தாய் எப்படி மகன் என்று ஏற்றுக் கொள்வார்.வறுமை கூட நல்வழியில் வந்தால்தான் தாயர் அதனை ஏற்றுக்
கொள்வர். அறத்திற்குப் புறம்பாக வந்த வறுமை என்றால் பெற்ற தாயே அந்த மகனை தன் மகன் என்று எப்படிப் பார்ப்பாள்
இனிமேலேனும் முழுமையும் தெரிந்து கொண்டு பேசு என்றார்.


தந்தையை வணங்கி நிற்கின்ற பெரும் பேறு அன்றும் கிடைத்ததை நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லி நின்றேன்.


குறள்

அறஞ்சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப் படும்

சொடலமாடா கொல் இவரை

சுடுகாடு உனக்கு இனி சொந்தமில்ல
சுத்து முத்தும் பிளாட் போட்டு வித்திட்டாங்க
சுடுகாட்டுச் சாம்பலினி கெடைக்காதிங்கு
சுடுறதுக்கு மின்சாரம் வந்திடுச்சி
சுடுகாட்டுப் பேய்களுமே அங்க இல்ல
சுத்து திங்க ஊருக்குள் தலைவராக
சுடுகாட்டை ஊருக்குள்ளே மாத்திட்டாங்க
சொடலமாடா இங்க வந்து கொல் இவரை

Friday, February 5, 2010

பொசுக்கட்டும் இவர்களையே

எரிக்கின்ற கண் ஒன்று இருந்த போதும்
எரிக்காமல் இருக்கின்றாய் பலரை இங்கு
விழிக்கின்ற கண் மூடா இமையவர்க்காய்
வேலவனை ஈன்றவனே நியாயம் தானா
எரிக்கின்றார் எம்மை இங்கு அரசியலார்
எங்களுக்கும் விழி மூட இயலவில்லை
பொசுக்கென்று ஒரு பிள்ளை பெற்றுத் தாயேன்
பொசுக்கட்டும் அவன் வந்து இவர்களையே

குறளும் கருததும் 4

மனித வாழ்க்கை தருகின்ற பல அய்யப்பாடுகள் குறித்து வள்ளுவரைத் தவிர யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலும்.
என் தந்தை எனக்கு சிறு வயதில் இருந்தே சொல்லித் தந்தது. என்ன அய்யம் ஏற்படினும் அதனை ஒரு கேள்வியாக்கிக் கொண்டு
வள்ளுவரிடம் செல் உறுதியாகப் பதில் உண்டு என்பார்கள்.


மக்களுக்கு எப்போதும் இருக்கின்ற ஒரு பெரிய அய்யம்.

தவறுகளுக்கு அஞ்சாமல் தவறுகளையே வாழ்க்கையாக்கி வருவாய் ஈட்டி பெருஞ் செல்வந்தர்களாக வாழ்ந்து வருபவர்களும்
நேர்மை நாணயம் ஒழுக்கம் என்று உண்மையாக மனிதர்களாக வாழ்பவர்கள் வறுமையில் வாடுவதும். எதனால் என்ற அய்யத்திற்கு
விடை கேட்டு வள்ளுவரிடம் சென்றேன்.

அவரிடம் எனது அய்யம் குறித்து வினவினேன்.

நீ என்ன கருதுகின்றாய் என அவர் என்னையே வினவினார்

தவறானவர்கள் மிகப் பெரிய இடங்களிலே இருக்கின்றனர். அவர்களையும் இந்த மக்கள் வணங்கி நிற்கின்றனர்.
கோயில்களில் கூட அவர்கள் எல்லோருக்கும் முன்னர் நின்று இறைவனைத் தொழுகின்றார்கள். மக்கள் அங்கேயும் கூட அவர்களை
வணங்கி நிற்கின்றனர்.


நல்லவர்களை மக்கள் வணங்கவில்லை என்கின்றாயா என்றார்

இல்லை அவர்களையும் வணங்கத்தான் செய்கின்றனர்.

இரண்டிற்கும் ஏதாவது வேறுபாடு கண்டாயா என்றார்

சரியாகப் பார்க்கத் தவறி விட்டேன் என்றேன்.


இனிப் போய்க் கவனி.ஒன்றைப் புரிந்து கொள்வாய் என்றார் பேராசான்.

கள்ளச் சாராயம் காய்ச்சுவது விபச்சாரத்தைத் தொழிலாகச் செய்வது ஏழைகளின் உழைப்பைத் திருடுவது. எவர்
சொத்தையும் அபகரித்துக் கொள்வது என்று வாழ்பவர்களை ஊரில் மக்கள் வணங்குவதும் அவர்களைக் கண்டால் குழைந்து
நிற்பதும் வார்த்தைக்கு வார்த்தை அய்யா அய்யா என்பதும் அவர்களைத் தொழுவது போல நிற்பதுவும் பார்த்த நீ கொஞ்சம்
அங்கேயே நின்று கவனித்திருந்தால்தான் உண்மை உனக்குப் புரிந்திருக்கும் என்றார்,

ஒருமுறை நின்று பார். அந்தத் தவறானவன் அந்தப் பக்கம் போனதும் வணங்கி நின்றவர்கள் கடவுளிடம்
சினம் கொள்வதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். இவனையெல்லாம் உடனடியாகத் தண்டிக்காமல் விட்டாயானால் எங்களுக்கு
உன் மீது உள்ள பக்தியே போய் விடும் என்று வேகப் படுவார்கள்.இவனுக்கு ஒரு சாவு வராதா. நல்லவர்கள் வாழ்கின்ற
இடத்தில் இவனைப் போன்றவர்களையும் இறைவன் வாழ வைத்துள்ளானே என்று மிக மிக உள்ளம் வருந்துவார்கள்,


அதே நேரம் நல்லவர்களைக் கண்டவுடன் முக் மலர்ந்து தாள் பணிந்து அவர்களின் ஏழ்மை நிலை குறித்துத்
தங்களின் மன வருத்தங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு இறைவன் அவர்களுக்கு உடனடியாக எல்லா உதவிகளையும் செய்ய
வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவார்கள். அய்யா உங்களைப் போன்றவர்களால்தான் மழை பெய்கின்றது. அச்சப்பட்ட ஏழை
மக்கள் உங்களைப் போன்ற நேர்மையாளர்களைப் பார்க்கும் போதே கடவுளை நம்புகின்றோம்.என்றெல்லாம் அவரோடு உரை
யாடுவார்கள். நாங்கல்லாம் உங்கள் பிள்ளைகள் என்பார்கள்.

புரிகின்றதா தம்பி. மக்களால் இவர்கள் இருவருமே நினைக்கப் படுவார்கள். ஆனால் நினைக்க்ப் படுகின்ற முறைதான்
வேறு. தீயவர்களை மனம் நொந்து சாபங்களோடு வணங்குவார்கள். நல்லவர்களை அகமும் முகமும் மலர தெய்வமாகவே வணங்கு
வார்கள்.

குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

Monday, February 1, 2010

குறளும் கருத்தும் மூன்று

ஒரு நாள் தக தகக்கும் மாலை நேரம் . ஞாயிறு மஞ்சள் குளித்தாற் போல காட்சி தந்து
கொண்டிருந்தான். வள்ளுவப் பேரறிஞர் முன்னர் நிற்கின்றேன். எனது நண்பர் ஒருவரைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்.நிறையப் படித்தவர். மிகப் பெரிய அறிவாளி என்றெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கின்றேன். கேட்டுக் கொண்டேயிருந்த வான் புகழ் வள்ளுவர் சிரித்துக் கொண்டேயிருந்தார்.நான் அவர் எழுதியுள்ள நூற்களைப் பற்றியெல்லாம் அவரிடம் வரிசையாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன். பேராசான் சிரித்துக் கொண்டேயிருந்தாரே யொழிய ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு நாம் ஏதோ தவறுதலாகப் பேசிக் கொண்டிருக்கி றோம் போல என்ற அய்யப்பாடு வந்து விட்டது.

அமைதியானேன்

வள்ளுவப் பேராசான் கேட்டார் மிகப் பெரிய அறிஞர் உன் நண்பர் அப்படித்தானே என்று.

நான் மீண்டும் அடுக்கலானேன்.

சரி இத்தனை படித்திருந்தால் அவர் ஒரு அறிஞர் என்று யார் உனக்குச் சொன்னது என்றார்

என்ன சாமி அதுதானே உண்மை என்றேன்

மீண்டும் கேட்டார் நிறையப் படித்திருந்தால் அவர் அறிஞர் என்று உறுதி படச் சொல்லுகின்றாயா என்று

திரும்பத் திரும்பக் கேட்கின்றார் என்றவுடன் எனது குரல் அடை பட்டு விட்டது.

சொல் என்றார்.

நான் அமைதியானேன்

அறிவு என்றால் என்ன என்று அடுத்து ஒரு கேள்வி கேட்டார்.

யாருக்கு யார் விடையளிக்க முற்படுவது. அமைதி காத்தேன்

சிரித்தார்

கல்வியல்ல படிப்பதல்ல அறிவிற்கு அடிப்படை. அடுத்த உயிர்கள் படுகின்ற துன்பத்தை தனது துன்பமாகக் கருதி அதனைத் தீர்க்க எவன் முற் படுகின்றானோ அவன்தான்
அறிவுடையவன்.

உனது நண்பர் அப்படி உயிர்க் குலத்தின் மேல் காதல் கொண்டு மற்றவர் துன்பத்தைத் தனக்கு வந்த துன்பம் போலவே கருதி துடிதுடித்து யாருக்கேனும் உதவி செய்து மகிழ்ந்துள் ளாரா. அன்று என்னிடம் வா நான் ஒத்துக் கொள்கின்றேன் அவரை அறிஞர் என்று.

வாயடைத்து நின்றேன். ஆமாம் அறிவு என்பது தன் வயிற்றையும் தன் பெண்டு பிள்ளைகள் வயிற்றையும் நிரப்புவதா. கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து வைப்பதா.

பேரறிஞர் சொல் எத்தனை உண்மையானது.

குறள்

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக் கடை

பாரதி ஒரு மாமனிதன் எனும் தலைப்பில் உரை நிகழ்த்துகின்றேன்

பாரதி விழா சுவைஞர்கள் ஈரோடு

மாவட்ட ஆட்சியர் பெரியவர் எஸ்.சுப்பிரமணியன் பெரியவர் கிருஷ்ணராஜ வாணவராயர் அவர்களோடு

பாரதி விருதை பெரியவர் எஸ்.சுப்பிரமணியன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்குகின்றார்

மாவட்ட ஆட்சித் தலைவர் சுடலைக்கண்ணனோடு உரையாடிக் கொண்டிருக்கின்றேன்

அண்ணன் ஜெ.சுத்தானந்தன் பெரியவர் கிருஷ்ணராஜ வாணவராயர் நந்தா கல்விக் குழுமங்களின் தாளாளரோடு

நந்தா கல்விக் குழுமங்களின் தலைவர் அவர்களோடு ்

பெரியவரோடு என் தோழர் ஸ்டாலின் வேதாந்த மகரிஷி அறக்கட்டளை எஸ்.கே.மயிலானந்தன்

நூறு வயதிலும் யாருடைய உதவியும் இன்றி அவரே ஜோதியை பாரதிபடத்தின்முன் நடுகின்றார்

நூறு வயதான பாரதி அன்பர் விடுதலைப் போர் வீரர்் சுப்பிரமணியம் அவர்கள் பாரதி ஜோதியை ஏந்தி வருகின்றார்

மக்கள் சிந்தனைப் பேரவை ஈரோடு பாரதிவிழா 11-12-2009

மக்கள் சிந்தனைப் பேரவை பாரதிவிழா 11-12-2009 விளம்பரம்

குறளும் கருத்தும் இரண்டு

பொல பொலவென்று பொழுது புலருகின்ற நேரம் வள்ளுவப் பெருந்தகையைக் காணச்

சென்றேன். வழக்கம் போல எழுதிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏதோ ஒன்றன் பின் ஒன்றாக எழுதுகின்றார் என்று
மட்டும் தெரிந்தது. பெரியவர்கள் பக்கத்தில் போய் என்ன எழுதுகின்றார்கள் என்று பார்க்
கின்ற தவறை எப்படிச் செய்ய இயலும். சிறிது கழித்து அவரே என்ன நலமாக இருக்கின்
றாயா என்றார். நலம்தான் என்றேன். மிகுந்த அச்சத்தோடு என்ன எழுதிக் கொண்டிருந்தீர்
கள் தந்தையே என்றேன்.

இந்த ஊர்ச் சவக்கிடங்கில் வைக்கப் பட்டுள்ள சவங்களை அகர வரிசையில் எழுதிக்
கொண்டிருந்தேன். என்றார்

எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. மெதுவாகக் கேட்டேன். அது மருத்துவமனை
நண்பர்கள் வேலையல்லவா.அதனைத் தாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்றேன்.

அவர்களுக்கு இந்த வேலையினைச் சரியாகச் செய்யத் தெரியவில்லை. ஆகவேதான்
நான் அந்த வேலையினைச் செய்யத் தலைப் பட்டேன். என்றார்.

பெரியவர்கள் எது செய்யினும் அது சரியாகத்தானே இருக்கும்.

அந்தப் பட்டியலைப் பார்க்கலாமா என்று கேட்டேன்.

எனது கையிலே தந்தார்

பார்த்தேன். பதறிப் போனேன்.

ஆமாம் ஊரில் உயிரோடு இருக்கின்ற மிகப் பெரிய பணம் படைத்தவர்கள் வணிகர்கள்
நில உடைமையாளர்கள் என்று பல பேரை சவக்கிடங்கு பட்டியலில் வள்ளுவப் பெருந்
தகை எழுதியுள்ளார்.

அச்சத்தோடு அவரைப் பார்த்தேன்.

என்ன என்றார்.

தந்தையே இவர்கள் எல்லோரும் உயிரோடு உள்ளனர். இவர்களைத் தாங்கள் சவக்
கிடங்கில் அடுக்கியுள்ளீர்களே என்றேன்.


ஆமாம் தாங்கள் இறந்தது தெரியாமலே இவர்கள் உயிரோடு உள்ளனர்.

இவர்கள் சவங்கள் என்று தெரியாமல் இந்த மக்களும் இவர்களைப் பார்த்துப் பயந்தும்
வணங்கியும் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் சவங்கள் என்பதனை மக்களுக்கு தெரிவித்து
சவக்கிடங்கிற்கு அனுப்ப உடனடியாக வேண்டிய வழி வகைகளைச் செய் என்றார்.

பேரறிஞர் என்ன சொல்ல வருகின்றார் என்று எனக்குப்புரியவில்லை.

கைகட்டி வாய் பொத்தி நின்றேன்.

வள்ளுவர் சொன்னார். இந்த ஊரிலே ஏழைக் குழந்தைகள் கல்வி பயில நல்ல பள்ளி
உள்ளதா. ஏழைகளுக்கென்று நல்ல மருத்துவமனை உள்ளதா. ஏழைகளின் பசி தீர்க்க
வழி உள்ளதா. சமூகம் தந்துள்ள பொருளை இந்தச் சமூகத்திற்குத் தராத இந்தப் பணக்
காரர்களும் வணிகர்களும் நில உடைமையாளர்களும் இன்னொரு உயிரின் துன்பம்
துடைக்கும் உணர்வற்றவர்களாக இருந்தால் அவர்கள் செத்தவர்கள் தானே.
பிறகேன் அவர்களை நாம் உயிரோடு உள்ள மனிதர்கள் வரிசையில் வைக்க வேண்டும்.
அடுத்தவர் துன்பம் தீர்க்க எண்ணாத அவர்களை அதனால்தான் சவக் கிடங்கிலே
வைத்தேன். என்ன சொல் நான் செய்தது சரிதானே.

என்ன பதில் சொல்ல இயலும் தந்தையிடம். சரி சரி சரி என்றே சொல்லிக் கொண்டே
யிருந்தேன்.
குறள்
ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும

குறளும் கருத்தும்

தமிழர்களின் அறிவுத் தந்தை வள்ளுவரை நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. சேர்ந்தாற் போல் அவரை ஒரு பத்துத் தினங்கள் சந்திக்க இயலாமல் போனது. ஆவலுடன் அவரைச் சந்திக்கச் சென்றேன். ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் என்னை திரும்பிப் பார்க்கவே சிறிது நேரம் ஆனது.

என்ன நீண்ட நாட்களாக உன்னைக் காணவில்லையே. எங்கே போயிருந்தாய் என்றார்.
அய்யா ஒரு பெரிய துறவியைக் கண்டு வணங்கச் சென்றிருந்தேன் என்றேன்.

மிகப் பெரியவரா என்றார் வள்ளுவப் பெருந்தகை

ஆமாம் என்றேன்

எப்படி என்றார்

நான்மறைகளிலும் தேர்ந்தவர். மிகப் பெரிய ஞானி என்றேன்.

வள்ளுவர் சிரித்துக் கொண்டே அருகில் இருக்கின்ற கழனியிலே உழுது கொண்டிருந்த ஒரு
உழவரைக் காண்பித்து இவரை விடவா பெரியவர் என்றார். எனக்கோ வியப்பாயிருந்தது.

என்ன சாமி இவர் வேளாண்மைத் தொழிலாளி. அவரோ உலகஞானி. எத்தனை பெரிய பீடத்தின் குரு.எத்தனை சமூகப் பெரியவர்கள் எல்லாம் அவரின் முன்னர் பணிந்து நிற்கின்றனர். குடியரசுத் தலைவர்கள் தலைமை அமைச்சர்கள் விஞ்ஞானிகள் என்று பல தரப்பட்டவரும் அவரைத் தொழுது பணிந்து நிற்கின்றனர். நீங்கள் ஒரு வேளாண் தொழிலாளியைக் காண்பித்து இப்படிக் கேட்பது எப்படி என்றேன்.

மீண்டும் பொது மறைப் பெரியோன் கேட்டார். என் வினாவிற்கான விடையை சொல்
என்றார்.

நான் விடையளிக்க அஞ்சி நின்றேன்.

உலகச் சிந்தனைத் தந்தை வள்ளுவர் நகைத்துக் கொண்டே சொன்னார். இந்த வேளாண் தொழிலாளி ஆமாம் இந்த உழவன் தனது கையை மடக்கித் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள் உயிர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியும் கூட பசித் துன்பத்திற்கு ஆளாகி விடுவார்.
இப்போது சொல் யார் பெரியவர்.எல்லாவற்றையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியா உழவரா யார் பெரியவர் என்றார்.

அவருக்கு விடையளிக்க யாரால் இயலும்

குறள் இதோ

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூ உம்
விட்டேம் என்பார்க்கும் நிலை

துறவறத்தை வள்ளுவர் கேலி செய்யும் பாங்கு விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டு விட்டோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் என்கின்றார்.

சாம்பலாய் ஆகிடும்

சாகப் பிறந்தவர் தப்பிட வழியில்லை
சரித்திரம் படைத்தவர் செத்திட வழியில்லை
ஆகப் பிறந்தவர் அழிந்திட வழியில்லை
ஆட்டிப் படைப்பவர் வாழ்ந்திடல் சரியில்லை
ஏகன் அநேகனாய் இருந்திடும் இறைவனை
ஏய்க்க நினைப்பவர் எதிர்காலம் தனிலில்லை
வாகான கொள்ளைகள் அரசியல் திருட்டுக்கள்
வறியவர் தீயிலே சாம்பலாய் ஆகிடும்