Monday, February 1, 2010

குறளும் கருத்தும்

தமிழர்களின் அறிவுத் தந்தை வள்ளுவரை நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. சேர்ந்தாற் போல் அவரை ஒரு பத்துத் தினங்கள் சந்திக்க இயலாமல் போனது. ஆவலுடன் அவரைச் சந்திக்கச் சென்றேன். ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் என்னை திரும்பிப் பார்க்கவே சிறிது நேரம் ஆனது.

என்ன நீண்ட நாட்களாக உன்னைக் காணவில்லையே. எங்கே போயிருந்தாய் என்றார்.
அய்யா ஒரு பெரிய துறவியைக் கண்டு வணங்கச் சென்றிருந்தேன் என்றேன்.

மிகப் பெரியவரா என்றார் வள்ளுவப் பெருந்தகை

ஆமாம் என்றேன்

எப்படி என்றார்

நான்மறைகளிலும் தேர்ந்தவர். மிகப் பெரிய ஞானி என்றேன்.

வள்ளுவர் சிரித்துக் கொண்டே அருகில் இருக்கின்ற கழனியிலே உழுது கொண்டிருந்த ஒரு
உழவரைக் காண்பித்து இவரை விடவா பெரியவர் என்றார். எனக்கோ வியப்பாயிருந்தது.

என்ன சாமி இவர் வேளாண்மைத் தொழிலாளி. அவரோ உலகஞானி. எத்தனை பெரிய பீடத்தின் குரு.எத்தனை சமூகப் பெரியவர்கள் எல்லாம் அவரின் முன்னர் பணிந்து நிற்கின்றனர். குடியரசுத் தலைவர்கள் தலைமை அமைச்சர்கள் விஞ்ஞானிகள் என்று பல தரப்பட்டவரும் அவரைத் தொழுது பணிந்து நிற்கின்றனர். நீங்கள் ஒரு வேளாண் தொழிலாளியைக் காண்பித்து இப்படிக் கேட்பது எப்படி என்றேன்.

மீண்டும் பொது மறைப் பெரியோன் கேட்டார். என் வினாவிற்கான விடையை சொல்
என்றார்.

நான் விடையளிக்க அஞ்சி நின்றேன்.

உலகச் சிந்தனைத் தந்தை வள்ளுவர் நகைத்துக் கொண்டே சொன்னார். இந்த வேளாண் தொழிலாளி ஆமாம் இந்த உழவன் தனது கையை மடக்கித் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள் உயிர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியும் கூட பசித் துன்பத்திற்கு ஆளாகி விடுவார்.
இப்போது சொல் யார் பெரியவர்.எல்லாவற்றையும் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் துறவியா உழவரா யார் பெரியவர் என்றார்.

அவருக்கு விடையளிக்க யாரால் இயலும்

குறள் இதோ

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூ உம்
விட்டேம் என்பார்க்கும் நிலை

துறவறத்தை வள்ளுவர் கேலி செய்யும் பாங்கு விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டு விட்டோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் என்கின்றார்.

1 மறுமொழிகள்:

said...

ஆஹா...அற்புதம் அய்யா!
நீங்கள் இதைக் கட்டாயம் புத்தகமாகப்போடவேண்டும்.