Wednesday, September 19, 2012

பிள்ளையார் தினமணி குமுதம்

பெரியவர்களே வாழ்க தமிழுடன். இரண்டு காது மடல்களையும் நன்கு இழுத்து விட்டால் புத்திக் கூர்மையாக வேலை செய்யும் ஜெர்மன் கண்டு பிடிப்பாளர்கள் சொல்லியுள்ளார்கள். இதனைத் தான் நமது பெரியவர்கள் பிள்ளையார் முன்னர் தோப்புக் கரணம்  போடச் சொன்னார்கள்.புத்தியும்
வேலை செய்யும். கால்களுக்கும் பலம் கிடைக்கும். இது ஒரு செய்தி.


பல நண்பர்கள் என்னிடம் ஏன் தினமணியில் கட்டுரைகள் எழுதவில்லை எனக் கேட்கின்றனர். ஏன் இவர்கள் இந்த வினாவினை தினமணி ஆசிரியர் திருமிகு அய்யா வைத்தியநாதன் அவர்களிடம் கேட்கக் கூடாது.

நானாக யாரிடமும் போனதில்லை. கேட்டதுமில்லை.

எனது அன்பு மிக்க பிள்ளை நெய்வேலி பொறியாளர் வாணனும் கல்லூரி முதல்வர் மருதூராரும் துரைக்கண்ணுவும் கவிஞர் இராமசாமியும் அழைத்து நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்த போது தினமணி ஆசிரியர் அய்யா வைத்தியநாதன் அவர்கள் என்னைச் சந்தித்தார். அங்கே தான் அவர் என்னிடம் தினமணியில் எழுதுங்களேன் என்றார். எழுதத் தொடங்கினேன்.நிறையவே எழுதினேன். படித்தவுடன் உடன் என்னிடம் பேசுபவர்கள் பல பேர்.

மரியாதைக்குரிய அய்யா வைத்தியநாதன் அவர்கள் என்னை அண்ணா என்றே அழைப்பார்கள். தினமணியிலேயே கலாரசிகன் என்ற பெயரில் அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் எழுதுகின்ற கட்டுரைகளில் எனது விருந்தோம்பலைப் பற்றியும் எனது அறிவினைப் பற்றியும் திருநெல்வேலிக்கு வந்தால் நெல்லையப்பரைக் கூடப் பார்க்காமல் வந்து விடுவேன். நெல்லைக் கண்ணன் அவர்களைப் பார்க்காமல் வர மாட்டேன் என்றெல்லாம் எழுதினார். இருட்டுக் கடை அல்வா கிடைக்கவில்லை என்றால் கவலை கொள்ள வேண்டாம் தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்கள் வீட்டில் போய் வாங்கிக் கொள்ளலாம் என்றெல்லாம் எழுதினார்.

திருநெல்வேலியில் நடந்த அவர் புத்தக விழாவிலும் என்னை பங்கு கொள்ளச் செய்தார்.

ஒரு கால கட்டத்தில் நான் எழுதிய எந்தக் கட்டுரைகளையும் வெளியிடவில்லை. நீங்கள் இனிமேல் எனக்கு எந்தக் கட்டுரையையும் அனுப்பாதீர்கள் என்றும் உணர்த்தினார் நன்றியுடன் நிறுத்திக் கொண்டேன்.

இப்போதெல்லாம் அவர் நெல்லையப்பரை மட்டுமே பார்த்துச் செல்கின்றார்.


இன்னொரு வார இதழின் ஆசிரியர். எங்கள் மாவட்டத்துக்காரர் இளைஞர் என்னிடம் அன்பு காட்டிய தலைவர் கோசல்ராம் பெயரைக் கொண்டவர். மிக அன்பானவர். குமுதத்தில் என்னை எழுத அழைப்பவர்.அவர் என்னை தொலைபேசியில் அழைப்பார். நான் அழைக்கும் போதெல்லாம் உடன் பேசுவார். இப்போதெல்லாம் நான் எத்தனை முறை அழைத்தாலும் பேசுவதில்லை. நான் ஒரு தவறும் செய்யவில்லை.

நான் மிகவும் போற்றுகின்ற இசைக் கடவுள் இளையராஜாவின் புத்தகங்களின் அறிமுக  விழா மதுரையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடை பெற்ற பொழுது என்னைக் கட்டாயம் கலந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார். கலந்து கொண்டேன்.

அந்த விழாவின் புகைப் படங்களையும் ஒளிப் பதிவு நாடாவையும் அனுப்பித் தருவேன் என்று உறுதி அளித்தார். அனுப்பவே இல்லை. அதனாலே நான் தொலைபேசியில் அழைத்தாலும் என்னிடம் பேசுவதேயில்லை. என்ன செய்ய அவர் ஒரு பெரிய வார இதழின் ஆசிரியர். நான் வெறும் நெல்லைக் கண்ணன் தானே.


0 மறுமொழிகள்: