Friday, January 2, 2009

அவரைச் சொல்வார்

வள்ளுவர்க்குச் சிலையுண்டுக் கோட்டமுண்டு
வாய் திறந்தால் அவன் குறளே வருவதுண்டு
தெள்ளு தமிழ்த் தாயவளும் பெற்றெடுத்த
திசையனைத்தும் வென்றெடுத்த இசையின் மகன்
உள்ளு தொறும் உள்ளு தொறும் நமது நெஞ்சம்
உணர்த்தும் அவன் வழியொன்றே சிறந்ததென்று
எள்ளி நகையாடுகின்ற வாழ்க்கை ஒன்றை
எப்படித்தான் வாழுகின்றோம் மானமின்றி



உயிர் வாழ்க்கை என்பதுவே அன்பு கொண்டு
உலகத்து உயிரையெல்லாம் வாழ வைத்தல்
அயர்வின்றி அடுத்தவர்க்கு அன்பு செய்தல்
அடுத்தவரின் துன்பமதைத் தீர்த்து வைத்தல்
உயர்வான அவ்வாழ்க்கை வாழ்பவரே
உயிரோடு வாழ்வதற்குத் தகுதி கொண்டார்
பிறர் இங்கு உயிரோடு இருந்த போதும்
பிணவறையில் சவமென்றே குறளில் சொன்னார்


சவமாக வாழுகின்றோம் பணத்திற்காக
சதிச் செயல்கள் செய்கின்றோம் உறவுக்காக
அவமானம் கொள்வதில்லை அதனை விட்டு
அரியணையைக் காப்பதற்காய் நாசம் செய்வோம்
குல மானம் இனமானம் என்று பல
கூப்பாடு போடுகின்றோம் உண்மையின்றி
சிலையாகும் முன்னாலே கல்லாய் வாழ்ந்து
சிரிப்பாகச் சிரிப்பதற்காய் வாழுகின்றோம்


அரசியலென் றோர் களம் மக்களுக்காய்
அறிவுடையார் தனை அளிப்பார் பேணும் களம்
வரம் பெற்ற நல்லவர்கள் மக்களுக்காய்
வகை வகையாய் நல்லதுவே செய்யும் களம்
உரம் பெற்ற உயர்ந்தவர்கள் காணும் களம்
உண்மையதைச் சொத்தாகக் கொண்டார் களம்
தரமின்றிப் போனதிங்கு தரமேயில்லார்
தலைவர்களாய்ப் பெரியவர்களாய் ஆனதினால்


நல்லதையே நாடுபவர் கேடு கண்டால்
நாணமுற்று அதைக் கண்டு ஒதுங்குபவர்
வல்லமையே நேர்மையென்று போற்றுபவர்
வாய்மையொன்றே மனம் கொண்டு ஏத்துபவர்
அன்னவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தார்
அன்புடைய மக்களிடம் இன்றும் வாழ்வார்
தென்னாட்டில் காமராசர் கக்கன் என்றும்
தெள்ளு தமிழ் ஜீவா என்றும் அவரைச் சொல்வார்

0 மறுமொழிகள்: