Thursday, June 5, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

                  உங்கட்க்கொரு பொருள்  உடைமை ஆயிற்றென்றால
                               உடன்  அதனை  பத்திரத்தில்  பதிவு செய்வீர்
                  தென  களத்தான்  பாண்டியனின்  உடைமை   என்று
                               திசை  சூழ்ந்த  உலகத்தை  அவனின்  யானை
                  வன்களத்தில்  வீழ்ந்து படும்  எதிரி  மன்னர்
                               வாகான  மார்பகத்தில் தந்தம்  கொண்டு
                  எங்களது  பாண்டியனின்  உடைமை  இந்த
                               எழில்  உலகம்  என்றெழுதித்  தீர்க்கின்றது


                 சங்கதியைக்  கேட்டீரோ  பாண்டியனின்
                              சரித்திரத்தில் சரி பங்கு கொண்ட யானை
                தந்தமதை  எழுத்தாணியாகக்  கொண்டு
                             தார்  வேந்தர்  மார்புகளை  ஒலையாக்கி
                இங்கிவர்கள்  அனைவருமே  பாண்டியனின்
                             இலை வேலுக்கு  இலக்காகி  வீழ்ந்ததனால்
                பொங்கு கடல் உலகெங்கள்  சொந்தம்  என்று
                             பொறுப்பாகப்  பதிகிறதாம் பத்திரத்தை


                                               முத்தொள்ளாயிரம்

            மருப்பூசியாக  மறங்கனல்  வேல்  மன்னர்
            உருத்தகு மார்போலையாக-திருத்தக்க
           வையகம்  எல்லாம்  எமதென் றெழுதுமே
           மொய்யிலை  வேல்  மாறன்  களிறு
                             

காத்திடுவாள்

           

                    இயந்திரம் தான்  பழுதடைந்து  சில  நேரத்தில
                                  இடையூறு  செய்கிறது  என்ற போதும்
                    பைந்தமிழை உலகெங்கும் உங்களோடு
                                  பகிர்ந்திடவும் நல்லுதவி செய்கின்றது
                    செந்தமிழாள்  வாழ  வைத்தாள்  என்னையென்றால்
                                  சிறப்பெல்லாம்  சேர்க்கிறது  கணினி  இங்கே
                     வந்தனங்கள்  சொல்லி நின்றேன்  அனைவருக்கும்
                                  வடிவான அன்னை  தமிழ்   காத்திடுவாள்
                    

Wednesday, June 4, 2008

மாற்றுங்கள்

               ஆறுகளை  நீர் நிலைகள்  அனைத்தையுமே
                        ஆபாசம்  ஆக்குகின்றீர்  குப்பை கொட்டி
               தேறுவதேயில்லை  உங்கள்  வாழ்க்கை தன்னை
                         தினந் தோறும்  இயற்கையினை அழித்தொழிப்பீர்
                கூறு கெட்ட  மானிடரே  இயற்கையதன்
                         கூறுகளை அழித்தொழித்து  நீர்  அழிவீர்
                சாறழித்து  எதிர் காலச்  சந்ததியைச்
                         சரிக்கின்றீர்  நோய்களுக்குள்  இரக்கம்  இன்றி


               வாழ்ந்திடுவார்  சந்ததியர்  என்று  எண்ணி
                         வாரி வாரிச்  சேர்க்கின்றீர்  பணத்தை மட்டும்
               சூழ்ந்துயிரை  வாழ  வைக்கும்   இயற்கை தன்னை
                         சொத்தாகக் கருதாமல்  இழந்து  நின்றீர்
               வீழ்ந்து  படும்  எதிர்காலம்  என்பதனை
                         விரித்துணர மாட்டாமல் துன்பம்  சேர்த்தீர்
                மாய்ந்து  படும்  உயிரெல்லாம்  மாநிலத்தில்
                         மாற்றுங்கள்  உம் கொடுமைக் கூத்தையெல்லாம்
                          
                         

அன்புடையீர்,
வாழ்க  தமிழுடன்.நம்மாழ்வார்  பாசுரத்திற்கு  இரண்டு  கவிதைகள்.ஆமாம்.
முதலில்  ஒன்றை  தட்டச்சு  செய்து கொண்டிருக்கும்  போதே  மின்  தடை
ஏற்பட்டு விட்டது.
மின்சாரம் வந்தவுடன்  வேறொன்றை  தட்டச்சு  செய்தேன்.மீண்டும்  கணிப்
பொறியைப் பார்க்கையிலே  பாதியாக  ஒரு  கவிதை இருந்தது.அதையும்
முடித்தேன்.அதனாலே  இரண்டாயிற்று.நன்றி.
                                                                                            தங்கள்
                                                                               நெல்லைக்கண்ணன்

Tuesday, June 3, 2008

நம்மாழ்வார்

                  ஆண்டவர்கள்  பெயரினிலே  சண்டையிட்டு
                             அழிகின்றார்  மானிடர்கள்  எங்கும் என்றும்
                  தூண்டுபவர்  எவரேனும்  அழிவதில்லை
                              தொண்டர்களே    அழிகின்றார்  அந்தோ  பாவம்
                  வேண்டுமட்டும்  பெரியவர்கள்  சொல்லிச் சென்றும்
                              வீணாக  அழிகின்றார் கண்டு  நொந்தோம்
                  ஆண்டவனை   நற்றமிழால்  அழகு  செய்த
                               ஆழ்வார்க்கு  ஆழ்வார் தம்  சொல்லைக் கேட்போம்

                   
                  அவரவர் தம்  அறிவினது  வழியதாக
                               அவரவர்க்காய்  தெய்வம்  அங்கே  அமைகிறது
                   அவரவர்க்காய்  அமைந்த  அந்தத்  தெய்வம்  ஏதும்
                                அன்பான  தெய்வம்தான்  குறைந்ததில்லை
                   அவரவர்தம்  விதி வழியே   தெய்வங்களும்
                                 அமைகிறது   வணங்குகின்றார்  புரிந்து கொள்வீர்
                   தவறின்றித்  தமிழினிலே  தந்து  நின்றார்
                                தமிழ் வேதம் அருளி நின்ற நம்மாழ்வார் தான்



                                                          பாசுரம்

               அவரவர்  தமதறிவறி  வகை வகை
               அவரவர் இறையவர்  என  அடி அணைவர்கள்
               அவரவர்  இறையவர்  குறைவிலர் இறையவர்
               அவரவர்  விதி  வழி  அடைய  நின்றாரே

நம்மாழ்வார் பாசுரம்

               யார்  வணங்கும்  ஆண்டவர்தான்  சிறந்தவரென்று
                      எப்போதும்  மனிதருக்குள்  சண்டை  உண்டு
               ஊர்  முழுக்க  இச்சண்டை மீண்டும்  மீண்டும்
                      ஒலிப்பதுண்டு மனிதர்களை  ஒழிப்பதுண்டு
               கார்  நிறத்து  மேனியனாம்  கண்ணனையே
                      காதலித்து  நின்றாலும்  ஆழ்வார்க் காழ்வார்
               சீர்  பெறும் நல்  வழியினையே  நந்தமக்காய்
                      செப்பி  வைத்தார்  நம்மாழ்வார்  நம்மாழ்வாரே தான்


               வாழுகின்ற  சூழலுக்கு  ஏற்றாற் போல
                       வடிவங்கள்  கண்டெவரும்  வணங்குகின்றார்
                சூழ்ந்து  எதையும்  வெல்லுகின்ற  விதி தான் இங்கே
                        சொல்கிறது  அவரவர்க்காம்  கடவுள் தன்னை
                ஆழ்ந்தவரும்  வணங்குகின்றார்  தவறேயில்லை
                         அக்கடவுள்  குறைந்ததில்லை  உயர்ந்ததுவே
                வாழ்ந்திடுவீர்  மானிடரே  இதை  உணர்ந்து
                          வையகத்தில்  கடவுளிலே  குறைகள்  இல்லை


                                                        பாசுரம்

             அவரவர்  தமதம  தறி வறி  வகை  வகை
             அவரவர்  இறையவர்  என  அடி  அணைவர்கள்
             அவரவர்  இறையவர்  குறைவிலர் இறையவர்
             அவரவர்  விதி  வழி   அடைய  நின்றாரே
                 

விளக்கம்

அன்புடையீர்
வணக்கம்.  விஜய்  தொலைக்காட்சி  தமிழ்ப் பேச்சு  எங்கள்  மூச்சிற்கான  படப்
படிப்பிற்காக  சென்னை  சென்றிருந்ததனால்  29ம்  தேதியில் இருந்து  ஒன்றும்
எழுதவில்லை.இன்றிலிருந்து  எழுதுவேன். வாழ்க  தமிழுடன்.நன்றி.

                                                                                தங்கள்
                                                                 நெல்லைக்கண்ணன்
                                                                         3-6-08