அன்புடையீர் வாழ்க தமிழுடன்.
எனது அன்பு நண்பர் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் கடந்த மாதம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கண்ணதாசன் அவர்களைப் பற்றி உரையாற்றிய போது அவரது திரைப் படப் பாடல்கள் யாவுமே பழைய இலக்கியங்களின் சாறு என்பது போலப் பேசியதாக அவர் ஆசிரியராக உள்ள தினமனி நாளிதழில் செய்தி கண்டேன்.அது எத்தனை பெரிய தவறு என்பதனை எனது உள்ளம் எனக்கு உணர்த்தியதாலே கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள் எத்தனை சிறந்தவை என்பதனை உணர்த்தும் வண்ணம் தொடர்ந்து எழுத ஆவல் கொண்டுள்ளேன். இறையருள் கூட்டுவித்தால் நாளைக்கே தொடங்கலாம் என்று இருக்கின்றேன். நன்றி அனைவருக்கும் அன்புடன் நெல்லைகண்ணன்
Sunday, March 11, 2012
கண்ணதாசனைப் பற்றி
Saturday, March 10, 2012
கொடுமையன்றோ
தந்தையரைக் கொல்லுகின்ற பிள்ளைகளும்
தாயவரின் உயிர் பறிக்கும் மைந்தர்களும்
மைந்தரையே கொல்லுகின்ற தாய்க்குலமும்
மனைவியையே கொல்லுகின்ற மடையர்களும்
கொண்டவனைக் கொல்லுகின்ற கோமளமும்
குருவினையே கொல்லுகின்ற மாணவரும்
அன்பினையே உணராமல் வளர்ந்ததனால்
அறிவின்றிப் போன ஒரு கொடுமையன்றோ
Thursday, March 8, 2012
மகளிர் நாள்
உலகெங்கும் குழந்தைகளை நாள்கள் தோறும்
உதிரத்தோ டளிக்கின்றார் மகளிர் காண்பீர்
மலர்ந் துலகம் தழைப்பதற்கு மகளிர் செய்யும்
மாபெரிய தியாகம் இது உணர்வீர் நீரே
தினந்தோறும் அவர்களது தினமேயன்றி நீங்கள்
தேர்ந்து தரும் தினமும் அதில் அடக்கமன்றோ
உளம் திருந்தி உணர்ந்திடுவீர் மகளிர்க் கென்றும்
உள்ள நாள் எல்லாமும் அவர்கள் நாளே
வாழ்ந்து வெல்வோம்
அன்பு செய்ய வருகின்றார் அதிரடியாய்
அடுத்த நாளே தனை மாற்றிக் கொள்கின்றாரே
பண்பு வழி அவரிடத்தும் அன்பு வைத்து
பதை பதைத்து துன்புறுதல் நம் கடனா
அன்பு நந்தம் கொள்கை அதைக் கை விடுதல்
அறிவுடைய செயலில்லை தமிழாள் சொன்னாள்
தெம்புடனே அன்பு செய்வோம் மனிதராக
திருக்குறளார் தம் வழியே வாழ்ந்து வெல்வோம்
இருக்கின்றானே
ஆயிரம் பல்லாயிரமாய் நூற்கள் கற்றேன்
அதன் வழியாய் வாழ்வதற்கும் கற்றுக் கொண்டேன்
பாவி இந்த மனிதர்களைப் படித்துப் பார்த்தும்
பல பேரைப் படிப்பதற்கு முடிவதில்லை
கோயிலிலே இருக்கின்றான் இறைவன் என்ற
கூற்றை நான் நம்புவதே யில்லை அய்யா
தாவி இங்கு அன்பு செய்யும் மனிதர் தம்மின்
தலைவாசல் தோறும் இறை இருக்கின்றானே
Tuesday, March 6, 2012
ஆளாக்காதீர்
பணமதுவும் குலைத்து விடும் மிகச் சிறந்த
பண்புகளை நேர்மையினை நாணயத்தை
குணமதுவோ நல்லதெல்லாம் கொண்டிருக்கும்
கூட்டாக்கும் நல்லவரைப் பெரியவரை
இனம் பிரித்துத் தமிழ் இதனை சொல்லி வைத்தும்
எப்படியோ விதி வழியால் மறந்து போனேன்
மனம் துடிக்க இறைவனிடம் வேண்டுகின்றேன்
மறு முறை இத் தவறுக்கு ஆளாக்காதீர்
Sunday, March 4, 2012
அருளிடுக தலைவா
அன்பு செய்வார் மட்டும் தான் உயிரொ டுள்ளார்
அதுவன்றி வாழ்பவரோ உடலாய் உள்ளார்
என்றெனக்கு வள்ளுவனார் சொல்லித் தந்த
எழில் வழியை உணர்ந்தவனாய் வாழுகின்றேன்
அன்பதனால் உலகதனில் பல பேர் என்னை
அப்பா என்றழைக்கின்றார் பாசம் கொட்டி
தெம்பாக நான் வாழ வழி செய்கின்றார்
தேம்புகின்றேன் அவர் செய்யும் அன்பின் முன்னால்
அவசரமாய் அன்பு காட்டி அதே வேகத்தில்
அவசரமாய் விலகுகின்றார் புரியவில்லை
தவம் போல அன்பு செய்யும் என்னைக் கூட
தவறாக உணருகின்றார் என்ன செய்வேன்
குவலயத்தில் இது என்ன துன்பம் என்னை
கொள்க அன்பு என்று சொன்ன இறைவா
அவருளத்தில் அன்பு தன்னை உணரும் ந்ல்
அழகு தன்னை அருளிடுக தலைவா