Wednesday, May 6, 2009
உணர்வீர் நீரே
உண்மையினை யாரேனும் பேசி விட்டால்
உடனேயே பதறுகின்றார் அய்யோ என்று
நன்மை அது என்பதனால் நடுங்குகின்றார்
நலம் எண்ணார் உடனேயே கலங்குகின்றார்
எண்ணமெல்லாம் நல்லனவே என்று வாழ்வோர்
இதயத்தால் வாழ்த்துகின்றார் மகிழுகின்றார்
உண்மை அது ஒன்றேதான் என்றும் எங்கும்
உலகத்தை வெற்றி கொள்ளும் உணர்வீர் நீரே
மகிழ்வே என்றும்
வாழ்வதற்குப் பணம் தேவை என்றல் விட்டு
வாழ்க்கை அதே பணத்திற்கு என்று வாழும்
கோழைகளின் வாழ்வினிலே இன்பம் இல்லை
குறள் இல்லை தமிழ் இல்லை எதுவும் இல்லை
நாளையல்ல இன்று கூட சொந்தம் இல்லை
நாயகனின் கையில் என்று இனிய தமிழ்
வேளை தோறும் சொல்கிறது புரிந்து கொண்டால்
வேதனைகள் சேராது மகிழ்வே என்றும்
Tuesday, May 5, 2009
என்னுடனே
மக்கள் கவிஞருக்காய் மாபெரிய விழா எடுத்தார்
மனம் விரும்பி எனை அழைத்தார் சிங்கப்பூர் வாழ் தமிழர்
தக்கவனைப் பேசுதற்காய் தமிழோடு சென்றேன் நான்
தழுவி எனை மகிழ வைத்தார் மன்றத்தின் அன்பரெலாம்
பக்கம் இருந் தென்னைப் பாராட்டிச் சீராட்டி
பண்பு நலம் காத்தார்கள் அனைவருமே என்ன சொல்வேன்
தக்க இராமசாமியுடன் தனி அன்புப் புகழேந்தி
தாவி வரும் சிரிப்பழகு முத்துவுடன் காசி யவர்
எக்கணமும் எனக்காக ஒடிவரும் சண்முகமும்
இனிமை நிறை வெங்கடேஷ் எனும் அன்புத் தம்பியுடன்
தக்கவராய் அன்பு செய்யும் கபிலருடன் ராஜாராம்
தமிழ் மறையார் ஒட்டுநரின் தடாலடி அன்பு அதும்
மிக்கவராய் தமிழ் வளர்க்கும் உறரி கிருஷ்ணப் பெரியோரும்
மேன்மை மிகு தைப்பூச அன்பழகன் கடிகாரம்
இக்கணமும் எக்கணமும் என்றென்றும் மறவேன் நான்
இதயத்தில் இருக்கின்றார் அனைவருமே என்னுடனே