இருக்கின்ற விருதெல்லாம் எனக்கே தாரும்
எனை விட்டால் இதற்கெல்லாம் யார் தான் உள்ளார்
படுப்பதற்கு விருது எழுந்து நின்று
பார்ப்பதற்கு ஒரு விருது நாட்டை நன்கு
கெடுப்பதற்கு விருது மேலும் என்னவெல்லாம்
கிளர்ச்சி தரும் விருதுகளோ அவற்றையெல்லாம்
தடுப்பதற்கு யார் உள்ளார் யாரும் இல்லை
தந்து கொண்டே இரும் நானும் வாங்கிக் கொள்வேன்
Saturday, February 27, 2010
வா ங் கி க் கொ ள் வே ன்
சின்னப் புத்தி
விழாக்களுக்குப் பஞ்சமில்லை ஏழைகள் தான்
விலை வாசி ஏறியதாய்ப் புலம்புகின்றார்
விழாக் கண்டு சகிக்காத வீணர்கள்தான்
விலைவாசி நிலை சொல்லி ஆடுகின்றார்
விழா என்றால் இது அன்றோ விழா முன்னர்
விழாக்கள் நீர் இது போல பார்த்த துண்டோ
விழாக் கண்டு மகிழ்ச்சி கொள்ளல் விட்டூ விட்டு
விலை வாசி தன்னைப் பேசல் சின்னப் புத்தி
Friday, February 26, 2010
கே ட் டு வென்றா ர்
புகழுரைக்கு மயங்காத தலைவர் என்றால்
புது விதத்துத் திருடர்களும் தோன்ற மாட்டார்
வகை வகையாய்ப் புகழுரைகள் விரும்பி ஏற்றால்
வருவதங்கு அவமானம் துன்பம் ஆகும்
தகைமை சான்ற தலைவர்களோ உணர்ந்து வென்றார்
தனை உணராத் தன்மையரோ அசிங்கப் பட்டார்
புகன்று நின்றார் பெரும் புலவர் அனைவருமே
புத்தியுள்ளோர் மட்டும் தான் கேட்டு வென்றார்
Thursday, February 25, 2010
தேடி அலைகின்றார்
ஆட்சியாளர் தன்னிடத்தில் நிமிர்ந்து பாட
அறிவு நிறைத் தமிழ்க் கம்பன் இன்று இல்லை
பூச்சியைப் போல் எவருக்கும் அஞ்சிநிற்கும்
புல்லர்களே புலவரென உயிரோ டுள்ளார்
ஆச்சு இங்கு எல்லாமே ஆகிப் போச்சு
ஆங்கிலமே தாய் மொழி போல் ஆகிப் போச்சு
போச்சு எல்லாம் போச்சு என்றால் பொறுப்பிலுள்ளோர்
புகழ் தேடி புகழ் தேடி அலைகின்றாரே
Wednesday, February 24, 2010
நாள் என்று் வந்திடுமோ
பணம் சேர்த்துப் பணம் சேர்த்து வாழ்க்கையினை
பகட்டாக வாழுகின்ற தலைவர் கண்டு
பணம் சேர்க்க விழைகின்றார் பல பேர் இங்கு
பாவங்கள் செய்வதற்கும் அஞ்ச மாட்டார்
குணம் ஒன்றே உயர்வென்று உலகிற் கெல்லாம்
குறள் சொன்ன உயர்வெல்லாம் சொல்லி நிற்பார்
பணம் சேர்க்கும் போதெல்லாம் குறளை மட்டும்
பக்கத்தில் வருவதற்கே அனுமதியார்
மரம் வளர்க்கச் சொல்லுகின்ற தலைவர் வீட்டில்
மர வேலைப் பாடுகள் ஆகா ஆகா
தினம் இங்கு தவறுகளே செயும் தலைவர்
திருவள்ளுவர் சிலையின் அருகே உள்ளார்
மனம் என்று ஒன்று மட்டும் இருந்த தென்றால்
மாறி மாறி அவர் தம்மைச் சுடவே செய்யும்
குணம் விட்ட காரணத்தால் கொடுமை கண்டு
கொதிக்கின்ற மனம் தன்னைக் கொன்றே போட்டார்
கையூட்டுப் பெற்று விட்டார் என்று தினம்
கைதாகும் பைத்தியங்கள் படத்தைப் போட்டு
மெய் காத்து நிற்பதுவாய் நடிக்கின்றார் காண்
மெய்ம்மை உணர்வற்று நிற்கும் செய்தியாளர்
பொய் பேசி மக்களையே ஏய்த்து வாழும்
பொறுப்பற்ற அரசியலார் படத்தை மட்டும்
கையூட்டின் பெருந்தலைவர் என்று போடக்
கையாலே யாகாத செய்தியாளர்
உடல் விற்றார் என்று சொல்லி பெண்களினை
ஊர் தோறும் பிடிக்கின்ற காவலர்கள்
கடன் தந்து அவர்களது வறுமை தன்னால்
காம விளையாட்டிற்குக் கொண்டு செல்லும்
திடமான மனிதர்களை அரசியலார்
தேடி என்றும் வளர்த்து நிற்கும் கொடுமையினை
புடம் போட்டு மக்களுக்குக் காட்டுகின்ற
பொன்னான நாள் என்று வந்திடுமோ