Monday, August 4, 2008

குறட் கருத்து

 சோம்பல் கொண்டு அதனைச் சுகமென்று வாழ்வாரை
  சொர்க்கம் அதே என்று சொக்கி அதில் வீழ்ந்து உழல்வாரை
  தாம் வாழும் வாழ்க்கை தரம் அதனை உணராரை
  தருவதற்குக் காத்திருக்கும் நிலமகளை அணுகாரை
  தேம்பி அழப் பிறந்தவரே இவர் என்று எண்ணி எண்ணி
  திருமகளாம் நில மகளாள் தினம் நகைத்து நிற்பாளாம்
  ஒம்புங்கள் உழைப்பதனை உழுது விதைத்து அறுத்திடுங்கள்
  உயிர் வாழ்க்கை அது என்ற உண்மையினை உணருங்கள்

  குறள்
  இலம் என்று அசை இ இருப்பாரைக் காணின்
  நிலம் என்னும் நல்லாள் நகும்

பழம் பாடல் நாலடியார்

சேர்ப்பான் சேர்ப்பான் பொருளை சேர்த்துக் கொண்டேயிருப்பான்
  சேர்த்த அப்பொருளை அவன் செலவழித்தும் இன்பமுறான்
  பார்த்து அதனை மிகவே நல்லோர்க்கும் துறவியர்க்கும்
  பரிவோடளித்து அவர் தம் வாழ்த்தினையும் பெற மாட்டான்
  சேர்த்த அப் பொருளோ அவன் கண்டு சிரித்து நிற்கும்
  செய்த நன்மை ஒன்றுமில்லாக் காரணத்தால் அருள் சிரிக்கும்
  வேர்த்து வேர்த்து அலைந்து தினமும் வேதனைகள் சேர்க்காமல்
  வேண்டு மட்டும் பிறர்க்குதவ விரும்பி நிற்றல் அருள் அளிக்கும்

  நாலடியார்
  துய்த்துக் கழியான் துறவோர்க் கொன்றீகலான்
  வைத்துக் கழியும் ம்டவோனை - வைத்த
  பொருளும் அவனை நகுமே. உலகத்து
  அருளும் அவனை நகும்

Saturday, August 2, 2008

குற்ட் கருத்து்

உலகெங்கும் நோய்களுக்கு மருந்து கண்டார்
ஊர் போற்ற வாழுகின்றார் உண்மை உண்மை
பலமான அவர் அறிவு கண்டு போற்றி
பணிந்தவரைக் கேட்டு நின்றேன் எந்தன் நோய்க்கு
சரியான மருந்து எது என்று அவர்
சலிக்காமல் சிரிக்கின்றார் என்ன என்றேன்
விரிகின்ற விழியாளின் வழியாய் வந்த
வெம்மை நோய்க்கு அவள் தானேமருந்து என்றார்

குறள்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன் நோய்க்கு தானேமருந்து

பழம் பாடல்

வறுமையிலே பட்ட துன்பம் தாங்கொணாராய்
  வள்ளல் காளத்தி அவர் தம் இல்லம் நோக்கி
  பெரும்புலவர் நடக்கின்றார் வழித் துணையாய்
  பேச்சுக்குத் துணையாக வறுமை தன்னை
  இடம் கொடுத்து அன்பு செய்தார் வறுமையோடு
  ஏகடியம் பேசுகின்றார் இத்தனை நாள்
  நிழல் போல எனை நீயும் தொடர்ந்து வந்தாய்
  நிம்மதியே இல்லாமல் என்னைக் கொன்றாய்


  புடம் போட்ட தங்கம் எங்கள் காளத்தியார்
  பொன் வேலி வீட்டிற்குள் நான் நுழைந்தால்
  இடம் இல்லை உந்தனுக்கு அங்கே ஆக
  இன்று மட்டும் எந்தனுடன் இருந்து கொள் நீ
  திடமாவேன் என் தேகம் தேக்கும் ஆகும்
  திரிந்தலைந்த உன் நிலை தான் மாறிப் போகும்
  உடம்போடே நிழலாகி உழன்ற நீயும்
  ஒரு நாள்தான் நாளை வரை இருந்து கொள் நீ

  செய்யுள்

  நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல் போல
  நாளைக் கிருப்பையோ நல்குரவே -காளத்தி
  நின்றைக்கே சென்றக்கால் நீ யெங்கே நானெங்கே
  இன்றைக்கே சற்றே இரு

Friday, August 1, 2008

பணத்திற்காய் அலைகின்றாரே

 பணம் ஒன்றே வாழ்க்கையென்று ஏழையர்க்கு
  பகட்டாலே காட்டி நின்றார் திருடி வாழ்வோர்
  குணத்திற்கு மதிப்பில்லை என்றாற் போல
  கொண்ட பெருஞ் செல்வத்தால் மிரட்டுகின்றார்
  பிணமாக வாழ்கின்றார் என்பதனைப்
  பெருஞ் செல்வராகி நின்றார் உ;ணர்வதில்லை
  தினந் தோறும் அவர் ஆடும் ஆட்டம் கண்டால்
  தேம்பி நிற்பார் ஏங்கி நிற்றல் கண்டு நோவோம்

  பணம் எதுவும் செய்யும் என்ற இவரின் போக்கே
  பலர் வாழ்வைத் திசை மாற்றிப் போக வைக்கும்
  நிணம் தசை நார் நிறைந்த அவர் உடலுக்குள்ளே
  நிம்மதியே இருக்காது உண்மை சொன்னேன்
  குணம் விட்டு ஏழையரில் சிலரும் இங்கே
  கொள்ளையராய் மாறியது இவரைக் கண்டு
  மனம் இல்லாக் காவற்றுரை அவரை மட்டும்
  மடித்து விட்டுப் பெயர் கொள்ளத் துடிக்கிறது

  கோடிகளில் புரளுகின்றார் ஊர்கள் தோறும்
  கோயிலகளில் பூசைகளும் செய்து நின்றார்
  ஆடுகின்ற ஆட்டமெல்லாம் அவர் கருத்தில்
  ஆண்டவனை ஏமாற்றச் செய்யும் வேலை
  பாடுகின்றார் ஆண்டவனைப் பழிக்கு அஞ்சார்
  படைத்தவனோ இவர் கண்டு சிரித்து நிற்பான்
  கேடு கெட்ட இவரால் தான் ஏழைகளும்
  கிறுக்காகி பணத்திற்காய் அலைகின்றாரே
  

குறட் கருத்து பொருட்பால்

பணிந்து இனிய சொல்லி நிற்பார்
  பண்பு நிறைஅன்பு செய்வார்
  கனிந்த மொழி தன்னாலே
  கடவுளையும் நண்பு கொள்வார்
  விரிந்த மனம் கொண்டுயர்ந்தார்
  வேண்டு மட்டும் உதவி நிற்பார்
  நிறைந்துணர்ந்த பெரியோர்கள்
  நிலையுணர்ந்து பணிந்து நிற்பார்

  நிமிர்ந்தெங்கும் திமிர் செய்வார்
  நிலையின்றி உளறி நிற்பார்
  திமிர்ந்தெங்கும் தனைப் பெரிதாய்த்
  தெய்வமென்றே கூறி நிற்பார்
  குமையாமல் தனை உயரவாய்க்
  கூறி நிற்றல் சிறியர் செயல்
  இமையவரே தாம் என்று
  இயம்பி நிற்பார் சிறுமையினால்

  திருக்குறள்
  பணியுமாம் பெருமை என்றும் சிறுமை
  அணியுமாம் தன்னைவியந்து

பழம் பாடல் திருமந்திரம்

 ஓரூர் பேரூர் உலகத்துக்கெல்லாம் அச் சீரூரே
  செல்வமெல்லாம் சேர்த்தளிக்கும் நல்லூராம்
  ஆறு வழி அதற்குண்டு அதையறியாச் சில பேரோ
  அதிலொன்றே சிறந்தது என்று அறிவின்றிப் பிதற்றுகின்றார்
  தேரார் அவர் உரையோ மலை கண்டு குரைத்து நிற்கும்
  தெரு நாயின் குரைப்பாகும் எல்லோரும் உணர்வீரே
  ஆறு சமயங்களும் ஆண்டவனை அடைவதற்கே
  அறிவீர் அறிந்தங்கு ஆண்டவனை அடைவீரே

  திருமந்திரம்
  ஒன்றது பேரூர் வழி ஆறதற்குள
  என்றது போல இரு முச்சமயமும்
  நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
  குன்று குரைத்தெழு நாயை யொத்தார்களே