Thursday, February 5, 2009

ஏழைகள்

ஏழைகள் மட்டுமே எரிகின்றார் இங்கே
இருப்பவர் சுகமாய் இருக்கின்றார்
கோழைகள் எரிந்தவர் புகழைக் கொண்டு
கொள்கைக் கூட்டம் போடுகின்றார்
வாழையைப் போலத் தமையே தந்தார்
வறுமையில் வாடிய இளைஞர் அவர்
பேழைகள் சேர்த்துப் பிழைக்கும் தலைவர்
பெரிதாய்க் கூச்சல் போடுகின்றார்


தமிழர் பிணங்கள் தம்மை வைத்து
தலைவர்கள் இங்கே வாழுகின்றார்
குதியாய்க் குதித்துக் கோபம் காட்டி
குரலை உயர்த்திப் பேசுகின்றார்
இவர்களை நம்பி இதற்கு முன்னாலே
எரிந்தவர் குடும்பம் காத்தாரா?
எவரை எதிர்த்து எரிந்தாரோ இவர்
அவரோடேயே போய்ச் சேர்ந்திட்டார்


அங்கே அழிவதும் தமிழினம்தான்
அதற்காய் எரிந்தவர் தமிழினம்தான்
இங்கே ஆடிடும் தலைவர்கள் இவர்க்கு
இதயம் இருப்பது தேர்தலில்தான்
சங்கே முழங்கு என்ற பாரதி
தாசனும் இங்கே இன்றில்லை
சரியாய் மீண்டும் ஏழைகள் தம்மைச்
சாவில் தள்ளுதல் முறை தாமோ

Wednesday, February 4, 2009

வாழி நீவீர்

ஏழையரே சாதி மதம் விட்டு விட்டு
எல்லோரும் ஒன்றாகப் போரிடுங்கள்
கோழைகளாய் உங்களையே ஏய்த்து வாழும்
கொள்ளையரை அடியோடு வேரறுங்கள்
நாளை இந்த நாடு உங்கள் கைகளிலே
நம்பிக்கை கொள்ளுங்கள்வெற்றி கொண்டு
ஏழைகள் தான் மனிதர் என்று உலகம் காண
இணைந்திடுங்கள் வெல்லுங்கள் வாழி நீவீர்

சுடலைமாடன்வருவான்

இருநூறு ருபாய்க்காகச் சிறுமியினை
இப்படியும் அப்படியும் உதைக்கின்றாரே
பல நூறு கோடிகளை வெட்கமின்றி
பங்கிட்டு வாழுகின்ற தலைவர்களை
திரு நாட்டின் கேவலமாய் நாணமின்றி
தேர்தல் தோறும் வருகின்ற திருடர்களை
வறுத்தெடுக்கச் சுடலை மாடன் வருவான் என்றே
வணங்கி நின்றுக் குலவையிட்டோம் வருவான் அவன்

நாடொழிக்க

திருடியதாய்ச் சொல்லி ஏழைச் சிறுமி தன்னை
தேம்பியழத் துன்புறுத்தும் காவலர்கள்
அறிவிழந்த கொடுமையினைக் காணும் நேரம்
அடி வயிறு கொதிக்கிறது வறுமையென்னும்
கொடுமையினை வைத்தன்றோ ஏழைகளை
கூப்பிட்டுக் கூப்பிட்டுக்கொல்லுகின்றார்
அடியவராய்க் கோடிகளைக் கொள்ளையிட்டார்
அடிகளிலே இவர் விழுந்து வணங்குகின்றார்



சத்தியத்தின் பெயரிலே கொள்ளையிட்டார் மேலே
சரியாக வைப்பாரோ கைகளினை
மெத்தை வீட்டுத் தலைவர்களாய் மாறி நிற்கும்
மேல்மினுக்கிக் கொள்ளையரைப் பிடிப்பாரோ தான்
எத்தர்களை மக்களது வரிப் பணத்தை
ஏய்த்திங்கு வாழ்வாரை அடிப்பாரோ காண்
செத்தொழிந்து போகாமல் மனிதரென்று
சீர் கெட்டார் வாழுகின்றார் நாடொழிக்க

பட்டுகோட்டையார்

ஏழைகளின் மொழியினிலே ஏழைகட்காய்
எப்போதும் எழுதி நின்ற இயக்க மவன்
கோழைகளின் மனத்தினிலும் கொள்கைகளை
கூத்தாட வைத்து நின்ற போர்க் கவிஞன்
வாழையடி வாழையாகக் கூனி நின்ற
வகையாரின் குறுக் கெலும்பாய் வந்த தோழன்
நாளை வரும் வாழ்க்கையதை ஏழைகளின்
நலம் காணும் வழியினிலே பாட்டிசைத் தான்


தூங்குவதில் சுகம் கண்டார் தனை எழுப்பி
தொண்டு செய்ய வழி சொன்ன உண்மைத் தோழன்
ஏங்கி நிற்பார் திருடாமல் இருப்பதற்கு
இருப்பவரே காரணமென்று உரைத்த நண்பன்
வாங்கி வாங்கிச் சேர்த்தவர்கள் தராத போது
வயிறு பசித்தழுபவர்க்காய் வழிகள் சொன்னான்
ஓங்கி நல்ல வழிகளெல்லாம் சொல்லி நின்ற
உயர் பட்டுக்கோட்டையாரின் வழியில் நிற்போம்

Sunday, February 1, 2009

32 வது சென்னை புத்தகக் காட்சி தலைவர் காந்தி கண்ணதாசனோடு

விருந்திற்கு வந்திருந்தார் இல்லத்திற்கு வெல்தமிழின் இசை அறிஞர் துணைவியோடு