Sunday, November 28, 2010

ஏனில்லை

நாணமின்றிக் கோடிகளை எடுத்துக் கொண்டு
நாட்டி லுள்ளோர் பதை பதைக்க பதட்டமின்றி
ஊன மனம் கொண்டோர்கள் பதவிகளில்
உட்கார்ந் திருக்கின்றார் அரசர்கள் போல்
ஞானமதை உலகிற்கு வழங்கி வென்ற
நற்றமிழர் நாட்டினிலே தான் இந்தக் கேடு
ஏனிவர்கள் குடும்பத்தில் எவருக்குமே
இல்லை அந்த வெட்க மெனும் உயர்ந்த பண்பு

Saturday, November 27, 2010

ஏழை மக்கள்

பணம் என்னும் பேரரக்கன் பிடியில் சிக்கி
பாவமதைக் குலச் சொத்தாய் ஆக்கிக் கொண்டு
குணம் என்ற ஒரு சொல்லைத் தமிழினிலே
கூடாத சொல்லாக ஆக்கி வாழும்
நிணம் தசை நார் எலும்பெல்லாம் ஊழலாக
நெஞ்சினிலே ஈவிரக்கம் எதுவும் இன்றி
வலம் வருவார் தனைக்கண்டு பொறுமுகின்றார்
வாழ்வதனை இழந்து நிற்கும் ஏழை மக்கள்

Thursday, November 25, 2010

திகைக்கின்றாரே

பசிக்கு ஒரு பழம் எடுத்த இளைஞன் அங்கே
பாருங்கள் சிறையினிலே வாடுகின்றான்
வசிப்பதற்கு இடம் இன்றி ஏழையர்கள்
வதைபட்டு சாலைகளில் உறங்குகின்றார்
அசைப்பதற்கு முடியாமல் கோடிகளை
அப்படியே விழுங்கியவர் வாழுகின்றார்
திசை தோறும் இருக்கின்ற தெய்வங்களே
தினந்தோறும் வணங்குகின்றார் திகைக்கின்றாரே

Tuesday, November 23, 2010

கண்ணதாசன் உதவினார்

எனது பாசத்திற்குரிய நண்பர் ஒருவர் எத்தனை சொல்லி
யும் குடிப் பழக்கத்திலிருந்து விடு படவில்லை. தொலை
பேசியில் ஒரு நாள் அழைத்து கண்ணதாசன் அவர்களைப்
பற்றி ரெண்டு வரியில் ஒரு கவிதை சொல்லுங்களேன் என்றார்
சொன்னேன்

மயக்குகின்ற பாடல்களை அளித்தார்
மயக்கி நின்ற கேடுகளால் மரித்தார்

இறையருள் என்று கருதுகின்றேன். இந்த வரிகளைக் கேட்ட் பின்
அவர் குடிப்பதை நிறுத்தி விட்டார்

Friday, November 19, 2010

அன்னை இந்திரா

தாயாக நாங்களெல்லாம் வணங்கி நின்ற
தங்க மகள் நேரு எனும் மாமனிதன்
ஒயாமல் சிறையிருந்து கடிதங்களில்
உலகுணர்த்த உணர்ந்து வென்ற சிங்கமவள்
பூவுலகு அறியாமல் புத்தரது புன்னகையாய்
புது விதமாய் அணு வெடித்தாள்
நாவாரப் பாடி நிற்போம் அன்னை யெங்கள்
நற் சக்தி பெருஞ் சக்தி இந்திராவை

Thursday, November 18, 2010

கமல் உபதேசம்

கமல் என்னும் பெரு நடிகன் மதத்தைப் பற்றிக்
கருத்ததனைச் சொல்லி நின்றார் மகளிடத்தில்
மதவுணர்வைக் காமம் போல் வீட்டிற்குள்ளே
மறைத்து வைக்க வேண்டும் என்று மிகச் சிறப்பு
இதமற்றக் தன் காம வாழ்க்கை தன்னை
எல்லார்க்கும் காட்டி மகிழ் கமல் தான் சொன்னார்
விதம் விதமாய் நடிக்கின்றார் என்ன சொல்ல
வீட்டு மகள் கடவுளினை வணங்குவாராம்


தன் மகளின் நம்பிக்கை அதுவாம் கமலார்
தான் அதனைச் சொல்லுகின்றார் மகளிடத்தில்
என் கேள்வி ஒன்றே தான் அய்யா உங்கள்
இனிய மகள் பகுத்தறிவை வளர்க்கா நீங்கள்
எம் மக்கள் தமக்கு இதைச் சொல்லுதற்கு
எதற்காக முயலுகின்றீர் சரியா சொல்லும்
உம் வீட்டில் உம் கொள்கை இல்லை பின்னர்
ஊருக்கு உபதேசம் எதற்கு அய்யா

Wednesday, November 17, 2010

உணர்த்தி நின்றார் (பக்ரித்)

காலம் கடந் தளித்த குழந்தை தன்னைக்
கடவுளரே கேட்கின்றார் அறுத் தளிக்க
சீலம் நிறைந்து நிற்கும் இபுராஉறிமும்
செய்தி சொன்னார் மகனிடத்தில் சிரித்தவாறே
வாழ்வதனைத் தந்தவரே கேட்கும் வாய்ப்பை
வழங்கியதில் மகன் மகிழ்ந்தார் இறைவனது
ஆழ் அன்பை அவர் உணர்ந்தார் மனம் நிறைந்தார்
ஆண்டவரோ நல் வழியை உணர்த்தி நின்றார்